பட மூலம், Human Rights Watch

முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொட கைதுசெய்யப்படுவாரா என்ற விவகாரம் கடந்த சில வாரங்களாக மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்த விவகாரம் நீதித்துறையின் சுதந்திரம் குறித்து மக்கள் மத்தியில் கரிசனையை ஏற்படுத்தியுள்ளது.

அதிகாரமற்ற, உதவியற்ற மக்களின்  உரிமைகள் தொடர்ச்சியாக மீறப்படும்போது அவர்களைப் பாதுகாக்கும் நீதித்துறையின் கடமை மற்றும் அதன் சுயாதீனத் தன்மை குறித்து இந்த விவகாரம் பொதுமக்கள் மத்தியில் கரிசனையை தோற்றுவித்துள்ளது.

இலங்கை கடற்படையினரால் 11 தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு பின்னர் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பானதே இந்த விவகாரம்.

ஒழுங்கமைக்கப்பட்ட விதத்தில் கப்பம் பெறும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த குழுவினரே இந்த இளைஞர்களைக் கடத்தி படுகொலை செய்தனர் என்பது  இலங்கை குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரின் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது

இந்த விசாரணைகளின் மூலம்  இந்தச் சம்பவங்களில் கடற்படையின் முன்னாள் தளபதி தொடர்புபட்டிருப்பதும் தெரியவந்துள்ளது.

கப்பம் பெறும் நடவடிக்கையில் கடற்படையைச் சேர்ந்த குழுவினர் ஈடுபட்டிருப்பது அவ்வேளை தளபதியாக பணியாற்றிய வசந்த கரன்னாகொடவிற்கு தெரிந்திருந்தது. எனினும், அவர் அதனைத் தடுப்பதற்கு எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை என சிஐடியினர் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்துள்ளதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன. முன்னாள் கடற்படைத் தளபதி  தலையிட்டிருந்தால் 11 இளைஞர்களின் உயிர்களையும் காப்பாற்றியிருக்கலாம் என்ற கருத்தும் வெளியாகியுள்ளது.

சட்டமா அதிபர் இந்த வழக்கில் வசந்த கரன்னாகொட சந்தேகநபர் என தெரிவித்து நீதிமன்றத்தில் குற்றசாட்டுகளைத் தாக்கல் செய்யவிருந்தார்.

கடத்தல் பலவந்தமாக காணாமல்போகச்செய்யப்படுதல் மற்றும் படுகொலை ஆகியன மோசமான குற்றச்செயல்களாகும். இவ்வாறான குற்றங்களில் ஈடுபட்டவர்களை பொலிஸார் கைதுசெய்வது வழமையான நடவடிக்கையாகும்.

சட்டமும் நீதியும் பக்கச்சார்பற்ற முறையில் செயற்படும்போது இதனை விட சிறிய குற்றங்களை செய்தவர்கள் கூட கைதுசெய்யப்படுவது வழமை.

மதுபோதையில் வாகனத்தைச் செலுத்தி சிலருக்கு காயங்களை ஏற்படுத்தினார் என்பதற்காக வாகனச்சாரதியை கைதுசெய்து தடுத்து வைக்கலாம் என்பதை சில வாரங்களுக்கு முன்னரே லால்காந்த எங்களுக்கு நினைவுபடுத்தினார்.

இதேவேளை, பாரிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட நபருக்கு நீதிமன்றம் பாதுகாப்பளிக்க முடியும் என்பதையும் கடந்த வாரங்களில் இலங்கை மக்கள் அறிந்துகொண்டுள்ளனர். அட்மிரல் கரன்னாகொட தான் கைதுசெய்யப்படுவதைத் தவிர்ப்பதற்காக நீதிமன்றத்தின் உதவியை நாடினார், நீதிமன்றமும் அதற்கான அனுமதியை வழங்கியது. அரசாங்கத்தின் சார்பிலும் சட்டமா அதிபர் சார்பிலும் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல், சட்டமா அதிபர் முன்னாள் கடற்படை தளபதியை கைதுசெய்வது குறித்து ஆர்வம் கொண்டிருக்கவில்லை என தெரிவித்துள்ளார்.

பாரதூரமான குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷவும் தான் கைதுசெய்யப்படுவதைத் தவிர்ப்பதற்காக நீதிமன்றத்தின் அனுமதியைப் பெற்றுள்ளார்.

முன்னாள் கடற்படைத் தளபதி மற்றும் தற்போதைய முப்படைகளின் பிரதானி ஆகியோரும் இந்தச் சலுகைகளை ஓரளவிற்கு அனுபவித்துள்ளனர். முப்படைகளின் பிரதானி கைதுசெய்யப்பட்டு சிறிது நாட்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் பிணையில் விடுதலையானார்.

கடந்த வாரம் சண்டே ஒப்சர்வர் வசந்த கரணாகொடவின் சம்பவம் மற்றும் அவரை கைதுசெய்வதில்லை என்ற உயர் நீதிமன்றத்தின் முடிவு மக்களின் மனதில் ஏற்படுத்தக்கூடிய தாக்கம் குறித்து கட்டுரையொன்றை வெளியிட்டிருந்தது. அதன் பின்னர் இணையத்தளமொன்றும் அதன் தொடர்ச்சியை வெளியிட்டிருந்தது. இந்த இரு ஊடகங்களும் சட்டத்தின் முன்னர் அனைவரும் சமம் என்ற சட்டத்தின் அடிப்படை கொள்கை மீறப்படுவதற்கு ஜனாதிபதியும் சட்டமா அதிபர் திணைக்களமும் நேரடி காரணம் என  தெரிவித்திருந்தன.

இந்தத் தகவல் உண்மையானால், இலங்கையில் நீதித்துறை மற்றும் மக்களின் உரிமைகள் குறித்த கலந்துரையாடல்களை மீண்டும் ஆரம்பிக்கவேண்டிய தருணம் வந்துள்ளது. இலங்கையின் ஜனநாயகம் ஆபத்திற்குள்ளாகியுள்ள இந்தத் தருணத்தில் நீதித்துறையின் சுதந்திரமும் (குறிப்பாக உச்சநீதிமன்றம்) சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஸ்தாபன ரீதியிலான சுதந்திரத்தை பாதுகாப்பதும்  ஜனநாயகம் மற்றும் மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் பரந்துபட்ட முயற்சிகளுடன் தொடர்புபட்டுள்ள விடயங்களாகும். அதிகாரம் மிக்க மனிதர்களான கோட்டபாய ராஜபக்‌ஷ ரவீந்திர விஜயகுணரத்ன, வசந்த கரன்னாகொட ஆகியோர் விடயத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள விட்டுக்கொடுப்புகள் மூன்று விடயங்களை புலப்படுத்தியுள்ளன.

முதலாவது, நீதிமன்றங்கள் அதிகாரம் உள்ளவர்கள் விடயத்தில் சட்டத்தின் அடிப்படை விதிகளை இறுக்கமாக பின்பற்றுவதை தவிர்க்கின்றனவா என்ற கரிசனை எழுந்துள்ளது.

இரண்டாவது, பாதிக்கப்பட்டவர்களைப் பாதுகாப்பது மற்றும் சட்டம் வலுவானவர்கள் முன்னிலையில் மன்றியிடாததை உறுதி செய்வது ஆகிய நீதிமன்றங்களின் ஸ்தாபன ரீதியிலான கடப்பாடுகள் வலுவிழக்கின்றனவா என்ற அச்சம் உருவாகியுள்ளது.

மூன்றாவது, பாதிக்கப்பட்டவர்கள் அதிகாரம் உள்ளவர்களுக்கு எதிராக நீதியைக் கோரும் வேளை நீதிபதிகளினால் மீண்டும் பாதிப்பினை எதிர்கொள்கின்றனரா என்ற அச்சமும் எழுந்துள்ளது.

இந்த விடயங்களை சுட்டிக்காட்டுவதன் மூலம் இலங்கையின் நீதித்துறையின் திறன் மற்றும் முழுமையான அநீதிகளை எதிர்கொள்ளும் எங்கள் சமூகத்திற்கான இறுதி நீதியை உறுதிசெய்வதில் அதன் பங்களிப்பு குறித்து எந்த அவமதிப்பையும் செய்வதற்கு நான் முயலவில்லை.

கடந்த வருடம் நாடு அரசியல் நெருக்கடியை எதிர்கொண்டவேளை நீதிமன்றம் ஒருமித்த குரலில் வழங்கிய தீர்ப்பின் போது அதன் சுயாதீனத் தன்மையையும் நேர்மையையும் நான் வெளிப்படையாக பாராட்டியுள்ளேன்.

நீதியில் பக்கச்சார்பின்மை குறித்த நீதித்துறையின் அர்ப்பணிப்பு என்ற விவகாரம் 2018 டிசம்பரில் நீதிமன்றம் வெளியிட்ட தீர்ப்பின் சட்ட கோட்பாட்டுடன் நேரடியாக தொடர்புபட்டுள்ளது என்பதனாலலேயே நான் தற்போது இந்த விவகாரம் குறித்து கருத்து வெளியிடுகின்றேன். பிரதம நீதியரசர் நளின் பெரேரா எழுதியதாக பலர் கருதும் அந்தத் தீர்ப்பு சட்டத்தின் ஆட்சியே அடிப்படை நெறிமுறை கோட்பாடு என்பதையும் அதன் மீதே எங்களின் அரசமைப்பு கட்டியெழுப்பட்டுள்ளது என்பதையும் தெளிவாகத் தெரிவிக்கின்றது.

சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதே சட்டத்தின் ஆட்சி கோட்பாட்டில் பிரதான கோட்பாடாகும். இது சட்டம் எந்தவித அச்சமோ ஆதரவோ இன்றி – மன்னர் – சாதாரண குடிமக்கள் என்ற வேறுபாடின்றி – இருப்பவர்கள் இல்லாதவர்கள் என்ற பாகுபாடின்றி – அதிகாரம் படைத்தவர்கள் – அதிகாரமற்றவர்கள் என்ற வேறுபாடின்றி – அனைவருக்கும் சமமாக பிரயோகிக்கப்படுவதை உறுதி செய்கின்றது.

அரசாங்கத்தின் சக்தி வாய்ந்த ஆணவம் மிக்க கையாட்களின் கண்மூடித்தனமான நடவடிக்கைகளால் தங்கள் உரிமைகளை இழக்கும் அதிகாரமற்ற மக்களுக்கான ஒரே பாதுகாப்பாக மிகக்கடுமையான சுதந்திர நீதித்துறையே காணப்படுகின்றது.

சட்டம் மற்றும் நீதியென்ற பேரில் நீதியைப் பாழடிப்பதற்கான அனைத்து வழிமுறைகளும் அதிகாரம் மிக்கவர்களிடம் உள்ளன என்பதையும் நீதித்துறை அறிந்துவைத்திருக்கவேண்டும்.

கோட்டபாய ராஜபக்‌ஷவிற்கும் வசந்த கரன்னாகொடவிற்கும் வழங்கப்பட்ட நீதித்துறை சலுகைகள் இலங்கையில் நீதி குறித்த கவலைகளை உருவாக்கியுள்ளன. அவர்கள் இருவர்களிடம் காணப்பட்ட சட்ட வளங்கள் மற்றும் பொருளாதார வளங்கள் காரணமாக மாத்திரம் தங்களுக்கு சாதகமான தீர்ப்புகளை பெறமுடிந்தது என தெரிவிக்க முடியாது. ஊடகங்கள் தொடர்ச்சியாக சுட்டிக்காட்டி வந்துள்ளது போன்று அவர்களுக்கு அரச கட்டமைப்பிற்குள் இயங்கும் வலையமைப்புகளின் ஆதரவும் பாதுகாப்பும் உள்ளது. இந்த வலையமைப்புகள் அரசியல் கட்டமைப்பில் மிகவும் வலுவானவர்களாக காணப்படுபவர்களையும், வர்த்தக சமூகத்தின் மிக முக்கிய நபர்களையும், சட்ட அமுலாக்கல் துறையின் சில அதிகாரிகளையும் இணைக்கின்றன. இந்த வலையமைப்புகள் தங்கள் தனிப்பட்ட அரசியல் நலனிற்காக நீதித்துறையை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தக்கூடிய அதிகாரம் மிக்கவர்களின் புதிய கூட்டணியைக் கொண்டுள்ளன.

வசந்த கரன்னாகொடவின் வழக்கு நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்ட அன்றைய தருணத்தில், சக்திவாய்ந்த வலுவான கூட்டணிக்கு எதிராக நீதி கோரும் அதிகாரமற்றவர்களிற்கு நீதி எவ்வாறு மறுக்கப்படுகின்றது என்பது புலனாகியது. இந்த வழக்கில் ஒருவராக ஆஜரானவர் சரோஜினி நாகநாதன். இவர் கடற்படையினரால் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்ட இளைஞன் ஒருவரின் தாய். இந்த வழக்கில் ஆஜரான இன்னொருவர் முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட. இவருக்கு வர்த்தக சமூகத்தின்  செல்வாக்கு மிக்க சிலரும், அரசாங்கத்தின் சிலரும் ஆதரவளித்தனர் போல தோன்றியது.

இருவருக்கும் எவ்வளவு அதிகாரம் உள்ளது என சிந்தித்தால் – அது பாரிய வித்தியாசத்தைக் கொண்டதாகக் காணப்படுகின்றது. இந்த அதிகார சமநிலையற்றதன்மை நீதிமன்றத்தில் காணப்படும் வேளை இவ்வாறான வழக்குகளில் நீதிபதிகள் வெளிப்படுத்தவேண்டிய உணர்வுபூர்வ தன்மை என்பது நீதிபதிகள் மத்தியில் மனச்சாட்சிக்கும் ஆழ்ந்த சிந்தனைக்குமான கருப்பொருளாக அமையும் என எதிர்பார்ப்போம்.​

நீதித்துறையின் கவனத்தை ஈர்க்கவேண்டிய மற்றொரு விடயமும் உள்ளது. கடந்த பல வருடங்களாக மனித உரிமை மீறல்களுக்காக நீதித்துறையிடம் நீதி கோரிய தாய்மார்களும் தந்தைமார்களும் மனைவிமார்களும் பிள்ளைகளும் வறியவர்களாவும் எங்கள் தேசத்தின் குறைந்த சலுகைகளை அனுபவிப்பவர்களாகவும்  அரசாங்கத்தினாலேயே நீதி மறுக்கப்பட்டவர்களாக உள்ளதையும் நீதவான் நீதிமன்றம் முதல் உச்ச நீதிமன்றம் வரை உள்ள நீதிபதிகள் கருத்திலெடுத்திருப்பார்கள் என நான் நிச்சயமாக நம்புகின்றேன்.

பல தசாப்தங்களாக வலுவான ஜனாதிபதி  மற்றும் நாடாளுமன்றத்திலிருந்து அவர்களிற்கு நீதி கிடைக்காததன் காரணமாகவே அவர்கள் நீதித்துறையிடமிருந்து நீதிக்காக பிரார்த்திக்கின்றனர்.

அவர்களுக்கு நீதி கிடைப்பதை எங்கள் அரச ஸ்தாபனங்கள் திட்டமிட்டு தடுத்துள்ளன என்பது வெளிப்படையான விடயம். இதன் காரணமாக தற்போதைய அரசாங்கம் – பாதிக்கப்பட்ட மக்களுக்கு – தனது பதவிக்காலத்தின் முதல் இரண்டு வருடங்களில் – தற்போது அவர்களுக்கு நீதியை மறுக்காத நீதித்துறை உள்ளது என தெரிவித்து வந்தது.

இவ்வாறான வாக்குறுதிகள் வழங்கப்பட்ட போதிலும் நீதிமன்றத்திற்குச் சென்று நீதி கோருவது என்பது பாதிக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் பாதிப்பை எதிர்கொள்ளும் அனுபவமாக மாறியுள்ளது என்பதை நாங்கள் பார்க்கக்கூடியதாக உள்ளது.

அப்படியானால்  இதன் உண்மையான அர்த்தம் என்னவென்றால் – நீதிக்காக நீதிமன்றம் வரும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தவர்களுக்கு அது இன்னொரு மனவேதனையை ஏற்படுத்தும் விடயமாக அமைந்துள்ளது.

லசந்த விக்கிரமதுங்க படுகொலை, பிரதீப் எக்னலிகொட காணாமலாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டமை, 11 இளைஞர்கள் கடத்தப்பட்டமை (இதில் திருமதி நாகநாதனின் மகனும் ஒருவர்) போன்ற சம்பவங்கள் நீதிபதிகள் மத்தியில் ஆராயப்படும் சிந்திக்கப்படும் விடயங்களாக காணப்படக்கூடாதா? நான் நினைக்கின்றேன் நிச்சயமாக அவை அவர்கள் மத்தியில் பேசப்படும் விடயமாக காணப்படவேண்டும். ஏனென்றால், இந்தச் சம்பவங்களுடன் தொடர்புபட்ட நீதி என்பது அதிகாரம் மிக்கவர்களினதும் நீதியை மறுக்க முயலும் வலுவானவர்களின் வலுவான கூட்டணியினதும் அரசியல் அபிலாசைகளுடனும், பின்னிப்பிணைந்துள்ளது.

இலங்கையின் நீதி அமைப்பு புதிய அச்சுறுத்தலை எதிர்கொள்கின்றது என தெரிவிப்பது மிகையானதில்லை. ஏனென்றால், நீதி என்ற அடிப்படை விடயம் தற்போது அளவுக்கதிகமாக அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக அதிகாரத்திற்கும் நீதிக்கும் இடையிலான இடைவெளி மங்கலாக்கப்பட்டுள்ளது.

தங்களின் சட்ட வாதத்தினால் நாட்டின் முக்கிய பெரும் பிரமுகர்களைக் காப்பாற்றும் ஜனாதிபதி சட்டத்தரணிகளும் இது குறித்து விவாதிக்கவேண்டும். என்றாவது ஒரு நாள் இந்த ஜனாதிபதி சட்டத்தரணிகளில் ஒருவராவது அதிகாரம் மிக்கவர்களின் வலுவான கூட்டணிக்கு எதிராக நீதி கோரும் தனியான – ஆதரவற்ற தாய்மார்களுக்காக ஒரு அரை நாளாவது ஆஜராவார்கள்.

நீதியினை பின்பற்றி வாழ்பவர்கள் நீதி என்பது மனச்சாட்சியுடன் தொடர்புடையது என்பதை வெளிப்படுத்தும் நாளாக அந்த நாள் அமையும்.

பேராசிரியர் ஜயதேவ உயன்கொட எழுதி சண்டே ஒப்சர்வர் பத்திரிகையில் “Justice, between the Powerful and the Powerless” என்ற தலைப்பில் வெளியான கட்டுரையின் தமிழாக்கம்

ஆசிரியர் குறிப்பு: தொடர்புபட்ட கட்டுரை, 11 பேர் கடத்தலும் கடற்படைக் கொலையாளிகளும்டி.கே.பி. தசநாயக்க இராணுவ வீரரா? அல்லது கொலையாளியா?