படம் | Eranga Jayawardena/Associated Press, NEWS. YAHOO
இனப்பிரச்சினை தீர்வுக்கு இந்தியா செய்த வழிமுறைகள் என்ன? அல்லது எந்த வகையில் இந்தியா இடையூறாக இருந்தது? என்ற இரண்டு கேள்விகள் முக்கியமானது, பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு விஜயம் செய்துள்ள நிலையில் இவ்வாறான கேள்விகள் எழுவது இயல்பானது. ஏனெனில், 28 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்தியப் பிரதமர் ஒருவர் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார் என்ற செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதாக இல்லை. 1987ஆம் ஆண்டு பிரதமர் அமரர் ராஜீவ் காந்தி வருகை தந்தபோது பரபரப்பு மாத்திரமல்ல, கொழும்பில் சிங்கள பௌத்த தேசிவாதிகள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். அத்துடன், அணிவகுப்பு மரியாதையின்போது படைவீரர் ஒருவர் ராஜீவ்காந்தி மீது தாக்குதலும் நடத்தினார். ஆனால், மயிரிழையில் அவர் தப்பிவிட்டார்.
இப்போது ஏன் மௌனம்?
எவ்வாறாயினும், ராஜீவ் காந்தி கொழும்புக்கு வந்ததன் நோக்கத்திற்கும் நரேந்திர மோடியின் கொழும்பு வருகைக்கும் இடையே வேறுபாடுகள் உண்டு. ஆனாலும், ராஜீவ் காந்தியின் வருகையினால் பெறப்பட்ட மாகாண சபைகள் முறையை உரிய முறையில் செயற்பட வைப்பது தொடர்பாக பேச வேண்டும் அல்லது பேசவுள்ளோம் என தமிழ் தரப்பு கூறியிருந்தது. அதாவது, 13 ஆவது திருத்தச் சட்டம் சரியான முறையில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் முன்வைத்துள்ளார். அது மாத்திரமல்ல வடமாகாண சபை, இந்தியா – இலங்கை என்ற முத்தரப்பு பேச்சை ஆரம்பிக்க வேண்டும் என்ற ஒரு யோசனையையும் அவர் பரிந்துரை செய்துள்ளார்.
ஆனால், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அது குறித்து எதுவுமே கூறவில்லை. எனினும், கூட்டமைப்பும் 13ஆவது திருத்தச்சட்டத்திற்கு மேலாகச் சென்று தீர்வை முன்வையுங்கள் என்று மோடியிடம் வலியுறுத்தியுள்ளது. அதைவிட வேறு எதனையும் இந்தியாவிடம் இருந்து எதிர்ப்பார்க்க முடியாது என்று கூட்டமைப்புக்கும் தெரியும். இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் அதிகாரப்பகிர்வு பற்றி கவனம் செலுத்தப்படும் என்று மாத்திரமே கூறியிருக்கின்றார். ஆகவே, இனப்பிரச்சினை தீர்வுக்கு இந்தியா செய்த வழிமுறைகள் என்ற கேள்விக்கு பதிலளிப்பதாக இருந்தால், இலங்கையின் ஒற்றை ஆட்சிக் கோட்பாட்டுக்கு ஆபத்து ஏற்படாத முறையில் உருவாக்கப்பட்ட 13 ஆவது திருத்தம்தான் என்று கூறலாம்.
ஏன் அந்த நோக்கம்
இந்தியாவில் சமஷ்டி அடிப்படையில் மாநில அரசுகளுக்கு அதிகாரங்கள் வழங்கப்பட்டிருந்தாலும் அது முழுமையான சமஷ்டி முறை அல்ல. இந்திய மத்திய அரசின் ஒற்றை ஆட்சியைப் பாதுகாக்கும் ஏற்பாட்டுடன்தான் அந்த சமஷ்டி முறை உருவாக்கப்பட்டுள்ளது. ஆக, பிரதமர் நேரு காலத்தில் இருந்த அந்த சிந்தனைதான் பிரதமர் இந்திரா காந்தி காலத்தில் வேகமடைந்து, இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களிலும் அவ்வாறான ஒரு தீர்வுக்கு வழி வகுத்தது. எனவே, 13ஆவது திருத்தச்சட்டத்தை உள்ளபடி அமுல்படுத்துவது என்ற நிலைப்பாட்டுக்கு அப்பால் நரேந்திரமோடி செல்ல முடியாது. இந்தியாவில் எந்தக் கட்சி ஆட்சி அமைத்தாலும் ஈழத் தமிழர் விடத்தில் அன்று எழுதிவைக்கப்பட்ட கொள்கைதான் நடைமுறைக்கு வரும் என்பது கண்கூடு.
பயணத்தின் வேறுபாடு என்ன?
ஆகவே, ராஜீவ் காந்தி, மோடி ஆகியோரின் இலங்கை பயணத்தில் இருக்கக் கூடிய வேறுபாடு என்ன? அன்று ராஜீவ் காந்தி வகை தந்தபோது சீனாவினுடைய ஆதிக்கம் இலங்கையிலும் இந்து சமுத்திரத்திலும் பாரிய அளவு தாக்கத்தைச் செலுத்தவில்லை. ஆனால், இன்று நிலைமை அவ்வாறு இல்லை. சீனாவினுடைய இலங்கை மீதான செல்வாக்கு அதிகரித்த நிலையில் இந்தியப் பிராந்தியத்தில் ஏற்பட்டிருக்கும் தாக்கம் இந்தியாவின் இறைமைக்கு அரசியல் பொருளாதார ரீதியில் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றது என்ற உணர்வு இந்தியாவுக்கு மேலோங்கியுள்ளது. இதன் பின்னணியில் மோடியின் வருகையை அவதானிக்கலாம். ஆனால், ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருக்காது விட்டால் இந்தப் பயணம் நடத்திருக்காது.
எனவே, ராஜீவ் காந்தி இலங்கைக்குச் சென்று இலங்கை இந்திய ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டு அதன் மூலம் 13ஆவது திருத்தச்சட்டத்தை உருவாக்கி இந்தியாவின் பாதுகாப்பை உறுதிப்படுத்தினார். அதாவது, ஈழப் போராட்டம் வலுவடைந்து, தனி நாடு அல்லது முழுமையான சுயநிர்ணய ஆட்சி ஒன்று ஏற்பட்டு, அது இந்தியாவில் இருக்கக் கூடிய 25 மாநிலங்களின் பாதி சம்ஷ்டி ஆட்சி முறையில் தாக்கத்தை ஏற்படுத்திவிடக்கூடாது என்ற நிலைப்பாட்டை அன்று ராஜீவ் உறுதிப்படுத்தினார். ஆனால், மோடியின் வருகை ராஜீவ் காந்தியினுடைய வருகையின் தொடர்ச்சியாக இருந்தாலும் சீனாவினுடைய அரசியல் பொருளாதார இலக்குகளுக்கு இலங்கை தளமாக அமைந்துவிடக்கூடாது என்ற நோக்கத்தில் அமைந்துள்ளது.
ஒப்பந்தத்தில் இருப்பது என்ன?
1987இல் ராஜீவ் – ஜே.ஆர். கொழும்பில் செய்துகொண்ட இலங்கை இந்திய ஒப்பந்தத்தில் முழுமையாக என்ன இருக்கின்றது என்று கூட இன்றுவரை யாருக்கும் தெரியாது. இந்த நிலையில், மோடியின் வருகையுடன் அந்த ஒப்பந்தத்தில் இருக்கின்ற இந்தியப் பிராந்திய பாதுகாப்பு விடயங்கள் புதுப்பிக்கப்படலாம் என்ற தகவலும் உண்டு புதுடில்லியில் இருந்து வெளிவரும் ஆங்கில சஞ்சிகை ஒன்று இலங்கை இந்திய ஒப்பந்தம் புதுப்பிக்கப்படலாம் என்ற கருத்தை வெளியிட்டுள்ளது. ஆக, இலங்கை இந்திய இராஜதந்திர உறவை மேம்படுத்தல், அதன் மூலம் சீன இலங்கை உறவைக் குறைத்தல் என்ற நோக்கத்தில் மோடியின் வருகையை பார்க்கலாம்.
ஆனாலும், மோடியின் வருகையை சிங்கள பௌத்த தேசியவாதிகள் ராஜீவ் காந்தியின் வருகையை போன்று ஏன் எதிர்க்கவில்லை என்ற கேள்விகள் எழுகின்றன. அன்று ஈழத்தை இந்தியா வழங்கிவிடும் என்ற அச்சத்தில் எதிர்ப்புப் போராட்டங்கள் அரங்கேறின. ஆனால், இன்று சீனாவின் இலங்கை மீதான செல்வாக்கை குறைக்கும் நோக்கம் என்பது இந்திய நலன் சார்ந்தது என்று தெரிந்தும் மோடியின் வருகைக்கான எதிர்ப்பை அவர்கள் வெளியிடவில்லை. காரணம், அன்று இந்தியாவின் உள்நோக்கத்தை அறியாமல்தான் ராஜீவ் காந்தியின் வருகைக்கு எதிர்ப்பு வெளியிடப்பட்டது என்பதை பிற்காலங்களில் சிங்கள பௌத்த தேசியவாதிகள் புரிந்து கொண்டனர். கவலைப்பட்டனர்.
புரிந்துகொண்ட நிலைப்பாடு
ஈழத் தமிழர்கள் தொடர்பான நிலைப்பாட்டை தற்போது புரிந்து கொண்டமையினால் மோடியின் வருகையை சிங்கள பௌத்த தேசியவாதிகள் எதிர்க்கவில்லை என்ற முடிவுக்கு வரலாம். ஆகவே, மேல் முன்வைக்கப்பட்ட இரண்டாவது கேள்விக்கு பதிலளிப்பதானால் இனப்பிரச்சினை தீர்வு விடயத்தில் இந்தியா ஏற்படுத்திய இடையூறு என்பது 13ஆவது திருத்தச் சட்டம்தான். இதனால்தான் 2002ஆம் ஆண்டு நேர்வேயின் எற்பாட்டுடன் இடம்பெற்ற பேச்சுகள் முறிவடைந்தன. 2003ஆம் ஆண்டு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணியின் ஆட்சியும் கவிழ்க்கப்பட்டது.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவை பயன்படுத்தி இந்தியா அப்போது நடத்திய நாடகம் அது. அனுசரனை முயற்சியில் ஈடுபட்ட நோர்வேயும் அவ்வப்போது புதுடில்லிக்குச் சென்று இந்திய மத்திய அரசை சமாதானப்படுத்தினாலும் கூட, 13ஆவது திருத்தம் என்ற கோட்டுக்கு அப்பால் செல்ல முடியாது என்றும், ஆயுதப் போராட்டத்திற்கு அங்கீகாரம் வழங்கும் வகையில் போராளிகளை முன்நிறுத்திய தீர்வை முன்வைக்க வேண்டாம் என்றும் நோர்வேக்கு புதுடில்லி யோசனை வழங்கியதாகத் தகவல். ஆனால், நோர்வேயின் அனுசரனை முயற்சியைக் குழப்பிய முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவும் அப்போது பாதிக்கப்பட்ட ரணில் விக்கிரமசிங்கவும் தற்போது ஒன்றாகி மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியை கவிழ்த்து புதிய அரசு ஒன்றை உருவாக்கியுள்ள நிலையில் மோடியின் வருகை அமைந்துள்ளது.
தினக்ககுரல் பத்திரிகைக்காக அ.நிக்ஸன் எழுதிய கட்டுரை இங்கு தரப்பட்டுள்ளது.