Photo, Ishara S Kodikara/AFP/ THE GUARDIAN

கொவிட்-19 மற்றும் அதனைத் தொடர்ந்து இலங்கை எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடியின் மத்தியில் சமூகப் பாதுகாப்பின் நிலை தொடர்பான ஆய்வு ஒன்று பொருளாதார நீதிக்கான பெண்நிலைவாதக் குழுமத்தினால் கொழும்பு, மட்டக்களப்பு, யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி ஆகிய பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டது.

ஆய்வினூடான அவதானிப்புகள்

வேலைவாய்ப்புகள் குறைவடைகிறது, வாழ்க்கைச் செலவு அதிகரிக்கிறது. இதன் மத்தியில் உணவு, கல்வி, மருத்துவம் போன்ற அடிப்படை தேவைகளைப் பூர்த்தி செய்வது சுமையாக மாறியுள்ளது. மக்கள் கடன் நிலைக்குள் தள்ளப்படும் அளவு சடுதியாக அதிகரித்துள்ளது. இவற்றை ஆய்விற்கூடாக அவதானிக்க முடிந்தது.

இந்த நிலையில், அரசின் தற்போதைய சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றமுடியாத சிறியளவு பணத்தை வழங்குகின்றன. அதிகூடிய பணவீக்கம் ஏற்பட்டுள்ள சூழலில் கிடைக்கும் இச்சிறிய பண உதவியை உணவு, கல்வி, மருத்துவம் போன்ற அத்தியாவசிய தேவைகளில் எந்தத் தேவைக்காகப் பயன்படுத்துவது என்ற ஒரு குழப்பம் மக்கள் மத்தியில் உள்ளது. உலக நாணய நிதியம் மற்றும் உலக வங்கியினால் முன்மொழியப்பட்ட அஸ்வெசும திட்டத்தின் கீழ் அண்மையில் நடத்தப்பட்ட தேர்வில் தற்போது பயனாளர்களாக இருப்பவர்கள் உட்பட தேவையுடைய பலர் இத்திட்டங்களுக்குள் உள்வாங்கப்படவில்லை.

உடனடித் தாக்கங்களாக மேற்கூறப்பட்டவை காணப்படினும் மக்கள் நீண்டகால வரலாற்று பின்னணிகளின் தாக்கத்துடனே இந்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதையும் அவதானிக்க முடிந்தது. அந்த வகையில் பிராந்திய ரீதியாக வடக்கை எடுத்து பார்க்கும்போது அது இலங்கையின் ஏனைய பகுதிகளில் இருந்து முற்றிலும் வேறுபட்ட ஒரு அனுபவத்தைக் கொண்டதாக இருக்கிறது.

வடக்கின் அனுபவம்

எழுமாறாக ஆய்வுக்குள் உள்வாங்கப்பட்ட குடும்பங்களின் வரலாற்றில் காணப்பட்ட ஒற்றுமையான விடையமாக யுத்தத்துடன் ஏற்பட்ட வாழ்வாதார பாதிப்புகள் இருந்தது. அவர்கள் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்தபோது 1995 இலிருந்து 2009ஆம் ஆண்டுவரை பல தடவைகள் இடப்பெயர்வுகளை சந்தித்துள்ளதாகவும், ஒவ்வொரு தடவையும் தாம் சிறிது சிறிதாக சேமித்த அத்தனையும் இழந்த விரக்தியின் மத்தியில் ஆரம்பத்தில் இருந்து தமது வாழ்க்கையை மீள கட்டியெழுப்பும் சுமையை முழுமையாக சுமக்க வேண்டியிருந்ததாகவும் கூறியிருந்தனர்.

யுத்தம் நிறைவடைந்து ஒன்றரை தசாப்தங்களானாலும் இன்றுவரை இவ் வரலாற்றுப் பின்னணி கிராமப்புற பொருளாதாத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இங்கு போரினால் பாதிக்கப்பட்ட மக்களாக இவர்களை வெளிக்காட்டுவது கட்டுரையின் நோக்கமல்ல, மாறாக அரசாங்கத்தின் கிராமப்புற அபிவிருத்தி கொள்கைகளில் காணப்பட்ட குறைபாடுகளும் அதன் தொடர்ச்சியாக மக்கள் எதிர்கொள்ளும் சவால்களையும் வெளிப்படுத்துவதாக இருக்கிறது.

மக்கள் தங்கள் அனுபவங்களுக்கூடாக கூறுவது, யுத்தம் நிறைவடைந்து மீள்குடியேற்றங்கள் நடைபெற்றபோது வீட்டுத்திட்டங்கள் மட்டுமே வழங்கப்பட்டது. வாழ்வாதாரங்களை முன்கொண்டுபோவதற்கு நிலையான உதவிகள் வழங்கப்பவில்லை. இவ்வீடுகளை முழுமையாக கட்டிமுடிப்பதற்குக் கூட விடுவிக்கப்பட்ட நிதி போதவில்லை. இதனால் கடன்களை பெறவேண்டிய ஒரு சூழலும் உருவாகியிருந்தது.

வாழ்வாதார உதவிகளைப் பொறுத்தவரை, எப்போதாவது ஒரு சில தடவை அரசினால் வழங்கப்படும் பயனாளர் தெரிவு நிபந்தனைகளுக்கமைவான சில உதவிகளும் நிறுவனங்களிடமிருந்து பகுதி அளவிலான நன்கொடைகளுமே கிடைத்தன. வாழ்வாதாரத்தை நிலையாகக் கட்டியெழுப்புவதற்கு இத்திட்டங்கள் தொடர்ச்சி தன்மையற்றவையாகவும் பகுதியளவிலான உதவியை வழங்குவதாகவும் இருந்தன. தமக்கான பொருத்தப்பாடுடைய வாழ்வாதாரங்களை கட்டியெழுப்பும் முயற்சியில் மக்கள் நுண்நிதி கடன் பொறிக்குள் சிக்கினர். இதனால் ஏற்பட்ட பாதிப்புக்களின் உச்ச நிலையை 2016 – 2017ஆம் ஆண்டுகளில் நாம் கண்கூடாகக் காணக்கூடியதாக இருந்தது.

நுண்நிதி கடன்பொறியிலிருந்து முற்றாக மீள்வதற்கு முன்னரே கொவிட்-19 நெருக்கடியை எதிர்கொள்ள வேண்டிய ஒரு நிர்பந்தம் ஏற்பட்டது. இதன்போது வெளியே வேலைக்குச் செல்ல முடியவில்லை. அந்த நேரம் அரசிடமிருந்தும், நன்கொடையாளர்களிடமிருந்தும் கிடைத்த ஒரு சில நிவாரண உதவிகளும் மக்கள் அந்த நெருக்கடியை கடந்து வருவதற்கு தற்காலிகமாக உதவின. வாழ்வாதார முதலீடுகளுக்காக எடுத்த கடன்களால் வருமானத்தை ஈட்டமுடியவில்லை. கடனை மீளசெலுத்துவதற்கான காலநீடிப்புகள் வழங்கப்பட்டன. இருப்பினும், அவர்கள் கடன்களை மீளச்செலுத்த வேண்டியவர்களாகவே இருந்தனர்.

வாழ்வாதாரத்தின் தற்போதைய நிலை

தற்போது நாட்கூலி தொழிலாளர்களுக்கு ஒரு வாரத்தில் 3 அல்லது 4 நாட்கள் மட்டுமே  வேலைவாய்ப்புகள் காணப்படுகின்றன. கூலித்தொழிலாளியின் ஒரு நாளுக்கான கூலி 1,500 ரூபாவில் இருந்து 2,500 ரூபாவாக அதிகரித்திருப்பினும், ஒரு நாளுக்கான குடும்பச்செலவு 2,500 – 3,000 ரூபாவாக அதிகரித்துள்ள வாழ்க்கை செலவுகள் மத்தியில் போதியதாகவில்லை.

விவசாயிகளும் கடற்றொழிலாளர்களும் தமது முதலீட்டுக்கேற்ற விளைச்சலையும் உற்பத்திகளுக்கு ஏற்ற நியாயமான விலையையும் பெறமுடியாமல் இருக்கிறார்கள். கொவிட்-19க்கு முன்பு, ஒரு ஏக்கர் நெல் உற்பத்தி செய்வதற்கு 50,000 ரூபா செலவாகும். அதன் மூலம் 30 மூடை விளைச்சலைப் பெற முடியும். உணவுத் தேவைக்காக எடுத்தது போக ஏனையவற்றை விற்று சிறிய இலாபமும் கிடைக்கப்பெற்றது. தற்போது நெல் உற்பத்திக்கு 140,000 ரூபா செலவாகின்றது (அரச மானியங்கள் உள்ளடங்கியதான யூரியாவின் விலை மட்டுமே 1,500 ரூபாவிலிருந்து 10,000 ரூபாவாக அதிகரித்துள்ளது), விளைச்சலும் குறைவடைந்துள்ளது. அரசாங்கம் நெல்லின் விற்பனை விலையை ஒரு மூடை 5,000 ரூபாவாக நிர்ணயித்திருக்கிறது. கடற்றொழிலாளர்கள் ஒரு நாள் தொழில் செல்வதற்கு 40 – 60 லீற்றர் மண்ணெண்ணெய் தேவைப்படுகிறது. முன்பு 1 லீற்றர் எண்ணெய் 87 ரூபாவாக இருந்து 380ரூபாவாக அதிகரித்து தற்போது 245 ரூபாவாக உள்ளது.

இவ்வாறான வாழ்வாதார நெருக்கடி மத்தியில் ஒவ்வொரு நாளும் உண்பதும், உடுப்பதும் கல்விகற்பதும் பாரிய சவாலாக மாறியுள்ளது. பெரும்பாலான வீடுகளில் இக்குறைந்த வருமானத்தில் குடும்பத்தை நிர்வகிப்பது என்பது பெண்களுக்கு பாரிய அழுத்தமாக மாறியிருக்கிறது. அதேநேரம் இவற்றிலிருந்து தம்மை விடுவிக்க அக்குடும்பத்தின் பெண்கள் சில முயற்சிகளையும் செய்கிறார்கள். அதாவது கிராம மட்டங்களில் உள்ள கூட்டுறவு அமைப்புகளிலும் சிறு குழுக்களிலும் தங்களால் இயன்றபோது சிறிய அளவிலாவது சேமிப்பதன் மூலமும், தேவைப்படும்போது கடன் வாங்குவதன் மூலமும் தங்கள் பணத்தை நிர்வகிப்பதற்கு அவர்கள் முயல்கின்றனர். ஆனால், நிதிக்கான தேவை அதிகரிப்பதால் அதை தமக்கான வாய்ப்பாகக் கருதி நுண்நிதி நிறுவனங்களும் புதிய தந்திரோபாயங்களுடன் மீண்டும் மக்களிடம் வருகிறார்கள். தாம் இக்கடன்களால் பாதிக்கப்படுகிறோம் என்பதைத் தெரிந்தும் கூட வேறு வழிகள் இல்லாமல் மக்களும் அவர்களிடம் கடன்பெறுகின்றனர்.

தற்போது மக்கள் கடன் நிலைக்குச் செல்வது யுத்தத்தின் பின்னரான நிலையிலிருந்து வேறுபட்டதாக இருக்கிறது. ஏனெனில், வருமான இழப்புகள் மத்தியில் ஏற்கனவே பெற்ற கடன்களை மீளச்செலுத்தவும் வேண்டும், அதேநேரம் அதிகரித்துள்ள வாழ்க்கை செலவுகள் மத்தியில் நாளாந்தம் உண்பதற்கும், உடுப்பதற்கும் கல்விகற்பதற்கும் கூட கடன்களை பெறவேண்டும். இதனால் மீளமுடியாத ஒரு கடன் சுழலுக்குள் சிக்குகின்றனர். வாழ்க்கை முழுவதும் கடன்களுடன் வாழவேண்டிய நிர்பந்தத்திற்குள் தள்ளப்படுகிறார்கள். கூட்டுறவு மற்றும் சிறு குழுக்கள் செயற்படும் இடங்களில் அவற்றுக்கூடாக செய்யப்படும் சிறிய சேமிப்புகளும், அதை அடிப்படையாக வைத்து வழங்கப்படும் கடன்களும் முற்றாக கடன்சுழலுக்குள் மூழ்கிவிடாமல் மக்களை தற்காலிகமாக பாதுகாக்கின்றன. ஆனால் இப்படியே எத்தனை காலங்களுக்கு தொடரமுடியும்?

எதிர்காலம்

காலத்திற்கு காலம் நெருக்கடிகள் ஏற்படும்போது குடும்பங்கள் தங்களின் வாழ்வாதாரங்களை இழப்பதும், கடன்பொறிக்குள் சிக்குவதும் மீண்டும் மீண்டும் ஏற்படுகின்றது. வாழ்வாதார வாய்ப்புகள் குறைவடையும்போது உணவா? கல்வியா? என்ற தெரிவுக்கு நடுவில் மக்கள் திண்டாடுகின்றனர். இது நீண்டகாலத்தில் சமூக பொருளாதார அபிவிருத்தியில் பாரிய தாக்கத்தை செலுத்தும். இந்தச் சூழலில் சமூகப் பாதுகாப்புக்கான திட்டங்கள் முக்கியத்துவமானவையாக இருக்கின்றன.

சமூகப் பாதுகாப்பு என்பதில் உணவு, உறையுள், கல்வி, மருத்துவம் என்பவற்றுடன் கிராமப்புற அபிவிருத்திக்குப் பொருத்தமான வாழ்வாதாரங்கள், கடன் மற்றும் சந்தைப்படுத்தல் வாய்ப்புகளும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். யுத்தம் நிறைவடைந்தவுடன் அதற்கான ஒரு தேவை காணப்பட்டபோதும் அரசிடம் கிராமப்புற வாழ்வாதார அபிவிருத்திக்கான நிலையான அபிவிருத்தித் திட்டம் இருக்கவில்லை. தற்போதைய நெருக்கடியுடன் கிராமப்புற பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்வதற்கான கொள்ளைகளை உருவாக்குவதற்கான ஒரு வாய்ப்பு மீண்டும் உருவாகியுள்ளது. இந்தச் சூழலில் கடந்த ஜூன் முதலாம் திகதி ஜனாதிபதி ஆற்றிய 2048ஆம் ஆண்டை நோக்கிய அபிவிருத்தி திட்டமிடல் தொடர்பான உரையில் இவை கவனத்தில் கொள்ளப்படாமல் இருப்பது அரசாங்கத்தின் அஜாக்கிரதையாகப் பார்க்கப்படவேண்டி உள்ளது. தமக்கான அபிவிருத்தி என்னவாக இருக்க வேண்டும் என்பதை மக்கள் தீர்மானிக்க வேண்டும்.

சுகன்யா காண்டீபன்
(பொருளாதார நீதிக்கான பெண்நிலைவாதக் குழுமம்)