பட மூலம், veriteresearch.org

1915 மே 29ஆம் திகதி கண்டியில் காஸ்ட்ல் ஹில் வீதியில் ஒரு பௌத்த ஊர்வலத்தினையொட்டி வன்முறையுடன் கூடிய ஓர் சர்ச்சை வெடித்தது. நடைபெற்ற கலவரத்தில் சோனக முஸ்லிம்கள் தாக்கப்பட்டனர். ஒரு தனிமைப்படுத்தப்பட்ட சம்பவமாக அல்லாமல் இங்கு ஆரம்பித்த வன்முறை நிகழ்வுகள் நாடுதழுவிய கலவரமாக பரவி தீவிரமடைந்ததுடன் ஒன்பது நாட்கள் நீடித்தது. இவ்வன்முறை ஐந்து மாகாணங்களுக்குப் பரவியது. முஸ்லிம்களின் 4,000 இற்கு மேற்பட்ட கடைகள் சூரையாடப்பட்டதுடன், 350 வீடுகள் மற்றும் 17 பள்ளிவாசல்கள் தீக்கிரையாக்கப்பட்டன. 25 உயிர்கள் காவுகொள்ளப்பட்டதுடன் 4 பெண்கள் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்டனர். 1915 கலவரமானது கடந்த 100 ஆண்டுகளில் நடந்தேறிய மிகமோசமான இனவன்முறையாகக் காணப்படுவதுடன் இன்று வரை முஸ்லிம்கள் மீது மேற்கொள்ளப்பட்ட மிக மோசமான வன்முறையாகவும் காணப்படுகின்றது.

இக்கலவரத்தை அடக்குவதில் பிரித்தானிய காலனித்துவ அரசு பின்பற்றிய வழிமுறை இன்று வரை கருத்து முரண்பாட்டிற்குறிய ஒரு பேசுபொருளாகவே காணப்படுகின்றது. கொடூரமான முறையில் கலவரம் அடக்கப்பட்டது என்பதுவே பரவலாக அறியப்பட்ட விவரிப்பாக காணப்படுகின்றது. ஆனால், இவ்விவரிப்பு எவ்வளவு தூரத்திற்கு முழுமையானது அல்லது காலனித்துவ அரசின் அடக்குமுறை பற்றிய வரலாறு இதனைவிட சிக்கலானதா? இவ்ஆக்கத்தில் நான் இலங்கையில் 1915ஆம் ஆண்டு முஸ்லிம்களுக்கெதிரான கலவரத்தை அடக்க பிரித்தானிய காலனித்துவ அரசு மேற்கொண்ட வழிமுறையினை ஆராய முனைகின்றேன். கலவரத்தை அடக்குவதில் பிரித்தானிய அரசு கடைபிடித்த இரண்டு கட்டங்களை விளக்குவதன் மூலம் இவ்வாக்கத்தை தொடர்கின்றேன்: செயலற்ற தன்மையிலிருந்து அத்துமீறிய பலப்பிரயோகம்.  பெரிய அளவிலான இன வன்முறைகளைத் தடுப்பதில் செயல்திறன் மிக்கதும் கணிப்பிட்ட அளவிலான சட்ட அமுலாக்கத்தினதும் தேவையின் முக்கியத் தன்மையினையும் குறுகிய வரலாற்று விபரிப்பின் அபாயங்களையும் எடுத்துக்காட்டி இக்கட்டுரை முடிவுறுகிறது.

பிரித்தானிய காலனித்துவ அரசு 1915ஆம் ஆண்டு வன்முறையின் பரவலை ஆரம்ப கட்டத்திலேயே கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரத் தவறியது. இது முஸ்லிம்களது பல எண்ணிக்கையான வீடுகள், கடைகள் மற்றும் பள்ளிவாசல்களின் அழிவுக்கும் பல உயிர் சேதங்களிற்கும் காரணமாக அமைந்தது. எவ்வாறாயினும், மரவுவழியான விபரிப்புகள் பெரும்பாலும் கலவரத்தைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர பிரித்தானிய காலனித்துவ அரசு மேற்கொண்ட கடுமையான மற்றும் மிதமிஞ்சிய பலப்பிரயோகம் பற்றிய ஒரு பரிமாண விபரிப்பாகவே காணப்படுகின்றது. இவ்விபரிப்பு கலவரத்தை அடக்க அரசாங்கம் மேற்கொண்ட கொடுமையான அடக்குமுறைகள் மற்றும் சிங்களவர்கள் பிழையாக தேசத்துரோகிகளாக அடையாளம் காணப்பட்டு தவறான முறையில் நடாத்தப்பட்ட நிகழ்வுகளிலேயே கவனத்தைக் குவிக்கின்றது. இவ்விபரிப்புக்கள் உண்மையாக இருந்த போதிலும் வன்முறை வெடித்த ஆரம்ப கட்டங்களில் பொலிஸ் மற்றும் அரசாங்கம் வன்முறை பரவாமல் கலவரத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர எதுவித தீர்க்கமான நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என்ற உண்மையை மறைக்கின்றன. பிரித்தானிய காலனித்துவ அரசு இரண்டு விதமான தோல்விகளைச் சந்தித்தது: முதலாவது – முஸ்லிம்களுக்கெதிரான வன்முறை வெடித்த ஆரம்பகட்டத்தில் அதனைக் கட்டுப்படுத்த தவறியமை, இரண்டாவது – சட்டத்திற்குப் புறம்பாக துப்பாக்கிச்சூடு நடத்தல் மற்றும் அப்பாவி சிங்கள மக்களை கைதுசெய்தல்.

அரசின் செயலற்ற தன்மை

1915 மே மாதம் வெடித்த வன்முறையை காவல்துறை மற்றும் ஏனைய அரச தரப்புகள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரத் தவறியமைக்கு இரண்டு பிரதான காரணங்களை முன்வைக்கலாம்: பாதுகாப்பு கட்டமைப்பில் காணப்பட்ட பலவீனங்கள் மற்றும் கலகக்காரர்களுக்கு உடந்தையாக இருத்தல்.

பாதுகாப்புக் கட்டமைப்பில் காணப்பட்ட பலவீனங்கள்

1915 காலப்பகுதியில் சிங்கள – பௌத்தர்கள் மற்றும் முஸ்லிம்களிற்கு இடையில் பதற்றநிலை அதிகரித்து காணப்பட்ட போதிலும் வன்முறையின் தீவிரத்தன்மை உண்மையிலேயே காவல்படை மற்றும் அரசாங்கத்தினை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. மாத்தளை எழுச்சி என்றறியப்படும் 1848ஆம் ஆண்டு ஏற்பட்ட கலவரமே 1915க்கு முன்னர் ஏற்பட்ட இது போன்ற ஒரு பாரிய அளவிலான கலவரம் ஆகும். அதனைத் தொடர்ந்து காலனித்துவ காலத்தில் குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட சிறு சிறு மோதல்களைத் தவிர பொதுவாக அமைதி நிலையே காணப்பட்டது. மாத்தளை எழுச்சி மற்றும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட மோதல்கள் அம்மாகாண நிலப்பரப்பிற்குள் அல்லது கூடியது இரண்டு மாகாண நிலப்பரப்பிற்குள் கட்டுப்படுத்தப்பட்டது. மாறாக 1915 இனக்கலவரமானது மே 29ஆம் திகதி மத்திய மாகாணத்தில் கண்டியில் ஆரம்பித்து ஜூன் 5ஆம் திகதியன்று இன்னும் நான்கு மாகாணங்களுக்கு பரவியிருந்தது. இக்கலவரம் வடமேல் மாகாணத்தில் உள்ள கல்கமுக நகரிலிருந்து தென் மாகாணத்தில் உள்ள காலி நகர் வரை சுமார் 164 மைல்கள் தூரத்திற்குப் பரவி இருந்தது.

பிரச்சினை சம்பந்தமாக முன்னெச்சரிக்கை வழங்கப்பட்டிருந்தும் காவல்துறையினர் வன்முறை பரவாமல் கட்டுப்படுத்த மேற்கொண்ட நடவடிக்கைகள் செயலூக்கம் வாய்ந்ததாக இருக்கவில்லை, மாற்றமாக வன்முறை ஏற்பட்டதும் அதற்கு எதிர்வினையாற்றுவதாகவே இருந்தது. இதற்கு இவ்வாறான வன்முறைகளைக் கட்டுப்படுத்த தயாரிப்புநிலை இல்லாமையும் பகுதியளவு காரணமாகும். மத்திய மாகாணத்திற்கான காவல்நிலையப் பொறுப்பதிகாரி வெசாக் பண்டிகையின் போது சிங்கள – பௌத்த மக்களுக்கும் சோனக – முஸ்லிம்களிற்கும் இடையில் தகராறு ஏற்பட வாய்ப்பு இருக்கின்றது என்ற முன்னறிவித்தலையும் பெற்று இருந்தார். இவ்வாறு முன்னறிவித்தல் வழங்கப்பட்டிருந்தும் காவல்நிலையப் பொறுப்பதிகாரி பள்ளிவாசலுக்கு செல்லும் நான்கு பாதைகளையும் ரோந்து பார்க்க ஒரு காவல்துறை மேலாளர் மற்றும் நான்கு கான்ஸ்டபல் உத்தியோகத்தர்களையும் மாத்திரமே நிறுத்த உத்தரவிட்டார். இவ் உத்தியோகத்தர்களால் 2,000 இற்கும் மேற்பட்ட மக்கள் தொகையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை.

கலவரம் ஏற்பட்டதும் அது பரவாமல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர எதுவிதமான செயற்திறனுள்ள திட்டங்களும் காணப்படவில்லை. இதனால், முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்கள் மற்றும் அவர்களது வீடுகள் வியாபாரநிலையங்கள் மற்றும் பள்ளிவாசல்கள் மீதான தாக்குதல்கள் ஒரு வாரகாலமாக காவல்துறையினரது எதுவிதமான தீர்க்கமான நடவடிக்கைளும் இன்றி நீடித்தது.

இனக்குழுமங்களுக்கிடையில் அதிகரித்துவரும் பதற்றநிலை மற்றும் பரந்தளவிலான முஸ்லிம்களுக்குக்கெதிரான எதிர்ப்பு உணர்வு என்பன பற்றி குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கூர்ந்த கவனம் செலுத்தத் தவறியமையும் காவல்துறையின் மந்தகரமான நடவடிக்கைக்கு ஒரு காரணமாகும். உதாரணமாக 1915 ஜனவரி மற்றும் மே மாதங்களுக்கிடையில் கரையோர சோனக -முஸ்லிம்கள் இந்து மற்றும் பௌத்த மக்களது மத ஊர்வலங்களுக்கு இடையூறு விளைவித்ததன் மூலம் அவர்களைப் பகைத்துக் கொண்டனர். மேலும், இக்காலகட்டத்தில் கணிசமான அளவு முஸ்லிம் எதிர்ப்பு பிரச்சார நடவடிக்கைகளை “சிங்ஹல ஜாதிய”[i] போன்ற உள்ளூர் பத்திரிகைகள் மேற்கொண்டன. பெப்ரவரி 1915இல் உச்ச நீதிமன்றத்தினால் கம்பளை பெரஹர வழக்கில் முஸ்லிம்களுக்குச் சாதகமாக தீர்ப்பு வழங்கப்பட்டதைத் தொடரந்து பதற்றநிலை அதிகரித்து இருந்தபோதும் இதுபோன்ற உள்ளூர் பத்திரிகைகளில் வெளியிடப்பட்ட முஸ்லிம் எதிர்ப்பு உணர்வுகளை அரசாங்கம் மேற்பார்வை செய்யத் தவறியது.

கலகக்காரர்களிற்கு உடந்தையாக இருத்தல்

வரலாற்றாசிரியர்களான சார்ளஸ் பிளாக்ஸ்டன் மற்றும் மைக்கல் ரொப்பர்ட் ஆகியோரது கருத்தின்படி, ஒரு சில காவல்துறை உத்தியோகத்தர்கள் கலகக்காரர்களுக்கு உடந்தையாக இருந்ததும் காவல்துறை வன்முறையைக் கட்டுப்படுத்துவதில் தோல்வியடைந்தமைக்கான காரணம் ஆகும். ஒரு சில காவல்துறை மற்றும் அரச உத்தியோகத்தர்கள் கலகம் மற்றும் சூரையாடல் நிகழ்ந்த சந்தர்ப்பத்தில் அதனைத் தடுக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் வெறும் பார்வையாளர்களாக  இருந்தமை மற்றும் இன்னும் சிலர் சோனகர்களை அச்சுறுத்தல், பணம் பறித்தல் போன்ற நிகழ்வுகளில் நேரடியாக ஈடுபட்டமை என்ற காரணங்களுக்காக குற்றவாளிகளாகக் கருதப்பட்டனர். உதாரணமாக, ஜூன் 1ஆம் திகதி F.P. சமரசிங்ஹ என்னும் கொழும்பைச் சேர்ந்த காவல்துறை துணை மேற்பார்வையாளர் கண்டியில் இருந்து தஞ்சம்புகுந்த ஒரு முஸ்லிம் நபரிடம் ரூபா. 558.5 பெறுமதியான மாலை, மோதிரம், காசு மற்றும் காசோலை என்பவற்றைப் பறித்தற்காக குற்றவாளியாகக் கண்டறியப்பட்டார்.[ii]  சட்ட சபையைச் சேர்ந்த முஸ்லிம் உறுப்பினர் W.M. அப்துர் ரஹ்மான் என்பவர் கலவரத்தின் போது முஸ்லிம்கள் எதிர்கொண்ட சேதங்களின் மதிப்பீட்டை தொகுத்து ஜூலை 1, 1915 அன்று காலனியின் ஆளுனரிற்கு சமர்பித்தார்.[iii] 1915 கலவரத்தினைப் பயன்படுத்தி ஒரு சில காவல்துறை உத்தியோகத்தர்கள் சில வழிகளில் இலாபம் ஈட்டியதாக ரஹ்மான் அவரது அறிக்கையில் குறிப்பிடுகின்றார். இவ்வாறு கலகக்காரர்களுக்கு உடந்தையாக இருந்ததற்கான காரணத்தை அவர் குறிப்பிடாவிடினும் பேராசை, முஸ்லிம்களுக்கு எதிரான எதிர்ப்பு உணர்வு[iv] மற்றும் பெரஹரவில் பங்குபற்றிய சிங்களவர்கள் எதிர்கொண்ட அசௌகரியங்கள் மீதான அனுதாபம் என்பவற்றின் கலவையே இதற்கான காரணங்களாக இருக்கக்கூடும்.

அரசாங்கத்தின் மிதமிஞ்சிய பலப்பிரயோகம்

அரசின் மந்தகரமான மற்றும் திறமையற்ற செயற்பாடானது, வன்முறை  ஐந்து மாகாணங்களுக்கு பரவக் காரணமாக அமைந்தது. இருந்தபோதும், ஜூன் 2ஆம் திகதியாகும் போது காலனியின் ஆளுனர், செயலாளர் மற்றும் பொலிஸ் மா அதிபர் ஆகியோர் இக்கலவரம் எல்லைகடந்து சென்றுவிட்டது, இதனை காவல்துறையினரால் மாத்திரம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியாது மற்றும் இதனைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர இராணுவத்தின் உதவியை நாட வேண்டும் என்ற தேவையை உணர்ந்தனர். காலனித்துவ நிர்வாகம் இக்கலவரமானது அரசிற்கு எதிரான பாரிய பிரச்சாரத்தின்  ஒரு பகுதி என பிழையாக சந்தேகித்தனர். இதன் காரணமாக ஜூன் 2ஆம் திகதி கலவரம் உண்டான மாகாணங்களில் இராணுவச் சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டு 1915 ஆகஸ்ட் இறுதி வரை இச்சட்டம் நீடிக்கப்பட்டது. இந்தக் கால இடைவெளியில் – முக்கியமாக ஜூன் 8 தொடக்கம் 15 வரையான நாட்களில் – பிரித்தானிய காலனித்துவ அரசு கலகத்தைக் கட்டுப்படுத்த சிங்களவர்களுக்கு எதிராக மேற்கொண்ட மிருகத்தனமான நடவடிக்கைகளே அதிகமாகப் பதியப்பட்டுள்ளது. காலனித்துவ அரசின் இச்செய்கையே கலவரத்தில் பிரதானமாக பாதிப்புக்குள்ளான இனக்குழுமம் மீது அனுதாபம் குவிவதற்குப் பதிலாக சிங்கள மக்கள் மீது அதிகப்படியான அனுதாபம் குவிவதற்குக் காரணம்.

இவ் இரண்டாம் கட்ட அடக்குமுறையில் காலனித்துவ இராணுவம் மற்றும் கலகம் ஏற்பட்ட போது நாட்டில் ஏற்கனவே பிரசன்னமாகியிருந்த பஞ்சாபி படைப்பிரிவு ஆகிய இவ்இரண்டு அரச தர்ப்பினரும் பங்குபற்றினர். நியமிக்கப்பட்ட அதிகாரிகளது பற்றாக்குறை காரணமாக “விஷேட ஆணையர்கள்” அல்லது தன்னார்வலர்கள் சேர்க்கப்பட்டு பணியில் அமர்த்தப்பட்டனர். தன்னார்வலர்களாக கொழும்பு ஊர்-காவற் பீரங்கி அங்கத்தவர்கள், சிலோன் தன்னார்வலர் படையின் அங்கத்தவர்கள் மற்றும் பெரும்பாலும் இராணுவ நடவடிக்கைகளில் எவ்வித முன்அனுபவமும் அற்ற ஐரோப்பிய தோட்ட உரிமையாளர்களும் காணப்பட்டனர். இத்தரப்பினர்கள் கலகத்தில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக வெடிமருந்துகளால் சுடுதல் (சட்டப்படி இராணுவச் சட்டத்தின் கீழ் அனுமதிக்கப்பட்டது) முதல் இன்னும் இதர சட்டத்திற்கு புறம்பான நடவடிக்கைளையும் மேற்கொண்டனர். உதாரணமாக, பஞ்சாபி படையினர் கலகத்தில் ஈடுபடாத சாதாரண குடிமக்களைக் கொடுமைப்படுத்தியது மாத்திரம் இல்லாமல் வீடு வீடாக சோதனை செய்தபோது கொள்ளையிட்டனர் எனவும் குற்றம் சாட்டப்பட்டனர்.[v] மேலும், பஞ்சாபி படையினர் அப்பாவி மக்கள் மீது பாரியளவில் கசையடி பிரயோகித்தனர் என்ற குற்றச்சாட்டும் உள்ளது.

சாதாரண பொதுமக்கள் மீது சட்டவிரோதமாக துப்பாக்கிச்சூடு பிரயோகித்தமை மற்றும் நூற்றுக்கணக்கான அப்பாவி பொதுமக்களை எவ்வித குற்றச்சாட்டுகளும் இன்றி கைதுசெய்து சிறையிலடைத்தமை ஆகியன மிகமோசமான அத்துமீறல்களாகும். கலவரத்தில் ஈடுபடுதல் அல்லது உடந்தையாக இருத்தல் என்ற சந்தேகத்தின் பேரில் 10 சிங்களவர்களை சுட்டுக்கொன்றமை அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட மிகமோசமான அட்டூழியமாகும். இந்நிகழ்விற்கு அரசாங்கத்தினால் அதன் படைகளின் அத்துமீறல்களிற்கு பொறுப்புக்கூறுவதற்காக நிறுவப்பட்ட “துப்பாக்கிச்சூட்டு விசாரணை ஆணையம்” மிகத்தெளிவான ஆதாரமாகும். அதேபோல் வன்முறை மே 29, 1915 அன்று ஆரம்பித்த போதே அதனை ஒரு இனக்கலவரமாக மாறாமல் கட்டுப்படுத்தத் தவறியமைக்கான காரணத்தைக் கண்டறிய “காவல்துறை விசாரணை ஆணையத்தையும்” காலனித்துவ அரசாங்கம்  நிறுவியது. இவ்விசாரணைகளின் எழுத்துமூல பதிவுகளில் இருந்து காலனித்துவ அரசின் ஆளுகை பற்றிய ஒரு தெளிவை அடையக்கூடியதாகவும் முடிவெடுக்கும் செயன்முறை அரசின் செயலற்ற தன்மையிலிருந்து அத்துமீறிய பலப்பிரயோகத்திற்கு மாறியதை அவதானிக்கக் கூடியதாகவும் உள்ளது.

முடிவரை

பிரித்தானிய காலனித்துவ அரசு சரியான முறையில் சரியான நேரத்தில் இயங்கத் தவறியமையினால் ஏற்பட்ட விளைவுகளில் இருந்து எமது சட்ட அமுலாக்கத்திற்கான பல சிறந்த படிப்பினைகள் உள்ளன. கலவரம் ஆரம்பித்த போதே அரசாங்கம் தீர்க்கமாக இயங்கத் தவறியமை காரணமாக கலவரத்தின் பரவலானது கட்டுப்பாட்டை இழந்ததும் அதனை அடக்க அத்துமீறிய பலப்பிரயோகத்தை அரசாங்கம் பாவித்தது. அரசாங்கம் செயலற்ற தன்மையில் இருந்து கலவரம் நன்றாகப் பரவிய பின்னர் சேதக்கட்டுப்பாட்டிற்கு கடுமையான சட்ட அமுலாக்கத்தை நாடியபோது இராணுவத்திலுள்ள தளர்வான கூறுகளை கட்டுப்படுத்துவது சாத்தியமற்றுப் போனது. இதற்கிடையில் 1915 முஸ்லிம்களுக்கெதிரான இனக்கலவரத்தின் வரலாற்று விபரிப்பானது ஒரு பரிமாணமுடையது, இதனால், இவ்விபரிப்புக்கள் முழுமையற்றது. இவ்வாறான குறுகிய விபரிப்பு பெரும்பான்மை சமூகத்தின் பாதிப்புக்கு முன்னுரிமை வழங்கும் அதேவேளை முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக நடாத்தப்பட்ட வன்முறைகளை குறைமதிப்பீடு செய்கின்றது. வரலாற்று உண்மை இதைவிட சிக்கலானது, அதாவது, காலனித்துவ அரசாங்கம் சிங்கள மக்களுக்கு எதிராக அத்துமீறிய பலப்பிரயோகம் மாத்திரம் செய்யவில்லை, அது முஸ்லிம்களையும் வன்முறைகளிலிருந்து பாதுகாக்கத் தவறியது.

ஷமாரா வெத்திமுனி

 

 

[i] Sinhala Jatiya, 9 March 1915.

[ii] A.C. Dep, ‘Ceylon Police and Sinhala-Muslim Riots of 1915’ (2001: Ratmalana), p.33.

[iii] SLNA, Lot 65, W.M. Abdul Rahiman to Chalmers, 1 July 1915.

[iv] Michael Roberts, ‘Marakkala Kolahalaya: Mentalities Directing the Pogrom of 1915’ Chapter 8, in Exploring Confrontations, (1994: Reading), p.133.

[v] E.W. Perera, Memorandum upon recent disturbances in Ceylon (1915: London), p.28.

தொடர்புபட்ட கட்டுரைகள், 1915 முஸ்லிம் எதிர்ப்பு கலவரங்கள்: பெண்களின் வகிபாகம்”, “இலங்கையில் முஸ்லிம் எதிர்ப்பு வன்முறையின் வரலாறு