Photo, Selvaraja Rajasegar
நாட்டில் மக்கள் பொருளாதார நெருக்கடியினால் அவதியுறும் நிலையைக் கூட பொருட்படுத்தாமல் ஒடுக்கும் வகையில் அமைந்த மற்றும் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் சட்டங்களை இயற்றும் முயற்சிகளை அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது, புனர்வாழ்வுப் பணிமனைச் சட்டமூலம் இதற்கான மிகவும் அண்மைய உதாரமாக அமைகின்றது.
சட்ட வரைவிலக்கணங்கள் அற்ற நிலை
முன்மொழியப்பட்டுள்ள சட்டத்தின் பிரயோகம் மிக்க நபர்களில் முன்னாள் போராளிகள், அழிவை ஏற்படுத்தும் தீவிரமான நாச வேலைகளில் ஈடுபடும் நபர்கள் (வன்முறை தீவிரவாதக் குழுக்களின் உறுப்பினர்கள்), போதைப் பொருட்களுக்கு அடிமையான நபர்கள் அத்துடன் சிகிச்சைகள் மற்றும் புனர்வாழ்வு அவசியப்படும் வேறு எந்த நபர்களின் குழுக்களும் உள்ளடங்குகின்றனர்.
இந்தச் சட்டம் பிரயோகம் ஆகும் நபர்களை விபரிக்கப் பயன்படுத்தப்பட்டுள்ள எந்தவொரு பதமும் இலங்கையில் சட்டரீதியாக வரையறுக்கப்படவில்லை. உதாரணமாக, “அழிவை ஏற்படுத்தும் தீவிரமான நாச வேலைகளில் ஈடுபடும்” நபர் எனக் கருதப்படும் ஒருவரை வரையறுக்க என்ன வரைமுறை பயன்படுத்தப்படவுள்ளது? உலகளாவிய ரீதியில் பயங்கரவாதம், வன்முறைத் தீவிரவாதம் மற்றும் தீவிரமயமாதல் போன்ற பதங்களுக்கு உடன்பாடு காணப்பட்ட சட்டரீதியான வரைவிலக்கணங்கள் இதுவரை எட்டப்படவிலலை. இப்பதங்கள் கலவையாக்கப்பட்டு பல நாடுகளில் அரசாங்கங்களின் எதேச்சையான மற்றும் துஷ்பிரயோகம் மிக்க நடவடிக்கைகளை நியாயப்படுத்தும் ஆயுதங்களாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இலங்கையில், உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பின்னர், நாட்டின் தேசிய பாதுகாப்பு கட்டமைப்பின் சொற்பட்டியலுக்குள் இப்பதங்களும் புகுத்தப்பட்டு சட்டத்தினால் வரையறுக்கப்படாத மற்றும் வகைப்படுத்தப்படாத தெளிவற்ற குற்றங்கள் உருவாக்கப்படுவதை இவை இயலுமாக்கியுள்ளதுடன் அரசாங்கத்தின் எதேச்சையான நடவடிக்கைகள் மற்றும் மனித உரிமை மீறல்களை நியாயப்படுத்துவதற்கும் இப்பதங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
தீவிரவாத சித்தாந்தங்கள் என்ற விடயம் பரவலாகப் பயன்படுத்தப்பட்ட போதும் அச்சித்தாந்தங்களில் உள்ளடங்கியுள்ள விடயங்கள் எவை, அவ்வாறான யோசனைகளைக் கொண்டுள்ள நபர் எவ்வாறு தீவிரமயமாகின்றார் மற்றும் அவ்வாறான நபர் ஒருவர் சமூகத்துக்கு எப்போது அச்சுறுத்தல் மிக்கவராக மாறுகின்றார் என்பன போன்ற விடயங்களில் இன்னும் ஒரு பொது உடன்பாடு எட்டப்படவில்லை. எவ்வாறாயினும், பல நாடுகள் நபர்கள் மேற்கொள்ளும் செயற்பாடுகளின் அடிப்படையில் அவர்களைக் கைதுசெய்யாமல் அவர்கள் எதில் நம்பிக்கை கொண்டுள்ளனர் என்பதன் அடிப்படையில் கைதுகளை மேற்கொள்கின்றன. இந்த நம்பிக்கைகள் அசாதாரணமானவை, ஆபத்து மிக்கவை மற்றும் அவை தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமைகின்றன என அரசாங்கத்தினால் கருதப்பட்டு அவற்றைக் கொண்டுள்ள நபர்கள் தீவிரமயமானவர்கள் எனத் தீர்மானிக்கப்படுகின்றனர். இவ்வாறு தீவிரமயமாக ஆகக் கூடும் என்ற அனுமானம் மாத்திரம் நபர்களை பயங்கரவாத எதிர்ப்பு சட்டங்களின் கீழ் கைதுசெய்வதற்கு போதுமானதாக உள்ளது.
இதற்கும் மேலாக, அரசாங்கத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்வோரை அவர்கள் சர்வதேசத்தில் இலங்கையின் பிரதிவிம்பத்துக்கு சேதம் விளைவிக்கின்றனர் என அரசாங்க அமைச்சர்கள் கூறுவதுடன் அவர்களைப் பயங்கராவாதத்துடன் கூட தொடர்புபடுத்தி காண்பிக்கின்றனர். எனவே, அரசாங்கம் ஆர்ப்பாட்டங்களை அழிவை விளைவிக்கும் நடவடிக்கைகளாக நோக்கி அவர்களை கட்டாய புனர்வாழ்வுக்கு உட்படுத்தும் நிலையை இது உருவாக்கியுள்ளது. செப்டெம்பர் 24, 2022 அன்று பொலிஸார் ஆர்ப்பாட்டக்காரர்களை அவர்கள் பொதுச் சொத்துக்கு சேதம் “விளைவிக்கக் கூடும்” மற்றும் உயர் பாதுகாப்பு வலயங்களுக்குள் “நுழையக் கூடும்” என “நினைத்ததன்” காரணமாக கைது செய்த சம்பவம் இக்கரிசனைக்கு மேலும் வலுச் சேர்ப்பதாக அமைகின்றது.
மேற்குறிப்பிடப்பட்ட வரைவிலக்கணங்கள் அற்ற வகைப்படுத்தல்கள்/ பதங்களைப் பயன்படுத்தி மக்களை அடையாளப்படுத்த அவர்களை புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பும் அபாயம் நிலவுவதை அண்மைய வரலாறு எமக்கு எடுத்துக்காட்டுகின்றது. இதன் மூலமாக நிறைவேற்றுத்துறை நீதி முறைமையை மீறி மக்களின் சுதந்திரத்தை எதேச்சையாக மறுக்கும் நிலை உருவாகின்றது. உதாரணமாக, ஆயுத முரண்பாடு முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட பின்னர், முன்னாள் போராளிகளை வரையறுப்பதில் மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் சர்வதேச மனிதநேயச் சட்ட நியமங்களை பின்பற்றியொழுகவில்லை. மாறாக, சர்வதேச மனிதநேயச் சட்டத்துக்கு முரணான பரந்த வரைவிலக்கணமொன்று இதற்காகப் பயன்படுத்தப்பட்டது. ஆயிரக்கணக்கான நபர்கள் எதேச்சையாகத் தடுத்து வைக்கப்படுவதற்கு இது காரணமாக அமைந்தது. யுத்தம் நிறைவுற்று 13 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் அங்கம் வகித்த 12,000 பேருக்கு புனர்வாழ்வு அளித்துள்ளதாக அரசாங்கம் தொடர்ச்சியாகக் கூறி வருகின்றது. இந்நிலையில், முன்மொழியப்பட்டுள்ள சட்டத்தில் ஏன் முன்னாள் போராளிகளும் உள்ளடக்கப்பட வேண்டும் என்ற கேள்வி எழுகின்றது.
மிகவும் முக்கியமாக, பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் தீவிரமயமாதலைத் தடுத்தலுக்கான ஒழுங்குவிதிகள் வெளியிடப்பட்ட வேளை அது உச்ச நீதிமன்றத்தில் சவாலுக்கு உட்படுத்தப்பட்டது. இதன் விளைவாக புனர்வாழ்வு சம்பந்தமான அனைத்து நடவடிக்கைகளையும் நிறுத்துமாறு இடைக்கால தடையுத்தரவு ஒன்றை உச்ச நீதிமன்றம் பிறப்பித்திருந்தது. இந்நிலையில், அரசாங்கம் சமர்ப்பித்துள்ள புனர்வாழ்வு சட்ட மூலம் உச்ச நீதிமன்றத்தின் ஆணையை அவமதிக்கும் செயலாகவும் ஒட்டு மொத்த நீதித்துறையையே அவமதிக்கும் செயலாகவும் நோக்கப்படவேண்டி உள்ளது.
புனர்வாழ்வு தொடர்செயன்முறையை இராணுவமயமாக்குதல்
முன்மொழியப்பட்டுள்ள சட்டத்தின் கீழ் உருவாக்கப்படவுள்ள ஆளுகைப் பேரவையில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் பொலிஸ்மா அதிபர் ஆகியோரும் உள்ளடங்குகின்றனர். இவர்களுக்கு எந்தவொரு புனர்வாழ்வு தொடர்செயன்முறை தொடர்பிலும் நிபுணத்துவ அறிவோ பணிப்பாணையோ காணப்படவில்லை.
முன்மொழியப்பட்டுள்ள பணிமனையின் பிரதம நிறைவேற்று அதிகாரியான புனர்வாழ்வுப் பணிப்பாளர் நாயகம் பாதுகாப்புக்குப் பொறுப்பான அமைச்சரின் பரிந்துரையின் பேரில் நியமிக்கப்படவுள்ளார். இது பணிமனையின் செயற்பாடு தொடர்பான தீர்மானம் மேற்கொள்ளலில் பாதுகாப்புத் துறையின் தலையீட்டை மேலும் அதிகரிக்கும் விடயமாக அமைந்துள்ளது. அரச பணிகளின் பதவி நிலைகளுக்கு இராணுவ அதிகாரிகள் நியமிக்கப்படுதல் மற்றும் கிட்டத்தட்ட அனைத்து பணிப்பாளர் நாயக பதவிநிலைகளுக்கு ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ள சூழல் என்பவற்றை நோக்கும் வேளை, முன்மொழியப்பட்டுள்ள குறித்த பதவிநிலைக்கும் தற்போது பணியில் இருக்கும் அல்லது ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரியே நியமிக்கப்படும் உயர் சாத்தியம் நிலவுகின்றது. மேலும், புனர்வாழ்வுப் பணிப்பாளர் நாயகம் என்ற பதவிநிலைக்கு தெளிவான வரைமுறை எவையும் குறிப்பிடப்படவில்லை.
முன்மொழியப்பட்டுள்ள சட்டத்தின் 17ஆம் பிரிவு விடயதான அமைச்சரின் கோரிக்கையின் பேரில் இச்சட்டத்தின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள அதிகாரங்கள், கடமைகள் மற்றும் செயற்பாடுகளை பிரயோகிக்க, செயற்படுத்த மற்றும் மேற்கொள்ள இராணுவம், கடற்படை மற்றும் வான்படை என்பவற்றின் உறுப்பினர்களைப் பணித்து வர்த்தமானி அறிவித்தலை வெளியிடும் அதிகாரத்தை ஜனாதிபதிக்கு வழங்கியுள்ளது. இந்த ஏற்பாடு புனர்வாழ்வு தொடர் செயன்முறைகளில் ஆயதப்படைகளின் தலையீட்டை முறைப்படுத்தி சட்டரீதியானதாக ஆக்குகின்றது. ஆயுதப் படைகளின் தலையீட்டை இவ்விடயத்தில் ஏற்படுத்துவதற்கு ஜனாதிபதி வெளியிடும் ஒரேயொரு வர்த்தமானி போதியதாக உள்ளதுடன் இது தொடர்பில் ஜனாதிபதி கொண்டுள்ள அதிகாரத்தின் மீது எந்தவித தடைகளும் இல்லை.
கடந்த காலங்களில், முன்னாள் போராளிகளுக்கு மேற்கொள்ளப்பட்ட புனர்வாழ்வு நடவடிக்கைகள் மற்றும் போதைப் பொருட்களுக்கு அடிமையானவர்களுக்கு வழங்கப்பட்டுவரும் புனர்வாழ்வு தொடர் செயன்முறைகளில் இராணுவத்தின் முறைசாரா மற்றும் சட்டத்துக்குப் புறம்பான ஈடுபாடுகள் மனித உரிமை மீறல்களுக்கு வழிவகுத்தன. கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் ஒரு நபர் இறந்த சம்பவம் தொடர்பில் பல இராணுவ அதிகாரிகள் கைதுசெய்யப்பட்டமை இந்த மனித உரிமை மீறல்களுக்கான அண்மைய உதாரணமாக அமைகின்றது. மேலும், புனர்வாழ்வு தொடர் செயன்முறைகளுக்காக ஈடுபாடுகளை மேற்கொள்ளும் இராணுவ அதிகாரிகள் தமது கடமைகள் மற்றும் பணிகளை மேற்கொள்ளும் வேளை அவர்களின் புனர்வாழ்வு பணிப்பாளர் நாயகத்தின் அதிகார வரம்புக்குள் உட்படுத்தப்படவுள்ளனரா என்பது தொடர்பிலும் இதுவரை தெளிவுகள் ஏதும் வழங்கப்படவில்லை, இந்நிலை இவ்வதிகாரிகளுக்கு வழங்கப்படும் கட்டளை ஒழுங்கு மற்றும் பொறுப்புக் கூறல் தொடர்பில் கரிசனைகளை உருவாக்கியுள்ளது.
ஏனைய பிரச்சினைகள்
புனர்வாழ்வுப் பணிப்பாளர் நாயகம் மற்றும் ஏனைய பணியாளர்கள் விடயங்களை வெளிப்படுத்தாமல் இருக்கும் உடன்பாடுகளில் கையொப்பமிடும் தேவைப்பாடுகளை முன்மொழியப்பட்டுள்ள சட்டம் ஏற்படுத்தியுள்ளது. போதைப் பொருள் புனர்வாழ்வு நிலையங்களில் இடம்பெற்று வரும் மனித உரிமை மீறல் சம்பவங்கள் உள்ளடங்கலாக புனர்வாழ்வு நிலையங்களில் பதிவு செய்யப்படும் மனித உரிமை மீறல்களின் சூழமைவில் இவ்வாறான உடன்பாடுகள் இந்நிலையங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நபர்களின் அந்தரங்களை பாதுகாக்கும் நோக்கை விட இவ்வாறான உரிமை மீறல்களை வெளிச்சத்துக்குக் கொண்டு வரும் எச்சரிக்கை ஒலி எழுப்பும் நபர்களை தடுப்பதற்காகவே ஏற்படுத்தப்பட்டுள்ளதாகத் தோன்றுகின்றது.
நீதிமன்ற ஆணை ஒன்று பெறப்படாமல் அல்லது நிலையத்தினுள் இடம்பெறும் தீவிரமான குற்றம் ஒன்று தொடர்பில் ஆணைக்குழு மேற்கொள்ளும் விசாரணை ஆகிய சந்தர்ப்பங்கள் தவிர வேறு எந்த நிலையிலும் தடுப்புக்காவலில் உள்ள நபர்கள் தொடர்பான பதிவுகள் வெளியிடப்படமாட்டாது என முன்மொழியப்பட்டுள்ள சட்டம் குறிப்பிடுகின்றது. மனித உரிமைகள் மீறல் அல்லது சாத்தியமான மனித உரிமை மீறல்கள் மேற்கொள்ளப்படும் நிலையில் அவை பற்றிய விசாரணைகளுடன் தொடர்பு பட்ட ஆவணங்களைக் கோரும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் (HRCSL) உரிமைகளை மட்டுப்படுத்தும் நோக்கில் இந்த ஏற்பாடு ஏற்படுத்தப்பட்டுள்ளதா என்பது தெளிவாகத் தெரியவில்லை. முன்மொழியப்பட்டுள்ள இந்த சட்டமூலத்தில் காணப்படும் “நியாயமான காரணமின்றி புனர்வாழ்வு பெறும் எந்தவொரு நபரையும் தாக்குதல், காயப்படுத்துதல், மோசமாக நடத்துதல் அல்லது வேண்டுமென்றே புறக்கணித்தல் இச்சட்டத்தின் கீழ் குற்றமாகக் கருதப்படும்” என முன்மொழியப்பட்டுள்ள சட்டத்தில் குறிப்பிடப்படும் ஏற்பாடு அதிர்ச்சியளிப்பதாக காணப்படுகின்றது. இவ்வாறான செயற்பாடுகள் சித்திரவதைக்கு எதிரான சமவாயச் சட்டத்தின் (CAT) கீழ் சித்திரவதை நடவடிக்கைகளாகக் கருதப்பட வேண்டியனவாகும். இருந்த போதும், இவ்வேற்பாட்டில் CAT சட்டம் பற்றி எந்தவித குறிப்பீடுகளும் மேற்கொள்ளப்படவில்லை.
இவ்வேற்பாட்டை உருவாக்கும் வேளை, முதலாவதாக, ஒரு நபருக்கு காயம் ஏற்படுத்த அல்லது மோசமாக நடத்த நியாயமான காரணம் காணப்படலாம் என்ற அனுமானம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஏற்பாடு தற்பாதுகாப்புக்கு தேவையான சக்தியை பிரயோகிக்கும் சந்தர்ப்பங்களை எடுத்துக் கூறுவதாக அமைந்திருப்பின், அவ்விடயம் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். மாறாக, இவ்வேற்பாடு கட்டமைக்கப்பட்டுள்ள விதம் வன்முறையை நியாயப்படுத்துவதாக அமைந்துள்ளது. CAT சட்டத்தின் கீழ் வழக்கு விசாரணைகள் உயர் நீதிமன்றத்தில் மேற்கொள்ளும் தேவைப்பாடுகள் உள்ள நிலையில், இந்த சட்ட வரைபுக்கு ஏற்ப, நீதவான் நீதிமன்றம் ஒன்றில் இடம்பெறும் சுருக்கமான விசாரணைகள் மூலம் விடயங்கள் முடிவுக்குக் கொண்டுவரப்படலாம்.
CAT சட்டத்தின் கீழ் குற்றம் நிரூபிக்கப்படும் வேளை 7 வருடங்களுக்கு குறையாத, 10 வருடங்களுக்கு மேற்படாத சிறைத்தண்டனை விதிக்கப்படுகின்றது. எவ்வாறாயினும், முன்மொழியப்பட்டுள்ள சட்டத்தின் கீழ் உச்சபட்ச தண்டனையாக 18 மாத சிறைத்தண்டனையே அமைந்துள்ளது. இத்தண்டனைக்காலம் அதிகரிக்கப்பட வேண்டும் என ஆதரித்து வாதிடாத நிலையில், இந்த நிலையங்களில் குறிப்பிட்ட வகையில் நோக்கப்படும் நபர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் வன்முறைகளை தீவிரமான விடயங்களாக அரசாங்கம் நோக்காத நிலையையே இந்த இருவகை தண்டனைகளுக்கும் இடையான கால இடைவெளி எமக்கு சுட்டிக்காட்டுகின்றது.
எந்தவொரு புனர்வாழ்வு நிலையத்திலும் பணிபுரியும் நபர் ஒருவரின் பணிகளுக்கு “இடையூறு விளைவிப்பது” குற்றமாகும் என முன்மொழியப்பட்டுள்ள சட்டம் குறிப்பிடுகின்றது. இதற்கு தண்டனையாக ரூபாய் 50,000 தண்டப் பணம் அல்லது 6 மாதங்கள் வரையான சிறைத்தண்டனை அல்லது அவை இரண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. போதைப் பொருட்களுக்கு அடிமையான நபர்கள் சிகிச்சை தொடர் செயன்முறையின் போது பின்வாங்கல் அறிகுறிகளைக் காண்பிப்பர், இவ்வறிகுறிகளுடன் தொடர்புடைய நடத்தைகள் இப்பிரிவின் கீழ் குற்றமாகக் கருதப்படும் வாய்ப்பு உள்ளது. எனவே, மிகவும் கடினமான சிகிச்சை தொடர் செயன்முறையின் அம்சங்களை இப்பிரிவு குற்றமாக ஆக்குகின்றது.
புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்ட நபர் ஒருவர் தப்பியோடும் வேளை, அவரை பிடிக்கும் அதிகாரத்தை சட்டமூலம் பொலிஸ் அல்லது இராணுவத்துக்கு வழங்கியுள்ளது. போதைப் பொருளுக்கு அடிமையான ஒரு நபரைக் கட்டாயப்படுத்தி புனர்வாழ்வுக்கு உட்படுத்த முடியாது. அவ்வாறான நபர் ஒருவர் தான் விரும்பும் நேரத்தில் சிகிச்சையில் இருந்து விலகிச் செல்லும் உரிமை கொண்டவராகக் காணப்படுகின்றார். மேற்குறித்த ஏற்பாடு இவ்வுரிமையை மீறுவதாக அமைந்துள்ளது. புனர்வாழ்வு தொடர்செயன்முறையின் எந்தவொரு அம்சத்திலும் பொலிஸ் அல்லது இராணுவத்தை ஈடுபடுத்தக் கூடாது. மேலும், பொலிஸ்/ இராணுவம் அவ்வாறு பிடிக்கப்பட்ட நபரை உடனடியாக நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும் என்பதையும் இந்த ஏற்பாடு குறிப்பிடவில்லை. இது வன்முறைப் பிரயோகத்தை தடுக்கும் முன்னேற்பாடுகள் அற்ற நிலையில் பொலிஸ் அல்லது இராணுவம் துஷ்பிரயோகங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்பினை உருவாக்கியுள்ளது.
ஆயுதப் படை உறுப்பினர்கள் உள்ளடங்கலாக புனர்வாழ்வு நிலையமொன்றில் பணிபுரியும் நபர்கள் “சட்டரீதியான பணிப்புரைகளை எதிர்க்கும் நபர்களைக் கீழ்ப்படிய வைப்பதற்காக” குறைந்த வலுவை பயன்படுத்தும் அதிகாரத்தை அவர்களுக்கு வழங்கியுள்ளது. கட்டளை ஒன்றுக்கு கீழ்ப்படிய வைப்பதற்காக எந்தவொரு சூழ்நிலையிலும் எந்த அளவிலான வலுவும் பயன்படுத்தப்பட முடியாது என்பதால் மேற்குறித்த ஏற்பாடு சித்திரவதைக்கு சட்டரீதியான அனுமதியை வழங்குவதாகவே கருத வேண்டியுள்ளது.
இவ்வாறான நிலையங்களில் வைக்கப்படும் நபர்கள் வலுவற்றவர்களாகக் காணப்படுவதுடன் அங்கு பணிபுரியும் பணியாளர்களின் கருணையில் தங்கியிருக்கும் நிலைக்கும் தள்ளப்படுவர். புனர்வாழ்வு நிலையங்கள் போன்ற நபர்களின் சுதந்திரம் பறிக்கப்பட்ட இடங்களில் ஆயுதப் படையினரால் வன்முறைகள் பொதுவாக இடம்பெறுகின்றன. இந்நிலையில் மேற்குறித்த ஏற்பாட்டின் பிரகாரம் வலுவைப் பயன்படுத்துவது அனுமதிக்கும் போது அது வன்முறைகளை மேலும் ஊக்குவிக்கும் விடயமாகவே அமையும். மேலும், போதைப் பொருட்களுக்கு அடிமையான நபர்களின் சிகிச்சைக்காக தீங்குகளை குறைக்கும் மூலோபாயங்கள் மறுக்கப்பட்ட நிலையில் அவர்களை சுகப்படுத்த சுய ஒழுக்க வலுவைப்பயன்படுத்தி திணிப்பது மாத்திரமே அந்நபர்களை மாற்றியமைக்கும் வழியாகப் பயன்படுத்தப்படுகின்றது. அவ்வாறான நிலையில் குறித்த நபர்களுக்கு தீவிரமான உடலியல் அறிகுறிகள் ஏற்பட்டு அவர்களால் சாதாரண நாளாந்த பணிகளையே மேற்கொள்ள முடியாத நிலை ஏற்படும். அவ்வாறான நபர்களை அவர்களுக்கு கட்டளையிடப்படும் பணிகளை மேற்கொள்ள நிர்ப்பந்திக்க வன்முறையைப் பிரயோகித்த சம்பவங்கள் நன்கு ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், மேலே குறிப்பிடப்பட்ட ஏற்பாடுகள் போதைக்கு அடிமையான நபர்கள் மீது அதிக வன்முறை மேற்கொள்ளப்படும் சாத்தியத்தை அதிகரித்துள்ளன.
அரசாங்கம் தனது அதிகார துஷ்பிரயோகங்கள், வன்முறை, துஷ்பிரயோகங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களை சாதாரண விடயங்களாக மற்றும் சட்டத்துக்கு உட்பட்ட விடயங்களாக மாற்றும் தனது முயற்சிகளை தொடர்ந்து முன்னெடுத்த வண்ணமேயுள்ளது.
அம்பிகா சற்குணநாதன்