படம் | Nation
ஜெயலலிதா – மோடி சந்திப்பு, தமிழ் அரசியல் சூழலில் அதிக முக்கியத்துவமுடைய ஒன்றாக நோக்கப்படுகின்றது. அதேவேளை, மேற்படி சந்திப்பின்போது ஜெயலலிதா இலங்கை தொடர்பில் தெரிவித்திருக்கும் கருத்துக்கள் தெற்கின் தீவிரதேசியவாத சக்திகளை நிச்சயம் எரிச்சலைடையச் செய்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், ஜனாதிபதியும் அவரது வெற்றிக்காக சிந்தித்துக் கொண்டிருப்பவர்களும் ஜெயலலிதாவின் கோரிக்கைகளால் மகிழ்சியடைந்திருக்கவும் கூடும். அவர்கள் அடுத்து வரவுள்ள ஜனாதிபதி தேர்தலின்போது இதனை பயன்படுத்துவது குறித்து சிந்திக்கலாம். அவ்வாறு அவர்கள் சிந்திப்பார்களாயின் அது நிச்சயம் பயனுடைய ஒன்றாகவே அமையும் என்பதில் சந்தேகமில்லை.
அப்படியென்னதான் ஜெயலலிதா கூறிவிட்டார்? இவ்வாரம் இந்தியாவின் புதிய பிரதமரான நரேந்திர மோடியை சந்தித்துப் பேசியிருந்த தமிழ் நாட்டின் முதலமைச்சரும், நடைபெற்று முடிந்த லோக்சபாவிற்கான தேர்தலில் தமிழ் நாட்டுக்கான 39 ஆசனங்களில் 37 ஆசனங்களை வெற்றியீட்டி அகில இந்திய அளவில் மூன்றாவது பெரிய கட்சியின் தலைவியாக தன்னை நிலை நிறுத்தியவருமான ஜெயலலிதா, மேற்படி சந்திப்பின்போது இலங்கை தமிழ் மக்கள் குறித்தும் தனது கரிசனையை வெளிப்படுத்தியிருக்கின்றார். அந்த கரிசனை சற்று அளவுக்கு அதிகமான கரிசனையாக இருப்பதுதான் இங்கு விடயமாகிறது.
மேற்படி சந்திப்பின் போது, 29 பக்கங்கள் அடங்கிய மனுவொன்றையும் ஜெயலலிதா கையளித்திருக்கின்றார். இதில் புதிய அரசிடமிருந்து தான் என்னவகையான விடயங்களை எதிர்பார்க்கிறேன் என்பதை தெளிவுபடுத்தும் வகையில், 25 பிரிவுகளில் பல்வேறு விடயங்களை குறிப்பிட்டிருக்கின்றார். இதில் இரண்டாவது பிரிவில், இலங்கை தமிழர் பிரச்சினை குறித்து குறிப்பிட்டிருக்கின்றார். அவர் ஆங்கிலத்தில் குறிப்பிட்டிருக்கும் விடயங்களை அப்படியே தமிழில் தருகின்றேன்.
இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்தின் இறுதிக்கட்டத்தின்போது சிறுபான்மை தமிழ் மக்கள் மீது இனக் கொலைகள் மற்றும் இனப்படுகொலை ஆகியவை இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்ற நிலையில், தற்போதைய இலங்கை அரசுடன் இந்தியா கொண்டுள்ள உறவு தொடர்பில் தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் வலிமையான உணர்வலைகள் தோன்றியுள்ளன. இந்த அடிப்படையில், இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டுவரும் மனித உரிமை மீறல் மற்றும் இனவொதுக்கல் நடவடிக்கைகள் ஆகியவற்றுக்கு எதிராக, ஏற்கனவே தமிழ்நாட்டு சட்டசபையில் நான்கு பிரேரணைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. (இந்த அடிப்படையில்) நான் ஒரு வேண்டுகோளை விடுகின்றேன். இடம்பெற்ற இனப்படுகொலைக்கு இலங்கை பொறுப்பு கூறத்தக்க வகையிலும், தமிழ் மக்களுக்கு நீதியை பெற்றுக்கொடுக்கும் வகையிலும் இந்தியா, ஜக்கிய நாடுகள் சபையில் ஒரு தீர்மானத்தை கொண்டுவர வேண்டும். மேலும், குறித்த தீர்மானம், இலங்கைக்குள்ளும், உலகெங்கும் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் மத்தியில் தனியரசு அமைப்பதற்கான அவர்களது விருப்பை அறியும் வகையில், ஒரு பொதுஜன வாக்கெடுப்பொன்றை நடத்துவதற்கான ஏற்பாட்டையும் உள்ளடக்கிருக்க வேண்டும். இதுவே ஜெயலலிதா தன்னுடைய மனுவில் இலங்கை தமிழ் மக்கள் தொடர்பில் தெரிவித்திருக்கும் கருத்துக்கள் ஆகும்.
இது தவிர, தமிழ் நாட்டு மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்படுவது தொடர்பில், தனியான ஒரு பிரிவில் விபரித்திருக்கின்றார். மீனவர் பிரச்சினையை கையாளுவதற்கான விவகாரத்தில், கச்சத்தீவை மீளப் பெறுவது குறித்தும் ஜெயலலிதா குறிப்பிட்டிருக்கின்றார். இது தொடர்பில் 1991ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டசபையில் தீர்மானமொன்று நிறைவேற்றப்பட்டுள்ளதையும் தொட்டுக் காட்டியிருக்கின்றார். ஜெயலலிதாவின் மேற்படி இரண்டு கோரிக்கைகளையும் எடுத்து நோக்கினால், இரண்டுமே இந்திய வெளிவிவகாரக் கொள்கையுடன் நேரடியாக தொடர்புபட்டவைகளாகும். எனவே, வெளிவிவகார அணுகுமுறையில் மாநில அரசுகளின் கோரிக்கைகளை அம்மாநிலத்தில் எந்த வகையிலும் தங்கியிராத மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு எவ்வாறு நோக்கக் கூடும்? வெளிவிவகார கொள்கையில் மாநிலங்களில் தலையீடுகளை தான் பெரிதுபடுத்தப் போவதில்லை என்பதை மோடி தனது பதவிப்பிரமாண நிகழ்வின்போதே தெளிவாக கோடிகாட்டியிருந்தார். இலங்கை ஜனாதிபதி ராஜபக்ஷவை அழைப்பது தொடர்பில் கிளம்பிய எதிர்ப்புகள் எதனையும் அவர் பொருட்படுத்தியிருக்கவில்லை. பா.ஜ.கவில் இருக்கின்ற ஒரு சில தலைவர்கள் விரும்பாத போதிலும் கூட, பாகிஸ்தானியப் பிரதமர் நவாஸ் ஷெரீப்பை அழைக்க வேண்டுமென்னும் முடிவிலிருந்து மோடி பின்வாங்கவில்லை. இவையெல்லாம் மோடி வெளிவிவகார அணுகுமுறையில் உள்ளகத் தலையீடுகளை ஒருபோதும் ஏற்கப்போவதில்லை என்பதையே காட்டிநிற்கிறது.
ஆனால், மீனவர் விவகாரத்தில் மோடி அரசு கூடுதல் கரிசனை கொள்ளும் என்றே இந்திய அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். ஏனெனில், அது வெறுமனே தமிழ் நாட்டின் பிரச்சினை மட்டுமல்ல, பலம்பொருந்திய இந்தியா என்னும் விடயத்துடனும் அது உரசிச் செல்கிறது. எனவே, அது குறித்து மோடி கரிசனை கொள்ளாமல் இருக்கமுடியாது என்பதே அவ்வாறானவர்களது அபிப்பிராயம். ஆனால், இலங்கை தமிழர் விவகாரம் அப்படியான ஒன்றல்ல. தவிர, அடிப்படையிலேயே ஜெயலலிதாவின் தமிழர் தொடர்பான கோரிக்கை, பா.ஜ.கவின் இலங்கை தொடர்பான நிலைப்பாட்டிற்கு முற்றிலும் முரணானது ஆகும். இது ஜெயலலிதாவும் அறியாத ஒன்றல்ல. பின்னர் ஏன் ஜெயலலிதா இவ்வாறானதொரு கடுமையான கோரிக்கையை முன் வைத்திருக்கின்றார்? மோடி – ராஜபக்ஷ சந்திப்பின்போதே புதிய இந்தியாவின் தமிழர்கள் குறித்த எல்லைக்கோடு எது என்பது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. அது நிச்சயமாக 13ஆவது திருத்தச் சட்டத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு தீர்வை முன்னிறுத்துவதான். இதற்கு மேல் இந்தியா செல்வது என்பதெல்லாம் கொழும்பிற்கும் – புதுடில்லிக்குமான எதிர்கால உறவில்தான் தங்கியிருக்கிறது. ஆனால், 13ஆவது திருத்தச்சட்டத்தை கொழும்பு அமுல்படுத்தவேண்டியதன் பொறுப்பை வலியுறுத்துவதற்கான ஒரு கருவியாக, ஜெயலலிதாவின் மேற்படி வேண்டுகோளை மோடி பயன்படுத்தக் கூடும். அப்படியொரு வாய்ப்பை மோடிக்கு வழங்குவதற்காகவே ஜெயலலிதாவும் இப்படியொரு கடுமையான நிலைப்பாட்டை முன்நிறுத்தியிருக்கலாம்.
ஆனால், இந்த இடத்தில் இந்தியா என்ன நினைக்கும், எப்படிச் செயற்படும் என்பவற்றுக்கெல்லாம் அப்பால் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்திவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு எவ்வாறு செயலாற்றுகின்றது என்பதே முக்கியமானது. மோடி வெற்றிபெற்றதன் பின்னர் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், ஜெயலலிதாவிற்கு அனுப்பியிருந்த கடிதத்தில், அரசியல் தீர்வு தொடர்பில் இந்தியாவின் பங்களிப்பிற்கு முதலமைச்சர் ஜெயலலிதா ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென்று கோரியிருந்தார். ஆனால், அதற்கு பதலளிக்கும் வகையில், தனிநாட்டுக்கான வாக்கெடுப்பிற்கு இந்தியா ஆதரவளிக்க வேண்டும் என்று ஜெயலலிதா, மோடியிடம் கோரிக்கை விடுத்திருக்கின்றார். இப்பொழுது கூட்டமைப்பு ஜெயலலிதாவை பின்தொடர்வதா அல்லது இலங்கைத் தமிழர்களின் தலைமை என்னும் வகையில் கூட்டமைப்பின் எதிர்பார்ப்பிற்கு ஏற்ப ஜெயலலிதாவை திருப்புவதா? ஜெயலலிதாவின் நிலைப்பாடு நிச்சயமாக கூட்டமைப்பின் நிலைப்பாடு இல்லை. கூட்டமைப்பால் அப்படியொரு நிலைப்பாட்டை எடுக்கவும் முடியாது. அவ்வாறாயின் பிரச்சினை எங்கிருக்கிறது? கூட்டமைப்பு தமிழ் மக்களின் உண்மையான தேவை என்ன என்பதை இதுவரை தெளிவாக முன்வைக்கவில்லை. முன்னர் சம்பந்தன் இந்தியாவில் இருப்பது போன்றதொரு தீர்வு முறைமையை தாம் எதிர்பார்ப்பதாக குறிப்பிட்டபோதும், அதனை பெரும்பான்மையான மக்கள் ஏற்றுக்கொள்ளாத பட்சத்தில் கூட்டமைப்பிடம் இருக்கின்ற மாற்று யோசனை என்ன என்பதையும் இதுவரை குறிப்பிடவில்லை. 13ஆவது திருத்தச் சட்டம் குறித்து தற்போது இந்தியா குறிப்பிட்டு வருகின்றது. ஆனால், தேர்தல் காலத்திலும், ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதும் கூட்டமைப்பு, 13ஆவது திருத்தச் சட்டத்தை நாம் அன்றும் ஏற்றுக்கொள்ளவில்லை இன்றும் ஏற்றுக் கொள்ளவில்லை என்றவாறே கூறிவருகின்றனர். ஆனால், இந்தியாவோ மீண்டும், மீண்டும் 13ஆவது திருத்தச் சட்டத்திலிருந்து பயணிப்பது குறித்தே பேசி வருகின்றது. அதிலிருந்து, இந்தியாவின் மத்தியில் எந்த அரசு இருந்தாலும், அவர்களது தமிழர் கரிசனை 13ஆவது அல்லது 13ஆவதை அடிப்படையாகக் கொளுதல் என்பதாகவே அமைந்திருக்கிறது. 13ஆவது திருத்தச்சட்டம் குறைபாடுடையதெனின் அதனை யார் இந்தியாவின் பரீசீலனைக்கு கொண்டு செல்ல வேண்டும்? இங்குள்ள பிரச்சினை என்வென்றால், கூட்டமைப்பு தன்னுடைய நிலைப்பாட்டை தெளிவாக முன்வைக்காததால், கூட்டமைப்பின் அரசியல் தீர்வு குறித்த மௌனத்தை புதுடில்லி நிரப்ப முற்படுகிறது. தமிழர்களுக்கு என்ன தேவை என்பதை பற்றி புதுடில்லி மட்டுமே பேசிக் கொண்டிருக்கிறது. சமீபத்தில் மோடியின் முதன்மை பேச்சாளர் தாம் 13ஆவது திருத்தச் சட்டத்தை பரிசீலிக்கப் போவதாக குறிப்பிட்டிருந்தார். அவர்கள் பரிசீலிக்க விருப்பம் கொண்டிருக்கின்றார்களாயின், அதற்கான விடயங்களை அவர்களிடம் சமர்ப்பிக்க வேண்டிய பொறுப்பு யாருக்குரியது? நாங்கள் விடயங்களை சொல்லாவிட்டால் அவர்கள் தங்களுக்குத் தெரிந்த அல்லது அரசால் சொல்லப்படும் விடயங்களின் அடிப்படையில்தானே பேசுவார்கள்.
இன்று ஜெயலலிதா விடயத்திலும் இதுதான் நடக்கின்றது. கூட்டமைப்பு அரசியல் தீர்விற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கோருகின்றது. ஆனால், அவரோ, இலங்கை தமிழர் விடயத்தில் இந்திய மத்திய அரசு எவ்வாறு நடந்துகொள்ள வேண்டுமென்று ஆலோசனை வழங்கியிருக்கின்றார். ஜெயலலிதா எதையும் கூறிச் செல்லலாம், ஆனால், அது இலங்கையின் உள்நாட்டு அரசியல் சூழலில் எத்தகைய தாக்கங்களை ஏற்படுத்தும் என்பதை கவனிக்கவேண்டும். தெற்கின் அடிப்படைவாத சக்திகள் இதனால் வலுவடையக் கூடும். மத்திய அரசு 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துமாறு கோருமிடத்து, ஜெயலலிதாவின் கோரிக்கையையே கொழும்பு ஒரு பூமறாங்காக பயன்படுத்தலாம். தமிழ்நாட்டின் ஆதரவுடன் மத்தியில் ஆட்சியிலிருந்த காலத்தில் கூட, இந்தியாவின் இலங்கை தொடர்பான கொள்கையில் தமிழ்நாட்டு அரசியல் சக்திகளால் காத்திரமான தலையீட்டைச் செய்ய முடிந்ததில்லை. அப்படியிருக்க, தமிழ்நாட்டின் ஆதரவு மத்திக்கு தேவையற்ற நிலையில், ஜெயலலிதா குறிப்பிடும் விடயங்கள் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும்? ஆனால், நான் மேலே குறிப்பிட்டவாறு, இதனை கொழும்பிற்கு அழுத்தம் கொடுப்பதற்கான ஒரு கருவியாக மோடி பிரயோகிக்க முற்படலாம். மோடி அவ்வாறு அழுத்தங்களை பிரயோகிக்க முற்படும் சூழலில், அதிலிருந்து நன்மையை பெறக்கூடிய நிலையில் கூட்டமைப்பு இருக்குமா என்பதுதான் கேள்வி. கூட்டமைப்பு முதலில் 13ஆவது திருத்தச் சட்டம் குறித்து அல்லது 13ஆவதின் அடிப்படையில் ஒரு தீர்வு நோக்கிச் செல்வது குறித்த தங்களின் தீர்க்கமான நிலைப்பாட்டை பகிரங்கப்படுத்த வேண்டும். 13ஆவது திருத்தச் சட்டத்தில் ஒன்றுமில்லை, எனவே, 13ஆவது திருத்தச் சட்டத்தின் அடிப்படையிலான இந்திய ஈடுபாட்டுக்கு கூட்டமைப்பால் ஒத்துழைக்க முடியாதென்று கூட்டமைப்பு முடிவெடுப்பின், அதனை உறுதியாக வெளிப்படுத்த வேண்டும். கூட்டமைப்பு தெளிவான நிலைப்பாட்டை முன்வைக்காது போனால் ஒவ்வொருவரும் தங்களுக்குத் தெரிந்தவாறு பேசுவார்கள். எனவே, கூட்டமைப்பு இனியாவது தங்களுடைய நிலைப்பாட்டை தெளிவாக முன்வைக்க முன்வர வேண்டும். ஆனால், இப்பத்தியாளரின் அவதானத்தில் கூட்டமைப்பிற்கு ஒரேயொரு வழிதான் உண்டு. அதாவது, புதுடில்லி எதில் தன்னுடைய ஆர்வத்தை குவிக்கின்றதோ, அவற்றை சரியாக மதிப்பிட்டு செயலாற்றுவதே கூட்டமைப்பின் முன்னாலுள்ள ஒரேயொரு பணியாகும். அவ்வாறில்லாது, அரசை பற்றி, இந்தியாவிடம் அடிக்கடி குறை கூறுவதை மட்டுமே அரசியலாகச் செய்ய முற்படின், அது முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பதாகவே முடியும்.
தினக்குரல் புதிய பண்பாடுக்காக யதீந்திரா எழுதிய கட்டுரை இங்கு தரப்பட்டுள்ளது.