படம் | Reuters, Theatlantic/infocus
உலகின் பல பாகங்களிலுமிருந்து மக்கள் ஆவலுடன் நோக்கிய ஸ்கொட்லாந்தின் தனிநாட்டுக்கான பொதுசன வாக்கெடுப்பு கடந்த வாரம் நடந்து, அது ஐக்கிய இராச்சியத்துடன் தொடர்ந்தும் இணைந்திருக்கும் என்னும் மக்கள் தீர்ப்புடன் முடிவடைந்திருக்கின்றது. கிட்டத்தட்ட 85 வீதம் வாக்காளர்கள் பங்கு பற்றிய இந்த சாதனைத் தேர்தலில், 44.5 வீதம் மக்கள் பிரிவிற்கு ஆதரவாகவும், கிட்டத்தட்ட 55 வீதமானோர் ஐக்கிய இராச்சியத்துடன் இணைந்திருப்பதற்கு ஆதரவாகவும் வாக்களித்திருக்கிறார்கள். 16 வயதுள்ளவர்களும் வாக்களிக்கலாம் என்கின்ற விதிமுறை இங்கு அமுலுக்கு வந்திருந்ததனாலே இளைஞர்களின் வாக்குகளும் கணிசமாகப் போடப்பட்டன. இந்த முடிவின் சரி பிழைகள் ஒருபுறமிருக்க, இத்தேர்தல் ஸ்கொட்லாந்து மக்கள் மத்தியிலும், இங்கிலாந்து வேல்ஸ் மற்றும் ஸ்கொட்லாந்தியர் அதிகமாக வாழும் அமெரிக்காவிலும்கூட ஒரு புதிய அரசியல் விழிப்புணர்வுக்கு இட்டுச்சென்றிருக்கின்றது என்றால் அது மிகையாகாது. தேர்தல் பிரசாரங்கள் நடந்து கொண்டிருக்கும்போது அதுவரை தூங்கிக் கொண்டிருந்த ஸ்கொட்லாந்தியர் விழித்துக்கொண்டது போல இருந்தது. அங்கு முன்னெப்போதும் கண்டிராத அளவுக்கு அரசியல் விவாதங்களும் சந்திப்புக்களும் ஊர்வலங்களும் நடந்தேறின. பஸ்ஸுக்கு நின்று கொண்டிருந்தவர்கள் பஸ் நிறுத்தத்தில் விவாதித்தார்கள். ‘பப்’புக்கு பியர் குடிக்கப் போனவர்கள் அங்கும் கூடி நின்று வாதம் செய்தார்கள். கடைகளுக்கு பொருட்கள் வாங்கச் சென்றவர்கள் கடைக்காரர்களுடனும் தங்களுக்குள்ளும் அங்கு நின்று கொண்டு வாதம் செய்தார்கள். அலுவலகங்களில் வீடுகளில் என்று எங்கும் எங்கும் ஆமா, இல்லையா என்கின்ற கேள்விகளை ஸ்கொட்லாந்தியர்கள் புரட்டிப் புரட்டிப் போட்டார்கள். ஆனால், அது மட்டுமல்ல, இத்தேர்தலில் நடந்த சுவாரசியங்கள்.
தேர்தல் பிரசாசரத்தின் கடைசி மாதத்தில் ‘ஆம்’, அதாவது தனிநாடு என்கின்ற அபிப்பிராயம் சிறிது பிரபலமாக வருகின்றது என்றவுடன் உலகின் பாரிய சக்திகள் அதற்கெதிராகக் குதித்தெழும்பிய விதம்தான் உண்மையில் அரசியல் அவதானிகளுக்கெல்லாம் மிக வினோதமாக இருந்தது. ஐரோப்பாவிலிருந்தும் அமெரிக்காவிலிருந்தும் அந்தந்த அரசுகளுடன் இணைந்து பல்தேசியக் கம்பனிகளும் சர்வதேச வங்கிகளும் பிரிவினையைப் பற்றிய ஒரு பயப் பிராந்தியை உருவாக்க ஆரம்பித்து விட்டன. சர்வதேச வங்கிகளும் பல்தேசியக் கம்பனிகளும் ஸ்கொட்லாந்து சுதந்திரப் பிரகடனம் செய்தால் தாம் நாட்டை விட்டு வெளியேறி விடுவோம் என்று பயமுறுத்தின. ஒரு ஜேர்மன் வங்கியானது, சுதந்திர ஸ்கொட்லாந்தில் 1920களில் இருந்தது போன்ற தங்கத்தினை நாணயத் தரமாக வைக்கும் முறை ஏற்படும் என்றும் – அதனால் 1930களில் வந்தது போன்ற பாரிய பொருளாதார சரிவு (The great depression) எற்படலாம் என்றும் – கோரும் ஓர் ஆய்வறிக்கையை வெளியிட்டது. இதனிலும்விட பைத்தியக்காரத்தனமாக நிலைமை போகமுடியாது. ஆனால், அப்படித்தான் சென்றது. ஸ்கொட்லாந்தின் மிகப்பெரிய தொழில்துறையான விஸ்கி உற்பத்தி வீழ்ந்துவிடும் என்று ஆருடம் கூறியவர்கள் எத்தனை பேர். உலக வங்கியின் தலைவர் ரொபேர்ட் (ண)ஸொல்லிக், பிரிவினையானது ஸ்கொட்லாந்துக்கு நன்மையே பயக்காது என்று போதித்தார். ஐரோப்பிய யூனியனின் தலைவர் ஐக்கிய இராச்சியம் அதன் உறுப்பினராக இருப்பதற்கென்ன, ஆனால் அதற்காக சுதந்திர ஸ்கொட்லாந்து தன்பாட்டிலேயே உறுப்பினராக முடியாது என்று அதன் உறுப்புரிமை லண்டன் அரசியல் தலைமைத்துவத்தினால்தான் தீர்மானிக்கப்படலாம் எனச் சொல்லாமல் சொன்னார். ஸ்கொட்லாந்து பிரிந்தால் இங்கிலாந்தின் பவுண்ட் நாணயத்தை உபயோகிக்க முடியாது என்று ஏற்கனவே இங்கிலாந்து அறிவித்திருந்தது. அப்போ யூரோவும் இல்லாவிட்டால் அவர்கள் என்னதான் செய்வது? பிரதமர் டேவிட் கமரூன் தயவுசெய்து பிரியாதீர்கள் என ஸ்கொட்லாந்து மக்களை வேண்டி அழவும் தொடங்கி விட்டார்.
சோவியத் யூனியன், தென் சூடான், கிழக்கு திமோர் என்று உலகில் பிரிவினைகள் நடந்தேறிக் கொண்டுதானிருக்கின்றன. ஸ்கொட்லாந்தின் விடயத்தில் மட்டும் இவர்களெல்லோரும் கலையாடியது ஏன்? அபிவிருத்தியடைந்த மேற்கு நாடுகளில் ஒன்று மிக அமைதியாக தனிநாட்டுப் பிரகடனத்தை மேற்கொண்டால் அது உலகெங்கும் எதிரொலிக்கும் எனப் பயந்தனர். இன்று தங்களுக்கு வேறு வழியில்லையென்று அமைதி காத்திருக்கும் ஒடுக்கப்பட்ட சிறுபான்மைத் தேசியங்களெல்லாம் விழித்தெழுந்து தமக்கும் தமக்கும் என்று கேட்குமே. ஸ்கொட்லாந்து பிரிந்தால் ஐக்கிய இராச்சியத்தில் அது இணைந்திருக்கும்போது நடந்தது போல இனியும் அமெரிக்காவின் ‘உஞ்சு உஞ்சு’ நாய்க்குட்டியாக இழுபடாது. ஈராக் யுத்தத்தையும் அணுவாயுத விருத்தியையும் மூர்க்கமாக எதிர்த்தவர்கள் ஸ்கொட்லாந்தியர்கள். இனி தனியே இங்கிலாந்துதான் அமெரிக்காவின் கைப்பொம்மையாக முடியும். எல்லாவற்றுக்கும் மேலாக, சுதந்திரமாக இயங்குவதால் ஸ்கொட்லாந்து இன்னும் அபிவிருத்தியடைந்து காட்டிவிடும். வேறு வேறு அரசியல் சிக்கல்கள் இருப்பதனால் பிரிவினையால் எற்படும் அபிவிருத்திப் போக்குகளை இவ்வளவு தெளிவாக பிரிந்த எந்த மூன்றாம் உலக நாடும் காட்ட முடியாது. இதனைப் பற்றி தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்னர் ஸ்கான்டினேவிய நாடுகளின் கலைஞர்களும், எழுத்தாளர்களும் ஒரு திறந்த மடலை ஸ்கொட்லாந்து மக்களுக்கு எழுதியது ஹெரால்ட் பத்திரிகையில் பிரசுரமாகியது. அதில் 1905ஆம் ஆண்டு நோர்வே ஸ்வீடனிலிருந்து பிரியும் தீர்மானத்தை மேற்கொண்டபோது இவ்வாறுதான் பயப்பிராந்தியை உண்டாக்கினர் என்றும் – ஆனால் பிரிந்த பின்னர் இருநாடுகளும் ஜனநாயக வழிகளில் இன்னும் முன்னேற்றகரமாகவும், அபிவிருத்தியில் இன்னும் செழிப்பாகவும் வளர்ந்திருக்கின்றன என்றும் – விளக்கினர். ஸ்கொட் மக்கள் பயமுறுத்தல்களுக்கு அடிபணியாது பிரிவினைக்கு ஆதரவளிக்க வேண்டும் என்பதே இவர்களுடைய கோரிக்கையாக இருந்தது.
முதலில் பிரிவினைக்கு ‘ஆம்’, ‘இல்லை’ என்கின்ற பதில்களுடன் அதிகூடிய அதிகாரப்பகிர்வு (Maximum Devolution) என்கின்ற விடயமும் வாக்குச் சீட்டில் இடம் பெறவேண்டும் என்கின்ற கோரிக்கையை ஸ்கொட் நாடாளுமன்றம் முன்வைத்ததாகவும் அதனை இங்கிலாந்து முற்றாக எதிர்த்தாகவும் கூறப்பட்டது. ‘ஆம்’, ‘இல்லை’ என்று வாக்களிப்பதை விட அதிகூடிய அதிகாரப் பகிர்வு மக்களுக்கு மிக இலகுவான பதிலாகும். அதுதான் அனேகமாக வெல்லும் என கண்ணை மூடிக்கொண்டு சொல்லி விடலாம். அப்படி வாக்களிக்கப்பட்டால் பின்பு அதிகூடிய அதிகாரப் பகிர்வினை அளிக்க வேண்டுமே. அதனால்தான், லண்டன் இதனை நிராகரித்திருக்க வேண்டும். ஆனால், தேர்தல் பிரசாரங்கள் சூடுபிடிக்க ஆரம்பித்தவுடன் அதிகூடிய அதிகாரப் பகிர்வினை வாக்குறுதியாக டேவிட் கமரூன் அளித்து விட்டார். வரி வசூல் அதிகாரங்களை பாரிய அளவில் ஸ்கொட் மக்களுக்கு தருவதாகவும் அவர் பிரகடனம் செய்து விட்டார். அத்துடன், தொழில்துறை விருத்திக்கான முதலீடுகளும் தேசிய சுகாதார சேவை தரும் சலுகைகளும் விரிவாக்கப்படும் என்றும் எத்தனையோ வாக்குறுதிகள். பிரிவினைக் கோரிக்கை ஒரு மக்களின் பேரம்பேசும் தகுதியை அதிகரிக்கின்றது என்பது இதில் ஒரு பாடமாகின்றது. இதனைப் பார்த்த விட்டு, வேல்ஸ் அரசியல் கட்சிகள், கோர்ன்வோலின் கோர்னிஷ் அரசியல் தலைவர்கள், ஏன் லண்டனின் மாநகரசபை உறுப்பினர்கள் எல்லோருமே தங்களுக்கும் அதிகூடிய அதிகாரப் பகிர்வு வேண்டும் என்று கோரிக்கைகளை முன்வைக்க ஆரம்பித்திருக்கின்றனர். இவ்வாறு தேசிய இனங்கள் தொடங்கி உள்ளூராட்சி மன்றங்கள் வரை அதிகாரப்பகிர்வின் நன்மைகள் உணரப்பட்டு வருகின்றன.
ஸ்கொட்லாந்து மக்களின் பிரிவினைக் கோரிக்கை தேர்தலில் தோல்வியடைந்திருக்கலாம். ஆனால், அக்கோரிக்கை இன்னமும் உயிரோடு இருக்கத்தான் போகின்றது. இந்தளவு அச்சுறுத்தலகள் மத்தியிலும் 45 வீதமான மக்கள் பிரிவினைக்கு ஆதரவாக வாக்களித்திருப்பதே அதற்கு சாட்சியாகும். இத்தேர்தல் உலகெங்கும் ஓர் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கின்றது என்பதை மறுக்க முடியாது. அது பல பாடங்களையும் அரசியல் விழிப்புணர்வினையும் மக்களுக்கு ஊட்டியிருக்கின்றது.
முதலாவதாக, பிரிவினைக்கு இப்போதைய உலகக் கட்டமைப்புக்களை (The Statuesque) நிலைநிறுத்தும் அரசியல் பொருளாதார சக்திகள் என்றுமே எதிர்ப்பாக இருக்கும் என்பது எமக்குப் பாடமாகின்றது. இரண்டாவதாக, சந்தைகளைத் தேடி உழைப்பாளிகளும் முதலீடுகளும் நாடு விட்டு நாடு பாயும் இந்த 21ஆம் நூற்றாண்டு யுகத்திலே ஒரு மத்தியப்படுத்தப்பட்ட அரசுதான் பொருளாதார அபிவிருத்தியைக் கொண்டு தரலாம் என்கின்ற பொய் உலக மக்கள் முன்னிலையில் நிரூபணம் ஆகிவிட்டது. பிரிவினைக்கு ஆதரவான ‘ஆம்’ வாக்குகள் தொழிலாள வர்க்கம் பெரும்பான்மையாக வாழும் கிளாஸ்கோவில் பெருவெற்றி பெற்றது. புரட்சிவாதி ட்ரொட்ஸ்கி அன்று கூறியது போலவே, “தேசிய உணர்வானது ஒடுக்கப்பட்ட தொழிலாள வர்க்கப் போராட்டத்தின் வெளிப்பூச்சு” என்பதை இது நிரூபித்தது எமது மூன்றாவது பாடமாகும்.
ஸ்கொட்லாந்தின் ஒரு பெண் தொழிலாளி பாதையோரத்தில் தான் பிரிவினைக்கு ஆதரவாக இருப்பதாக ஊடகங்களுக்குப் பேட்டி கொடுக்கின்றாள். ஏன் என்று அவளிடம் கேட்கப்பட்டவுடன், “உலகில் பணக்காரர் இன்னும் பணக்காரராகவும், ஏழைகள் இன்னும் கூட வறுமையிலும் வாடும் இந்த உலகக் கட்டமைப்பை மாற்றவேண்டும் என்பதால் அந்த அதிகார மையத்தை மாற்றுவதற்கு பிரிவினையை ஆதரிக்கின்றேன்” எனத் தெளிவாகப் பதில் அளிக்கின்றாள். இதிலிருந்து இந்த வாக்கெடுப்பு ஓர் இனத்தின் எதிர்காலத்தைப் பற்றியது என்பதைவிட மத்தியப்படுத்தப்பட்ட அரசுகளுக்கு எதிரான வாக்கெடுப்பாக இருந்ததை நாம் பார்க்கலாம். அரசியல் அதிகாரம் மத்தியப்படுத்தப்படுவதுதான் சமகாலப் பொருளாதார அநீதிகளுக்குக் காரணம் என மக்கள் உணர்ந்து விட்டார்கள். அவ்வளவு தூரத்திற்கு இந்தத் தேர்தல் மக்களை அரசியல்மயப்படுத்திவிட்டது. இதுவும்கூட ஐரோப்பாவின் ஆளும் வர்க்கங்களுக்கு பெரும் கவலையை அளித்துள்ளது.
இவ்வளவு பாடங்களையும் நாம் கற்றுக்கொண்டு சும்மா இருப்பதில் பலனில்லையே. ஒரு தேசிய விடுதலைப் போராட்டத்தின் முற்போக்கு அம்சங்களை உள்ளடக்கி அரசியல் மயப்படுத்தப்பட்ட போராட்டமாக அதனை இலங்கையில் முன்னெடுப்பதற்கு நாம் தயாராக உள்ளோமா என்பதுதான் கேள்வி.
தினக்குரல் பத்திரிகைக்காக சாந்தி சச்சிதானந்தம் எழுதிய கட்டுரை இங்கு தரப்பட்டுள்ளது.