படம் | AP Photo/Eranga Jayawardena, NEWS. YAHOO
இனப்பிரச்சினை என்றால் என்ன என்று கேள்வி கேட்ட மாணவன் ஒருவன் தமிழர்களிடம் இராஜதந்திரம் இருக்கின்றதா என்றும் ஒரு வகையான கோபத்துடன் கேட்டான். அதற்கு பதிலளித்த அரசியல் விஞ்ஞான விரிவுரையாளர் இனப்பிரச்சினை என்றால் என்ன என்பதற்கு விடைகூற கடந்த 60 ஆண்டுகால வரலாற்றை புரட்டிப்பார்க்க வேண்டும் என கொஞ்சம் கிண்டலாக சொன்னதுடன், அப்படி பார்க்கின்றபோதுதான் தமிழர்களிடம் இராஜதந்திரம் இருந்ததா இல்லையா என்பதையும் உன்னால் உணர்ந்து கொள்ள முடியும் என்றும் குறிப்பிட்டார். மீண்டும் கேள்வி தொடுத்த அந்த மாணவன் அப்படியானால் இன்னுமொரு 60 ஆண்டுகாலம் என்னையும் காத்திரு என்றுதானே நீங்கள் சொல்கின்றீர்கள் என விரிவுரையாளரைப் பார்த்து ஆவேசமாகக் கேட்டான். பதில் கூறிய விரிவுரையாளர் உனது கேள்வியில் நீ வெளிப்படுத்திய அந்த ஆவேசம்தான் தமிழர்களின் இராஜதந்திரம் எனவும், அதுதான் இத்தனை அழிவுகளுக்கும் காரணம் என்றும் கூறி முடித்தார்.
அறிவு நிலைசார்ந்த அரசியல்
தமிழர்களின் தற்போதைய நிலைமை தொடர்பாக கேள்வி எழுப்பிய மேற்படி மாணவனுக்கு விரிவுரையாளர் கூறிய இரண்டு விடயங்கள் முக்கியம் பெறுவதாக இன்னுமொரு விரிவுரையாளர் கூறினார். ஒன்று, 60 ஆண்டுகால வராலாற்றை புரட்டிப்பார்க்க வேண்டும் என்பது. இரண்டாவது, ஆவேசம்தான் தமிழர்களின் இராஜதந்திரம் என்பது. இந்த இரண்டு விடயங்களிலுமே பட்டறிவு தமிழ்த் தலைமைகளிடம் இல்லை என்பதை கோடிட்டுகாட்டியுள்ளதாக அந்த விரிவுரையாளர் நியாயப்படுத்தினார்.
ஆனால், பட்டறிவு தமிழ்த் தலைமைகளுக்கு இன்னமும் வரவில்லை என்பதை ஏற்றுக்கொண்டாலும் ஆவேசம்தான் அன்றிலிருந்து தமிழர்களின் இராஜதந்திரமாக இருந்தது என்பதும், அந்த ஆவேசம்தான் இத்தனை அழிவுகளுக்குக் காரணம் எனவும் கூறிய கருத்தை ஏற்க முடியாது என குறித்த அந்த மாணவன் கூறினார். ஏனெனில், ஆவசேம் என்பது தொடர்ச்சியான அடக்குமுறையின் ஊடாகவே வெளிப்படுகின்றது. ஆகவே, ஆட்சியாளர்கள் தமிழர்களை தொடர்ச்சியாக அடக்கி ஆண்டார்கள் என்பதைத்தான் அந்த ஆவேசம் வெளிப்படுத்துகின்றது என்றும் கூறி அந்த மாணவன் தனது வாதத்தை முன்வைத்தான்.
உணர்ச்சி அரசியல்
தேசிய இனங்கள் விடுதலைக்காக போராடும்போது உணர்ச்சியை எந்த இடத்திலே வெளிப்படுத்துவது எந்த சந்தர்ப்பத்தில் அறிவுபூர்மாக சிந்திப்பது என்ற ஒரு வரையறை முக்கியமானது. உணர்ச்சி அரசியல் மக்களை எழுச்சியடைச் செய்யும் என்று கருதி செயற்படுவது விடுதலை வேண்டி போராடுகின்ற தேசிய இனங்களுக்கு ஆரோக்கியமானது அல்ல. அரசியல் ரீதியாக மக்கள் சிந்திக்கும்போதுதான் போராட்டம் வலுவடையும். உணர்ச்சி அடிப்படையில் நடத்தப்படுகின்ற போராட்டங்கள் அந்த உணர்ச்சி வேகம் குறைவடைந்ததும் நின்றுவிடும். ஆனால், அரசியல் முறையில் சிந்தித்து செயற்படுகின்ற போராட்டங்கள் விடுதலைக்கு வழி வகுக்கும். இது தொடர்பாக கருத்து வெளியிட்ட ஆய்வாளர் ஒருவர் விடுதலை வேண்டி போராடுகின்ற தேசிய இனங்களிடையே இருக்கின்ற உணர்ச்சிப் பிரவாகம்தான் ஆட்சி புரியும் அரசுக்கு அடக்கியாள வசதியாக அமைகின்றது என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
இங்கு தமிழர்களிடையே காணப்படுகின்ற ஆவேசம் என்பதுதான் அவர்களின் இராஜதந்திரமாக இருந்தது என கூறிய அந்த விரிவுரையாளரின் கருத்தின் உட்பொருளை அவதானிக்கும்போது தமிழ் மக்களிடையே அரசியல் விழிப்புணர்ச்சி மற்றும் அரசியல் அறிவுசார்ந்த கருத்துக்களை தமிழ்த் தலைமைகள் பரப்பவில்லை, அதற்கான எந்த ஒருவொரு வேலைத்திட்டங்களையும் முன்னெடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டையே காணமுடிகின்றது. அது ஒரு வகையில் உண்மையாகவும் உள்ளது. 1920ஆம் ஆண்டு இலங்கைத் தேசிய இயக்கம் பிளவுபட்டதில் இருந்து இன்றுவரை வரலாற்றை பார்க்கும்போது தமிழ்த் தலைமைகள் தேர்தல் காலங்களில் தங்கள் வெற்றிக்காக அவ்வப்போது உணர்ச்சிகளை கிளப்பிவிட்டு ஆவேசமாக பேசுகின்றனர்.
மக்களை நம்பவைத்தல்
மக்களும் அந்த பேச்சுகளை நம்பி வாக்களித்து வெற்றிபெறச் செய்கின்றனர். 30 ஆண்டுகால அஹிம்சைப் போராட்டம் நடைபெற்றபோதும் இவ்வாறான ஆவேசமான உணர்ச்சிகளை கிளப்பிவிடுகின்ற பேச்சுகளைத்தான் அன்றைய தலைவர்கள் செய்தார்கள். 30 ஆண்டுகால ஆயுதப் போராட்டத்தின் பின்னரான காலகட்டத்திலும் அதன் தொடர்ச்சிதான் காணப்படுகின்றது. ஆனால், 30 வருடகால ஆயுதப்போராட்டம் குறிப்பிட்ட அளவிலேனும் மக்களை சிந்திக்க வைத்தது எனலாம். அரசியல் ரீதியான சிந்தனைகள் என்பதை விட இராணுவ நோக்கிலான செயற்பாடுகள் அன்று கூடுதலாக இருந்தமையும் போராளிகளின் தாக்குதல்கள் வெற்றியடைகின்ற ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் மக்கள் உணர்ச்சியாக பொங்கியெழுந்த நிலைமையும் அரசியல் ரீதியான உரிமைகளை அன்று உணரவைத்தது.
ஆனால், அந்த அரசியல் ரீதியான உண்ர்வுகளை ஆயுதப்போராட்டத்திற்கு வெளியே நின்று கொண்டு பார்வையாளராக இருந்த சில தமிழ்த் தலைமைகள் தொடர்ச்சியாக முன் நகர்த்த தவறிவிட்டன. விடுதலைப் புலிகள் அதற்கு அனுமதிதரவில்லை என்று கூறி அவர்கள் குற்றச்சாட்டுக்களை அடுக்கினார்கள். தமிழ் ஈழம் என்ற கோட்பாடு அரசியல் விழிப்புணர்ச்சிகளை மக்களிடையே தோற்றுவிக்கத் தடையாக இருந்தது. அதற்கு அப்பால் வேறு எந்த அரசியலையும் முன்னெடுக்க முடியவில்லை என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் உள்ள சில தலைவர்கள் அப்போது கூறினர். ஆனால், நோர்வேயின் ஏற்பாட்டுடன் பேச்சுகள் நடைபெற்றபோது கிளிநொச்சிக்குச் சென்று வந்த அந்த தமிழ்த் தலைமைகள் புலிகள் கூறியதையே மீண்டும் தங்கள் கருத்தாக கூறி மார்தட்டினர்.
புலிகள் சொல்லவில்லை
ஆனால், நாங்கள் கூறியதையே நீங்களும் சொல்ல வேண்டும் என்று புலிகள் ஒருபோதும் கட்டளையிட்டதில்லை என தமிழத் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சி ஒன்றின் மற்றுமொரு தலைவர் அன்று கூறியிருந்தார். தங்கள் இயலாமையை புலிகள் மீது சுமத்திவிட்டு கொழும்பிலும் யாழ்ப்பாணத்திலும் இருந்துகொண்டு இலகுவான அரசியல் நடத்திக் கொண்டிருந்தார்கள் என்றுதான் அந்தத் தலைவர் குற்றம்சுமத்தினார். 2009ஆம் ஆண்டு மே மாதத்தின் பின்னரான அரசியல் சூழலில் தமிழ்த் தலைமைகள் இந்தியாவையும் அமெரிக்காவையும் சாக்குப்போக்கு கூறி தப்பித் கொள்கின்றனர். அன்று புலிகள் தடுப்பதாகக் கூறி தப்பியவர்கள் இன்று அமெரிக்காவையும் இந்தியாவையும் சாட்டி தப்பித்துக் கொள்கின்றனர்.
ஆனால், இந்தியாவும் அமெரிக்காவும் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் கட்டளையிட்டதாகத் தெரியவில்லை. இந்தியாவும் அமெரிக்காவும் சொல்கின்றது அதைத்தானே நாங்களும் செய்ய வேண்டும் என்று கூறுவது கூட்டமைப்பின் அரசியல் பலவீனம். ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என இந்தியா கூறியது, அமெரிக்கா சொல்லியது என்றும் சர்வதேச விசாரணை தேவையில்லை, உள்ளக விசாரணை போதும் என அமெரிக்காவும் இந்தியாவும் கூறுகின்றது, நாங்கள் ஏற்கத்தான் வேண்டும் எனவும், சர்வதேச அரசியலுடன் சேர்ந்து போக வேண்டும் என்று நியாயப்படுத்துவதும் ஏற்புடையதல்ல. வேறு நாடுகள் சொல்லிச் செய்வது இராஜதந்திரமும் அல்ல. தலைமைக்குரிய பண்பும் அல்ல. இவ்வாறான அரசியல் நிலைமை தொடருமானால் அந்த மாணவன் கேட்டதுபோல் இன்னும் 50 ஆண்டுகளுக்கு பின்னர் பிறக்கப் போகும் பிள்ளைகளும் இப்படித்தான் கேட்பார்கள்.
தினக்குரல் பத்திரிகைக்காக அ.நிக்ஸன் எழுதிய கட்டுரை இங்கு தரப்பட்டுள்ளது.