படம் | AP Photo/Eranga Jayawardena, NEWS. YAHOO
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஒரு வலுவான தமிழ்த் தேசிய அரசியல் சக்தியாக உருவாக்க வேண்டும் என்னும் குரலுக்கு கிட்டத்தட்ட அரை தரசாப்தகால வயதுண்டு. ஆனாலும், ஆண்டுகள் கழிந்தனவேயன்றி முன்னேற்றங்கள் எதனையும் காண முடியவில்லை. இது தொடர்பில் நான் முன்னரும் பல தடவைகள் விவாதித்திருக்கிறேன். அந்த வகையில் என்னைப் போன்றவர்களின் வாதங்களுக்கும் அரைத்தசாப்த கால வயதாகிறது. இன்னும் எத்தனை ஆண்டுகள் இதற்காக நாம் செலவிடப் போகின்றோம்? ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து ஏற்பட்டிருக்கும் ஓரளவு சுமூகமான சூழலில் தமிழ் மக்களின் பேரம் பேசும் சக்தியை பலப்படுத்த வேண்டிய தேவை முன்னரைவிடவும் அதிக கனதியுடைய தேவையாக மாறியிருக்கிறது. இவ்வாறானதொரு சூழலில்தான் கூட்டமைப்பில் அங்கத்துவம் வகித்துவரும் முன்னாள் விடுதலை இயக்க பின்னணி கொண்ட கட்சிகள் இந்த விவகாரத்தை தொடர்ந்தும் பிற்போட முடியாதென்னும் வாதத்தை முன்வைத்து வருகின்றன. இவ்வாறானதொரு பின்னணியில்தான் அண்மையில் கூட்டமைப்பின் தலைவராக அறியப்படும் இராஜவரோதயம் சம்பந்தனின் கொழும்பு இருப்பிடத்தில் இரண்டு சந்திப்புக்கள் இடம்பெற்றிருந்தன. இதன்போது கூட்டமைப்பை பதிவு செய்வதில் தாமதங்கள் ஏற்படுமிடத்து முதலில் கூட்டமைப்பில் அங்கத்துவம் வகித்துவரும் கட்சிகளுக்கிடையில் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொள்வது அவசியம் என்பதில் இணக்கம் காணப்பட்டது. இது தொடர்பில் நான்கு கட்சிகளின் தலைவர்களுக்கு இடையிலும் ஒரு சந்திப்பு இடம்பெற்றிருந்தது. மேற்படி சந்திப்பின் போது தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, தமிழரசு கட்சியின் உறுப்பினர்களுடன் பேசிய பின்னர் இது தொடர்பில் தங்களின் நிலைப்பாட்டை அறிவிப்பதாக உடன்பட்டிருந்தார். ஆனால், தற்போது வெளியாகியிருக்கும் ஊடக செய்திகளின்படி யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற தமிழரசு கட்சி உறுப்பினர்களுடனான சந்திப்பின் போது புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றை ஏற்படுத்துவதாயின், அதில் தமிழரசு கடசிக்கு 51 வீதம், ஏனைய மூன்று கட்சிகளுக்கும் 49 வீதம் என்னும் அடிப்படையில் அதிகாரம் வரையறுக்கப்பட வேண்டுமென்று தமிழரசு கட்சியின் உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்திருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன. இது தொடர்பில் மாவை சேனாதிராஜா எந்தவொரு மறுப்பையும் வெளியிட்டிருக்கவில்லை என்பதையும் இந்த இடத்தில் குறித்துக்கொள்ளலாம். இது தொடர்பில் ஊடகங்களுக்கு அறிக்கையிட்டிருக்கும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளர் சுரேஷ் பிரேமசந்திரன், புரிந்துணர்வு உடன்படிக்கையில் அனைத்து கட்சிகளுக்கும் சம அந்தஸ்த்து வழங்கப்பட வேண்டுமென்று தெரிவித்திருக்கின்றார். இதிலிருந்து மீண்டும் இந்த விவாதம் அண்மைக்காலத்தில் முற்றுப்பெறப் போவதில்லை என்பது தெளிவாகிறது.
மேலும் கிடைக்கும் தகவல்களின்படி சில தினங்களுக்கு முன்னர் இது தொடர்பில் ஜரோப்பிய ஒன்றிய நாடொன்றிலும் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இதன்போதும் கூட்டமைப்பை ஒரு வலுவான தமிழ்த் தேசிய அரசியல் கட்சியாக உருவாக்க வேண்டிய அவசியம் வலியுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், மேற்படி சந்திப்பின் போதும் தமிழரசு கட்சியின் தனித்துவம் பற்றியே வகுப்பெடுக்கப்பட்டிருக்கிறது. இந்த இடத்தில் மிகவும் நேர்மையாக ஒரு கேள்வியை கேட்க வேண்டியிருக்கிறது. அதாவது, தமிழரசு கட்சியின் தனித்துவம் என்பது என்ன? தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளுக்கும் மேலான ஒரு கட்சிநலன் இருக்க முடியுமா? தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு தமிழ்த் தேசிய அரசியலை ஏகபோகமாக கையாண்ட காலத்தில் தமிழரசு கட்சியென்று ஒன்று இருப்பதாகவே எவருக்கும் நினைவிருந்திருக்காது. மேலும், தமிழரசு கட்சியை நினைவுகொள்ள வேண்டிய தேவையும் எவருக்கும் இருந்திருக்கவில்லை. இவ்வாறானதொரு பின்னணியில்தான் அதுவரை எதிரணியில் நின்றுகொண்டிருந்த பிரதான ஜனநாயக கட்சிகள் அனைத்தையும் ஓரணிப்படுத்தி புலிகளின் நிகழ்சிநிரலுக்கு ஆதரவானவர்களாக்கும் முயற்சியில் விடுதலைப் புலிகள் ஈடுபட்டனர். இதன்போது தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்தசங்கரியுடன் ஏற்பட்ட ஒரு முரண்பாட்டின் விளைவாகவே அதுவரை கவனிப்பாரற்றுகிடந்த தமிழரசு கட்சி மீண்டும் தமிழ்த் தேசிய அரசியலுக்குள் எட்டிப் பார்த்தது. இதுதான் தமிழரசு கட்சி மீண்டும் தமிழர் அரசியலுக்குள் பிரவேசித்த வரலாறு. உண்மையில் வரலாற்றுரீதியாக பார்த்தால், ஒப்பீட்டடிப்படையில் தற்போது கூட்டமைப்பிற்குள் அங்கம் வகித்துவரும் கட்சிகளிலேயே தனித்துவம் பற்றி பேச முடியாத கட்சியென்று ஒன்றிருக்கின்றதென்றால், அது தமிழரசு கட்சி மட்டும்தான். ஏனெனில், தமிழர் விடுதலைக் கூட்டணி உருவாக்கப்பட்ட பின்னர் தமிழரசு கட்சி என்னும் ஒரு கட்சி, தமிழர் அரசியல் அரங்கிற்குள்ளேயே இருந்திருக்கவில்லை. அப்படியானதொரு கட்சி எவ்வாறு இன்று தனித்துவம் பற்றி பேச முடியும்? உண்மையில் இன்று தமிழரசு கட்சிக்கு தமிழ் மக்கள் மத்தியில் குறிப்பாக இளைய தலைமுறையினர் மத்தியில் ஒரு முகம் இருக்கிறதென்றால், அந்த பெருமை பிரபாகரனையே சாரும். அவர் போட்ட பிச்சையின் காரணமாகவே இன்று சிலரால் நாங்கள் தமிழரசு கட்சியை சேர்ந்தவர்கள் என்று பெருமைகொள்ள முடிகிறது. இதிலுள்ள சுவாரஷ்யமான விடயம் என்னவென்றால், தமிழரசு கட்சியின் பாரம்பரியத்தில் வெளிவந்த பல தலைவர்களை இல்லாமலாக்கியவரும் அதே பிரபாகரன்தான். பிரபாகரன் 1987இல் இந்திய பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில், தமிழர் விடுதலைக் கூட்டணியின் கைகளுக்கு அதிகாரம் செல்வதை தான் விரும்பவில்லை, அதனால்தான் அவர்களை நான் எதிர்க்கிறேன் என்று தெரிவித்திருந்தார். ஒருவேளை அதற்கு பழிதீர்க்கும் வகையில்தான் இன்றைய தமிழரசு கட்சி செயற்படுகின்றதா?
இந்த இடத்தில் கட்சிகளின் சொந்த முகம் பற்றியும் சில விடயங்களை சுட்டிக்காட்ட வேண்டியிருக்கிறது. இதனையும் இணைத்து வாசிக்கும் போதுதான் ஒரு அரசியல் வாசகர் தமிழரசு கட்சியின் கையறுநிலையை தெளிவாக விளங்கிக்கொள்ள முடியும். அண்மையில் கனடிய தமிழ் இணைய ஊடகமொன்றிற்கு வழங்கிய நேர்காணலில் கூட்டமைப்பின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் மதியாபரணம் ஆபிரகாம் சுமந்திரன், சில கட்சிகளுக்கு தங்களது சொந்தப் பெயரில் மக்களை எதிர்கொள்ள விரும்பமில்லை. அவர்களுக்கென்று சில பின்னணிகள் உண்டு. அந்த பின்னணிகளுடன் மக்களை எதிர்கொள்ள அவர்கள் விரும்பவில்லை ஆனால், அவ்வாறானவர்களுக்கு தங்களின் கட்சியை விட்டுவிட்டு தமிழரசு கட்சியுடன் இணைந்து கொள்ளவும் விருப்பமில்லை. இப்படியானவர்கள்தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஒரு கட்சியாக பதிவுசெய்ய வேண்டுமென்று கூறுகின்றனர். அதாவது, அவர்கள் அனைவரும் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கட்சிகள். ஆனால், அவர்கள் கூட்டமைப்பை ஒரு ஜந்தாவது கட்சியாக பதிவுசெய்யுமாறு கோருகின்றனர் என்றவாறு தெரிவித்திருந்தார். சுமந்திரன் மிகவும் தெளிவாகவே பேசியிருக்கின்றார். அதாவது, தற்போது கூட்டமைப்பிற்குள் அங்கம்வகிக்கும், குறிப்பாக கட்சிப் பதிவு தொடர்பில் பேசிவரும் முன்னைநாள் போராட்ட அமைப்புக்கள் எவையும் தங்களின் சொந்த முகத்தில் தமிழ் மக்களை எதிர்கொள்ள முடியாதவை. சுரேஷ் பிரேமசந்திரன், சித்தார்த்தன் மற்றும் அடைக்கலநாதன் ஆகியோருக்கு சொந்த முகம் இல்லை. அதனால்தான் அவர்கள் புதியதொரு முகத்திற்குள் மறைந்துகொள்ள முற்படுகின்றனர் என்பதாகவே சுமந்திரனின் கருத்துக்களை நான் விளங்கிக்கொள்கின்றேன். இதனை வேறு விதமாக விளங்கிக் கொள்ளவும் முடியாது. சுமந்திரன் சொல்வது போன்று தங்களுக்குச் சொந்த முகம் இல்லையா அல்லது இருக்கிறதா என்பதற்கு மேற்படி மூன்று கட்சிகளின் தலைவர்கள்தான் பதிலளிக்க வேண்டும். அவர்கள் சார்பில் இந்த பத்தி பதிலளிக்கவும் முடியாது. ஆனால், கட்சிகளின் சொந்த முகம் பற்றி என்னிடம் சில அபிப்பிராயங்கள் உண்டு. அதனை இங்கு இணைத்துக் கொள்வது அரசியல் வாசகர்களுக்கு பயனுடையதாக இருக்கலாம்.
என்னுடைய கணிப்பில் தற்போது வடக்கு கிழக்கை தளமாகக்கொண்டு தமிழ்த் தேசிய அரசியலை பிரதிநிதித்துவம் செய்துவரும் அனைவருமே தங்களின் சொந்த முகங்களில் இல்லை. இது தமிழரசு கட்சியிலிருந்து அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் வரையில் அனைவருக்கும் பொருந்தும். தமிழரசு கட்சி தன்னுடைய சொந்த முகத்திலா தமிழ் மக்களை எதிர்கொண்டு வருகின்றது? எனவே, தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகித்துவரும் எந்தவொரு கட்சியும் தங்களின் சொந்த முகம் பற்றிய விவாதங்களில் ஈடுபட முடியாது. இந்த யதார்த்தத்தைக் கூட்டமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் தமிழரசு கட்சி தவிர்ந்த ஏனைய கட்சிகள் உணர்ந்திருக்கின்றன. அதனை உணர்ந்தே அவை செயற்பட்டும் வருகின்றன. ஒருவேளை தமிழரசு கட்சிக்கு தன்னுடைய சொந்த முகத்தில் நம்பிக்கையிருப்பின் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வெறும் தமிழரசு கட்சியாக மக்களை எதிர்கொண்டு தங்களின் செல்வாக்கை நிரூபித்துக் காட்ட வேண்டும். ஏனெனில், கூட்டமைப்பு உருவாக்கப்பட்ட காலத்திலிருந்து தமிழரசு கட்சி தன்னுடைய சொந்த முகத்தில் மக்களை எதிர்கொண்டதில்லை. மாறாக தமிழ் தேசியக் கூட்டமைப்பாகவே மக்களை எதிர்கொண்டு வருகின்றது. தமிழ் மக்களும் தமிழரசு கட்சியை ஆதரிக்கவில்லை. மாறாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையே ஆதரித்து வருகின்றனர். இதனை கேள்விக்குள்ளாக்க வேண்டுமாயின் தமிழரசு கட்சியினர் தங்களுக்கு கூட்டமைப்பு என்னும் நாமம் தேவையில்லை, தங்களால் தங்களின் சொந்த பெயரில் தமிழ் மக்களிடம் செல்ல முடியும் என்பதை நிரூபித்து காட்ட வேண்டும். அதன் பின்னர் சுமந்திரன் போன்றவர்கள் சொந்த முகத்தின் பிரகாசம் பற்றி விவாதிப்பார்களாயின், அதில் பொருளிருக்கும். அதற்கு தாங்கள் தயாரா என்பதை தமிழரசு கட்சியினர் தமிழ் மக்கள் முன் பகிரங்கமாக முன்வைக்க வேண்டும். எதிர்வரும் தேர்தலில் தாங்கள் தனித்து போட்டியிடப் போகின்றோம் என்பதை பகிரங்கமாக அறிவிக்க வேண்டும். அறிவிக்கக் கூடிய ஆற்றல் தமிழரசு கட்சியிடம் இருக்கிறதா?
கட்சிகள் என்பவை ஒரு குறிப்பிட்ட சூழலில், அதனால் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களின் நலன்களை வெற்றி கொள்வதற்கான வெறும் கருவிகளேயன்றி, சிலரது சொந்த நலன்களை பாதுகாப்பதற்கான கருவியல்ல. தமிழரசு கட்சியின் அண்மைக்கால நடவடிக்கைகள் தமிழ் மக்களின் தேசிய நலன்களுக்கு முற்றிலும் மாறுபட்ட வகையிலேயே அமைந்திருக்கிறது. மேலும், அடுத்து இடம்பெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் பல புது முகங்களை தமிழரசு கட்சி களமிறக்கவுள்ளதாகவும் அறிய முடிகிறது. இதில் ஒரு சிலர் எந்த வகையிலும் தமிழ் மக்களின் அரசியலுடன் தொடர்புபடாதவர்கள் என்றும் அறிய முடிகிறது. இதில் ஒருவர் மஹிந்தவின் புதல்வர்களுக்கு மிகவும் நெருக்கமானவராக இருந்தவர் என்றும் கொழும்பில் அரசல்புரசலாக தகவல்கள் கசிகின்றன. இவர் எதிர்வரும் தேர்தலில் முல்லைத்தீவில் போட்டியிடலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறதாம். மொத்தத்தில் தமிழரசு கட்சி தற்போது தமிழ் மக்களை எங்கு கொண்டு சேர்க்க விரும்புகிறது என்னும் கேள்வியே எஞ்சிக்கிடக்கிறது. ஆனால், அது நிச்சயமாக தமிழ் மக்களுக்கு நன்மையான, தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை வென்றெடுப்பதற்கான ஒரு தெளிவான பாதையில் தமிழரசு கட்சி இல்லை என்பது மட்டும் உண்மை. அவ்வாறானதொரு உயர்ந்த நோக்கம் தமிழரசு கட்சிக்கு இருந்திருப்பின், இன்று பங்குடமை வர்த்தக நிறுவனங்களில் பங்குபிரிப்பது போன்று 51 வீதம் 49 வீதம் பங்குபிரிப்பு பற்றி விவாதித்திருக்காது. உண்மையில் இவ்வாறான பங்குபிரிப்பு பற்றி தமிழரசு கட்சியினர் பேசுவதானது, இதுவரை தமிழ்த் தேசியத்திற்காக தங்கள் உயிர்களை ஈகம் செய்தவர்களை எள்ளிநகையாடும் கேவலப்படுத்தும் ஒரு செயலாகும்.
தினக்குரல் பத்திரிகைக்காக யதீந்திரா எழுதிய கட்டுரை இங்கு தரப்பட்டுள்ளது.