பட மூலம், Colombo Telegraph

அந்த இடம் எனக்குத் தெரியும்
இப்போது இணையத்தில் உலா வருகின்ற
ஒளிப்படங்களில் இருக்கின்ற அந்த இடம்
எந்த இடம் என இனங்காண நீங்கள் துடிக்கிறீர்கள்

போர்க்குற்ற ஆணையாளர்களின்
வலுவிழந்த தொழில் நுட்பப் பிரிவினர்
கைகளைப் பிசைகிறார்கள்
அவர்களுக்கு வல்லரசு வழங்கும்
செய்மதிப் படங்களில் துல்லியம் இல்லை;
தெளிவு இல்லை;
துலக்கம் இல்லை;
விவரமும் இல்லை
எனக் குழம்புகிறார்கள்

எனினும்,

அந்த இடம் எனகுத் தெரியும்
அம்மணம்; அவலம்; திகைப்பில் மருண்டு இருண்ட கண்கள்
ஆச்சரியமாய்ப் பெய்த மழையின்
கலங்கிய நீர்

அவற்றையும் எனக்குத் தெரியும்
அந்தச் சேற்றின் நிறம் எனது கண்ணீர்

பாதி அழிந்தும் மீதி மறைந்தும் மங்கலாகத் தெரிகிற
பாலை மரத்தையும் நான் அறிவேன்
இடது புறம்
காயாமரத்தின் கீழ்க் காயாத குருதியின் மணமும்
எனக்குத் தெரியும்

அந்தப் பெண்களை இழுத்துச் செல்லும் போது
அவர்களின் உடலை
உங்கள் தேசியத்தால் உழுத ஆண்குறிகளின்
வேடிக்கைக் களிப்பின் எக்காளத்தின் மீது ஒரு பிடி மண்ணை வீசுகிறேன்

அந்த இடம் எனக்குத் தெரியும்
அதன் மண்வாசனையில் உருகும்
என் ஈரக்கால்களையும் கோபக் கண்களையும் விட
வேறென்ன ஆதாரம் உங்களுக்கு வேண்டும்?

அந்த இடம் எனக்குத் தெரியும்
எனினும்
நான் சொல்லப் போவதில்லை.

சேரன்

 

 

ஆசிரியர் குறிப்பு: 10 வருட போர் நிறைவு தொடர்பான இத்தொகுப்பில் சேரன் அவர்களின் கவிதைகள் இடையிடையே வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.


போர் நிறைவுக்குக் கொண்டுவரப்பட்டு 5 வருடமானபோது ஆரம்பிக்கப்பட்ட ‘மாற்றம்’ தளம் போரால் பாதிக்கப்பட்ட மக்கள் எதிர்நோக்கிவரும் பிரச்சினைகள் தொடர்பாக இதுவரை பல கட்டுரைகளை வௌியிட்டு வந்துள்ளது. தெரிவுசெய்யப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பைப் பார்க்க இங்கு கிளிக் செய்யவும். 10 வருடத்தையொட்டி வௌியாகும் ஆக்கங்களை இங்கு கிளிக் செய்வதன் மூலம் பார்க்கலாம்.