Photo, Tamilgurdian

“ஒரு கல்வி முறையின் இயல்பு, அது எந்த சமூகத்திற்காக வடிவமைக்கப்பட்டுள்ளதோ அந்தச் சமூகத்தின் இயல்பை பொறுத்தே அமைகிறது. ஒரு எதேச்சாதிகார அமைப்பில், அந்தச் சந்தர்ப்பத்தில் குறிப்பிட்ட தேசத்தின் தலைவிதியை நிர்ணயித்து வரும் ஆட்களின் அபிப்பிராயங்களை குடித்தொகையின் அனைத்துப் பிரிவினருக்கு மத்தியிலும் வேரூன்றச் செய்யும் நோக்கத்துடன் கல்வி முறை வடிவமைக்கப்படுகின்றது.” கல்வி தொடர்பான விசேட கமிட்டியின் அறிக்கை, இலங்கை (பருவ கால அறிக்கை xxiv, நவம்பர் 1943) பந்தி 3, 11.

சேர் ஜோன் கொத்தலாவல தேசிய பாதுகாப்புப் பல்கலைக்கழக  (KNDU) சட்டமூலத்தினால் உத்தேசிக்கப்பட்டிருக்கும் நிறுவன ரீதியான கட்டமைப்பு, கல்வி மற்றும் ஒரு ஜனநாயக சமூகம் என்பவற்றின் ஆதரவாளர்களைப் பொறுத்தவரையில் கரிசனைக்கும், கவலைக்கும் உரிய ஒரு விடயமாக இருந்து வர வேண்டும். இந்த சட்டமூலம், கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகம் ஒரு பல்கலைக்கழகமாக இருந்து வந்த போதிலும், அதன் கற்கை நெறிகளில் சிவிலியன்களையும் உள்வாங்குவதற்கான இயலுமையை அதற்குப் பெற்றுக் கொடுக்கின்றது. எனவே, இந்தச் சட்டமூலம் ஒட்டுமொத்தமாக –

அ) சிவிலியன்களுக்கான உயர் கல்வியின் அடிப்படை நோக்கத்தை இல்லாமல் செய்கின்றது.

ஆ) உயர் கல்வியின் சந்தைப்படுத்தல் செயற்பாட்டை மேம்படுத்துவதன் மூலமும், அதனை இராணுவமயமாக்குவதற்கு வழிகோலுவதன் மூலமும் உயர் கல்வியின் தோற்றத்தை மாற்றியமைக்கின்றது.

இ) ஏற்கனவே நலிவடைந்து வரும் நாட்டின் உயர் கல்வி முறைமைக்கு மேலும் ஒரு அச்சுறுத்தலை எடுத்து வருகின்றது.

உயர் கல்வியும் மானுடச் செழுமையும்

தனிநபர்கள் என்ற முறையில் நாங்கள் பல்வேறு நோக்கங்களுக்காக உயர் கல்வியைப் பெற விரும்பலாம். சமூக ஏணியில் மேல் நோக்கிச் செல்லல், நிதி ரீதியிலான பாதூப்பு, தனிப்பட்ட மனத் திருப்தி அல்லது வெறுமனே அறிவைப் பெற்றுக் கொள்ளும் நோக்கம் என அது எந்த விதமான நோக்கமாகவும் இருந்து வர முடியும். எவ்வாறிருப்பினும், ஒரு சமுதாயம் என்ற முறையில் உயர் கல்வியின் நோக்கம் மற்றும் வகிபங்கு என்பன குறித்து நாம் அடிக்கடி எம்மிடமே கேள்விகளைக் கேட்டுக் கொள்வது பயனுள்ளதாக இருந்து வரும். இங்கு தெரிவிக்கப்படும் ஒவ்வொரு காரணியும் உயர் கல்வியை முன்னெடுத்துச் செல்வதற்கான காரணங்களாக இருந்து வர முடியும். உயர் கல்வியின் நோக்கம் மானுடச் செழுமையை மேம்படுத்துவதென பரவலாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது என்பதே எனது வாதமாகும். ஒவ்வொரு பின்புலத்திலும் இது சிறிதளவுக்கு வேறுபட்ட விடயங்களை குறிக்க முடியும். ஆனால், உயர் கல்வி தொடர்பான ஒரு நாட்டின் கொள்கை மற்றும் நிறுவன ரீதியான கட்டமைப்பு என்பன குறிப்பிட்ட சில குறிக்கோள்களைக் கொண்டிருப்பது அவசியமாகும். இந்தக் குறிக்கோள்கள் ஒரு நீண்ட காலப் பிரிவின் போது உயர் கல்வி தொடர்பாக எமது நோக்கம் குறித்த கூட்டு கற்றலை பிரதிபலிக்கின்றன. இந்தக் குறிக்கோள்கள் தற்போதைய நடப்பு நிலை தொடர்பாக கேள்வி எழுப்புவதற்கான ஆற்றலையும் உள்ளடக்கிய விதத்தில் விமர்சனபூர்வமான சிந்தனை அபிவிருத்தியையும் உள்ளடக்குதல் வேண்டும். அது புதிய அறிவை தேடிச் செல்வதற்கான வேட்கை, அறிவை பரப்புவதற்கான அர்ப்பணிப்பு, பெற்றுக் கொண்டிருக்கும் அறிவை செயல் வடிவில் மாற்றிக் காட்டும் ஆற்றலை அபிவிருத்திச் செய்தல் என்பவற்றையும் உள்ளடக்குதல் வேண்டும். இந்தக் குறிக்கோள்களை முன்னெடுத்து வரும் ஓர் உயர் கல்வி முறை இல்லாதிருந்தால், ஒரு சமூகம் மறுமலர்ச்சியடைய முடியாது. தார்மீக மற்றும் கல்விப்புலம் சார்ந்த நெறிமுறைகளைப் பின்பற்றி சுயாதீனமாகவும், தன்னாதிக்கத்துடனும் உண்மைக்கான தேடலை உத்தரவாதப்படுத்த வேண்டிய அறிவு நிலையங்களாக பல்கலைக்கழகங்கள் இருந்து வர வேண்டுமென அரசியல் யாப்பு நிபுணர்கள் வாதிடுகின்றனர். இந்த விதத்தில் பல்கலைக்கழகங்கள் போன்ற அறிவு நிலையங்கள் ஜனநாயகத்தைப் பாதுகாத்து, மேம்படுத்தும் பணியையும் மேற்கொள்கின்றன. கல்வி மற்றும் உயர் கல்வி என்பவற்றின் குறிக்கோள்கள் உன்னதமானவையாகவும், சாதித்துக் கொள்ள முடியாதவையாகவும் இருந்து வருவது போல தோன்ற முடியும். ஆனால், எமது முன்னோர்கள் அவர்கள் வாழ்ந்த கால கட்டத்தில் நிலவி வந்த நிலைமைகளுக்கு சவால் விடுத்து, உன்னதங்களை எட்டுவதற்கான இந்த வேட்கையை முன்னெடுத்துச் செல்லாதிருந்தால் (முன்னேற்றத்தின் அடிப்படையில்) இன்று நாங்கள் எந்த இடத்தில் இருக்கிறோமோ அந்த இடத்தில் இருந்திருக்க மாட்டோம். இந்தத் தீபத்தை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல வேண்டிய பொறுப்பு, இப்பொழுது எங்கள் கைகளுக்கு வந்திருக்கின்றது.

நோயுற்றிருக்கும் உயர் கல்வி முறை

கொத்தலாவல தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலம் இலங்கையின் உயர் கல்வியின் பரந்த பின்புலத்தில் புரிந்து கொள்ளப்படுதல் வேண்டும். இலங்கையின் தற்போதைய உயர் கல்வி முறையில் அனைத்தும் நல்லபடியாகவே இருந்து வருகின்றன எனப் பாசாங்கு செய்வது முட்டாள்தனமான ஒரு காரியமாகவே இருக்கும். அரச நிதியளிப்புடன் கூடிய பல்கலைக்கழகங்களில் மூளைசாலிகளின் வெளியேற்றம், கல்வித் தரம் குறைவாக இருந்து வரும் நிலை மற்றும் (ஏனைய காரணிகளுடன்) குறைந்தளவிலான வரவுச் செலவுத்திட்ட ஒதுக்குகள் என்பவற்றின் காரணமாக கல்வித் தரங்களை பராமரித்து வருவது சிரமமானதாக உள்ளது. பகிடிவதை இடம்பெற்று வரும் நிலை ஒட்டுமொத்த உயர் கல்வி அமைப்பையும் பலவீனப்படுத்தும் ஒரு தாக்கத்தை எடுத்து வருகின்றது. பல்கலைக்கழக நிர்வாகத்தில் வெளிப்படைத் தன்மை மற்றும் பொறுப்புக் கூறல் என்பன இல்லாதிருந்து வரும் நிலை, பல சந்தர்ப்பங்களில் எமது பல்கலைக்கழகங்கள் அவற்றின் பணிப்பாணையை நிறைவேற்றிவைக்கத் தவறுவதற்கு வழிகோலி வருகின்றது. வேறு வார்த்தைகளில் சொல்வதாக இருந்தால், உயர் கல்வியின் குறிக்கோள்களை நிறைவேற்றி வைக்கும் விடயத்தில் அரச பல்கலைக்கழக முறைமை தோல்வி கண்டுள்ளது எனப் பலர் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றார்கள். என்னையும் உள்ளடக்கிய பல்கலைக்கழக சமூகம் இந்தக் குறைபாடுகள் தொடர்பாக நியாயமான பங்கினையும், பொறுப்பையும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

அரச நிதிப்படுத்தலுடன் கூடிய உயர் கல்வி முறைமைக்கு வெளியில் உயர் கல்வியை வழங்கும் விடயம் ஒழுங்கற்ற அடிப்படையில் தாராளமயமாக்கப்பட்டிருக்கும் இன்றைய சூழல் ஒரு விசித்திரமான நிலைமைக்கு வழிகோலியுள்ளது. வெளிநாட்டு பல்கலைக்கழகங்களின் வெளிவாரி பட்டப் படிப்புக்களை வழங்கும் பொருட்டு, முதலீட்டுச் சபைச் சட்டத்தின் கீழ் நிறுவனங்கள் தம்மைப் பதிவு செய்து வருகின்றன. இதற்கென ஒரு சில நிறுவனங்கள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழவின் அங்கீகாரத்தைப் பெற்றுக் கொள்கின்றன. இந்த நடைமுறை தவிர, இந்த உயர் கல்வி நிகழ்ச்சித்திட்டங்களின் கல்வித் தரத்தை கண்காணிப்பதற்கான ஒரு உள்நாட்டுப் பொறிமுறை இருந்து வரவில்லை. ஒரு சிலர் ஏனைய நாடுகளில் பிரஜா உரிமையைப் பெற்றுக் கொள்வதற்கான ஒரு வழிமுறையாக இந்தப் பாட நெறிகளை நோக்கி வருகின்றார்கள். வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் அனுமதி பெற்றுக் கொள்வதற்கு முயற்சிப்பதை தவிர, அரச நிதிப்படுத்தலுடன் கூடிய பல்கலைக்கழ வளாகங்களில் அனுமதி கிடைக்காத மாணவர்களுக்கு, அவர்களுக்கு அதற்கான வசதிகள் இருந்து வரும் நிலையில், இதுவே உயர் கல்வியைப் பெற்றுக் கொள்வதற்கு ஒரேயொரு மாற்று வழியாக இருந்து வருகின்றது.

கல்வி என்பது இலாபமீட்டும் ஒரு தொழிலாக இருந்து வருவதாக பெரும்பாலானவர்கள் நோக்கி வரும் ஒரு நிலையிலும், ஒரு சில சந்தர்ப்பங்களில் இலாப நோக்கற்றது என நோக்கப்பட்டு வரும் உலகளாவிய பின்னணியிலும் இந்த மாற்றங்கள் இடம்பெற்று வருகின்றன. இதுவும் சுகாதார பராமரிப்புத் துறை குறித்த அபிப்பிராயத்திற்கு இணையானதாகவே இருந்து வருகின்றது. கல்வி வழங்கும் விடயத்தில் பணம் தொடர்பான தர்க்க நியாயம் இப்போது வேரூன்றியுள்ளது. உலகளாவிய ரீதியில் கல்வியாளர்கள் இந்த நெருக்கடி தொடர்பாக மக்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றனர். கல்விப்புலம் சார்ந்தவர்கள் மற்றும் நிறுவனங்கள் ஆகிய தரப்புக்கள் பணம் சம்பாதிக்கும் வேட்கையினால் தூண்டப்பட்ட நிலையில் கொள்திறன் மற்றும் தரம் என்பன தொடர்பாக போதியளவில் கவனம் செலுத்தாமல் வெளிவாரி பட்டப்பின் படிப்பு, பட்டமளிப்பு பாடநெறிகள் துரிதமாக விரிவடைந்து வந்துள்ளன.

ஒரு பாதுகாப்பு பல்கலைக்கழகம்: முக்கியத்துவம் மற்றும் அத்தியாவசிய தேவை

ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகம் இராணுவ உத்தியோகத்தர்களுக்கு பட்டப் படிப்புக்களை வழங்கும் நோக்கத்துடன் 1980 – 81 காலப் பிரிவின் போது ஸ்தாபிக்கப்பட்டது. 1981ஆம் ஆண்டின் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு கல்விக் கழகச் சட்டத்தின் மூலம் இந்தக் கல்விக் கழகம் ஸ்தாபிக்கப்பட்டதுடன், அதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட ஒரு திருத்தத்தின் மூலம் 1988 இல் இந்நிறுவனம் ஒரு பல்கலைக்கழகமாக பிரகடனம் செய்யப்பட்டது.

ஆயுதப் படைகளைச் சேர்ந்த  உறுப்பினர்களுக்கு பட்டப் படிப்புக்களையும், சம்பந்தப்பட்ட கல்விசார் பாடநெறிகளையும் வழங்குவதற்கென தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்ட அரச நிதிப்படுத்தலுடன் கூடிய ஒரு பல்கலைக்கழகம் முக்கியமானதாகவும், அதேபோல அத்தியாவசியமானதாகவும் இருந்து வருகின்றது. அத்தகைய ஒரு நிறுவனத்திற்கூடாக இலங்கை தேசத்திற்கு தமது அதி உச்ச திறமையுடன் பணியாற்றுவதற்குத் தேவையான கல்வியையும், பயிற்சியையும் பாதுகாப்புப் படையினருக்கு பெற்றுக் கொடுக்க முடியும். எவ்வாறிருப்பினும், உத்தேச கொத்தலாவல தேசிய பாதுகாப்புப் பல்கலைக்கழக சட்டமூலம் இந்த விடயத்தை அதன் முதன்மை கவன மையமாக கொண்டிருக்கவில்லை போல் தெரிகிறது. இந்தச் சட்டமூலம் ‘ஆயதப் படைகளில் பணியாற்றுவதற்கு விரும்பும் ஆட்களுக்கு உயர் கல்வி மற்றும் தொழில்வாண்மை தகைமைகளுக்கான வாய்ப்புக்களைப் பெற்றுக் கொடுப்பதன் தேவை மற்றும் முக்கியத்துவம் தொடர்பாக கவனம்’ செலுத்துவதற்கு எதிர்பார்க்கின்றது. எவ்வாறிருப்பினும், கொத்தலாவல தேசிய பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தின் ஆட்சி மன்ற உறுப்பினர்களில் எவரும் தமது கல்விப்புலம் சார்ந்த அல்லது தொழில்வாண்மை சார்ந்த தகுதிகளின் அடிப்படையில் நியமனம் செய்யப்படுவதில்லை (ஆட்சி மன்றம் தொடர்பான மேலதிக விவரங்களை கீழே பார்க்கவும்). இரண்டாவதாக, கொத்தலாவல தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் நோக்கம் நீர்த்துப் போக செய்யப்பட்டுள்ளது. அது இராணுவத்தினருக்கு உயர் கல்வி மற்றும் சிவிலியன்களுக்கான உயர் கல்வி என்பவற்றுக்கிடையிலான வித்தியாசத்தை இல்லாமல் செய்வதற்கு முயல்கின்றது. எனவே, இந்த யோசனை பாதுகாப்புப் பல்கலைக்கழகம் ஒன்றின் நோக்கத்தை முறியடிப்பதுடன், அதன் மூலம், தமது அதியுயர் திறன்களை பெற்றுக் கொள்ளும் விதத்தில் எமது ஆயுதப் படையினரை அபிவிருத்தி செய்யும் ஆற்றலையும் பலவீனப்படுத்துகின்றது. அதேவேளையில், அது இலங்கையின் உயர் கல்வித் துறையை நேரடியாகவும், மறைமுகமாகவும் இராணுவமயப்படுத்துகின்றது. வேறு வார்த்தைகளில் சொல்வதாக இருந்தால், கொத்தலாவல தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலம் உள்ளக ரீதியில் ஒவ்வாமையைக் கொண்டிருப்பதுடன், அது தானே பிரகடனப்படுத்தியிருக்கும் குறிக்கோள்களை நிறைவேற்றி வைக்கும் விதத்தில் கூட வடிவமைக்கப்பட்டிருக்கவில்லை.

கொத்தலாவல தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகம்

உத்தேச கொத்தலாவல தேசிய பாதுகாப்புப் பல்கலைக்கழகம் அதன் பாடநெறிகளுக்கென ‘அரசாங்க உத்தியோகத்தர்கள் மற்றும் ஏனைய ஆட்கள்’ ஆகியோருக்கு அனுமதி வழங்குவதற்கான அதிகாரத்தைக் கொண்டுள்ளது. அரச பல்கலைக்கழகங்களில் அனுமதி கிடைக்காத, அதே வேளையில், வெளிநாட்டில் கல்வி பெறுவதற்கு வசதி வாய்ப்புக்களற்ற மாணவர்களுக்கு அல்லது வெளிநாட்டு பல்கலைக்கழகமொன்றுடன் இணைந்திருக்கும் உள்ளூர் நிறுவனமொன்றில் பட்டப் படிப்பு பாடநெறிகளில் இணைந்து கொள்வதற்கு வாய்ப்பில்லாத மாணவர்களுக்கு இப்பல்கலைக்கழகம் அந்த வாய்ப்பை வழங்குகின்றது.  இந்தப் பின்புலத்தில், உத்தேச கொத்தலாவல தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலம் ‘பொருத்தமானதாகவே உள்ளது.’ கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்திற்கு நாளாந்தம் வந்து, படித்து விட்டுச் செல்லும் மாணவர்களுக்கான மாணவர் வழிகாட்டியை (Guide for Day Scholars) பொறுத்தவரையில், அது ‘பகிடிவதை இல்லாத’, ‘ஒழுக்கத்துடன் கூடிய’ ஒரு சூழ்நிலையில் கல்வியைப் பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்பை வழங்குகின்றது. எவ்வாறிருப்பினும், உத்தேச கொத்தலாவல தேசிய பாதுகாப்புப் பல்கலைக்கழக சட்டமூலத்தின் நிறுவன ரீதியான கட்டமைப்பு உயர் கல்வியின் முதன்மை கருத்துக்கு எதிரிடையானதாக இருந்து வருகின்றது. எனது இந்தக் கண்ணோட்டத்திற்கான  காரணங்களை நான் இங்கு பட்டியலிடுகின்றேன்:

  1. பாதுகாப்பு அமைச்சருக்கு ஒரு முக்கியமான வகிபாகம்

இச்சட்டவாக்கத்தின் ‘நெறிப்படுத்தல் மற்றும் நிர்வாகத்திற்கு’ பொறுப்பாக இருந்து வருபவர் என்ற முறையில் இந்தச் சட்டமூலம் பாதுகாப்பு அமைச்சருக்கு ஒரு வகிபாகத்தை வழங்குகின்றது. ‘தேவை எனக் கருதும் விவகாரங்கள் தொடர்பாக ஆளுனர் சபைக்கு எழுத்து மூலமான பணிப்புரைகளை வெளியிடுவதற்கான’ அதிகாரத்தை அமைச்சர் கொண்டுள்ளார் (உட்பிரிவு 6). அதற்கு  இணையான விதத்தில், ‘அமைச்சரினால் வெளியிடப்பட்டிருக்கும் அனைத்து பணிப்புரைகளுக்கும் இணங்கியொழுகும்’ இணையான ஒரு கடமை ஆளுனர் சபையின் மீது விதிக்கப்பட்டுள்ளது [6(3)]. பல்கலைக்கழகங்கள் சட்டமும் இதே விதத்திலான ஓர் ஏற்பாட்டை கொண்டுள்ளது (பிரிவு 19 மற்றும் 20). எவ்வாறிருப்பினும், சம்பந்தப்பட்ட அமைச்சர் கல்வி அமைச்சராக இருந்து வருவதுடன், அமைச்சரின் பணிப்புரைகள் நிதி, பல்கலைக்கழக அமைவிடங்கள், போதனா மொழி என்பன தொடர்பான தேசிய கொள்கை சம்பந்தப்பட்ட விடயங்களுக்கு வரையறுக்கப்பட்டுள்ளன. மேலும், அச்சட்டத்தின் ஏற்பாடு ‘தனது கடமைகளை நிறைவேற்றி வைத்தல்… பல்கலைக்கழக கல்வி மற்றும் நிர்வாகம் தொடர்பான தனது கடமைகளை நிறைவேற்றி வைப்பதற்கு இயலுமையை வழங்குதல்’ என்பவற்றுடன் சம்பந்தப்பட்டுள்ளது. அத்துடன், பல்கலைக்கழக சட்டத்தின் கீழ் ‘அத்தகைய ஒவ்வொரு பணிப்புரையும்’ எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுதல் வேண்டும். அமைச்சரின் அதிகாரம் விதித்துரைக்கப்பட்டிருப்பதுடன், நாடாளுமன்ற கண்காணிப்புக்கும் உள்ளாக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு அமைச்சர் என்பவர் தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட்ட ஓர் அரசியல் பிரதிநிதியாக இருந்து வருவதுடன், அவர் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் பிரதிநிதித்துவ அரசியல் தொடர்பான நிபுணத்துவம் மற்றும் அனுபவம் என்வற்றை கொண்டிருப்பார். ஆனால், குறித்தொதுக்கப்பட்டிருக்கும் விடயப் பரப்பு தொடர்பான நிபுணத்துவத்தையும், அனுபவத்தையும் அவர் ஓரளவுக்கு மட்டுமே கொண்டிருக்க முடியும். அத்தகைய அமைச்சர் ஒருவர் ஆட்சியிலிருக்கும் அரசாங்கத்துக்கு சட்டபூர்வமான விதத்தில் விசுவாசங்களையும் கொண்டிருப்பார், தனது அரசியல் கட்சி மற்றும்  தனது தேர்தல் தொகுதி எனபனவும் அந்த விசுவாசங்களுடன்  சம்பந்தப்பட்டிருக்க முடியும். இத்தகைய கோட்பாட்டு ரீதியான விடயத்திலும் கூட, ஓர் அமைச்சரின் செயற்பாடுகளில் அரசியலிலிருந்து சுயாதீனமான ஒரு நிலையை எதிர்பார்ப்பது சிரமமானது என்பது தெளிவானதாகும். அதற்கு மாறான விதத்தில், ஒரு பல்கலைக்கழகத்தின் நிர்வாகம் வெளி மற்றும் அரசியல் செல்வாக்குகளிலிருந்து சுயாதீனமாக இருந்து வருவது அவசியமாகும். அதே போல ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் அப்பல்கலைக்கழகத்தின் நிறுவனங்கள் ஆகிய தரப்புக்களின் கல்வி சுதந்திரத்தையும் உள்ளடக்கிய விதத்தில் கருத்துக்களின் கட்டற்ற பாய்ச்சல் மற்றும் சிந்தனை என்பவற்றுக்கு அனுசரணை வழங்குவதற்கான ஒரு கடப்பாட்டையும் அது கொண்டுள்ளது.

‘எந்தவொரு உயர் கல்வி நிறுவனத்தினதும் குறிக்கோள்களை சாதித்துக் கொள்வதற்கு கல்விப்புலம் சார்ந்த சுதந்திரம் மற்றும் தன்னாதிக்கம் என்பன அத்தியாவசியமான தேவைகளாக இருந்து வருகின்றன’ என இலங்கையின் உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது என்ற விடயத்தை இங்கு நினைவு கூருவது பொருத்தமானதாகும். அத்தகைய சுதந்திரங்கள் ஏதேனும் ஒரு விதத்தில் வரையறுக்கப்பட்டால், அது எமது சிந்தனை, மனச்சாட்சி சுதந்திரம் மற்றும் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் என்பவற்றை மீறுவதற்கு இணையானதாகவே இருந்து வரும் எனவும் அது தெரிவித்துள்ளது (பல்கலைக்கழகங்கள் திருத்தச் சட்டம் தொடர்பாக, 1999ஆம் ஆண்டில் உச்ச நீதிமன்றத்தின் தீர்மானம், உச்ச நீதிமன்றத்தின் குறிப்புக்கள் மே 3, 1999). இதன் காரணமாகவே அரச பல்கலைக்கழகங்கள் நிர்வகிக்கப்பட்டு வரும் 1978 ஆம் ஆண்டின் பல்கலைக்கழங்கள் சட்டத்தில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு (UGC) உச்ச மட்ட அமைப்பாக வைக்கப்பட்டிருக்கின்றது. அச்சட்டத்தின் பிரகாரமும், நடைமுறையின் பிரகாரமும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, கல்வி விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சரின் பணிப்புரைகளுக்கு அமைவாக சுயாதீனமாக செயற்படுவது அவசியமாகும். உதாரணமாக, கல்வி அமைச்சர் ஒரு பல்கலைக்கழகத்தின் செயற்பாடுகள் தொடர்பாக  தனக்கு அறிக்கையிட வேண்டுமென பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிடம் கேட்டுக் கொள்ள முடியும்.

  1. ஆளுனர் சபை சுயாதீனமானதாக இருந்து வரவில்லை

(பாதுகாப்புப் படை ஆளணியினரின் தலைமை அதிகாரி, இராணுவம், கடற்படை மற்றும் விமானப் படை என்பவற்றின் கொமாண்டர்கள் ஆகியோரைக் கொண்ட) இராணுவ ஆளணியினர், உபவேந்தர், ஜனாதிபதியினால் நியமனம் செய்யப்படும் அரசாங்க உத்தியோகத்தர்கள் (பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் மேலதிக செயலாளர்), திரைசேறியின் பிரதிநிதி மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் நியமனம் செய்யப்படும் ஒருவர் ஆகியோரைக் கொண்ட ஓர் ஆளுனர் சபையினால் உத்தேச கொத்தலாவல தேசிய பாதுகாப்புப் பல்கலைக்கழகம் நிர்வகிக்கப்பட்டு வரும். பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் கீழ் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு ஜனாதிபதியால் நியமனம் செய்யப்படுவதுடன், அது அரச பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த சிரேஷ்ட கல்விமான்களை உள்ளடக்குகின்றது. இக்கல்விமான்கள் நிபுணர்கள் என்ற விதத்தில் தமது சொந்தப் பொறுப்பில் பதவி வகிக்கின்றார்கள். மேலும், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழவின் சட்ட ரீதியான பணிப்பாணை அது சுயாதீனமாக செயற்படுவதற்கான ஏற்பாட்டை கொண்டுள்ளது. மேலும், பல்கலைக்கழக சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம், சம்பந்தப்பட்ட அரச பல்கலைக்கழகங்களின் ஆளுனர் மன்ற கட்டமைப்பு கணிசமான அளவுக்கு நிறுவன ரீதியான சுயாதீன கோட்பாடுகளை பராமரித்து வருகின்றது. மறுபுறத்தில், கொத்தலாவல தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் அதிகார கட்டமைப்பு தமது தொழில் விவரணத்தின் பிரகாரம் ஓர் ஆயதப் படையின் விழுமியங்களுக்கு இணங்கியொழுக வேண்டிய கடப்பாட்டினை அல்லது சம்பந்தப்பட்ட அரசாங்க சேவைக்கு இணங்கியொழுக வேண்டிய கடப்பாட்டினை கொண்டிருக்கும் ஆளணியினரை உள்ளடக்கியதாக இருந்து வருகின்றது. இந்த விழுமியங்கள் எவையும் சிவிலியன் குடித்தொகையொன்றின் உயர் கல்வியை அபிவிருத்தி செய்வதற்கு அத்தியாவசியமாகவிருக்கும் விழுமியங்களை மேம்படுத்தப் போவதில்லை.

  1. மத்தியமயப்படுத்தப்பட்ட நிர்வாக கட்டமைப்பு

அது மட்டுமன்றி, ஜனநாயக நிர்வாக கட்டமைப்பொன்றுக்கான ஏற்பாடுகளை கொண்டிருக்கும் அரச பல்கலைக்கழக அமைப்பை போலன்றி, கொத்தலாவல தேசிய பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தின் கட்டமைப்பு மத்தியமயப்படுத்தப்பட்டுள்ளது. இப்பல்கலைக்கழகத்தின் ஒரு பீடத்தின் பீடாதிபதி ஆளுனர் சபையின் ‘ஒப்புதலுடன்’ (உட்பிரிவு 13) உப வேந்தரினால் நியமனம் செய்யப்படுவார். அதற்கு மாறான விதத்தில், அரச பல்கலைக்கழகங்களில் பீடங்களின் சபைகள் தமது பீடாதிபதிகளை தெரிவு செய்வதுடன் (பிரிவு 49) அதன் காரணமாக அவர்கள் தமது பீட சபைகளுக்கு பொறுப்புக் கூற வேண்டியவர்களாகவும், தமது பீடங்களை மூதவை (Senate) மற்றும் பேரவை (Council) என்பவற்றில் பிரதிநிதித்துவம் செய்ய வேண்டியவர்களாகவும் இருந்து வருகின்றார்கள். பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் கீழ் இருந்து வரும் பல்கலைக்கழகங்களை போலவே, கொத்தலாவல தேசிய பாதுகாப்புப் பல்கலைக்கழகமும் இந்த சட்டமூலத்தின் பிரகாரம் ஆலோசனை சபை எனவும், ஒரு கல்விசார் அமைப்பு எனவும் முறையாக விவரிக்கப்பட்டிருக்கும் ஒரு பேரவையையும், மூதவையையும் ஸ்தாபிப்பதற்கு உத்தேசிக்கின்றது. இந்த மூதவையின் பணிப்பாணை சட்டமூலத்தில் விவரிக்கப்படவில்லை. பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் கீழ் பரீட்சகரின் நியமனத்தையும் உள்ளடக்கிய விதத்தில் கல்விப் புலம் சார்ந்த நடவடிக்கைகளை பரிந்துரை செய்வதற்கான அதிகாரத்தை மூதவை கொண்டுள்ளது.

பொதுவாக, பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் கீழ் மூதவை பல்கலைக்கழகங்களில் ‘அறிவுறுத்தல், கல்வி, ஆராய்ச்சி, பரீட்சைகள்’ என்பன தொடர்பான கட்டுப்பாட்டையும் பொதுவான நெறிப்படுத்தல் அதிகாரத்தையும்| கொண்டிருக்கும் (பிரிவு 46 (5)). இந்த மூதவை ஏனையவர்களுடன் பீட சபைகளின் மூத்த கல்விமான்கள் மற்றும் பிரதிநிதிகள் ஆகியோரை உள்ளடக்கியிருப்பதுடன், அதன் காரணமாக பல்கலைக்கழக நிர்வாகத்தின் ஜனநாயக மற்றும் சுயாதீன இயல்பின் குறியீடாக இருந்து வருகின்றது. அதற்கு மாறான விதத்தில்,  கொத்தலாவல தேசிய பாதுகாப்புப் பல்கலைக்கழக சட்டமூலம் இறுதி முடிவுகளை எடுக்கும் ஒட்டுமொத்த அதிகாரத்தையும் ஆளுனர் சபைக்கு வழங்குகின்றது. இந்தச் சபை கல்விப் புலம் சார்ந்த சமூகத்தை பிரதிநிதித்துவம் செய்யவில்லை. அதற்கு மாறாக அது பாதுகாப்பு கட்டமைப்பு மற்றும் அச்சந்தர்ப்பத்தில் ஆட்சியிலிருக்கும் அரசாங்கத்தின் நலன்கள் என்பவற்றை பிரதிநிதித்துவம் செய்கின்றது.

இராணுவ கல்வியில் சிவிலியன்கள்

உத்தேச சட்டமூலம் ஏற்கனவே இயங்கி வரும் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தில் சிவிலியன் மாணவர்களை உள்வாங்குவதற்கும், பாதுகாப்பு பல்கலைக்கழகமொன்றின் விழுமியங்களுக்குள் வைத்து, இராணுவ மாணவர்களுடன் சேர்த்து அவர்களுக்கும் பட்டப் படிப்புக்களை வழங்குவதற்கும் தேவையான சட்டபூர்வமான வழிமுறைகளை பெற்றுக் கொடுக்க முயல்கின்றது. திருத்தப்பட்டவாறான 1981ஆம் ஆண்டின் சட்டம் கொத்தலாவல தேசிய பாதுகாப்புப் பல்கலைக்கழகத்திற்கு இராணுவம் சாராதவர்களை படிப்புக்கென சேர்த்துக்  கொள்வதற்கான அதிகாரத்தை வழங்கியிருப்பது போல் தெரியவில்லை. எப்படியிருந்தாலும், 2000ஆவது ஆண்டின் பின்னர் ஒரு கட்டத்தில் கொத்தலாவல தேசிய பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தில் கட்டணம் செலுத்தும் சிவிலியன் மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளார்கள் என்ற விடயம் தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக 2018 ஆம் ஆண்டில் மேலும் ஒரு அடி முன்னெடுத்து வைக்கப்பட்டதுடன், அதன் மூலம் SAITM கல்லூரியின் மருத்துவ மாணவர்கள் கொத்தலாவல தேசிய பாதுகாப்புப் பல்கலைக்கழகத்திற்குள் உள்ளீர்க்கப்பட்டார்கள். இப்பல்கலைக்கழகம் சிவிலியன் மாணவர்களை நாளாந்தம் வந்து செல்லும் மாணவர்கள் (Day Scholars ) எனக் குறிப்பிடுவதுடன், அம்மாணவர்கள் இணைந்த சுகாதார விஞ்ஞானங்கள் பீடம், பொறியியல் பீடம், சட்டப் பீடம் முதலியவற்றில் கட்டணம் செலுத்தும் அடிப்படையில் பட்டப் படிப்புக்களை படிப்பதற்கென இணைந்து கொள்ள முடியும். சிவிலியன்களை உள்வாங்கி, அவர்களுக்கு பட்டங்களை வழங்குவதற்கான சட்ட அடிப்படை தெளிவாக இல்லாதிருக்கும் நிலையில், இந்த நடைமுறை பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது. அவற்றை இந்த மீளாய்வில் பரீசீலனைக்கு நான் எடுத்துக் கொள்ளவில்லை.

உத்தேச கொத்தலாவல தேசிய பாதுகாப்புப் பல்கலைக்கழக சட்டமூலம் ‘அரசாங்க உத்தியோகத்தர்கள் மற்றும் ஏனைய ஆட்கள்’ (உட்பிரிவு 5 (a)) என சட்டமூலத்தில் விவரிக்கப்படும் சிவிலியன்களுக்கு கட்டணம் செலுத்தும் அடிப்படையில் அனுமதியை வழங்குவதற்கான சட்ட ரீதியான அதிகாரத்தை இப்பல்கலைக்கழகத்திற்கு  வழங்குகின்றது. அரச பல்கலைக்கழகங்களில் அனுமதி கிடைக்காதவர்கள் மற்றும் வெளிநாடுகளில் உயர் கல்வியைப் பெற்றுக் கொள்வதற்கு வசதி வாய்ப்புக்கள் அற்றவர்கள் ஆகியோருக்கு உயர் கல்வியை பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்பினை அது வழங்குகின்றது என்ற அடிப்படையில் பலர் இந்த முன்முயற்சியை வரவேற்க முடியும். இலங்கையில் உள்நாட்டில் உயர் கல்வியைப் பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்புக்கள் குறைவாக இருந்துவருவது தொடர்பான கரிசனை நியாயமானது தான். ஆனால், கட்டணங்களை அறவிடும் அடிப்படையில் சிவிலியன் மாணவர்களைச் சேர்த்துக் கொள்வதற்கு கொத்தலாவல தேசிய பாதுகாப்புப் பல்கலைக்கழகத்திற்கு அனுமதி வழங்கும் விடயம் அந்தப் பிரச்சினைக்கான ஓர் தீர்வாக இருந்து வர மாட்டாது என்பதே என்னுடைய கருத்தாகும்.

கட்டணம் அறவிடும் அடிப்படையையும் உள்ளடக்கிய விதத்தில் உயர் கல்விக்கான வாய்ப்பினை விரிவாக்குவது இலங்கையில் நீண்ட காலமாக உணரப்பட்டு வந்த ஒரு தேவையாக இருந்து வருகின்றது. அந்த நோக்கத்தை சாதித்துக் கொள்ளும் பொருட்டு, இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தை மேலும் அபிவிருத்தி செய்து கொள்வது அல்லது ஒரு புதிய பல்கலைக்கழகத்தை ஸ்தாபிப்பது சாத்தியமானதாகும். கட்டணங்களை செலுத்தும் சிவிலியன் மாணவர்களை உள்வாங்கிக் கொள்வதற்கான பணிப்பாணையை பாதுகாப்பு பல்கலைக்கழகமொன்றுக்குப் பெற்றுக் கொடுப்பது இந்தத் தேவையை நிறைவேற்றி வைப்பது போல் தென்பட முடியும். எவ்வாறிருப்பினும், உயர் கல்வியின் குறிக்கோள்களை உதாசீனம் செய்யும் விதத்திலேயே அது மேற்கொள்ளும். மேலும், அதே நேரத்தில் பாதுகாப்புப் பல்கலைக்கழகமொன்றின் அடிப்படை நோக்கத்தையும் அது நீர்த்துப் போகச்  செய்ய முடியும். எனவே, உத்தேச கொத்தலாவல தேசிய பாதுகாப்புப் பல்கலைக்கழகம் உயர் கல்விக்கான வாய்ப்புக்கள் இல்லாத நிலை தொடர்பான பிரச்சினைக்குத் ஒரு தீர்வாக இருந்து வர முடியாது.

இராணுவமயமாக்கல் மற்றும் சந்தைமயமாக்கல்

முன்னர் குறிப்பிட்டதைப் போல, கொத்தலாவல தேசிய பாதுகாப்புப் பல்கலைக்கழகத்திற்கான முதன்மை எதிர்ப்பு, பெருமளவுக்கு ஆயுதப் படைகளைச் சேர்ந்த ஆளணியினருக்கு பயிற்சியை வழங்குவதற்கு பொருத்தமானதாக இருந்து வரும் ஒரு கல்வி நிறுவனத்திற்கூடாக சிவிலியன்களுக்கு உயர் கல்வியை வழங்குவதற்கு அது முயற்சிக்கின்றது என்ற அடிப்படையிலேயே முன்வைக்கப்பட்டிருக்கின்றது. மேலும், இந்தச் சட்டமூலம் இப் பாதுகாப்பு பல்கலைக்கழகத்திற்கு வளாகங்கள், கல்லூரிகள் மற்றும் ஏனைய விசேட நிறுவனங்கள், பாடசாலைகள் (உட்பிரிவு 5 (o)) என்பவற்றை ஸ்தாபிப்பதற்கான அதிகாரத்தையும் வழங்குகின்றது. எனவே, இந்தப் பல்கலைக்கழகம் தன்னை விஸ்தரித்து, மேலும் பல்கிப் பெருக முடியும். எனவே, கொத்தலாவல தேசிய பாதுகாப்புப் பல்கலைக்கழகச் சட்டவாக்கம் இலங்கை சமூகம் மேலும் அதிகளவில் இராணுவமயமாக்கப்படுதற்கும், குறிப்பாக, அதன் உயர் கல்வித் துறை இராணுவமயமாக்கப்படுவதற்கும் வழிகோல முடியும்.

நான் பிறிதொரு இடத்தில் குறிப்பிட்டிருந்தது போல, இராணுவமயமாக்கல் என்பது, அரசியல் மற்றும் சமூக விழுமியங்கள், நடத்தை என்பவற்றை இராணுவத்தையொத்த முறைமைகள் மற்றும் விழுமியங்கள் என்பன நிர்ணயிக்கும் ஒரு செயன்முறையாக இருந்து வருகின்றது (P Wallensteen Global Militarization) (Routledge, 2019)). உயர் அதிகாரிகளுக்கு மரியாதை செய்தல், கட்டளைகளுக்கு இணங்கியொழுகுதல் மற்றும் கண்டிப்பான ஒழுக்கக் கட்டுப்பாடு போன்ற இராணுவ விழுமியங்கள் மற்றும் இராணுவ முறைமைகள் திட்டவட்டமான, தேசிய பாதுகாப்புத் தேவைகளை அல்லது அவசர நிலைமைகளை கவனத்தில் எடுப்பதற்குத் தேவையானவையாகும். அத்துடன் பாரிய இருப்பியல்வாத அச்சுறுத்தல்களை எதிர்கொண்டு வரும் ஒரு சமுதாயத்தின் பாதுகாப்பை உத்தரவாதப்படுத்துவதற்கும் அவை தேவைப்படுகின்றது. ஏற்கனவே ஸ்தாபிதமாகியிருக்கும் மதிப்பீடுகள் தொடர்பாக கேள்வி எழுப்புவது, அத்தகைய நிலைமைகளின் போது பொதுவாக ஏற்றுக் கொள்ளத் தக்கவையாக இருந்து வர மாட்டாது. ஆனால், அந்தப் பின்புலங்களுக்கு வெளியில் அத்தகைய கேள்விகளை எழுப்பக் கூடிய நிலை நிலவி வருகிறது. தற்போதைய பிரச்சினைகளுக்கு ஆக்கபூர்வமான தீர்வுகளை கொண்டிருக்கும், பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கும் நடைமுறைக்கு வெளியில் குளறுபடியான சிந்தனையாளர்கள், நடப்பு நிலை மீது விமர்சனங்களை முன்வைக்கக் கூடிய ஆட்கள், பலம் அல்லது பலவந்தம் என்பவற்றின்  அடிப்படையில் அல்லாமல் தமது உடன்பாட்டை அடிப்படையாகக் கொண்டு பல்வேறு குழுக்களை ஒன்றாக எடுத்துவரக் கூடிய தலைவர்கள் போன்றவர்கள் மானிட அபிவிருத்தி மற்றும் முன்னேற்றம் என்பவற்றுக்கு அவசியமாகும். இளைஞர்கள் இந்த வழியில் அபிவிருத்தியடைய வேண்டுமென நாங்கள் விரும்பினால், எமது கல்வி முறைமையில் பெருமளவுக்கு வித்தியாசமான மதிப்பீடுகளின் ஒரு தொகுப்பை போஷித்து வளர்ப்பது அவசியமாகும். இப்பொழுது சில காலமாக இலங்கை அதன் பொலிஸ் துறையில் இராணுவமயமாக்கலின்  தாக்கத்தை அனுபவித்து வந்துள்ளது. அரசாங்க நிர்வாகத்தின் சிரேஷ்ட பதவிகளுக்கு இராணுவ ஆளணியினரின் நியமனம், ஆட்சி இராணுவமயமாக்கப்பட முடியும் என்பது தொடர்பான கரிசனைகளை தோற்றுவித்துள்ளது. கொத்தலாவல தேசிய பாதுகாப்புப் பல்கலைக்கழக சட்டமூலம் அத்திசையை நோக்கிய மற்றொரு படியாக நோக்கப்படுகின்றது. இம்முறை அது உயர் கல்வியை இலக்காகக் கொண்டுள்ளது.

கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்திற்கு நாளாந்தம் வந்து செல்லும் மாணவர்கள் தொடர்பாக தற்பொழுது விதிக்கப்பட்டிருக்கும் விதிமுறைகள் இந்த விடயத்தை எடுத்துக் காட்டுகின்றன. நாளாந்தம் வந்து செல்லும் மாணவர்களுக்கான மாணவர் வழிகாட்டலிலிருந்து (2020) இது தொடர்பான சில உதாரணங்களை எடுத்துக் காட்ட முடியும். விதிமுறை 24 இப்படி குறிப்பிடுகின்றது: “ஏதேனும் விதத்தில் விரிவுரைகளுக்கு இடையூறு விளைவிக்கும் மாணவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும்.” விதிமுறை 28: “திருமணம் செய்திருக்கும்; பெண்கள் மற்றும் ஆண்கள் ஆகியோர் பட்டப் படிப்பு பாடநெறிகளில் சேர்த்துக் கொள்ளப்பட மாட்டார்கள்.” விதிமுறை 29 இப்படி குறிப்பிடுகின்றது: “பாடநெறி கற்கையின் போது ஒருவர் கர்ப்பமடைந்தால், தினசரி வந்து செல்லும் பெண்; மாணவியை வெளியேற்றுவதற்கு பல்கலைக்கழகம் நிர்ப்பந்திக்கப்படும்.” ‘நித்திரை செய்தல், சம்பாஷைணையில் ஈடுபடுதல், பொருத்தமற்ற விடயங்களை வாசித்தல் அல்லது வேறேதும் ஒரு வடிவத்திலான கவனக் குறைவை ஏற்படுத்தல் என்பவற்றின் மூலம் எடுத்துக் காட்டப்படுவதைப் போல நாளாந்தம் வந்து செல்லும் மாணவர்கள் விரிவுரைகள் தொடர்பாக உரிய விதத்தில் கவனம் செலுத்தாதிருத்தல் அல்லது குறைந்த அளவில் கவனம் செலுத்துதல் என்பன சகித்துக் கொள்ளப்பட மாட்டாது. அத்தகைய நடத்தைகளை திருத்துவதற்கான தண்டனை வழிமுறைகள் மேற்கொள்ளப்படும். அத்தகைய விதிமுறைகள் ஆயுதப் படைகளின் உறுப்பினர்களுக்கு பொருந்தக் கூடியவை என்ற விடயத்தை ​ஏற்றுக் கொள்ள முடியும். ஆனால், இந்த மாதிரியான விதிகள் கல்விப் புல சுதந்திரம், விமர்சன ரீதியான சிந்தனை மற்றும் சுய நெறிப்படுத்தப்பட்ட கற்றல் என்பவற்றின் விழுமியங்களுடன் ஒவ்வாதவையாக  இருந்து வருகின்றன. பல்கலைக்கழகங்களும், கல்வி நிறுவனங்களும் சமுதாயத்துக்கான தமது பணிப்பாணையையும், பொறுப்பையும் நிறைவேற்றி வைக்க வேண்டுமானால் அவற்றுக்கு கல்விப் புலத்தின் சுதந்திரம் இருந்து வருதல் வேண்டும். ஆனால், இராணுவ இயல்பிலான கட்டுப்பாட்டு ஒழுங்கு இந்தச் சுதந்திரத்துக்கு குந்தகம் விளைவிக்கக் கூடியதாக இருந்து வருகின்றது. உத்தேச கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்திற்கூடாக இத்தகைய இராணுவ விழுமியங்கள் சிவிலியன் மாணவர்களுக்கு போதிக்கப்பட்டு, அதற்கூடாக அவை சமுதாயத்திற்குள் எடுத்துச் செல்லப்படும்.

கொத்தலாவல பல்கலைக்கழக மாதிரி ஒரு இராணுவமயமாக்கலுக்கான மாதிரியாக இருந்து வருவது மட்டுமன்றி, இராணுவமயமாக்கலுடன் உயர் கல்வியை சந்தைமயமாக்கலுடன் இணைக்கும் ஒரு மாதிரியாகவும் இருந்து வருகின்றது. உயர் கல்வியை கேள்வி மற்றும் வழங்கல் தர்க்கத்திற்கு உள்ளாக்குவது, உயர் கல்வி பாடநெறிகளை வடிவமைப்பதிலும், அவற்றை வழங்குவதிலும் கல்விப் புலம் சார்ந்த தர நியமங்கள் சீர்குலைவதற்கு வழிகோலுகின்றது என்பதனை உலகளாவிய அனுபவங்கள் எடுத்துக் காட்டுகின்றன. கொத்தலாவல தேசிய பாதுகாப்புப் பல்கலைக்கழகம் தொழில்நுட்ப, தொழிற்பயிற்சி அல்லது தொழில்வாண்மை நிறுவனங்களையும் உள்ளடக்கிய விதத்தில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கல்வி நிறுவனங்களுடன் இணைந்து கொள்வதற்கான ஏற்பாட்டையும், கல்விசார் மற்றும் தொழில்சார் கல்வியையும் உள்ளடக்கிய விதத்தில் எவையேனும் பாடநெறிகள், பயிற்சி மற்றும் அறிவுறுத்தல்கள் என்பவற்றை வழங்குவதற்கு கட்டணங்களை அறவிடுவதற்கான ஏற்பாட்டையும் இந்தச் சட்டமூலம் கொண்டுள்ளது (உட்பிரிவுகள் 5 (h) மற்றும் (i)). இது தொடர்பாக மேற்கொள்ளப்படும் அனைத்து தீரமானங்களும் பாதுகாப்புக்குப் பொறுப்பான அமைச்சரின் கண்காணிப்புக்கும், ஆளுனர் சபையின் முகாமைத்துவத்திற்கும் அமைவானவையாக இருந்து வரும். மேலும், உத்தேசிக்கப்பட்டிருக்கும் விதத்தில், கொத்தலாவல தேசிய பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தின்  இருப்பு, இலங்கையில் தேசிய பல்கலைக்கழகங்களின் நோக்கம் மற்றும் இருப்பு என்பவற்றை மறைமுகமான விதத்தில் பலவீனப்படுத்த முடியும். குறைந்த நிதியளிப்புக்களுடன் கூடிய மற்றும் குறைந்த சம்பளங்களை கொண்ட அரச பல்கலைக்கழகங்கள், கட்டணம் செலுத்தாத அவற்றின் பட்டதாரி மாணவர்களுக்குத் தேவைகளை வழங்கும் விடயத்தில் ஒரு நெருக்கடியை எதிர்கொள்ள நேரிடலாம். மேலும், உயர் கட்டணங்களில் பட்டப் பின்படிப்பு பாடநெறிகளை வழங்க வேண்டிய நிர்ப்பந்தமும் அவற்றுக்கு எற்பட முடியும். எனவே, உயர் கல்வி குறிக்கோள்களையும் மீறி நிதிசார் விடயங்களுக்கு (அவற்றை சமநிலையில் வைத்திருப்பதற்குப் பதிலாக) முன்னுரிமை அளிக்கும் நிலை ஏற்பட முடியும்.

பல்கலைக்கழக சட்டத்திற்கான உத்தேச திருத்தம்

மிக அண்மையில் கல்வி அமைச்சர் பல்கலைக்கழக சட்டத்திற்கான உத்தேச திருத்தமொன்றை வர்த்தமானியில் வெளியிட்டிருந்தார். அத்திருத்தம், ஏனையவற்றுடன், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுடன் ஆலோசனை கலந்து, திட்டவட்டமான ஒரு நோக்கத்திற்காக பல்கலைக்கழகமொன்றை ஸ்தாபிப்பதற்கு’ (உட்பிரிவு 2) அமைச்சருக்கு அதிகாரத்தை வழங்குகிறது. ‘திட்டவட்டமான ஒரு நோக்கத்திற்கான பல்கலைக்கழகம்’ என்ற பதத்திற்கு இந்த முன்மொழிவு வரைவிலக்கணம் வழங்கியிருக்கவில்லை. இந்த உத்தேச திருத்தத்திற்கான காரணத்தை பொதுமக்கள் அல்லது பல்கலைக்கழக சமூகமும் கூட  சரியாக அறிந்து கொள்வதற்கு உதவக் கூடிய விதத்தில் பொது வெளியில் தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை. ‘ஒரு திட்டவட்டமான நோக்கத்திற்கு பல்கலைக்கழகம் ஒன்றை ஸ்தாபித்தல்’ என்பதன் பொருள் என்ன? தற்பொழுது இருக்கும் விதத்தில் பல்கலைக்கழகங்கள் சட்டம் ஒரு புதிய பல்கலைக்கழகத்தை அங்கீகரிப்பதற்கு  போதுமானதாக இருந்து வராதது ஏன்? பல்கலைக்கழக ஆசிரியர் சமூகத்தையும் உள்ளடக்கிய விதத்தில் பொதுமக்கள் இக்கேள்விகளுக்கான பதில்களை தெரிந்து கொள்வதற்கான உரிமையைக் கொண்டுள்ளார்கள். மேலும், அது தொடர்பாக தமது கருத்துக்களை தெரிவிக்கக் கூடிய உரிமையையும் அவர்கள் கொண்டுள்ளார்கள். அத்துடன், பல்கலைக்கழகங்கள் சட்டத்தை திருத்துவதற்கான இந்த நோக்கம் முன்வைக்கப்பட்டிருக்கும் கால கட்டம், கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தை  பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் கண்காணிப்பின் கீழ் எடுத்து வருவதற்கான அரசாங்கத்தின் அறிவிக்கப்பட்ட நோக்கங்களுக்கும், இந்தக் கேள்விகளுக்கும் ஒரு தொடர்பு இருக்கின்றதா என்ற பிரச்சினையையும் ஏற்படுத்துகின்றது.

ஒரு தேசத்தின் தலைவிதி

தூர நோக்குடன் செயற்பட்ட சி.டப்ளியு.டப்ளியு. கன்னங்கர போன்றவர்கள் இலங்கைக்கு சுயாட்சியை எதிர்பார்த்து, ஒரு தேசத்தின்  தலைவிதி கல்வி தொடர்பான வலுவான சுதந்திரக் கொள்கையொன்று இருந்து வரும் விடயத்திலேயே பெருமளவுக்கு தங்கியிருக்கின்றது என்பதனை அங்கீகரித்திருந்தார்கள். இந்தக் கொள்கை தற்போதைய அரசியல் காற்றுகளிலிருந்து சுயாதீனமானவர்களாகவும், ஒன்றுக்கொன்று முரண்பட்ட நலன்களுக்கு எதிரில் பக்கச்சார்பற்றவர்களாகவும் இருந்து வரும் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் ஆகிய தரப்புக்களினால் கட்டுப்படுத்தப்பட்டு, நிர்வகிக்கப்படுதல் வேண்டும் என்றும் அவர்கள் கருதினார்கள். அந்த இலட்சியம் எமது நாட்டையும் உள்ளிட்ட பல சமூகங்களில் அச்சுறுத்தல்களை எதிர்கொண்டு வந்துள்ளது. கொத்தலாவல தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலம் அந்த அச்சுறுத்தலின் மிகப் பிந்திய அவதாரமாக இருந்து வருவதுடன், உண்மையிலேயே அந்த அச்சுறுத்தலின் ஒரு புதிய வடிவத்தை அது முன்வைக்கின்றது. பாதுகாப்பு ஸ்தாபனம் மற்றும் பொது நிர்வாகம் என்பற்றினால் ஆளப்படும், பாதுகாப்பு அமைச்சின் பணிப்புரைகளின் கீழ் நிர்வகிக்கப்படும், சிவிலியன்களை சேர்த்துக் கொள்வதற்கான பணிப்பாணையைக் கொண்டிருக்கும் ஒரு பல்கலைக்கழகம் உருவாகப் போகின்றது என்பதே அந்த அச்சுறுத்தலின் புதிய வடிவமாகும்.

தினேஷா சமரரத்ன

With Militarization and Marketization KNDU Bill Sounds Death Knell for Higher Education என்ற தலைப்பில் கிறவுண்ட்விவ்ஸ் தளத்தில் வெளியான கட்டுரையின் தமிழாக்கம்.