Photo: AP Photo, Eranga Jayawardena, TAIWANNEWS

மேலும் அதிகளவிலான ஒழுக்கக்கட்டுப்பாடு, தியாகம் மற்றும் ஒற்றுமை என்பன தொடர்பான ஜனாதிபதியின் பணிப்புரைகள் ஒரு புறம். ‘இறுதியில் அனைத்துமே சரியாகிவிடும்’ என்ற அதீத நம்பிக்கையுடன் கூடிய குரல்கள் மறுபுறம். தற்போதைய நாட்டு நிலைமை குறித்து அரசாங்கம் எந்தவிதமான தெளிவான ஒரு விளக்கத்தை கொண்டிருக்கவில்லை என்பதனை பார்க்க முடிகின்றது. சுற்றுலாத்துறை விருத்தியடைந்து, இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகள் எம்மை இந்த நிலையிலிருந்து மீட்டெடுக்க முடியும் என்ற நம்பிக்கை, தவிர்க்க முடியாத தாக்கங்களை தவிர்த்துக் கொள்வதற்கு எந்த விதத்திலும் போதுமானதாக இருந்து வரவில்லை. செயல்திறனற்ற நிலை, மோசமான முகாமைத்துவம், பொது மக்கள் அனுவித்துவரும் துன்பம் குறித்து அனுதாபமோ ஒப்புரவோ துளியும் இல்லாத ஒரு அவலநிலை நிலவி வருவதுடன், அதற்கு அரசு பொறுப்பேற்க வேண்டியுள்ளது. எந்தவொரு அரசாங்கத்தினதும் எழுச்சியும், வீழ்ச்சியும் அது பின்பற்றும் கொள்கையிலேயே தங்கியிருக்கிறது.

கொள்கை விடயத்தைப் பொறுத்தவரையில் அரசாங்கத் தரப்பிலிருந்து முன்வைக்கப்பட்டு வரும் தெளிவற்ற பிதற்றல்கள் பொது மக்களின் ஆத்திரத்தையும், கோபத்தையும் மேலும் தூண்டியுள்ளன. மேலும் மேலும் குழுக்களை உருவாக்குவதற்கென குழுக்கள் உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. சீன வங்கிகள் தமக்குச் சேர வேண்டிய தொகைகளை கேட்டு வருவதுடன், இந்தியா அதன் உதவிகள் தொடர்பாக விதித்திருக்கும் நிபந்தனைகள் இன்னமும் முழுமையாக வெளிப்படுத்தப்படவில்லை. காகிதப் பற்றாக்குறை காரணமாக பரீட்சைகள் கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளன! நாளாந்தம் எரிபொருள் வரிசைகளில் மரணங்கள் நிகழ்ந்து வருகின்றன. அரசாங்கம்  பதவி விலக வேண்டுமெனக் கோரி பிரஜைகள் அமைதியான விதத்தில் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றார்கள். நிலைமை வெகு விரைவில் சீரடையும் என காலம் கடத்திக் கொண்டிருக்கும் நிலையை இனிமேலும் மேற்கொள்ள முடியாது.

சர்வதேச நாணய நிதியத்துடன் நாங்கள் ஓர் ஒப்பந்தத்தை செய்து கொள்வதாக இருந்தால் – இந்த ஒப்பந்தம் இடம்பெறுமா என்ற விடயம் தெளிவாகத் தெரியவில்லை –  பொருளாதாரத்தை மீண்டும் முடுக்கி விடுவதற்கு ஆகக் குறைந்தது ஆறு மாதங்கள் எடுக்க முடியும் என்பதனை அனைத்து விதமான பகுப்பாய்வுகளும் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றன. அதே வேளையில், சர்வதேச நாணய நிதியத் தலையீட்டின் பின்னர் நிலைமைகள் சீராக்கப்படுவதற்கு முன்னர் அனைத்துமே மிக மோசமான நிலைமைக்கு தள்ளப்பட முடியும். 2019 மற்றும் 2020 தேர்தல்களில் மக்கள் இழைத்த மாபெரும் தவறுகளுக்கான விலையை இப்பொழுது செலுத்தி வருகின்றார்கள் – ஒரு இராணுவப் பிரிவின் கொமாண்டராக இருந்தது தவிர, பொருளாதாரம் குறித்த எந்தவொரு தெளிவான கருத்தையும் கொண்டிராத, ஆட்சி அனுபவம் இல்லாத ஜனாதிபதி ஒருவர் எம்மை மிக வேகமாக வங்குரோத்து நிலைமைக்கு எடுத்துச் சென்றிருக்கின்றார். நிபுணத்துவம் மற்றும் அனுபவம் என்பவற்றைக் கொண்டவர்களாக கருதப்பட்ட வியத்மக புத்திஜீவிகள் எங்கே? உண்மையில் அரசாங்கத் தரப்பில் இருக்கும் பொருளியலாளர்கள் யார்?

நாங்கள் இப்பொழுது ஒரு பொருளாதார நெருக்கடியையும், அரசியல் நெருக்கடியையும் சந்தித்திருக்கிறோம். அவை இரண்டும் இணைந்து இலங்கை அரசாங்கத்தின் நெருக்கடியை தோற்றுவித்துள்ளது. பொருளாதார நெருடிக்கடியையும், அரசியல் நெருக்கடியையும் தனித்தனியாக எடுத்து, தீர்த்து வைக்க முடியாது. அந்தப் பேரழிவிலிருந்து மீட்சி பெறுவதற்கென தெளிவான, உபாய ரீதியான ஒரு நோக்கு அவசியமாகும் – அதற்கு திடசங்கற்பத்துடன், நிர்ணயகரமான ஓர் அரசியல் தலைமைத்துவம் தேவைப்படுவதுடன், சீர்த்திருத்தம் மற்றும் புத்துயிர்ப்பூட்டுதல் என்பன குறித்த தெளிவான ஒரு​திட்டத்தின் முறையான கொள்கை பக்கபலம் அதற்கு இருக்கவேண்டும். வெளிப்படையாக சொல்வதாக இருந்தால், இந்த அரசாங்கம்  செயற்பட்டிருக்கும் விதம், அந்தக் கொள்கையை உருவாக்கும் விடயத்தில் எந்தவொரு நகர்வையும் இதுவரையில் மேற்கொண்டிருக்கவில்லை. அரசாங்கம் 6.9 மில்லியன் வாக்காளர்களின் வாக்கு வங்கியையும், நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையையும் கொண்டிருந்த போதிலும், அது இந்தத் பிரச்சினை தொடர்பான தகவல்களை சரியான விதத்தில் மக்களுக்கு தொடர்பாடல் செய்யவில்லை.

வசம்சாவளி ஆட்சி முறைக்கு ஊடாக தொடர்ந்து அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்வதிலும், எல்லாத் துறைகளிலும் அரசாங்கம் வேகமாக தோல்வி கண்டு வருவது தெளிவாகத் தெரியும் நிலையிலும் கூட, ‘அப்படி ஒன்றுமே நடக்கவில்லை’ என்ற விதத்திலான ஒரு நிலைப்பாட்டில் அவர்கள் இருப்பதனைப் பார்க்க முடிகின்றது. இறுதியில் கம்மன்பில மற்றும் வீரவன்ச ஆகியோர் அமைச்சரவையிலிருந்து வெளியேற்றப்பட்ட செயல், அரசாங்கத்திற்குள் நிலவி வரும் பெரும் குழப்பநிலை  மற்றும் ஒற்றுமைக் குலைவு என்பவற்றை தெளிவாக எடுத்துக் காட்டியுள்ளது. அரசாங்கத்திற்கு உடனடியாக தேவைப்படும் உறுதிப்பாடு மற்றும் திடசங்கற்பம் என்பன கொஞ்சமும் இருப்பதாகத் தெரியவில்லை. அது நாளையும், நாளை மறுதினமும் வீழ்ச்சியடையாதிருக்கலாம். ஆனால், கொள்கை ரீதியிலான தீவிரமான சீர்திருத்தங்கள் முன்னெடுக்கப்பட்டு, அந்தச் சீர்திருத்தங்கள் மக்கள் மீது ஏற்படுத்தும் தாக்கங்கள் தொடர்பாக வலுவான விதத்தில் அவர்களுக்கு தெளிவிக்கப்பட்டாலே, ஒழிய அரசாங்கம் வீழ்ச்சியடைவதனை தடுத்து நிறுத்த முடியாது.

சர்வதேச நாணய நிதியத்தை நாடுவதற்கு இவ்வளவு நீண்டகால தாமதம் ஏன் என்ற விடயத்தை அரசாங்கம் எமக்கு எடுத்து விளக்குமா ? இப்பொழுது அது சர்வதேச நாணய நிதியத்திடம் செல்வதற்கு தயாராகி வருகின்றது. இலங்கையின் பொருளாதாரம் குறித்த சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கை என்ன கூறுகின்றது? நாங்கள் சர்வதேச நாணய நிதியத்தை நாடினால் மக்கள் என்னென்ன தியாகங்களை செய்ய வேண்டியிருக்கும்? அது ஏன்? அரசாங்கம் இந்தக் கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும் என்ற மக்களின் எதிர்பார்ப்பு இனிமேலும் நிறைவேறும் சாத்தியமில்லை. இப்பொழுது மக்கள் ஒரேயொரு வார்த்தையைத் தான் சொல்கிறார்கள்: ‘வீட்டுக்குச் செல்லுங்கள்’!

அவர் தானாகவே முன்வந்து அவ்விதம் வீடு செல்லமாட்டார். ஏனென்றால், அது அவரால் செய்ய முடியாத ஒரு காரியமாக இருக்கின்றது. அவ்விதம் ஜனாதிபதி பதவி துறந்தால் அது வம்சத்தின் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வரும். சகோதரரான நிதியமைச்சர் அல்லது மகன் முறையான விளையாட்டுத் துறை அமைச்சர் அவருக்குப் பின்னர் அந்தப் பதவியை பொறுப்பேற்றாலும் 2019 இலும், 2020 இலும் 6.9 பில்லியன் மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் கோட்டபாய ராஜபக்சவை வரவேற்று, அவருக்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைக் கொடுத்த அந்த நிலைமை மீண்டும் ஒரு போதும் வரமாட்டாது. இதில் முதலாமவர் இன்னமும் மக்கள் அபிமானத்தை வென்றிருக்கவில்லை. மற்றவரை இனிமேல் தான் மக்கள் தலைவராக பார்க்க வேண்டியுள்ளது. ஆட்சி அதிகாரம் இல்லாத நிலையில் தண்டனை விலக்குரிமை எவருக்கும் கிடைக்க மாட்டாது. பொறுப்புக்கூறல் நிலை தொடர்பாக நம்பிக்கை வைத்திருப்பவர்கள் ஒரு போதும் இந்தப் பதவிகளை கைவிட்டுச் செல்லமாட்டார்கள்.

தமது அரசியல் பிழைப்பு மற்றும் பாதுகாப்பு என்பவற்றுக்காக ராஜபக்ஷக்கள் அடுத்த தேசியத் தேர்தல்களில் வெற்றியீட்ட வேண்டியுள்ளது. அதன் காரணமாக அடுத்து வரும் தேர்தல்கள் வன்முறை, பயமுறுத்தல் மற்றும் அச்சுறுத்தல் என்பன மலிந்த தேர்தல்களாக இருந்து வர முடியும். ஒரு வேளை, இதற்கு முன்னர் நாட்டில் இடம்பெற்றிராத அளவில் பாரிய வன்முறைகள் கூட நிகழ முடியும். ராஜபக்‌ஷ தேர்தல் பிரச்சாரத்தின் ஒரு பாகமாக தாமாகவே விரும்பி முன்வரும் இராணுவத்தினரையும் (ஒட்டுமொத்த இராணுவமும் இதில் பங்கேற்கும் என்ற நிச்சயமில்லை), முன்னைய இராணுவத்தினரையும் சிறந்த விதத்தில் பயன்படுத்திக் கொள்ள  முடியும். மேலும், தேர்தல்கள் இன ரீதியான பதற்ற நிலைமைகள் மற்றும் கொந்தளிப்புக்கள் என்பன இடம்பெறும் ஒரு பின்புலத்தில் நடத்தப்பட முடியும் – இந்த அம்சங்கள் கடந்த காலத்தில் ராஜபக்‌ஷக்களுக்கு சாதகமானவையாக இருந்து வந்துள்ளன. மறுபுறத்தில், அவர்களுடைய அதிகாரத்தை நியாயப்படுத்தி வரும் இரண்டு தரப்புக்களான காவியுடை தரப்பும், சீருடை தரப்பும் தற்போதைய ஜனாதிபதி அடுத்து வரவிருக்கும் தேர்தலில் வெற்றியீட்ட முடியாது எனக் கருதினால் அவர்கள் சிவில் உடையில் இருக்கும் வலுவான ஒரு தலைவரை அவருக்குப் பதிலாக கொண்டு வருவார்களா? அநேகமாக ஜெனரல் சவேந்திர சில்வா அவ்வாறு எடுத்து வரப்பட முடியுமா?

இத்தகைய தெரிவுகள் எவையும் இடம்பெற்றால் எதிர்க்கட்சியின் எதிர்வினை என்னவாக இருக்க வேண்டும்? ஜனாதிபதி அலுவலத்திற்கு வெளியில் நடத்தப்பட்ட இரண்டு ஆர்ப்பாட்டங்களும் பங்கேற்றவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் நோக்கும் பொழுது வெற்றியீட்டியிருப்பதனை காண முடிகிறது. அது பொது மக்கள் மத்தியில் நிலவி வரும் கோப உணர்வை தெளிவாக எடுத்துக் காட்டியிருந்தது. எவ்வாறிருப்பினும், இங்கு ஒரு சில தவிர்க்க முடியாதவை, இந்தப் பாரிய ஆர்ப்பாட்டங்களின் உண்மையான நோக்கம்/ குறிக்கோள் என்ன? எவ்வளவு காலத்திற்கு இத்தகைய ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்க முடியும்? நாட்டு நிலைமையில் எந்த விதமான மாற்றங்களும் ஏற்படாமல் மேலும் மேலும் நிலைமை மோசமடைந்தால் மக்கள் பொறுமையுடன் காத்துக் கொண்டிருப்பார்களா?

ஜனாதிபதி பதவி விலக வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார். தனது தலைமையில் அமைக்கப்படும் ஓர் அரசாங்கத்திற்கு உதவுவதாக மூன்று மத்திய கிழக்கு நாடுகள் வாக்குறுதியளித்திருப்பதாக எதிர்க்கட்சி தலைவர் சொல்கிறார். ராஜபக்‌ஷ ஜனாதிபதி ஆட்சியை நிலைகுலையச் செய்வதற்கு மக்களின் பாரியளவிலான அதிருப்தி மற்றும் ஆத்திர உணர்வு என்பவற்றில் பிரேமதாச தங்கியிருக்கின்றார் என்பது தெளிவாகத் தெரிகின்றது. எனினும், ஜனாதிபதி ராஜபக்‌ஷ அடுத்த ஆண்டு வரையில்  ஜனாதிபதித் தேர்தலை நடத்த வேண்டிய தேவை இல்லை. அடுத்த ஆண்டிலும் அவர் தேர்தலில் போட்டியிடுவதாக இருந்தால் மட்டுமே அவ்விதம் நடத்த வேண்டியிருக்கும். அதன் பின்னர் பொதுத் தேர்தலை நடத்த முடியும்.

இங்கு எதிர்க்கட்சியின் மிக முக்கியமான பிரச்சினை ஒற்றுமை தொடர்பான பிரச்சினையாகும். சமகி ஜன பலவேகய கட்சியையும் ஜே.வி.பி. ஆதரவுத் தரப்புக்களையும் பலம் வாய்ந்த ஓர் எதிர்கட்சிக் கூட்டணிக்குள், ஒரே தலைவரின் கீழ் எடுத்து கொண்டுவர முடியுமா? தமது தலைவரால் ராஜபக்‌ஷக்களுக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுக்க முடியும் என ஜே.வி.பியினர் ஒரு வேளை கருத முடியும். அவ்விதம் போராட்டத்தை முன்னெடுத்து, தேர்தலில் வெற்றியீட்டி, அதே வேகத்தில் அடுத்து வரும் பொதுத் தேர்தலிலும் வெற்றியீட்ட முடியும் என அவர்கள் நம்பக்கூடும். எவ்வாறிருப்பினும், இந்தக் கணிப்பு தொடர்பான ஒரு சில “நடந்தால்” மற்றும்  “ஆனால்” என்பன இருந்து வருகின்றன. ஜே.வி.பியின் பொருளாதாரக் கொள்கை என்ன? மேலும் 1988 – 1989 காலப் பிரிவில் அது நிகழ்த்திய வன்முறை மற்றும் கொடுமைகள் என்பன தொடர்பாக வாக்காளர்கள் அதற்கு மன்னிப்பு வழங்குவார்களா?

ஐக்கிய தேசியக் கட்சி இன்னமும் அதன் ஆதரவுத் தளத்தைக் கொண்டுள்ளதா? அவ்வாறு இருந்தால் ஒரு தேர்தலில் அவர்களுடைய நிலை என்ன? எவ்வாறிருந்தபோதிலும், தற்போதைய நிலை தொடர்பாக விக்கிரமசிங்கவின் நிலைப்பாடு பெருமளவுக்கு நியாயமானதாகத் தென்படுவதுடன், அது எதிர்க்கட்சியின் கொள்கை தொகுப்புக்குள் உள்வாங்கப்படுதல் வேண்டும்.

ஆர்ப்பாட்டங்களைப் பொறுத்தவரையில் எதிர்க்கட்சி தெளிவான, சாத்தியமான, உபாய ரீதியான ஒரு குறிக்கோளை அடையாளம் காண வேண்டியுள்ளது. மேலும், அது வெற்றியீட்ட வேண்டுமானால் ஒரு கொள்கை மற்றும் செயற்திட்டம் என்பவற்றை கொண்டிருத்தல் வேண்டும். எந்த விதத்திலும் ஊசலாட்டம் இருக்க முடியாது – அதிகாரத்திற்கு வந்த பின்னர் அது உடனடியாக காரியங்களை நிறைவேற்ற வேண்டும். உடனடியாகத் தேவைப்படும் சீர்திருத்தங்களை அமுல் செய்ய வேண்டும். முதல் முன்னுரிமை 19ஆவது திருத்தத்தை மீண்டும் கொண்டுவருவதாகும்.

சஜித் பிரேமதாஸ, ரணில் விக்கிரமசிங்க, அனுர குமார திஸாநாயக்க, சம்பிக்க ரணவக்க  மற்றும் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்க விரும்பும் ஏனைய நபர்கள் இதற்கு உடன்படுவார்களா?

அவர்கள் அவ்விதம் உடன்படாவிட்டால், நாங்கள் இந்தப் பெரும் சீரழிவு நிலைக்குள் மேலும் மேலும் தள்ளப்படுவோம். ஐந்து வருட காலத்தில் கிறீஸ் நாட்டில் ஏழு அரசாங்கங்கள் செயற்பட்டன என்ற விடயத்தை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அத்துடன், இலங்கை இராணுவம் மக்களுக்கு செல்வச் செழிப்பு மிகுந்த ஓர் எதிர்காலத்தை ஏற்படுத்தும் என்ற வாக்குறுதியையும் வழங்கி வருகின்றது.

கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து

Sri Lanka: Quo Vadis, 2022? Where is the country heading to? என்ற தலைப்பில் ‘டெய்லி எவ்டி’ தளத்தில் வெளிவந்த கட்டுரையின் தமிழாக்கம்.