படம் | Groundviews

ஒரு நாட்டில் இனமோதல்கள் ஏற்படுவதற்கு அரசியல் ஆய்வாளர்களினால் இரண்டு காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன. முதலாவது இனங்கள் அழிந்து போகக்கூடும் என்கின்ற அச்சம், இரண்டாவது இன பக்கச்சார்புகள் பற்றிய முறைப்பாடுகள். இதில் முதலாவது சிறுபான்மையினருக்கு அதிகளவில் ஏற்படுவதுடன் இரண்டாவதானது பரஸ்பரமாக சிறுபான்மை இனத்தவர் மேல் பெரும்பான்மையினராலும், பெரும்பான்மையினருக்கு எதிராக சிறுபான்மையினரினாலும் முன்வைக்கப்படுன்றதொன்றான விடயமாகும்.

இலங்கையிலும் கூட சிங்களவர்கள் பெரும்பான்மையினராக இருக்கின்ற போதும் இந்திய – இலங்கை பிராந்தியத்தில் இந்தியாவின் கோடிக்கணக்கான இந்திய தமிழர்கள் மற்றும் ஈழத்தின் வடக்கு – கிழக்கு தமிழர்களுடன் ஒப்பிடுகையில் சிங்களவர்கள் சிறுபான்மையினரே. இந்திய தமிழ் நாட்டுடன் ஈழத்தின் தமிழ்ப் பகுதிகளும் இணைந்ததான ‘பாரிய தமிழீழம்’ திட்டமும் முன்னர் காணப்பட்டது. இவ்வாறானதொரு ‘பாரிய தமிழீழம்’ அமைக்கப்படும் பட்சத்தில் பெரும்பான்மையான சிங்களவர்களின் இனமழிந்து போகக்கூடியதான அச்சம் பெரும்பான்மையினரிடையே உளவியல் ரீதியான தாக்கத்தினை பாரியளவில் ஏற்படுத்தியிருந்தது. இதனை அடிப்படையாகக் கொண்டே தமக்கெதிரான இனவழிப்பினை பெரும்பான்மையினர் முன்னெடுப்பதாக ஈழத்தமிழர் நம்பினர்.

இலங்கை நாட்டினை பொறுத்தளவில் இனமோதல் என்பது குறுதிய காலத்தினுள் தோற்றம் பெற்றதொன்று அன்று. இவ் இனமோதல் என்பது ஆங்கிலேயரின் ஆட்சியின் பின் திடீரென வெடித்ததொன்றன்று. 1920ஆம் ஆண்டளவிலேயே இவ்விரு இனங்களுக்குமிடையான பிளவுகள் உருவாகத்தொடங்கியிருந்தன. இலங்கையின் தென்பகுதிக்குத் தெரிவாகும் சட்ட உறுப்பினர்களுள் தமிழ்ப் பிரஜையும் இடம்பெற வேண்டும் என்று முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அன்றைய சிங்களத் தலைவர்கள் இசைந்தபோதும் இறுதியில் தமது வாக்குறுதியை நிறைவேற்றத் தவறியிருந்தனர். அன்றளவில் ஆரம்பமாகிய சிங்கள – தமிழ் இனப்பிளவானது அரசின் ஆட்சியும், இனவாதங்களும் நீடிக்கக்கூடியதுமான பயங்கரமானதுமானதொரு பாதிப்பை ஏற்படுத்தியது. தொடக்கக் காலங்களில் மென்மையான மோதல்களாகவிருந்தவை பின்னர் வன்முறைகளாக உருவெடுத்து கொடூரம் நிறைந்ததுமானதொரு உள்நாட்டு யுத்தமாக நிலைமாற்றம் பெற்றது.

1970ஆம் ஆண்டுகளில் இனத்துவ ரீதியாக ஓரங்கட்டப்பட்ட வடக்கு – கிழக்கு தமிழ் இளைஞர்களும் வகுப்புவாத அடிப்படையிலான பிரிவினைகளுக்குள்ளான தெற்கு சிங்கள இளைஞர்களும் மாறுபட்ட விதங்களில் தீவிரவாதத்திற்கு திரும்பி இலங்கையரசிற்கு எதிரான ஆயுதக்கிளர்ச்சிகளை ஆரம்பித்தனர். இக்கிளர்ச்சிகளை நாட்டின் தேசியத்திற்கான அச்சுறுத்தலாக மட்டுமே முதன்மைப்படுத்திக் கொண்ட இலங்கை அரசு, இந்த இயக்கங்களின் பின்னால் மறைந்திருந்த இனத்துவ அரசியல் பிரச்சினைகளை கவனத்தில்கொண்டு சீர்ப்படுத்தத் தவறியிருந்தது. இந்தச் சவால்களைக் கையாள்வதற்கு சட்டவிரோத கொலைகள், சித்திரவதைகள் மற்றம் காணாமல் போகச்செய்தல் உள்ளிட்ட அடக்குமுறைகளை கையாண்டது.

1983 இனக்கலவரத்தின் பின்னர் தமிழர்கள் மீதான அடக்குமுறைகள் தீவிரம் அடைகையில் தமிழனக்குழுக்களின் ஆயுதப் போராட்டங்களும் தீவிரமடையத் தொடங்கின. இவற்றுள் ‘தமிழ் விடுதலை இயக்கம்’ என்ற பெயரில் ஆரம்பமாகிய தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் 1980களின் நடுப்பகுதியில் பிரிவினைவாதத்தினை எதிர்க்கும் சக்தியாக உருவெடுத்தது. அதேவேளை, ஏனைய ஆயுதமேந்திய குழுக்களை மௌனிக்கச் செய்து தாமே தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதி என்பதை வலியுறுத்த வன்முறை உத்திகளையும் அதிகம் கடைப்பிடித்தது. 1990களில் வடக்கில் முஸ்லீம்களை அவர்களது வீடுகளிலிருந்து வெளியேற்றியும், தமது கட்டுப்பாட்டு எல்லைக்கிராமங்களிலிருந்து சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களை படுகொலை செய்தும் தமிழீழ விடுதலைப்புலிகள் தனியுரிமை அரசியலைப் பின்பற்றினர். விடுதலைப்புலிகளின் ஒவ்வொரு தாக்குதல்களுக்கும் பழிவாங்க நினைத்த அரசு பல பதிலடிகளையும் வன்முறையாகவே கொடுத்தது.

இவ்வாறிருக்கையில் 2002ஆம் ஆண்டு விடுதலைப்புலிகள் – இலங்கை அரசு ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திட்டு சமாதானப் பேச்சு வார்த்தையை முன்னெடுக்க சம்மதித்தன. இதற்கு இரு தரப்பிலும் பல காரணங்கள் ஏதுவாகின. புலிகளைப் பொறுத்தளவில் தொடர்ந்தும் இராணுவமுறைகளை பின்பற்றி யாழ்ப்பாணத்தினை கைப்பற்றுவதென்பது தொடர்ந்தும் தம்மால் இயலாத காரியம் என்பதை உணர்ந்திருந்தனர். அதேபோன்று இலங்கை அரசு யுத்தத்தில் தொடர் தோல்விகளை தழுவி பொருளாதாரத்தில் பாரிய நெருக்கடி நிலை ஏற்பட்டதுடன் விடுதலைப் புலிகளினால்; ஏற்பட்ட உளவியல் ரீதியான அச்சுறுத்தலும் இருதரப்பும் இவ் ஒப்பந்தத்தினை அணுக வழிகோலியது. இவ்விரு தரப்புகளுக்குமிடையில் வலுச்சமனிலை குழம்புவதை விரும்பாத உலக ஆதிக்க நாடுகள், இதற்கு ஆதரவளித்ததுடன் அமெரிக்கா போன்ற உலகமயமாக்கல் சக்திகள் தம்முடைய தேவைகள் கருதியும் இப்போர் நிறுத்தத்தினை வலியுறுத்தின.

எனினும், அரசிற்கும் – விடுதலைப் புலிகளுக்குமிடையில் தொடர்ந்த இனவேற்றுமை, சகிப்புத்தன்மை இல்லாமை என்பன மோதல்களை மேலும் வலுப்படுத்தியதுடன் முன்னரான சமாதான முயற்சிகளைப் போன்றே இவ் ஒப்பந்தத்தினையும் செயலற்றதாக்கியது. இவ்யுத்த நிறுத்த ஒப்பந்தத்தினை ஆரம்பத்திலிருந்து எதிர்த்த சிங்கள கடும்போக்குடைய தேசியவாதிகளுக்கு 2003இலான விடுதலைப்புலிகளின் ஒப்பந்த விலகல் தீர்மானமும் வடக்கு – கிழக்கு இடையிலான இடைக்கால சுயநிர்ணய அதிகாரத்தினை ஸ்தாபிப்பதற்கான ஒருதலைப்பட்சமான பிரேரணையும் அவர்களது எதிர்ப்புக்களை மேலும் தீவிரப்படுத்தியது. இதனை தொடர்ந்து விடுதலைப்புலிகளின் பிளவு, மஹிந்த ராஜபக்‌ஷவின் மயிரிழையிலான வெற்றி, சர்வதேச காரணிகள் என்பன இறுதிப் போரிற்கான வித்திட்டது. ஆக ஒப்பிட்டளவில் குறைந்ததான ஆட்பலம் கொண்ட விடுதலைப் புலிகளுக்கும், மனிதாபிமானமற்ற முறையில் ஆயுதப் பிரயோகங்களை மேற்கொண்ட இலங்கை இராணுவத்திற்கும் இடையில் இருதலைக்கொள்ளி எறும்பான மக்கள் என்றதொரு நிலையிலேயே 2009 இறுதியுத்தம் முன்னெடுக்கப்பட்டது.

பல்லாயிரக்கனக்கான உயிர்களையும் உடைமைகளையும் காவுகொண்ட போர் முடிவுற்று விட்டதாக இலங்கை அதிபர் மஹிந்த அறிவித்து இவ்வருட மே மாதத்துடன் ஐந்தாண்டுகள் முடிவடைகின்றன. ஆனால், சிறுபான்மை மக்களது பிரச்சினைகள் மட்டும் தொடர்கின்றன என்பதே உண்மை. சிறுபான்மையினரின் பிரதிநிதிகளான விடுதலைப் புலிகளது போராட்டத்தினை வேண்டுமானால் மட்டுப்படுத்தியிருக்கலாம் ஆனால், அவர்கள் ஆயுதம் ஏந்தியதற்கான அழுத்தங்கள் இன்றும் தமிழர்களை அழுத்திக்கொண்டு தான் இருக்கின்றன. ஊடகங்களுக்கு எதிரான அச்சுறுத்தல்களும், மனித உரிமை ஆர்வலர்களது கைதுகளும், காணாமல் போதல்களும், இராணுவமயப்படுத்தல்களும் இதையே கூறி நிற்கின்றன. அண்மைய அரசியல் ஆய்வுகள் கூட மீண்டுமொரு போராட்டம் இலங்கையில் உருவாவதற்கான சாத்தியங்கள் உள்ளதாகவே தெரிவிக்கின்றன.

வழமை போன்றே இவ்வாண்டும் மதிப்பிற்குறிய ஜனாதிபதி அவர்கள் ‘ஒரே மக்கள் ஒரே இனம்’ என்று மேடையில் உரைக்கலாம். தமிழில் கூட உரை நிகழ்த்தலாம். ஆனால் சிறுபான்மையினரின் வாழ்க்கைக்கான போராட்டங்கள் மட்டும் வட்டம் வரைதலைப் போன்று தொடங்கிய புள்ளியிலேயே மீண்டும் முட்டி நிற்கின்றது என்பதே யதார்த்தம்;. இதனை மே – 19ஆம் திகதியில் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படவுள்ள ‘போர் வெற்றி’ கொண்டாட்டங்களும் கூட வலியுறுத்தி நிற்கும்.

கேஷாயினி எட்மண்ட்

###

IMG_1852

‘மாற்றம்’ தளத்தின் விசேட வௌியீட்டுக்காக 5 வருட யுத்த நிறைவு குறித்து கட்டுரையாளர்களால் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. அத்தோடு, “5 வருடங்கள் பூர்த்தி | இன்னும் முடிவுறாத யுத்தம்” என்ற தலைப்பில் ‘மாற்றம்’ தளத்தின் ஆசிரியர் எழுதியுள்ள கட்டுரையையும் இங்கு காணலாம்.