Photo: Thehowarths

அறிமுகம்:

ஜூலை 25ஆம் திகதி ஞாயிறு வீரகேசரியில் “வீட்டு வேலை கலாச்சாரத்தை தவிர்ப்போம்” என்ற மகுடத்தில் வெளிவந்த கட்டுரையில் கலாநிதி ரமேஷ் வறுமை பற்றி கூறிய கருத்தானது கவனத்தை ஈர்ப்பதாக அமைந்துள்ளது. அவர் கூறுகிறார், “ மலையகத்தில் வறுமை குறித்து பெரிதாக அலட்டிக் கொள்ளப்படுகிறது. என்னைப் பொறுத்தவரையில் வறுமை என்கின்றதான வாதம் ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல. வறுமை வறுமை என்று கூறி எமது சமூகத்தை நாமே இழிவு படுத்தக்கூடாது. இற்றைக்கு இருபது வருடங்களுக்கு முன்பிருந்த நிலைமை இன்று மலையகத்தில் இல்லை. இதனை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். ஏனெனில், மலையகம் இன்று பல்வேறு மாற்றங்களை அடைந்திருக்கிறது. மலையகத்தில் இருக்கின்ற பிரதான காரணி யாதெனில் வருமானத்தை முகாமைத்துவம் செய்தலில் இழைக்கப்படுகின்ற தவறாகும். வருமானத்தை முகாமைத்துவம் செய்வதில் தவறிழைத்துவிட்டு வறுமை என்று முத்திரை குத்திக்கொள்ளப்படுகிறது.”

இக்கூற்றுகளிலிருந்து வெளிப்படும் நிலைப்பாடுகள் வருமாறு:

1.கடந்த இருபது வருட காலங்களில் வறுமை நிலையில் பாரிய குறைவு ஏற்பட்டுள்ளது. ​ஆகவே ​அது ​பற்றி ​பெரிதாக அலட்டிக்கொள்ளத்தேவையில்லை.

2. மலையகத்தின் பிரதான பிரச்சினை வருமானத்தை முகாமைத்துவம் செய்வதில் தவறிழைத்துவிட்டு வறுமை என்று முத்திரை குத்திக்கொள்ளப்படுகிறது.

இந்நிலைப்பாடுகளை உற்று நோக்குவதற்கு வசதியாக சில வினாக்களுக்கு விடையளிக்க வேண்டியுள்ளது. 20 ஆண்டுகளுக்கு முன்னிருந்த வறுமை நிலையும் தற்போதைய நிலையும் இந்த நிலைமைகள் காரணமாக அரசாங்கம் அரசியல் தொழிற்சங்கங்கள் மற்றும் கம்பனிகள் மட்டங்களில் ஏற்படுத்திய விளைவுகள் என்ன என்பதைப் பற்றிய ஒரு தெளிவு அவசியமானது. அத்தோடு வறுமை பற்றிய கருத்தியல் தெளிவும் பின்புலமும் அவசியமானது.

பின்புலம்  

2002 ஆண்டளவில் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டம் வறுமை குறித்த ஒரு தேசிய மாநாடு ஒன்றை நடாத்தியது. இது கிராமிய, நகர, மற்றும் தோட்டத்துறை என்ற மூன்று பிரிவாக பிரிக்கப்பட்டு செயலமர்வுகள் நடைபெற்றன. தோட்டத்துறையின் வறுமை பற்றிய பொறுப்பை பெருந்தோட்ட வீடமைப்பு சமூகநலன் அபிவிருத்தி நிதியம் (Plantation Housing and Welfare Trust) சுருக்கமாக ‘டிரஸ்ட்’ நிறுவனமே ஏற்றுக்கொண்டிருந்தது. இது பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சின் கீழ் செயற்பட்டு வந்தது. அதன் செயலாளரே அதன் தலைவராகவும் செயற்பட்டார். இக்காலப்பகுதியில் மறைந்த பெ. சந்திரசேகரன் சமூக அபிவிருத்தி அமைச்சிற்கு அமைச்சராக திகழ்ந்தார். தேசிய திட்டமிடல் திணைக்களத்தின் சார்பாக நான் இந்த மாநாட்டிலே கலந்து கொண்டேன். தோட்ட வறுமை பற்றிய கட்டுரைகள் பல டிரஸட் நிர்வாகிகளினால் சமர்ப்பிக்கப்பட்டன. வறுமை பற்றிய கருதத்தியல் ரீதியான எந்தவித தெளிவுமின்றி சமர்ப்பிக்கப்பட்ட கட்டுரைகள் பற்றி எனது மாற்றுக் கருத்துக்களை நான் தெரிவித்தேன்.

மாநாடு முடிவடைந்த பின் மாநாட்டு நகல் வரைவு தேசிய திடட்மிடல் திணைக்களத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட போது மாநாட்டின் முடிவுகள் அதிர்ச்சித்  தருவதாக அமைந்திருந்தன.

“தோட்டத்துறையில் வறுமை என்ற ஒன்று இல்லை, மது பாவனையே அதிகம்” என்ற முடிவை தேசிய திட்டமிடல் திணைக்களம் ஏற்றுக்கொள்ளவில்லை, காரணம் தரவு மற்றும் தகவல்கள் அந்த முடிவை நியாயப்படுததுவதாக அமையவில்லை.

இத்தகைய முடிவிற்குக் காரணம் பெருந்தோட்ட கம்பனிகளின் சார்பான நிறுவனமாக இயங்கி வந்த “டிரஸ்ட்” இதனை  பொறுப்பேற்று நடாத்தியமை என்று உணர்ந்ததால் ஐக்கிய நாட்டு வதிவிட பிரதிநிதியிடம் நான் தனிப்பட்ட வகையில் எடுத்துக் கூறி இந்த வறுமை போன்ற விடயத்தை கையாள வேண்டியது “சமூக அபிவிருத்தி அமைச்சு” என்பதை எடுத்துக்காட்டினேன்.

இதனை ஏற்றுக் கொண்ட ஐ.நா.அ.தி. (UNDP) தோட்ட வறுமை பற்றிய தனியான மாநாடு ஒன்றை கண்டி, கட்டுகஸ்தொட்டை, கூட்டுறவு சங்க மண்டபத்தில் 2 நாள் வதிவிட கருத்தரங்காக சமூக அபிவிருத்தி அமைச்சின் மேற்பார்வையில் நடாத்தியது. இதில் பல சமூக அமைப்புகள் அரச சார்பற்ற நிறுவனங்கள் மிக ஆர்வமாக பங்குபற்றின. இங்கு முன்னைய மாநாட்டின் முடிவுகள் மீள் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டன.

இதன் தொடர்ச்சியாக 2005இல் பெருந்தோட்ட சமூக அபிவிருத்திக்கான தேசிய நடவடிக்கை திட்டம் (National Plan of Action) ஒன்று உருவாக்குவதற்கான முன்னெடுப்புகள் தொடங்கப்பட்டன.

நான் சமூக அபிவிருத்தி அமைச்சின் செயலாளராக இருந்த போது 2006ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்ட கோரிக்கையை நிதி அமைச்சிற்கு முன்வைத்த போது தோட்டப்புறத்தின் வறுமை நிலை பற்றி ஒரு சமர்ப்பணம் செய்தேன்.

அப்போது தோட்டப்புறத்தில் வறுமைக்கோட்டிற்கு கீழே அடையாளம் காணப்பட்டவர்கள் 32% சதவீதமாக இருக்க தேசிய மட்டத்தில் 15.2% மாகவே அமைந்திருந்தது. என்னுடைய சமர்ப்பணத்தை செவிமடுத்த திறைசேரி செயலாளர், தற்போது ஜனாதிபதியின் செயலாளர் “இந்த வறுமையை குறைப்பதற்கு தேசிய நடவடிக்கை திட்டமொன்றை உருவாக்குமாறு” பணித்தார். இந்த சந்தர்ப்பத்திலேயே புத்தாண்டு அபிவிருத்தி நோக்கங்கள் (Millennium Development Goals ) என்று ஐ.நாவின் பிரகடனம் ஒன்றும் வெளியாகியிருந்தது.

இதில் முதல் முக்கிய நோக்கம் வறுமை மட்டத்தை பத்தாண்டு காலத்தில் (2006-2015)இல் அரைவாசியாகக் குறைக்க வேண்டும் என்பதாகும். இறுதியில் பல்வேறு கலந்துரையாடல்களின் பின்னர் பெருந்தோட்ட சமூக அபிவிருத்தி தேசிய நடவடிக்கை திட்டமும் இந்த நோக்கத்தை முன்வைத்தே உருவாக்கப்பட்டது.

இதன் நடைமுறைப்படுத்துதல் முழுமையாக இடம்​பெறவில்லை என்றாலும் அதில் குறிப்பிடப்பட்ட பல அம்சங்கள் மலையக சமூக அபிவிருத்தியில் பேசு பொருளாக அமைந்து, பின்னர் வந்த அபிவிருத்திச் செயற்திட்டங்களுக்கு வழிசமைத்தன. இது செயற்படுத்தப்படாமைக்கு 2010-2013 ஆண்டு காலப்பகுதியில் தோட்ட அபிவிருத்திக்கு அமைச்சொன்று இல்லாது போனமை குறிப்பிடத்தக்கது.

2015 இந்த அமைச்சு மீண்டும் நிறுவப்பட்டபோது இதே நடவடிக்கை திட்டம் இற்றைப்படுத்தப்பட்டு உருவாக்கப்பட்டு இந்த ஐந்தாண்டு திட்டத்திலும் (2016-2020) வறுமை ஒழிப்பிற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. இது  உருவாக்கப்பட்டபோது பேண்தகு அபிவிருத்தி நோக்கங்களை உள்ளடக்கிய ஐ.நாவின் பிரகடனம் (Sustainable Development Goals) வெளியாகிருந்தது.

இதுவும் நடவடிக்கை திட்டமும் இணைந்த ஒன்றாகவே காணப்பட்டது. இந்த வளர்ச்சிப் போக்கில் 2000-2018 வரையிலான காலப்போக்கில் வறுமை நிலை முக்கியமான ஒன்றாகவே கருதப்பட்டு வந்து 1990இல் காணப்பட்ட வறுமைக்கோட்டிற்கு கீழே காணப்பட்ட 26% வீதம் 2012ல்இ 10.9% குறைந்திருந்தாலும் இது ஒரு திருப்திகரமான ஒன்றாக கருதப்பட்டிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஏனெனில் இது தேசிய, நகர, கிராம மட்டங்களைவிட அதிகமாக இருந்தமையே.

இங்கு வறுமைப் பற்றிய கருத்தியல் ரீதியான தெளிவு முக்கியமானது. வறுமை என்பது பல்பரிமானங்களைக் கொண்ட ஒரு கருத்தாகும். இதேபோல் வறுமையை தனிநிலையான வறுமை (Absolute Poverty) என்று ஒப்பிட்டு வறுமை (Relative Poverty) என்றும் நோக்கப்படுகின்றது. தனிநிலையான வறுமையில் பொருளாதார ரீதியான வறுமையே முக்கியப்படுத்தப்பட்டு வறுமைக்கோடு ஒன்று தீர்மானிக்கப்படுகின்றது.

ஒரு தனிநபர் உயிர் வாழ்வதற்கு தேவையான உணவினை பெற்றுத்தரக்கூடிய வருமானம் மட்டம் தீர்மானிக்கப்பட்டு இந்த மட்டத்திற்கு அல்லது வறுமைக்கோட்டிற்கு கீழே உள்ளவர்கள் என்றும் வரைவிலக்கணப்படுத்தப்பட்டது . இந்த அடிப்படையிலேயே தொகை மதிப்பீட்டு புள்ளி விபரத்திணைக்களம் காலாந்தரம் புள்ளிவிபரங்களை சேகரித்து தேசிய மட்டத்திலும் துறைசார்ந்ததும் (நகரம், கிராமம், தோட்டம்) தன்னுடைய கணிப்பீடுகளை வெளியிட்டு வருகிறது. இந்த புள்ளிவிபரம் வறுமைநிலையை சுட்டிக்காட்டுவதையே தேசிய மட்டத்திலே ஏற்றுக்கொள்ளப்பட்டு வருகிறது.

தற்போதைய நிலை

தோட்டத்துறையினது​ வறுமையின் தற்போதைய நிலை பற்றிய ஒரு விரிவான விளக்கத்தை இலங்கை மத்திய வங்கியினது பொருளாதார ஆராய்ச்சி பிரிவின் பொருளியலாளர் எம்.கேசவராஜ் “கொவிட்- 19 மலையக சமுதாயத்தின் மீதான அதன் சமூக பொருளாதார விளைவுகள்”  என்ற நூலில் தந்துள்ளார். அது பின்வருமாறு:

“இலங்கையின் சமூக பொருளாதார அபிவிருத்திகளுக்கு இசைந்து செல்லும் வகையில் கடந்த சில தசாப்த காலமாக தலைக்குரிய ​வறுமை ​விகிதமானது ​தொடர்ச்சியாக வீழச்சியடைந்துள்ளது. தலைக்குரிய வறுமை விகிதமானது தேசிய மட்டத்தில் 2006/07 இல் 15.3 சதவிதத்திலிருந்து 2016 இல் 4.1 சதவீதத்திற்கு கணிசமானளவு குறைவடைந்துள்ளது. இதேவேளை தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தினால் 2019 இல் வெளியிடப்பட்ட குடித்தொகை மற்றும் சுகாதார அளவீடு  2016 இன்படி தலைக்குரிய பல்பரிமாண வறுமை விகிதம் இலங்கையில் 2.4 சதவீதமாக காணப்படுகின்றது. எனினும் பெருந்தோட்டத்துறையை பொருத்தமட்டில் இது 11.3 சதவீதமாகும். இம்மட்டமானது ஏனைய இரண்டு துறைகளைக்காட்டிலும் அதிகமாகும்.

பல்பரிமாண வறுமையானது (Multidimensional) கல்வி, சுகாதாரம் மற்றும் வாழ்கைத்தரம் போன்ற மூன்று பரிமாணங்களின் ​கீழ் ​10 ​குறிகாட்டிகளைப் ​பயன்படுத்தி அளவிடப்படுவதுடன் இம்மூன்று பரிமாணங்களும் சமமான அளவில் நிறையிடப்பட்டுள்ளன. இக்குறிகாட்டிகள் பாடசாலைக்குச் செல்லும் வருடங்கள், பாடசாலை வரவு, போசாக்கு, மின்சாரம், குடிநீர், சுகாதாரம் வீட்டின்தளம், சமையல் எரிபொருள் மற்றும் வீட்டிற்குச் சொந்தமான சொத்துக்கள் போன்றவற்றை உள்ளடக்குகின்றது.

தலைக்குரிய பல்பரிமாண வறுமை விகிதமானது (PHCI) இலங்கையில் குறைந்தமட்டத்தில் காணப்பட்டபோதும் சனத்தொகையில் 11.9 சதவீதமானோர் அதாவது 2.5 மில்லியன் ​நபர்கள் ​பல்பரிமாண ​வறுமைக்குள் ​அதிகம் பாதிக்கப்படக்கூடியவர்களாகக் ​காணப்படுகின்றனர். ​

குடும்ப அங்கத்தவருக்கு ஏற்படும் சுகயீனம் அல்லது இயற்கை அனர்த்தம் போன்றவற்றின் காரணமாக இத்தகைய மக்கள் வறியோராக மாறுவதற்கு அதிகளவான வாய்ப்புகள் காணப்படுகின்றன.

தற்போது உலகளவில் வியாபித்துள்ள கொவிட்- 19 தொற்று நோயையும் இத்தகைய நிலைமைக்குள் நாம் உள்ளடக்க முடியும்.”

மேலும், கேசவராஜா அவர்கள் தலைக்குரிய பல்பரிமான வறுமை வீதம் 2016இல் தேசியமட்டத்தில் 2.4% மாகவும், தோட்டத்துறையில் 11.3% மாகவும் காணப்படுகிறது என சுட்டிக்காட்டியதோடு, பல்பரிமான வறுமைக்கு பாதிக்கப்படக்கூடியோர் சதவீதம் தேசிய மட்டத்தில் 11.9% மாகவும் தோட்டத்துறையில் 22.4% மாகவும் கணிப்பிடப்பட்டுள்ளது என அட்டவணையில் சுட்டிக்காட்டுகிறார்.

இந்த மேற்கோள் தோட்டத்துறையின் தற்போதைய வறுமை கவனிக்கத்தக்க ஒன்று என்றும் அதனது பல்பரிமாண தன்மை ஏனைய துறைகளோடு ஒப்பிடுகையில் மிகவும் கீழ் நிலையில் காணப்படுகிறது என்பது மிகவும் தெளிவாக புலப்படுகிறது.

இந்தப் பின்னணியில் கலாநிதி ரமேஷ் அவர்களது கூற்று கவனிக்கத்தக்கது. 2000 களில் பெருந்தோட்ட கம்பனிகள் டிரஸ்ட் மூலமாக எடுத்துக்காட்டிய அதே நிலைப்பாட்டை ஒத்ததாக அமைந்திருக்கிறது. ​பெருந்தோட்ட ​கம்பனிகளின் ​நிலைப்பாடு தொழிலாளர்களின் கூலி உயர்விற்கான முன்வைப்பிற்கு எதிராக வைக்கப்பட்டு வருகிறது என்பது நோக்கத்தக்கது. ரமேஷ் கூறியுள்ளதைப் போலவே கம்பனிகளின் அறிக்கைகளிலும் வருமான முகாமைத்துவம் ஒழுங்காக செய்யப்படுவதில்லை என்பதுவும் இங்கு மதுபாவனையே அதிகம் என்பதுவும் அடிக்கடி வலியுறுத்தப்பட்டு வருகிறது. தொழிற்சங்கங்கள், அரசியல்கட்சிகள், சிவில் அமைப்புக்கள், புத்திஜீவிகள், உலக வங்கியின் வறுமை பற்றிய மதிப்பீடுகள் அனைத்தும் தோட்டப்புற வறுமையை குறைத்து மதிப்பிடவில்லை. ஆகவே, ரமேஷ் அவர்களது கூற்று கம்பனிகளின் நிலைப்பாட்டிற்கு வலுவூட்டுவதாக அமைந்து விடலாம் என்ற ஐயம் தோன்றுகிறது.

ரமேஷ் அவர்களது கருத்திற்கு ஒரு வகையில் நியாயம் கற்பிக்கப்படலாம். தோட்டத்தொழிலாளர்கள் தோட்ட நிர்வாகத்தினரால் அரைஅடிமை நிலைமையில், கருவிலிருந்து கல்லறை வரைக்கும் தோட்ட நிர்வாகத்தையே எதிர்பார்த்திருந்த நிலையில் தங்கியிருக்கும் கலாச்சாரத்தில் (dependency Culture) மூழ்கி உள்ளவர்களாகக் கருதப்படுகின்றது. அதிலிருந்து மீள வேண்டிய தேவை நிச்சயமாக உண்டு. சுயமாக தங்கள் காலிலே தங்கி, தங்களை வளர்த்து கொள்ள வேண்டிய தேவை உண்டு. இதன்  காரணமாகவே அவர் வறுமையை பெரிதுபடுத்தத் தேவையில்லை எனக் கூறியிருக்கலாம் என எண்ணத் தோன்றுகிறது.

இதற்காக தொடர்ச்சியாக பல விழிப்புணர்வு திட்டங்கள் அவசியமாகும். அரசாங்கத்தின் வறுமை ஒழிப்புத் திட்டங்களில் தோட்டத்துறை அவ்வளவாக சேர்ந்து கொள்ளப்படாமைக்கு வறுமை பற்றிய நிலைப்பாடே காரணமாகும். எடுத்துக்காட்டாக சமூர்த்தி திட்டம், தோட்டத்தொழிலாளர்களின் குடும்ப வருமானம் சமூர்த்தி பயனாளிகளுக்கான வருமானத்தை விட அதிகம் என எடுத்துக்கொள்ளப்பட்டு தகுதியுள்ள பலர் சேர்க்கப்படாமல் இருப்பது ஒரு பிரச்சினையாக இருந்து வருகிறது.

இறுதியாக,

“வறுமை பற்றிய இரண்டு நிலைப்பாடுகள், ஒன்று தற்போது ரமேஷ் உட்பட கம்னிகளினது. மற்றையது ஏனைய ஆய்வு நிறுவனங்கள், உலக வங்கி, மத்திய வங்கி, பொருளியலாளர் உட்பட்ட புத்திஜீவிகளினது.

இந்த இரண்டு நிலைப்பாடுகள் குறித்து ஒரு பரந்த கலந்துரையாடல் அவசியமான ஒன்றாகும்.

எம். வாமதேவன்