படம் | ALJAZEERA

19ஆவது திருத்தச் சட்டமூலம் இனப்பிரச்சினைக்கு தீர்வானது அல்ல. ஆனால், அரச திணைக்களங்கள் மற்றும் அரச நிறுவனங்களை சுயாதீனமாக செயற்படுத்தக் கூடிய சில ஏற்பாடுகள் இருப்பதாக கூறப்படுகின்றது. 19ஆவது திருத்தச் சட்ட மூலத்தில் என்னென்ன விடயங்கள் முழுமையாக உள்ளடங்கியுள்ளன என்பது குறித்து இதுவரை முழுமையாக தெரிவிக்கப்படவில்லை. ஆனாலும், 17ஆவது திருத்தச்சட்டத்தில் உள்ள விதப்புரைகள் இந்த சட்ட மூலத்தில் சேர்க்கப்படும் என அரசு கூறியுள்ளது.

வர்த்தமானியில் மாற்றங்கள்

மூன்று விடயங்கள் இந்த 19ஆவது திருத்தத்தின் மூலம் எதிர்பார்க்கப்படுகின்றன. ஒன்று, அரச திணைக்களங்களின் சுயாதீனமான செயற்பாடு – அவற்றில் பொலிஸ் ஆணைக்குழுக்கள் மற்றும் மாகாண பொலிஸ் ஆணைக்குழுக்கள் என்பன முக்கியமானதாகும். இரண்டாவது, நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி ஆட்சி முறை மாற்றியமைக்கப்பட்டு பிரதமர் தலைமையிலான நாடாளுமன்ற ஆட்சி முறையை கொண்டு வருதல். மூன்றாவது, அரசியலமைப்பில் உள்ள நடைமுறைப்படுத்தப்படாத சட்டங்களை மீண்டும் செயற்படவைத்தல் அல்லது புதுப்பித்தல். இந்த மூன்று விடயங்களிலும் பிரதானமானது, சுயாதீன ஆணைக்குழுக்கள்தான.

2010ஆம் ஆண்டு அமுல்படுத்தப்பட்ட 18ஆவது திருத்தம் ஜனாதிபதியின் அதிகாரங்களை அதிகரித்ததுடன் நீதித்துறையின் சுதந்திரமான செயற்பாட்டிற்கும் தடையாக அமைந்தது என்ற குற்றச்சாட்டுக்கள் அப்போது முன்வைக்கப்பட்டன. இந்த நிலையில், புதிய அரசு 19ஆவது திருத்தத்தை கொண்டு வந்து, அந்த குறைபாடுகளை நீக்க முற்படுவது அரசின் நம்பகத் தன்மையையும் ஜனநாயத்தின் மீதான மக்களின் நம்பிக்கையும் அதிகரிக்கும் என எதிர்ப்பார்க்கலாம். ஆனால், 19ஆவது திருத்தத்தின் மூலப் பிரதியில் கூறப்பட்டிருந்த சில விடயங்கள் தற்போது அகற்றப்பட்டுள்ளதாக ஜனநாயகத்துக்கான சட்டத்தரணிகள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

நிறைவேற்று அதிகாரமுறை

குறிப்பாக நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி ஆட்சியை முறையை நீக்கி பிரதமர் தலைமையிலான நாடாளுமன்ற ஆட்சி முறையை ஏற்படுத்துவது என்ற விடயம் 19ஆவது திருத்தத்தின் மூலப் பிரதியில் இருந்து நீக்கப்பட்டுள்ளது என்றும், இதனால் ஜனாதிபதி ஆட்சி முறை தொடர்ந்து நீடித்துச் செல்ல 19ஆவது திருத்தம் வழி வகுக்கும் எனவும் அந்த சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. புதிய அரசின் நூறு நாள் வேலைத்திட்டத்தில் ஜனாதிபதி ஆட்சி முறையை இரத்துச் செய்வது என்ற விடயம் முக்கியமானது. இந்த நிலையில், 19ஆவது திருத்தத்தின் மூலப்பிரதியில் மாற்றங்கள் செய்யப்பட்டதன் பின்னணி தொடர்பாக சந்தேகங்கள் எழுந்துள்ளன.

அதேவேளை, 18ஆவது திருத்தத்தில் கூறப்பட்டுள்ள ஜனாதிபதிக்குரிய அதிகாரங்கள் 19ஆவது திருத்தத்தில் இரத்துச் செய்யப்படும் என்ற விதப்புரைகள் இருப்பதாக தெரியவில்லை. குறிப்பாக நீதியமைச்சின் செயலாளரை ஜனாதிபதி நியமித்தல், நீதியரசர்களின் நியமனம் மற்றும் பதவி உயர்வு போன்ற விடயங்கள் 18ஆவது திருத்தத்தில் ஜனாதிபதிக்குரியதாக அல்லது அவர் பெயர் குறித்து நியமிக்கும் குழுவுக்கு உரியதாக கூறப்பட்டுள்ளது. இந்த விடயங்கள் ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகார முறைமைக்குள் ஏற்கனவே இருந்தாலும் கூட 18 ஆவது திருத்தத்தில் அந்த விடயங்கள் ஜனாதிபதிக்குரியவை என்று நேரடியாகவே குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி அரசாங்கத்தின் தலைவர்

ஆனால், 19ஆவது திருத்தத்தில் ஜனாதிபதிக்குரிய அதிகாரங்கள் எதுவும் வரையறை செய்யப்படவில்லை. நாடாளுமன்றத்தின் மேற்பார்வையில் நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதியின் அதிகாரங்கள் கொண்டுவரப்பட வேண்டும் என்பதுதான் 19ஆவது திருத்தத்தின் மூலப்பிரதியில் கூறப்பட்டுள்ளது. அத்துடன், பிரதமர் அரசின் தலைவராகவும், ஜனாதிபதி நாட்டின் தலைவராகவும் முப்படைகளின் தளபதியாகவும் விளங்க வேண்டும் என்பதும் 19ஆவது திருத்தத்தின் முக்கிய விடயங்கள். ஆனால், 19ஆவது திருத்தத்தின் மூலப்பிரதியில் செய்யப்பட்ட மாற்றங்களின் படி ஜனாதிபதி அரசின் தலைவராக பதவி வகிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. ஆக, இரண்டு தடவைக்கு மேல் ஒருவர் ஜனாதிபதியாக பதவி வகிக்கலாம் என 18ஆவது திருத்தத்தில் கூறப்பட்டுள்ள விதப்புரை மாத்திரம் 19ஆவது திருத்தத்தில் நீக்கப்பட்டுள்ளது.

ஆகவே, வர்த்தமானியில் செய்யப்பட்ட இந்த மாற்றத்தின் பிரகாரம் ஜனாதிபதி தொடர்ந்தும் அரசின் தலைவராக இருந்தால் நாடாளுமன்றத்தில் பிரதமர் மற்றும் அமைச்சரவையின் பொறுப்புகள் யார் வசம் என்ற கேள்வி எழுவது இயல்பானது. நாடாளுமன்றத்தில் ஜனாதிபதியின் தலையீடு இருக்கக் கூடாது என்ற பிரதான நோக்கம் 19ஆவது திருத்தத்தில் இல்லை. இதனால், இந்த சட்டமூலம் எதற்காக யாருக்காக கொண்டுவரப்படுகின்றது என்ற கேள்விகளும் எழுகின்றன. இந்த விடயம் தொடர்பாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்களும் ஏன் அமைதியாக இருக்கின்றனர் என்ற சந்தேகங்களும் எழுகின்றன.

சுயாதீன ஆணைக்குழுவின் நிலை

அதேவேளை, சுயாதீன ஆணைக்குழுக்களின் நிலை தொடர்பான சந்தேகங்களுக்கும் 19ஆவது திருத்தத்தில் உரிய பதில் வழங்கப்பட்டுள்ளதாக தெரியவில்லை. 17ஆவது திருத்தத்தில் 10 பேர் கொண்ட அரசியலமைப்புச் சபை உருவாக்கப்பட்டு அரச திணைக்களங்களை சுயாதீனமாக செயற்படவைப்பதற்கான ஆணைக்குழுக்களை நியமிப்பது என கூறப்பட்டிருந்தது. அத்துடன், பொலிஸ் ஆணைக்குழுக்கள் நியமன விடயத்தில் மாகாணங்களுக்கான தனியான பொலிஸ் ஆணைக்குழுக்களை நியமிப்பது என்ற விடயமும் பிரதானமாக காணப்பட்டது. ஆனால், 18ஆவது திருத்தத்தில் இந்த விடயங்கள் முற்று முழுதாக இரத்துச் செய்யப்பட்டுள்ளன.

இது தொடர்பாக 2010ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் உரையாற்றிய சுமந்திரன் 17ஆவது திருத்தத்தில் கூறப்பட்டிருந்த மாகாணங்களுக்கான பொலிஸ் ஆணைக்குழுக்களை நியமிப்பதற்கான மாகாண சபைகளுக்குரிய அதிகாரங்களும் 18ஆவது திருத்தத்தின் மூலம் இரத்துச் செய்யப்பட்டமை வடக்கு – கிழக்கு மாகாணத்திற்கு பாதிப்பு என கூறியிருந்தார். ஆகவே, 19ஆவது திருத்தத்தை நிறைவேற்ற முன்னர் இந்த விடயங்கள் தொடர்பாக புதிய அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும். இந்த திருத்தம் இனப்பிரச்சினைக்குத் தீர்வாக இல்லாது விட்டாலும் கூட இவ்வாறான சுயாதீன ஆணைக்குழுக்களை நியமித்தல் என்ற விடயங்களின் மூலமாக குறைந்தபட்சமேனும் வடக்கு கிழக்கில் இராணுவ நிர்வாகம் இல்லாத அரச ஆட்சி ஒன்றை ஏற்படுத்த அல்லது வடக்கு – கிழக்கு மாகாண சபைகளை சுதந்திரமாக செயற்பட வைப்பதற்கு வசதியாக அமையும்.

ஆதரவான தமிழ்க்கட்சிகள்

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, மனோ கணேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள் முன்னணி மற்றும் முஸ்லிம் கட்சிகள்தான் ஆட்சி மாற்றத்துக்கு காரணம். ஆகவே, 19ஆவது திருத்தத்தின் மூலம் ஏனைய சட்டங்களை மீள புதுப்பித்தல் என்ற தலைப்பில் 13ஆவது திருத்தத்தில் இருந்து பிடுங்கி எடுக்கப்பட்ட மற்றும் 13இல் இருந்து இன்னமும் நடைமுறைப்படுத்தப்படாமல் உள்ள சட்ட விதிகளை செயற்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். குறிப்பாக, மாகாணங்களுக்குரிய காணி, பொலிஸ் அதிகாரங்களை செயற்படுத்த 19ஆவது திருத்தத்தின் மூலம் ஏற்பாடு செய்ய முடியும் என சட்ட அறிஞர் ஒருவர் கூறியிருக்கின்றார்.

தினக்குரல் பத்திரிகைக்காக அ.நிக்ஸன் எழுதிய கட்டுரை இங்கு தரப்பட்டுள்ளது.