Photo, ECONOMYNEXT

2023 பட்ஜெட் கணிசமான பெரும்பான்மை வாக்குகளினால் நிறைவேறியமை பாதகமான சூழ்நிலைக்கு மத்தியிலும் அரசாங்கத்தின் நாடாளுமன்ற பெரும்பான்மை உறுதியாக இருக்கிறது என்பதை நிரூபிக்கிறது. ஆளும் கட்சி இருபதுக்கும் அதிகமான அதன் உறுப்பினர்களை இழந்துவிட்டது. அவர்கள் இப்போது கட்சியின் நிலைப்பாடுகளை பின்பற்றுவதில்லை. ஏனைய உறுப்பினர்கள், தெளிவான தலைமைத்துவம் இல்லாவிட்டாலும் கூட ஒன்றிணைந்து நிற்கிறார்கள் போன்று தெரிகிறது.

பிரிந்துசென்ற குழுக்களில் ஒன்றுக்கு தலைமைதாங்கும் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் ஆளும் கட்சி உறுப்பினர்களை கடுமையாக கண்டனம் செய்தார். எந்த ஆணை மீது கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அந்த உறுப்பினர்கள் மக்களால் தெரிவுசெய்யப்பட்டார்களோ அந்த ஆணைக்கு அவர்கள் துரோகமிழைத்துவிட்டதாக அவர் கூறினார். அரசுக்குச் சொந்தமான பொருளாதார நிறுவனங்கள் உட்பட அரச சொத்துக்களைப் பாதுகாப்பதாக முன்னைய தேர்தல்களின்போது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மக்களுக்கு வாக்குறுதியளித்தது.

பொதுஜன பெரமுன கடந்த தேர்தல்களில் முன்வைத்த சொந்த விஞ்ஞாபனங்களை கைவிட்டு இப்போது விசுவாசத்தை ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு காட்டுவதாக பேராசிரியர் நாடாளுமன்றத்தில் கடுமையான வார்த்தைப் பிரயோகங்களுடன் கூடிய உரையில் குற்றஞ்சாட்டினார்.

2019 நவம்பர் ஜனாதிபதித் தேர்தலிலும் 2020 நாடாளுன்ற தேர்தலிலும் அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களை மேலும் அபிவிருத்தி செய்து நவீனமயப்படுத்துவதாக வாக்காளர்களுக்கு திரும்பத்திரும்ப உறுதியளித்த பொதுஜன பெரமுன, நிதியமைச்சர் என்ற வகையில், இலாபத்தில் இயங்கும் அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களைக் கூட விற்றுவிடுவதற்கு திடசங்கல்பம் பூண்டிருக்கும் ஜனாதிபதி விக்கிரமசிங்கவுக்கு ஆதரவை வழங்குகிறது என்று பேராசிரியர் சுட்டிக்காட்டினார். ஸ்ரீலங்கா இன்சூரன்ஸ் மற்றும் ஸ்ரீலங்கா ரெலிகோம் உட்பட பல அரச நிறுவனங்களை தனியார்மயப்படுத்துவது குறித்து ஜனாதிபதி யோசனைகளை முன்வைத்திருக்கிறார்.

அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களை பாரிய மாற்றங்களுக்கு உட்படுத்துவதற்கு பாதை திறந்துவிடப்படுகின்றது என்பதை அரசாங்கத்தின் பட்ஜெட் யோசனைகள் தெளிவாகக்காட்டுகின்றன. அந்த நிறுவனங்களைப் பாதுகாக்கவேண்டும் என்று முன்னர் பேசிய ஆளும் கட்சி உறுப்பினர்கள் தங்களது நிலைப்பாட்டை மாற்றவேண்டிய தேவை குறித்து இப்போது விளக்கமளித்துக்கொண்டிருப்பதை காணக்கூடியதாக இருக்கிறது.

இலங்கை அதன் சொத்துக்களில் சிலவற்றை விற்பனை செய்வதன் மூலமாக வெளிநாட்டு செலாவணிக் கையிருப்பை அதிகரிக்காவிட்டால் சர்வதேச வாணிப முறைமையின் ஒரு அங்கமாக இருக்கமாட்டாது என்று  அமைச்சர் பந்துல குணவர்தன கூறினார். வெளிநாட்டு நாணயக் கையிருப்பை 300 கோடி டொலர்களுக்கும் அதிகமாக அதிகரிக்காவிட்டால் இலங்கையின் வங்கிகளினால் வழங்கப்படும் கடன் பத்திரங்களை சர்வதேச கம்பனிகள் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை.

திடீர் மாற்றம்

ஆளும் கட்சி உறுப்பினர்களின் நிலைப்பாட்டில் ஏற்பட்ட திடீர் மாற்றத்தின் பின்னால் உள்ள உண்மையான அரசியல் (Realpolitik) நடைமுறைச்சாத்தியமான இலக்குகளை அடிப்படையாக கொண்ட அரசியலாகும். இங்கு இலட்சியங்களை விடவும் தப்பிப்பிழைப்பதே நோக்கமாகும். ஒரு வருடத்துக்கு முன்னர் நாட்டை உலுக்கிய பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து மூண்ட போராட்ட இயக்கம் ஜனாதிபதியினதும் பிரதமரினதும் செயலகங்களையும் உத்தியோகபூர்வ வாசஸ்தலங்களையும் முற்றுகையிட்டு அதன் உச்சக்கட்டத்தை அடைந்தது.

அந்தப் போராட்ட இயக்கம் ஜனாதிபதியையும் பிரதமரையும் பதவிவிலக வைத்து மக்களுக்கு முகங்கொடுக்கக்கூடிய நம்பகமான எந்த தலைமைத்துவத்தையும் ஆளும் கட்சிக்கு  இல்லாமலாக்கியது. இத்தகைய பின்புலத்தில்தான் தனது கட்சியின் தனியொரு உறுப்பினராக நாடாளுமன்றத்தில் அங்கம் வகித்த – ஐந்து தடவைகள் பிரதமாக இருந்த – விக்கிரமசிங்க  சவாலை ஏற்று ஆளும் கட்சிக்கு தனது தலைமைத்துவத்தை வழங்க முன்வந்தார்.

போராட்ட இயக்கத்தை படைபலத்தை பயன்படுத்தி ஒடுக்கியமை, அரசாங்கத்தின் அண்மைய வரிக்கொள்கை மற்றும் ஊழல் தொடர்பில் உறுதியான கொள்கையின்மை என்று ஜனாதிபதி விக்கரமசிங்கவின் சில நடவடிக்கைகள் கடுமையான கண்டனத்துக்கு உள்ளாகியிருக்கின்றன. ஆனால், ஜனாதிபதி அரசாங்கத்தின் கடிவாளத்தை தனது கையில் எடுத்த பிறகு போராட்ட இயக்கத்துக்கான ஆதரவு வெகுவாக குறைந்து போனதுடன் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட வெளியில் வருபவர்களின் எண்ணிக்கையும் குறைந்தது.

கடுமையான பொருளாதார இடர்பாடுகள் தங்களது நுகர்வையும் சேமிப்புகளையும் பெருமளவில் குறைத்துக்கொள்ள மக்களை நிர்ப்பந்திக்கிறது. குறைந்தபட்சம் தற்போதைக்காவது மக்கள் இடர்பாடுகளை மௌனமாக பொறுத்துக்கொண்டிருக்கிறார்கள். கைத்தொழில் பகுதிகளில் ஆங்காங்கே சிறிய ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறுவதை காணக்கூடியதாக இருக்கிறது. ஆனால், அவை பலமிக்க போராட்ட இயக்கமாக மாறுவதற்கான அறிகுறிகளை இன்னமும் காணவில்லை.

விரைவில் பொருளாதார மீட்சி பற்றிய நம்பிக்கையும் பாதுகாப்பு படைகள் பற்றிய பயமும் பெரும் எடுப்பிலான இன்னொரு சுற்று போராட்டத்துக்கு தயங்கும் மக்களின் விருப்புகளை தொடர்ந்து அடக்கிக்கொண்டிருக்கின்றன. இருந்தபோதிலும், போராட்ட இயக்கம் உச்சக்கட்டத்தில் இருந்தபோது மக்களுக்கு முகங்கொடுக்க முடியாமல் இருந்த ஆளும் கட்சி உறுப்பினர்கள் இப்போது கூட மக்களுக்கு பயந்தவர்களாகவே இருக்கிறார்கள். தாங்கள் கடந்த காலத்தில் கடைப்பிடித்த அடிப்படை நிலைப்பாடுகளுக்கு எதிராக தற்போது செயற்படவேண்டியிருந்தாலும் கூட ஒன்றிணைந்து நிற்பதற்கு அவர்கள் விரும்புகிறார்கள் போன்று தெரிகிறது.

தங்களது நிலைப்பாடுகளில் ஏற்பட்ட மாற்றத்தை நியாயப்படுத்திய அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன, “நாடுகளின் கடனை திருப்பிச்செலுத்தும் ஆற்றல் பற்றி மதிப்பிடும் சர்வதேச நிறுவனமான ஃபிற்ச்  இலங்கையை மீண்டும் தரம் குறைத்திருக்கிறது. இலங்கையை யார் ஆட்சி செய்தாலும் அவர்கள் அதே பிரச்சினையை எதிர்கொள்வார்கள். நாம் எமது வெளிநாட்டு நாணய கையிருப்பை கட்டியெழுப்பவேண்டியது அவசியமாகும்” என்று கூறினார்.

முன்கூட்டியே தயாரான தீர்வு

இத்தகைய இடர்மிக்க சூழ்நிலையில், ஜனாதிபதி விக்கிரமசிங்க தாமதமின்றி நாட்டின் இனநெருக்கடிக்குத் தீர்வைக்கண்டு தேசிய நல்லிணக்கத்தைக் கொண்டுவரும் தனது நோக்கத்தை அறிவித்திருக்கிறார். இதற்கு அவர் இலங்கை அதன் 75ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடப்போகும் அடுத்த வருடம் பெப்ரவரி 4ஆம் திகதியை இலக்காக தெரிவுசெய்திருக்கிறார். இது சாத்தியமற்ற ஒரு கனவு என்று நிராகரிக்கப்படக்கூடும்.

இனநெருக்கடி என்பது பிரிட்டிஷாரிடமிருந்து இலங்கை சுதந்திரம் பெற்ற காலத்தில் இருந்து நீடித்துவருகின்ற ஒன்றாகும். இந்த நெருக்கடி சுதந்திரத்துக்கு வெகு முன்னதாகவே காலனித்துவ ஆட்சியாளர்களினால் அடையாளம் காணப்பட்டதாகும். இலங்கையின் தலைவர்கள் சிலரால் முன்வைக்கப்பட்ட சுயாட்சிக்கான கோரிக்கைக்குப் பதிலளித்த காலனித்துவ ஆட்சியாளர்கள், “இலங்கையில் வாழ்பவர்கள் ஐக்கியம் மற்றும் ஒத்துழைப்பு உணர்வை பெருமளவுக்கு வெளிக்காட்டியிருந்தால் முழுமையான பொறுப்புவாய்ந்த அரசாங்கத்தை அவர்களிடம் கையளிப்பதற்கு இருக்கக்கூடிய தடை நீங்கியிருக்கும்” என்று குறிப்பிட்டனர்.

பிரிட்டிஷ் காலனித்துவவாதிகளினால் அடையாளம் காணப்பட்ட இலங்கைச் சமூகத்தின் பிளவுபட்ட தன்மையை இன நெருக்கடிக்கு அரசியல் தீர்வு முன்வைக்கப்பட்ட சகல சந்தர்ப்பங்களிலும் காணக்கூடியதாக இருந்தது.

1957 பண்டாரநாயக்க – செல்வநாயகம் ஒப்பந்தம் கிழித்தெறியப்பட்டது. அதைத் தொடர்ந்து வந்த 1965 டட்லி சேனநாயக்க – செல்வநாயகம் ஒப்பந்தத்தையும் நடைமுறைப்படுத்த முடியவில்லை. 1987 இந்திய – இலங்கை சமாதான உடன்படிக்கையை ஓரளவுக்கு மாத்திரமே நடைமுறைப்படுத்தப்பட்டது. 2000 சந்திரிகா குமாரதுங்கவின் அரசியலமைப்பு வரைவு நாடாளுமன்றத்தில் எரிக்கப்பட்டது. மஹிந்த ராஜபக்‌ஷ ஆட்சிக்காலத்தில் 2010 சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவின் யோசனைகளை அரசாங்கம் பரிசீலனைக்குக் கூட எடுக்கவில்லை. சிறிசேன – விக்கிரமசிங்க அரசாங்க காலத்தில் 2015 அரசியலமைப்புச் சபை பல்வேறு யோசனைகளை முன்வைத்தது.

மறு வார்த்தைகளில் கூறுவதானால், இனநெருக்கடிக்கான அரசியல் தீர்வு பல தடவைகள் தயாரிக்கப்பட்டன. அந்தத் தீர்வுகள் அந்தந்த காலகட்டங்களில் பதவியில் இருந்த அரசாங்கங்களினால் அல்லது அவற்றில் இருந்த சில பிரிவினரால் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய சூழ்நிலையும் இருந்தது. ஆனால், எதிரணியினால் நிராகரிக்கப்பட்டன.

இத்தடவை இலங்கையின் வரலாற்றிலேயே மிகவும் தீவிரமான இராணுவவாத – இனத்துவ தேசியவாத கட்சி என்று அடையாளப்படுத்தக்கூடிய பொதுஜன பெரமுன அதன் குறுகியகால ‘உயிர்வாழ்வுக்காக’ இனவாதமற்ற ஒரு அரசியல் தலைவர் மீது தங்கியிருக்கிறது. இது மீண்டும் வரமுடியாத ஒரு  வாய்ப்பாகும். இதைப் பயன்படுத்தவேண்டியது அவசியம்.

அடுத்த சுதந்திர தினம் அளவில் இனநெருக்கடிக்கு தீர்வு காணப்போவதாக ஜனாதிபதி விக்கிரமசிங்க செய்யும் அறிவிப்பு பட்ஜெட்டை நிறைவேற்றியதில் காட்டிய செயற்திறமையை இனநெருக்கடிக்கான அரசியல் தீர்விலும் காட்டமுடியும் என்ற அவரது நம்பிக்கையை பிரதிபலிப்பதாக இருக்கலாம். அந்தத் தீர்வுக்கான உருவரைபுகள் ஏற்கெனவே தயாரிக்கப்பட்டிருக்கின்றன.

நாடு ஒன்றுபட்டுச் செயற்படாவிட்டால் எதிர்காலம் என்று ஒன்று இருக்கமுடியாது. தற்போதைய நெருக்கடியை நாடு கையாள ஒன்றுபடுவதற்கு அரசியல் தீர்வு அடிப்படை என்று தோன்றுகிறது.

கலாநிதி ஜெகான் பெரேரா