Photo, Selvaraja Rajasegar

அரசியலமைப்புக்கான 21ஆவது திருத்தத்தைக் கொண்டுவந்து நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவதில் அரசாங்கம் பெரும் சிக்கல்களை எதிர்நோக்கப்போகிறது என்பதை தற்போதைய அரசியல் நிகழ்வுப்போக்குகள் வெளிக்காட்டுகின்றன.

இரு வாரங்களுக்கு முன்னர் நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்‌ஷவினால் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட 21ஆவது திருத்தவரைவு இரண்டாவது தடவையாகவும் கடந்த வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிகளின் தலைவர்களினால் ஆராயப்படவிருந்தது. 21ஆவது திருத்தத்தின் வடிவில் 2015ஆம் ஆண்டின் 19ஆவது திருத்தமே மீண்டும் கொண்டுவரப்படவிருப்பதாக முதலில் கூறப்பட்டது. பிறகு 19ஆவது திருத்தத்தின் பல ஏற்பாடுகளும் 2020 ஆண்டின் 20ஆவது  திருத்தத்தின் சில ஏற்பாடுகளும் உள்ளடங்கியதாக புதிய திருத்தம் அமையும் என்று கூறப்படுகிறது.

தற்போது பரிசீலனையில் இருக்கும் வரைவுக்கு ஆளும் கட்சியில் இருந்தும் எதிரணிக் கட்சிகளிடமிருந்தும் கடுமையான எதிர்ப்பு (வேறுபட்ட காரணங்களுக்காக) கிளம்பியிருப்பதை காணக்கூடியதாக இருக்கிறது. இந்த வரைவு குறித்து ஏற்கனவே அதிருப்தி வெளியிட்ட எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இப்போது பரந்தளவிலான சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தக்கூடிய அணுகுமுறை கையாளப்படவேண்டும் என்று வலியுறுத்துகிறார். தனிநபரிடம் அதிகாரங்களைக் குவித்துவைத்திருக்கும் ஆவணம் என்ற அந்தஸ்தை அரசியலமைப்பிடம் இருந்து எடுத்துவிடக்கூடியதாக சீர்திருத்தங்கள் கொண்டுவரப்படவேண்டும் என்றும் அத்தகைய மாற்றங்களைச் செய்வதற்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு ஆதரவுக்கு மேலதிகமாக மக்களின் அங்கீகாரத்தைப் பெறுவதற்கு சர்வஜனவாக்கெடுப்பு அவசியமாயின் அதற்கு முகங்கொடுக்கவும் தயாராயிருக்கவேண்டும் என்றும் பிரேமதாச கூறியிருக்கிறார்.

அவருடைய நிலைப்பாடு இவ்வாறிருக்கையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதவியில் இருப்பதற்கு அவசியமான நாடாளுமன்ற பெரும்பான்மை ஆதரவை வழங்கிக்கொண்டிருக்கும் ராஜபக்‌ஷர்களின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர்களில் பலரும் 21ஆவது திருத்தவரைவை கடுமையாக எதிர்க்கிறார்கள். தங்களது நாடாளுமன்றக்குழு கூட்டத்தில் பிரதமர் விக்கிரமசிங்க முன்னிலையிலேயே அவர்கள் ஜனாதிபதி கோட்டபாவிடம் தங்கள் எதிர்ப்பை வெளிக்காட்டினார்கள்.

விக்கிரமசிங்க பிரதமராக நியமிக்கப்பட்டது தற்போதைய படுமோசமான பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்கவே தவிர, அரசியல் சீர்திருத்தங்களைக் கொண்டுவருவதற்கு அல்ல. முதலில் பொருளாதார நிலைவரத்தை மேம்படுத்திய பின்னர் அரசியல் சீர்திருத்தங்களைப் பற்றி கவனிக்கலாம் என்பது பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரின் நிலைப்பாடு. அந்த கட்சியின் தேசிய அமைப்பாளரான முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்‌ஷவே இவர்களை பின்னால் இருந்து வழிநடத்துகிறார் என்பது எல்லோருக்கும் தெரிந்த இரகசியம். இரட்டைக் குடியுரிமையுடையவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருக்கமுடியாது என்ற ஏற்பாட்டை வரைவில் இருந்து நீக்கவேண்டும் என்று பொதுஜன பெரமுனவின் பல உறுப்பினர்கள் வலியுறுத்துகிறார்கள். இது ஏன் என்பது சொல்லித்தெரியவேண்டிய ஒன்றல்ல.

புதிய திருத்தத்தைக் கொண்டுவந்து நிறைவேற்றுவதென்பது பிரதமர் விக்கிரமசிங்கவுக்கும் பசிலுக்கும் இடையிலான கயிறிழுபாகவே அமையப்போகிறது. பிரதமர் ஜனாதிபதியை இது விடயத்தில் நம்பிக்கொண்டிருக்கிறார். பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பாலானோரின் ஆதரவை ஜனாதிபதியினால் உறுதிசெய்யக்கூடியதாக இருக்குமா என்றும் சந்தேகிக்கவேண்டியிருக்கிறது

விக்கிரமசிங்கவைப் பொறுத்தவரை அவரைத் தவிர, ஐக்கிய தேசிய கட்சியின் நிலைப்பாட்டை நாடாளுமன்றத்திலோ அல்லது அரசாங்க நாடாளுமன்றக்குழு கூட்டத்திலோ கூறுவதற்கு வேறு எவரும் இல்லை. முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி 21ஆவது திருத்தத்தை ஆதரிப்பதாக கூறியிருக்கிறது. ஆனால், தனது கட்சியின் இரு முக்கிய உறுப்பினர்கள் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டமை குறித்து சிறிசேன அதிருப்திகொண்டுள்ளார். சுதந்திர கட்சியில் இருந்து மேலும் சிலர் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டால் அரசியலமைப்பு திருத்தத்துக்கு ஒத்துழைப்பு வழங்கும் சிறிசேனவின் முடிவில் மாற்றம் ஏற்படாது என்று சொல்லமுடியாது.

ஜனதா விமுக்தி பெரமுனவைப் (ஜே.வி.பி.) பொறுத்தவரை நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிக்காமல் மேலோட்டமான திருத்தங்களைச் செய்து ஜனாதிபதியைப் பாதுகாக்கும் நோக்கிலான முன்னெடுப்புகளுக்கு ஒத்துழைக்கத் தயாரில்லை என்பதே அதன் நிலைப்பாடு.

தற்போதைய வடிவில் 21ஆவது திருத்தவரைவு பல தரப்பினருக்கு ஏற்புடையதாக இல்லை. ஆனால், நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்‌ஷ 21ஆவது திருத்தம் 19ஆவது திருத்தத்துக்கு அப்பால் செல்லாது என்பதை திட்டவட்டமாக கூறியிருக்கிறார். மக்களின் அங்கீகாரத்தைப் பெறுவதற்கு சர்வஜன வாக்கெடுப்புக்கு செல்லவேண்டிய நிலை உருவாகாத வகையிலான திருத்தத்திலேயே அவர் கவனம் செலுத்துகிறார் என்பது தெளிவானது.

ஆனால், 19ஆவது திருத்தத்தில் இருந்த ஒப்பீட்டளவில் வலிமையான பல ஏற்பாடுகள் புதிய வரைவில் இல்லை என்று சட்டநிபுணர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.

2015 – 2019 மைத்திரி – ரணில் ஆட்சிக்காலத்தில் முன்னெடுக்கப்பட்ட புதிய அரசியலமைப்பு வரைவுச் செயன்முறைகளின்போது பொதுமக்களிடமிருந்து கருத்துக்களைப் பெறுவதற்காக நியமிக்கப்பட்ட மக்கள் பிரதிநிதித்துவக் குழுவின் தலைவராக இருந்த சட்டத்தரணி லால் விஜேநாயக்க, “19ஆவது திருத்தத்தின் ஏற்பாடுகளை முழுமையாக மீண்டும் கொண்டுவருவதாகவே உறுதியளிக்கப்பட்டது. ஆனால், அவ்வாறு செய்யப்படுவதாக இல்லை. புதிய வரைவில் நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கான ஜனாதிபதியின் அதிகாரம் அப்படியே விட்டுவைக்கப்பட்டிருக்கிறது. அந்த அதிகாரம் துஷ்பிரயோகம் செய்யப்படலாம். சுயாதீன ஆணைக்குழுக்கள் சம்பந்தப்பட்ட விடயம் முக்கியமானது. இந்த ஆணைக்குழுக்களின் தீர்மானங்கள் ஜனாதிபதிக்கு மேலானவையாக இருக்கவேண்டும்” என்று கூறியிருக்கிறார்.

“19ஆவது திருத்தத்தின் முக்கியமான ஏற்பாடுகள் 21ஆவது திருத்த வரைவில் கைவிடப்பட்டிருக்கின்றன. ஜனாதிபதி தனக்கு அமைச்சுக்களை ஒதுக்கமுடியாது என்றும் அமைச்சர்களிடமிருந்து பொறுப்புகளை அவர் எடுத்துக்கொள்ளமுடியாது என்றும் 19ஆவது திருத்த ஏற்பாடு கூறியது. ஆனால், அந்த ஏற்பாடு புதிய வரைவில் இல்லை. இது ஜனாதிபதியை வலுப்படுத்துகிறது. நாடாளுமன்ற கூட்டத்தொடரை ஒத்திவைக்கும் அதிகாரமும் நாடாளுமன்றத்தை கலைக்கும் அதிகாரமும் தொடர்ந்தும் ஜனாதிபதியிடம் விட்டுவைக்கப்படுகின்றன. இது அவர் நாடாளுமன்றம் தொடர்பில் ஒருதலைப்பட்சமான முடிவுகளை எடுக்க வழிவகுக்கும். நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறை ஒழிக்கப்படுவதை பெரும்பான்மையான மக்கள் விரும்புகிறார்கள் என்பது கருத்துக்கணிப்புக்கள் மூலம் தெரியவருகிறது” என்று அரசியலமைப்பு சட்டநிபுணரான கலாநிதி ஜயம்பதி விக்கிரமரத்ன கூறுகிறார்.

19ஆவது திருத்தத்தின் சகல ஏற்பாடுகளுக்கும் சுதந்திர கட்சி ஆதரவாக இல்லை. இது கோட்டபாய – ரணில் அரசாங்கத்திற்குள் இருக்கும் முரண்பாடுகளை வெளிக்காட்டுகிறது என்றும் கலாநிதி விக்கிரமரத்ன சுட்டிக்காட்டுகிறார்.

“தற்போது அமைச்சரவை முன்னால் உள்ள 21ஆவது திருத்த வரைவு பெரிய ஏமாற்றத்தைத் தருகிறது. அரசியலமைப்பு சீர்திருத்தங்களைப் பொறுத்தவரை, இந்த வரைவு அர்த்தமுடைய ஒரு நடவடிக்கையாக அமையாது. அதில் மாற்றங்கள் பலவற்றைச் செய்யாவிட்டால் பொறுப்புக்கூறக்கூடியதும் ஊழலற்றதுமான ஜனநாயக ஆட்சிமுறையை வேண்டிநிற்கும் மக்களின் போராட்டங்களுக்கு செய்யப்படும் துரோகமாக அது அமையும்” என்று குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகத்தின் முன்னாள் சட்டப் பேராசிரியரான சூரி ரத்னபால கூறியிருக்கிறார்.

‘கோட்டா வீட்டுக்குப் போ’ என்ற என்ற கவர்மொழியுடன் நாடு பூராவும் இடம்பெறுகின்ற மக்கள் போராட்ட இயக்கம் இரு பிரதான இலக்குகளைக் கொண்டிருக்கிறது என்று நான் கருதுகிறேன். ஜனாதிபதி கோட்ட்பாய ராஜபக்‌ஷவை பதவியில் இருந்து அகற்றிவிட்டு எதேச்சாதிகார ஆட்சிமுறைக்கு பதிலாக ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோகத்துக்கு எதிரான ‘தடுப்புக்களும் சமப்படுத்தல்களும்’ ( Checks and Balances) கொண்ட – மக்கள் நலனில் அக்கறைகொண்ட ஆட்சிமுறையை உருவாக்குவதே அந்த இலக்குகளாகும். 21ஆவது திருத்தம் தற்போதைய வடிவில் நிறைவேற்றப்பட்டால் அந்த இலக்குகளை சாதிக்கமுடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறையை இல்லாதொழிக்க அரசாங்கம் உடனடியாக எந்த நடவடிக்கையிலும் இறங்கும் சாத்தியமில்லை. அது என்றென்றைக்குமே ஒழிக்கப்படாமலும் போகக்கூடும். ஜனாதிபதியின் அதிகாரங்கள் ஒரளவு குறைக்கப்படுவதுடன் இந்த அரசியலமைப்பு சீர்திருத்தங்கள் நின்றுபோய்விடவும் கூடும். ஜனாதிபதி ஆட்சிமுறையை நீக்கக்கூடாது என்ற தங்கள் வலியுறுத்தலை நியாயப்படுத்த இனவாத சக்திகள் அதை அரசியலமைப்புக்கான 13ஆவது திருத்தத்துடன் முடிச்சுப் போடுகிறார்கள். மாகாணசபைகள் கூடுதல் அதிகாரங்களைக் கேட்கமுடியாது என்ற நிலை உத்தரவாதப்படுத்தப்பட்ட பின்னரே ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிப்பது குறித்து பரிசீலிக்கவேண்டும் என்பது அவர்களது வாதம்.

ஜனாதிபதி ஆட்சிமுறை ஒழிப்புக்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவுடன் மக்களிடம் சர்வஜன வாக்கெடுப்பொன்றில் அங்கீகாரமும் பெறப்படவேண்டும். அதனாலேயே நாடாளுமன்றத்தின் அதிகாரங்களை அதிகரிக்க 21ஆவது திருத்தம் கொண்டுவரப்படுகிறது என்பது அதை ஆதரிப்போரின் வாதமாக இருக்கிறது. ஆனால், மக்களின் அங்கீகாரத்தைப் பெறுவதற்கு தற்போதைய தருணத்தை விட சிறப்பான தருணம் கிடையாது.

நாடாளுமன்றத்தின் அதிகாரங்களை அதிகரிப்பதுதான் மெய்யான நோக்கமாக இருந்தால், ஜனாதிபதியின் அதிகாரங்கள் சாத்தியமானளவு கூடுதல் பட்சம் குறைக்கப்படவேண்டும். ஆனால், புதிய திருத்த வரைவு அந்த நோக்கத்தை நிறைவுசெயயப் போதுமானதல்ல.

எது எவ்வாறிருப்பினும், பொருளாதார அனர்த்தத்தினால் திணறிக்கொண்டிருக்கும் நாட்டு மக்களின் கிளர்ச்சியை நீர்த்துப்போகச் செய்வதற்கான ‘ திசைதிருப்பல்’ தந்திரோபாயமாக 21ஆவது திருத்தம் அமைந்துவிடக்கூடாது. நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறை ஒழிக்கப்படவேண்டும் என்ற இன்றைய வெகுஜனக் கோரிக்கைக்கு எதிரான கேடயமாகவும் இந்தத் திருத்தம் அமைந்துவிடக்கூடாது. ஏனென்றால், 20 மாதங்களுக்கு முன்னர் 19ஆவது திருத்தத்தை இல்லாமல் செய்யது 20ஆவது திருத்தத்தைக் கொண்டுவந்து மட்டுமீறிய அதிகாரங்களை தனதாக்கிக்கொண்ட ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்‌ஷவே நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிப்பதற்கு முன்னெடுக்கப்படக்கூடிய எந்த முயற்சியையும் ஆதரிக்கத்தயாராயிருப்பதாக கூற நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கிற அளவுக்கு அந்த ஆட்சிமுறைக்கு எதிராக உணர்வுகள் மக்கள் மத்தியில் முன்னென்றும் இல்லாதளவுக்கு உத்வேகம் பெற்றிருக்கின்றன.

வீரகத்தி தனபாலசிங்கம்