படம் | Eranga Jayawardena/Associated Press, THE NEW YORK TIMES
தேர்தல்கள் நடைபெறுவது இலங்கையில் மிகச் சாதாரண நிகழ்வாகக் காணப்பட்ட போதும் நடைபெறப்போகும் ஜனாதிபதித் தேர்தலானது வரலாற்றில் என்றுமில்லாத அளவுக்கு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பலத்த எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ளது. யுத்த வெற்றியின் பின்னர் உள்நாட்டில் தேர்தல்களில் அசைக்க முடியாத தலைவராக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தொடர்ந்தும் வலம் வந்தார். ஊவா மாகாண சபைத் தேர்தலில் ஆளும் கட்சியின் வாக்கு வீதத்தில் ஏற்பட்ட சரிவு யுத்த வெற்றியினை விட மக்களின் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு அடுத்த தேர்தல்களில் செல்வாக்குச் செலுத்தப்போகின்றது என்பதனை நன்றாக உணர்ந்து கொண்டதனாலேயே ஜனாதிபதி தனது பதவிக்காலம் முடியும் முன்னர் தேர்தலினை நடாத்தத் துணிந்தார்.
யுத்தம் முடிவடைந்த பின்னர் உறுதியான அபிவிருத்திப்பாதையில் நாட்டினை இட்டுச் செல்வதற்கு புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வினைக் காணுதல், யுத்தத்தினால் இடம்பெயர்ந்தவர்கள் அனைவரையும் அவர்களின் சொந்த இடங்களில் குடியேற்றுதல், உண்மையான இன நல்லிணக்கத்தினை ஏற்படுத்துதல், யுத்தத்தினால் மிகவும் மோசமாகப்பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் வாழ்வாதாரத்தினை விரைவாகக் கட்டியெழுப்புதல், தடுப்புக்காவலில் சந்தேகத்தின் பேரில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்தல் போன்றவற்றினை செய்வதற்கான அத்தனை வாய்ப்புக்களும் காணப்ட்ட போதும், இவை அனைத்திற்கும் மாறாக நில ஆக்கிரமிப்புக்கள், இராணுவ மயமாக்கம், வட மாகாண சபைக்கு அதிகாரங்களை வழங்காமல் முரண்டு பிடித்தல், பொதுபல சேனா போன்ற கடும் போக்குவாத அமைப்புக்களை கட்டுப்படுத்தாமல் முஸ்லிம் மக்களையும் தேசிய அரசியலிலிருந்து அந்நியப்படுத்துவதற்கு வழிவகுத்தல் போன்றவற்றின் மூலம் சிங்கள மக்களை ஓரணியில் திரட்டி தேர்தல்களை வெற்றி கொள்வதே அரசின் மூலோபாயமாகக் காணப்பட்டது.
ஆனால், ஊழல், அதிகார துஷ்பிரயோகம், ஜனநாயக உரிமை மீறல்கள், நல்லாட்சிச் செயன்முறை தொடர்ந்தும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகிக் கொண்டிருந்தமை, கல்வி, சுகாதாரம் போன்ற முக்கிய துறைகள் அரசின் அபிவிருத்தி நிகழ்ச்சி நிரலில் முக்கிய துறைகளாக உள்ளடக்கப்படாமை போன்ற காரணங்கள் சிங்கள மக்கள் மத்தியில் அரசின் மீதான வெறுப்பினை உருவாக்குகின்றன என்பதனை அரசு சிறிதும் உணராமலேயே செயற்பட்டுக் கொண்டிருந்தது.
இந்த நிலையிலேயே பெருந்தலைவர்களான சந்திரிகா பண்டாரநாயக்க மற்றும் ரணில் விக்கிரமசிங்க இருவரும் இணைந்து துல்லியமான காய் நகர்த்தல்களுக்குத் திட்டமிட்டுக் கொண்டிருந்தனர். சிங்கள மக்களின் வாக்குகளை கணிசமாக பிரித்தாலன்றி வெற்றி வாய்ப்பு கைக்கெட்டாது என்பது நன்றாகத் தெரிந்த நிலையில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியினை சேர்ந்த ஒரு முக்கிய தலைவரைக் களமிறக்குவதே வெற்றிக் கனியினை தட்டிப்பறிப்பதற்கு சரியான வழியெனக் கண்டறிந்து அதில் வெற்றியும் கட்டுவிட்டனர்.
ஆனால், மைத்திரிபால சிறிசேன அவர்கள் வெற்றி பெறுவதற்கு சிங்கள மக்களின் வாக்குகள் மட்டுமன்றி தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் வாக்குகளும் அவசியமானவை எனும் நிலை நன்றாக உணரப்பட்டுக் கொண்டிருக்கையில் தமிழ் மக்களின் முடிவு என்னவாக இருக்கப் போகின்றது என்பதே இன்று மிகப் பெரும் கேள்வியாக உருவாகிக் கொண்டிருக்கின்றது. உண்மையில் தமிழ் மக்கள் எவ்வாறான முடிவினை எடுக்க வேண்டும்? இது தொடர்பாக மூன்று வகையான கருத்து நிலைகள் ஊடகங்களில் நிலவுவதனைக் காணமுடிகின்றது. ஒன்று – தமிழ் மக்கள் பொது வேட்பாளரான மைத்திரிபால சிறிசேன அவர்களை ஆதரிக்க வேண்டும். இரண்டாவது – தமிழ் மக்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் வெற்றி பெறுவதனை ஏதோ ஒருவகையில் உறுதிப்படுத்த வேண்டும். மூன்றாவது – தமிழ் மக்கள் இத் தேர்தலினை முற்றாகப் புறக்கணிக்க வேண்டும்.
அரசியல் சாணக்கியத்துடன் சிந்திக்கும் எவரும் முதலாவது வாதத்தினை தேர்ந்தெடுப்பார் என்பதற்கு பல காரணங்களை முன்வைக்க முடியும். ஏனெனில், யுத்தம் முடிந்து ஐந்து வருடங்கள் முடிந்து விட்ட போதும் தமிழ் மக்களின் வாழ்வில் இன்னும் துயரம் முடிந்த பாடில்லை. கல்வி, பொருளாதாரம், வீட்டு வசதி, அரச தொழில் வாய்ப்புக்கள், வாழ்வாதாரம் என தமிழ் மக்கள் தொடர்ச்சியான இன்னல்களை அனுபவித்துக் கொண்டிருக்கின்றார்கள். இடம்பெயர்ந்து வாழும் மக்களின் துயரமும் விதவைகளின் துயரமும் தொடர்கின்றன. கப்பல் ஏறி கடல் கடந்து சென்று துன்பங்களை அனுபவித்தல் தொடர்கின்றது. இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமெனில் நாட்டில் நல்லாட்சி ஏற்பட வேண்டும். இனப்பிரச்சினைக்கு அர்த்த புஸ்டியான தீர்வு வழங்கப்பட வேண்டும். இவற்றினை யுத்தத்தினை வெற்றி கொண்ட அரசினால் இவ்வளவு காலமும் செய்ய முடியவில்லை. இனிமேலும் செய்யும் என்றும் எதிர்பார்க்க முடியாது. ஆகவே, தமிழ் மக்களுடன் சுமுகமான உறவினைப் பேணக்கூடிய புதிய அரசிற்கு வாங்களித்து நாங்களும் இந்நாட்டின் பங்குதாரர்கள் என தமிழ் மக்கள் உரக்கச் சொல்ல வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். ஏனெனில், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் புதிய செயலாளர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவு தொடர்பில் அக்கறை கொள்வதாகத் தெரியவில்லை. மில்லியன் கணக்கான வாக்குகளைக் கொண்டுள்ள தமிழினம் அவரது கட்சிக்கு வெறுமனே வாக்களிப்பதற்கு வீதியில் காத்துக் கிடக்கவில்லை என்பதனை உரத்துச் சொல்ல வேண்டும்.
மஹிந்த ராஜபக்ஷ வெல்வதனை மறைமுகமாக உறுதி செய்ய வேண்டும் என்னும் இரண்டாவது வாதம் பல ஆபத்துக்களை தன்னகத்தே கொண்டுள்ளதுடன் நடைமுறைச் சாத்தியமற்ற கற்பனையாகவும் உள்ளது. ஏனெனில், இவ்வாதம் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் மீண்டும் வெற்றி பெறும் போது தொடர்ந்தும் சீனாவுக்கு அதிக முக்கியத்துவம் வழங்குவார் என்றும் – இது மேற்குலகம் மற்றும் இந்தியாவுக்கு கோபத்தினை எற்படுத்தும் என்றும் – இது தமிழ் மக்களுக்கு நீண்டகாலத்தில் நன்மையைப் பெற்றுத் தரும் என்றும் – எதிர்வு கூறுகின்றது. இது விடுதலைப் புலிகள் 2004ஆம் ஆண்டு கடைப்பிடித்த அணுகுமுறைக்கு ஒப்பானதாகும். ஒரு கடும்போக்கு வாதியினை பதவிக்கு கொண்டு வருவதன் மூலம் தமது போராட்டத்தினை நியாயப்படுத்தி அடுத்த கட்டத்திற்கு நகரலாம் என அவர்கள் எதிர்பர்த்தனர். தாம் முழுமையாக யுத்தத்தில் தோற்கடிக்கப்படுவோம் என்றோ அல்லது தாயகத்தில் தமிழர் அரசியல் அரங்கிலிருந்து ஒட்டு மொத்தமாக அகற்றப்படுவோம் என்றோ அவர்கள் எதிர்பார்த்திருக்க வாய்ப்பில்லை. அத்துடன், அவர்கள் எதிபார்த்தது நடக்கவுமில்லை. தமிழ் மக்களுக்கும் அந்த நிலை மீண்டுமொருமுறை ஏற்படாது என்பதற்கு என்ன உத்தரவாதம்?
தமிழ் மக்கள் இத்தேர்தலினை முற்றாகப் புறக்கணிக்க வேண்டும் என்னும் மூன்றாவது வாதம் வெற்றிபெறும் வேட்பாளர் தான் தமிழ் மக்களுக்கு எவ்விதத்திலும் கடமைப்பட்டவர் அல்ல என நினைப்பதற்கும் ஜனநாயக விழுமியங்களை மதிக்கும் மேற்குலகு நாடுகள் மத்தியில் தமிழ் மக்கள் மீது மீண்டும் அதிருப்தி ஏற்படுவதற்கும் வழிவகுக்கக் கூடும். ஆகவே, ஓடு மீன் ஓடி உறு மீன் வருமளவும் வாடியிருந்த கொக்குக்கு வயிற்றில் வந்ததாம் அல்சர் என்னும் புதுக்கவிதை வரிகள் தமிழ் மக்களுக்கு பொருந்தக் கூடாது என்பதில் நாம் அனைவரும் கவனமாக இருக்க வேண்டும். நாங்கள் வீடுகளுக்கு செல்வதனை தடுத்தவர்களை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என இடம்பெயர்ந்து வாழும் ஒரு தமிழ் மகன் கூறுவது தெளிவாக ஒலிக்கின்றது. உண்மையில் யார் வெற்றி பெறவேண்டும் என்பதனை விட யார் தோற்கடிக்கப்பட வேண்டும் என்பதில் தமிழ் மக்கள் உறுதியாக இருப்பது தெளிவாகத் தெரிகின்றது.
எல். சிவலிங்கம்