Photo, (AP Photo/Eranga Jayawardena)
கடந்த ஜூலையில் உச்சக்கட்டத்தை அடைந்த மக்கள் போராட்ட இயக்கத்துக்கு எந்த அளவிலாவது தலைமைத்துவத்தை வழங்கியவர்களை வேட்டையாடும் நடவடிக்கைகள் நிலையாக தொடருகின்றன. மிகவும் இறுதியாக கைதானவர் விருது பெற்ற ஒரு நடிகை. ஜனாதிபதி மாளிகை போராட்டக்கார்களின் ஆக்கிரமிப்பில் இருந்தபோது அவர் அதற்குள் பிரவேசித்திருத்தார். ஜனாதிபதி செயலகத்துக்கு வெளியே நடைபெற்ற மக்கள் போராட்டத்தில் அவர் ஒரு துடிப்பான பேச்சாளராகவும் இருந்தார். போராட்டங்களில் ஈடுபட்டவர்களை வேட்டையாடுவது தற்போதைய அரசாங்கத்தின் அருவருக்கத்தக்க ஒரு நடவடிக்கையாகும். அது தேசிய ரீதியிலும் சர்வதேச ரீதியிலும் கடுமையான கண்டனத்துக்குள்ளாகியிருக்கிறது.
ஆனாலும், அடக்குமுறை தொடருகிறது. அதிகாரத்தில் உள்ளவர்கள் விவேகமற்றவர்கள் என்பதனால் அல்ல, தங்களது நலன்களைப் பாதுகாப்பதில் அவர்கள் விவேகமானவர்கள் என்பதனாலேயே அவ்வாறு நடைபெறுகிறது. அவர்கள் நீண்டகாலம் பதவியில் இருக்கவேண்டும் என்பதற்காக எதிர்காலத்தில் மக்கள் போராட்டங்கள் இடம்பெறாதிருப்பதை உறுதிசெய்யக்கூடிய முன்கூட்டிய தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டியது அவசியம் என்று அவர்கள் உணர்ந்து செயற்படுகிறார்கள். பழைய மாதிரியான ஆட்சிமுறைக்கு சாத்தியமானளவு விரைவாக திரும்புவதற்கும் அவர்கள் விரும்புகிறார்கள்.
ஏற்கெனவே பதவிகளை வகிக்கும் 21 அமைச்சர்களுக்கு மேலதிகமாக 38 இராஜாங்க அமைச்சர்கள் ஜனாதிபதியினால் கடந்தவாரம் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.அவர்களில் பலர் ஊழல் நடவடிக்கைகளிலும் அதிகார துஷ்பிரயோகத்திலும் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களைப் பொறுத்தவரை இது ஒரு குறிப்பிடத்தக்க மீள்வருகை. மூன்று மாதங்களுக்கு முன்னர் மக்கள் போராட்டம் உச்சக்கட்டத்தில் இருந்தபோது அவர்கள் பதவிகளில் இருந்து விரட்டப்பட்டார்கள்.
அடுத்த தேர்தல்கள் வரை ஒரு இடைக்காலத்துக்கு 15 க்கும் மேற்படாத அமைச்சர்களுடன் கூடிய சர்வகட்சி அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கு முனானாள் ஜனாதிபதி இணக்கம் தெரிவித்தார். புதிய அரசாங்கத்தின் கீழ் அமைச்சர்களின் தொகை 60 க்கும் அதிகமாகக் கூடிய சாத்தியம் இருக்கிறது. அவர்களில் அதிகப் பெரும்பாலானவர்கள் ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்களாகவும் எஞ்சியவர்கள் வேறு கட்சிகளில் இருந்து வெளியேறியவர்களாகவும் இருப்பர். இது “சர்வகட்சி அரசாங்கம் ” என்பதை கேலிக்கூத்தாக்குகிறது.
உண்மையில், போராட்ட இயக்கத்தைச் சேர்ந்தவர்களைத் தவிர முக்கியமான சகல கட்சிகளும் அவற்றின் சுயநலன்களுக்காகவே செயற்படுகின்றன என்றுதான் கூறவேண்டும்.பொருளாதார இடர்பாடுகளினாலும் விரைவான மாற்றத்துக்கான இலட்சியத்தாலும் தூண்டப்பட்ட உணர்வுகளினால் போராட்டக்காரர்கள் கட்டுண்டார்கள். தேசிய நலனுக்காக சிந்தித்ததற்காகவும் ஊழல்தனமான அரசியல் தலைவர்களை பதவிகளில் இருந்து விரட்டிவிட்டு முறைமை மாற்றத்தைக் கொண்டுவரவேண்டும் என்று கோரியதற்காகவும் அவர்கள் இப்போது ஒவ்வொருவராக ‘விலையை’ செலுத்திக்கொண்டிருக்கிற்ர்கள். அரசாங்கத்தின் கைகளில் சட்ட அதிகாரமும் இராணுவ பலமும் இருக்கிறது என்பதை தெரிந்துகொண்டிருந்த போதிலும் கட இந்தக் கோரிக்கைகளை முன்வைக்க போராட்ட இயக்கத்தவர்கள் பயப்படவில்லை.
மறுபுறத்தில் அரசாங்கம் அதன் சொந்த நலனைப் பற்றி சிந்தித்துக்கொண்டு சலுகை அரசியலின் மூலமாக அதன் நாடாளுமன்ற பெரும்பான்மையை பேணுவதில் அக்கறையுடன் செயற்படுகிறது. ஆளும் கட்சி அதன் தன்னலத்துக்காக ஜனாதிபதி மீது பிரயோகித்த நெருக்குதல் காரணமாகவே அவர் பெரும் எண்ணிக்கையில் அமைச்சர்களை நியமித்தார். அந்த அமைச்சர்களில் அறகலய மக்கள் போராட்டம் உச்சக்கட்டத்தில் இருந்தபோது அரசாங்கத்தில் இருந்து பதவி விலகியவர்களும் சொந்த கட்சிகளின் ஒழுங்கு கட்டுப்பாட்டை மீறி வெளியே வந்தவர்களும் அடங்குகிறார்கள். அவர்கள் அமைச்சர் பதவிகளை ஏற்றுக்கொள்வதற்கு எந்தவிதமான தார்மீக உரிமையும் இல்லாதவர்கள்.
ஆர்ப்பாட்டத்தை குற்றமாக்குதல்
நாடாளுமன்றத்தில் தொடர்ந்தும் பெரும்பான்மைப் பலத்தை தக்கவைத்துக் கொண்டிருக்கும் ஆளும் கட்சியே உண்மையில் அதிகாரத்தை கையில் வைத்திருக்கிறது. ஆளும் கட்சிக்கு ஆரம்பத்தில் இருந்த 2/3 பெரும்பான்மையில் பிளவு ஏற்பட்டிருக்கிறது. ஆனால், பிரிந்து சென்றிருக்கும் குழுக்கள் தங்களை பெரும்பான்மையினராக அணிதிரட்டி அரசாங்கத்தை தோற்கடிக்கக்கூடியவர்களாக இல்லை. அமைச்சர் பதவியை இன்னமும் பெறாமல் இருக்கும் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதிருப்தியடைந்திருப்பதால் அண்மைய எதிர்காலத்தில் மேலும் அமைச்சர்கள் நியமிக்கப்படக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வாகனங்கள், வீடுகள் மற்றும் தனிப்பட்ட உதவியாளர்கள் நியமனம் என்று இந்த அமைச்சர்களுக்கான வசதிகளுக்காக பெருமளவு பணம் செலவாகிறது. தேசிய வருமானத்தில் ஏற்பட்ட வீழ்ச்சியின் விளைவாக பட்ஜெட் பற்றாக்குறையைக் குறைப்பதற்கு அரசாங்கம் கடுமையாக கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கும் ஒரு நேரத்தில் அமைச்சர்களுக்கான இந்த செலவுகள் பெரும் வீண்விரயமாகும்.
போராட்ட இயக்கத்தில் பங்கேற்றவர்களுக்கு எதிராக தொடரும் அடக்குமுறையின் பின்புலத்தில் நோக்கும்போது அரசாங்கம் மீது மக்கள் எதிர்ப்பு கிளம்புவதற்கு இப்போதைக்கு சாத்தியமில்லை. இது அரசியல் உறுதிப்பாடு ஏற்படுகிறது என்ற எண்ணத்தை உருவாக்கியிருக்கிறது. அரசாங்கம் மக்கள் போராட்டங்களை ஒடுக்கும் அதன் முயற்சிகளில் பயனைக் கண்டிருக்கிறது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக சட்டத்தை முழுப்பலத்துடன் பயன்படுத்துவதன் மூலம் இதை அரசாங்கம் சாதித்திருக்கிறது.
அரசாங்கத்திடம் இருக்கும் ‘ஆயுதங்களில் ‘ பிரதானமான சட்ட ஆயுதம் பயங்கரவாத தடைச்சட்டமாகும். வடபகுதியில் வளர்ந்துகொண்டிருந்த தமிழ் தீவிரவாதத்துக்கு எதிராகப் பயன்படுத்துவதற்கு தற்காலிகமான ஒரு ஏற்பாடாகவே இந்தச் சட்டம் 1979ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்டது. போராட்ட இயக்க தலைவர்கள் சிலருக்கு எதிராக இந்தச் சட்டத்தை அரசாங்கம் பயன்படுத்தியிருக்கிறது. தேசிய மற்றும் சர்வதேச மனித உரிமகள் குழுக்களிடம் இருந்தோ அல்லது ஐக்கிய நாடுகள் சபையின் அமைப்புகளிடம் இருந்தோ வந்திருக்கக்கூடிய ஆட்சேபனைகளை அரசாங்கம் அலட்சியம் செய்திருக்கிறது. பயங்கரவாதத் தடைச்சட்டம் பயங்கரவாதத்தின் அர்த்தத்தை வரைவிலக்கணம் செய்யவில்லை. ஆனால் அரசாங்கம் பயங்கரவாதத்தை வரைவிலக்கணம் செய்வதில் நிராயுதபாணிகளினால் முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டத்தையும் சேர்த்திருக்கிறது.
மக்கள் ஆர்ப்பாட்டத்தை அரசாங்கம் குற்றச்செயலாகக் கருதி அடக்குமுறையை மேற்கொள்கிறது. அதன் காரணத்தினால்தான் மக்களின் பொருளாதார நிலைமை தொடர்ந்தும் மோசமாகிக்கொண்டு போகின்றபோதிலும் கூட இப்போது போராட்ட இயக்கம் மீண்டும் முன்னெடுக்கப்படுவதற்கான அறிகுறியைக் காணவில்லை. போராட்ட இயக்கத் தலைவர்களை அரசாங்கம் இலக்கு வைப்பதனால் (6 மாதங்களுக்கு முன்னர் இடம்பெற்றதைப் போன்று) திட்டமிடப்படாத முறையிலும் தன்னெழுச்சியாகவும் பொதுமக்கள் குழுக்கள் எதிர்காலத்தில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதை தடுக்கக்கூடியதாக இருக்கும்.
போராட்ட இயக்கத்துடன் தொடர்புபட்டிருந்தவர்களும் போராட்டங்களின்போது வன்முறை நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களுமாக 4000 க்கும் அதிகமானவர்கள் அரசாங்கத்தின் தடுப்புக்காவலில் இருக்கிறார்கள். இவர்களில் எந்தவிதமான வன்முறையிலும் இறங்காமல் அமைதியாக ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்றவர்கள் கணிசமான எண்ணிக்கையில் இருக்கிறார்கள்.
போராட்ட இயக்கத்துக்கு தலைமைத்துவத்தை வழங்கியவர்கள் சிறைக்கம்பிகளுக்கு பின்னால் இருக்கும் நிலையில் அல்லது நீதிமன்றங்களில் குற்றஞ்சாட்டப்பட்டு பிணையில் விடப்பட்டிருக்கும் நிலையில், முன்னைய ஜனாதிபதியை பதவி துறக்கவைத்ததுடன் முன்னைய அரசாங்கத்தையும் பதவியில் இருந்து இறங்கச் செய்ததைப் போன்ற மக்கள் கிளர்ச்சியொன்று எதிர்காலத்தில் இடம்பெறுவதற்காக சாத்தியப்பாடுகள் குறைவு.
தற்போது அரசாங்கத்துக்கு ஒரு தடுப்பை போடக்கூடியதென்றால் அது சர்வதேச நெருக்குதல் மாத்திரமே. சட்ட மற்றும் பொருளாதார ரீதியான தடைகள் விதிக்கப்படக்கூடிய சாத்தியப்பாட்டுக்கான ஒரு அறிகுறியாக ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரினால் வெளியிடப்பட்ட பூர்வாங்க அறிக்கையை கருதலாம். அரசியலமைப்பு ரீதியான கட்டுப்பாடுகளை அல்லது பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கான நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை கொடுக்கவேண்டிய தேவையை காரணம் காட்டி சர்வதேச நெருக்குதலின் கவனத்தை திருப்புவதென்பது அரசாங்கத்துக்கு கஷ்டமானதாகவே இருக்கும்.
இலங்கையில் சகல தரப்பினராலும் இழைக்கப்பட்டிருக்கக்கூடிய சர்வதேச குற்றங்களைச் செய்தவர்களை பொருத்தமான சர்வதேச வலையமைப்பு ஊடாகவும் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களின் பிரதிநிதிகளின் ஒத்துழைப்புடனும் (ஏற்றுக்கொள்ளப்பட்ட புலம்கடந்த அல்லது சர்வதேச நியாயாதிக்க கோட்பாடுகளின் கீழ் உட்பட) தேசிய நியாயாதிக்கத்தில் உள்ள நீதிச் செயன்முறைகள் ஊடாக விசாரித்து வழக்கு தொடருவதற்கும்; மோசமான சர்வதேச மனித உரிமை மீறல்கள் அல்லது கடுமையான மனிதாபிமானச் சட்ட மீறல்களில் ஈடுபட்டதாக நம்பகமாக குற்றஞ்சாட்டப்படுபவர்களுக்கு எதிராக சொத்து முடக்கம் மற்றும் பயணத்தடைகள் போன்ற தடைவிதிப்புக்களை செய்வதற்கான வழிவகைகளை ஆராய்வதற்கும்; இலங்கையில் மனித உரிமைகள் மீது தாக்கத்தை ஏற்படுத்திய பொருளாதாரக் குற்றங்களை விசாரித்து களவாடப்பட்ட சொத்துக்களை மீட்பதற்கும் சர்வதேச சமூகம் ஒத்துழைக்கவேண்டும் என்று உயர்ஸ்தானிகரின் அறிக்கை விதப்புரை செய்கிறது.
இவ்வாரம் ஆரம்பமாகியிருக்கும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையினன 51ஆவது கூட்டத்தொடரில் இம்மாத பிற்பகுதியில் இலங்கைக்கு எதிராக புதிய தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்படக்கூடிய சாத்தியம் இருக்கிறது. இது முன்னர் எதிர்பார்க்கப்படாததாகும். இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்படுவதை தடுப்பதற்கு ஜெனீவாவில் உள்ள இலங்கை அரசாங்கத் தூதுக்குழு ஆபிரிக்க மற்றும் ஆசிய நாடுகள் மத்தியில் ஆதரவை திரட்டும் முயற்சிகளில் ஈடுபடுகின்றது. பெரும்பான்மையான மக்களை வறுமையின் எல்லைக்கோட்டுக்கு அல்லது மெய்யான வறுமைக்கு தள்ளிவிட்டிருக்கும் பொருளாதார சவால்களை சமாளிப்பதாக இருந்தால் சர்வதேசத்தின் தடைகள் அல்ல அதன் புரிந்துணர்வும் ஆதரவுமே இலங்கைக்கு தேவை என்பதே தூதுக்குழுவின் வேண்டுகோளாகும்.
ஆனால், ஐக்கிய இராச்சியமும் அமெரிக்காவும் ஜேர்மனி மற்றும் கனடாவுடன் சேர்ந்து (அவையே தீர்மானத்துக்கு அனுசரணை வழங்கும் முக்கிய நாடுகள்) இந்தத் தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கு பெரும்பான்மையான நாடுகளின் ஆதரவைக் கொண்டுள்ளன என்று கூறப்படுகிறது.
நம்பகமான சான்றுகள் உள்ளவர்களுக்கு எதிராக விசாரணைகளை நடத்துவதற்கு தங்களது சட்டங்களின் கீழ் அனுமதிக்கப்படக்கூடிய சர்வதேச நியாயாதிக்கத்தை செயற்படுத்துவதற்கு விரும்புகின்ற நாடுகளுக்கு சட்ட மற்றும் ஏனைய வழிகாட்டல்களை வழங்கி உதவுவதே தீர்மானத்தின் நோக்கமாகும். இலங்கையில் மனித உரிமைகள் மீது கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும் பொருளாதாரக் குற்றங்களுக்கு பொறுப்பான அரசியல் தலைவர்கள் மற்றும் அரச அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு தீர்மான வரைவு விதப்புரை செய்கிறது.
இலங்கையை முழுமையாக எதிர்மறையான முறையில் பாதிக்கக்கூடிய தடைகளை விதிப்பதை விடுத்து உரிமை மீறல்களைச் செய்த முக்கிய குற்றவாளிகளை இலக்குவைப்பதே சர்வதேச சமூக தந்திரோபாயமாக இருப்பதாகத் தோன்றுகிறது.
ஜெனீவாவில் இலங்கை மீதான தீர்மானத்துக்கு அனுசரணையாகச் செயற்படும் அமெரிக்கா சர்வதேச நாணய நிதியத்துடனான அரசாங்கத்தின் பேச்சுவார்த்தைகளுக்கு ஆதரவு வழங்கவும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் ஏனைய நலன்புரி நோக்கங்களுக்காகவும் 6 கோடி டொலர்களை ஒதுக்கீடு செய்வும் உறுதியளித்ததில் இருந்து இதைப் புரிந்துகொள்ளமுடியும்.
சர்வதேச உதவி நாட்டுக்கு அவசியமாக தேவைப்படுகின்ற இத்தகைய பின்புலத்தில், கடந்த காலத்தில் தேர்தல்களில் வெற்றிபெறுவதற்காக ஐ.நா. தீர்மானங்களுக்கு எதிராக தேசியவாத எதிர்ப்பை தூண்டிவிட்டதைப் போன்று இந்தச் சந்தர்ப்பத்தில் அரசாங்கத்தினால் செய்யக்கூடியது சாத்தியமில்லை. பொருளாதார வீழ்ச்சிக்குப் பொறுப்பானவர்களையும் எதிர்ப்பியக்கங்களை நசுக்குவதில் நாட்டம் கொண்டிருப்பவர்களையும் பொறுப்புக்கூற வைக்கக்கூடிய நடவடிக்கைகளை பலர் ஏற்றுக்கொள்வார்கள்.
அபிவிருத்தியை தாமதிக்கின்றதும் மக்களின் அவலங்களை நீடிக்கின்றதுமான அடக்குமுறை பெரும்பாலும் சகலருக்குமே பாதிப்பாக அமையக்கூடிய கொந்தளிப்புகளையே கொண்டுவரும். இதை நன்றாக தெரிந்துகொண்டாலும், அரசியல் தலைவர்கள் தங்களது ஆட்டத்தைத் தொடர்ந்தால் தேசிய அனர்த்தத்துக்கே அது வழிவகுக்கும்.
கலாநிதி ஜெகான் பெரேரா