படம் | Eranga Jayawardena/Associated Press, FOX23

தெற்கை பதற்றத்திற்கு உள்ளாக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட ஜனாதிபதி தேர்தல் மிகவும் அமைதியாக நிறைவுற்று முடிந்திருக்கிறது. பிரபாகரனை யுத்த களத்தில் தோற்கடித்து, அவரை இல்லாமலாக்கிய ராஜபக்‌ஷவின் அதிகாரமும் முடிவுக்கு வந்திருக்கிறது. அந்த வகையில் கடந்த ஒரு வருடகாலமாக மிகவும் இரகசியமாக மேற்கொள்ளப்பட்ட ‘ஒப்பரேசன் ராஜபக்‌ஷ’ முடிவுக்கு வந்திருக்கிறது. இந்தக் கட்டுரை எழுதிக் கொண்டிருக்கும் போது புலம்பெயர் ஆய்வாளர் தாமரைகாருண்யன் எழுதியிருக்கும் கட்டுரையொன்றை படிக்க நேர்ந்தது. 2009இல் விடுதலைப் புலிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை ராஜபக்‌ஷ அரசு தீவிரப்படுத்தியிருந்த வேளையில், மேற்குலக இராஜதந்திரி ஒருவர் குறிப்பிட்ட விடயத்தைத்தான் காருண்யன் தனது கட்டுரையில் பதிவு செய்திருக்கிறார். மஹிந்த ராஜபக்‌ஷ நீங்கள் விரும்பும் தாராளவாத ஜனநாயக கொள்கையை பின்பற்றுபவர் அல்ல, அப்படியிருந்தும் மேற்குலகம் ஏன் இந்த போரில் ராஜபக்‌ஷ அரசை ஆதரிக்கிறது? இந்தக் கேள்விக்குப் பதிலளித்த குறித்த இராஜதந்திரி பிரபாகரனை இப்போது ராஜபக்‌ஷ பார்க்கட்டும், பின்னர் ராஜபக்‌ஷ நாங்கள் பார்த்துக் கொள்வோம் என்று பதிலளித்தாராம். அவர்கள் அன்று பார்த்துக்கொள்வோம் என்று சொன்னதன் விளைவுதானா தற்போது நிறைவுற்றிருக்கும் ‘ஒப்பரேசன் ராஜபக்‌ஷ’? ஆனால், உண்மையிலேயே ‘ஒப்பரேசன் ராஜபக்‌ஷ’ முற்றுப்பெற்று விட்டதா? இந்தக் கேள்விக்கான பதிலை பார்ப்பதற்கு முன்னர் நடந்து முடிந்த தேர்தல் பற்றி சில விடயங்களை குறித்துக் கொள்வது நல்லது.

தெற்காசியாவின் இராணுவச் சமநிலையில் தாக்கம் செலுத்தக் கூடிய நிலையிலிருந்த தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் 2009இல் வீழ்சியடைந்தது. விடுதலைப் புலிகளை இல்லாதொழிக்கும் நோக்கில் கொழும்பு பல்வேறு நடவடிக்கைளை மேற்கொண்டிருந்த போதும், அதில் வெற்றி பெற முடியவில்லை. இந்த நிலையில்தான் ராஜபக்‌ஷ ஆட்சிப் பொறுப்பிற்கு வருகிறார். ஆனால், தமிழர்களின் ஆதரவினால்தான் ராஜபக்‌ஷ மிகக் குறைந்தளவு வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற முடிந்தது. தமிழர்களின் ஆதரவு என்பதன் பொருளை அரசியல் வாசகர்கள் நன்கறிவார்கள். அதாவது, 2005இல் இடம்பெற்ற தேர்தலை பகிஷ்கரிக்குமாறு விடுதலைப் புலிகள் அழைப்புவிட்டதைத் தொடர்ந்து, தமிழ் மக்கள் தேர்தலில் பங்குகொள்ளவில்லை. மக்கள் வாக்களித்திருந்தால் அப்போது ராஜபக்‌ஷவை எதிர்த்துப் போட்டியிட்ட ரணில் விக்கிரமசிங்கவே வெற்றியீட்டியிருப்பார். இந்தத் தகவலையும் அரசியல் வாசகர்கள் நன்கறிவார்கள். ராஜபக்‌ஷ போன்ற ஒருவரை ஆட்சியில் அமர வைப்பதன் வாயிலாகவே பேச்சுவார்த்தையிலிருந்து வெளியேற முடியுமென்று பிரபாகரன் கணக்குப் போட்டிருந்தார். ஏனெனில், பேச்சுவார்த்தை என்பது தன்னை சுற்றிவளைக்கும் நச்சு வளையம் என்றே பிரபாகரன் கருதினார். ஆனால், தன்னுடைய செயலால் மேற்குலகம் குறிப்பாக, அமெரிக்காவின் பார்வை முற்றிலும் தனது பக்கமாக திரும்பும், அது இறுதியில் தன்னுடைய அழிவிற்கு வழிவகுக்கும் என்பதை கணிப்பதில் பிரபாகரன் தவறிழைத்தார். அந்தத் தவறே இறுதியில் அவரை இல்லாமலாக்கியது. இங்குதான் நான் ஏலவே எடுத்தாண்டிருந்த புலம்பெயர் ஆய்வாளரின் கருத்தை கவனத்தில் கொள்ள வேண்டும். உண்மையில் ராஜபக்‌ஷ மேற்குலகின் விருப்பத்திற்குரிய ஒருவராக இருக்கவில்லை. ஆயினும், பிரபாகரனை வீழ்த்துதல் என்னும் இலக்கிற்காக ராஜபக்‌ஷவின் யுத்தத்திற்கு மேற்குலகம் தங்களின் முழுமையான ஆதரவை வழங்கியிருந்தது. மேற்குலகின் முழுமையான ஒத்துழைப்புடன் ‘ஒப்பரேசன் பிரபாகரன்’ 2009இல் நிறைவுற்றது. பிரபாகரனின் வீழ்ச்சியுடன் தெற்காசியாவிற்கு மட்டுமல்லாது, ஒட்டுமொத்த உலக வல்லாதிக்க சிந்தனைக்கும் சவாலாக திகழ்ந்த அரசல்லாத சக்தியான (Non State) தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு நிர்மூலமாக்கப்பட்டது. ஆனால், விடுதலைப் புலிகளை வீழ்ச்சியுறச் செய்ததன் பின்னர் பிராந்திய சக்தியான இந்தியா மற்றும் அந்த இந்தியாவுடன் மூலோபாய கூட்டு வைத்திருக்கும் அமெரிக்காவிற்கும் புதியதொரு தலையிடியாக ராஜபக்‌ஷ உருவெடுத்தார். இதன் விளைவாகவே ராஜபக்‌ஷ அரசின் மீது அமெரிக்கா மென் அழுத்தங்களை பிரயோகிக்கத் தொடங்கியது. எந்த யுத்தத்திற்கு அமெரிக்கா தலைமையிலான மேற்குலகு பரிபூரண ஆதரவை வழங்கியதோ, அந்த யுத்தத்தின் விளைவுகளையே ராஜபக்‌ஷவின் மீதான அழுத்தங்களாக உருமாற்றியது. வன்னி போன்றதொரு மக்கள் செறிந்து வாழும் சிறிய நிலப்பரப்பில் இராணுவ நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும் போது பொதுமக்கள் உயிரிழக்க நேரிடும் என்பது யுத்தங்களில் கரைகண்ட அமெரிக்காவிற்கு தெரியாத ஒன்றல்ல. இருப்பினும், விடுதலைப் புலிகளை தெற்காசிய அரங்கிலிருந்து வெளியேற்ற வேண்டுமென்பதே மேற்குலகின் அப்போதைய ஒரேயொரு இலக்காக இருந்தது. அந்த இலக்கை நிறைவு செய்யும் ஊழியனாக ராஜபக்‌ஷவை அவர்கள் பயன்படுத்திக் கொண்டனர்.

யுத்தவெற்றியை தொடர்ந்து தன்னை எவராலும் கட்டுப்படுத்த முடியாது, தனக்கு எவரும் ஆலோசனை சொல்ல வேண்டிய தேவையும் இல்லை என்பதான புதியதொரு தெற்காசியக் குரலாக ராஜபக்‌ஷ வெளித்தெரியத் தொடங்கினார். அதுவரை இலங்கையில் பின்பற்றப்பட்டு வந்த வெளிவிவகாரக் கொள்கைக்கு மாறாக சீனாவை நோக்கி சாயத் தொடங்கினார். இலங்கை வரலாற்றில் என்றுமில்லாதவாறு சீனாவின் செல்வாக்கு அதிகரிக்கத் தொடங்கியது. இன்று ஆட்சியைக் கைப்பற்றிய ஒரு சில தினங்களிலேயே மைத்திரிபால சிறிசேன, தாம் சீனாவின் திட்டங்களை மீளாய்வு செய்யவுள்ளதாகக் கூறியிருப்பதை உற்று நோக்கினால் இந்திய மற்றும் மேற்குலக அதிருப்திகளின் விளைவுதான் ராஜபக்‌ஷவின் வீழ்ச்சி என்பதை விளங்கிக் கொள்வதில் அதிகம் சிரமப்பட வேண்டியதில்லை. ஆனால், எந்தவொரு ஆட்சியாளரின் அல்லது அரசியல் சக்திகளின் வீழ்ச்சிக்கான விதைகளை வெளியிலிருந்து இறக்குமதி செய்ய முடியாது. ஒருவரது வீழ்ச்சிக்கான விதைகள் அவரது அதிகார எல்லைக்குள்ளேயே அடையாளம் காணப்படுகின்றன. பின்னர் நிகழ்வதெல்லாம் அந்த விதைகளுக்கு நீர் ஊற்றும் முயற்சிகள் மட்டுமே! பிரபாகரனை வீழ்த்தியதன் விளைவாக ராஜபக்‌ஷ அதிகாரத்தின் உச்சத்திற்கு சென்றார். அதாவது, சிங்கள மக்கள் மத்தியில் ஒரு கதாநாயக நிலைக்கு சென்றார். அதனை அனுபவிப்பதில் அலாதி பிரியம் கொள்பவராகவும் மாறினார். இதுதான் அவரது வீழ்சிக்கான விதைகளை அடையாளம் காட்டத் தொடங்கியது. ராஜபக்‌ஷவின் அதிகாரம் அவரது குடும்ப அதிகாரமாக உருமாறியது. குடும்ப அதிகாரம் கொழும்பின் வர்த்த மையத்திற்குள்ளும் வலுவாக காலூன்றத் தொடங்கியது.

இந்த இடத்திலிருந்துதான் பிரச்சினைகள் கருக்கொள்ளத் தொடங்கின. பிரபாகரனை வீழ்த்தியதால் ராஜபக்‌ஷவை கண்ணியத்துடன் நோக்கிய கொழும்பின் மேட்டுக்குடிகள் மற்றும் வர்த்தக உலக பிரதிநிதிகள் அனைவரும் ராஜபக்‌ஷவை வெறுக்கத் தொடங்கினர். ஒரு புறம் இது நிகழ்ந்தது கொண்டிருக்கும் போதே, இன்னொரு புறம் தன்னுடைய மூத்த அரசியல் சகாக்கள் மத்தியிலும் ராஜபக்‌ஷ அதிருப்திகளை சம்பாதிக்கத் தொடங்கினார். ராஜபக்‌ஷ குடும்பத்தின் எல்லை கடந்த அரசியல் தலையீடுகள், கட்சியின் மூத்த உறுப்பினர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியாக உருமாறியது. இவைகள் அனைத்தையும் விதைகளாக அடையாளம் கண்ட இரகசிய சமூகம் (Secrete Society), அந்த விதைகளுக்கு நன்றாக நீர் வார்க்கத் தொடங்கியது. ஆனால், தன்னுடைய அதிகார மையம் உள்ளுக்குள் அழுகிக் கொண்டிருப்பதை ராஜபக்‌ஷவால் உணர முடியவில்லை. பொதுவாக வெற்றிகள் அகங்காரமாக மாறும் போது அதுவே நிகழும். இவை அனைத்தினதும் விளைவு, சிறிலங்கா சுதத்திரக் கட்சியின் செயலாளரும், ஓப்பீட்டளவில் ஊழல் மற்றும் அரசியல் சர்ச்சைகளில் அகப்படாதவருமான மைத்திரிபால சிறிசேன, ஜக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிலிருந்து பிரித்தெடுக்கப்பட்டார். மைத்திரிபால உடைவு தொடர்பான விடயங்கள் ஒரு வருடகாலமாக இடம்பெற்றதாகச் சொல்லப்படுகிறது. இதனை முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவே கையாண்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால், ஒரு இரகசிய சமூகத்தின் உதவியின்றி சந்திரிக்கா போன்ற ஒருவரால் இதனை ஒரு போதுமே சாத்தியப்படுத்தியிருக்க முடியாது. பிரபாகரனை வீழ்த்துவதற்காக அவரின் கிழக்கு தளபதியும், கிழக்கின் பெருந்தொகையான ஆளணியை தன் செல்வாக்கிற்குள் கொண்டுவரக் கூடிய ஆற்றலுள்ளவராகவும் இருந்த கருணாவை பிரித்தெடுத்து, பிரபாகரன் மீது யுத்தம் தொடுத்து அவரை வீழ்த்தியது போன்றதொரு உக்தியே ராஜபக்‌ஷ விடயத்திலும் கையாளப்பட்டிருக்கிறது. ஒரு ஒப்பிட்டு நோக்கிற்காகவே இதனை குறிப்பிடுகிறேன். ஆனால், தமிழர்கள் குறித்துக் கொள்ள வேண்டிய விடயம், இன்று ராஜபக்‌ஷவின் வீழ்ச்சியில் அக்கறை காண்பித்த சக்திகள் எவரும் நாளை தமிழ் மக்களின் நலன்களுக்காக குரல் கொடுக்கப் போவதில்லை.

ராஜபக்‌ஷவை அதிகாரத்திலிருந்து அப்புறப்படுத்துவதற்கான ‘ஒப்பரேசன் ராஜபக்‌ஷ’ வெற்றிகரமாக முடிவுற்றது. ஆனால், அந்த வெற்றி இன்னும் முழுமையடையவில்லை என்பதே தற்போது வெளித்தெரியும் புதிய பிரச்சினையாகும். ஏனெனில், நடைபெற்று முடிந்த தேர்தல் முடிவுகள், எதிர்பார்த்தது போன்று திருப்திகரமாக அமையவில்லை. காரணம், பெரும்பான்மையான சிங்கள மக்கள் ராஜபக்‌ஷவையே ஆதரித்திருக்கின்றனர். ராஜபக்‌ஷவையே தங்களின் தலைவராக அங்கீகரித்திருக்கின்றனர். இது ஆட்சி மாற்றத்தில் விருப்பம் கொண்டிருந்த சக்திகளுக்கு நல்லதொரு சகுணமல்ல. தவிர, ராஜபக்‌ஷவிற்கும் இது உற்சாகத்தை வழங்கியிருக்கிறது. தன்னை சிங்கள மக்கள் பெரும்பான்மையாக ஆதரித்திருப்பதால், தன்னால் மீண்டும் எழ முடியுமென்னும் நம்பிக்கையும் ராஜபக்‌ஷ பெற்றிருக்கிறார். இந்த அடிப்படையில்தான் தற்போது ராஜபக்‌ஷ கொழும்பிலுள்ள ஒரு வர்த்தகரின் இல்லத்தில் தங்கியிருந்து தன்னுடைய அரசியல் நடவடிக்கைளை மேற்கொண்டு வருகிறார். இதுவரை மைத்திரிபாலவிற்கும், மஹிந்தவிற்கும் இடையில் இருந்த போட்டி, தற்போது மஹிந்தவிற்கும, சந்திரிக்காவிற்குமான கட்சிப் போட்டியாக மாறியிருக்கிறது. ஆனால், இரகசிய சமூகம் ராஜபக்‌ஷவை அவ்வளவு எளிதாக மேலெழ விடாது. சந்திரிக்கா தன்னுடைய தகப்பனாரால் கட்டிவளர்க்கப்பட்ட சிறிலங்கா சுதந்திரக் கட்சியை தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டவரும் தீவிர முயற்சியில் இறங்கியிருக்கிறார். இதில் அவர் வெற்றி பெற்றால் ராஜபக்‌ஷவால் மீளவும் எழுவது மிகவும் கடினமாகவே இருக்கும். ஆனால், இங்கு தமிழர்கள் உற்றுநோக்க வேண்டியது வேறு விடயமாகும். ராஜபக்‌ஷ விழுகிறார் அல்லது எழுகிறார் என்பதை ஒரு புறமாக வைத்துவிட்டு, நடந்து முடிந்த தேர்தல் முடிவு சொல்லியிருக்கும் உண்மையையே உற்று நோக்க வேண்டும். அதாவது, ராஜபக்‌ஷவின் அதிகார வீழ்ச்சி என்பது சிங்கள இனவாதத்தின் வீழ்ச்சியல்ல என்பதாகும். அது எதிர்காலத்தில் மேலும் எழுச்சியடையவும் அதிக சாத்தியப்பாடுகள் உண்டு. தமிழர் பிரச்சினைக்கு உறுதியானதொரு அரசியல் தீர்வை கோரும் போது, சிங்கள இனவாதம் விழவில்லை என்னும் உண்மை நிச்சயம் வெளிப்படும். ஆனால், தமிழர் தரப்பு அரைகுறை தீர்விற்கு இணங்கினால் இந்தப் பிரச்சினை எழ வாய்ப்பில்லை. ஆனால், சில தினங்களுக்கு முன்னர் தனிப்பட்ட உரையாடல் ஒன்றின்போது குறிப்பிட்ட சம்பந்தன் ஜயா, தான் சில்லறை தீர்வு எதனையும் ஏற்கப்போவதில்லை என்று ஆணித்தரமாக கூறியிருந்தார்.

தமிழ் மக்களைப் பொறுத்தவரையில், நடந்து முடிந்த தேர்தலை ஒரு பழிதீர்ப்பதற்கான வாய்ப்பாக மட்டுமே பயன்படுத்திக் கொண்டனர். 2005இல் தேர்தலை பகிஷ்கரித்து தமிழ் மக்கள் எந்த ராஜபக்‌ஷவின் வெற்றிக்கு காரணமாக இருந்தனரோ, அதே ராஜபக்‌ஷவை 2014இல் வாக்களித்து அதிகாரத்திலிருந்து அகற்றவும் காரணமாகியிருக்கின்றனர். நடத்து முடிந்த தேர்தலில் தமிழ் மக்கள் மைத்திரியை நிராகரித்திருந்தால், ராஜபக்‌ஷ வெற்றிபெற்றிருப்பார். இதனை தங்களுக்கு சாதமாக்கிக் கொள்ளும் சிலர் தேர்தல் பகிஷ்கரிப்பை மஹிந்தவிற்கு சார்பான ஒன்றாக காட்ட முற்பட்டனர். உண்மையில் மைத்திரியை ஆதரியுங்கள் என்று சொன்னவர்களும் சரி, தேர்தலை பகிஷ்கரியுங்கள் என்று சொன்னவர்களும் சரி தமிழ் மக்களின் நலனை கருத்தில் கொண்டே அதனை குறிப்பிட்டனர். ஆனால், மேற்படி இரண்டும் வேறுபட்ட அணுகுமுறைகளைக் கொண்டது. அரசியல் என்பது ஒரு வழிப் பாதையல்ல என்பதை விளங்கிக் கொள்வதிலிருந்தே, அரசியலில் பல்வேறு உபாயங்களை ஒருவர் விளங்கிக் கொள்ள முடியும். ஒன்று பிழைத்தால் அடுத்தது என்ன என்னும் அடிப்படையில்தான் அரசியல் உபாயங்களை வகுக்க வேண்டும். உலகில் ஒவ்வொரு சக்திகளும் அப்படியானதொரு உபாயத்தை முன்னிறுத்தித்தான் தங்களின் நலன்களை வெற்றி கொள்கின்றனர். இன்று ஆட்சி மாற்றத்தின் பின்னால் திரண்டிருந்த பல்வேறு சக்திகள் மற்றும் தனிநபர்கள் அனைவரும் தங்களின் நலன்களையும் இணைத்தே விடயத்தை கையில் எடுத்திருந்தனர். அவ்வாறாயின் ஒருவர், தமிழ் மக்களின் நலனை மட்டும் முன்னிறுத்தி சிந்திப்பதில் என்ன தவறு? ‘ஒப்பரேசன் ராஜபக்‌ஷ’ முடிந்து விட்டது. அது ஒரு தற்காலிக மகிழ்சியைத் தரலாம். ஆனால், அது தெற்கில் என்னவகையான அரசியல் விளைவுகளை ஏற்படுத்தும், அது தமிழர் அரசியலில் என்னவகையான விளைவுகளை உண்டுபண்னும் என்பது பற்றிய எந்தவொரு ஊகமும் தற்போதைக்கு என்னிடம் இல்லை.

தினக்குரல் பத்திரிகைக்காக யதீந்திரா எழுதிய கட்டுரை இங்கு தரப்பட்டுள்ளது.