படம்: Kannan Arunasalam Photo, iam.lk

2021 ஜனவரி 27 இரவு முதல் பேஸ்புக் பக்கத்தைத் திறந்தாலே ஒரே மல்லிகை வாசனையாகவே இருக்கிறது. அந்தப் பகிர்வுகளில் ஒரு வாசனை. அது மல்லிகை. மல்லிகை ஜீவா என அழைக்கப்பட்ட எழுத்தாளர் டொமினிக் ஜீவாவின் மரணத்தை அடுத்தே இந்த மல்லிகை மனம். ஒருவரின் மரணத்தின் பின்னர் எத்தனையெத்தனை அன்புள்ளங்கள் அவர் பற்றிய நினைவுகளைப் பகிர்ந்து கொள்கின்றன. படங்களைப் பகிர்ந்து கொள்கின்றன. துயரங்களைப் பகிர்ந்து கொள்கின்றன.

ஒரு வகையில் நாம் இத்தனைப் பேரும் டொமினிக் ஜீவா வாழ்ந்த நாட்களிலேயே அவரைக் கொண்டாடித் தீர்த்தவர்கள்தான். ஆங்காங்கே, அவ்வப்போது அவரைப் போய்ச் சந்திப்பதும், அவரது மல்லிகைக்கு எழுதுவதும், அவரிடம் மல்லிகையை வாங்குவதும், அவரை விழாவுக்கு அழைப்பதும், அவருக்கு விழா எடுப்பதுமாக நாம் அனைவருமே அவரைக் கொண்டாடித்தான் உள்ளோம். அவை எல்லாமே அவ்வப்போது நடந்தவை. இன்றோ நாம் எல்லோரும் ஒன்றாக இணைந்து அவரோடு இணைந்திருந்த நினைவுகளை பகிர்ந்து கொள்கிறோம். ஆனால், அவருக்கு அது தெரிய வாய்ப்பில்லை.

இப்படி எல்லோருமாக ஒன்று சேர்ந்து அவர் வாழும்போதே வாழ்த்தியிருந்தால் எப்படி இருந்திருக்கும் ? என்று கூட கற்பனை செய்திருந்தேன். அது சாத்தியமில்லைதான். ஆனாலும் ஜீவா மரணித்த பின்னர் அதனை சாத்தியமாக்கி இருக்கிறார்.

ஜீவாவைப் பற்றி வாசித்திருந்தாலும் நேரடியாக சந்தித்தது அல்லது பார்த்தது 2000ஆம் ஆண்டளவில் கொழும்பு இராமகிருஷ்ணா மண்டபத்தில் நடந்த ஒரு விழாவில்தான். என்னைக் கவர்ந்தது அவரது உரையின் ஒரு பகுதி. மெதுவாக ஆரம்பித்து சின்னச் சிரிப்புடன் தொடங்கும் அவரது பேச்சு ஒரு கட்டத்தில் ஆவேசம் அடையும். அந்த ஆவேசத்தின் ஆரம்பப்புள்ளி, “போய்ச்சிரையுங்கோடா! என்றான் அந்த வாத்தி” என்பதாக ஆரம்பிக்கும். பின்னாளில் பெரும்பாலும் பல கூட்டங்களில் இதனைக் கேட்டு இருக்கிறேன்.

ஒரு ஏழைச் சிறுவனைப் பார்த்து, அவனது சாதியை நினைவுபடுத்தி அதுசார்ந்த தொழிலைச் செய்யுங்கோடா, ஏன் படிக்க வருகிறீர்கள் என அவனது ஆசிரியரே திட்டினால்…?

இப்படி ‘ஜோசப் டொமினிக்’ என்ற அந்தச் சிறுவனுக்கு நடக்கும்போது வயது பத்தோ பன்னிரண்டோவாக இருக்கலாம். அப்போதே அந்தச் சிறுவன் ஒரு முடிவுக்கு வருகிறான். அந்த முடிவுதான் “நான் படிக்க மாட்டன். இந்த சட்டாம்பித்தனம் காட்டும் சாதி வெறியனுகள்கிட்ட படிக்க மாட்டன்” என்பது.

இப்படிச் சிந்திக்கவும் முடிவெடுக்கவும் அந்தச் சிறுவனுக்கு எத்தனை நெஞ்சுரம் இருந்திருக்க வேண்டும்!

ஆம். அந்த நெஞ்சுரத்தோடு வளர்ந்தவர்தான் டொமினிக் ஜீவா. உலகில் நாம் கண்ட பல படித்து முன்னேறும் சபதமெடுத்தவர்களுக்கு மத்தியில் ‘படிக்கமாட்டன்’ என சபதமெடுத்து முன்னேறியவர் தான் டொமினிக் ஜீவா.

ஆசிரியரினால் அவமானப்படுத்தப்பட்டதால் கூனிக் குறுகி உட்கார்ந்துவிடாமல், அவரது தந்தையின் தொழிலையே செய்யத் துணிந்தவர். யாழ்ப்பாணத்தில் தனது தந்தை நடாத்திய “ ஜோசப் சலூனில்” தொழில் பழக ஆரம்பித்தவர். அந்த தொழிலைப் பழகி அதனைச் செய்து முடிந்திருந்தால் இன்று 94 வயதில் அல்ல இன்னும் ஆறு ஆண்டுகள் வாழ்ந்து நூறு வயதில் மாண்டிருந்தால்கூட யாரும் கண்டுகொண்டிருக்க மாட்டார்கள்.

1927 ஜூன் 27ஆம் திகதி பிறந்து 2021 ஜனவரி 27 மறையும் போது, இன்று திரும்பும் திசையெங்கும் அவருக்கு வரும் அஞ்சலிக்குறிப்புகளின் ஆழம், அவர் கொண்ட சபதத்தினதும் அதில் அவர் அடைந்த சிகரத்தினதும் பிரதிபலிப்பே.

இந்த வாழ்க்கை காலத்துள் அவரது படைப்புலகம், பதிப்புலகம், இதழியல், அரசியல் என எல்லாத்திசைகளிலும் தனது முத்திரையைப் பதித்தவர், இன்று ஈழத்தின் முதுபெரும் இலக்கிய ஆளுமையாக வலம் வந்து 94 வயதில் மறையும்போது தன்னை சமூக விடுதலைப் போராளியாக முன்னிறுத்தி விடைபெற்றார் டொமினிக் ஜீவா.

அந்தப் பதினான்கு வயதுக்கும் இந்த தொன்னூற்று நான்கு வயதுக்குமிடையேயான எண்பதாண்டு காலமாக ‘எழுத்தாளன்’ என்பதை முன்னிறுத்தி அவர் வாழ்ந்த வாழ்க்கை, அதற்காக அவர் வரித்துக் கொண்ட பொதுவுடமை அரசியல், தான் பட்ட அவமானத்தில் இருந்து மீண்டு தனது சமூகத்தை முன்னிறுத்த வேண்டும் எனும் வேட்கை, அந்த வேட்கையை விட்டுக் கொடுக்காமை, தான் கொண்ட கொள்கையை சமரசம் செய்யாமை என அமைந்த அவரது செயற்பாடுகள், இயக்கங்கள், எழுத்துகள், பேச்சுகள் இன்று அவரை சாதனையாளராக்கி இருக்கிறது.

சலூன் கடையில் இடம்பெறும் வாசிப்புக்கும், பேசும் அரசியலுக்கும் வீச்சு அதிகம். இலங்கை மலையகத்தில் இதற்கு தனியான வரலாறு உண்டு. இலங்கைத் திராவிட முன்னேற்றக் கழக எழுச்சியில் இந்தச் சலூன் கடைகளுக்கு பிரதான மங்கேற்றதான பதிவுகள் உள்ளன. அடுத்தச் சுற்று வரும் வரை முடிவெட்டவோ, சவரம் செய்யவோ காத்திருப்போர் வாசிக்கவென அங்கே வாங்கி வைக்கப்படும் ‘தினசரிகள்’, அங்கே வாசிக்கவும் அரசியல் உரையாடல் செய்யவும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. இந்த அனுபவத்தை நேரடியாகக் கூடப் பெற்ற தலைமுறையின் இறுதிப் பிரிவினர் என் வயதை ஒத்தவர்களாக இருக்கலாம். இந்த காலத்தில் கைத்தொலைபேசிகள் அந்த கலாசாரத்தை தொலைத்துவிட்டன.

சலூன் கடைக்கு வருபவர்களே வாசிப்பார்கள் என்றால், அங்கே தொழில் பழகி, தொழில் பார்க்கும் அந்த வேட்கை கொண்ட சிறுவனுக்கு எத்தனை வாய்ப்பாக இருந்திருக்க வேண்டும் அந்த வாசிப்பு! இலங்கை தினசரிகள் மாத்திரமின்றி இலங்கை, இந்திய சிற்றிதழ்களையும் வாசிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது அந்த சிறுவனுக்கு. அந்த வாசிப்புக்கு ஆற்பட்ட சிறுவன் இளைஞனாகும் போது எழுதவும் பிரயாசப்படுகிறார்.

தனது பள்ளிக்கூட ஆசான் தன்னை சாதியைச் சுட்டித் திட்டினாலும் அரசியல் ஆசான் கார்த்திகேசு மாஸ்ட்டர் இவரைப் புடம் போடுகிறார். சிறு வயதிலேயே கம்யூனிஸ்ட் கொள்கைகள் மீது ஈர்ப்பு ஏற்படுகிறது. கட்சிப்போராட்டங்கள் பலவற்றில் கலந்து கொள்கிறார். சாதி எதிர்ப்புப் போராட்டங்களில் முன்னிலை வகிக்கிறார். சாதியில் குறைந்தவர்களென ஒடுக்கப்பட்ட இந்துக்கள் கோயில் உள்ளே செல்ல இருந்த தடைக்கு எதிரான போராட்டத்தில் கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்த ஜோசப் டொமினிக் முன்னிலைப் போராளியாக செயற்பட்டுள்ளார்.

இந்தியாவின் கம்யூனிஸ்ட் இயக்க தோழர் ப.ஜீவானந்தம் தலைமறைவாக இலங்கையில் வாழ நேரிட்ட காலத்தில் அவர் மீதான ஈர்ப்பு வருகிறது. அதனால் ஜோசப் டொமினிக் எனும் தனது பெயருக்குப் பின்னால் ஜீவாவைச் சேர்த்துக் கொள்கிறார். அப்படியே டொமினிக் ஜீவா ஆகிறார். அந்தப் பெயரில் எழுத ஆரம்பிக்கிறார். இவருக்குப் ‘புரட்சிமோகன்’ என்ற ஒரு புனைப் பெயரும் கூட இருந்தது.

யாழ்ப்பாண விளிம்புநிலை மக்கள் பற்றிய இவரது கதைகள் இலங்கையில் மாத்திரமின்றி இந்திய இதழ்களிலும் வெளிவரத் தொடங்கின. 1960 வெளிவந்த “தண்ணீரும் கண்ணீரும்” எனும் இவரது சிறுகதைத் தொகுதியே முதன் முதலாக இலங்கை கலாசார திணைக்களத்தின் ‘சாகித்திய பரிசு’ பெற்ற சிறுகதை நூலாக பதிவு பெறுகிறது.

எழுத்தார்வம் உச்சம் பெற்ற இவர் 1966ஆம் ஆண்டு தானே ஒரு சிற்றிதழை ஆரம்பிக்கிறார். அதன் பெயர் மல்லிகை. யாழ்ப்பாணத்திலிருந்தும் பின்னர் கொழும்பிலிருந்துமாக அதனைத் தொடர்ச்சியாக 48 ஆண்டுகளாக நடாத்திவந்தார் என்பது இவரது வரலாற்றுச் சாதனை. தனியொருவனாக நின்று ஒரு இலக்கியச் சிற்றிதழை இத்தனை ஆண்டுகாலம் நடாத்தியது உலகச் சாதனையாகக் கூட இருக்கலாம். அதுவும் தமிழில்.

எழுத்தில் சிறுகதையே இவரது பிரதான துறையாக இருந்தது. தண்ணீரும் கண்ணீரும் (1960), பாதுகை (1962), சாலையின் திருப்பம் (1967) வாழ்வின் தரிசனங்கள் (2010) டொமினிக் ஜீவா சிறுகதைகள் என எளிய மக்களைப் பாத்திரப் படைப்புகளாகக் கொண்ட இவரது சிறுகதைகள் நூலுருப் பெற்றுள்ளன.

இவரது ‘ஞானம்’ எனும் சிறுகதையை ஏ.ஜே. கனகரத்னா ஆங்கிலத்திற்கு மொழிபெயர்த்துள்ளார். இவரது சிறுகதைகள் சில சிங்களத்திற்கும், ரஷ்ய மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

தனது நூல்கள், மல்லிகை இதழ்களைக் கடந்து ‘ மல்லிகைப் பந்தல்’ என பதிப்பகம் அமைத்து ஏனைய எழுத்தாளர்களின் நூல்களையும் கூட வெளியிட்ட பெருமைக்குரியவர். இன்று பரவலாக எழுதிக் கொண்டு இருக்கும் பலர் இன்றைய தமது இரங்கல் குறிப்புகளில் ‘நான் மல்லிகையில் எழுதியதில்லை. ஆனால், ஜீவா மீது தனியான மதிப்பும் மரியாதையும் இருந்தது’ எனப் பதிவு செய்கின்றனர். நானும் அதே வகையறாதான்.

2000ஆம் ஆண்டு அவரை நேரடியாகப் பார்த்ததன் பின்னர் புறக்கோட்டை, முதலாம் குறுக்குத்தெரு, ஒரியண்ட் சலூன் சந்தியில் அவரை அடிக்கடிச் சந்திப்பதுண்டு. அப்போது இரண்டாம் குறுக்குத் தெருவில் நானும் எனது நண்பன்  அந்தனிஜோசப்பும் ஒரு அலுவலகம் தொடங்கி இருந்தோம். அவரைக் கண்டால் ‘வணக்கம்’ சொல்வதை வழக்கம் ஆக்கிக் கொண்டிருந்தேன். திரும்பி வணக்கம் சொல்பவர் கூடவே ‘மல்லிகை கிடைச்சுதா தம்பி’ என்பார். ‘இல்லை அய்யா தாருங்கள்’ என்றால் உடனே அவரது சட்டைப் பைக்குள் இருந்து உருவிக் கொடுக்கும் போது தெரிவது அவரது உழைப்பு. எந்தநேரமும் மல்லிகையை விநியோகம் செய்யும் உழைப்பு அவருடைய மல்லிகை இதழ் வெற்றியின் மையப்புள்ளி என்பேன்.

இவரிடம் நான் இப்படி உரையாடுவதைக் கண்ட பல நண்பர்கள் இவர் அந்த சலூன்கடைக் காரரல்லவா? என ஆச்சரியமாக்க் கேட்டுள்ளனர். “ஆம். அவர் பெரிய இலக்கியவாதியும்” என்பேன் கர்வமாக. அதில் ஜீவாவின் கர்வமும் கம்பீரமும் கூட கலந்திருப்பதாக உணர்வேன்

2002ஆம் ஆண்டு ஒன்றாக இதழியல் கற்கும் காலத்தில், சக்தித் தொலைக்காட்சியில் தயாரிப்பாளராக பணிபுரிந்த ஶ்ரீ பிருந்தன், ‘உலக வாசிப்பு’ தினத்தன்று, என்னிடம் வாசிப்பு தொடர்பான சில கருத்துக்களைப் பெற்று ஒளிபரப்ப விரும்பினார். படப்பிடிப்புக்காக புறக்கோட்டை அலுவலகத்துக்கு வந்தவர், அந்த லொக்கேஷன் பிடிபடாமல் என்னை அதே புறக்கோட்டைப் பகுதியின் இன்னோர் இடத்திற்கு வரச்சொல்லிவிட்டுச் சென்றார். அங்கு போனேன். அங்கே எனக்கு முன்னால் இன்னுமொருவரை வைத்து ஒளிப்பதிவு செய்வது தெரிந்தது. அவர்தான் டொமினிக் ஜீவா. அந்த அலுவலகம்தான் ‘மல்லிகை’ காரியாலயம்.

ஆக, நான் மல்லிகையில் எழுதியிருக்காவிட்டாலும் மல்லிகைப் பந்தலில் நின்று பேட்டி கொடுத்து இருக்கிறேன். அன்றில் இருந்து அந்த செக்கட்டித் தெருப் பக்கம் சென்றால் மல்லிகைப் பந்தலுக்குள் சென்று ஜீவாவையும் ஒரு எட்டுப் பார்த்துவிட்டு மல்லிகை ஒன்றை வாங்கிக் கொண்டுவரும் வழக்கம்  இருந்தது. ஆனாலும் அநேகமாக அவர் அங்கே இருப்பது அரிது. செக்கட்டித் தெருவில், செட்டியார் தெருவில், மெயின் வீதியில், முதலாம் குறுக்குத்தெருவில், ஆமர் வீதியில் என அவர் நடந்து திரிவதே அதிகம். அந்த நடையில் நிமிர்ந்ததுதான் ‘மல்லிகை’ என்பது நிச்சயம்.

அவ்வப்போது தமிழ்ச்சங்கத்தில் சந்திக்கும் வாய்ப்பு எல்லா இலக்கிய ஆர்வலர்களுக்கும்போல் எனக்கும் வாய்த்தது. அந்த சந்தர்ப்பங்களில் எல்லாம் அவர் எனக்குச் சொல்வது “எழுதுங்கோ… வாசியுங்கோ….” என்பதைத்தான்.

அப்படி அவர் கூறும்போதெல்லாம் எனக்கு அவரது சுயசரிதை நூலுக்கு வைத்த தலைப்பான‘எழுதப்படாத கவிதைக்கு வரையப்படாத சித்திரம்’ என்பதே நினைவுக்கு வரும். ஏனென்றால், எப்போதாவது ஒரு காலத்தில் நானும் ஒரு வாழ்க்கை வரலாற்றை எழுதுவதற்கான ஒரு உந்துதலை அந்த நூலின் உள்ளடக்கம் எனக்குத் தந்து கொண்டிருக்கிறது.

ஒடுக்கப்பட்ட மலையகத் தமிழர் சமூகத்தில் பிறந்து, வளர்ந்து இலக்கியம், அரசியல், சமூகம் என சமதளத்தில் பயணிக்கும் எனக்கு ஜீவாவின் வாழ்க்கை வரலாறு ஒரு உந்துதலை அளிப்பதில் ஆச்சரியம் ஏதும் இருக்க வாய்ப்பு ஏதும் இல்லை.

அப்படி ஒரு நூலை எழுதுவேனாக இருந்தால், அதில் ஜீவா அவர்கள் வாழ்ந்த மட்டக்குளிய, காக்கத்தீவு வீடும், அங்கு அவரைச் சந்திக்கச் சென்றிருந்த பொழுது ஒன்றில் எனக்கு வந்த அந்த தொலைபேசி அழைப்பும், அதனைத் தொடர்ந்த நிகழ்வுகளும் எனது வரலாற்றுப் பக்கத்தின் ஓர் அத்தியாயமாக அமையும். ஏனெனில், அந்த அழைப்பு வந்திருந்த இடம் அத்தகையது.

2013 ஆண்டு 43ஆவது இலக்கியச் சந்திப்பு யாழ்ப்பாணத்தில் நடந்தபோது சந்திக்கக் கிடைத்த உறவுகள் நட்புகள் தோழமைகள் ஏராளம்… ஏராளம். அந்தச் சந்திப்பு முடிந்த அடுத்த வாரம்  விஜி (பிரான்ஸ்) கொழும்பு வந்திருந்தார். வந்தவர், “வெள்ளவத்தையில் நிற்கிறேன்.என்னை ஜீவாட்ட கூட்டிக்கொண்டு போக உதவ முடியுமா?” என விடுத்த அன்பு வேண்டுகோளை ஏற்று, அப்போது வெள்ளவத்தையில் வசித்த நான், விஜியுடன் மட்டக்குளி நோக்கிப் புறப்பட்டேன். ஜீவாவின் வீட்டை அடையாளம் காட்டவும் அழைத்துப் போகவும் என அவருடன் கூடவே இயங்கிய கவிஞர் மேமன் கவியையும் அழைத்துக் கொண்டு ஜீவா வீட்டுக்குப் போவது எங்களது திட்டம்.

நாங்கள் பயணித்த ஆட்டோ கோட்டையைக் கடந்து போகையில் எதிர்பாராதவிதமாக, “நாலாம் மாடி கேள்விப்பட்டு இருப்பீர்கள். பார்த்து இருக்கிறீர்களா?” என பகடியாக விஜியிடம் கேட்டேன். “இல்லை…இல்லை ..எங்க காட்டுங்களேன்” என அவசரப்பட்டவருக்கு ஆட்டோவில் பயணித்தவாறே அந்தத் திசைநோக்கி காட்டினேன். பெயர்ப்பலகையை வாசித்தவர்… “ஆ இதுதான் இடமா? கடைகளோடு கடைகளா கிடக்கு. நான் எங்கேயோ தனியான ஒரு இடம் என்று யோசிச்சு இருந்தன்” என்றதோடு அந்த விடயம் முடிந்தது.

நாங்கள் மேமனையும் அழைத்துக் கொண்டு ஜீவா வீட்டை அடைந்து உரையாடிக் கொண்டிருந்தோம். எனக்கு ஒரு கைபேசி எண்ணில் இருந்து அழைப்பு வந்தது.

“நாங்கள் பயங்கரவாதத் தடுப்பு பிரிவில் இருந்து பேசுறம். உங்கள சந்திச்சு வாக்குமூலம் எடுக்க இருக்கு. இப்போ எங்க இருக்கிறீங்க?” என சிங்களத்தில் ஒலித்தது.

“ஓ… நீங்க வரலாம். ஆனால் நான் இப்போ வெளியில் நிற்கிறன். என் அலுவலகத்துக்கு வரலாம். இன்றைக்கு பின்னேரம் அலுவலகத்தில் இருப்பேன்” என முகவரியையும் கொடுத்து அழைப்பைத் துண்டித்தேன்.

பகடிக்கு யாரோ எடுக்கிறார்கள் என நினைத்தேன். ஜீவாவிடம் விடைபெற்றுக் கொண்டு பகல் சாப்பாட்டுக்கு எங்கள் வெள்ளவத்தை வீட்டுக்கு விஜியும் நானும் வந்தோம். பகலுணவை முடித்து அலுவலகம் செல்ல ஆயத்தமானபோது மனைவியிடம் சாடையாகச் சொன்னேன். விஜிக்குத் தூக்கிப்போட்டது.

“என்ன திலகர்… போகும்போது பேசிக் கொண்டுபோன இடத்தில் இருந்தா?

“ஆமாம் விஜி. ஆனால், நாலாம் மாடி இல்லை. இரண்டாம் மாடி.”

“என்ன இது…? இவ்வளவு சிக்கல்களுக்கு மத்தியிலதான் நீங்க ஓடியாடி திரியுறீங்களா?

“ஆம். இதற்கு முன்னமும் அழைக்கப்பட்டு இருக்கேன். வாக்குமூலம் கொடுத்து இருக்கேன்.

ஆனால், அப்போதெல்லாம் தந்தி வரும் அல்லது ஆள்வரும். ஆனால், இப்போ கோல் வருது. சிலவேளை யாராவது பகடி விட்டிருக்கலாம் என நினைக்கிறேன். இருந்தாலும் ஒரு பாதுகாப்புக்காக மனைவியிடம் சொல்லிவைத்தேன். ஏனென்றால், இது வெள்ளை வேன் காலமல்லவா ?” என அன்று விஜியிடமும் இன்று உங்களிடமும் சொல்லி விடைபெற்றுக் கொண்டாலும், அது விளையாட்டு அழைப்பல்ல. பின் விளைவுகள் உண்மையாகவே நடந்தேறின எனும் எனது வாழ்க்கை வரலாற்றின் ஒரு பகுதி எழுத்தாளர் டொமினிக் ஜீவா வீட்டில் இருந்து ஆரம்பிக்கும் அத்தியாயமாக அமையும்.

அதன் பின்னர் பலதடவை ஜீவா அவர்களின் இல்லத்துக்குச் சென்று இருக்கிறேன். பெரும்பாலும் அந்தநாள் ஜீவாவின் பிறந்த நாளாகவே இருந்துள்ளது.

“ஒருக்கா நேரே போய் வாழ்த்திட்டு வந்திருவமா… போன முறை மாதிரியே” என மறக்காமல் என்னை அழைப்பவர் மூத்தவர் தெளிவத்தை ஜோசப். அப்படி போகும் சந்தர்ப்பங்களில் எனது மகன்மாரை அழைத்துப் போய் ஜீவாவை அறிமுகம் செய்து அந்த தாத்தாவின் வரலாற்றைச் சொல்லிக் கொடுத்து இருக்கிறேன்.

“உங்கள் வயதில் பாடசாலைப் படிப்பைத் தூக்கியெறிந்துவிட்டு வந்தவர். இன்று எங்களுக்கெல்லாம் ஆசானாகத் திகழ்கிறார்” என்பது என் மகன்மாருக்கு நான் சொல்லிவைத்திருக்கும் செய்தி.

இப்படி ஆயிரம் ஆயிரமாக பின்வந்தவர்களுக்கு ஆசானாக முன்வந்தவர் மல்லிகை ஜீவா.

அவரது அயராத இலக்கிய பணிகளுக்காக இலங்கை அரசு வழங்கும் ‘சாகித்ய ரத்ன’ விருது, ‘தேசத்தின் கண்’ விருது வழங்கி கௌரவித்துள்ளதுடன், கனடா இலக்கியத் தோட்டம் வழங்கும் ‘இயல்விருது’ம் வழங்கப்பட்டது.

பல்கலைக்கழகம் ஒன்றின் கலாநிதிப் பட்டத்துக்கு எந்த அளவிலும் தகுதி குறைந்தவரல்லாத டொமினிக் ஜீவாவுக்கு யாழ். பல்கலைக்கழகம் அதனைக் கொடுக்காது, ‘கலை முதுமாணிப் பட்டம்’ கொடுக்க முன்வந்தபோது அதனை வாங்க மறுத்தார்; அதே பழைய ஜோசப் டொமினிக்காக.

அந்த கலாநிதி பட்ட மறுப்புக்குப் பின்னான காரணமாக உள்ள அரசியலை, முதுகலை பட்டத்தை மறுப்பதன் ஊடாக வெளிஉலகுக்கு கொண்டுவந்தவர் மல்லிகை ஜீவா.  தான் மண்புழுவாக இருந்ததை உணர்ந்தவர் எனும் அவரது ஓர்மம் அவருக்கு அந்த நெஞ்சுரத்தைக் கொடுத்து இருக்கிறது.

‘காலம்’ (2005 ஒக்டோபர் ) இதழுக்கு வழங்கிய நேர்காணலில் “மண்புழுவில் இருந்து மனிதனாகி வந்தேன்” என கூறி இருப்பார். மண்புழுவில் இருந்து மனிதனாக மட்டுமல்ல ஒரு மானுடனாகவும் நம்மிடையே வாழ்ந்து உயர்ந்து நிலைக்கிறார் ‘மல்லிகை’ டொமினிக் ஜீவா.

மல்லியப்புசந்தி திலகர்