Photo: The New York Times

இலங்கையினுடைய சுற்றாடல் பற்றி கவலையளிக்கின்ற கதைகளினால் இலங்கை ஊடகங்கள் ஒவ்வொரு நாளும் நிரம்பியுள்ளன. மனித-யானை முரண்பாட்டிலிருந்து காடழிப்பு வரை, சட்டவிரோத மண் அகழ்விலிருந்து சதுப்புநில அழிப்பு வரை, கரையோர அரிப்பிலிருந்து வனவிலங்குகள் வேட்டையாடப்படுதல் வரை, இலங்கை சுற்றாடல் பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருகின்றது என்பது தெளிவாகின்றது. ஒருபுறம் பொருளாதார அபிவிருத்திக்கான தேவைகளுக்கும் மறுபுறம் இயற்கை சுற்றாடலை பாதுகாப்பதற்குமான தேவைக்கும் இடையில் உள்ள நெருக்கடி நிலை காரணமாகத் தோற்றம் பெறுகின்ற இதையொத்த சவால்களுக்குப் பல அபிவிருத்தியடைந்து வருகின்ற நாடுகள் முகங்கொடுக்கின்றன. மோசமான ஆட்சியும் நலிவடைந்த நிறுவனங்களும் அபிவிருத்தியடைந்து வருகின்ற சமுதாயங்களிலுள்ள இந்த நெருக்கடி நிலையினை மேலும் மோசமடையச் செய்வதில் பிரதான வகிபாகம் கொண்டுள்ளன. இலங்கைச் சுற்றாடல் நிபுணர்களும் செயற்பாட்டாளர்களும் இப் பிரச்சினை தொடர்பில் கவனத்தினை ஈர்ப்பதற்கும், இதனை வெற்றி கொள்வதற்குத் தேவையான கொள்கை மற்றும் நிறுவனச் சீர்திருத்தங்களை முன்மொழிவதற்கும் தங்களால் இயன்ற அளவிற்கு முயற்சிக்கின்றனர்.

எவ்வாறிருப்பினும், சுற்றாடல் மீறல்களின் உடனடியான மற்றும் தற்போதைய சூழ்நிலைகள் தொடர்பான கலந்துரையாடல்கள் அவை தீர்க்கப்பட வேண்டிய, தப்பிக்க முடியாத பின்னணியில் இடம் பெறாமை இலங்கை விவாதங்களில் அவதானிக்கக் கூடிய ஒரு இடைவெளியாகும். இலங்கை பரிஸ் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளது. இருப்பினும், எம் நாட்டிற்கு இது குறித்து நிற்பதென்ன, இவ்வுயிர்களின் இருப்பு தொடர்பான சவாலுக்கான பூகோள பதில்வினையில் இலங்கையர்கள் – அரசாங்கமும் குடிமக்களும் – தங்களுடைய பாகத்தினைப் புரிவதற்கு செய்ய வேண்டியது என்ன, உள்ளடங்கலாக காலநிலை மாற்றம் தொடர்பிலான மிகக்குறைந்த அளவிலான பொது விவாதங்களே இடம்பெற்றுள்ளது.

காலநிலை மாற்றம் தொடர்பிலான உள்நாட்டு பதில்வினையானது எந்தவொரு அரசும் செய்யக்கூடிய அதியுச்ச மட்ட கடமைப் பொறுப்பு காலநிலை மாற்றம் தொடர்பான விடயங்கள் பற்றிய அரசியலமைப்பு ஒப்புகையுடன் ஆரம்பிக்கப்பட வேண்டிய அளவுக்கு இச் சவாலின் அளவு உள்ளது என நாம் நம்புகின்றோம். சட்ட மற்றும் ஒழுங்குவிதி பதில்வினைகளுக்கு புதிய சட்டங்களும் ஒழுங்கு விதிகளும் தேவைப்படுவதோடு உப-சட்ட விதிகளிலும் நடைமுறைகளிலும் – நிறுவன கலாச்சாரத்திலும் ஒழுக்க நெறியிலும் பரந்துபட்ட மாற்றங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும் – ஆனால், காலநிலை மாற்றத்தினைக் கையாளுவதற்கான உண்மையானதும் கருத்தார்த்தமுமான கடமைப் பொறுப்பு ஆரம்பிக்கின்ற இடமாக அரசியலமைப்பு இருக்க வேண்டும்.

காலநிலை மாற்ற சவால்: பின்னணி

பூகோள ரீதியில், காலநிலை மாற்றமானது அரசுகளுக்கும் சமுதாயங்களுக்கும் உயிர்களின் இருப்பு தொடர்பிலானதும், அண்மைக்காலத்தில் நிகழக்கூடியதுமான அச்சுறுத்தலினை எழுப்புகின்றது. பூமியின் காலநிலை அமைப்பு முறை சந்தேகமற்ற முறையில் வெப்பமடைகின்றது. பூகோள காலநிலையில் விரைவானதும் தொடர்ச்சியானதுமான மாற்றங்களை மனித செயற்பாடுகளே ஏற்படுத்துகின்றன என விஞ்ஞான ரீதியான கருத்தொருமைப்பாட்டினை 2018 ஆம் ஆண்டில், 1990ஆம் ஆண்டிலிருந்து ஆறாவது தடவையாக, காலநிலை மாற்றம் பற்றிய சர்வதேச குழாம் (IPCC) முன் வைத்தது. பூகோள அபிவிருத்தியினாலும் பொருளாதார அபிவிருத்தியினாலும் பாரியளவில் உந்தப்படுகின்ற படிம எரிபொருள் பாவனையினால் ஏற்படுகின்ற பச்சைவீட்டு வாயுக்களின் செறிவு அதிகரிப்பினை இம் மாற்றங்களுக்கான காரணங்களாக விஞ்ஞானிகள் காட்டுகின்றனர். பச்சைவீட்டு வாயு உமிழ்வுகளின் விடுவிப்பு அகச் சிவப்புக் கதிர் வீச்சினை பூமியின் வளிமண்டலத்தினுள் சிறைப்பிடிக்கின்றது. இது பூகோள வெப்பமடைதலைத் தோற்றுவிக்கின்றது. தொடர்ச்சியாக இடம்பெற்றுக் கொண்டிருக்கின்ற உமிழ்வுகளின் விடுவிப்பு பூகோளத்தின் சராசரி வெப்பநிலையினை 2100 ஆம் ஆண்டளவில் 2° செல்சியஸ் இனால் அதிகரிக்கச் செய்யும்.

பூகோள ரீதியில் எதிர்மறையானதும், பரந்துபட்ட அளவிலானதுமான தாக்கங்களை கொண்டிருக்கக்கூடிய காலநிலை மாற்றங்களை இத்தகைய வெப்பநிலை அதிகரிப்புகள் ஏற்படுத்தும். ஆரம்பகட்ட தாக்கங்கள் ஒட்டுமொத்த இயற்கை அமைப்பு முறைகள் மீதும் மிகவும் கடுமையாக உணரப்படும். அத்தோடு பாதகமான சமூக, பொருளாதார பின்விளைவுகளுக்கு இட்டுச் செல்லும். உதாரணமாக, ஆசியா முழுவதுமுள்ள குடித்தொகை நெரிசல் மிகுந்த கரையோரப் பிரதேசங்களையும் தாழ்நிலப் பிரதேசங்களையும் கடல்மட்ட அதிகரிப்பு ஏற்கனவே அச்சுறுத்தி வருகின்றது. அதிகரித்துவரும் வெப்பநிலைகள் வெள்ளப்பெருக்கு இடர்களை அதிகரிக்கின்ற விதத்திலும், பிரதான ஆறுகளை வற்ற வைக்கின்ற விதத்திலும் இமயமலை பனிப்பாறை உருகலினை ஏற்படுத்துகின்றது. உலக வங்கியின் பிரகாரம் காலநிலை மாற்றத்தின் காரணமாக 800 மில்லியன் தென்னாசியர்கள் உற்பத்தி, வருவாய், அறுவடை மற்றும் உடல் ஆரோக்கியம் போன்றவற்றில் வீழ்ச்சியினை எதிர்கொள்வார்கள். இத்தாக்கங்கள், சுகாதாரம், வாழ்வாதாரங்கள், உணவுப் பாதுகாப்பு, நீர்வழங்கல், மனித பாதுகாப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சி ஆகிய காலநிலையுடன் தொடர்புபட்ட அனர்த்தங்களில் தெரிவுசெய்யப்பட்ட சில. இவை 1.5° செல்சியஸ் பூகோள வெப்பமாதலுடன் அதிகரிக்கும் எனவும், 2° செல்சியஸ் உடன் மேலும் அதிகரிக்கும் என உத்தேசிக்கப்பட்டுள்ளது.

பெருமளவிலான கரையோர சனத்தொகை, அடிக்கடி ஏற்படுகின்ற இயற்கை அனர்த்தங்கள் மற்றும் விரைவான நகரமயமாக்கல் காரணமாக ஆசியாவின் பல பாகங்கள் மிக இலகுவாக காலநிலை மாற்றத்தின் தாக்கங்களிற்கு உள்ளாகக் கூடும். பரிஸ் உடன்படிக்கை இலங்கையினால் மட்டுமன்றி முழு ஆசியாவினாலும் ஏற்று அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அதிகரித்து வருகின்ற பூகோள வெப்பநிலையினை மட்டுப்படுத்துதல் என்கின்ற உறுப்புரிமை நாடுகளின் பொதுவான கடப்பாடுகளை எய்துவதற்காக பச்சைவீட்டுவாயு உமிழ்வினைக் கட்டுப்படுத்துவதற்கு இது அவர்கள் மீது கடமைப் பொறுப்பு சுமத்துகின்றது. நிதியுடன் குறிப்பாகத் தொடர்புடைய ஏற்பாடுகளையும் இது கொண்டுள்ளது. கைத்தொழில் சார் மட்டங்களுடன் ஒப்பிடுகின்ற போது பூகோள சராசரி வெப்பநிலையின் அதிகரிப்பினை 2° செல்சியஸ் இற்கும் கீழாக பேணுவதனையும், அதிகரிப்பினை 1.5° செல்சியஸ் இற்கு மட்டுப்படுத்துவதற்கான எத்தனிப்புக்களை தொடர்ந்து மேற்கொள்வதனையும் இக்கடமைப் பொறுப்புக்கள் நோக்கமாகக் கொண்டுள்ளன. இது தற்போதைய படிம எரிபொருள் இருப்பின் 80 சதவீதத்தினை பூமியின் கீழ் பேணுவதற்கு சமனானதாகும். பரிஸ் வெப்பநிலை இலக்குகளை அடைவதற்கு நிகர-பூஜ்ஜிய கரிம உமிழ்வினை 2050ஆம் ஆண்டளவில் நாம் கூட்டாக எய்த வேண்டும் என்பதில் விஞ்ஞானம் திட்டவட்டமாக உள்ளது.

எது அத்தியாவசியமானது என்பது தொடர்பில் விஞ்ஞானமும் சர்வதேச சட்டமும் தெளிவாக இருக்கின்ற போதும், பொதுவாக உள்நாட்டு சட்டமும், குறிப்பாக அரசியலமைப்பு சட்டமும் தெளிவற்றுக் காணப்படுகின்றன. மிகக் குறைந்த எண்ணிக்கையிலான தேசிய அரசியலமைப்புகளே காலநிலை மாற்றம் தொடர்பிலான ஏற்பாடுகளை உள்ளடக்கியுள்ளன. அவை அனைத்தும் நலிவான முறையில் சொற்றொடர் படுத்தப்பட்டுள்ளது அல்லது விஞ்ஞானத்தின் தேவைப்பாட்டினை அடைவதற்குப் போதுமற்ற தராதரங்களை உள்ளடக்கியுள்ளது அல்லது மேற்கூறிய இரண்டினையும் கொண்டுள்ளது.

காலநிலை மாற்றத்தினை இலங்கை எவ்வாறு கையாளமுடியும்?

காலநிலை மாற்றத்தின் அவசரத் தன்மையினையும் இதனைத் தீர்ப்பதற்கு பங்களிப்புச் செய்வதற்கான அரசியலமைப்பு சட்டத்தின் ஆற்றலினையும் ஒப்புகைக்கின்ற தற்போதைய இலங்கை அரசியலமைப்பு மறுசீரமைப்பு செயன்முறை, அரசியலமைப்பு உருவாக்கத்தில் புதிய அத்தியாயம் ஒன்றினை குறித்து நிற்க தனித்துவமான சந்தர்ப்பமொன்றினை வழங்குகின்றது. பிராந்தியத்தில் இதனை முதலாவதாக முன்னெடுப்பதன் காரணத்தினால், பூகோள காலநிலை தலைவர் என்ற கௌரவத்தினை இலங்கை நிலைநாட்டிக்கொள்ளும். இது தாழ்-கரிய பொருளாதாரத்தினை ( low carbon economy) நோக்கிய நிலைமாற்றத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் (பொது மற்றும் தனியார்) சர்வதேச காலநிலை நிதிக்கான வழிவகைகளை ஏற்படுத்திக் கொடுக்கும்.

எதிர்கால இலங்கை அரசியலமைப்பில் காலநிலை மாற்றம் அத்தியாயம் ஒன்று சேர்க்கப்பட வேண்டும் என நாம் முன்மொழிகின்றோம். இது செயற்றிறன் தராதரமொன்றினைக் கொண்டிருக்கும்: 2060ஆம் ஆண்டில் நிகர பூஜ்ஜிய பச்சைவீட்டு வாயு உமிழ்வுகள். இது பிராந்திய ரீதியில் முன்னிலை வகிக்கின்ற தன்மையினையும் – சீனா சமீப காலத்தில் இதனையொத்த தராதரமொன்றினை ஏற்று அங்கீகரித்துள்ளது – தாழ் கரிய பொருளாதாரத்தினை நோக்கிய நன்கு திட்டமிடப்பட்ட செழுமையான நிலைமாற்றத்திற்கு இலங்கைக்கு போதுமான கால அவகாசத்தினை வழங்கும்.

இந் நிலைமாற்றமானது விஞ்ஞானத்தினை அடிப்படையாகக் கொண்டமைந்திருக்க வேண்டும். இதனடிப்படையில் காலநிலை மாற்றம் தொடர்பான சுயாதீன ஆணைக்குழுவொன்றும் முன்மொழியப்படுகின்றது. ஐக்கிய இராச்சியத்தின் வெற்றிகரமான காலநிலை மாற்றம் தொடர்பான குழுவினை அடியொற்றியதாக, இவ் ஆணைக்குழு செயல் நடவடிக்கைகளுக்காக விஞ்ஞான ரீதியில் திடமான அடிப்படையினையும் இலக்கினை நோக்கிய அரசின் முன்னேற்றம் தொடர்பில் அறிக்கையினையும் அரசாங்கத்திற்கு வழங்கும். இம் முன்மொழியப்பட்ட ஆணைக்குழு,  காலநிலை தொடர்பான நிதி வெளிப்படுத்தல்கள் தொடர்பான சர்வதேச செயலணி (Task Force on Climate-Related Financial Disclosures – TCFD) செயன்முறைக்கு இணைவாக காலநிலை மாற்றம் இலங்கைக்கு ஏற்படுத்துகின்ற இடர்கள் தொடர்பில் நுணுக்கமாக ஆலோசனை வழங்கும். இவ் இடர்கள் (அதாவது அடிக்கடி ஏற்படுகின்ற அல்லது மோசமான வெள்ளப்பெருக்கு, வரட்சி, புயல் போன்ற) பௌதீக ரீதியானவையாக மற்றும் (குறைவான மாசுபடுத்தலை ஏற்படுத்தும்  பசுமையான பொருளாதாரத்தினை நோக்கி நகர்கின்ற போது) நிலைமாற்ற ரீதியிலானவையாக இருப்பதோடு நிபுணத்துவ தகவலையும், முகாமைத்துவத்தினையும் தேவைப்படுத்துகின்ற சமூக, பொருளாதார பின்விளைவுகளையும் கொண்டிருக்கும்.

நிகர கரிய பொருளாதாரம் மற்றும் சமூகம் நோக்கிய நிலைமாற்றமானது குறிப்பாக தற்போது உச்ச கரிய பயன்பாடுள்ள துறைகளில் பணியாற்றுகின்ற ஊழியர்களின் தேவைகள் தொடர்பில், கூருணர்வு உடையதாக இருக்க வேண்டும். சர்வதேச தொழில் தாபனத்தின் (ILO) பரிந்துரைகளைப் பின்பற்றி கண்ணியமான வேலையினையும் தரமான தொழில்களையும் நிலைபேண் தன்மையான பொருளாதார துறைகளில் உருவாக்குவதனை அரசு தன்னுடைய வரையறுக்கப்பட்ட அபிவிருத்தி முன்னுரிமைகளுக்கு அமைவாக ஊக்குவிக்க வேண்டும் என நாம் முன்மொழிகின்றோம்.

இறுதியாக, காலநிலை மாற்றத்தினைக் கையாள்வதன் ஊடாக சுற்றாடலைப் பாதுகாப்பதற்கு அரசியலமைப்பு மற்றும் சட்ட நடவடிக்கைகளை எடுத்தல் இலங்கை கலாசாரத்தின் தொன்மைய மரபுகளுடன் மிகவும் ஒத்திணங்குகின்றது என்பதனை நாம் நினைவுபடுத்துகிறோம். குறிப்பாக தேரவாத பௌத்தம் மனிதர்கள், விலங்குகள் மற்றும் இயற்கைக்கு இடையிலான மரியாதைக்குரிய உறவுகள் தொடர்பில் ஆழமான கரிசணையுடன் இணைந்துள்ளது. திரிசரணத்தின் வரைச்சட்டம் அனைத்து உயிரினங்களையும் அனைத்து பொருட்களையும் உள்ளடக்குகின்றது. ஆதலால், உயிர்ப்பல்வகைமை மற்றும் காலநிலை மாற்றம் வெளிப்படுத்தப்பட்டுள்ள விதத்தில் சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்டுள்ள நிலைபேண் அபிவிருத்தி கோட்பாடுகள் தொடர்பான அரசினுடைய கடமைப் பொறுப்புகளை அரசியலமைப்பு மட்டத்தில் பிரதிபலிப்பது அத்தகையதொரு கலாசாரத்தில் முற்றுமுழுதாகப் பொருத்தமானதாகத் தோற்றமளிக்கும்.

தேவைப்படும் புதிய அரசியலமைப்பு ஏற்பாடுகள் எவை?

தேவைப்படுகின்ற அரசியலமைப்பு மட்ட மாற்றங்கள் இரண்டு வகையானவை: சுற்றாடல் மற்றும் காலநிலை மாற்றத்துடன் தொடர்புடைய அடிப்படை உரிமைகள்; காலநிலை மாற்றம் பற்றிய ஒரு புதிய தனித்த அத்தியாயம்.

அடிப்படை உரிமைகள் அத்தியாயத்திற்கான சேர்க்கைகள்  

பின்வரும் நீதி ஆய்வுக்கு உட்படுத்தப்படக்கூடிய அடிப்படை உரிமைகள் உட்சேர்க்கப்பட வேண்டும் என நாம் பரிந்துரைக்கின்றோம்:

1. ஆரோக்கியமான சுற்றாடலில் வாழ்வதற்கும், இயற்கைச் சுற்றாடலினை முழுமையாக அனுபவிக்கவும், அரசின் கைவசமுள்ள சுற்றாடல் தொடர்பான அனைத்து தகவல்களையும் காலப்பொருத்தமான முறையில் பெற்றுக்கொள்ளவும் ஒவ்வொரு நபருக்கும் உரிமை உண்டு.

2. தற்போதைய, எதிர்கால சந்ததியினரின் அக்கறைகளையும் சுற்றாடல் தொடர்பான தீர்மானம் எடுத்தலில் பங்கேற்பதற்கான ஒவ்வொரு நபரினதும் உரிமையினையும் கருத்திற்கொண்டு சுற்றாடல் பாதுகாப்பினையும், இயற்கை வளங்களின் நிலைபேண் தன்மையான பாவனையினையும் உறுதிப்படுத்தவும், காலநிலை மாற்றத்தினை தீர்ப்பதற்கான அனைத்து நியாயமான ஏற்பாடுகளையும் அரசு ஏற்று அங்கீகரிக்க வேண்டும்.

காலநிலை மாற்றம் தொடர்பிலான புதிய அத்தியாயம்

எதிர்கால அரசியலமைப்பிலுள்ள காலநிலை மாற்றம் தொடர்பிலான அத்தியாயம் குறைந்தபட்சம், பின்வரும் கோட்பாடுகளையும், நிறுவனங்களையும் வழங்க வேண்டும்:

1. பரிஸ் உடன்படிக்கையின் கீழான அதனுடைய கடப்பாடுகளுக்கு இணங்குகின்ற விதத்தில் 2060ஆம் ஆண்டளவில் நிகர-பூஜ்ஜிய பச்சைவீட்டு வாயு உமிழ்வுள்ள ஒரு பொருளாதாரத்திற்கு அரசு தன்னை அர்ப்பணிக்கின்றது;

2. காலநிலை மாற்றம் தொடர்பான ஆணைக்குழுவொன்று இருக்க வேண்டும். நிகர-பூஜ்ஜிய கடப்பாட்டினை அடைவதற்கு அரசுக்கு நிபுணத்துவ அறிவுரையினை ஒழுங்கான கால இடைவெளிகளில் வழங்குகின்ற விதத்திலும், பௌதீக மற்றும் நிலைமாற்ற காலநிலை இடர்களை வரையறுக்கின்ற விதத்திலும் இவ் ஆணைக்குழுவினுடைய பணிகள் அமைய வேண்டும். இவ் ஆணைக்குழு அரசாங்கத்திலிருந்து சுயாதீனமானதாக, நிபுணர்களை உள்ளடக்கியதாக இருக்கும். அத்தோடு, இதனுடைய அறிவுரை நல்லெண்ணத்துடன் கருத்திலெடுக்கப்பட வேண்டும்;

3. புதிய அரசியலமைப்பு அமுல்படுத்தப்பட்டு 12 மாத காலப்பகுதிக்குள் இவ்வாணைக்குழு சட்டம் நாடாளுமன்ற சட்டம் நிறைவேற்றப்படுவதன் மூலம் உருவாக்கப்பட வேண்டும். நிகர-பூஜ்ஜிய இலக்கினை அடைவதனை நோக்கிய முன்னேற்றம் தொடர்பில் அரசுக்கு ஆலோசனை வழங்குவதற்கும், இலக்கை நோக்கிய அரசின் முன்னேற்றத்தினை ஒழுங்கான கால இடைவெளிகளில் அறிக்கைப்படுத்தவும், வெளியிடவும் மற்றும் ஆணைக்குழுவின் அறிவுரைக்கு கணிசமான அளவில் பதில்வினையாற்ற அரசினைத் தேவைப்படுத்தவும் இச் சட்டம் ஆணைக்குழுவினைத் தேவைப்படுத்தும். வேண்டுகோள் விடுக்கப்படுகின்ற போது ஆலோசனை அல்லது ஏனைய உதவியினை வழங்கவேண்டிய கடமையை ஆணைக்குழு கொண்டிருக்கும்;

4. உச்ச கரிய பயன்பாடுள்ள துறைகளில் பணியாற்றுகின்ற ஊழியர்கள் உட்பட, மிக இலகுவில் பாதிப்பிற்கு உள்ளாகக் கூடியவர்களை நிகர-பூஜ்ஜிய பொருளாதாரத்தை நோக்கிய நிலைமாற்றமும் சமூகமும் பாதுகாக்க வேண்டும். இதற்காக, தேசிய ரீதியில் வரையறுக்கப்பட்ட அபிவிருத்தி முன்னுரிமைகளுக்கு அமைவாக கண்ணியமான வேலையினையும் தரமான தொழில்களையும் நிலைபேண் தன்மையான பொருளாதாரத் துறைகளில் உருவாக்குவதனை அரசு ஊக்குவிக்க வேண்டும்.

புதிய காலநிலை மாற்றம் சட்டம் கொண்டிருக்க வேண்டியவை எவை?

கீழே குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை வழங்குகின்ற விபரிக்கப்பட்டுள்ள அரசியலமைப்பு ஏற்பாடுகள் அடிப்படைச் சட்டத்தினால் விரித்துரைக்கப்படவேண்டும். இலங்கை சட்ட வரைஞர்கள் பார்வை செலுத்தக்கூடிய பல ஒப்பீட்டுச் சட்டங்கள் உண்டு, ஆனால் நாம் எம்முடைய பரிந்துரைகளை இவ் விடயப்பரப்பில் மாதிரியாகக் கருதப்படுகின்ற ஐக்கிய இராச்சியத்தின் 2008 ஆம் ஆண்டு காலநிலை மாற்றம் சட்டத்தினை அடிப்படையாகக் கொண்டு முன்வைக்கின்றோம்.

எதிர்காலச் சட்டம் பின்வருவனவற்றை வழங்க வேண்டும்:

1. கரிய இலக்குகள் மற்றும் கரிய வரவு-செலவுத் திட்டத்திற்கான செயல்முறை, அமைச்சரின் தத்துவங்களும் பணிகளும் கடமைகளும்;

2. அரசியலமைப்பு ரீதியில் உருவாக்கப்பட்ட காலநிலை மாற்றம் ஆணைக்குழுவின் கூட்டமைவு, நியமனம், தத்துவங்கள், பணிகள், கடமைகள், நிதி, மற்றும் இவ் ஏற்பாடுகள் அதனுடைய அரசியலமைப்பு நோக்கத்தினை நிறைவேற்றுவதனை இயலச்செய்வதற்கான அத்தியாவசியமான சுயாதீனத் தன்மையினையும், நிபுணத்துவத்தினையும் நிதியினையும் ஆணைக்குழு கொண்டிருப்பதனை உறுதிப்படுத்தல்;

3. பச்சை வீட்டு வாயு உமிழ்வினை ஏற்படுத்துகின்ற நடவடிக்கைகளை மட்டுப்படுத்துவதற்கும் மற்றும் பச்சை வீட்டு வாயு உமிழ்வினைக் குறைக்கின்ற நடவடிக்கைகளை ஊக்குவிப்பதற்கும் வர்த்தக திட்டமுறைகளை (scheme) பறைசாற்றுதல்;

4. காலநிலை மாற்றத்தின் தாக்கம் மற்றும் ஏற்புத்திறன் தொடர்பிலான அரசியலமைப்புக்கும் சர்வதேச சட்டத்திற்கும் கீழான அரசினுடைய கடப்பாடுகள் தொடர்பில் ஆணைக்குழு தவிர்ந்த ஏனைய பொது அதிகாரசபைகளுடைய கொள்கைகள், செயற்திட்டங்களின் வளர்ச்சி மற்றும் கடப்பாடுகளை அறிக்கையிடுதலும் வெளியிடலும்.

மேலதிகமாக, பின்வரும் விடயங்களை கருத்திற்கொள்வதனை நாம் பரிந்துரைக்கின்றோம்:

1. மாகாண சபைகளுக்கு பகிரப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் பொருத்தமான அவதானத்துடன் இச் சட்டம் வடிவமைக்கப்பட வேண்டும். பகிரப்பட்ட விடயமொன்றினையோ அல்லது செயற்பாட்டினையோ பாதிக்கின்ற ஏதேனும் ஏற்பாடுகள் சம்பந்தப்பட்ட – பகிர்ந்தளிக்கப்பட்ட நிறுவனத்தினை சட்டத்தின் திட்டமுறைகளுக்குள் ஈடுபடுத்தவேண்டும். அத்தோடு, அதிகாரங்களை மீள்-மத்தியப்படுத்த (re-centralise) நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பயன்படுத்தப்படக்கூடாது.​

2. இச் சட்டம் வெளிப்படையான, அணுகக்கூடிய, செலவு குறைந்த முறைப்பாடுகள் மற்றும் பிணக்குத் தீர்த்தல் வரைச்சட்டத்தினைக் கட்டமைக்க வேண்டும்.

3. தாபிக்கப்பட்ட ஏதேனும் நீதிமன்றத்தின் அல்லது நியாயசபையின் நிறுவப்பட்ட சாதாரண மற்றும் விசேட நியாயாதிக்கத்தினை ஊறுபடுத்தாத விதத்தில் இச் சட்டத்தின் மீறல்களுக்கு அல்லது உடனடியான மீறல்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளை இலகுபடுத்துகின்ற செயல்முறையினை இச் சட்டம் வழங்க வேண்டும். இவ் விடயம் தொடர்பில் இலங்கைச் சட்ட வரைஞர்கள் சர்வதேச சட்டத்தரணிகள் சங்கத்தின் காலநிலை மாற்றம் தொடர்பில் செயற்பட அரசாங்கம் தவறுகின்றமையை கேள்விக்குட்படுத்துகின்ற மாதிரி நியதிச்சட்டத்தினால் வழிகாட்டப்படலாம்.

4. நல்ல காரணம் இருந்தாலன்றி இச் சட்டத்தின் ஏற்பாடுகள் மற்றும் இதன் கீழ் எடுக்கப்படுகின்ற ஏதேனும் சட்டபூர்வமான நடவடிக்கைகள் ஏதேனும்; ஒத்திசையாத சட்ட ஏற்பாடு அல்லது நிர்வாக நடவடிக்கைக்கு எதிராக மேலோங்க வேண்டும் என்பதனை உறுதிப்படுத்துகின்ற பொருத்தமாக வரையப்பட்டதொரு சரத்து.

முடிவுரை

காலநிலை மாற்ற சவால்களுக்கான இலங்கையினுடைய பதில்வினையில் இன்றியமையாத அரசியலமைப்பு மற்றும் சட்ட வரைச்சட்டத்தின் திட்டவரைபினை நாம் தொகுத்தமைத்துள்ளோம்.

அரசாங்கம் இரண்டில்-மூன்று நீதித்துறை பெரும்பான்மையினைக் கொண்டுள்ளதுடன், அரசியல் விருப்பாற்றல் இருக்குமாயின், நாம் வெளிக்கோடிட்டுக் காட்டியுள்ள சீர்திருத்தத்திற்கான நடைமுறைச் சாத்தியமான நிகழ்ச்சி நிரல் நிறைவேற்றப்படுவதில் எந்த விதமான கடினத்தன்மையும் இருக்க முடியாது. இலங்கை ஊடகங்களில் அடிக்கடி முக்கியத்துவப்படுத்தப்படுகின்ற சூழலியல், உயிர்ப்பல்வகைமை மற்றும் நிலைபேண் அபிவிருத்தி பற்றிய மிக உடனடியானதும் கண்ணுக்குப் புலனாகின்றதுமான பிரச்சினைகள் தொடர்பில் மேலும் வெற்றிகரமான முறையில் பதில்வினையாற்றுவதற்கான அடித்தளத்தினையும் இவ் வரைச்சட்டம் இடும்.

காலநிலை மாற்ற பிரச்சினை தொடர்பான சவால்களைக் கையாளுவது என்பது நிறுவன சீர்திருத்தத்தினையும் தாண்டியது என்பதுடன், கலாச்சாரம் மற்றும் மனோநிலை தொடர்பில் ஆழமான மாற்றத்தினையும் தேவைப்படுத்துகின்றது. ஆதலால், முடிவில், எம்முடைய வாசகர்களின் கவனத்தினை ‘செயற்படுவதற்கான தருணம் இப்போது: காலநிலை மாற்றம் தொடர்பிலான பௌத்த பிரகடணம்’ (2015) இல் இருந்தான பின்வரும் மேற்கோளின் பக்கம் திருப்புகின்றோம்:

“மனித நாகரிகத்தின் தப்பிப்பிழைப்பு ஆபத்தான கட்டத்தில் உள்ளது என பல விஞ்ஞானிகள் முடிவுறுத்தியுள்ளார்கள். எம்முடைய உயிரியல் மற்றும் சமூக பரிணாம வளர்ச்சியில் அதிமுக்கியமான கட்டத்தினை நாம் அடைந்துவிட்டோம். உயிர்வாழும் அனைத்து உயிரினங்களின் சார்பிலும் பௌத்தத்தின் வளங்களை சான்றுரைக்க கொணர்விப்பதற்கு இதை விட முக்கியமான காலம் வரலாற்றில் இருந்ததில்லை. நான்கு உன்னதமான உண்மைகள் எங்களுடைய தற்போதைய சூழ்நிலையினைக் கண்டறிவதற்கும் பொருத்தமான வழிகாட்டிக் குறிப்புகளை வடிவமைப்பதற்கும் ஒரு வரைச்சட்டத்தினை வழங்குகின்றது – ஏனெனில் நாம் முகங்கொடுக்கின்ற அச்சுறுத்தல்களும் அனர்த்தங்களும் மனித உள்ளத்திலிருந்தே இறுதியில் தோற்றம் பெறுகின்றன, ஆதலினால், எங்களுடைய உள்ளங்களினுள் ஆழமான மாற்றங்களைத் தேவைப்படுத்துகின்றது. தனிப்பட்ட துயர்கள் அவாவிலிருந்தும் அறியாமையிலிருந்தும் உருவாகின்றது எனில் – பேராசை, தீய எண்ணம், மாயை என்கின்ற மூன்று நஞ்சுகளிலிருந்து உருவாகின்றது எனில் – கூட்டு அளவில் எம்மைத் துன்புறுத்துகின்ற துயரத்திற்கும் இது ஏற்புடையதாக அமையும். எமது சூழலியல் நெருக்கடிநிலை தொடர்ச்சியான மனித இட்டுக்கட்டான சூழ்நிலையின் ஒரு பாரிய பதிவுருவாகும். தனிநபர்களாகவும், ஒரு இனமாகவும் ஏனைய மக்களிடமிருந்து மட்டுமன்றி பூமியிருந்தும் தொடர்பு துண்டிக்கப்பட்டவர்களாக உணர்கின்ற சுயம் என்கிற உணர்வின் மூலம் நாம் துயருருகின்றோம். நாம் விழித்துக்கொள்வதுடன், பூமி எம்முடைய தாய் மற்றும் இல்லம் – அத்தோடு அவளுடன் எம்மை இணைக்கின்ற தொப்புள்கொடி கத்தரிக்கப்பட முடியாது என்பதனையும் உணர்ந்து கொள்ளவும் வேண்டும். பூமி சுகவீனமடைகின்ற போது, நாம் சுகவீனமடைகின்றோம், ஏனெனில் நாம் அவளின் பகுதி.”

நவ்ராஜ் சிங்-கலெய் மற்றும் அசங்க வெலிக்கல

நவ்ராஜ் சிங்-கலெய் காலநிலை சட்டத்தில் சிரேஷ்ட விரிவுரையாளர். அசங்க வெலிக்கல எடின்பர்க் பல்கலைக்கழகத்தின் சட்டக்கல்லூரியில் பொதுச்சட்ட விரிவுரையாளர். அரசியலமைப்புச் சட்டத்திற்கான எடின்பர்க் நிலையத்தின் சார்பிலான இலங்கை செயன்முறைக்கான அவர்களுடைய முன்மொழிவு மேற்கொள்ளப்பட்டது.