படம் | VIKALPA
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசின் 100 நாட்கள் வேலைத்திட்டத்துக்கு நேற்றோடு 100 நாட்கள் பூர்த்தியாகியுள்ளது. 100 நாட்கள் வேலைத்திட்டம் குறித்து பல்வேறு சாதகமான பாதகமான கருத்துக்கள் வௌியிடப்பட்டு வருகின்றன. தேர்தல் வெற்றிக்காக மக்களை ஏமாற்ற கொண்டுவரப்பட்ட மந்திரச் சொல் என்று ஒரு சிலர் குற்றம்சாட்ட ஒரு சிலரோ கடந்த நூறு நாட்களில் கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் அனுபவிக்க முடியாமல் இருந்த ஜனநாயக சூழலை தற்போது அனுபவிக்கக்கூடியதாக இருக்கிறது என்று கூறுகின்றனர். இது குறித்து ஒரு சிலரிடம் கருத்துக்களைக் கேட்கலாம் என்று முடிவு செய்தேன்.
அதன்படி முதலில் யாழ். பல்கலைக்கழக சட்டத்துறை விரிவுரையாளர் குமாரவடிவேல் குருபரனிடம், 100 நாள் வேலைத்திட்டம் பூர்த்தியாவது குறித்து உங்கள் கருத்துக்களைக் கூறமுடியுமா என ஸ்கைப்பில் தொடர்புகொண்டு ஒரு மெசேஜை போட்டேன். அதன்படி அவரது கருத்து டைப் பண்ணியபடி ஈமெயிலில் வந்து சேர்ந்தது. அதனை அப்படியே இங்கு தருகிறேன்.
“நூறு நாள் வேலைத்திட்டம் என்பது தேர்தலை வெல்வதற்கான கோஷமாகவே இருந்திருக்கின்றது என்று எண்ணத் தோன்றுகின்றது. சிங்களக் கட்சிகளின் பொதுத் தேர்தல் நோக்கிய மக்கள் அபிப்பிராயத்தை வழிப்படுத்தும் போட்டி அரசியலே கடந்த 100 நாட்களாக நாம் கண்டவை. நிறைவேற்றுத் துறை அதிகார ஜனாதிபதி முறைமையை முழுமையாக ஒழிப்பதற்கு தென்னிலங்கை கட்சிகள் மத்தியில் பொது இணக்கமில்லை என்பது தெளிவாகின்றது. நிறைவேற்று அதிகார ஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறைப்பது என்பதில் கூட சிங்கள பௌத்த அரசியல் நலன்களே முதன்மை பெறும் என்பது தேர்தல் முறைமையை மாற்றினாலே 19ஆவது திருத்தத்திற்கு ஆதரவளிப்போம் என்ற நிலைப்பாட்டிலிருந்து தெளிவாகின்றது. இவை பற்றி நான் இங்கு விரிவாகக் குறிப்பிட்டுள்ளேன்: maatram.org/?p=3097
தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக நழுவல் போக்கையே இந்த அரசாங்கம் காட்டியுள்ளது. பொதுத் தேர்தலொன்றை தென்னிலங்கையில் சந்திக்க வேண்டியுள்ள சந்தர்ப்பத்தில் தமிழ் மக்களுக்கு நாம் பெரிதாக ஒன்றும் செய்ய முடியாது என்பதை தமிழ் மக்கள் விளங்கிக் கொள்ள வேண்டும் (அல்லாவிடில் சிங்கள மக்களின் ஆதரவை இழந்து விடுவோம்) என அரசாங்கம் சொல்வது பழைய அணுகுமுறையே. தமக்கு வாக்கெடுத்துத் தந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீது மக்கள் கோபம் திரும்பக் கூடாது என்பதற்காக விரும்பியும் விரும்பாமல் ஏனோ தானோவென சில விடயங்களை எழுந்தமானாக செய்ய முயற்சித்துள்ளனர். வலிகாமம் வடக்கில் விடுவிக்கப்பட்ட காணிகள் தொடர்பாக எழுந்துள்ள விமர்சனங்கள் இந்த ஏனோ தானோ மன நிலையை பிரதிபலிக்கின்றன. அடிப்படை கட்டமைப்பு சார் மாற்றங்கள் இல்லை. அது ஏற்படும் என்பதற்கான அறிகுறிகளும் இல்லை. அரசியல் தீர்வு விஷயத்திற்கும் இது பொருந்தும். பிரதமர் வடக்கு விஜயத்தின் போது தன்னிச்சையாக நடந்து கொண்ட முறையும் முதலமைச்சர் விக்னேஸ்வரனோடு கொண்டுள்ள பகை உறவும் அதிகாரத்தை மையத்தில் வைத்திருக்க விரும்பும் மன நிலைக்கே உதாரணங்கள்.
பொறுப்புக் கூறல் தொடர்பில் ஜெனீவா அறிக்கையை பிற்போட்டமையை இராஜதந்திர வெற்றியாக அரசாங்கம் சிங்கள மக்களிடம் விற்பனை செய்கின்றது. உள்ளக செயன்முறை என்று தென்னாபிரிக்காவோடு மூடு மந்திரம் பேசுகிறது அரசாங்கம். ஆனால், காத்திரமான உள்ளக செயன்முறையில் அரசாங்கத்திற்கு நாட்டமில்லை என்பதுதான் உண்மை. (இவ்விடயத்திலும் சிங்கள மக்கள் கோவித்துக் கொள்வர் என்ற வாதத்திற்குள் ஒளிந்து கொள்கின்றது அரசாங்கம்). ‘மாற்றத்தால்’ இந்த நூறு நாட்களால் வந்த முக்கிய நன்மை இந்திய, அமெரிக்க அரசுகளுக்கே. சீன சார்பு கொழும்பை ‘Pivot to Asia’ என்ற அமெரிக்க – இந்திய கூட்டு செயற்திட்டத்திற்குள் கொண்டு வந்து விட்டார்கள். இந்த மாற்றத்தை மஹிந்த ராஜபக்ஷ பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றுக் குழப்பக் கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறார்கள். தமிழ் மக்களும் குழப்பக் கூடாது; அதிகபட்சமாக அரசாங்கத்திற்கு அசௌகரியம் கொடுக்கக் கூடாது என அடிக்கடி மேற்குலக, இந்திய ராஜதந்திரிகள் தமிழ் அரசியல்வாதிகளுக்கும், செயற்பாட்டாளர்களுக்கும் அறிவுரை கூறுகின்றனர். ரணில் – மங்கள கூட்டணி மேற்குலகம் கேட்க விரும்பும் தாராண்மைவாத மொழியில் பாண்டித்தியம் பெற்றவர்கள். அந்த மொழியில் நம்பிக்கை வையுங்கள் என்று தமிழர்கள் கேட்கப்படுகின்றனர். UNP ஆட்சி ஒன்று பொதுத் தேர்தலில் அமைய வேண்டும் என்பதற்காக அமைதியாகவே இருக்கும் சர்வதேசம். அந்த ஆட்சி அமைந்த பின்னும் அதைப் பாதுகாக்கவே முயற்சிக்கும் என்பது தான் உண்மை. ‘மாற்றம்’ நடந்தால் இவை நடக்கும் என்பதை எங்களில் சிலர் அறிந்தே வைத்திருந்தோம். ஆனால், இவை பற்றி வெளிப்படையாக விவாதித்து செயற்பட முடியாத சூழலுக்குள் தமிழ் அரசியல் வைக்கப்பட்டிருக்கிறது. சில வெளிப்பூச்சான மாற்றங்களுக்காக தமக்கிருந்த வாய்ப்புக்களை இழந்திருக்கிறது தமிழ்த் தரப்பு என்பதே கசப்பான உண்மை. இது மஹிந்த ராஜபக்ஷ தொடர்ந்து ஆட்சியில் இருந்திருக்க வேண்டும் என்ற வாதமன்று. ஆட்சி மாற்ற அரசியலை எமது தலைமைகள் தமிழர் நலன் சார்ந்து கையாளவில்லை என்பதே எனது வாதம்.”
மலையக தோட்டத் தொழிலாளர்களுக்கு இந்த நூறு நாள் வேலைத்திட்டத்தால் ஏதாவது நல்லது நடந்திருக்கிறதா என்று அறிந்துகொள்வதற்காக மலையக மக்களது உரிமைகள் சார்ந்து செயற்பட்டு வருபவரான எஸ். பிரபாகரனை போனில் தொடர்புகொண்டேன். விடயத்தைக் கூறியவுடன், 100 நாள் வேலைத்திட்டத்தில் மலையகம் உள்வாங்கப்படவில்லையே, அப்படியிருக்கும் போது என்ன கூறுவது என்று என்னிடம் கேள்வி எழுப்பினார். அதுபற்றி கூறுங்கள் என்று குறிப்பெடுத்துக் கொள்ள ஆரம்பித்தேன்.
“அரசின் 100 வேலைத்திட்டத்தில் மலையகம் உள்வாங்கப்படவில்லை. சுமார் 200 வருடங்களாக அடிப்படை உரிமைகளுக்காகப் போராடிவரும் மலையகத் தோட்டத் தொழிலாளர்களுக்கு இந்த நூறு நாள் அரசும் எதிர்காலத்தில் எதுவும் செய்யப்போவதில்லை என்ன சிக்னலை வழங்கிவிட்டது.
இலங்கையில் சொந்தமாக காணியில்லாத மக்கள்தான் இந்த மலையக மக்கள். அதுவும் குறிப்பாக சொல்வதென்றால் தோட்டத் தொழிலாளர்கள். இலங்கையை ஆண்ட பல அரசாங்கங்கள் பல்வேறு திட்டங்களின் ஊடாக பெரும்பான்மை மக்களுக்கு 40 பேர்ச் தொடக்கம் 3 ½ ஏக்கர் காணி வரை வழங்கியிருக்கின்றனர். ஏன் மிக அண்மையில் மலையகத்தைச் சேர்ந்த பெரும்பான்மை மக்களுக்கு முல்லைத்தீவில் 1 ½ ஏக்கர் நிலப்பகுதி வழங்கப்பட்டுள்ளது. இப்படியெல்லாம் நடக்கும் போது மலையகத் தோட்டத் தொழிலாளர்கள் மட்டும் என்ன மந்தைகளா?
இப்போது மலையக அரசியல் தலைமைகளும் 7 பேர்ச் காணித்துண்டை பெற்றுக் கொடுப்பதற்கான போராட்டத்தில் இறங்கியிருக்கின்றனர். இதயசுத்தியுடன் இந்தப் போராட்டத்தில் இறங்கியிருக்கின்றனரா என்ற ஒரு கேள்வி எழும்பினாலும், இந்த 7 பேர்ச் காணி மக்களுக்குப் போதுமானதா என்பதைப் பார்க்க வேண்டும். பயிர்ச்செய்கைக்கான காணியுடன் சேர்த்து வீட்டுக்கான காணியும் வழங்கப்படவேண்டும் என்பதே எமது கோரிக்கை.
கடந்த வருடம், மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கக் காலப்பகுதியில் இடம்பெற்ற மிகப்பெரிய இயற்கை அழிவான மீரியாபெத்தை மண்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடு கட்டுவதற்காக அப்போது முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் தலைமையில் அடிக்கல் நாட்டப்பட்டது. அவசர அவசரமாக தேர்தலை இலக்குவைத்து அதை அவர்கள் செய்தார்கள். அதற்குள் அரசாங்கம் கவிழ்ந்தது. 100 நாள் அரசாங்கம் தெரிவானவுடன் மீண்டும் ஆரவாரத்துடன் புதிதாக அடிக்கல் நாட்டப்பட்டது. ஆனால், இதுவரை வீடுகள் கட்டிமுடிக்கப்படவில்லை. ஏன், இதுவரை மண்சரிவு இடம்பெற்ற பகுதியில் நினைவுச் சின்னமாவது அமைக்கப்படவில்லை. மலையக தோட்டத் தொழிலாளர்களை எந்தளவுக்கு மாறி மாறி வரும் அரசாங்கங்கள் மதிக்கிறார்கள் என்பதற்கு இது சிறந்த உதாரணம்.
சம்பளப் பிரச்சினை, கல்விப் பிரச்சினை, சுகாதாரம் என மலையக தோட்டத் தொழிலாளர்களின் பட்டியல் நீடித்துக் கொண்டே செல்கின்றது. இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண எந்த அரசாங்கமும் முன்வராத ஒரு நிலையில் புதிய மாற்றம் அரசாங்கம் செய்யும் என்று எதிர்பார்ப்பது முட்டாள்தனமானது.”
காணாமல்போனவர்களை கண்டறிவதற்காக உறவினர்களோடு சேர்ந்து போராடிவரும் பிரிட்டோ பெர்னாண்டோவே தொடர்பு கொண்டு பேசலாம் என தீர்மானித்தேன். மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசின் கீழ் தொடர் அச்சுறுத்தலை முகம்கொடுத்து வந்தவர் பிரிட்டோ பெர்னாண்டோ. உறவுகளை தேடித்தருமாறு போராட்டம் நடத்தும் ஒவ்வொரு நாளும் பாரதூரமான பிரச்சினைகளுக்கு முகம்கொடுப்பவர். இருந்தும் துணிந்து செயற்பட்ட அவரிடம் 100 நாள் வேலைத்திட்ட நிறைவு குறித்து என்ன நினைக்கிறீர்கள் எனக் கேட்டேன்.
“100 நாட்களில் எல்லாம் நடந்துவிடவில்லை. ஒரு சில விடயங்கள் நடந்தேறியுள்ளன.
மஹிந்த தலைமையிலான அரசின் கீழ் உரிமைகளைப் பெற்றுக்கொள்வதற்காக வீதியிலிறங்கி போராடுவற்கே அச்சப்பட்டிருந்தோம். ஆனால், தற்போது அந்தப் பிரச்சினை இல்லை. காணாமல்போனவர்களை, கடத்தப்பட்டவர்களை கண்டறிவதற்காக போராடிவரும் உறவினர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் முன்னரைப் போன்றில்லாமல் அச்சமின்றி செயற்பட்டுவருகின்றனர். காணியை இழந்தவர்களும் கூட அப்படித்தான்.
ஆனால், காணாமல்போனவர்கள் எத்தனை பேர்? அவர்கள் எங்கிருக்கிறார்கள்? லிஸ்ட் ஒன்றை வெளியிடுமாறு அரசிடம் நாங்கள் கேட்டோம். பதில் எதுவும் கிடைக்கவில்லை. இரசகசிய முகாம்கள் எதுவும் இலங்கையில் இல்லை என்ற பதில் மட்டும்தான் கிடைத்தது.
அத்தோடு, காணாமல்போனவர்கள், கடத்தப்பட்டவர்கள் உயிரோடு இருக்கிறார்கள் என்பதற்கான ஒரு சில ஆதாரங்களும் கடந்த தேர்தல் காலத்தின்போது எமக்கும், உறவுகளுக்கும் கிடைத்தன. இவற்றுக்கான பதிலை இந்த அரசு வழங்கவேண்டும். முன்னைய அரசு போல் தட்டிக்கழிக்காமல் உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
தேர்தலை, சிங்கள மக்களின் வாக்குகளை நோக்காகக் கொண்டு செயற்படுவதால் தமிழ் மக்களின் பிரச்சினை தொடர்பாக அரசு அக்கறை கொள்ளாத தன்மையை காணக்கூடியதாக இருக்கிறது. இந்த நாட்டின் பிரதான பிரச்சினைக்கு தீர்வுகாண 100 நாட்கள் போதாது என்பதை யாவரும் அறிவார்கள். ஆனால், அதற்கான நல்லதொரு சமிக்ஞையையாவது இந்த அரசு காண்பிக்கவில்லை என்பதே ஏமாற்றத்துக்குரிய விடயமாக உள்ளது.
இனவாதிகள் மீண்டும் மஹிந்தவை கொண்டுவந்து இனவாதத்தை ஆட்சிபீடமேற்ற முயன்று வருகின்றனர். அதனைத் தடுப்பதற்கு உரிய நடவடிக்கைகளை இந்த அரசு எடுக்க வேண்டும்.”
அடுத்து வடக்கை மையமாகக் கொண்டியங்கும் சுயாதீன ஊடகவியலாளரான ஜெரா என்பவரை பேஸ்புக் ஊடாக தொடர்பு கொண்டேன். 100 வேலைத்திட்டத்தால் வடக்கில் மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றனவா எனக் கேட்டேன். அப்படியே ஒன்றரை பக்கம் டைப்செய்து அனுப்பி வைத்தார்.
“புதிய ஆட்சி மாற்றத்தின் சுலோகமான 100 நாள் வேலைத்திட்டம் வடக்கில் வாழும் தமிழர்களுக்கு எதைக் கொடுத்தது என்று பார்க்க வேண்டும்.
கடந்த ஆட்சியை விட ஓரளவுக்கு ஜனநாயக் சூழல் இந்த 100 நாட்களுக்குள் வடக்கில் நிலவியது என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். பிரச்சினைகள் தீர்க்கப்படாவிட்டாலும், மக்கள் தம் உரிமையைப் பெற்றுக்கொள்வதற்கான ஜனநாயக வழிப் போராட்டங்களைப் பல்வேறு தளங்களில் மேற்கொண்டிருந்தார்கள். தமது பிரச்சினைகளை உலகின் முன் கொண்டுவருவதற்கான அமைதியான வாய்ப்பை இந்த 100 நாட்கள் வழங்கியிருந்தது. ஆனாலும், புலனாய்வாளர்களின் கண்காணிப்பு 100 நாட்களுக்கு முந்தையை ஆட்சிக்காலத்தைப் போல அப்படியேதான் இருந்தது.
வடக்கில் இருந்து எப்போதும் கொழுந்துவிட்டெறியும் பிரச்சினையாக காணாமல்போனோர் விவகாரம் இருக்கின்றது. இந்த 100 நாட்களுக்கு காணாமல் போனவர்களின் உறவுகள் பல்வேறு போராட்டங்களை செய்தார்கள். ஆனால், அதுகுறித்து எந்தக் கவனிப்பையும் இந்த 100 நாள் வேலைத்திட்டங்கள் செய்யவில்லை. சிறைக்கைதிகள் விடயத்தில் ஜெயக்குமாரி விடுதலையுடன் கைதிகள் விவகாரமும் பேசுபொருளற்றதாகிவிட்டது.
வடக்கில் பெரும் ஊடக பரப்புரைகளுடன் பறிக்கப்பட்ட நில விடுவிப்புக்கள் இந்த அரசால் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், உறுதியளித்தபடி விடுவிக்கப்படவுள்ளதாக சொன்ன அளவு நிலப்பரப்பு மக்களிடம் கையளிக்கப்படவில்லை. அண்மையில்கூட வலி. வடக்கில் 570 ஏக்கர் நிலத்தை விடுவிப்பதாக அறிவித்துவிட்டு 423 ஏக்கர்களையே விடுவித்தார்கள். பரவலாக மக்கள் குடியிருப்புக்கள் வாழ்ந்த பகுதிகளைவிட பொதுமக்களின் பொதுப் பாவனைக்காக இருந்த நிலப்பகுதியே அதிகளவில் விடுவிக்கப்பட்டதாக பொதுமக்களால் விசனம் தெரிவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
வடக்கில் வேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சினையை இந்த 100 நாள் வேலைத்திட்டம் கடுகளவும் கணக்கிலெடுக்கவில்லை. பிரதமர் ரணிலின் வருகையின்போதும், ஆளுநருடனான சந்திப்பின்போதும் இது குறித்து கவனமெடுக்குமாறு வேலையற்ற பட்டதாரிகள் நேரில் கேட்டிருந்தார்கள். ஆனால், இதுவரை வேலையற்ற பட்டதாரிகள் குறித்து எந்தக் கவனமும் செலுத்தப்படவில்லை.
சுன்னாகம் குடிநீர் பிரச்சினை நீண்டகாலமாக இருந்து வரும் ஒன்று. மிகவும் அபாயகரமான விடயம் என்பதையும் அரச தரப்பினரின் அறிக்கைகள் பதிவுசெய்துள்ள போதிலும், இந்த விடயம் குறித்து அக்கறையான செயற்பாடுகள் எதனையும் இந்த 100 நாட்களில் மேற்கொள்ளப்படவில்லை. நாடாளுமன்றத்தில் அமைச்சர் ரவூப் ஹக்கீம் ஒரு உரையை ஆற்றியதுடன் நிறுத்திக்கொண்டார். மேற்கொண்டு மக்களுக்கும், அந்த நிலத்துக்கும் செய்யவேண்டிய வேலைத்திட்டங்கள் குறித்து எதனையும் செய்யவில்லை.
இவ்வாறு வடக்கு மக்களுக்கு அதிகளவான பிரச்சினைகள் உள்ளபோதும், கொழும்பை மையப்படுத்தி நடக்கும் அரசியல் சுவாரஸ்யங்கள் இந்தப் பிரச்சினைகள் குறித்த கவனத்தை திசை திருப்பிவிட்டன. ஊடகங்களும் இந்த 100 நாட்களுக்குள் கொழும்பிற்கே அதிக முக்கியத்துவம் கொடுத்தன. இனப்பிரச்சினை தீர்வு குறித்த முன்முனைப்புக்களைவிட இருக்கின்ற ஆட்சியை தக்கவைத்து நிலைபெற்றுக்கொள்வதற்கான அரசியல் காய்நகர்த்தல்களே இந்தக் காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்டன.
ஆட்சி மாறியதும், வடக்கிற்கு வருகைதந்த வெளிநாட்டு தூதுவர்களும், அதிகாரிகளும், இந்த அரசை குழப்பவேண்டாமெனவும், இந்த அரசு அனைத்தையும் கொஞ்சம் கொஞ்சமாக செய்யும் எனவும், அதுவரை அமைதிகாக்குமாறும் மீள மீள வலியுறுத்தி சென்றமையும் இந்த 100 நாட்களுக்குள் நடந்தது.”
அடுத்து சிங்கள கலை உலகில் நன்கு அறியப்பட்ட வளர்ந்துவரும் சிங்களக் கவிஞரான லஹிரு கிதலகமவிடம் இது குறித்து கேட்டேன்.
“புதிய அரசின் 100 நாட்களில் நாட்டு மக்களுக்கு சுதந்திரம் கிடைத்திருக்கின்றது என்பதே எனது கருத்து. முக்கியமாக வடக்கு – கிழக்கு மக்கள் அதை நன்கு உணர்கிறார்கள். வெளிப்படையாகத் தெரியாவிட்டாலும் தற்போது அங்கு காணப்படும் சூழலை அவதானித்தால் அதை அவதானிக்கக்கூடியதாக இருக்கிறது.
இனங்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு இந்த அரசுக்கு அக்கறை இருப்பதாக தெரிந்தாலும், அதற்கான எந்த முன்நடவடிக்கையையும் இதுவரை காணமுடியவில்லை. 100 நாள் வேலைத்திட்ட நிறைவு குறித்து நேற்று ஜனாதிபதி மக்களிடம் உரையாற்றியிருந்தார். இது நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சியாக இல்லாதபோதும் கூட அது தமிழில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டிருக்கவில்லை. ஏன் இதை தமிழ் மக்கள் இதை அறியக்கூடாதா?
உண்மையில் தமிழ் மக்கள் என்னென்ன பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்கிறார்கள் என்பதை பெரும்பான்மை சிங்கள மக்களுக்கு விளங்கப்படுத்த வேண்டும். அதற்கான திட்டமொன்றை இந்த அரசாங்கம் அமைக்க வேண்டும். ஜெனிவாவில் கொண்டுவரப்படவிருந்த தீர்மானத்தை தள்ளிவைத்ததற்காக கொண்டாடுவதை விடுத்து பாதிக்கப்பட்ட மக்கள் அரசாங்கம் மீது நம்பிக்கை கொள்வதற்கான ஆரோக்கியமான செயற்பாடுகளை ஆரம்பிக்கவேண்டும். அவர்கள் நம்பிக்கை கொள்ளக்கூடிய வகையில் உள்ளக விசாரணை பொறிமுறையை ஏற்படுத்த வேண்டும். உண்மையைக் கண்டறியாமல் நல்லிணக்கம் சாத்தியமாகாது. இதை செய்துமுடிக்க கால எல்லை ஒன்றை வரையறுக்க முடியாது. இருப்பினும், அதற்கான அர்ப்பணிப்பு இருக்கவேண்டியது அவசியம்”.