படம் | AP Photo/Eranga Jayawardena, Groundviews
மாலை நேரமொன்றில் ஏழாம் வகுப்பு பிள்ளையளுக்கு E.C.Brewer எழுதிய Little things என்ற ஆங்கில கவிதையை விபரித்துக்கொண்டு இருந்தன். சிறுகச்சிறுக சேர்க்கப்படும் நேசமே பேரன்பை உருவாக்கும் என்பதை சொல்லிச்செல்லும் கவிதையது. அதன் இறுதி வரிகள் இவ்வாறு முடியும்.
“Little deeds of kindness
Little words of love
Make our earth an eaden
Like the heaven above”
என்று அமையும் வரிகளை கடக்கும்போது ஒரு பெடியன் அண்ணை, ஏடன் தோட்டம் எண்டா என்ன? எண்டு கேட்டான். (இருந்த மாணவர்கள் அனைவரும் இந்து சமூகத்தைச் சார்ந்தவர்கள்) கிறிஸ்தவ படி கடவுளின் மூத்த சிருஷ்டிப்புகள் பற்றியும் ஆதாம் – ஏவாள் பற்றியும், ஏடன் தோட்டம் பற்றியும் குறிப்பிட்டு, இறுதியாக இதெல்லாம் பைபிள்ள இருக்கு பிள்ளையள் எண்டு சொன்னன்.
பைபிள் என்றவுடன் பிள்ளையளின்ர முகம் சட்டெண்டு வாடிப்போனது. எனக்கு புரியவில்லை
என்ன நடந்தது பிள்ளையள்?
“எனக்கு கிறிஸ்ரியன்ஸ் பைபிள் எல்லாம் பிடிக்காது அண்ணா”
?????
“எனக்கும்தான் சேர் அந்த புத்தகங்களை பாக்கேக்க ஒரு மாதிரி இருக்கும்”
ஏன் பிள்ளையள் எல்லாம் மதம்தான், சொல்லுறது எல்லாம் ஒண்டதான் எண்டு தொடங்கி 30 நிமிசத்துக்கு மத நல்லிணக்கத்தை தலைப்பாகக் கொண்ட அட்வைஸ் (பிள்ளையளின்ர மொழில) கிளாஸ் எடுத்தன். பிள்ளையள் ஒவ்வொண்டும் தம் நிலை மாறவில்லை. குறிப்பிட்ட ஒரு மதத்தின் வேர் அந்த பிள்ளையளின்ர மனசில ஆழத்துக்கு புரையோடி இருக்கிறத என்னால புரிஞ்சு கொள்ள முடிஞ்சுது. கோவணம் கட்டிக்கொண்டு வயல்ல வேலை செய்த என் முப்பாட்டன் ஒருவன், முதல் முதல் வெள்ளைகாரன் ஒருவனை பார்த்த தோரணையில் என்னை பார்த்தபடி என் பிள்ளையள். நல்லவேளை கிளாஸ் முடிஞ்சுது. வேகமா வெளிய வந்திட்டன்.
மேற்படி நிகழ்வு வெறுமனே அந்த ஏழாம் வகுப்பு பிள்ளையளின்ர பிழையானதும் குறுகியதுமான மனப்பாங்கு பற்றிய பிரச்சினை அல்ல. ஒட்டு மொத்த தேசங்களின் தேசிய மற்றும் சர்வதேச சமூகப் பிரழ்வொன்றின் பிரச்சினையாகும்.
அண்மையில் இலங்கையின் அழுத்கமவில் தொடங்கி நாடுமுழுவதும் நடைபெற்ற மத வன்முறைகளுக்கும், ஆங்காங்கே அரச மரங்களின் நிழல்களில் வந்து அமரும் இளவரசர் சித்தார்த்தரின் செயல்களுக்கும் மேற்படி ஏழாம் வகுப்பு பிள்ளையளின் நிலைக்கும் நிரம்பவே தொடர்புண்டு.
இன்று இலங்கை தேசம் தென்னாசியாவிலேயே இலவச கல்வி மூலம் அதிகளவு படிப்பறிவு கொண்ட மக்களை உருவாக்கியுள்ளதாக ஒரு பக்கம் மார்தட்டுகிறது. குறிப்பாக இலங்கையில் வழங்கப்படும் ஆரம்பக்கல்வியின் தரம் மிக விதந்து உரைக்கப்படுகிறது. ஆனால், மேற்படி ஏழாம் வகுப்பு பிள்ளையளின் இனம் மற்றும் மதம் தொடர்பான குறுகிய எண்ணத்தையும் ஆரம்ப கல்வி முறைமையே சிருஷ்டிப்பதை எத்தனை பேர் உள்ளுணர்ந்துள்ளோம்.
முதலாம் ஆம் வகுப்பு தொடக்கம் ஒவ்வொரு பிள்ளைக்கும் சமயக்கல்வி என்பது அந்தப் பிள்ளை எந்தச் சமயத்தை சேர்ந்ததோ, அந்த சமயத்தினை பற்றிய கல்வியை மட்டுமே அரச பாடவிதானம் சொல்லிக் கொடுக்கிறது. இதனால், ஏனைய சமயங்கள் பற்றிய எண்ணப்பாடுகளின்பால் எந்த பிள்ளையும் செல்வதில்லை. தன் தாயை போல் சமயத்தையும் ஒருமைச்சாதனமாகவே பார்க்கத்தொடங்குகிறது பிள்ளை. இதனால், அதனை அறியாமலே பிள்ளையை குறித்த ஒரு மதம் பிடித்து அல்லது பீடித்துக்கொள்கிறது.
இவ்வாறு ஆரம்ப தரங்களில் குறித்த மத நெறியுடன் இருக்கும் பிள்ளைக்கு உயர்தரங்களில் அதுவும், தமிழ் பாடத்தில் மட்டும் சுந்தரர் தேவாரமும், சீறாப்புராணம், தேம்பாவணியும் ஒருசேர சொல்லி கொடுத்து என்ன மாற்றம் நிகழ்ந்து விடப்போகிறது. எல்லாம் மதமும் ஒன்றைத்தான் சொல்கின்றன, ஒரே விடயத்தை நோக்கி வெவ்வேறு வழிகளில் அனுப்புகின்றன என்பதை எடுத்துச்சொன்னாலும் அவற்றை வெறும் பாடமாகவே அந்த பிள்ளை பார்க்கும். அடிப்படையில் தன் மதமே அறுதியானது என்ற எண்ணமே புதைந்து கிடக்கும்.
இவ்வாறு இருக்கையில் அழுத்கம போன்ற மத உணர்வு தூண்டல்கள் நிகழும் சந்தர்ப்பங்களில் அடியில் புதைந்து கிடந்த மதவாதம் எனும் பெருமிருகம் வெளிப்படும். மதம் என்ற பெயரில் அநீதிகளும் காழ்ப்புணர்வுகளும் சமூகத்தின் இருப்பையும் தொடர்ச்சியையும் சீர்குலைக்கும்.
இந்த குறுகிய நிலைமைக்கு பிள்ளையளை கொண்டு செல்லும் பாடவிதானங்கள் திட்டமிடப்பட்டவையல்ல என்பது சிலரின் கருத்து. ஆனால், இவை திட்டமிட்டே தொடங்கப்பட்டவை என்பதே நிதர்சனம். ஆறுமுக நாவலரும் இராமநாதன்களும், அநாகரிக தர்மபாலக்களும், சுமங்கல தேரர்களும், சித்திலெப்பேகளும், கிறிஸ்தவ மிஷனரிகளும் மதச்சண்டைக்கு ஆட்களை உருவாக்க தொடங்கிய பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில்தான் முறைசார் கல்வி இலங்கையில் நிலையான இடத்தைப் பெற்றது. அதன் பொருட்டு உருவாக்கப்பட்ட சமயம் சார்ந்த பாடசாலைகளின் பரிமாண வளர்ச்சியே இந்த நிலைமை. இன்று இலங்கையில் பெரும்பாலான பாடசாலைகள் மதம் சார்ந்தே அடையாளம் பேணுவதை யாரும் மறுக்க முடியாது.
எனின், ஏழாம் வகுப்பு பிள்ளை தன்னை அறியாமலே குறித்த ஒரு மதத்தில் நம்பிக்கையும் பிற மதங்களில் காழ்ப்புணர்வும் கொண்டு இருப்பது ஒன்றும் ஆச்சரியத்துகுரியது இல்லையே.
பின்குறிப்பு – கடைசி வரை என்னால் E.C.Brewer இன் அன்பால் நிறைந்த சுவர்க்கத்தை என்ர பிள்ளையளுக்கு காட்ட முடியாமலே போய்விட்டது என்பது என் அண்மைக்கால தோல்விகளில் ஒன்று.
“Make our earth an eaden
Like the heaven above”
ப்ரதீப் குணரட்ணம்