படம் | Theatlantic

மயோசின் காலம். இற்றைக்கு ஏறக்குறைய பத்து மில்லியன் வருடங்களுக்கு முற்பட்டது. இக்காலத்திலும் இந்த உலகம் உருண்டது. புவிச்சரிதவியல் அடிப்படையில் இதுவொரு உற்பத்திக் காலம். இலகு பாறைகள், மண், மரம் முதலானவை கருக்கொண்டன. புவி அடுக்கமைவில் படைகளாயின. இப்போதைய இந்துக் கடலிலும், அது கக்கிய நிலத்திணிவுகளிலும் ஊர்வனவும், நகர்வனவும் அப்போதுதான் உருவாகத் தொடங்கியிருந்தன. மீன்கள், நத்தைகள், சங்குகள், சிப்பிகள் முதலான வன்ம உயிரிகள் பிரசவமாகிக்கொண்டிருந்தன. நெரிசலற்ற வாழ்க்கைத் தொகுதி சுவாரஷ்யமிக்கதாயிருந்தது. உயிரிகளின் குதூகலமான வாழ்க்கை, பல கலப்பு உயிர்களின் உருவாக்கத்திற்கு காரணமாகியது.

இந்தக் குதூகலமும் நீடித்திருக்கவில்லை. சில யுகங்களோடு தன்னை சுருக்கிக் கொண்டது. புவியைச் சுற்றியிருந்த கடல் நொதிக்கத் தொடங்கியது. அமிலங்களின் சேர்க்கையினால் நிரில் இருந்த இரசாயன மூலகங்கள் தமக்கிடையில் முள்ளிவாய்க்கால்களைச் சந்தித்தன. நீரில் நெருப்புண்டானது. வன்ம உயிரினங்களாலேயே வாழ முடியவில்லை. மொத்தமாய்ச் செத்துக் கரையொதுங்கின. கடல் சுத்தமாகிக் கொதித்தது. கரையொதுங்கிய சடலங்களின் படைகளால் கடலே மூடுண்டது.

கடல் மிதமாக உயிர்களைத் தின்றதன் விளைவை மிக விரைவாகவே சந்திக்க நேர்ந்தது. சடலங்களுக்குள் ஏற்பட்ட பங்கீட்டுப் பிணைப்புக்களால் மென்மைப் பாறைகள் (சுண்ணாம்பு பாறைகள்) உருவாகின. பாறைகள் நூறாண்டு போராடி ஒரு அங்குல மண்ணை படியச் செய்தன. நூற்றாண்டுகளின் பயணம் தொலைவாக, மண்படிவின் ஆழமும் அங்குலத்திலிருந்து அடிக்கும், அடியிலிருந்து மீற்றர்களுக்கும், அதிலிருந்து கிலோமீற்றர்களுக்கும் படர்ந்தது. இந்த யுகப்பயணத்தில் கடல் அடங்கிக் குளிர்ந்து உயிர்களை வாழ அனுமதித்தது.

இப்படியே வைரமாய்கிடந்த இலங்கைக் குன்றின் வடகரைப் பாகம் நிலம் பெற்றது. சில நூற்றாண்டுகளில் இந்த நிலம் பூப்பெய்தியது. அதற்குக் குழந்தைகள் தேவைப்பட்டன.

மறுகரை நிலத்தில் பிறந்திருந்த மரக் குழந்தைகள் தம் ஆற்றில் விதையைக் கொட்டின. ஆறு கடலுள் சேர்த்தது. கடல் வட கரைக்கு விதைகளைக் கொண்டு வந்துவிட்டது. பருவகாலத்தில் ஓய்வெடுக்க வரும் பறவைகளும் சுண்டிக்குளத்தில் விதை எச்சங்களை கழித்தன. இந்த இருவழிப் புலப்பெயர்வுகளில் ஏதாவதொன்றில்தான் வேப்ப மரமும் அரச மரமும் இக்கரையை அடைந்தன. இந்தப் பிராந்தியத்தின் வறண்ட நிலம் பறட்டை மரங்களின் செழிப்புக்கு வழிவிடவேயில்லை. மனிதர்களைக் காணாத ஏனைய மரங்களைப் போலவே இந்த இரு மரங்களும் வாழப் பழகியிருந்தன.

இவ்வாறு வடக்கில் மரங்கள் வாழத்தொடங்கின. தெற்கில் மனிதன் வாழத்தொடங்கினான். இன்றிலிருந்து ஒரு லட்சத்து இருபத்தையாயிரம் ஆண்டுகளுக்கு முன் அது நேர்ந்தது. மனித நிலையை அண்மிக்காத அந்தக் கூட்டம் புல்மோட்டை, மாங்குளம், இரணைமடு வரை தனது வாழ்வு அலையை நீளப்படுத்தியிருந்தது. அதற்கு அப்பாலான கட்டுப்பாடற்ற பகுதிக்குள் நுழைய இயற்கை அனுமதி அவர்களுக்குக் கிடைக்கவில்லை. பாதுகாப்பான மலை அல்லது குகை, பழம் மற்றும் கிழங்கு தரும் தாவரங்கள், இலகுவில் வேட்டையாடக் கூடிய மிருகங்கள் ஏதுமற்ற நிலம் அந்த மக்களைத் தள்ளிவைத்துவிட்டது. கி.மு 800ஆம் ஆண்டு வரை இந்த நிலைமைதான். ஆனால், இயற்கை மாற்றங்களைக் கண்டது. அதனை வரவேற்றது; ஏற்றுக் கொண்டது. அதன் விளைவாய் நிலம் செழித்தது. மண் தண்மை அடைந்தது. இயற்கை நீர் நிலைகள் உண்டாகின. இலகு உயிரினங்களும், நீர் வாழ் உயிரினங்களும் பெருகின. இந்தக் காலத்துக்குப் பின்னர் எதேச்சயாகப் புகுந்த மனிதக் கூட்டம் இங்கேயே தங்கியது.

சூழல் மூளை விருத்தியைத் துரிதமாக்கியது. அது மாற்றுச் சிந்திப்பை அறிமுகப்படுத்தியது. வாழிடங்களை செயற்கையாய் அமைக்கக் கற்றனர். வாழ்வுக்கானவற்றை வனைந்து பயன்படுத்தினர். அனைத்திலும் அறிவும் செயற்கைத்தனமும் பிரயோகிக்கப்பட்ட காலத்தில், கடல் வழியான வழிகள் திறந்தன. மனிதர்கள் கடல் மீதேறி பயணிக்கப் பழகினர். தமிழக கரைகளிலிருந்து பயணப்பட்ட சனக்கூட்டம் இலங்கையின் வட நிலத்தில் குடியிருந்தவர்களோடு கலந்துகொண்டது. இரண்டின் கலப்பாலும் புதிய வகைப் பண்பாடு கருக் கொண்டது. வந்தவர்கள் வேப்ப மரத்தையும் அரச மரத்தையும் கற்பித்தனர். வாழ்விருத்தலை இந்த மரங்களோடு பிணைத்துக் கொண்டனர்.

அப்போதிருந்த உயிர்களும் இருத்தலுக்காகவே அனைத்தையும் செய்தன. உயிரை உருவாக்கவும், வளர்க்கவும், அதனைக் காக்கவும் இயற்கை மட்டுமே உதவக் கூடியதாக இருந்தது. இந்த மரங்கள் அதனை செய்வதற்காகக் குடிகளுக்கு அருகிலேயே நின்றன. குளமும், குடியும், அரச – வேப்ப மரங்களும் புராதன குடியிருக்கைகளின் அடையாளங்களாயின.

அரசு ஆணாக நின்று துணைபுரிந்தது. அரச பழங்கள் வீரியமிக்க இல்லறத்தை வழங்கின. களைப்பற்ற மனிதர்களைக் கருக்கொள்ள வைக்க அரச மரப் பாகங்கள் பயன்பட்டன. போதியளவு நோய்தீர்ப்பு மருந்தூட்டத்தை இது வழங்கியது. அரச மரத்தின் கீழ் உலாவும் காற்று கருப்பையை சுத்தப்படுத்தியது. ஆரோக்கியமிக்க சிசுக்கள் பெண்களின் வயிற்றில் முளைத்தன. ஊட்டமிக்க ஒட்சிசன் இதன் இலைகளில் இருந்து வெளியேறி மனநலத்தை வெண்மையாக்கியது. ஆன்மாவைப் பரவசமாக்கும் மையமாக அரச மரத்தடியை மதித்தனர். காலகதியில் உருவான அடிமுடியற்ற வழிபாட்டு மரபுகள் இந்த மரத்தின் கீழும் கடவுட் சிலைகளை இருத்தின. அரசடிக்கென அடையாளம் காணப்பட்ட கடவுள்கள் கோரும் வரத்தையளிப்பதில் எப்போதும் முன் நின்றனர். அரச மரம் மருத்துவ நிலையிலிருந்து சக்திமிக்க கடவுளாகியது. கட்டமைவுமிக்க வழிபாட்டு மரபுகளின் அறிமுகத்தோடு இது நிகழ்ந்தது.

வேம்பு பெண்ணாக நின்றது. இரவிலம் பகலிலும் ஆறுதலளித்தது. வேர்கள், இலைகள், குருத்துக்கள், பட்டை, பழம், விதை என அனைத்தும் மனித வாழ்வை உரமாக்கின. பருவ கால கொதிப்பு நோய் பலரைக் கொன்று தீர்த்தது. தாய்த் தெய்வம் குறை கண்டாளே இந்த நோய் ஏற்படுகின்றது என நம்பினர். அதனையே நோய்த்தீர்ப்புக்கும் அழைத்தனர். இலைகளைக் கொண்டு ஆடித் தீர்த்தனர். இவ்வாறாக வேம்பினடியிலும் தாய்த்தெய்வம் உறைந்தாள். மொழி மற்றும் வம்ச அடிப்படையில் அடையாளமாகிய இனங்கள் மத்தியிலும் வேம்புத் தெய்வம் செல்வாக்குப் பெற்றது.

இரு மரங்களும் பொதுமைப்படுத்தப்பட்ட தெய்வீக நிலையை அடைந்துவிட்ட காலம். மொழி வழி விருத்தி அரும்பத் தொடங்கியது. அந்தத் தருணத்தில் மரங்களுக்கிடையில் பிரிகோடொன்று ஆழமாகக் கிழிக்கப்பட்டது.

யோகி ஒருவன் அரசின் சக்தி உணர்ந்தான். வாழ்வொழுக்கக் கல்விக் கூடத்தை அதனடியில் அமைத்தான். தத்துவம் போதித்தான். தியானமியற்றினான். அதில் நின்று பிரகாசித்தான். அலைந்துழல்வு வாழ்க்கை மீதான கசப்பு, போதனைக்காரனுக்கான பக்தர்களைக் கூட்டியது. கூட்டத்தினரின் வாழ்க்கைக்குப் புதிய தத்துவத்தைக் காட்டினான். அவன் அதன் மடியில் மோட்சமும் கண்டான். அரசு, போதிமரமாகியது.

சம காலத்தில் பாவங்களால் மூழ்கிய மன்னனொருவன் தன் பேரரச விசாலத்துக்கு போதிமரச் சிந்தனையையும் பயன்படுத்திக் கொண்டான். போரில் களைத்தவன் போதிமரப் போதனையால் கண்டம் கடந்து ஆட்சிக் கிளை பரப்பினான். அரச மர கிளைகளோடு தூதர்களைத் திசையெட்டும் அனுப்பினான். ஒரு குழு கி.மு 3ஆம் நூற்றாண்டுப் பகுதியில் யாழ்ப்பாணக் கரையைத் தொட்டது. அத்தோடு வாழ்க்கைத் தத்துவம் அரசியலாகியது. வன்மம் மிக்க மதமானது.

வேம்பும் அரசும் பிரிக்கப்படாத காலமது. வாழ்தல் முறைகளில் தொய்வுகள் ஏற்பட்டிருந்தது. இந்த நிலைமை வந்தவர்களுக்கு சாதகமானது. வந்தவர்கள் கொண்டு வந்த புதியவைகள் இலகுவாக விற்பனையாகின. பண்பாட்டுச் சந்தை சூடுபிடித்தது. ஆனால், வலுமிக்க அதிகார மையம் அப்போதும் தெற்கு சார்ந்தே அமைந்திருந்ததால், புதியவைகள் அங்கேயே பெருமளவில் தங்கிவிட்டன. அரசு மேலும் தூய்மையானது. அது முளைத்த இடங்கள் புதிய கடவுளின் வாசனைப் பெற்றன. அரசியல் பூச்சுக்களால் அலங்கரிக்கப்பட்ட வரலாற்றால் அது மேலும் புனைவு நிலையை அடைந்தது. இந்தக் கட்டத்தில் அரச மரம் புதிய பண்பாட்டின் குறியீடு. ஆண் மரமும், பெண் மரமும் தனித்தனி தேசங்களுக்குரியனவாகின. ஏனெனில், வடக்கில் அரசமர பண்பாடு நீடித்திருக்கவில்லை. இந்தப் பிராந்தய இயற்கை நிலைமைகள், ஆணிவேரூன்றிய மூத்த பண்பாட்டின் தொடர்ச்சி, அது தமிழகத்தோடு பேணிய தொடர்புகள் போன்றன புதிய பண்பாட்டை நோக்கிய ஈர்ப்பை அகலிக்கவில்லை. கந்தரோடை, வல்லிபுரம் மற்றும் பெருநிலப்பரப்பின் சில மையங்களில் மட்டும் சில காலம் வாழ்ந்து விட்டு ஓய்ந்தது அரசமரப் பண்பாடு. சுதேச சனங்களுக்கு ஒத்துவராததை கைவிட்டு பழையதற்குத் திரும்பினர்.

தொடர்ந்து வந்த காலங்கள் இந்தத் தேசத்தில் மொழி அடிப்படையிலான இரண்டு இனக்குழும அடையாளத்தை வலுவாக்கியது. கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டோடு போதிமரச் சிந்தனை முற்றாக தெற்கின் பக்கம் சாய்ந்தது. வேம்படிச் சிந்தனை வடக்கிற்கு மட்டுமே உரியதானது. தெற்குவாசிகள் அரசை தம் பலம் கொண்டு புனிதமாக்கினர். புதிதாக்கினர். கடவுளின் தன்மையை அதிகரிக்கச் செய்தனர். அதற்காக அரசியலை அதன் பெயரால் மாற்றினர்.

ஆனால், வேம்பு சிறுத்த இனமொன்றின் அடையாளமாகியது. அதே புனிதத்தனத்தோடு ஆராதிக்கப்பட்டது. கடவுளுக்கு மட்டும் உரியதாக அதைக்கருதினர். கடவுளின் அறைக் கதவுகளுக்காக மட்டும் வேம்பு வெட்டப்பட்டது. மாமிச வாடை அந்தப்பக்கம் காட்டப்பட்டால் தெய்வக் குற்றம் எனப்பட்டது.

இடைப்பட்ட அரசியல் யுகங்களில் அரசை வழிபட்டவர்கள் சிறுத்த இனம் மீது சாவை அவிழ்த்துவிட்டனர். இதனால் இந்தப் பிராந்தியத்தவர் அரச மரத்தை வெறுத்தனர். பாதை தடைகள், பொருளாதாரத் தடைகள், வாழ்வை மூடிய போதெல்லாம் மருத்துவத் தாயாகினாள் வேம்பு. அருமருந்தான உணவானாள். தன் தோலையையும், குருதியையும், இலைகளையும், கனிகளையும் தன்னை நம்பியோர்க்குக் கொடுத்தாள் வேம்பு அன்னை.

2009ஆம் ஆண்டு வரையிலும் இவ்வாறுதான் சனங்கள் அதை மதித்தனர். பதுங்கு குழிகளுக்குள் வேப்பம் பட்டையை அவித்து குடித்து நோய்தீர்த்தனர். அதற்குள்ளேயே வேப்பமிலை மெத்தையில் உலர்ந்து கொதிப்பு நோயாளர்கள் சுகம் கண்டனர்.

இப்படியே ஒரு உச்சமான தருணத்தில் சிறுத்த சனங்களிடமிருந்த அனைத்தும் முடிந்தது. போரும் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது. அவர்கள் ஏதுமற்று மிஞ்சிய உயிர்த் துண்டுகளோடு நிலம் பெயர்ந்தனர். அதற்குப் பிறகு எல்லாவற்றையும் மறக்கும் யுகமொன்று ஏற்பட்டது. அனைத்து பழையனவற்றையும் புதிதாய் கண்டனர். மாற்றினர். மாற்றப்பட்டனர். பார்ப்பனவெல்லாம் விற்கத்தக்கது என்ற எண்ணம் மேலோங்கியது. குறைந்த விலையில் விரும்பப்பட்டவைகள் விற்பனையாகின. அவ்வாறானதொரு தருணத்தில் வேம்புவும் விற்பனையாகியது. புதுக்குடியிருப்பு, முள்ளியவளை பகுதிகளில் சாதாரணமான ஒரு வேம்பின் (50 வருடங்கள்) விலை பத்தாயிரம் ரூபாய்களுக்கு ஏலமிடப்பட்டது. தெற்கிலிருந்து வந்த வியாபாரிகள் அதன் ஆணிவேர் வரை கிளர்ந்து ஏற்றிப்போகின்றனர். வேம்பின் பலகை நல்ல வைரமாம்!

வேம்பிருந்த தடயங்கள் மண்ணால் நிரவப்படுகின்றன. புதிய மரங்கள் முளைக்கின்றன. அவற்றில் பிரதானமானது அரச மரம். முளைத்து மூன்றிலையான அரச மரம் கூட புனிதமாக அறிவிக்கப்பட்டாயிற்று. மரத்தைச்சூழ பரந்த நிலப்பரப்பு புனிதத்தின் சூனிய நிலமாக வரையறக்குப்படுகின்றது. சொந்தச் சனங்கள் அதற்குள் கால்பதிக்க அஞ்சுகின்றனர். புனிதத்தையும், கடவுள் தன்மையையும், அரசியலையும் கலந்து அரசமரத்தடிகள் எங்கனும் தென் பண்பாட்டின் பிரதிகளை அமைக்கின்றனர். அரச மரம் பரவலாக முளைக்கின்றது. அதனோடு இணைந்த இன்னபிறவும்…

வேம்பு விரைவாக அழிக்கப்பட்டு வருகின்றது.

ஜெரா