பட மூலம், Twitter

முதன்மையான அரசியல் செயற்பாட்டாளர் ஒருவர் அல்லது அவருடன் இணைந்து செயற்படும் செயற்பாட்டாளர்களின் ஒரு குழுவினர் அதிகாரத்தை பெற்றுக்கொள்வதில் தமக்கு எவ்விதமான அக்கறையுமில்லை என்பது போல் பாவனை செய்யும் அதே வேளையில், மேலும் மேலும் அதிகாரத்தை பெற்றுக்கொள்ள விரும்பினால் அவர்கள் அதனை எவ்வாறு செய்துமுடிப்பார்கள்? 2018ஆம் ஆண்டின் படிப்பினைகள், அரசியல் யாப்புக்கு முரணான வழிமுறைகள் மூலம் பொது மக்களின் ஆதரவைப் பெற்றுக்கொள்ள முடியாது என்பதனை அல்லது அத்தகைய வழிமுறைகள் ஆகக்குறைந்தது ஏதேச்சாதிகார ஆட்சி தொடர்பான குரல்கள் ஊடாக அரசியல் எதிரிகள் பெருமளவுக்கு தம்பக்கம் ஆதரவை திரட்டிக் கொள்ளக்கூடிய ஆபத்தை கொண்டுள்ளன என்பதைக் காட்டுகின்றன. இன்றைய சூழ்நிலையில் வாக்குப் பெட்டிகளில் வாக்குகளை திணித்தல், வாக்காளர்களை பயமுறுத்துதல் அல்லது எண்ணிக்கையில் தந்திரங்களைக் கையாளுதல் போன்ற பாரம்பரிய தேர்தல் மோசடிகள் பெருமளவுக்கு சிரமமானவையாக இருந்து வருகின்றன. இச்செயல்கள் மேற்கொள்ளப்படும் சந்தர்ப்பங்களில் அவை முழுமையாக பதிவு செய்யப்பட்டு, பகிர்ந்து கொள்ளப்படுவதுடன், தேர்தல் பெறுபேறுகள் மீது அத்தகைய செயல்கள் களங்கம் விளைவிக்கின்றன. மேலும், அத்தகைய செயல்கள் அதிகாரத்தில் இருப்பவர்களை மிரள வைக்கக்கூடிய சட்டபூர்வத் தன்மை தொடர்பான தொடர்ச்சியான சந்தேகங்களையும் தோற்றுவிக்கின்றன.

இலங்கையில் பெருமளவுக்கு கையாளப்படும் ஊழியச் செறிவு மிகுந்த தேர்தல் செயன்முறைகள், பெறுபேறுகளை டிஜிற்றல் முறைக்கு ஊடாக தந்திரமான விதத்தில் சீராக்கம் செய்து கொள்வதற்கு எதிரான வலுவான ஒரு பாதுகாப்பாக இருந்து வருகின்றது. அரசியல் எதிரிகளை கொலை செய்வது என்பது அநேகமாக நிகழ முடியும்; ஆனால், அதுவும் கூட கண்காணிப்புடன் கூடிய செயற்பாடு, இலத்திரனியல் ஆதாரங்கள் எஞ்சியிருத்தல் அல்லது கொலை செய்யப்பட்டவரின் நெருங்கிய உறவினர் ஒருவர் இதனை அம்பலப்படுத்தக்கூடிய வாய்ப்பு, இராணுவ அல்லது அரசியல் செயற்பாட்டாளர்களை சங்கடப்படுத்தக் கூடிய நிலை என்பவற்றின் பின்புலத்தில் ஆபத்தானதாக இருந்து வருகின்றது. அரசு அல்லது அரசாங்கம் தன்னைத் தானே பாராட்டிக் கொள்ளும் பிரச்சாரங்கள் (இலங்கையில் பல தசாப்த காலம் மிக மோசமாக இடம்பெற்று வந்திருக்கும் நிலையில்) முதலாவது, இரண்டாவது மற்றும் மூன்றாவது தடவை வாக்காளர்களுக்கு மத்தியில் சிறிதளவு தாக்கத்தை மட்டுமே எடுத்து வர முடியும். 2015ஆம் ஆண்டு தேர்தலின் பின்னர் இப்பிரிவுகளைச் சேர்ந்த வாக்காளர்கள் பல மில்லியன் கணக்கில் இருந்து வருகின்றார்கள். தகுதி வாய்ந்த மேட்டுக்குடியினரின் ஆட்சி, புகழ் வெளிச்சத்தின் வட்டத்துக்குள் வராமல் பின்னணியில் இருந்து செயற்படுதல் மற்றும் தகுதிக்கு முதலிடம் அளித்தல் என்பன அரசியல் செயற்பாட்டாளர் ஒருவரின் பிரகடனப்படுத்தப்பட்ட நோக்கங்களாக இருந்து வந்தால் மாற்றங்களுக்கு இடமளிக்காத ஒரே விதமான ஆட்சியும், இழிவான, மிக மோசமான எதேச்சாதிகார போக்குகளை முகமூடிகளுக்குள் மறைத்துக் கொள்ளும் செயலும் அறவே சாத்தியமற்றவையாகின்றன – உறவினர்களுக்கு சலுகை வழங்கினால் அது அம்பலப்படுத்தப்படும்; வன்முறை எளிதில் காட்சிகளாக பதிவு செய்யப்பட்டு, அவை பகிர்ந்து கொள்ளப்படுகின்றன.

பாரிய அளவிலான ஊழல்களை மீண்டும் புதுப்பிப்பது பொதுமக்களின் நிந்தனையை எடுத்து வர முடியும்; பழைய ஆட்களுக்கு மீண்டும் நல்ல ஆதாயமிக்க பதவிகளை வழங்கினால் அடிமட்ட ஆதரவாளர்களுக்கு மத்தியில் அது கோபத்தையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்த முடியும். அத்தகைய எதிர்ப்புக்களை சமாளிப்பதும் கடினமானதாகும். இதனுடன் இணைந்த விதத்தில் புதிய அரசாங்கத்தையும், புதிய ஜனாதிபதியின் செயற்பாட்டையும் கடந்த காலத்தில் அதிகாரத்தை தக்கவைத்துக் கொண்டிருந்த அவர்களுக்கு நெருக்கமான வட்டாரங்களுடன் ஒப்பிடும் பொழுது, கடந்த காலத்தில் பின்பற்றிய தந்திரோபாயங்களை இனிமேலும் பின்பற்ற முடியாது என்பது தெளிவாகத் தெரிகின்றது. அரசியல் அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்வதற்கும், ஆட்சியை நிலைநிறுத்துவதற்கும் மற்றும் ஏதேச்சாதிகாரத்தை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதற்கும் இன்றைய சூழலில் வித்தியாசமான வகையிலான அரசியல் தொடர்பாடல் உத்தி ஒன்று தேவைப்படுகின்றது.

அதன் தோற்றம் எவ்வாறிருக்கும்?

சிவில் சமூகத்தினரின் சிந்தனைக்கென கடந்த வாரத்தில் நான் எழுதிய ஒரு குறிப்பில்  பொய்த் தகவல்கள், புதிய பிரச்சாரப் பரப்புரைகள், பல மாதங்களுக்கு மற்றும் வருடங்களுக்கு முன்னரேயே துவக்கி வைக்கப்பட்ட சமூக வலைத்தள பிரச்சாரம் என்பன எடுத்து வரக்கூடிய ஆபத்துக்களை சுட்டிக்காட்டியிருந்தேன். இச்செயற்பாடுகள் அனைத்தும் பெரும்பான்மைச் சமூகத்தின் கதையாடல்களுக்கு சாதகமான ஒரு புதிய பரப்புரை இயக்கத்தையும், ஏதேச்சாதிகார நிலைப்பாட்டையும், மிகவும் செயல்திறன் மிக்க மற்றும் வினைத்திறன் மிக்க ஆட்சி என்ற போர்வையில் ஒரு வெகுஜன கலாசாரத்தையும் ஊடுருவச் செய்யும் விடயத்தை நான் குறிப்பிட்டிருந்தேன். ஒரே நேரத்தில் பல்வேறு முனைகளிலிருந்து தாக்குதல்களைத் தொடுக்கும் ஓர் இயக்கமாக இது இப்பொழுது களத்தில் இறங்கியுள்ளது. சுவரோவியங்கள் மற்றும் இலங்கையை அழகுபடுத்தல் செயற்பாடு என்பவற்றுக்கு ஊடாக இந்த இயக்கம் ஆரம்பித்து இப்பொழுது நாடெங்கிலும் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.

மிகவும் தூய்மையான, பசுமையான ஒரு நாட்டை உருவாக்கும் கருத்துக்கு அல்லது குறிக்கோளுக்கு புத்தி சுயாதீனமுள்ள எந்த ஒரு பிரஜையும் எதிர்ப்புத் தெரிவிக்கமாட்டார்; அது தான் இங்குள்ள விடயம். அழகுபடுத்தல் என்பது ஓர் அரசியல் அழகியலாக இருந்து வருவதுடன், அதனை எந்த விதத்திலும் எதிர்ப்பது சாத்தியமற்றதாக உள்ளது. அவ்விதம் யாரேனும் அதனை எதிர்த்தால் அது உடனடியாக, எளிதாக நிராகரிக்கப்பட முடியும். அழகு என்ற பதத்தின் எதிர்ச் சொல் அசிங்கம் என்பதாகும். எவருமே அசிங்கமான அல்லது அசுத்தமான ஒரு நாட்டை விரும்புவதில்லை. கடந்த காலங்களில் அரசாங்கத்தின் கடுமையான நிர்ப்பந்தத்தின் கீழ் இந்த அழகுபடுத்தல் செயற்பாடு இடம்பெற்று வந்துள்ளது. சுவரோவியங்கள் அதன் நுட்பமான ஒரு புதிய வடிவத்தை எடுத்து வருகின்றன. இளைஞர்களினால் நெறிப்படுத்தப்படும் பிரஜைகள் இயக்கம் என வர்ணிக்கப்படும் ஓர் இயக்கத்தின் ஊடாக பழைய சுவரொட்டிகளைக் கிழித்தெறிந்து, சுவர்களைத் தூய்மைப்படுத்தி, அவற்றில் சித்திரங்கள் வரையும் செயற்பாடுகளை அரசாங்கம் இப்பொழுது கொண்டாட்டத்துடன் மேற்கொண்டு வருகின்றது. சுமார் இரு வார காலப் பிரிவுக்குள் இது ஒரு புதிய போக்காக தலையெடுத்திருப்பதுடன், ஒட்டுமொத்த நாட்டையும் ஆக்கிரமித்து வரும் ஓர் இயக்கமாக முன்வைக்கப்பட்டு, மேம்படுத்தப்பட்டு வருகின்றது. உரித்து நிச்சயித்துக் கொள்ளப்படாத பொது இடங்களில் வரையப்பட்ட சித்திரங்களின் வடிவில் சமூக வலைத் தளங்களில் அவ்வப்போது முன்வைக்கப்பட்ட பதிவுகளுக்கு ஊடாக இந்த இயக்கம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. அதனை அடுத்து, ஜனரஞ்சகமான பாடகர்களுக்குச் சொந்தமான செல்வாக்கு மிக்க சமூக வலைத்தளங்களும், அண்மையில் முடிவடைந்த ஜனாதிபதித் தேர்தலில் குறிப்பிட்ட ஒரு வேட்பாளருடன் சம்பந்தப்பட்டிருந்த ஆட்களின் சமூக வலைத்தளங்களும் ஆங்காங்கே இடம்பெற்ற இந்தப் பதிவுகளை தீவிரப்படுத்தியதுடன், அவற்றை கொண்டாடத் தொடங்கின.

ஒரு நாடு மீண்டும் பிறந்திருப்பதற்கான அல்லது புத்துயிரூட்டப்பட்டிருப்பதற்கான சான்றாக இவை முன்வைக்கப்பட்டன. அதனை அடுத்து, இலத்திரனியல் ஊடகங்கள் முதன்மை செய்தி அறிக்கைகளின் போது வீடியோக்களையும், ஒளிபரப்புக்களையும் மேற்கொண்டன. செல்வாக்கு மிக்க நபர்களின் சமூக வலைத்தளப் பதிவுகளுடன் இணைந்த விதத்தில் அரங்குக்கு வந்த இந்த வீடியோக்களின் விளைவாக இலங்கை எங்கிலும் சுவரோவியங்கள் மற்றும் பொது மக்களின் கலைப்படைப்புக்கள் என்பவற்றின் ஒரு திடீர் எழுச்சி தோன்றியது. ஜனாதிபதி அவர்களே டிசம்பர் இரண்டாம் திகதி இந்த விடயம் தொடர்பான ஒரு வீடியோவை தனது முகநூல் பக்கத்தில் பதிவேற்றம் செய்திருந்தார். இதனை எழுதும் சந்தர்ப்பத்தில் இந்த வீடியோ 189,000 பார்வைகளை பெற்றிருப்பதுடன், 25,000 எதிர்வினைகளையும், 1500 குறிப்புக்களையும், 7000 பகிர்வுகளையும் பேஸ்புக்கில் பெற்றுக்கொண்டுள்ளது. இவை அனைத்தும் அதியுயர் எண்ணிக்கை என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. சமூக வலைத்தளங்கள், ஊடகங்கள் மற்றும் பூகோள பிரதேசங்கள் அனைத்திலும் இவை பரவுகின்றன.

பொது மக்கள் கலை மற்றும் சுவர் ஓவியங்கள் என்பவற்றைக் கொண்டாடும் இந்தப் போக்குக்குள் ஆழமாக ஊடுருவிப் பார்க்கும் பொழுது, அதன் உள்நோக்கம் குறித்த நிறைய விடயங்களை எம்மால் கண்டுகொள்ள முடிகின்றது. சுவரோவியங்களைப் பொறுத்தவரையில் தென்னிலங்கையில் முச்சக்கர வண்டிகளை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் சே மற்றும் பொப் மார்லே ஆகியோரின் படங்களை இச்சுவர்களில் காண முடியவில்லை. அச்சுவரோவியங்கள் பெருமளவுக்கு இராணுவ ஆளணியினரை சித்தரித்துக் காட்டுவதுடன், போர் முடிவுக் காட்சிகளையும், சிங்கங்களையும், பௌத்த கொடியை அல்லது சிங்கள பௌத்த கருப்பொருட்களையும் சித்தரிக்கின்றன. லண்டன் இலங்கை உயர் ஸ்தானிகராலயத்தில் செயற்பட்டு வந்த சர்ச்சைக்குரிய பிரிகேடியர் உயர் ஸ்தானிகராலயத்திற்கு எதிரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த தமிழர்களின் கழுத்தை வெட்டும் விதத்தில் ஒரு சைகையை காட்டியிருந்தார். இந்தக் காட்சியும் சுவரோவியங்களில் பெருமளவுக்கு இடம்பெறுகின்றது. வனப்பு மிக்க பிடரிகளுடன் கூடிய சிங்கங்களின் படங்கள், வீரர்கள் என்ற முறையில் சித்தரிக்கப்படும் சிப்பாய்களின் படங்கள் என்பன சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து கொள்ளப்படும் புகைப்படங்களில் ஆதிக்கம் செலுத்துகின்றன. மற்றொரு தொகுதி படங்கள் அரசியல் சுவரொட்டிகளை ஒட்டும் குறிப்பிட்ட சில தனிநபர்களை – அநேகமாக ஜே.வி.பி. இயக்கத்தைச் சேர்ந்தவர்களை – சித்தரித்துக் காட்டும் படங்களாக உள்ளன.

பேஸ்புக்கிலும், டுவிட்டரிலும் இது தொடர்பான எதிர்வினை வன்முறையுடன் கூடியதாகவும், உடனடியானதாகவும் இருந்து வந்தது. சுவரொட்டிகளை ஒட்டும் ஆட்கள் மற்றும் சுவரொட்டிகள் மூலம் முன்வைக்கப்படும் அரசியல் கட்சி ஆகிய தரப்புக்கள் மிகவும் எழிலார்ந்த இலங்கையின் எதிரிகளாக சித்தரிக்கப்படுகின்றார்கள். சுவரொட்டிகளை ஒட்டுவதன் மூலம் சூழல் மாசாக்கலுக்கு பங்களிப்புச் செய்யும் ஆட்களாக அவர்கள் காட்டப்படுகின்றார்கள். அரசாங்கத்திற்கு எதிரான அரசியல் அணி திரட்டலை கோரி இவ்வாறு சுவரொட்டிகளை ஒட்டுவதன் மூலம் அவர்கள் சூழலை களங்கப்படுத்தி வருகின்றார்கள் என்ற செய்தி முன்வைக்கப்படுகின்றது. எனவே, எதிர்ப்பு அரசியல், கொள்கைகள் மற்றும் எதிர்ப்புச் செயற்பாடுகள் என்பவற்றுக்கான வெளி ஊடகங்களில் மட்டுமன்றி, வெளிக் களத்திலும் இல்லாமல் போய் கொண்டிருக்கின்றது. சுவரோவியங்கள் அனைத்துச் சுவர்களையும் அலங்கரித்தால், சுவரொட்டிகளை வெறுக்கத்தக்க, பொதுமக்களின் கலையை சீர்குலைக்கக்கூடிய ஒரு வஸ்துவாக பொது மக்கள் பார்ப்பார்கள். அவை மிகவும் வலுவான கண்டனத்திற்கும்  உள்ளாக்கப்பட முடியும். சுவரொட்டிகளில் உள்ளடக்கப்பட்டிருக்கும் சாராம்சம் மற்றும் செய்தி என்பன அலட்சியப்படுத்தப்பட முடியும். சுவரொட்டியே அநேகமாக எதிரியாக இருந்து வருகின்றது.

சுவரோவியங்களின் விடயத் தெரிவு தொடர்பாக விமர்சனத்தை முன்வைக்கும் பிபிசியின் வீடியோ ஒன்றுக்கான எதிர்வினை இதனை நன்கு எடுத்துக் காட்டுவதாக இருந்து வருகின்றது. நாடறிந்த உளவியலாளர் ஒருவர் போர் மற்றும் இராணுவமயமாக்கல் குறித்த பாரியளவிலான பகிரங்க சித்திரங்கள் பிள்ளைகளின் உள வளர்ச்சியை பாதிக்க முடியும் எனக் குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில் பிபிசி நிலையத்திற்கும், அதன் இலங்கை நிருபரான முஸ்லிம் நபருக்கும் எதிரான வன்முறையுடன் கூடிய, விசமத்தனமான எதிர்வினைகள் பகிரங்கமாக, வெறுப்பைத் தூண்டும் விதத்தில் முன்வைக்கப்பட்டிருந்தன. முழுவதும் பிரஜைகளினால் நெறிப்படுத்தப்பட்டு வரும் நாட்டை அழகுபடுத்தும் ஒரு செயற்பாட்டிற்கான ஓர் அவதூறாக இது கருதப்பட்டது. மேலும், நாட்டிற்கு சமாதானத்தை எடுத்து வந்தவர்களைக் கொண்டாடும் செயற்பாட்டை அவமதிக்கும் ஒரு செயலாகவும் இது கருதப்பட்டது. இந்தச் சுவரோவியங்களில் இருப்பதாக கூறப்படும் பன்முகத் தன்மையைக் கொண்டாடும் குழுக்களும், அவற்றை சித்திரங்களாக தீட்டுபவர்களும் அவர்களிடம் முன்னர் கேள்வி கேட்டவர்களை மிகக் கடுமையாக, வன்முறையுடன் கூடிய விதத்தில் தாக்கிய அதே நபர்களாகவே இருந்து வருகின்றார்கள். சிங்கள பௌத்தர்கள் அல்லாத மக்கள் மீது கடும் வெறுப்பை உமிழ்ந்தவர்களும் அவர்களே ஆவார்கள்.

திட்டமிட்ட விதத்தில், உத்தியோகபூர்வமாக முன்னெடுக்கப்படும் இந்தச் செயற்பாட்டில் அரைவாசிப் பகுதி பல முனைகளிலிருந்தும் ஒரே நேரத்தில் தொடுக்கப்படும் தாக்குதல்களாக இருந்து வந்தால், மிகுதிப் பகுதி இலங்கை முழுவதையும் உள்ளடக்கும் ஒரு கண்காணிப்பு செயற்பாடாக உள்ளது. அந்தச் செயற்பாடு யார் எதனைச் சொல்கின்றார், யாரிடம் சொல்கின்றார், எங்கு சொல்கின்றார், ஏன் சொல்கின்றார், எவ்வாறு சொல்கின்றார் என்ற விடயங்கள் அனைத்தையும் அதிகாரத்தில் இருப்பவர்கள் மிகவும் துல்லியமான விதத்தில் நிர்ணயித்துக் கொள்ளும் அதிகாரத்தை வழங்குகின்றது. இந்தக் கண்காணிப்பில் பெரும் பகுதி உள்முகமானதாக – அரசாங்கத்தில் இருப்பவர்களை அல்லது அரசாங்கத்துடன் நெருக்கமாக இருந்து வருபவர்களை கண்காணிக்கும் விதத்தில் – நெறிப்படுத்தப்பட்டதாக இருந்து வருகின்றது என ஒரு சிலர் வாதிட்டாலும் கூட, அது எப்படியும் ஒரு தொடர் தாக்கத்தை எடுத்து வருகின்றது. தாம் கண்காணிக்கப்பட்டு வருகின்றோம் அல்லது அவதானிக்கப்பட்டு வருகின்றோம் என்பது குறித்த அச்சம் இயல்பாகவே மாற்றுக் கருத்துக்களை பரப்புரை செய்வதனை உள்ளடக்கிய விதத்தில் மாற்றுக் கருத்துக்களில் காட்டும் ஆர்வத்தை தீவிரமான அளவில் குறைக்கின்றது.

கண்காணிப்பு மௌனத்திற்கு வழிவகுப்பதாக இருந்து வந்தால், இலங்கையை அழகுபடுத்துவதை சூழவுள்ள புதிய பிரச்சாரம், பேரினவாதத்தை கேள்வி கேட்காமல் ஏற்றுக்கொண்டு, சகஜமாக அங்கீகரிக்கும் நீண்டகால மற்றும் பாரிய உபாய ரீதியான செயற்பாட்டின் முதல் தாக்குதலாக இது வருகின்றது. வாக்காளர்கள் அரசுக்கு அடிபணிந்து செல்லும் முகவர்களாக இருந்து வரும் அதே வேளையில், தாம் எதனை இழந்திருக்கிறோம் என்பதை அறியாதவர்களாக அவர்கள் இருந்து வருகின்றார்கள்; அல்லது ஒரு பேரணியை, நாடகத்தை, இயக்கத்தை, கூட்டத்தை, திரைப்படத்தை அல்லது விரிவுரையை விளம்பரப்படுத்தும் சுவரொட்டிகளில் உள்வாங்கப்படும் எதிர்ப்பரசியலின் முக்கியத்துவத்தை அவர்கள் அலட்சியம் செய்கின்றார்கள். தற்பொழுது முன்னெடுக்கப்பட்டு வரும் சமூக மற்றும் அரசியல் செயற்பாட்டு இயக்கம் விமர்சனத்திற்கான வெளியை கணிசமான அளவில் குறைப்பதற்கும், சுவர்களில் சுவரோவியங்களை வரைவதன்  மூலம் பொது மக்களை அவற்றின் காவலர்களாக ஆக்கி, மாற்றுக் கருத்துக்களின் ஒருங்கிணைப்புக்களை தவிர்ப்பதற்கும் முயற்சிக்கின்றது. அழகூட்டல் செயற்பாட்டிற்கான பொறுப்பு இப்பொழுது பொலிஸாருக்கு வழங்கப்பட்டிருப்பதுடன், வெகு விரையில் இந்த பொதுக் கலைப் படைப்புக்களை பாதுகாக்கும் பொறுப்பும் அவர்களுக்கு வழங்கப்படும். டிஜிற்றல் இயல்பிலான எஞ்சியிருக்கும் வெளி கண்காணிப்பு மற்றும் அதன் விளைவான பதற்ற நிலைமைகள் என்பவற்றின் மூலம் கையாளப்படும்.

அது கடந்த காலத்தின் மீது கட்டியெழுப்பப்படுகின்றது. 2006 டிசம்பர் மாதத்தில் அப்போதைய பாதுகாப்புச் செயலாளர் மீது நடத்தப்பட்ட கொலைத் தாக்குதலின் துப்பாக்கித் தோட்டா அடையாளங்களை கொண்டிருந்த கொழும்பு நகர் சுவர் ஒன்றில் சுவரோவியம் ஒன்றை வரையும் பணியை விளம்பர முகவரகம் ஒன்றிடம் பாதுகாப்பு அமைச்சு ஒப்படைத்தது. அவ்விதம் தாக்குதலுக்கு உள்ளானவர் இப்பொழுது நாட்டின் ஜனாதிபதியாக இருந்து வருகின்றார்; அவருடைய அரசியல் கொள்கை விளக்க நூலின் மைய அம்சமாக சுவரோவியங்கள் இருந்து வரும் விடயம் தேசத்துக்கு அழகூட்டும் ஜனரஞ்சமான சித்திரங்களுக்கு ஊடாக வட புலத்தின் பூகோளம், யதார்த்தங்கள், மக்கள் திரள் மற்றும் அடையாளங்கள் என்பவற்றை நிர்மூலமாக்கும் செயல், அண்மையில் முடிவடைந்த ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் இனங்களுக்கிடையில் எடுத்து வந்திருக்கும் தெட்டத் தெளிவான பிரிவினையை மேலும் விரிவாக்குவதாகவே இருந்து வருகின்றது.

இந்தச் சுவரோவியங்கள் வெளிப்படுத்திக் காட்டும் விடயங்களிலும் பார்க்க, முகமூடிகளுக்குள் மறைத்துக் கொள்ளப்படும் விடயங்களே அதிக அளவில் உள்ளன. ஆனால், அவற்றை ஆழமாக ஊடுருவிப் பார்ப்பதோ அல்லது அவற்றுக்கு எதிர்க்கருத்துக்களை முன்வைப்பதோ மிகவும் ஆபத்தானதாக இருந்து வருகின்றது; அதாவது, அவ்வாறு நாம் செய்தால் பிரஜைகளிடமிருந்தே வன்முறையை எதிர்கொள்ள நேரிடும்; உயர் அரசியல் பதவிகளில் இருப்பவர்கள் அதனை செய்யத் தேவையில்லை. ஆகவே, புல்லரிக்கச் செய்யும் இந்தச் செயல் திட்டத்தின் இறுதி வெற்றியும், குறிக்கோளும் அதுவாக உள்ளது: அதாவது, எமக்கு எதிராக நாமே பயன்படுத்தப்படுகின்றோம்.

சன்ஜன ஹத்தொட்டுவ

Murals as Masks என்ற தலைப்பில் தி ஐலண்ட் பத்திரிகையில் வெளியான கட்டுரையின் தமிழாக்கம்.