1983ஆம் ஆண்டு ஜூலை மாதம் படுகொலைசெய்யப்பட்ட தமிழ் மக்களை நினைவுகூரும் நிகழ்வு கடந்த 24ஆம் திகதி காலிமுகத்திடல் பகுதியில் இடம்பெற்றது. இதன்போது, தமிழர் படுகொலை, சொத்துக்கள் அழிக்கப்பட்டதைநேரில் கண்டவர்கள் தங்களின் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்கள். ஓய்வுபெற்ற ஆசிரியர் பிரேமவர்தன தான் பார்த்தவற்றை இவ்வாறு பகிர்ந்துகொண்டார் (தமிழ் மொழிபெயர்ப்பு கீழே தரப்பட்டுள்ளது).
1983ஆம் ஆண்டு ஜூலை 24ஆம் திகதியன்று காசல் வீதியில் உள்ள வைத்தியசாலைக்கு முன்பாக இருந்த மனித உரிமைகளைப் பாதுகாக்கும் நிறுவனமொன்றில் இருந்தேன். அன்றைய தினம் இரவு அங்குதான் தங்கியிருந்தேன். யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினர் கொல்லப்பட்ட சம்பவத்தின் பின்னர் ஏதோவொரு அனர்த்தம் நிகழப்போகிறது என்று எனக்குள் தோற்றியது. அடுத்த நாள் நான் எழுந்து பார்த்தபோது முழு வானமும் கரும்புகையால் மூடப்பட்டிருந்தது.
நான் தங்கியிருந்த கட்டடத்துக்கு வலது பக்கமாக இரண்டு கட்டடங்கள் தாண்டி, என்னுடன் நல்ல பழக்கம் கொண்ட நரம்பியல் நிபுணர் வைத்தியர் தவராசாவின் இரண்டு மாடி வீடு இருந்தது. நான் போய் பார்த்தபோது வீடு முழுவதுமாக எரிந்திருந்தது. அவர் எப்படியாவது தப்பியோடியிருப்பார் என்று நினைத்துக்கொண்டேன். ஆனால், பின்னர்தான் அறிந்துகொண்டேன், முழு குடும்பத்தையும் வீட்டினுள் வைத்து காடையர்கள் எரித்துவிட்டார்கள் என்று. வைத்தியர் தவராசா அப்போது எல்லோராலும் அறியப்பட்ட ஒருவர்.
என்னுடைய அம்மாவுக்கு சத்திரசிகிச்சை ஒன்று செய்யவேண்டி இருந்தது. வைத்தியர் தவராசாவிடம் செய்துகொள்ளவே நான் விருப்பப்பட்டேன். ஆனால் அவர், “எங்கே இருக்கிறீர்கள்?” என்று கேட்டார். இரத்தினபுரி என்று நான் கூற, “இரத்தினபுரியில் நீங்கள் சத்திரசிகிச்சை செய்துகொண்டால் வைத்திய நிபுணரொருவரின் கையாளேயே அதனை செய்துகொள்ளலாம். நீங்கள் கொழும்பில் செய்தால், எங்கள் முன்னால் பயிற்சிபெறும் மாணவர்கள் மேற்கொள்வார்கள். நீங்கள் விரும்பியதை தெரிவுசெய்து கொள்ளுங்கள்” என்று தவராசா கூறினார். அவ்வாறு நல்வழியைக் காண்பித்தவர்தான் வைத்தியர் தவராசா. பல லட்சக்கணக்கான மக்களின் உயிரைக் காப்பாற்றவிருந்த தவராசாவை எரித்துவிட்டார்கள்.
அதன் பின்னர் பொரளை நோக்கி நடந்தேன். பார்க்கும் இடமெல்லாம் தீயால் எரியும் காட்சிகள். அப்படியே புறக்கோட்டை நோக்கி நடந்துவந்தேன், புறக்கோட்டை குணசிங்கபுர பகுதியில் வீதிகளில் எரிந்துகொண்டிருந்த நெருப்பில் அங்கும் இங்குமாக மனித உடல்கள் நெளிந்துகொண்டிருந்தன, காடையர்கள் தமிழ் மக்களை உயிரோடு எரித்துக் கொண்டிருந்தார்கள். அந்த இடத்தில் இருந்த விகாரைக்கு முன்னால் ‘ரைபள்’ துப்பாக்கியுடன் நின்றுகொண்டிருந்த பொலிஸார் ஏதும் செய்யாமல் தலையை இரண்டு பக்கமும் திருப்பியவாறு பார்த்துக்கொண்டிருந்தனர்.
காடையர்கள் மீன் வெட்டும் கத்திகளைத் தாங்கிய வண்ணம் பேய் பிடித்த மாதிரி தமிழர்களைத் தேடி அலைத்துகொண்டிருந்தார்கள். அந்நேரம் கடற்படையினரை நிரப்பிக்கொண்டு ட்ரக் ஒன்று கடந்துசென்றது. வாகனத்தில் இருந்த கடற்படையினர் காடையர்களைப் பார்த்து கையசைத்தவாறு சென்றதை நான் கண்டேன்.
எனது தோழர் ஒருவர் பஸ்தரிப்பு நிலையத்தின் இரண்டாவது மாடியில் இருந்தார். அவரைப் பார்க்கலாம் என்று அங்கு சென்றேன். அங்கு அவர் இருக்கவில்லை. அங்கிருந்தவாறு கீழே பார்த்தபோது, பஸ்ஸுக்காக பலர் காத்துக்கொண்டிருந்தார்கள். அந்த இடத்திலும் கத்திகள் சகிதம் காடையர்கள் அங்கும் இங்குமாக நடந்துகொண்டிருந்தார்கள். அதில் ஒருவன் பஸ்ஸுக்காக மக்கள் கூடியிருந்த பகுதிக்கு வந்தான். அவர்களோடு உரையாட ஆரம்பித்தான், அடையாள அட்டைகளை கேட்டான். அப்போது அந்தக் கூட்டத்தில் இருந்த தமிழ் இளைஞரொருவர் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள ஓட ஆரம்பித்தார். காடையர்கள் அனைவரும் அவரைத் துரத்தினார்கள். என்னால் பார்க்க முடிந்த தூரத்தில் அந்த இளைஞர் கீழே விழுந்தார். காடையர்கள் தங்களிடமிருந்த ஆயுதங்கள் மற்றும் கை, கால்களால் காட்டுமிராண்டித்தனமாக தாக்கி இளைஞரைக் கொன்றார்கள். கொன்றது மாத்திரமன்றி, அவர்கள் அப்போது எந்தளவு வெறிப்பிடித்திருந்தார்கள் என்றால், அந்த இளைஞன் அணிந்திருந்த ஷேர்டை அப்படி மேல் பக்கமாக இழுத்து முகத்தைச் சுற்றினார்கள். காற்சட்டையை கழற்றி நிர்வாணமாக்கி காலில் உதைத்தவாறு எச்சில் துப்பினார்கள். பிறகு இன்னுமொரு இரையைத் தேடிக்கொண்டு சென்றார்கள்.
2, 3 நாட்களாக அவசரகால நிலைமை நாட்டில் நிலவியதால் சாப்பிடுவதற்கு ஒன்றும் இருக்கவில்லை. கடைகள் எதுவும் திறந்திருக்கவில்லை. ஜனாதிபதி உரையாற்றி இந்தப் பிரச்சினையை ஒரு முடிவுக்குக் கொண்டுவருவார் என்று ஒவ்வொரு கணமும் எதிர்பார்த்துக்கொண்டிருந்தோம். 4 நாட்களாகும் வரை ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தன உரையாற்றவில்லை. காடையர்களுக்கு சந்தர்ப்பத்தை வழங்கிவிட்டு அவர் அமைதியாக இருந்தார். அவசரகாலை நிலை 24ஆம் திகதி மாலை அமுல்படுத்துப்பட்டது. ஆனால், காடையர்கள் அந்தச் சட்டத்திலிருந்து விலக்களிப்பட்டிருந்தார்கள்.
படையினர், பொலிஸார் ஆசிர்வாதத்துடன் – அரசாங்கத்தின் அனுசரனையுடன்தான் இவையெல்லாம் இடம்பெற்றது.”