Photo, SRILANKA MIRROR
வெள்ளையான மெலிந்த தோழர் ஒருவர் காலி மாவட்டக் குழுவிற்கு முதன்முறையாக வந்திருந்தார். 1969ஆம் ஆண்டின் ஒரு நாளில் மக்கள் விடுதலை முன்னணியின் காலி மாவட்டக் குழுக் கூட்டம், என் நினைவில் உள்ளவாறு படபொல அதுலவின் வீட்டில் நடைபெற்றது. அதை நடத்தியவர் ஜே.வி.பி.யின் இரண்டாவது தலைவரான விஜேசேன ஜீ விதான எனப்படும் சனத் பொரலுகெட்டிய ஆவார். நான் அப்போது உயர்தர வகுப்பில் இருந்தவாறு மேலதிக வகுப்புகளை நடாத்த ஆரம்பித்திருந்தேன்.
மனதில் பதிந்த அந்த இளைஞன்
அந்தக் கூட்டத்தைப் பற்றி எனது நினைவில் பதிந்துள்ள முக்கிய நிகழ்வு அந்த வெள்ளையான மெலிந்த இளைஞன்தான். அவர் பின்னர் ‘பொடி அதுல’ என்று அழைக்கப்பட்ட விக்டர் ஐவன் ஆவார். அவர் காலிப் பிரதேசத்தின் எமது முழுநேர உறுப்பினராக இருந்தார். அவர் தனது வலது கையை உயர்த்தி இயக்கம் வேகமாக செயல்பட வேண்டும் என்ற உணர்ச்சிகரமான கருத்துக்களை வெளியிட்டார்.
விக்டரின் பேச்சு மற்றும் அரசியல் தலையீடுகளின் அடையாளமாக இது இருந்தது. அதாவது விரைவான, உறுதியான, உணர்ச்சிகரமான மற்றும் முடிவுகரமான தன்மை.
அன்றைய கூட்டத்தில் விக்டரின் இரு கைகளும் நன்றாக இருந்தன. நான் சிறிது காலத்திற்குப் பிறகு அவரைச் சந்தித்தபோது, அவரது வலது கை முழங்கைக்குக் கீழே துண்டிக்கப்பட்டிருந்தது மற்றும் இடது கையின் விரல்கள் காயமடைந்திருந்தன.
பொடி அதுலவாக விக்டர், கொழும்புக்கு
இயக்கத்தின் கொழும்பு தொழிற்சங்கப் பிரிவின் பொறுப்பை ஏற்க காலியை விட்டு வந்த விக்டர்,பொடி அதுலவாக மாறினார். தொழிற்சங்கப் பிரிவில் பணிபுரியும் அதே வேளையில், வெடிகுண்டுகள் தயாரிப்புக்குத் தேவையான பொட்டாசியம்) மற்றும் நைட்ரஜன் ஆகியவற்றை புறக்கோட்டை பாதாள உலக கும்பலிடமிருந்து வாங்கும் பொறுப்பும் விக்டருக்கே இருந்தது. அவர் பெரல்களில் இந்த வெடிமருந்துகளை வாங்குவதற்கான வழியை ஏற்படுத்தினார்.
நாங்கள் விஞ்ஞானிகளிடமிருந்து அல்ல, கொழும்பு வனாத்த பகுதியில் இருந்த கும்பல்களிடமிருந்தே வெடிகுண்டுகள் தயாரிப்பதற்கான பயிற்சியைப் பெற்றோம். அப்போது ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடைய குழுக்கள் இருக்கவில்லை. தேர்தல்களின்போது பயன்படுத்துவதற்காக சமசமாஜ கம்யூனிஸ்ட் கட்சிகளும் இந்த அனுபவத்தை இவ்வாறுதான் பெற்றன.
இரு கைகளும் பாதிக்கப்பட்ட அந்த 3 வினாடி ‘திரி’
இவ்வாறு தயாரிக்கப்பட்ட வெடிகுண்டை சோதனை செய்வதற்காக எடுக்கப்பட்ட முயற்சியின் போது, உடனடியாக வெடிக்க வைப்பதற்காக வெடிகுண்டில் இணைக்கப்பட்டிருக்கும் திரியின் நீளத்தை குறைக்கும் பணியில் விக்டர் ஈடுபட்டிருந்தார். அவர் 3 வினாடிகளில் வெடிக்கும் வகையில் திரியை வைத்து, அதற்கு தீயை மூட்டி வெடிகுண்டை வீசுவதற்கு முன்பே அது வெடித்துவிட்டது. அவர் உயிர் பிழைத்தார், ஆனால், அவரது இரு கைகளும் காயத்திற்குள்ளாகின.
விக்டருக்குள் இருந்த அந்த உத்வேகம் அவரை மரணத்தின் அருகாமைக்குக் கொண்டுசென்றிருந்தது. ‘பெட்ரோல் மேக்ஸ்’ விளக்கு வெடித்து காயமடைந்ததாகக் கூறி அரசு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர், நடந்த சம்பவம் வெளியில் தெரியவருவதற்கு முன்னர் ‘லொகு அதுல’வின் தலைமையில் இரகசியமாக வைத்தியசாலையில் இருந்து அழைத்துவரப்பட்டார்.
இடது கை முழங்கைக்குக் கீழே உடைந்து, வலது கை விரல்கள் வளைந்திருந்ததாலும் அது விக்டரின் உறுதியைக் குறைக்கவில்லை.
வளைந்த இடது கை விரல்களின் சாகசங்கள்
வலது கை விரல்களுக்கிடையே ‘பால்பாயிண்ட்’ பேனாவை வைத்து அதை வாயருகே கொண்டு வந்து அதன் மூடியை அகற்றி எழுதப் பழகுவதற்கு விக்டரின் உறுதியும் உற்சாகமும் வலுவாக இருந்தது.
71 போராட்டத்தின் போது இயக்கத்தில் ஏற்பட்ட பிளவின்போது விக்டர், விஜேவீரவின் நம்பிக்கைக்குரியவராக இருந்தார். கொழும்பைச் சுற்றியுள்ள களஞ்சியங்களில் சேமித்து வைக்கப்பட்டிருந்த அனைத்து வெடிபொருட்களையும் ஆயுதங்களையும் தனக்கு நம்பிக்கையான வீடுகளுக்கு மாற்றுவதற்கு விஜேவீரா விக்டரை நம்பினார்.
விஜேவீரவுக்காக ஆயுதங்களை ஏந்தியது
இந்த வெடிபொருட்களும் ஆயுதங்களும் பொடி அதுல மற்றும் லொகு அதுல ஆகிய இருவரின் பொறுப்பில் இருந்தன. ஏனெனில், இயக்கப் பிளவின்போது லொகு அதுல விஜேவீரவை விமர்சித்தமையால் இந்த ஆயுதங்களை வேறு இடங்களுக்கு மாற்ற விஜேவீர விரும்பினார். விக்டர் ஒரே இரவில் லொகு அதுலவுக்கு எந்தவொரு வாய்ப்பையும் வழங்காமல் அனைத்து வெடிபொருட்களையும் ஆயுதங்களையும் இடம் மாற்றினார்.
விக்டர் எப்போதும் தனது கருத்து நிபந்தனையின்றி சரியானது என்று நினைத்தார். “நான் நினைக்கும் விதம்” என்பதற்குப் பதிலாக “நான் கூறும் விதம்” என்பதில் நம்பிக்கைக் கொண்டிருந்தார்.
1971க்கு முன்பு மக்கள் விடுதலை முன்னணியில் நேரடித் தொடர்புகளைத் தவிர குறுக்கு வழியிலான தொடர்புகளுக்கு இடமிருக்கவில்லை. அதனால்தான் விக்டருடன் 1971க்கு முன் எனது தொடர்புகளும் அனுபவங்களும் அரிதாக இருந்தன. அவருடன் கொழும்பு தொழிற்சங்கப் பிரிவில் பணிபுரிந்த பல தலைவர்கள் இப்போது உயிருடன் இல்லை.
கிளர்ச்சிக்கு முன் கைது
71 ஏப்ரல் 02 அன்று விக்டர் கைது செய்யப்பட்டார். சித்திரவதை செய்யப்பட்டாலும் அவர் அமைப்பினைச் சார்ந்த யாரையும் காட்டிக் கொடுக்கவில்லை.
ஏப்ரல் வழக்கில் நான் ஐந்தாவது குற்றவாளியாக இருந்தபோது, விக்டர் ஏழாவது குற்றவாளியாக இருந்தார், ஆறாவது குற்றவாளி லொகு அதுல இருந்தார். வீரவில சிறைமுகாமிலிருந்து நான் வெலிக்கடை ஜி வார்டுக்கு அழைத்துவரப்பட்டு சிறையில் வைக்கப்பட்டேன். அப்போதே ஜி வார்டின் இரண்டாவது மாடியின் இடது பக்க கடைசி சிறைக்கூடம் அவருக்குச் சொந்தமாகிவிட்டது. இரண்டு ஆண்டுகள் நாங்கள் அந்த சிறைக்கூடத்தில் பல்வேறு உரையாடல்களில் ஈடுபட்டோம்.
வளைந்த விரல்களுக்கிடையே சிக்கிய ‘பிளேட்’ தட்டு
அவர் கரண்டியால் சாப்பிட்டார். கையால் சாப்பிடும் அளவுக்கு அவரது விரல்கள் நெகிழ்வானதாக இருக்கவில்லை. எனினும், வரிசையில் சென்று வளைந்த விரல்களுக்கிடையே சிக்கிய பிளேட் தட்டில் உணவு வாங்க அவர் பழகியிருந்தார்.
1972 ஆரம்ப மாதத்தில் நான் வெலிக்கடை ஜீ வார்டுக்கு வந்தபோது, விக்டர் நாட்டின் முற்போக்கு சிந்தனையாளர்களுக்கு ஏப்ரல் புரட்சி மற்றும் கைது செய்யப்பட்ட இளைஞர்கள் தொடர்பாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பல கடிதங்கள் அனுப்ப ஒரு வலையமைப்பை உருவாக்கியிருந்தார். இரு கைகளையும் இழந்ததை நன்மையாக கருதிய விக்டர், தனது நேரத்தை முழுவதுமாக எழுதுவதற்கும் படிப்பதற்குமாக செலவிட்டார்.
கோல்புரூக்ஸ் புகைப்பழக்கம்
எழுதும் போது விக்டர் நிறைய கோல்புரூக்ஸ் புகைத்தார். சதுர காகிதத்தில் வைக்கப்பட்ட மெல்லிய சிவப்பு சுருட்டு புகையிலையை சுருட்டி தயாரிக்கப்பட்ட பீடி போன்ற சிகரெட்டுகளை கோல்புரூக்ஸ் என்று நாங்கள் அழைத்தோம். சிகரெட்டுகளை விட இது மலிவானது. அவருக்கு இப்படி கோல்புரூக்ஸ் சுருட்டித் தந்தவர் வழக்கின் மற்றொரு குற்றவாளியான விஜேபால. அவர் ‘கெடி பாம்’ என்று நாங்கள் உற்பத்தி செய்த சீனச்சட்டி குண்டுகளை தயாரிக்கும் தொழிற்சாலையின் முழுநேர ஊழியர். அவரது தலைவர்தான் விக்டர்.
பின்னாளில் புகைப்பிடிப்புடன் ஊடகத்துறையின் பக்க விளைவான மதுபானமும் சேர்ந்து கொண்டது.
71 புரட்சி – சுய விமர்சன நோக்கு
விதுதய சிறைமுகாமில் இருந்தபோது 1971 புரட்சி தொடர்பாக நானும் இயக்கத்தின் தலைவர்களும் கொண்ட சுய விமர்சன கருத்துக்களுக்கு இணையான கருத்துக்களை விக்டரும் கொண்டிருந்தார். அதன் மூலம் எங்களுக்கிடையே நெருக்கமான உறவு உருவானது.
விஜேவீர எங்களுடன் உடன்படவில்லை. கெலீ சேனாநாயக்க, லயனல் போபகே மற்றும் ஜயதேவ உயன்கொட ஆகியோர் விஜேவீரவின் ஆதரவாளர்களாக தொடர்ந்து இருந்தனர். அவர்கள் சட்ட பாதுகாப்புக்காக உண்மையை மறைக்க வேண்டும் என்று முடிவு செய்தனர். இறுதியில் அது சட்ட பாதுகாப்பாக இல்லாமல் 71 புரட்சி பற்றிய பொய்யான அரசியல் நிலைப்பாடாக மாறியது.
லொகு அதுல தலைமையிலான குழு தங்களது தனிப்பட்ட விடுதலைக்காக அரசாங்க சாட்சிகளாக மாறினர். அதன் மூலம் அவர்கள் மற்ற குற்றவாளிகளை சிறையில் அடைக்க அரசின் கைப்பாவைகளாக மாறினர். அவ்வாறு அரச சாட்சிகளான நால்வரும் இப்போது இறந்துவிட்டனர்.
வழக்கின் தனிச்சிறப்பு வாய்ந்த நபர்
விக்டரும் நானும் ஏப்ரல் போராட்டத்தை சுய விமர்சன ரீதியாக பார்க்க வேண்டும் என்றும், சட்ட பாதுகாப்பைப் பெற போராட்டம் பற்றிய உண்மையை மறைக்கக்கூடாது என்றும் முடிவு செய்தோம். வழக்கில் நாங்கள் ஒரே நிலைப்பாட்டில் செயல்பட்டோம். வழக்கின் சந்தேக நபர்களான பியசிரி குலரத்ன மற்றும் ஆனந்த பெரேரா ஆகியோரும் அதே நிலைப்பாட்டை எடுத்தனர்.
71 போராட்டத்தை சுய விமர்சன ரீதியாக பார்க்க வேண்டும் என்ற வலுவான கருத்தை விக்டர் வழக்கில் கொண்டிருந்தார். 1971 வழக்கை விசாரித்த குற்றவியல் நீதி ஆணைக்குழுவின் தீர்ப்பில் விக்டர் “குற்றவாளிகளிடையே தனிச்சிறப்புவாய்ந்த நபர்” என அறிமுகப்படுத்தப்பட்டார். அவர் வழக்கு விசாரணையில் அந்த அளவுக்கு முக்கியத்துவம் பெற்றார். விக்டருக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டபோதிலும் அவர் விரைவில் விடுதலையானார்.
71 போராட்டம் இந்நாட்டில் நிலவும் சாதிய ஒடுக்குமுறையின் வெளிப்பாடு என்ற முடிவை விக்டர் முன்வைத்தார். அது ஒரு பக்கப்பார்வை என்பதே எனது கருத்து. நான் பார்த்த முதல் நாள் முதலே விரைவான முடிவுகளை உணர்ச்சிவசப்பட்டு முன்வைப்பது விக்டரின் குணாதிசயமாக இருந்தது.
ராவய மற்றும் தடை செய்யப்படாத எனது தொடர் கட்டுரை
விக்டர் சர்வோதயவுடன் இணைந்து ‘ராவய’ பத்திரிகையை ஆரம்பிப்பதாகக் கூற நான் அப்போது பணியாற்றிய மெர்ஜ் நிறுவனத்திற்கு வந்தார். “எல்லா கருத்துக்களுக்கும் இடமுண்டு. எழுதுங்கள்” என்று அவர் கூறினார்.
விக்டர் ராவய ஆசிரியர் பதவியிலிருந்து விலகும் வரை 2001 முதல் நான் வாராந்தம் ராவய பத்திரிகையில் எழுதினேன். விக்டரின் கருத்துக்களை விமர்சித்தும் எழுதினேன். நாங்கள் அரசியல் ரீதியாக வேறு பாதைகளில் சென்று கொண்டிருந்த போதும், அன்று விக்டர் கூறிய அந்த வார்த்தைகள் ஒருபோதும் மாறவில்லை.
ராவய பத்திரிகை ஆரம்பிக்கப்படுவதற்கு முன்பே “அனகாரிக தர்மபால மார்க்சியவாதியா?” என்ற தலைப்பில் கண்டியில் அச்சிடப்பட்டு வெளியான ‘விமசும’ பத்திரிகையில் எங்களுக்கிடையே ஒரு விவாதம் நிகழ்ந்து வந்தது. அது விக்டர் தேசிய சிந்தனை கொள்கை நோக்கி ஈர்க்கப்பட்டுக் கொண்டிருந்த காலம். நாங்கள் உடன்படாமல் இருப்பதற்கு உடன்பட்ட பல கருத்துக்கள் இருந்தன.
சமசமாஜ கட்சியில் காலி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்த பின்னர் விக்டர் ஒரு காலம் குணதாச அமரசேகரவாதியாக மாறினார். அவரைச் சந்திக்கச் சென்ற ஒரு சந்தர்ப்பத்தில், காலி தொகுதியை வெற்றி பெற வாய்ப்புள்ளதாக அவர் என்னிடம் கூறினார். அப்போது பழைய உற்சாகமான இளைஞரை என்னுடைய நினைவுக்கு வந்தது.
விக்டர் ராவய பத்திரிகையை தொடங்கிய காலத்தில் நான் வின்சென்ட் குரும்பாபிட்டிய தொகுத்த ‘விவரண’ பத்திரிகையின் முக்கிய எழுத்தாளராக இருந்தேன். குரும்பாபிட்டிய கூட 71 இளம் புரட்சியாளராக இருந்தார். அவர் பின்னர் அகால மரணமடைந்திருந்தார். விக்டர் ராவயவை இந்நாட்டின் முதன்மையான விமர்சன பத்திரிகையாக வளர்த்தெடுத்தார். நான் இன சமத்துவம் மற்றும் மனித உரிமைகள் அறிக்கையிடலை முன்னிலைப்படுத்திய ‘யுக்திய’ பத்திரிகையை தொடங்கினேன்.
‘எத்த’ பத்திரிகை கொண்டு சென்ற பாரம்பரியத்தையே நாங்கள் அவ்வாறு உரிமையாக்கிக் கொண்டோம். ‘எத்த’ பத்திரிகையின் ஆசிரியர்களான பி.ஏ. சிறிவர்தன, எஸ்.ஜி.எஸ். ரத்னவீர மற்றும் சுரத் அம்பலன்கொகே ஆகியோரே இந்நாட்டின் மாற்று பத்திரிகை துறையின் முன்னோடிகளாவர். நாங்கள் அல்லர்.
விக்டரும் நானும் ஒருபோதும் போட்டியாளர்களாக இருந்ததில்லை. நீண்டகாலமாக ஒரே நோக்கத்திற்காகப் போராடிய சகாக்கள் நாங்கள். ஒருவருக்கொருவர் செவிமடுக்கும் திறன் கொண்ட நாங்கள் இணையான பாதைகளில் பயணித்தோம்.
2001 அல்லது 2002ஆம் ஆண்டில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் நிர்வாக இயக்குநர் பதவியை ஏற்குமாறு எனக்கு அழைப்பு வந்தது. நான் விக்டரிடமும் இது பற்றி கேட்டேன். “ஏற்றுக்கொள்ளுங்கள். மாற்றத்தை உருவாக்குங்கள்” என்பதே அவரது வார்த்தைகளாக இருந்தது.
பின்னர் பத்திரிகை ஸ்தாபனத்திற்கு உதவிய நாடுகளின் தூதரகங்களுடன் நடந்த கலந்துரையாடலுக்குப் பிறகு, எனது முடிவை ஸ்தாபனத்தின் பணிப்பாளர் குழுவிற்குத் தெரிவித்தேன். அவர்கள் ஒரு நிபந்தனையை முன்வைத்தார்கள். நான் ‘ராவய’ பத்திரிகைக்கு எழுதி வந்த தொடர் கட்டுரையை நிறுத்த வேண்டும் என்பதே அந்த நிபந்தனை.
நான் விக்டரை அழைத்து இது பற்றி கூறினேன். “எழுதும் உரிமையை தடைசெய்வதாக இருந்தால், சுதந்திர ஊடகத்தின் தலைவராக இருக்கும் நீங்கள் அந்தப் பதவியை ஏற்க வேண்டாம்” என விக்டர் உடனடியாகக் கூறினார். அந்தப் பதவியின் சம்பளம் நான் பெற்று வந்த சம்பளத்தை விட மூன்று மடங்கு அதிகம். ஆனால், இதைவிட பொறுப்பு அதிகம். நான் பத்திரிகை ஸ்தாபனத்தின் பணிப்பாளர் குழுவின் தலைவர் சிங்க ரத்னதுங்கவை அழைத்து பதவியை ஏற்க முடியாது என்று தெரிவித்தேன்.
கல்லைக் கூட உடைக்கும் துணிவு இருந்த சிறந்த காலம் அது. நாங்கள் உலகை மாற்றுவதற்காக இரண்டாவது அல்லது மூன்றாவது வாழ்க்கையை வாழ்ந்த அற்புதமான, இன்பமயமான காலம்.
பின்னர் விக்டர் அரசர்களை உருவாக்கும் பாத்திரத்தை நோக்கி நகர்ந்தார், நான் மனித உரிமைகள், ஊடக சுதந்திரம் மற்றும் போருக்கு எதிரான ஊடகப் பணியை தேர்ந்தெடுத்தேன்.
ஊடகவியலாளராகவும் எழுத்தாளராகவும் ‘ராவய’ மூலம் விக்டர் செய்துகாட்டிய சாதனை சிறப்பானது. அவர் ஒரு காலகட்டத்தின் அடையாளம்.
விக்டரின் பிந்தைய அரசியல் நிலைப்பாடு குறித்து நாம் மாற்றுக் கருத்துகளை கொண்டிருக்கலாம். அவரது அனைத்து கருத்துக்களையும் ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியமில்லை.
எவ்வாறாயினும், ஊடகவியலாளர், எழுத்தாளர், ஊடக சுதந்திரம் மற்றும் நீதித்துறை சுயாதீனத்திற்கான போராளியாக வரலாற்றில் அவரது முத்திரை அழியாமல் பதிவாகி இருப்பதை யாராலும் மறுக்க முடியாது.
அத்தகைய மனிதர்கள் அரிது. அத்தகைய வெற்றிடங்களை நிரப்பவும் முடியாது.
அதற்குப் பதிலாக வேறு போராட்டத் தலைவர், தலைவிகள் உருவாகுவார்கள். வரலாற்றின் கதை இதுதான். ஏனெனில், சுதந்திரம் மற்றும் மாற்றத்திற்கான உறுதியும் ஆர்வமும் மனித ஆன்மாவின் உயிர். மரணத்திற்கு அஞ்சாமல் ஆண்கள் மற்றும் பெண்கள் முயற்சிப்பது அதனால்தான்.
நான் அறிந்த விக்டரின் ஆன்மா இவ்வாறு கூறும்: “மரணத்தின் கண்ணீரை எனக்குத் தந்து நீங்கள் வாழ்க்கையை எடுத்துக்கொள்ளுங்கள்.”
விக்டர், நிம்மதியாக உறங்குங்கள்!
சுனந்த தேசப்பிரிய