Photo, REUTERS

“உலகை மாற்றுவதற்கு நீங்கள் பயன்படுத்தக்கூடிய மிகவும் சக்திவாய்ந்த ஆயுதம் கல்வி” – நெல்சன் மண்டேலா

நெல்சன் மண்டேலாவைத் தவிர, சமூக மாற்றம் மற்றும் வளர்ச்சிக்கு கல்விச் சீர்திருத்தங்களின் முக்கியத்துவத்தை பல தத்துவஞானிகளும் சமூக ஆர்வலர்களும் வலியுறுத்தியுள்ளனர். அவர்களுள் கன்பூசியஸ், பிளேட்டோ, அரிஸ்டாட்டில், கார்ல் மார்க்ஸ், மகாத்மா காந்தி, பெஞ்சமின் பிராங்களின், ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள். எனினும், இங்கு நாம் அனைத்து தத்துவார்த்த மற்றும் உலகளாவிய பிரச்சினைகளையும் விவாதிக்கப் போவதில்லை.

நாம் இலங்கையின் மீது கவனம் செலுத்தி, பாடசாலை மற்றும் பல்கலைக்கழகக் கல்வியில் உள்ள சில முக்கியமான பிரச்சினைகளை முன்வைக்கிறோம். இலங்கையின் கல்விமுறை ஒரு மோசமான முறைமை அல்ல. நான் இலங்கையிலும் ஆஸ்திரேலியாவிலும், மேலும் சில நாடுகளின் பல்கலைக்கழக மட்டத்திலும் கற்பித்துள்ளேன். அதேபோல, எனது மனைவியும் இலங்கையிலும் ஆஸ்திரேலியாவிலும் இரண்டாம் நிலை பாடசாலைகளில் கற்பித்துள்ளார். எங்களது அனுபவத்தின்படி, பெரும்பாலான இலங்கை மாணவர்கள் ஆஸ்திரேலிய மாணவர்களுக்கு அறிவுத்திறனில் சளைத்தவர்கள் அல்ல. இருப்பினும், முதன்மையாக ஆங்கில அறிவு இன்மையால் அவர்களின் அறிவு வட்டம் குறுகியதாகவும் வரம்பிற்குட்பட்டதாகவும் உள்ளது. மாணவர்களும் ஆசிரியர்களும் இதே காரணத்தால் ஒரே மாதிரியான சங்கடங்களை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், வெறும் ஆங்கில மொழியை அறிமுகப்படுத்துவது மட்டுமே கல்விக் நெருக்கடியைத் தீர்த்துவிடாது.

பொதுவாகக் கல்வி முறையில் இரு முக்கிய சிக்கல்கள் அடையாளப்படுத்தப்படுகின்றன.

இலங்கை தனது தேசிய வருமானத்தில் மிகக் குறைந்த பங்கையே கல்விக்காகச் செலவிடுகிறது, இதனால் பாடசாலைகளும் பல்கலைக்கழகங்களும் கடுமையான பற்றாக்குறையை எதிர்கொள்கின்றன.

பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் இருந்து வெளிவரும் மாணவர்களின் கல்வித் தகுதிக்கும், நாட்டின் பொருளாதாரத்திற்கும் இடையே பெரும் இடைவெளி உள்ளது. இது இளைஞர்களிடையே அதிக வேலையின்மைக்கும், வேலைக்குத் தயாராக உள்ள பட்டதாரிகளின் பற்றாக்குறைக்கும் வழிவகுக்கிறது.

இந்தப் பிரச்சினையை ஒரு விவரிப்பாக அல்லாமல், சில ‘தீவிரமான மற்றும் பகுத்தறிவுப் பூர்வமான முன்மொழிவுகள்’ மூலம் அணுகவே இந்தக் கட்டுரை முயல்கிறது.

பாடசாலைக் கல்வி

பாடசாலைக் கல்வியில் நான் முன்வைக்கும் ஒரு தீவிர மாற்றம் என்னவென்றால், பாடசாலைக் கல்வி ஆண்டுகளை 13 இலிருந்து 12 ஆகக் குறைப்பதாகும். பெரும்பாலான நாடுகள் இன்னும் பாரம்பரிய 13 வருட பாடசாலை முறையைக் கொண்டிருந்தாலும், ஜெர்மனி உட்பட சில நாடுகள் 12 வருட முறையை பரிசோதித்துப் பார்த்துள்ளன. இலங்கையை போன்ற ஒரு வளர்ந்து வரும் நாட்டிற்கு இதன் நன்மைகள் மிக அதிகமாக இருக்கும்.

1970கள் முதல் உலகம் முழுவதும் வாக்களிக்கும் வயது, சட்டப்பூர்வ முதிர்ச்சி மற்றும் திருமண வயது ஆகியவை 21 இலிருந்து 18 ஆகக் குறைக்கப்பட்டுள்ளன. இளைஞர்களின் முதிர்ச்சி விரைவடடைவதே இதற்கு முக்கியக் காரணம். ஆனால், துரதிர்ஷ்டவசமாக இந்த மாற்றம் கல்வியில் கவனத்தில் கொள்ளப்படவில்லை.

தகவல் தொழில்நுட்பம் (IT) மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) வளர்ச்சியால் வேகமான கல்வி வளர்ச்சி சாத்தியமாகியுள்ளது. பாடசாலை ஆண்டுகளைக் குறைப்பது மாணவர்களுக்கு அதிக ஊக்கத்தையும் நம்பிக்கையையும் தரும். இளைஞர்கள் மீது நாடும் அரசாங்கமும் நம்பிக்கை வைக்க வேண்டும்.

இருப்பினும், இலங்கையில் குழந்தைகளை சமூக ஊடகத் தவறுகளிலிருந்து பாதுகாக்க வேண்டிய தேவையும் உள்ளது. ஆஸ்திரேலியாவைப் போல 16 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு சமூக ஊடகங்களுக்குத் தடை விதிக்கப்படலாம். இது முக்கியமாக பெற்றோரின் பொறுப்பாகும். அதேவேளை, சமூக ஊடகங்கள் பயனுள்ள தகவல்களையும் வழங்குகின்றன என்பதைப் புரிந்து கொண்டு, ஆசிரியர்களும் பெற்றோர்களும் அந்த நேர்மறையான தகவல்களைச் சேகரித்து குழந்தைகளுக்கு வழங்க வேண்டும்.

பாடசாலை ஆண்டுகளைக் குறைப்பது கல்வி முறையில் நிதிச் சேமிப்பையும் ஏற்படுத்தும். இலங்கையின் கல்விக்கான செலவினம் ஜிடிபியில் (GDP) 2% ஐத் தாண்டுவதில்லை. இந்த முன்மொழிவைச் செயல்படுத்தும்போது பாடசாலைக்கான நிதி ஒதுக்கீட்டைக் குறைக்காமல், தற்போதைய முறையை விட சிறப்பாக பயன்படும் வகையில் நிதியை பகுத்தறிவுடன் ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

பாடசாலை ஆண்டுகளைக் குறைப்பது ஆரம்பக் கல்வியில் (5 ஆண்டுகளிலிருந்து 4 ஆண்டுகளாக) இருக்கலாம். இது தற்போதைய தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையைப் பாதிக்கலாம். தற்போதும் கூட பெரும்பாலான மாணவர்கள் தேர்ச்சி பெறக்கூடிய முதிர்ச்சியைக் கொண்டிருக்கவில்லை. எனவே, புலமைப்பரிசில் பரீட்சையை தரம் 8 இல் நடத்துவதே சிறந்தது. இந்த வயதில் மாணவர்கள் போட்டிப் பரீட்சைக்கு முகங்கொடுக்க அதிக முதிர்ச்சி அடைந்திருப்பார்கள். தோற்றும் 300,000 மாணவர்களில் குறைந்தது 200,000 மாணவர்களாவது புலமைப்பரிசில் பெறக்கூடிய வகையில் முறைமை அமைய வேண்டும்.

ஆரம்பக் கல்வியிலிருந்தே சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழிக் கல்வியை தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அறிமுகப்படுத்த வேண்டும். சுவிட்சர்லாந்து இதற்கு நல்லதொரு உதாரணம்.

கணிதம், விளையாட்டு, கலை (இசை, நடனம், ஓவியம்) மற்றும் உலக வரலாற்றுடன் இணைந்த நாட்டின் வரலாறு ஆகியவை ஆரம்பக் கல்வியில் கற்பிக்கப்பட வேண்டும். கனிஷ்ட இரண்டாம் நிலைக் கல்வியில் (தரம் 5-8) கணிதம், அறிவியல், ஆங்கிலம் மற்றும் உலகளாவிய அறிவுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும்.

க.பொ.த சாதாரண தர பரீட்சை வழக்கம்போல இரண்டு ஆண்டுகள் இருக்கலாம். ஆனால் மாணவர்கள் சித்தியடைந்தாலும் சித்தியடைய தவறினாலும் ஆங்கிலம் ஒரு கட்டாயப் பாடமாக இருக்க வேண்டும். ஆங்கிலத்தை ஒரு ‘காலனித்துவ மரபாக’ பார்க்காமல், சர்வதேச மொழியாக பார்க்க வேண்டும். மேலும், இந்தி, சீன மொழி, ஜப்பானிய மொழி, பிரெஞ்சு, ஜெர்மன் போன்ற மற்றொரு சர்வதேச மொழியையும் மாணவர்கள் கற்க வாய்ப்பளிக்க வேண்டும்.

க.பொ.த உயர் தரத்திற்கு மாணவர்களை ஊக்குவிக்கும் போது அறிவியல் பாடங்களுக்கே முதன்மை அளிக்கப்பட வேண்டும். பாடசாலை முறைமை நாட்டின் வளர்ச்சிக்குத் தேவையான விஞ்ஞானிகள், தொழில்நுட்பவியலாளர்கள் மற்றும் திறமையான தொழிலாளர்களை உருவாக்க வேண்டும்.

பல்கலைக்கழகங்களில்

பாடசாலை முறையில் மட்டுமல்லாது, பல்கலைக்கழகக் கல்வியிலும் தீவிர மாற்றங்கள் தேவை. ஒவ்வொரு ஆண்டும் சுமார் 160,000 மாணவர்கள் பல்கலைக்கழகப் பிரவேசத்திற்குத் தகுதி பெற்றாலும், சராசரியாக 40,000 பேரே சேர்க்கப்படுகிறார்கள். அரசாங்கப் பல்கலைக்கழகங்களின் கொள்ளளவு முழுமையாகப் பயன்படுத்தப்படுவதில்லை.

பல்கலைக்கழகங்கள் ஒரு நாளைக்கு இரண்டு அமர்வுகளை (Two sessions) நடத்துவதன் மூலம் அதிக மாணவர்களைச் சேர்க்கலாம்; அதாவது சில மாணவர்களுக்கு மாலை நேர வகுப்புகளை நடத்தலாம். இது கொழும்பு போன்ற நகர்ப்புறப் பகுதிகளில் சாத்தியமாகும். ஹாங்காங், ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியாவில் மாலை நேரப் பல்கலைக்கழகங்கள் உள்ளன. இது மாணவர்கள் காலையில் வேலை செய்துவிட்டு மாலையில் படிக்க வழிவகுக்கும்.

பல்கலைக்கழகக் கல்வி முழுமையாக ஆங்கில மொழியிலேயே இருக்க வேண்டும். திறமையற்ற மாணவர்களுக்கு ஆங்கிலம் கற்க ஆரம்பத்தில் ஒரு வருடம் வழங்கப்படலாம்.

மற்றொரு பிரச்சினை கலை (Arts) மற்றும் அறிவியல் பாடங்களுக்கு இடையிலான சமநிலையின்மை ஆகும். பல்கலைக்கழகங்கள் சமூக அறிவியலை (Social Sciences) வெறும் ‘கலை’ என்று அழைக்கக் கூடாது. பொருளாதாரம், அரசியல் அறிவியல், சமூகவியல் மற்றும் வரலாறு ஆகியவை சமூக அறிவியல் பீடத்தின் (Faculty of Social Sciences) கீழ் வர வேண்டும். இசை, நடனம், ஓவியம் போன்றவை மட்டுமே கலைப் பீடத்தின் (Faculty of Arts) கீழ் வர வேண்டும்.

தற்போது உயர்தரப் பரீட்சையில் அளவுக்கு அதிகமான மாணவர்கள் ‘கலை’ப் பிரிவைத் தேர்ந்தெடுக்கின்றனர். இவர்கள் கலைப் பட்டதாரிகளாக வெளிவந்து, மீண்டும் கலைப் பாடங்களையே கற்பிக்கின்றனர்; இது ஒரு நச்சுச் சுழற்சியாக மாறியுள்ளது. இந்த இடைப்பட்ட காலத்தில், பல்கலைக்கழகங்கள் இந்த மாணவர்களை சுகாதாரம், செவிலியர் பணி (nursing), சுற்றுலாத்துறை, வணிகம் போன்ற துறைகளில் சேர்த்து வேலைவாய்ப்பு பெறச் செய்ய வேண்டும்.

முடிவுரை

இலங்கையின் கல்வி முறை மோசமானது அல்ல என்றாலும், சரிசெய்யப்பட வேண்டிய சில பலவீனங்களும் மேம்படுத்தப்பட வேண்டிய வாய்ப்புகளும் உள்ளன.

இந்தக் கட்டுரையின் முக்கிய முன்மொழிவுகள்:

  1. பாடசாலை ஆண்டுகளை 13 இலிருந்து 12 ஆகக் குறைத்தல்.
  2. ஆரம்பப் பாடசாலை ஆண்டுகளிலிருந்தே சிங்களம் மற்றும் தமிழுடன் ஆங்கிலத்தையும் ஒரு சர்வதேச மொழியாக அறிமுகப்படுத்துதல்.
  3. பாடசாலைகளில் ‘கலை’ என்று தவறாக அழைக்கப்படுவதற்குப் பதிலாக அறிவியல் படிப்புகளை ஊக்குவித்தல்.
  4. அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் ஆங்கிலத்தைக் கற்பித்தல் ஊடகமாக மாற்றுதல்.
  5. நாட்டின் தேவைகளுக்கு ஏற்ப பல்கலைக்கழகச் சேர்க்கையை பெருமளவில் அதிகரித்தல்.
  6. மாணவர்கள் பகுதிநேரமாக வேலை செய்து படிக்கும் வகையில் பல்கலைக்கழகங்களில் மாலை நேர அமர்வுகளை ஊக்குவித்தல்.
  7. கலைப் பீடங்களை ‘சமூக அறிவியல் பீடங்கள்’ என பெயர் மாற்றம் செய்து, உண்மையான கலையை இசை, நடனம், ஓவியம் போன்றவற்றுடன் மட்டும் கட்டுப்படுத்துதல்.

கலாநிதி லக்சிரி பெர்னாண்டோ

Radical & Rational Changes Are Necessary In Schools & Universities என்ற தலைப்பில் Colombo Telegraphஇல் வெளிவந்த கட்டுரையின் தமிழாக்கம்.