படம் | ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ டுவிட்டர் தளம்

ஆட்சி மாற்றம் தொடர்பில் எதிரணிகள் மத்தியில் பலவாறான வாதப்பிரதி வாதங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த பின்னணியில் இலங்கையில் இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில், இலங்கை தொடர்பில் கரிசனை கொண்டிருக்கும் இந்திய மற்றும் அமெரிக்கத் தரப்புகளும் ஆட்சி மாற்றத்தில் ஆர்வம் காட்டுகின்றனவா என்னும் கேள்வியெழுகிறது. ஆனால், அரச தரப்பினர் எதிரணிகளின் கூட்டணிக்கு பின்னால் சில சர்வதேச சக்திகள் தொழிற்படுவதாக பகிரங்கமாகவே குற்றம்சாட்டி வருகின்ற நிலையில், ஆளும் தரப்பின் தேர்தல் பிரச்சாரங்களின் போது மேற்கு எதிர்ப்பு அதிகம் வெளிப்படுவதற்கான புறச்சூழலே தெரிகிறது. எனவே, இத்தகையதொரு பின்புலத்தில் மேற்குலக சக்திகள் குறிப்பாக அமெரிக்கா, ஆட்சி மாற்றத்திற்கான திரைமறைவு வேலைகளில் ஈடுபடுமென்று கூற முடியாது. ஏனெனில், அது சில வேளைகளில் தலைகீழான விளைவுகளை ஏற்படுத்திவிடக் கூடிய ஒரு விளையாட்டாகவும் உருமாறிவிடலாம். ஆனால், இந்தியா மற்றும் அமெரிக்கா ஆட்சி மாற்றத்தை விரும்புகின்றதா என்று கேள்வி எழுப்பினால் நிச்சயம் ஆம் என்பதாகவே அவர்களில் தலையசைவு இருக்கும் என்பதில் எவ்வித ஜயமுமில்லை. ஆனால், இங்குள்ள பிரச்சினை விருப்பம் என்பதும் யதார்த்தம் என்பதும் வேறாக இருப்பதுதான்.

ஆட்சி மாற்றம் இந்திய மற்றும் மேற்குலக சக்திகளின் விருப்பமாக இருந்தாலும் கூட, அதற்கான புறநிலைமைகளை கணித்தே அவர்கள் காய்களை நகர்த்துவர். புறநிலைமைகள் பெருமளவிற்கு சாதகமாக இருந்தால் ஒழிய அவர்களது தலையீடுகள் இடம்பெறுவதற்கான எந்தவொரு வாய்ப்புமில்லை. தற்போதுள்ள நிலவரத்தின்படி ஜனாதிபதி ராஜபக்‌ஷ தோல்வியுறுவதற்கான புறச் சூழல் திருப்திகரமாக இருக்கின்றதா என்பதே கேள்வி! ஒரு வேளை இந்திய – அமெரிக்க தரப்புகள் ஆட்சி மாற்றத்திற்கான திரைமறைவு பணிகளை செய்யுமாயின், நான் மேலே குறிப்பிட்ட கேள்விக்கு ஒரு தெளிவான பதில் அவர்களிடம் இருக்கின்றது என்றே பொருள். அவர்கள் ஆட்சி மாற்றத்தில் அக்கறை காட்டவில்லையாயின் அவர்களிடம் மேற்படி கேள்விக்கு திருப்திகரமான பதிலில்லை என்பதே பொருள் ஆகும். மேலும், பிறிதொரு கேள்வியையும் இந்த இடத்தில் கேட்க வேண்டியிருக்கிறது. இந்தியா மற்றும் அமெரிக்க தரப்புகள் ஆட்சி மாற்றம் குறித்து அக்கறைகொள்வதற்கான தேவைப்பாடு உண்மையிலேயே இருக்கின்றதா?

வெளித் தோற்றத்தில் பார்த்தால் இருக்கிறது என்னும் பதில் சரியானது. விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தம் நிறைவுற்றதைத் தொடர்ந்து அதுவரை மிகவும் சுமூகமாக இருந்த இலங்கை – அமெரிக்க உறவில் திடீரென்று விரிசல்கள் ஏற்பட்டன. இந்த விரிசல்களுக்கான காரணமாக இலங்கையின் மனித உரிமைகள் நிலவரம் ஒரு காரணமாக கூறப்பட்டாலும் கூட அது மட்டும் ஒரு காரணமாக இருக்க வாய்ப்பில்லை. இந்த பின்னணியில்தான் அமெரிக்கா இலங்கையின் மீதான சர்வதேச அழுத்தத்தை ஊக்குவித்தது. அதன் விளைவு ஜ.நா. மனித உரிமைகள் பேரவை இலங்கையின் மீது விசாரணை மேற்கொள்வது வரையில் நீண்டிருக்கின்றது. இந்த பின்னணியில் நோக்கினால், அமெரிக்கா இந்த ஆட்சியை விரும்பவில்லை, அதனால் இதனை மாற்றியமைப்பதே உகந்தது. ஆனால், அமெரிக்க அழுத்தத்தின் பின்னால் பிறிதொரு நிகழ்சிநிரல் இருக்குமாயின் இந்த ஆட்சி அல்லது இந்த ஆட்சியின் குணாம்சத்தை பிரதிபலிப்பவர்கள் அதிகாரத்தில் இருந்தால்தானே தங்களுடைய நீண்டகால நோக்கத்தை நிறைவு செய்துகொள்ளலாம். இப்படியும் யோசிக்க வாய்ப்புண்டு. ஏனெனில், பலம்பொருந்திய சக்திகளின் அழுத்தங்களை வெறும் உள்நாட்டு விவகாரங்களாக மட்டும் சுருக்கிச் சிந்திக்கப் பழகியவர்களுக்கு, நிகழும் அனைத்தும் தமிழர்களை கருத்தில்கொண்டு நிகழ்வதான ஒரு மலிவான தோற்றமே தெரியும்.

அமெரிக்காவின் அணுகுமுறையை இவ்வாறு மதிப்பிடுவதானால், இந்தியாவின் ஆர்வங்களை எப்படி பாக்கலாம் என்னும் கேள்வியும் எழுகிறது. இந்தியாவில் தற்போது ஆட்சியில் இருக்கின்ற பா.ஜ.க. அரசு இலங்கையில் ஆட்சி மாற்றமொன்றை ஆதரிக்கின்றதா என்பதில் சந்தேகமே நிலவுகிறது. பெய்ஜிங் – கொழும்பு நெருக்கத்தை கருத்தில் கொண்டு சிந்திக்கும் சிலர், இந்தியாவும் ஆட்சி மாற்றத்தையே விரும்பும் என்கின்றனர். அண்மையில் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சம்பந்தனுடன் மந்திராலோசனையில் ஈடுபட்டிருந்த இந்திய தூதுவர், தேர்தல் தொடர்பில் நிதானமான முடிவை எடுக்குமாறு வலியுறுத்தியதாகவும் தகவல். எனினும், அங்கு பேசப்பட்ட விடயங்கள் பெருமளவிற்கு சம்பந்தனால் கூட்டமைப்பின் ஏனைய தலைவர்களுடன் இதுவரை பகிரப்படவில்லை. சீனாவின் செல்வாக்கை தடுத்தல் என்னும் ஒரு தனி விடயத்தை அடிப்படையாகக் கொண்டு சிந்தித்தால் ஆட்சி மாற்றம் இந்தியாவிற்கு உவப்பான ஒன்றே! ஆனால், புதிதாக வரும் அரசால் சீனாவின் செல்வாக்கை தடுத்து நிறுத்த முடியுமா அல்லது நிலைமைகள் மேலும் மோசமடையக் கூடிய வாய்ப்பு ஏற்படுமா? இப்படியொரு கணக்கின் ஊடாகவே இந்தியா ஆட்சி மாற்றத்தை உற்று நோக்கும்.

ஆனால், ஜக்கிய தேசியக் கட்சியை சேர்ந்தவர்கள் அண்மைக் காலமாக சீனாவை இலக்கு வைத்து தங்களின் அபிப்பிராயங்களை வெளியிட்டுவருவது தற்செயலான கருத்துக்கள் அல்ல. சில தினங்களுக்கு முன்னர் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனும் சீன – இலங்கை உறவை முன்னிலைப்படுத்தி நாடாமன்றத்தில் பேசியிருந்தார். இங்கு பேசிய சம்பந்தன், அணிசாரா கொள்கை என்பதே எங்களது வெளிவிவகாரக் கொள்கையின் மைல்கல்லாகும். ஆனால், இலங்கை தற்போது அதலிருந்து விலகிச் சென்றுகொண்டிருக்கிறது என்று குறிப்பிட்டிருந்தார். அதாவது, பெய்ஜிங் – கொழும்பு நெருக்கத்தால் இலங்கையின் அணிசாரா கொள்கை கேள்விக்குள்ளாவிட்டது என்பதே சம்பந்தனின் கணிப்பு. சம்பந்தன் சீனா தொடர்பில் பேசியமையானது தற்செயலான ஒன்றல்ல. மஹிந்த ராஜபக்‌ஷ தொடர்ந்தும் ஆட்சியில் இருந்தால் சீன – இலங்கை உறவு மேலும் வலுவடைந்து, இப்பிராந்தியத்தில் அது பதற்றங்களை ஏற்படுத்தும் என்னும் தொனியே சம்பந்தனின் பேச்சின் பூடக செய்தியாகும். ஜக்கிய தேசியக் கட்சியும், சம்பந்தனும் சீனா தொடர்பில் ஒரே குரலில் பேசுவது, நடைபெறவுள்ள தேர்தலை கருத்தில் கொண்டுதான் என்பதை விளங்கிக்கொள்ள சிரமப்பட வேண்டியதில்லை. ஆனால், இவ்வாறு மறைபொருளாக ஆட்சி மாற்றத்தின் தேவை குறித்து பேசும் சம்பந்தன், பகிரங்கமாக தேர்தல் தொடர்பில் இதுவரை எந்தவொரு கருத்தையும் வெளிப்படுத்தவில்லை. பொதுவாக அவரிடம் ஒரு தயக்கமே காணப்படுகிறது. ஆட்சி மாற்றத்திற்கான சாத்தியப்பாடு தொடர்பில் நிலவும் சந்தேகமே இதற்கு காணரமாகும். அதாவது, கூட்டமைப்பிற்கு ஆட்சி மாற்றம் விருப்பமானதுதான். ஆனால், அது ஒரு விசப்பரீட்சையாகிவிடுமோ என்னும் அச்சமும் நிலவுவதாகவே தெரிகிறது.

இத்தகையதொரு கண்ணோட்டமே இந்திய மற்றும் அமெரிக்க தரப்பினர் மத்தியிலும் இருக்கக்கூடும். இலங்கையை தங்களுடைய மூலோபாய நலன்களின் வழியாக நோக்கும் அனைத்து தரப்பினருக்கும் ஆட்சி மாற்றம் உவப்பான ஒன்றாகவே இருக்கலாம் என்பது பொது புரிதல். ஆனால், அது நிகழ்வதற்கான வாய்பில்லாதபோது வெல்லக்கூடிய ஒருவருடன், மேலும் நிலைமைகள் மோசமடையாத வகையில் உறவை பேணிக்கொள்ளவே அனைத்து தரப்பினரும் முயல்வர். ஒரு பலம் வாய்ந்த நாட்டின் தூதரகத்தை சேர்ந்த அதிகாரி ஒருவர் சமீபத்தில் கூட்டமைப்பின் தலைவர் ஒருவரை சந்தித்து உரையாடிக் கொண்டிருந்த போது இவ்வாறு கூறியிருக்கிறார். “ஆட்சி மாற்றம் தொடர்பில் நாங்கள் அதிகம் அலட்டிக் கொள்ளவில்லை. மாற்றங்கள் எதுவாக இருக்கும் என்பதைவிடவும் இருப்பர் எவரோ, அவர் எங்களுடைய தேவைகளுடன் இணங்கிப் போனால் சரி. ஆட்சி தொடர்பில் எங்களுடைய பார்வை இந்த அடிப்படையில்தான் இருக்கும். ஆனால், உள்ளூரில் இருக்கின்ற நீங்கள்தான் எவர் இருந்தால் உங்களுடைய விவகாரங்களை கையாளுவது இலகுவானது என்பதை கருத்தில்கொண்டு சிந்திக்க வேண்டும் என்றவாறு குறிப்பிட்டிருக்கின்றார். உண்மையில் இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலை இந்திய மற்றும் அமெரிக்கத் தரப்புகள் இத்தகையதொரு கண்ணோட்டத்தில்தான் பார்ப்பதாகத் தெரிகிறது. அவர்களின் உண்மையான ஈடுபாடு எதுவாக இருப்பினும் கூட, ஆட்சியில் எவர் இருந்தாலும், அவருடன் இணைந்து தங்களின் நலன்களை வெற்றிகொள்வதற்கு ஏற்றவாறான முடிவுகளையே எடுப்பர். பொதுவாக பலம்பொருந்திய சக்திகள் தங்களின் தலையீட்டால் நிச்சயம் தேர்தலின் முடிவை மாற்றலாம் என்று திட்டவட்டமாக கணித்தாலன்றி, எத்தகையதொரு தலையீட்டையும் செய்யார். இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலிலும் இந்திய மற்றும் அமெரிக்க தரப்பினரின் தலையீடு இவ்வாறானதொரு பின்புலத்தில்தான் திட்டமிடப்படும். தற்போதுள்ள நிலவரத்தின்படி இந்தியா மற்றும் அமெரிக்கத் தரப்புகள் தேர்தல் தொடர்பில் வெறும் அவதானங்களை செலுத்தக் கூடிய நிலைமையே காணப்படுகிறது.

தினக்குரல் பத்திரிகைக்காக யதீந்திரா எழுதிய கட்டுரை இங்கு தரப்பட்டுள்ளது.