படம் | UN NEWS

கடந்த வாரத்தின்போது ஐ.நா. மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் ஸெய்ட் என்பவர், மனித உரிமைகள் பேரவையிடம் இலங்கையில் இடம்பெற்ற சர்வதேச குற்றங்கள் பற்றிய அறிக்கையை ஏற்கனவே வகுத்தபடி மார்ச் 2015 இலே வெளியிடாமல் அதைத் தாமதித்து செப்டெம்பரில் வெளியிடும்படியாகப் பரிந்துரைத்துள்ளார். இந்தத் தீர்மானமானது இலங்கையில் உள்ள தமிழர்கள் மற்றும் புலம்பெயர் தமிழர்கள் மத்தியே கடும் திருப்தியின்மையைத் தோற்றுவித்துள்ளது. ஒரு சிலர் இந்தத் தீர்மானத்தை வன்மையாகக் கண்டிக்கும் அளவுக்கும் சென்றுள்ளனர். இலங்கையில் உள்ள மனித உரிமைகள் அமைப்புக்களுள் பெரும்பாலானவை – அவை வடக்கிலும் கிழக்கிலுமோ அல்லது தெற்கிலுமோ இருந்தாலுங்கூட – அறிக்கை திட்டமிட்டபடி மார்ச் மாதத்திலே வெளியிடப்படவேண்டும் என்று உயர் ஸ்தானிகரிடம் கோரியுள்ளன. பல அரசியல்வாதிகள், செயற்பாட்டாளர்கள், பாதிக்கப்பட்டோர் மற்றும் வடக்கு மாகாண சபை ஆகிய பலரும் கோரியிருந்துங்கூட, பெப்ரவரி 16 அன்று உயர் ஸ்தானிகர் அறிக்கை தாமதிக்கவேண்டும் என வேண்டுகோள் விடுப்பதாகத் தீர்மானித்துள்ளார். முன்னதாக ஐக்கிய அமெரிக்காவும் இலங்கை அரசும் வேண்டுகோள் விடுத்துங்கூட தாமதிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்த உயர் ஸ்தானிகரின் தெளிவான நிலைப்பாடானது அவர் மேற்கொண்ட மேற்படியான தீர்மானத்துடன் முரண்படுவதாகவே தென்படுகிறது. இந்தத் தீர்மானத்தினால் நாம் ஆச்சரியப்பட்டு மனமுடைந்தாலுங்கூட, யுத்தத்தின்போதும் அதற்குப்பின்பும் இழைக்கப்பட்ட சர்வதேசக் குற்றங்களையிட்ட நீதியை முனைப்புடன் நாடுபவர்கள் உயர் ஸ்தானிகர் தனது தீர்மானத்தையிட்டுத் தெரிவித்த கூற்றையும் வெளிநாட்டு அமைச்சர் மங்கள சமரவீர உயர் ஸ்தானிகருக்கு எழுதிய கடிதத்தையும் உன்னிப்பாகக் கவனிக்கவேண்டும். இந்த இரு ஆவணங்களையும் ஒன்றாக வாசித்தால், எமக்கு முன்பாக உள்ள சவால்களையும் வாய்ப்புக்களையும் பற்றிய விசாலமான கண்ணோட்டத்தை நாம் பெற்றுக்கொள்ளலாம்.

மனித உரிமைகள் பேரவைக்கான உயர் ஸ்தானிகரின் கடிதமும் அவரது ஊடக அறிவிப்பும் பல முக்கியமான அம்சங்களை உள்ளடக்கியுள்ளன. முதலாவதாக – குறித்த அறிக்கை தாமதிக்க வேண்டியதான காரணங்களை அவர் குறிப்பிடுகிறார். அதிலே முதலாவது, இலங்கையிலே தற்போது மாறியுள்ள சூழ்நிலை, இரண்டாவதாக, குறித்த அறிக்கைக்குப் பல புதிய தகவல்கள் கிடைக்கக்கூடிய சாத்தியம். இதிலே முதற் காரணத்தைப் பொறுத்தவரைக்கும் ஐக்கிய அமெரிக்கா மட்டுமன்றிய புதிய மைத்திரி – ரணில் அரசும்கூட, குறித்த அறிக்கை நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பதாக வெளியிடப்படுமேயாயின் அது சிங்கள பௌத்த கடும்போக்காளர்களிடையே எதிர்மறையான பிரதிபலிப்பை ஏற்படுத்தி, மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு நெருக்கமான சக்திகளை வலுப்படுத்தி, சிங்களக் கடும்போக்காளர்களால் தேசப்பற்று அற்றதாகக் குற்றஞ்சாட்டப்படும் ஐக்கிய தேசியக் கட்சியைப் பலவீனப்படுத்திட வாய்ப்புள்ளதாகக் கருதுவது இரகசியமான ஒன்றல்ல. விசாரணைக் குழுவுக்கு அறிக்கையைப் பூர்த்திசெய்வதற்கு இருந்த காலம் அக்டோபர் 2014 முதல் ஜனவரி 2015 வரைக்குமான நான்கு மாதங்களே என்பதால் விசாரணையிலே வழங்கப்பட்ட தகவல்களிலே சில இடைவெளிகள் காணப்படக்கூடும் என்பது இரண்டாவதான காரணத்தைத் தூண்டியிருக்க வாய்ப்புள்ளது. விசாரணைக்கு சான்றுகள் மேலும் கிடைக்கும் என்பதை இது சுட்டிக் காட்டுவதுடன், விசாரணையாளர்களுடன் நெருங்கிய தொடர்புள்ளவர்களால் இந்த உண்மை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

உயர் ஸ்தானிகர் விடுத்த ஊடக அறிக்கையும் குறிப்பிடத்தக்க முக்கியத்துவம் வாய்ந்தது. அறிக்கையைத் தாமதிப்பதற்கு அவர் தீர்மானம் எடுப்பதென்பது சிரமமானதாயிருந்ததாக அவர் ஏற்றுக்கொண்டு இலங்கையிலே பாதிக்கப்பட்டவர்கள் அந்தத் தீர்மானத்தால் மனமுடைவார்கள் என்பதை அங்கீகரித்துமிருக்கிறார். இந்தத் தாமதாமானது “ஒரு தரம் மட்டுந்தான்” என அவர் குறிப்பிடுவதானது செப்டம்பரிலே அறிக்கை வெளியிடப்படும் எனும் திடப்பாட்டினைச் சுட்டுவதாய் உள்ளது. இவ்வகையிலே அவர் அறிக்கை புதைக்கப்படாமல் வெளியிடப்படும் எனும் “அசைக்கமுடியாத தனிப்பட்ட உத்தரவாதத்தை” வழங்கியுமுள்ளார். அறிக்கையின் தாமதமானது அந்த அறிக்கையைப் புதைப்பதற்கு இட்டுச்செல்லும் எனப் பல மனித உரிமைச் செயற்பாட்டாளர்களும் நான் உட்படப் பல சட்டத்தரணிகளும் கொண்டிருந்த கரிசினைகளுக்கு மேற்படியான கூற்றுக்கள் திருப்தியளிப்பதிலே நெடும்பயணம் செய்கிறதாய் உள்ளது. உயர் ஸ்தானிகரிடம் அவரது தீர்மானத்தை வெளியிட முன்பதாக அனுப்பப்பட்ட கடிதங்களில், அறிக்கை மார்ச் மாதம் வெளியிட நிர்ப்பந்திப்பதற்கன அடிப்படைக் காரணம் அந்த அறிக்கை வெளியிடப்படாமலே போகக்கூடும் எனும் அச்சமே காரணம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. உண்மையைக் கூறுவதாயின், நீதிக்கான எதிர்பார்ப்புக்களைப் பொறுத்தவரைக்கும் அறிக்கையை ஆறுமாதம் தாமதித்து வெளியிடுவது எவ்விதத்திலும் தீங்கானதல்ல. உண்மையிலேயே நீதிக்கான வழிமுறைகளிலே ஈடுபட்டவர்களுள் அநேகர், மேலதிக நேரம் இருக்கும் பட்சத்திலே வலிமையானதும் பரந்துபட்டதுமான அறிக்கை உருவாகும் என்ற நம்பிக்கையிலே, கடந்த காலக் கடைசிப்பகுதியிலே விசாரணை அணியினருக்கு மேலும் ஆறுமாத அவகாசம் வழங்கும்படி பரிந்துரைத்துவந்தனர். எனவே, செப்டம்பர் மாதத்திலே அறிக்கை வெளியிடப்படும் பட்சத்தில், தாமதம் என்பது நீதியைப்பொறுத்தவரைக்கும் தோல்வியல்ல. உயர் ஸ்தானிகர் தற்போது அந்த அறிக்கை நிச்சயமாகவே வெளியிடப்படும் எனும் தனிப்பட்ட உறுதிமொழியை வழங்கியுள்ளார். இராஜாங்கத் தூதுவராகக் கடமையாற்றிய காலத்திலே நீதிக்காகப் போராடிய நீண்ட தடம்பதித்தவராகவே உயர் ஸ்தானிகர் உள்ளார் என்பதும் கவனிக்கத்தக்கதாகும். சர்வதேச குற்றவியல் மன்றத்திலே நீண்டகால ஆதரவாளராக இருந்து, போர்க்குற்றவாளிகளை நீதிக்கு முற்படுத்துவதிலே திடமான நிலைப்பாட்டை எடுப்பவராகப் பரவலாகக் கணிக்கப்பட்ட ஒருவர் அவர். எனவே, அவரது தனிப்பட்ட உறுதிமொழி அதிகக் கனம்பெற்றதாகும்.

வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர எழுதிய கடிதமும் முக்கியமானதாகும். இதன் முக்கியத்துவத்துக்கான காரணம், நான் ஏற்கெனவே சுட்டிக்காட்டியபடி ஐக்கிய அமெரிக்காவும் இலங்கையும் தாமதிக்கச்செய்வதிலே முனைப்புடன் இருக்கையிலே உயர் ஸ்தானிகர் அறிக்கையின் தாமதத்தையிட்டு விருப்பமற்றவராக இருந்தமையேயாகும். இறுதியாக, உயர் ஸ்தானிகரைத் திருப்திப்படுத்தும்படி சில சலுகைகளைப் பெற்றுக்கொள்ளும்படியாக ஐக்கிய அமெரிக்காவின் இராஜாங்கச் செயலதிபர் ஜோன் கெரி இலங்கையின் அவரது சகநிலையினரான மங்கள சமரவீரவுடன் பேசித்தீர்ப்பதெனத் தீர்மானிக்கப்பட்டது. எனவே, கடிதத்தின் பெரும்பகுதி புதிய அரசால் கொணரப்பட்ட மாற்றங்களிலே நோக்கக்குவியம் கொண்டதாய் இருந்தாலுங்கூட அந்தக் கடிதம் பொறுப்புக்கூறுவதற்கான உள்ளூர் பொறிமுறையொன்றைப் பொறுப்பெடுப்பதாக இலங்கை வாக்குப் பண்ணுவதைத் தெரிவித்து, அந்தப் பொறிமுறையை விருத்திசெய்வதிலே உயர் ஸ்தானிகர் மற்றும் அவரது அலுவலகத்தின் ஆலோசனையும் உதவிகளும் பெறப்படும் என்றும் தெரிவித்தது. சாணக்கியமான முறையிலே வார்த்தைகளைப் பதித்துள்ள இந்தக் கடிதம் பொதுமனிதனுக்கு அர்த்தமற்றதாகத் தென்படக்கூடுமாயினும், அது குறிப்பிடத்தக்க ஒரு சலுகையாகும். அதன் அர்த்தம் என்னவெனில், இலங்கை அரசானது உயர் ஸ்தானிகருடன் இணைந்து நாட்டினுள் ஒரு பொறுப்புக்கூறும் பொறிமுறையை விருத்தியாக்கும் என்பதாகும். எளிமையான அந்த வசனத்தின் மூலமாக மனித உரிமைகள் உயர் ஸ்தானிகரும் அவரது நிபுணர்களும் நீதிக்கான இலங்கையின் உள்ளூர் முன்னெடுப்புகளிலே இலங்கை அரசுக்கான ஆலோசகர்கள் எனும் வகிபங்கினைப் பெற்றுள்ளனர். இதனை வேறுவிதமாகக் கூறுவதாயின், இலங்கை அரசானது உயர் ஸ்தானிகரின் ஆலோசனையை ஏற்றுக் கொள்ளும்பட்சத்தில் பொறுப்புக்கூறும் பொறிமுறையானது மிக உயர்ந்த தராதரம் கொண்டதாகத் திகழும். ஆனால், உயர் ஸ்தானிகரின் ஆலோசனையை அது புறந்தள்ளுமேயாயின், பெப்ரவரி மாதத்திலே வெளியுறவு அமைச்சரின் எழுத்துமூலமான வாக்குறுதி வழங்கப்பட்டிருந்துங்கூட, இலங்கை அரசானது ஒத்துழைக்க மறுத்துள்ளது என செப்டம்பரிலே அறிக்கை வெளியிடப்பட்ட பின்பு உயர் ஸ்தானிகர் தெரிவிப்பது கைகூடும். இராஜாங்க உறவுகள் மண்டலத்திலே எழுத்துமூலமான வாக்குறுதி மீறப்படுவது என்பது மிக மோசமான பின்விளைவுகளைக் கொண்டுள்ள ஒரு விடயமாகும். உண்மையிலேயே இலங்கையைப் பொறுத்தவரைக்கும் பொறுப்புக்கூறுவதற்கான ஐ.நாவின் முழுச் செயற்பாடும் எழுவதற்கு ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூனிடம் ஜனாதிபதி ராஜபக்‌ஷ வழங்கிய எழுத்துமூல உத்தரவாதம் மீறப்பட்டமையே காரணமாகும். எனவே, அறிக்கை வெளியிடப்படுவதைத் தாமதிக்கச் செய்து காலக்கிரமத்தை பெற்றுக்கொண்டதிலே இலங்கை வெற்றிபெற்றிருந்தாலுமென்ன, அது எழுத்துமூலமான உறுதிமொழியை வழங்கியுள்ளது. அதனைப் புறந்தள்ளுவதை அது கடினமானதாகக் கண்டுகொள்ளும்.

எனவே, நீதிக்கான அண்மித்த காலப்பகுதி நிகழ்வுகளின் தாற்பரியங்கள் என்ன? மற்றும் வரும் மாதங்களிலே நீதியைப் பற்றிய கரிசினை கொண்டவர்களின் செயற்பாட்டு, அணுகுமுறை எப்படியானதாக இருக்கவேண்டும்? என்ற நம்பிக்கையிலே பல சிபார்சுகளை ஆலோசனையாக வழங்குவேன்.

முதலிலே, புதிய அரசு பதவிக்கு வந்ததால் ஏற்பட்டுள்ள இடைவெளியை பயன்படுத்தி, போர்க்குற்றங்கள் மற்றும் மனுக்குலத்துக்கு எதிரான குற்றங்கள் ஆகியவற்றைப் பற்றிய சாட்சியங்களைத் திரட்டி பயன்படுத்திக்கொள்வது முக்கியமானதாகும். ராஜபக்‌ஷ ஜனாதிபதியாக இருந்த காலத்தில் அப்படியான சாட்சியங்களைத் திரட்டுவது மிகவும் கடினமானதாக இருந்திருந்தாலுங்கூட, தற்போது சூழ்நிலை ஒரளவுக்கு வேறுபட்டதாகவே உள்ளது. இவ்விடயத்திலே நாம் தவறிப் போய்விடக்கூடாது. விசாரணைகள் பூர்த்தியாகிவிட்டன என்பதுடன் புதிய தகவல்கள் வழங்கப்படமுடியாது எனும் தப்பான ஒரு கருதுகோள் இன்று தமிழர் வட்டகைகளிலே பரவிவருகிறது. இது முற்றும் முழுவதுமாக உண்மையல்ல. விசாரணை தொடர்வதுடன் மார்ச் கடைசிப்பகுதி அல்லது ஏப்ரல் 2015 இலே – மனித உரிமைகள் பேரவையானது செப்டம்பர் வரைக்கும் அறிக்கையைத் தாமதிப்பதற்கான தீர்மானத்துக்கு அங்கீகாரம் வழங்கும் பட்சத்தில் மேலதிக சாட்சி வழங்குவத்றகு அழைப்பு விடுக்கப்படுவது சாலச்சாத்தியமானதாகும். இந்த வாய்ப்பு தவறவிடப்படக்கூடாததாகும்.

இரண்டாவதாக, தமிழ் அரசியல் தலைவர்களும் சிவில் சமூகக் குழுக்களும் உயர் ஸ்தானிகருடன் கலந்துரையாடலில் ஈடுபடுதல் வேண்டும். இலங்கையிலே பொறுப்புக்கூறும் பொறிமுறையை விருத்தியாக்குவதிலே பாதிக்கப்பட்டவர்களும் பங்கெடுக்கவேண்டும் என்பதை அவர்கள் வலியுறுத்தித் தெரிவிக்கவேண்டும். வேறு விதத்திலே கூறுவதாயின், பொறுப்புக்கூறுவதற்கான பொறிமுறையை விருத்தியாக்கும் பொறுப்பை முழுவதுமாக அரசின் கைகளிலே விட்டுவிடக்கூடாது. பாதிக்கப்பட்டவர்களும் அவர்களது பிரதிநிதிகளும் இந்தப் பொறிமுறையிலே முக்கியமான வகிபங்கை வகிக்கவேண்டும். மேசையண்டையிலே தமக்கான ஒரு இருக்கையைப் பெற்றுக்கொள்வதைக் கோரி நிற்பதிலே, தமிழ் அரசியற் தலைவர்களும் குடிசார் மக்கள் சமூகமும் ஐ.நா. செயலாளர் நாயகத்தின் சொந்த நிலைப்பாட்டை மீளமைத்துக்கொள்ளவேண்டும். அதன்படி, எந்த நாட்டிலும் இடம்பெறும் எந்த ஒரு பொறுப்புக்கூறும் செயற்பாடும் பாதிக்கப்பட்டோர் மற்றும் அவர்களது பிரதிநிதிகள் ஆகியோரை உள்ளடக்கியதான அகன்றுபட்ட குழுவாக இருக்கவேண்டும் எனும் ஐ.நா. செயலாளர் நாயகத்தின் சொந்த உத்தியோகபூர்வ நிலைப்பாட்டை மீள வலியுறுத்திடவேண்டும்.

மூன்றாவதாக, முற்றும் முழுவதுமான உள்ளூர் பொறிமுறை ஏற்புடையதல்ல என்பதை நாம் உணரும் அதேவேளை, முற்றும் முழுவதுமான சர்வதேசப் பொறிமுறையை ஸ்தாபிப்பது என்பதுவும் நடைமுறைச்சாத்தியமற்றதாகும் என்பதையும் உணர்ந்துகொள்ளல் வேண்டும். முன்னைய கட்டுரைகளிலே நான் எழுதியதைப்போல, இலங்கையின் வழக்கை சர்வதேசக் குற்றவியல் மன்றத்துக்கு முற்படுத்துவது அண்மித்த எதிர்காலத்திலே இடம்பெறச் சாத்தியமற்றதாகும். ராஜபக்‌ஷ ஆட்சியில் இருந்த காலத்திலுங்கூட அது சாத்தியமற்றதாய் இருந்தது. தற்காலத்தில் அது அதைவிடவும் நடைமுறைச் சாத்தியமற்றதாய், அதைப்பற்றிக் கனவு காண்பதும் ஏறத்தாழ இயலாததாவே உள்ளது. எனவே, நீதிக்காக நம்பத்தகுந்த ஒரு பொறிமுறையின் அதிசிறந்த வாய்ப்பானது உள்ளூர் மற்றும் சர்வதேசம் ஆகியவற்றை உள்ளடக்கியதாய் இருக்கும். வேறு விதமாகக் கூறுவதாயின், சர்வதேசமயமாக்கப்பட்ட உள்ளூர் பொறிமுறையே தேவை. அப்படியான நீதிமன்றங்கள் நான் கடமையாற்றிய கம்போடியாவிலும், பொஸ்னியா, கிழக்குத்திமோர், சீராலியோன் மற்றும் அண்மைய காலங்களிலே செனகல் ஆகிய நாடுகளிலே உள்ளன.

எனவே, சர்வதேசக் குற்றங்கள் பற்றிய அறிக்கையை வெளியிடுவதைத் தாமதிப்பது எனும் மனித உரிமைகள் உயர் ஸ்தானிகரின் தீர்மானமானது பலரை மனத்தாங்கலடையச் செய்திருப்பினுங்கூட, அவரது விளக்கிக்கூறும் கருத்துக்களும், இலங்கை வழங்கியுள்ள சலுகைகளின் தன்மையும் உற்சாகமூட்டுவதாகவே உள்ளன. சுருங்கக்கூறின், அறிக்கையை வலுவூட்டும்படி புதிய சான்றுகளை முற்படுத்துவதற்கான மேலதிக வாய்ப்பும் கிட்டியுள்ளது. அது மட்டுமன்றி, உயர் ஸ்தானிகரின் ஆலோசனைகள் மற்றும் உதவிகளைப் பெற்றுக்கொள்ள நாடுவதாக இலங்கை அரசு ஏற்றுக் கொண்டுள்ளமையினூடாக, இலங்கைக்குள் நீதிக்கான பொறிமுறையை சர்வதேசமயப்படுத்தும் கதவு திறக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய வாய்ப்புக்களைப் பயன்படுத்துவதற்கு நீதிக்காகப் போராடுவோர் தொழிற்திறனுடன் செயற்பட்டு, சான்றுகளைத் திரட்டி, வரும் மாதங்களிலே உயர் ஸ்தானிகருடனும் இலங்கை அரசுடனும் இராஜ்யத்தூதுவச் சாணக்கியத்துடன் பேச்சு வார்த்தைகளிலே ஈடுபட்டு சர்வதேசமயப்படுத்தப்பட்ட உள்ளூர் பொறிமுறையைக் கலந்தாலோசித்து நிலைநாட்ட முயலவேண்டும்.

நிறான் அங்கிற்றல்