படம் | SBS

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் எவ்வாறு நடந்து கொள்ளப் போகிறார்கள்? வடக்கு – கிழக்கு தமிழ் மக்களின் நம்பிக்கையைப் பெற்ற அரசியல் பிரதிநிதிகளாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும், முஸ்லிம் மக்களின் பிரதான அரசியல் சக்தியான ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸும் இதுவரையில் தேர்தல் தொடர்பிலான தங்களின் நிலைப்பாடுகளை முறைப்படியாக பிரகடனம் செய்யாதிருக்கும் நிலையில் இக்கேள்வி முக்கியமானதாகிறது. தமிழர்களும் முஸ்லிம்களும் எவ்வாறு வாக்களிக்க வேண்டுமென்ற வாதப்பிரதிவாதங்கள் ஒரு புறத்தில் சுறுசுறுப்படைந்திருப்பதையும் காணக்கூடியதாக இருக்கிறது.

இத்தடவை தேர்தலில் சிறுபான்மையினத்தவர்களின் வாக்குகள் தீர்க்கமானதொரு பங்கை வகிக்கக்கூடிய அரசியல் சூழ்நிலை காணப்படுகின்றபோதிலும், இரு பிரதான வேட்பாளர்களுமே தமிழர்களினதும் முஸ்லிம்களினதும் ஆதரவைத் திரட்டுவதில் அக்கறையற்ற ஒரு அணுகுமுறையைக் கடைப்பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவும் எதிரணியின் பொது வேட்பாளரான மைத்திரிபால சிறிசேனவும் பெரும்பான்மை இனத்தவர்களான சிங்களவர்கள் மத்தியில், அதுவும் குறிப்பாக சிங்கள பௌத்தர்கள் மத்தியில் சாத்தியமானளவு கூடுதல்பட்ச வாக்குகளைப் பெறுவதிலேயே அக்கறை கொண்டு செயற்படுவதைக் காணக்கூடியதாக இருக்கிறது. இதற்காக அவர்கள் தமிழ் பேசும் மக்களின் நியாயபூர்வமான அரசியல் உரிமைகளுக்கும் அபிலாஷைகளுக்கும் அனுதாபமான எந்தக் கருத்தையும் நினையாப்பிரகாரமேனும் வெளிப்படுத்தி விடக்கூடாது என்பதில் வெகு “நிதானமாக” இருக்கிறார்கள்.

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் வரை ராஜபக்‌ஷ அரசில் அங்கம் வகித்துக் கொண்டு தமிழ் பேசும் மக்களின் அபிலாஷைகளுக்கு எதிராகவும் அதிகாரப் பரவலாக்கத்துக்கு எதிராகவும் தென்னிலங்கையில் பேசித்திரிந்த சிங்கள பௌத்த அரசியல் கட்சியான ஜாதிக ஹெல உறுமயவுடன் புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதில் எந்த அசௌகரியத்தையும் எதிர்நோக்காத மைத்திரிபால சிறிசேன தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடமோ முஸ்லிம் காங்கிரஸிடமோ ஆதரவு கோரி அழைப்பு விடுப்பதற்குக்கூட தயங்கிக்கொண்டிருக்கிறார். அவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் அந்தரங்க உடன்படிக்கையொன்றைச் செய்து கொண்டுள்ளார் என்ற பிரசாரத்தைத் தீவிரப்படுத்தியிருக்கும் அரசத் தரப்பினர் 2010 ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்‌ஷவை எதிர்த்துப் போட்டியிட்ட முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகா, இரா. சம்பந்தனுடன் செய்து கொண்டதாகக் கூறப்பட்ட உடன்படிக்கையொன்று குறித்து சிங்கள மக்கள் மத்தியில் தவறான கருத்துக்களைப் பரப்புவதற்குக் கடைப்பிடித்த அதே அணுகுமுறையையே இத்தடைவையும் கடைப்பிடிக்கிறார்கள். அவர்களுக்கு கைவந்த கலையான “வெளிநாட்டுச் சதி” பற்றிய பிரசாரங்களும் தற்போது மிகத் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

ஜனாதிபதி ராஜபக்‌ஷவின் அரசு கடந்த 9 வருடங்களாக தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் கடைப்பிடித்து வந்திருக்கக்கூடிய கொள்கைகளும் அணுகுமுறைகளும் காரணமாக தமிழ் மக்கள் எத்தகைய மனநிலையில் இருக்கிறார்கள் என்பதும் கடந்த கால தேர்தல்களில் அவர்களின் வாக்களிப்பு எந்தகையதாக அமைந்தது என்பதும் எல்லோருக்கும் தெரிந்ததே. உள்நாட்டுப் போரின் முடிவுக்கு பிறகு 8 மாதங்கள் கடந்து நடத்தப்பட்ட ஜனாதிபதித் தேர்தலில் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவாக வடக்கு – கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த தமிழ் மக்கள் மாத்திரமல்ல, மலையகத் தமிழ் மக்களும் அதிகப் பெரும்பான்மையாக வாக்களித்திருந்தார்கள். ராஜபக்‌ஷ அரசின் மீதான தமிழர்களின் இந்த ஆழமான வெறுப்புணர்வு காரணமாக தனக்கு வாக்களிப்பதைத் தவிர அவர்களுக்கு வேறு தெரிவு இல்லை என்று மைத்திரிபால சிறிசேனவும், அவரை ஆதரிக்கும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவும் நினைக்கிறார்கள் போலும். முஸ்லிம் மக்களைப் பற்றியும் இவர்கள் இவ்வாறுதான் நினைக்கக் கூடும். முஸ்லிம் தலைவர்களில் அநேகமாக முழுப்பேருமே ராஜபக்‌ஷ அரசில் அமைச்சர்களாகப் பதவி வகிக்கின்ற போதிலும்கூட, அந்தச் சமூகத்துக்கு எதிராக கடந்த சில வருடங்களாக சிங்கள – பௌத்த தீவிரவாத சக்திகளினால் முன்னெடுக்கப்பட்ட குரோதப் பிரசாரங் களையும், கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறைகளையும் கட்டுப்படுத்துவதில் அக்கறையின்றி அரசு கடைப்பிடித்த மெத்தனமான போக்கு காரணமாக நாடு பூராகவுமுள்ள முஸ்லிம் மக்கள் கடுமையான அதிருப்தியும் ஆத்திரமும் அடைந்திருக்கிறார்கள்.

முஸ்லிம் அரசியல் கட்சிகளும் தலைவர்களும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் தீர்மானமொன்றை எடுப்பதில் தடுமாறிக் கொண்டிருந்தாலும் முஸ்லிம் மக்கள் தங்களது முடிவை எப்போதோ எடுத்து விட்டார்கள் என்று அவர்கள் மத்தியில் உள்ள சில அரசியல்வாதிகள் வெளிப்படையாகவே கூறுகிறார்கள். அதனால், முஸ்லிம் மக்களும் தனக்கே பெருமளவில் திரண்டுவந்து வாக்களிப்பார்கள் என்று எதிரணியின் பொது வேட்பாளர் நம்பிக்கை கொண்டிருக்கக்கூடும்.

இத்தகைய நிலைவரங்களையெல்லாம் அடிப்படையாகக் கொண்டு நோக்கும் போது தமிழ் மக்களினதோ முஸ்லிம் மக்களினதோ அரசியல் உரிமைப் பிரச்சினைகளுக்கான தீர்வு அணுகுமுறைகள் குறித்து இரு பிரதான வேட்பாளர்களுமே கிஞ்சித்தேனும் ஆர்வம் காட்டுவதற்கான வாய்ப்பு இல்லை என்ற முடிவுக்கே வரவேண்டியிருக்கிறது. தேர்தலில் வெற்றி பெற்றால் தனது பொறுப்பு 100 நாட்களுக்குள் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சி முறையை ஒழித்து சகல கட்சிகளையும் உள்ளடக்கிய தேசிய அரசொன்றை அமைக்க வழிவகுப்பதே என்றும் தேசிய இனப் பிரச்சினைக்கு அரசியல் இணக்கத் தீர்வைக் காண்பது தொடர்பிலான வழிவகைகளை ஆராய்வது பிறகு வருபவர்களின் பொறுப்பேயென்றும் மைத்திரிபால சிறிசேன கூறுவதை தமிழ் பேசும் மக்கள் நம்பத் தயாரில்லை.

தங்களது பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது தொடர்பிலான அணுகுமுறைகளைப் பொறுத்தவரை குறைந்தபட்ச பற்றுறுதியை, அதுவும் தேர்தல் காலத்தில்கூட ஒரு உலக ஒப்பாசாரத்துக்காகவேனும் காண்பிக்கத் தயாரில்லாத இரு வேட்பாளர்களுக்கும் வாக்களிப்பதில் என்ன பயன் கிடைக்கப் போகின்றது என்று தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் சிந்திக்கக்கூடிய சூழ்நிலை தோன்றவும் கூடும். ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் நேரகாலத்தோடு தீர்மானமொன்றை எடுப்பதில் எதிர்கொள்கின்ற சிக்கலை இந்தப் பின்புலத்திலேயே நோக்க வேண்டும். தமிழ் பேசும் மக்கள் தேர்தலில் வாக்களிப்பதில் பெருமளவு அக்கறை காட்டாமல் போகக் கூடிய சூழ்நிலை ஏற்படுமானால், அதற்கு தென்னிலங்கை அரசியல் சமுதாயமே முற்றிலும் பொறுப்பாகும். தமிழர்களினதோ முஸ்லிம்களினதோ பிரச்சினைகள் பற்றி வாய் திறந்தால் சிங்கள மக்களின் வாக்குகள் கிடைக்காது என்கிற சூழ்நிலை ஒரு புறமிருக்க தமிழ் பேசும் மக்களின் ஆதரவைக் கோருவதில் மறைமுகமாக ஆர்வம் காட்டுவதாகக்கூட தென்பட்டுவிடக்கூடாது என்று பிரதான வேட்பாளர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய அளவுக்கு தென்னிலங்கைச் சிங்கள பேரினவாத அரசியல் கலாசாரம் வளர்த்தெடுக்கப்பட்டிருக்கும் இலட்சணத்தை என்னவென்று சொல்வது!

வீ. தனபாலசிங்கம்