படம் | Photo/ Mayurapriyan, TAMILGUARDIAN

தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்குள்ளும், தமிழ் தேசியக் கூட்டமைப்பு தொடர்பில் தமிழ் மக்களுக்குள்ளும் நாளுக்கு நாள் குழப்பங்கள் அதிகரித்தவாறு இருக்கின்றன. ஒரு புறம் கூட்டமைப்பின் தலைவர்கள் தங்களுக்குள் முரண்பட்டுக் கொள்கின்றனர். மறுபுறும் மக்கள் மத்தியில் அதிருப்திகளும், எதிர்ப்புக்களும் அதிகரித்து வருகின்றது. இந்த அதிருப்தி காணாமல்போனோரின் ஆர்ப்பாட்டங்களாகவும், மாணவர் போராட்டமாகவும் வெளிப்பட்டிருக்கிறது. இங்கு கவனிக்க வேண்டிய விடயம் இவ்வாறான மக்களின் தன்னியல்பான நடவடிக்கைளில் கூட்டமைப்பின் அரசியல்வாதிகளும் வலிந்து ஒட்டிக்கொள்கின்றனரே ஒழிய, கூட்டமைப்பின் தலைமையின் கீழ் மக்கள் ஒன்றுதிரளவில்லை. நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிகழ்வுகளை ஒன்றுதிரட்டி நோக்கினால், ஆட்சி மாற்றம் தொடர்ப்பில் மக்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கும் கேள்விகளே இவ்வகையான அதிருப்திகளுக்கும், எதிர்ப்புக்களுக்கும் காரணமாகும். இந்த நிலைமையானது வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்களின் பெரும்பான்மை ஆதரவைப் பெற்றிருக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு, தனது தலைமைத்துவ பிடியை மெதுவாக இழந்து வருகிறது என்பதையே காட்டுகின்றது.

ஒரு அரசியல் தலைமைத்துவம் என்பது ஒரு கட்சியில் எத்தனை நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றனர் என்பதைக் கொண்டு மதிக்கப்படுவதல்ல. மாறாக, ஒரு அரசியல் தலைமைத்துவம் என்பது தங்களது அரசியல் ஆளுகைக்குள் (Political Governance) மக்களை ஒன்றுதிரளச் செய்வதில்தான் தங்கியிருக்கிறது. அந்த வகையில் நோக்கினால் கூட்டமைப்பின் அரசியல் ஆளுகை அண்மைக்காலமாக மிகவும் பலவீனமடைந்து வருகிறது. கூட்டமைப்பிற்குள் முரண்பாடுகளும் கட்சி நிலைப்பட்ட பேதங்களும் அதிகரித்து வருவதே, கூட்டமைப்பின் அரசியல் ஆளுகை பலவீனமடைவதற்கான முதலாவது காரணமாகும். இந்தக் காரணத்துடன் ஆட்சி மாற்றத்தின் மீதான கேள்விகளும் சேர்கின்ற பொழுது கூட்டமைப்பின் பலவீனம் தெளிவாகத் தெரிகிறது. சில தினங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற காணாமல்போனோரின் ஆர்ப்பாட்டம் ஒன்றின்போது கூட்டமைப்பின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினரான எம்.ஏ. சுமந்திரனின் கொடும்பாவி எரிக்கப்படுமளவிற்கு நிலைமைகள் மோசமடைந்துள்ளன. மேற்படி நிகழ்வில் கூட்டமைப்பின் சிரேஷ்ட தலைவர்கள் பலரும் பங்குகொண்டிருந்த நிலையில்தான் கூட்டமைப்பின் பிறிதொரு தலைவரின் உருவபொம்மை எரிக்கப்பட்டிருக்கிறது. ஒரு பானை சோற்றிற்கு ஒரு சோறு பதம் என்பது போல மேற்படி நிகழ்வானது, கூட்டமைப்பு அதன் அரசியல் ஆளுகையை படிப்படியாக இழந்து வருகின்றது என்பதையே உணர்த்துகின்றது. இதன் பொருள் வடக்கு கிழக்கில் பிறிதொரு அரசியல் தலைமை எழுந்துவருகின்றது என்பதல்ல. உண்மையில் கூட்டமைப்பின் அரசியல் பலவீனங்களை அரசியலாக்கும் ஆற்றலுள்ள பிறிதொரு தலைமையும் வடக்கு கிழக்கில் இல்லை.

இந்த இடத்தில் ஒரு கேள்வி எழலாம் – கூட்டமைப்பிற்குள் முரண்பாடு என்பது புதிய விடயமல்ல. கூட்டமைப்பு எப்போது தமிழ் மக்களின் பிரதான அரசியல் தலைமையாக வெளித்தெரிந்ததோ, அன்றிலிருந்து இன்றுவரை முரண்பாடுகளும் தொடர்கின்றன. அவற்றை சமாளித்தவாறுதான் கூட்டமைப்பின் அரசியல் குதிரையும் ஓடிக்கொண்டிருக்கிறது. ஆனால், இப்போது நிலைமைகள் ஏன் அதிகம் மோசமடைந்து செல்வதாக தெரிகிறது? இந்தக் கேள்விக்கான விடைதான் நான் இந்தக் கட்டுரைக்கு இட்டிருக்கும் தலைப்பாகும். அதாவது, ஆட்சி மாற்றம் தொடர்பான கேள்விகளுக்கு கூட்டமைப்பிடம் பதில் இல்லை என்பதுதான் தற்போது எழுந்துள்ள அனைத்து முரண்பாடுகளுக்கும், அதிருப்திகளுக்கும் காரணமாகும். ஆட்சி மாற்றத்தில் கூட்டமைப்பும் ஒரு பிரதான பங்குவகித்தது. கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் பொது எதிரணி வேட்பாளரான மைத்திரிபாலவிற்கு பகிரங்க ஆதரவை வழங்காது இருந்திருந்தால், கணிசமான தமிழ் மக்கள் தேர்தலில் அக்கறையற்று இருந்திருக்கலாம். அது தேர்தல் முடிவையும் பாதித்திருந்திருக்கலாம். ஆனால், சம்பந்தன் எவ்வித நிபந்தனைகளுமின்றி, மைத்திரிபாலவிற்கு பகிரங்க ஆதரவை வழங்கியிருந்தார். ஆனால், அப்போதே சம்பந்தனின் முடிவை கூட்டமைப்பிலுள்ள சிலர் விமர்சித்திருந்தனர். சம்பந்தனும் சரி, மைத்திரிபாலவிற்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்கியதை நியாயப்படுத்தியவர்களும் சரி, தமிழ் மக்கள் தங்களுக்கு வழங்கிய மக்கள் பிரதிநிதிகள் என்னும் தகுதியின் அடிப்படையிலேயே மேற்படி முடிவை எடுத்திருந்தனர். எனவே, மக்கள் தங்களுக்கு வழங்கிய தகுதியின் அடிப்படையில் எடுக்கப்பட்டதொரு முடிவால், மக்கள் நன்மையடைய முடிகிறதா என்னும் கேள்வியிலிருந்தே, தற்போதைய அனைத்து முரண்பாடுகளும் கருக்கொள்கின்றன. ஒரு தலைமை என்னும் வகையில் கூட்டமைப்பு முடிவுகளை எடுப்பதும், அதனை நடைமுறைப்படுத்துவதும் ஒரு பிரச்சினையல்ல. ஆனால், அந்த முடிவுகளால் எதிர்பார்த்த நன்மை கிட்டவில்லை என்னும் போது, அதற்கு பதிலளிக்கும் கடப்பாட்டை ஒரு தலைமை தட்டிக்கழிக்க முடியாது.

நான் இங்கு மக்கள் என்று அழுத்திக் குறிப்பிடுவது, வடக்கிலிருந்து கிழக்கு வரை பலரது கொள்கைகளுக்காக (சமஷ்டி, தமிழீழம், வட கிழக்கிணைந்த சுயாட்சி இப்படிப் பல) எல்லாவற்றையும் இழந்து நிர்க்கதியாகியிருக்கும் தமிழ் மக்களையேயன்றி, மத்தியதரவர்க்க வாழ்க்கையை ரசித்தும், ருசித்தும் அனுபவித்துக் கொண்டிருக்கிற தமிழ் மக்களை அல்ல. அப்படியான தமிழ் மக்கள் தங்களின் வாழ்க்கையை கொண்டு நடத்துவதற்காக எந்தவொரு அரசியல் கட்சியையும் நம்பியிருக்கவில்லை. எனவே, அவர்களுக்கு அரசியல் என்பது ஒரு விடயமுமல்ல. ஆனால், பாதிக்கப்பட்ட எல்லாவற்றையும் சிலரது கொள்கை பசிக்காக தொலைத்துவிட்டு, அடுத்தது என்ன என்று தெரியாமல் தவித்துக்கொண்டிருக்கும் மக்களுக்குத்தான் ஆட்சி மாற்றத்தின் பலாபலன்கள் போய் சேர்ந்திருக்க வேண்டும். அப்படி போய் சேர்ந்ததா என்பதுதான் கேள்வி?

கொழும்பின் சிங்கள ஆளும் வர்க்கத்துடன் கனவான் அரசியலுக்கு இடமில்லை என்பது தமிழர்களின் பட்டறிவாக இருக்கின்ற போதிலும் கூட, எந்தவொரு நிபந்தனையும் இல்லாமல் மைத்திரிபாலவை ஆதரித்தமையானது எவருடைய தவறு. இதற்கு பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு யாருடையது? இலங்கை சர்வதேச அழுத்தங்களின் பிடியிலிருந்த சூழலில்தான் ஆட்சி மாற்றம் நிகழ்ந்தது. இந்தப் பின்னணியில் சர்வதேச அழுத்தங்கள் உடனடியாகவே தொய்வு நிலையை அடைந்தன. அது எதிர்பார்க்கப்பட்ட ஒன்றும் கூட. இந்த நிலையில், இன்று ஜக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் அறிக்கையும் பிற்போடப்பட்டிருக்கிறது. மேற்படி அறிக்கை நிச்சயம் பிற்போடப்படும் என்பது, அமெரிக்காவின் பிரதி வெளிவிகார செயலர் நிஸா பிஸ்வாலின் இலங்கை விஜயத்தின் போதே தெளிவாகிவிட்டது. பின்னர் இடம்பெற்றதெல்லாம் குறித்த அறிக்கையை பிற்போடப்படுவதற்கான சில வீட்டு வேலைகள் மட்டுமே. கூட்டமைப்பின் ஆதரவுடன்தான் மேற்படி அறிக்கை பிற்போடப்பட்டது என்பது பலருக்கும் இரகசியமாக இருக்கலாம். ஆனால், அந்த இரகசியத்தை தற்போது கூட்டமைப்பின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் போட்டுடைத்து வருகிறார். உள்ளக விசாரணையை வரவேற்று பேசிவரும் சுமந்திரன், ஜ.நா. அறிக்கையை பிற்போட்டமைக்காக ஜ.நா. அளித்துவரும் விளக்கத்தையே தானும் மனனம் செய்து ஒப்புவித்து வருகின்றார். மனித உரிமைகள் பேரவையின் தலைவர் ஜோக்கிம் ருக்கா ஜ.நா. அறிக்கை பிற்போடப்பட்டமையானது பகுத்தறிவானதொரு தீர்மானம் என்று தெரிவித்திருகின்றார். இதனைத்தான் சுமந்திரன் தன்னுடைய வக்கில் சொற்களின் வழியாக கூறுகின்றார். இதே சுமந்திரன் முன்னர் ஜ.நா. அறிக்கையை பிற்போடக் கூடாது என்றார். ஆனால், தற்போது பிற்போடப்பட்டமைக்கு விளக்கமளித்து வருகின்றார். நான் கடந்த பத்தியில் நீதியை பிற்போடவும், தேவைப்பட்டால் நீதிக்கு புதிய விளக்கவுரைகள் சொல்லவும் சில சக்திகளால் முடியும் என்று குறிப்பிட்டிருந்தேன். ஜ.நா. ஒன்றும் உத்தமமான அமைப்பும் அல்ல. உலக வல்லரசுகளின் அரசியல் சதிராட்டத்துக்குள் சிக்கிக்கிடக்கும் ஒரு உலகளாவிய அமைப்பு. ஆனால், இங்கு அறிக்கை பிற்போட்டமை தொடர்பில் ஜ.நா. அளித்துவரும் விளக்கங்கள் ஆச்சரியமானதல்ல. மாறாக, தங்களை தலைவர்களாக்கிய மக்களை ஏமாற்றுவதுதான் மிகவும் கேவலமான அரசியல் செயற்பாடாகும். இந்த அறிக்கை பிற்போடப்படவுள்ளமையும், ஏன் பிற்போடப்பட்டது என்பதும் சுமந்திரன் போன்றவர்களுக்கு நன்கு தெரியும். தங்களுக்கு தெரிந்த உண்மைகளை ஏன் மக்களுக்கு தெரிவிக்கக் கூடாது? இப்படியொரு சூழலில்தான் அண்மைக்காலமாக வடக்கு கிழக்கில் மக்கள் மத்தியில் அதிருப்திகள் அதிகரித்து வருகின்றன.

இன்று உள்ளக விசாரனை பற்றி பேசப்படுகிறது. ஆனால், ஆட்சி மாற்றத்தின் பின்னர் இதுவரை நிகழ்ந்த மாற்றங்கள் எவை என்று பார்ப்போம். சிறைக் கைதிகள் விடுதலை செய்யப்பட்டனரா? இராணுவத் தேவைகளுக்காக கையகப்படுத்தப்பட்டுள்ள மக்களுக்குச் சொந்தமான காணிகளில் ஒரு பகுதியாவது விடுவிக்கப்பட்டதா? இடம்பெயர்ந்திருக்கும் மக்களின் மீள் குடியேற்றத்திற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டனவா? எல்லாவற்றுக்கும் இல்லை என்பதுதானே பதிலாக இருக்கிறது. ஆட்சி மாற்றம் இடம்பெற்றவுடன் முதலாவதாக நடந்த மாற்றம் மஹிந்தவினால் பறித்தெடுக்கப்பட்ட சரத் பொன்சேகாவின் குடியுரிமை மற்றும் இராணுவ ஜெனரல் பட்டம் ஆகியவை அவருக்கு வழங்கப்பட்டது. கோட்டாபயவிற்கு அஞ்சி நாட்டைவிட்டு வெளியேறிய இராணுவ அதிகாரிகள் அனைவரும் மீண்டும் இராணுவத்திற்குள் இணைத்துக் கொள்ளப்பட்டனர். ஆனால், புலிகளுக்கு மண்ணெண்ணை கொடுத்தார்கள், சீனி வாங்கிக் கொடுத்தார்கள் என்னும் பெயரில் கைதுசெய்யப்பட்டு, எவ்விதமான விசாரணையுமின்றி தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்கள் விடுதலை செய்யப்படவில்லை. அதனை முன்னெடுக்க இந்த அரசினால் முடியவில்லை. மக்களின் காணிகளை மீளவும் ஒப்படைக்க இந்த அரசினால் முடியவில்லை. அப்படியாயின் ஆட்சி மாற்றத்திற்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்கிய கூட்டமைப்பின் தலைவர்கள் இதற்கு பதில் சொல்லும் பொறுப்புடையவர்கள் இல்லையா? இந்த ஆட்சி மாற்றத்தினால் எங்களுக்கு கிடைத்த நன்மை என்ன என்று கேள்வி கேட்பதற்கு பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரித்து இல்லையா? சிறைக்கைதிகளை விடுவிப்பதற்கே தடுமாறும் ஒரு அரசா உள்ளக விசாரணையின் மூலம் குற்றவாளிகளை தண்டிக்கப் போகிறது? மேற்படி கேள்விகள் அனைத்திற்கும், மைத்திரிபாலவிற்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்கிய கூட்டமைப்பின் தலைவர்களின் பதில் என்ன?

தினக்குரல் பத்திரிகைக்காக யதீந்திரா எழுதிய கட்டுரை இங்கு தரப்பட்டுள்ளது.