Photo, TAMILGUARDIAN

கிழக்கு மாகாணத்தில் மேய்ச்சல் தரையாக அமைச்சரவையினால் 2011ஆம் ஆண்டு அங்கீகரிக்கப்பட்ட மயிலத்தமடு – மாதவனை நிலங்கள் மீது தங்களுக்கு இருக்கும் உரிமைக்காக சித்தாண்டியில் கால்நடை வளர்ப்பாளர்களான தமிழர்கள் நடத்திவரும் அமைதிவழிப் போராட்டம் மூன்று மாதங்களையும் கடந்து நீடிக்கிறது.

தொடரும் நில அபகரிப்பு காரணமாக எண்பதுக்கும் அதிகமான கால்நடைகள் களவாடப்பட்டிருக்கின்றன அல்லது கொல்லப்பட்டிருக்கின்றன. அது தொடர்பில் உருப்படியான எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை. பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகள் குவிந்துகிடக்கின்றன. சில முறைப்பாடுகளை ஏற்றுக்கொள்வதற்கு பொலிஸார் மறுக்கிறார்கள். இதுவே மயிலத்தமடு – மாதவனை மேய்சசல் தரை நெருக்கடியின் கதையின் சுருக்கமாகும்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மட்டக்களப்புக்கு விஜயம் செய்வதற்கு முன்னதாக 2023 அக்டோபர் 7ஆம் திகதி அளவில் இரு பொலிஸ் காவல் நிலைகள் அமைக்கப்பட்ட பின்னரும் கூட இந்த அநீதியான நிலைவரம் தொடருகிறது. செங்கலடியில் உள்ள மக்களுக்கு நீதி வழங்குவதாக 2023 அக்டோபர் 8 ஜனாதிபதி அறிவித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அத்துமீறி நிலத்தை அபகரித்தவர்களில் 13 பேரை அப்புறப்படுத்துமாறு மாஜிஸ்திரேட் நீதிமன்றம் 2013 நவம்பரில் உத்தரவிட்டது. அத்துமீறல்காரர்களை வெளியேற்றுவதாக மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை 2022 ஜூலையில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளித்தது. ஆனால், எதுவும் நடக்கவில்லை.

இது ஆட்சிமுறையினதும் நிருவாகத்தினதும் அலட்சியத்தை அல்லது தகுதியின்மையை அல்லது  சிறுபான்மையினத்தவர்களுக்கான  நீதியை மலினப்படுத்தும் அதன் கொள்கையையே வெளிக்காட்டுகிறது.

போரின்போது மரணமடைந்தவர்களை இரு வாரங்களுக்கு முன்னர்  நினைவுகூர்ந்த மக்களுக்கு எதிராக பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பதில் பொலிஸார் இறங்கியிருக்கிறார்கள். விடுதலைப் புலிகளை, தனிநாட்டை அடையாளப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக அமைச்சர்களும் அரசாங்கத் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களும் பேசுகிறார்கள். ஆனால், அந்த மக்களின் உரிமைகளுக்காக குரல்கொடுக்க எவரும் இ்ல்லை.

மாவட்டத்துக்கு வெளியில் உள்ளவர்கள் தங்களது நிலங்களை அபகரிப்பதற்கு வரமுடியாமல் இருந்த காலப்பகுதியை இந்த மக்கள் ஒரு பொற்காலம் என்று அந்த மக்கள் தொடர்ந்தும் நினைப்பதில் ஆச்சரியப்பட என்ன இருக்கிறது? நிலங்களை அபகரித்து கால்நடைகளை கொலைசெய்கின்றவர்களிடம் இருந்து இந்த மக்களுக்கு அரசாங்கம் பாதுகாப்பை வழங்கவில்லை. பாதுகாப்பை வழங்கவேண்டிய அதன் கடமையை அரசாங்கம் வேண்டுமென்றே உதாசீனம் செய்கிறது.

பயிர்ச்செய்கை நிலங்களில் மேய்வதற்கு கால்நடைகளை அனுப்பக்கூடாது என்றும் அவ்வாறு செய்யத் தவறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உத்தரவிடும் மாவட்ட அதிகாரிகள் (அரசாங்க அதிபர் மற்றும் விவசாயத் திணைக்கள அதிகாரிகள் போன்றோர்) உண்மையில் தற்போது அங்கு என்ன நடக்கிறது என்பதை வசதியாக அலட்சியம் செய்கிறார்கள் போன்று தோன்றுகிறது.

அதேவேளை, தற்போது மேய்ச்சலுக்கு என்று சட்டபூர்வமாக ஒதுக்கப்பட்ட இடங்களில் அத்துமீறிப் பிரவேசித்ததாக விவசாயிகளுக்கு எதிராக வனத் திணைக்களம் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருக்கிறது.

இன்னொரு வனத் திணைக்கள அதிகாரி இந்த நிலங்கள் எல்லாம் மகாவலிக்குச் சொந்தமானவை என்றும் அவற்றின் மீது தங்களுக்கு எந்த நியாயாதிக்கமும் கிடையாது என்றும் அறிவித்திருக்கிறார். சொல்லும் செயலும் வேறாக இருக்கும் இத்தகைய குழப்பகரமான சூழ்நிலையில் கால்நடை வளர்ப்பாளர்களினதும் அவர்களது குடும்பங்களினதும் வாழ்ககை பெரும் அவலத்துக்குள்ளாகியிருக்கிறது. அதேவேளை, இந்தப் பகுதியில் எதுவும் நடக்காதது போல நாட்டின் ஏனைய பாகங்களில் மக்கள் எந்த அக்கறையும் இன்றி இருக்கிறார்கள்.

தேசிய நல்லிணக்கத்தின் முக்கியத்துவம் குறித்தும் அதில் அரசாங்கத்தின் பற்றுறுதி குறித்தும் ஐக்கிய நாடுகள், பிரிட்டிஷ் நாடாளுமன்றம், இலங்கை நாடாளுமன்றம் மற்றும் பல இடங்களிலும் இனிப்பாக பேசப்படுகிறது. ஆனால், அடிமட்டத்தில் சிறுபான்மைச் சமூகங்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு எவரும் நடவடிக்கை எடுப்பதாகத் தெரியவில்லை.

நீதித்துறை (மாஜிஸ்திரேட் நீதிமன்றம், மேல் நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றம்) தீர்ப்புகளை வழங்குவதுடனும் உத்தரவுகளை பிறப்பிப்பதுடனும் நின்றுகொள்கிறது. ஆனால், சட்டங்களை நடைமுறைப்படுத்துதல் நீதித்துறையைக் கடந்துசென்றுவிடுகிறது போன்று தெரிகிறது.

இத்தகைய பின்புலத்தில், பரவலாக கிளப்பப்படும் முக்கியமான ஒரு கேள்வி; “அவர்கள் இந்த நாட்டுக் குடிமக்களா?”

ஒருவரை எது ஒரு குடிமகனாக்குகிறது? ‘மக்களின் அதிகாரம் தான் அரசிடம் ஒப்படைக்கப்படுகிறது’ என்று அரசியலமைப்பு தெளிவாகக் கூறுகிறது. ஆனால், மக்களைப் பொறுத்தவரை அரசு எங்கே இருக்கிறது? மட்டக்களப்பின் இந்த கால்நடை வளர்ப்பாளர்களின் அவலத்துக்கு அரசே பொறுப்பு. அரசின் ‘ராடருக்குள்’ அவர்கள் இல்லை என்றே தெரிகிறது. இந்த மக்களின் உயிர்களும் சக்தியும் நம்பிக்கையும் போகும்போது அவர்கள் என்ன ஒரு பெரிய எடுப்பிலான இறுதிச் சடங்கிற்காகவா காத்திருக்கிறார்கள்?

காணாமல்போனவர்கள் பற்றி எதுவும் பேசப்படுவதாக இல்லை. பல தசாப்தங்கள் கடந்துவிட்டன. காணாமல்போனவர்களின் உறவினர்களின் போராட்டம் யாழ்ப்பாணத்தில் 2000 நாட்களைக் கடந்துவிட்டது. உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் விவகாரம் கமிட்டிகள், ஆணைக்குழுக்களில் தொடருகிறது. அதற்கும் ஒரு நாள் காணாமல்போனவர்களின் கதியே நேரும்.

தங்களது வாழ்நாளில் நாட்டுப்பிரிவினையை ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை என்று கூறிய அமைச்சர்கள் எங்கே போய்விட்டார்கள்? ஏற்கெனவே பிரிவினை இடம்பெற்றுவிட்டது.

பிரிவினை என்பது பௌதீக ரீதியான நிலப்பிரிவினை அல்ல. மக்களின் உரிமைகள் மறுக்கப்பட்டு அவர்கள் அலட்சியப்படுத்தப்படுவதில் பிரிவினை நடைமுறையில் இருக்கிறது. விவாகரத்து என்பது கணவனையும் மனைவியையும் வெவ்வேறு வீடுகளில் வாழச் செய்வதல்ல. ஒரே வீடடில் ஒரே அறையில் இருந்தாலும் கூட அவர்கள் பிரிந்து வாழமுடியும்.

இந்திய வம்சாவளி தமிழ் மக்களின் குடியுரிமை பறிப்பு, 1956 தனிச்சிங்களச் சட்டம், பிறகு பல வருடங்கள் கடந்து பல்கலைக்கழக அனுமதியில் தரப்படுத்தல் மற்றும் பதவி நியமனங்கள்  உட்பட பல பாகுபாடான நடவடிக்கைகள் மூலமாக சுதந்திரம் பெற்ற நாளில் இருந்தே நாட்டில் விவாகரத்து இடம்பெற்றுவிட்டது.

நாடாளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சி என்ற அடிப்படையில் அரசியலமைப்புப் பேரவைக்கு பொருத்தமான உறுப்பினரின் பெயரை அறிவித்த போதிலும் கூட அந்த நியமனம் இன்னமும் செய்யப்படவில்லை.

மாகாண சபை தேர்தல்களுக்கு என்ன அவசரம் என்று ஜனாதிபதி கேட்கிறார். ஆட்சிமுறையின் பாகுபாடான நடவடிக்கைகளின் விளைவான வேதனைக்குப் பிறகு வகுக்கப்பட்ட ஒரு ஏற்பாடே மாகாண சபைகள் என்பதை விளங்காதவராக அவர் பேசுகிறார்.

நாட்டில் என்ன பிரச்சினை என்றும் அவர்கள் கேட்கிறார்கள். நாடாளுமன்றத்துக்கு அது தெரியவில்லைப் போலும். மக்களுக்கு பொருளாதாரப் பிரச்சினைகள்  இருக்கிறதா என்றும் கேள்வி கிளம்புகிறது. வாழ்க்கை வழமை போன்று இருப்பதாகவே ஒரு தோற்றப்பாடு காட்டப்படுகிறது. டுபாய்க்கு பறந்து ஆகாயத்தில் திட்டங்கள் தீட்டப்படுகின்றன.

அதேவேளை பட்டினி கிடக்கும் மக்களின் தொகை அதிகரித்த வண்ணமே இருப்பதாக சர்வதேச அறிக்கைகள் கூறுகின்றன. விவசாயிகள், கால்நடை வளர்ப்பாளர்கள், உற்பத்தியாளர்கள் பல்வேறு இடர்பாடுளை எதிர்நோக்குகிறார்கள். பங்கீடுகளை விநியோகித்து திருப்பதிப்படுத்துவதற்கு அப்பால் அவர்களின் பிரச்சினை சென்றுவிட்டது.

மயிலத்தமடு – மாதவனைப் பிரச்சினை மேய்ச்சல் தரையுடன் சம்பந்தப்பட்ட பிரச்சினை மாத்திரமல்ல. அது ஆட்சிமுறை, மக்களின் உரிமைகள் (குறிப்பாக சிறுபான்மையினத்தவர்களின் உரிமைகள்), சமூகத்தில் சமத்துவத்தைப் பேணுவதில் அரசாங்கத்துக்கு இருக்கும் விருப்பம் மற்றும் ஆற்றலுடன் சம்பந்தப்பட்ட பிரச்சினையுமாகும்.

மக்களுக்கு நீதியையும் சமத்துவத்தையும் உறுதி செய்யக்கூடியதாக  தீர்வுகளைக் காணக்கூடிய பிரச்சினைகளைக் கையாளுவதில் ஜனநாயகத்தின் தூண்களுக்கு (நீதித்துறை, நிறைவேற்று அதிகாரபீடம், சட்டவாக்க சபை) இருக்கக்கூடிய ஆற்றல் துரதிர்ஷ்டவசமாக நாளாந்தம் அருகிக்கொண்டே போகிறது போன்றே தெரிகிறது.

பேராசிரியர் ஜெயசிங்கம்
கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர்