படம் | AP Photo/Eranga Jayawardena, Dailymail

“இந்த நாட்டில் நாங்கள் இன்னமும் சிங்கள பொலிஸை வைத்திருக்கிறோம். சிங்கள இராணுவம் இருக்கின்றது. இன்றின் பின் ‘மரக்கலயாவோ’ அல்லது ஒரு ‘பறையாவோ’ சிங்களவரைத் தொட்டால் அதுவே அவர்களுடைய முடிவாகும்”

– கலகொட அத்தே ஞானசார தேரர் (15.06.2014)

“தன்னுடைய கைகளையும் கால்களையும் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவனை, சுயகட்டுப்பாடுள்ளவனை பிக்கு எனக் கூறுங்கள்.”

– புத்தபெருமான்

மேடையில் கலகொட அத்தே ஞானசார தேரர் உரையாற்றிக் கொண்டிருக்கின்றார். வாயிலிருந்து நஞ்சும் நெருப்பும் கொட்டுகின்றன. கீழே பெருமளவு மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்களில் பொதுமக்களும் பௌத்த துறவிகளும் உள்ளனர். இன்னும் சில மணிநேரத்தில் அவர்கள் வெறியாட்டம் ஆடப்போகிறார்கள் என்பதற்கான அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை. அவர்கள் வணங்கும் பாணியில் கைகளை வைத்திருக்கின்றனர். அவர்களுடைய முகங்களை பார்க்கும்போது, அவர்கள் அரசியல் உரையொன்றைக் கேட்கவில்லை; மத உரையொன்றை அவதானிப்பது போல் உள்ளது.

அங்கு ஜிகாத் போராளிகளும், புனிதப் போராளிகளும் அமர்ந்திருக்கின்றனர். ஆனால், அவர்கள் இங்கு மஞ்சல் ஆடையணிந்துள்ளனர். தங்களை பௌத்த துறவிகள் என அழைக்கின்றனர்.

முழுமையாக ஆயுதம் ஏந்திய பொலிஸாரும் இராணுவத்தினரும் உரையைக் கேட்டபடி – கண்காணித்தபடி உள்ளனர். தேரர் மெல்ல மெல்ல பொதுமக்களை உணர்வூட்டுகிறார். சட்டத்தை மீறுமாறு மக்களை கேட்கிறார். அவர் மிரட்டுகிறார்; எச்சரிக்கிறார். அவரது வார்த்தைகள் கூர்மையான ஆயுதங்களைப்போல வந்து விழுகின்றன. ஆனால், சட்டத்தின் பாதுகாவலர்கள் அதை இன்னமும் கேட்டபடி உள்ளனர். அவரை கைதுசெய்து சட்டத்தின் முன் நிறுத்தவில்லை. ​

பொலிஸார் செயற்படவில்லை. சட்டம் மரணித்துவிட்டதுபோலத் தோன்றுகிறது. ஈடுபடுவர்கள் யாராக இருந்தாலும் புனிதப்போர்கள் கொடுமையானவை. பௌத்தத்தின் உண்மையான இயல்பு காரணமாக நாடு அதை மாத்திரம் அனுபவிக்காமலிருந்தது. ஆனால், இனிமேலும் அப்படியில்லை.

பேரணிக்கு அனுமதி வழங்கியவர் யார்?

முதலில் நடந்த சம்பவம் தற்செயலான ஒன்று. பௌத்த மதகுரு மற்றும் அவரது வாகன சாரதி மீதான தாக்குதல் தற்செயலாக இடம்பெற்றதொன்று. தற்போதைய இரத்த வெறியாட்டத்தில் இது மாத்திரமே தற்செயலான செயல். மற்றவையெல்லாம் நன்கு திட்டமிடப்பட்டவைகள். பொதுபல சேனா வன்முறையைத் தூண்டியது. அதிகாரிகள் அதனைத் தடுக்காமல் வேடிக்கை பார்த்தனர்.

ஆரம்பக் கட்ட வன்முறைகளுக்குப் பின்னர் சற்று அமைதி நிலவியது. பின்னர் திடீரென யாரோ இன்னமும் பதற்றம் குறையாமலிந்த அளுத்கமவில் பொதுபல சேனா பேரணியை நடத்த அனுமதித்தனர். இந்த முடிவை சட்டம், மனிதாபிமானம் தெரியாதவர் எவரோ எடுத்திருக்க வேண்டும்.

பொதுபல சேனா சட்டவிரோத பேரணியை நடத்தவில்லை, அவர்கள் சட்டவிரோத ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். அவர்கள் பேரணியையும் ஆர்ப்பாட்டத்தையும் நடத்துவதற்கு அதிகாரிகள் அனுமதித்துள்ளனர். இதற்கு அனுமதித்திருக்காவிட்டால் அளுத்கம வழமைக்கு திரும்பியிருக்கும். அப்பாவி உயிர்களைக் காப்பாற்றியிருக்கலாம்.

அதிகாரத்தில் இருப்போரின் நோக்கம் என்ன?

சிறிய கலவரம்? கட்டுப்படுத்தப்பட்ட கலவரம்? சிறிய அளவிலான கறுப்பு ஜூலை? தங்கள் சொற்களையும் செயல்களையும் கட்டுப்படுத்துமாறு சிறுபான்மையினருக்கு எச்சரிக்கை? முஸ்லிம் – தமிழர் – கிறிஸ்தவர்களுக்கு நீங்கள் எதனையும் எதிர்க்கமுடியாது என்ற எச்சரிக்கை? சிங்கள பௌத்தர்களின் கவனத்தை திசைதிருப்ப புதிய எதிரியை உருவாக்குதல்? நாங்களும் முஸ்லிம்களுக்கு எதிரானவர்கள் என மோடிக்கும் மேற்குலகிற்கும் காண்பித்தல்?

இல்லாவிட்டால் எரிந்துகொண்டிருந்த தணலை ஏன் ஊதிப்பற்றவைக்க பொதுபலசேனாவிற்கு அனுமதியளிக்கவேண்டும்? ஏன் பொலிஸாரும் இராணுவத்தினரும் இதனைத் தடுக்கவில்லை? நான் கறுப்பு ஜூலை முழுவதையும் பார்த்திருக்கிறேன். சிங்கள இனத்தைச் சேர்ந்தவர் என்ற வகையில் மீண்டும் அந்தக் கொடுமை நிகழ்வதை பார்க்க விரும்பவில்லை. ஆனால், கட்டுப்படுத்தப்பட்ட கலவரங்களை இந்த ஆட்சியின் கீழ் காணமுடிகின்றது. இவ்வாறான சிறிய கலவரங்கள் ஒரு நாள் கட்டுக்கடங்காதவையாக மாறலாம்.

இது சிறுபான்மையினருக்கான நாடல்ல. சிங்கள பௌத்தர்களுக்கான நாடுமல்ல. இது சட்டம் – ஒழுங்கின்மையின்மையின் சொர்க்கம்.

திஸரணி குணசேகர