Photo, Apbspeakers

“அநீதியான சூழ்நிலையில் நடுநிலையாளனாக இருப்பது என்பது ஒடுக்குமுறையாளனின் பக்கம் நிற்பதாகும். யானை எலியின் வாலில் தனது காலை வைத்துக் கொண்டு தான் நடுநிலையாளன் என்று சொல்லுவதை, எலி ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை.”

டெஸ்மண்ட் டூட்டு

தென்னாபிரிக்க நிறவெறி நிறுவனக் கட்டமைப்பிற்கெதிராக, கறுப்பின அடக்குமுறைக்கெதிராக முற்போக்குச் சிந்தனையோடு போராடிய ஒரு விடுதலைப் போராளியின் பயண  நிறைவில் நீதிக்கும் அமைதிக்குமான குருக்கள், துறவிகள் வடக்கு-கிழக்கு ஆழ்ந்த கவலையைத் தெரிவிக்கின்றது.

நிறுவன மயப்படுத்தப்பட்ட நிறவெறி அடக்குமுறைக்கெதிராக 1970 களிலிருந்து அடக்குமுறைக்குட்படுத்தப்பட்ட பெரும்பான்மை மக்களின் குரலாகவும், அம்மக்களோடு பயணித்து மக்களின் விடுதலைக்காக உழைத்து ‘வானவில் தேசமான’ தென் ஆபிரிக்காவை கட்டியெழுப்பிய தேசப்பிதாக்களில் ஒருவரான டூட்டுவின் மறைவு நிரப்பீடு செய்யப்படமுடியாதது.

தனது பட்டறிவின் மூலம் அடக்கப்பட்ட மக்களின் அரசியல் வேணவாவை விளங்கிக் கொண்டு அதற்காகவே கொள்கை ரீதியான நிலை எடுத்து தன்னை அடக்குமுறைக்குட்படுத்தப்பட்ட மக்களின் ஒரு பொதுப்படிமமாக கட்டமைத்துக் கொண்டவர். டூட்டுவின் அரசியல், அடக்குமுறைக்கெதிராக பல்வகை உத்திகளை விடுதலையை நோக்கிப் பயணிப்பதற்கு கையாண்டாலும் அவரது விமர்சனப் பகுப்பாய்வு நகைச்சுவையும், வன்முறையற்ற அணுகுமுறையும் மிகவும் முக்கியமானது. அதே உத்தியை விடுதலைக்குப் பின்னர் தென்னாபிரிக்க தலைவர்கள் ஊழல்களில் சிக்கிய போதும் கையாண்டார் என்பது அவரது தலைமைத்துவத்திற்கான சிறந்த எடுத்துக்காட்டாகும்.

நிறவெறி, ஹிட்லரின் நாசிசத்திற்கு சமமானது எனக் குறிப்பிட்டு, ஐ.நா. சபையில் (1988) நிறவெறிக்கெதிராக தண்டனை அமுல்படுத்தாத மேற்குலக அரசியல்வாதிகளை நிறவெறியவர்கள் என சாடியதையும் வரலாறு நினைவு கூரும். பாதிக்கப்பட்ட-மக்கள்-மைய நீதிப் பொறிமுறை அணுகுமுறையே எதிர்காலத்தில் மீள் நிகழாமையை உறுதிப்படுத்தும் என்பது அவரது பட்டறிவாக இருந்ததை அவருடைய கருத்துக்களிலிருந்து அவதானிக்க முடிகின்றது.

சர்வதேச மூதவையின் தலைவராக இருந்த போது 2013 நவம்பரில் பொதுநலவாய மாநாடு இலங்கையில் நடத்தமுடியாது எனக் குரல் கொடுத்தவர்களில் டெஸ்மன் டூட்டுவும் ஒருவர். தமிழ்த் தேசிய நோக்கில் பாதிக்கப்பட்ட ஈழத் தமிழ் மக்கள் என்ன சொல்லுகிறார்கள் என்பதைப் பொறுத்தே “தான் வழிநடத்தப்பட விரும்புவதாக” குறிப்பிட்டு அவ்வாறே ஏனைய அரசாங்கத் தலைவர்களும் பொதுநலவாய மாநாட்டிற்குப் போகக் கூடாது என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருந்து, பொதுநலவாய மாநாடு இலங்கையில் நடத்தப்படக்கூடாது என்ற பகிஸ்கரிப்புக்கு சர்வதேச மூதவை ஊடாக வலுச் சேர்த்ததையும் ஈழத்தமிழினம் ஒரு போதும் மறக்காது. ஈழத்தமிழ் மக்களின் அரசியல் தீர்வு விடயத்தில் “இலங்கை அரசாங்கம் நேர்மையாக செயற்படவில்லையெனில் சர்வதேச சமூகம் தன்னாலான முழு முயற்சிகளையும் முடுக்கி விட வேண்டும்” என ஆணித்தரமாக இடித்துரைத்தவர். “அவ் உத்திகளில் பொதுநலவாய மாநாட்டு பகிஸ்கரிப்பும் ஒரு தந்திரோபாயம்” எனக் குறிப்பிட்டார்.

தென்னாபிரிக்க நாட்டின் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழவின் தலைவராய் இருந்தபோது, நிறுவனமயப்படுத்தப்பட்ட நிறவெறியில் நிகழ்ந்த, நிகழ்த்தப்பட்ட குற்றங்களை ஏற்றுக் கொள்ளுதலே எதிர்காலத்தை எதிர்கொள்வதற்கான ஒரே வழி எனக் குறிப்பிட்டதை தென்னாபிரிக்க வரலாறு சொல்லித் தந்திருக்கின்றது. ஈழத்தமிழினப்படுகொலை மறுப்பு ஒரு போதுமே நல்லிணக்கத்திற்கு இட்டுச் செல்லமுடியாது. ஏனெனில், இனப்படுகொலை மறுப்பில் உண்மை சாகடிக்கப்படுகின்றது. உண்மையை ஏற்றுக் கொள்வதோடு அதைப் பகிரங்கமாக அறிவிக்க வேண்டுமென்பதில் மிகவும் ஆழமான நம்பிக்கை கொண்டிருந்த பேராயர், பல அரசியல் தலைவர்கள் நிறவெறி அரசோடு கைகோர்த்த போது அதைக் கடுமையாகச் சாடினார் என்பதற்கு 1984இல் அப்போதை ஐக்கிய இராச்சிய பிரதமராகவிருந்த மார்கிரட் தட்சருக்கு அவர் எழுதிய கடிதம் முழுச்சான்றாக அமையும். “ஐக்கிய இராச்சியம் தென்னாபிரிக்க பிரதமரை  அரசியல் நோக்கங்களுக்காக உத்தியோகபூர்வமாக அழைத்திருப்பது, நாளாந்தம் நிறவெறி வன்முறைக்குப் பலியாகும் பல்லாயிரக்கணக்கான மக்களின் முகத்திலடிப்பதைப் போன்றது” எனக் குறிப்பிட்டார்.

நடுநிலை அரசியலில் நம்பிக்கை இழந்த அவர் பாதிக்கப்பட்ட மக்கள் சார்பான நிலைப்பாட்டில் உறுதியாயிருந்தார். ஈழத்தமிழினப்படுகொலைக்கு சுயாதீன சர்வதேச விசாரணை மூலமே நீதி கிடைக்க முடியும் என்ற ஈழத்தமிழரின் கோரிக்கைக்கு வலுச் சேர்த்ததையும் ஈழத்தமிழினம் நினைவுகூரும்.

குறுகிய வரையறைகளைக் கடந்து மதத்திற்கு அப்பால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதி கிடைக்க வேண்டும் என்பதில் உண்மையாகவும் நேர்மையாகவும் ஈழத் தமிழருக்காக செயற்பட்ட ஒரு நண்பரை ஈழத்தமிழினம் இழந்து நிற்கின்றது.

ஈழத்தமிழ் மக்களின் அரசியல் போராட்டத்திற்கு ஆதரவு அளித்தது மட்டுமல்லாது சர்வதேச அரங்கில் அதற்காகத் தொடர்ந்து குரல்கொடுத்து வந்தமையை நாம் நன்றியுடன் நினைவு கூருகின்றோம். அரசியல் தலைமைத்துவ வெறுமையில் அடக்குமுறைக்குட்பட்டோரின் குரலாக எழுந்த ஒரு குரல் மௌனித்துப் போய்விட்டது.

அருட்பணி. சா. ம. செல்வரட்ணம் அமதி

அருட்பணி. றோகான் டோமினிக் CMF

அருட்பணி. அ. தேவதாசன்