படம் | Paula Bronstein/Getty Images, Globalnews

பேரழிவுக்கு எங்களது இனம் உட்பட்டதாலோ என்னவோ எந்த நாட்டிலும் பேரழிவுக்கு உட்பட்ட இனம் எவ்வாறு மீண்டு எழுந்திருக்கின்றது என்பதை அவதானிப்பதில் எனக்கு விசேடமான ஆவல். இவ்வாறுதான் கம்போடியாவிற்குச் சென்றிருந்தபோதும் அதன் போராட்ட வரலாறுகள் பற்றியும், இப்போது அதன் நிலை பற்றியும் கற்றுக்கொள்ள ஆவலாக இருந்தேன். சோழர்களுடைய காலத்தில் தமிழ் நூல்களில் காம்போஜம் எனக் குறிப்பிடப்பட்ட நாடு இது. தென்கிழக்கு ஆசியாவிலேயே நவீன அரசியல் கட்டமைப்புக்களுடன் உருவான முதல் இராச்சியம். தமிழக அரசர்களினதும் சோழர்களுடையதும் செல்வாக்கு இடைக்காலங்களில் இங்கு மேலோங்கியிருந்தது. தமிழர்களுடன் உண்டான நெருங்கிய உறவினால் சைவர்களாக இவர்கள் வாழ்ந்த காலம் உண்டு. 10, 12ஆம் நூற்றாண்டுகளின் கலைப்பொருட்களில் ஏராளமான சிவலிங்கங்களையும், சிவன் மற்றும் காளி உருவச்சிலைகளையும் காணலாம். அவர்களுடைய இராஜாக்களின் பெயர்களும் ஜெயவர்மன், சூரியவர்மன் என இருக்கும். சோழர்களுடைய வீழ்ச்சிக்குப் பின்பு இதுவும் பெரும்பான்மை பௌத்த நாடாகியது. 15ஆம் நூற்றாண்டிற்குப் பிற்பட்ட காலங்களில் போர்த்துக்கேய, ஸ்பானிய பின்பு கடைசியில் பிரெஞ்சுக் காலனித்துவ ஆட்சிக்கு அடிமையானது.

1950களில் பிரெஞ்சுக் காலனித்துவ ஆட்சியின் கீழிருந்து சுதந்திரம் பெற்ற பின்னர் 1970இல்தான் புதிதாகப் பிரச்சினைகள் ஆரம்பித்தன. ஆட்சியிலிருந்த இளவரசர் நொரடம் சிஹானுக்கினைக் கவிழ்த்து விட்டு அமெரிக்கர்களின் உதவியுடன் ஜெனரல் லொன் நொல் இராணுவ ஆட்சியொன்றினை நிறுவினார். அயல் நாடான வியட்நாமைப் போலவே இங்கும் கம்போடியாவின் கம்யூனிஸ்ட் படைகள் கெமர் ரூச் (சிவப்பு கம்போடியர்கள்) என்கின்ற பெயரில் ஆட்சியைக் கைப்பற்றப் போராடிக்கொண்டிருந்தன. லொன் நொல் ஆட்சியைக் கைப்பற்றிய கையுடன் அமெரிக்கா இங்கும் குண்டு மழை பொழியத் தொடங்கியது. இதனால், கெமர் ரூச்சுக்கு மக்கள் ஆதரவு பெருகவே அது 1975ஆம் ஆண்டு ஆட்சியைக் கைப்பற்றியது. கெமர் ரூச்சின் தலைவர் பொல்பொட். இவர் பிரான்ஸில் கல்வி கற்றவர். அங்கிருக்கும்போது பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியின் அங்கத்தவராகி, 1950களில் கம்போடியா திரும்பியபொழுது அங்கும் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினராகினார். அதன் தலைவராக ஆகிய பின்னர் கெமர் ரூச்சினை ஸ்தாபித்தார். சீனாவில் மாவோசேதுங் கலாசாரப் புரட்சியினைச் செய்ததைக் கண்டு பிரமித்த இவர், அதிலும்விடச் சிறப்பாக வர்க்கபேதம் இல்லாதவொரு கம்போடியாவினை உருவாக்க வேண்டும் என்று கனவு கண்டார். அதற்கு அவர் கண்ட ஒரே வழி மத்தியதர வர்க்கத்தினையும் உயர் வர்க்கத்தினையும் இல்லாதொழிப்பதாகும். காசுப் பாவனையை ஒழித்து, தனியார் சொத்துக்களை இல்லாமற் செய்து, வர்த்தக ஸ்தலங்களையும், பாடசாலைகளையும் மூடி நகர்ப்புற மக்களையெல்லாம் கிராமப்புறங்களுக்கு ஏவினார். பேராசிரியரோ, கலைஞரோ, வைத்தியரோ, பொறியியலாளரோ சகலரும் விவசாயிகளாக்கப்பட்டனர். அரசே எல்லா மக்களுக்கும் உடை, உணவு ஈந்தது.

அரசுதான் சகல மக்களினதும் அடிப்படைத் தேவைகளைப் பார்த்துவிட வேண்டுமென்றால் என்ன நடக்கும்? எங்கும் உணவுத் தட்டுப்பாடு. மக்கள் பட்டினியினாலும், நோயினாலும், கடும் உழைப்பினைத் தாங்க முடியாததனாலும் இறந்தனர். இந்தக் கருத்தியலுக்கு அவர்கள் ஆட்சேபணை தெரிவிப்பவர்களாகவும் மாறினர். இதனால், வதை முகாம்களும் கொலைக்களங்களும் திறக்கப்பட்டன. குறிப்பாக, படித்த கல்விமான்கள் கொலை செய்யப்பட்டனர். புரட்சியின் எதிரிகள் இனங்காணப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டு அழிக்கப்பட்டனர். இந்தப் அழிவுப் புரட்சியில் எதிரிகளின் மீது விதிக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களை வாசித்துப் பார்த்தால் மிகப் பரிதாபமாக இருக்கும். “காப்பகத்துக்குள் இருந்த நெல் மூட்டையைக் களவாடினர்”, “நட்டிருந்த தென்னம்பிள்ளைகளைக் கிண்டி தேங்காயைத் தின்றனர்”, “கரட், உருளைக்கிழங்குச் செடிகளைக் கிண்டிச் சாப்பிட்டதால் புரட்சி இட்ட அறுவடை இலக்குகளை எட்ட விடாமற் செய்தனர்” என்கின்றது போலச் செல்லும். வியட்நாம் படைகள் 1979ஆம் ஆண்டு கம்போடியாவை கெமர் ரூச்சிலிருந்து விடுவித்தபோது கிட்டத்தட்ட 2 மில்லியன் மக்கள், அதாவது, அந்நாட்டின் 25 வீதமான மக்கள் இறந்திருந்தனர். இவர்களில் அனேகர் இளைஞர்களாவர்.

இன்று, இது நடந்து முப்பது ஆண்டுகளுக்குப் பின்னர், கம்போடியாவின் 15 மில்லியன் மக்களில் 70 வீதமானோர் 30 வயதுக்கும் குறைந்த இளைஞர்கள் ஆவார்கள். வர்த்தக ஸ்தாபனங்களோ, சமூக நிறுவனங்களோ எங்கு சென்றாலும் அவர்கள்தான் மிக மிக உயர் பதவிகளில் இருப்பதைக் காணக்கூடியதாக இருக்கின்றது. அதனைவிடவும், எதிர்கால கம்போடியாவைப் பற்றிய அவர்களது தரிசனம் மிக இலட்சியபூர்வமாக இருப்பதைக் காணலாம். இலக்குகளை இடுவது மட்டுமன்றி, அவற்றை எட்டுவதற்கான மூலோபாயங்களைத் தீட்டுவதிலும் சிறந்த தலைமைத்துவத்தைக் காட்டுகின்றனர். ஜனநாயகக் கட்டமைப்பு இன்னமும் உறுதியாக நிலைநாட்டப்படாத நாடு அது. 1993இல்தான் முதன் முதலில் தேர்தல்கள் நடத்தப்பட்டன. அதில் முன்பு ஆட்சியிலிருந்த குழுவே வெற்றியீட்டியது, தொடாந்து இன்று வரை ஆட்சியிலிருந்து வருகின்றது. முப்பது ஆண்டுகால சர்வாதிகார ஆட்சியினைக் கவிழ்க்கவேண்டிய தேவை அவர்களுக்கு இருக்கின்றது. அங்கும் மனித உரிமை மீறல்களும் ஊடகங்கள் மீதான வாய்ப்பூட்டும் இருக்கவே செய்கின்றன. இவையெல்லாவற்றையும் மீறி இலங்கையிலிருந்து வந்த எங்களுடன் ஆழமான அரசியல் பேசினார்கள் அவர்கள். “கிராமப்புற மக்களோ அரசியல் என்ற சொல்லை நாம் சொன்னவுடன் நடுநடுங்குகிறார்கள்… அரசியல் என்று கூறாமல் அவர்களுடன் அரசியல் பேச வேண்டியிருக்கின்றது…” என்று சிரித்தபடி எம்மிடம் விளக்கினர்.

இவர்களுடைய தலைமைத்துவத்தின் பண்புகளை அவர்களின் அரசு சாரா நிறுவனங்களை அவர்கள் நடத்தும் விதத்தில் கண்டோம். “வெளிப்படைத்தன்மை, கணக்குக் காட்டும் இயல்பு இவையெல்லாவற்றையும் அரசிடம் நாம் கோருகின்றோம் என்றால் முதலில் அது எங்களிடம் இருக்க வேண்டும். எனவேதான் சிவில் சமூக நிறுவனங்கள் முறையாக வெளிப்படைத் தன்மையுடனும் நேர்மையுடனும் இயங்குவதற்காக அவற்றுக்கு திறமைச் சான்றிதழ் வழங்கும் நடைமுறையை ஏற்படுத்தியிருக்கின்றோம்” என்றார்கள்.

உண்மைதான். இதனைத்தானே எமது தமிழ்க் கட்சிகளிடமும் கேட்கின்றோம். சிங்கள அரசிடம் ஜனநாயக நடைமுறைகளைக் கோருகின்றோம் என்றால் முதலில் எங்களது கட்சிகள் வெளிப்படைத் தன்மையுடனும் ஜனநாயகப் பண்புகளுடனும் நடக்க வேண்டுமல்லவா? இல்லாவிட்டால் எமது கோரிக்கைகளை வைப்பதற்கான தார்மீக உரிமையை நாம் இழந்து விடுகின்றோம். கம்போடியாவின் அரசு சாரா நிறுவனங்கள் தமது நற்பண்புச்சான்றிதழைப் பெறுவதற்கு விண்ணப்பிக்கவென ஒரு நிறுவனம் உண்டு. இது, விண்ணப்பிக்கும் ஒவ்வொரு நிறுவனத்தினதும் பணிப்பாளர் சபையைக் கண்காணிக்கின்றது. அதில் நிறுவனத்தின் சகல தேவைகளுக்குமான நிபுணத்துவம் உள்ளவர்கள் அங்கத்துவம் வகிக்கின்றார்களா, அவர்கள் விதிமுறைகளின்படி தீர்மானங்களை எடுகின்றார்களாவென ஆராய்கின்றது. நிறுவனத் தலைமைகளின் உறவினர்கள் பணியில் அமர்த்தப்பட்டிருக்கும் சூழ்நிலையில் ஊழல் நடைபெறுகின்றதாவெனப் பார்க்கின்றது. அதன் பணியாளர்களுக்கு சட்ட நடைமுறைக்கு ஏற்ப சம்பளம் வழங்கப்படுகின்றதா, அவர்களுடைய குறைகளை நிவர்த்தி செய்யும் பொறிமுறைகள் இருக்கின்றனவா என்றெல்லாம் பார்க்கின்றது. களத்தில் அதனுடைய திட்டச் செயற்பாடுகள் பயனுறுதி உள்ளவையாக இருக்கின்றனவா என்று கூட ஆய்வு செய்கின்றது. நாம் சாதாரணமாகச் செய்வதுபோல வெறுமனே கணக்காய்வு நடவடிக்கையாக இல்லாமல் சமூக ஆய்வு நடவடிக்கையாகவும் இதனை மேற்கொள்ளுகின்றதனால் இவர்கள் வழங்கும் சான்றிதழ் ஒரு நிறுவனத்தினை சகல அம்சங்களின் சிறப்புக்களையும் எடுத்தியம்புவதாக இருக்கின்றது. நாம் சென்ற இன்னொரு நிறுவனத்தின் முன்னறையில் இந்த நற்பண்புச் சான்றிதழ் பெருமையுடன் கண்ணாடி பிரேமில் இட்டுக் காட்சிப்படுத்தப்பட்டதையும் பார்த்தோம்.

சமூக நிறுவனங்களின் இந்தத் தலைமைத்துவப் பண்பு, அவற்றுடைய திட்டச் செயற்பாடுகளிலும் அவதானிக்கக்கூடியதாக இருந்தது. அவை ஒன்றிணைந்து வலையமைப்புக்களாயும், ஒன்றியங்களாயும் இயங்கி நாட்டில் நடக்கும் சகல அபிவிருத்தித் திட்டங்களையும் விமர்சனக் கண்ணோட்டத்தில் நோக்கி அரச கொள்கைகளை மாற்றுவதற்கான அழுத்தக் குழுக்களாக இயங்குகின்றனர். தேசிய வரவு – செலவுத் திட்டமா, பெரிய அணைக்கட்டு அபிவிருத்தியா, தொழில் ஸ்தலங்களின் நிர்மாணமா, எல்லாமே ஆய்வுக்குட்படுத்தப்படுகின்றன. அவற்றில் மூலதனம் இடும் வெளிநாட்டுக் கம்பனிகளையும் குறிப்பாக சீனக்கம்பனிகளையும் அணுகி தங்களது கருத்துக்களைக் கூறி அவற்றின் கொள்கைகளை மாற்றுவதற்கு இவை தவறுவதில்லை. சகல நிறுவனங்களிலும் பால்நிலைக் கண்ணோட்டத்தினை அவற்றின் பிரதான நீருற்றில் இணைத்து விடுவதற்காகவே ஒரு நிறுவனம் இயங்குகின்றது. இது சகல அரச திணைக்களங்களுடனும் நெருங்கிய தொடர்புகளைப் பேணுவதனால் தனது இலக்குகளை எட்ட முயற்சிக்கின்றது. எங்கும் நீதியைப் பற்றியும் ஜனநாயகத்தைப் பற்றியும் தெளிவான பார்வையினை அவர்கள் வைத்திருந்ததை அவதானித்தோம்.

இவ்வளவு அழிவுகளுக்கும் சர்வாதிகார ஆட்சிகளுக்கும் பிறகு கம்போடிய இளைஞர்கள் இத்தனை தன்னம்பிக்கையுடனும் திறமையுடனும் முன்செல்ல முடியுமாயின், எமது இளைஞர்களுக்கும் அது இயலும். வெளிநாடு செல்லும் மோகத்தைக் கைவிட்டு தமது சமூக உயர்வுக்காகப் பணி செய்யும் போக்கில் அவர்களும் இப்படி ஆற்றல் பெறுவார்களா?

தினக்குரல் பத்திரிகைக்காக சாந்தி சச்சிதானந்தம் எழுதி கட்டுரை இங்கு தரப்பட்டுள்ளது.