பட மூலம், Colombo Telegraph

இலங்கையின் மூன்று பிரதான அரசியல் தலைவர்களான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,  பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான மஹிந்த ராஜபக்‌ஷ ஆகியோர் வருட இறுதியில் நடத்தப்படவேண்டியிருக்கும் ஜனாதிபதித் தேர்தலுக்கு தங்களது கட்சிகளைத் தயார்படுத்திக்கொண்டிருக்கும் அதேவேளை, நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிப்பது பற்றியும் கருத்துக்களை வெளியிட்டுக்கொண்டிருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது.

சில தினங்களுக்கு முன்னர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முக்கிய தலைவர்களுடனான சந்திப்பொன்றின்போது எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிப்பதற்கு தனது முழுமையான ஆதரவை வெளிப்படுத்தியதாக செய்திகள் வெளியாகியிருந்தன. ஜனாதிபதி ஆட்சிமுறையின் உறுதியான ஆதரவாளராக விளங்கிவரும் ராஜபக்சவிடமிருந்து இத்தகைய கருத்தொன்று இப்போது வந்திருப்பதன் பின்னணியில் இருக்கக்கூடிய வியூகம் பற்றி அரசியல் வட்டாரங்களில் ஊகங்கள் கிளம்பியிருக்கின்றன.

அரசியலமைப்பு பேரவையின் செயற்பாடுகள் தொடர்பாக நாடாளுமன்றத்தில் அண்மையில் நடைபெற்ற சபை ஒத்திவைப்புவேளை விவாதத்தில் உரையாற்றியபோது ஜனாதிபதி சிறிசேனவும் ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிப்பதை இன்னமும் தான் உறுதியாக ஆதரிப்பதாகவும் அதைச்செய்யவேண்டியது நாடாளுமன்றத்தின் பொறுப்பு என்றும் கூறியிருந்தார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் 2015 ஜனாதிபதித் தேர்தலின்போது நாட்டு மக்களுக்கு அளித்த வாக்குறுதிக்கு இணங்க ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிப்பதற்கான தனது விருப்பத்தை சில தினங்களுக்கு முன்னர் வெளிப்படுத்தியிருந்தார். ஜனாதிபதித் தேர்தலில் அன்றைய எதிரணியின் பொது வேட்பாளரை ஆதரிப்பதற்கு காலஞ்சென்ற மாதுளுவாவே சோபித தேரர் முன்வைத்த பிரதான நிபந்தனைகளில் ஜனாதிபதி ஆட்சிமுறை ஒழிப்பும் ஒன்று என்றும் விக்கிரமசிங்க நினைவுபடுத்தினார்.

மூன்று பிரதான தலைவர்களும் அவர்களுக்கு இடையில் இருக்கக்கூடிய வேறுபாடுகளுக்கு அப்பால் ஜனாதிபதி ஆட்சிமுறை ஒழிப்பை இன்றைய சந்தர்ப்பத்தில் விரும்புவதாகக் காட்டிக்கொள்வதற்கு வெவ்வேறு காரணங்களே இருக்கின்றன என்பதில் சந்தேகமில்லை. ஆனால், அந்த ஒரு விவகாரத்தில் மாத்திரம் அவர்கள் மூவரும் ஒரு புள்ளியில் சந்திப்பதாகத் தோன்றுகின்ற நிலைவரம் ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிப்பதற்கு உருப்படியான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதற்கு அவர்கள் ஒருமித்து வழிகாட்டுவார்களா என்ற கேள்வியை ஐயுறவுடன் எழுப்புகிறது.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதியின் மட்டுமீறிய அதிகாரங்களை கணிசமானளவுக்கு குறைப்பதற்கு வழிவகுத்த அரசியலமைப்புக்கான 19ஆவது திருத்தத்தை வரைவதில் முக்கிய பங்கையாற்றியவரான அரசியலமைப்புச்சட்ட நிபுணரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கலாநிதி ஜயம்பதி விக்கிரமரத்ன ஜனாதிபதியினதும் பிரதமரினதும் எதிர்க்கட்சித்தலைவரினதும் உதவியுடனும் ஒத்துழைப்புடனும் ஜனாதிபதி ஆட்சிமுறை ஒழிக்கப்படவேண்டும் என்று அழைப்பு விடுத்திருக்கிறார்.

ஜனாதிபதி சிறிசேனவும் முன்னாள் ஜனாதிபதி ராஜபக்‌ஷவும் ஜனாதிபதி ஆட்சிமுறை ஒழிப்புக்கு இணங்கியிருக்கிறார்கள். இந்தச் சந்தர்ப்பத்தை இலங்கை பயன்படுத்திக்கொள்ளவேண்டும் என்று கடந்தவாரம் இராஜகிரியவில் ஊடகவியலாளர்களிடம் கலாநிதி விக்கிரமரத்ன கூறினார். பிரதமர் விக்கிரமசிங்கவும் கூட ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிப்பதற்கு இணங்கியிருக்கிறார். இந்தச் சூழ்நிலையைச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு சாத்தியமானளவு விரைவாக அரசியலமைப்புச் சீர்திருத்தங்களைக் கொண்டுவரவேண்டும். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக இதைச் செய்யமுடியும். முதற்தடவையாக நாட்டின் மூன்று பிரதான அரசியல் தலைவர்களும் ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிப்பதற்கு இணங்கியிருக்கிறார்கள் என்றும் கலாநிதி விக்கிரமரத்ன தெரிவித்தார்.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிப்பதை தனது பிரதான வாக்குறுதியாக மக்கள் முன்னிலையில் வைத்து தேர்தலில் வெற்றிபெற்று ஜனாதிபதியாக பதவிக்கு வந்தவர் மைத்திரிபால சிறிசேன. கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் பதவிப்பிரமாணம் செய்த பின்னர் அங்கிருந்து நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் இன்னொரு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்று சூளுரைத்த அவர் இப்போது ராஜபக்‌ஷாக்களின் புதிய கட்சியான பொதுஜன பெரமுனவுடன் கூட்டுச் சேர்ந்துகொண்டு அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராகக் களமிறங்க ஆசைப்படுகிறார்.

ஆனால்,  ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியுடன் கூட்டுச் சேருவதற்குத் தயாராயிருக்கும் பொதுஜன பெரமுனவின் முக்கிய தலைவர்கள் குறிப்பாக தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்‌ஷ ஜனாதிபதி சிறிசேனவை வேட்பாளராக்கும் யோசனையை திட்டவட்டமாக நிராகரித்துவிட்டனர். சிறிசேனவை அமைக்கப்படக்கூடிய கூட்டணியின் வேட்பாளராக்கினால் பொதுஜன பெரமுனவின் சார்பில் வேறு வேட்பாளர் களமிறக்கப்படுவார் என்றும் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரான பசில் எச்சரிக்கை வேறு விடுத்ததயைும் காணக்கூடியதாக இருந்தது.

அதேவேளை, மஹிந்த ராஜபக்‌ஷவைப் பொறுத்தவரை எவராவது ஒரு ராஜபக்‌ஷவைத் தவிர வேறு ஒருவரை தங்களது முகாமின் ஜனாதிபதி வேட்பாளராக்குவது குறித்து நினைத்துப்பார்க்கவும்மாட்டார். அதனால், இரண்டாவது பதவிக்காலத்துக்கும் ஜனாதிபதியாக வருவதற்கு தான் கொண்டிருக்கும் விருப்பம் நிறைவேறுவதற்கான வாய்ப்பு இல்லை என்பதை உணர்ந்துகொண்டதனாலேயே ஜனாதிபதி சிறிசேன ஜனாதிபதி ஆட்சிமுறைக்கு ஆதரவாக நாடாளுமன்றத்தில் தெரிவித்ததாக சில அரசியல் ஆய்வாளர்கள் அர்த்தம் கற்பிக்கிறார்கள்.

பிரதமர் விக்கிரமசிங்கவைப் பொறுத்தவரை அவரை மீண்டும் ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தினால் வெற்றி பெறும் சாத்தியம் குறித்து அவரின் கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் பலருக்கும் பலத்த சந்தேகம். ஏற்கெனவே சந்திரிகா குமாரதுங்கவிடமும் மஹிந்த ராஜபக்‌ஷவிடமும் இரு தடவைகள் ஜனாதிபதித் தேர்தல்களில் தோல்விகண்ட விக்கிரமசிங்க அடுத்த இரு ஜனாதிபதித் தேர்தல்களில் எதிரணியின் பொதுவேட்பாளர்களுக்கு விட்டுக்கொடுத்து போட்டியில் இருந்து ஒதுங்கிக்கொண்டார். மீண்டும் ஒரு தடவை வேறு ஒரு பொதுவேட்பாளருக்கு ஆதரவளிக்குமாறு பிரதமரால் ஐக்கிய தேசியக் கட்சியினரைக் கேட்டமுடியாது. அத்துடன், அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் அவரின் அரசியல் எதிர்காலத்தை தீர்மானிக்கும் என்பது நிச்சயம். தான் போட்டியில் இருந்து ஒதுங்கி தனது கட்சியின் வேறு ஒரு தலைவரை வேட்பாளராக்கினாலும் சரி, தானே போட்டியிட்டு வெற்றிபெற முடியாமல் போனாலும் சரி விக்கிரமசிங்கவின் தலைமைத்துவம் ஆபத்துக்குள்ளாகும். அத்தகையதொரு இடர்மிக்க சவாலை எதிர்நோக்கியிருக்கும் நிலையிலேயே ஜனாதிபதி ஆட்சிமுறை ஒழிப்பு பற்றி அவரிடமிருந்து கருத்து வெளிவந்திருக்கிறது.

மஹிந்த ராஜபக்‌ஷவைப் பொறுத்தவரை, அரசியலமைப்புக்கான 19ஆவது திருத்தம் மூன்றாவது தடவை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியாதவாறு அவரைத் தடுக்கிறது. தனது குடும்பத்தவர்களில் ஒருவரே ஜனாதிபதி வேட்பாளராக வேண்டும் என்பதில் வெளிப்படையாகக் கூறாவிட்டாலும் உறுதியாக இருக்கும் அவர் தனது மூத்த மகனான நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷவின் வயது காரணமாக அவரை வேட்பாளராக்க முடியாமல் இருக்கிறார். கடந்த வருடம் புதுடில்லிக்கு விஜயம் மேற்கொண்டபோது அங்கு வைத்து அளித்த பேட்டியொன்றில் ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளர் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர் தனது மகனுக்கு இன்னும் 35 வயதாகவில்லை என்றுதான் முதலில் சொன்னார். பிறகுதான் சகோதரர் கோட்டபாய ராஜபக்‌ஷவின் பெயரைக் குறிப்பிட்டார். இதிலிருந்து அவரின் முன்னுரிமைக்குரிய விருப்பத்தை புரிந்துகொள்ளமுடியும்.

சகோதரர்களில் ஒருவரை ஜனாதிபதி வேட்பாளராகத் தெரிவதிலும் பிரச்சினை இல்லாமல் இல்லை. முன்னாள் பாதுகாப்புச் செயலாளரான கோட்டபாயவின் அமெரிக்கப் பிரஜாவுரிமை ஒரு பிரச்சினையாக இருக்கின்றது. அந்தப் பிரச்சினைதான் தீர்ந்துவிடுமென்று வைத்துக்கொண்டாலும் இராணுவப் பின்னணிகொண்ட அவரை வேட்பாளராக்குவதற்கு எடுக்கப்படக்கூடிய முடிவை மஹிந்த ராஜபக்‌ஷவுடன் அணிசேர்ந்துநிற்கும் பலர் விரும்பவில்லை. மூத்த சகோதரர் முன்னாள் சபாநாயகர் சமால் ராஜபக்‌ஷவும் கூட ஜனாதிபதியாகுவதற்கு தனக்கு இருக்கின்ற ஆசையை மறைக்கவில்லை.

இத்தகைய பின்புலத்தில் எழக்கூடிய சிக்கல்களைத் தவிர்ப்பதற்காக ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிப்பதை மஹிந்த ராஜபக்‌ஷ இப்போது விரும்பியிருக்கக்கூடும் என்று வேறு சில அரசியல் அவதானிகள் அபிப்பிராயப்படுகிறார்கள். அதாவது, நிறைவேற்று அதிகார ஜனாதிபதிப் பதவியை ஒழித்துவிட்டால் நிறைவேற்று அதிகாரத்துடன் கூடிய பிரதமர் பதவிக்கு வந்து முழு அதிகாரத்துடன் தனக்கு மேல் எவரும் இல்லாதநிலையில் ஆட்சிசெய்யலாம் என்று அவர் நினைக்கிறார் போலும். அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் சுதந்திர கட்சியுடன் கூட்டணி அமைத்தால் என்ன அமைக்காவிட்டால் என்ன பொதுஜன பெரமுனவினால் பெருவெற்றியைப் பெற்று ஆட்சியமைக்கமுடியும் என்று மஹிந்த நம்புகிறார். 2018 பெப்ரவரி உள்ளூராட்சி தேர்தல் முடிவுகள்தான் அந்த நம்பிக்கைக்கு அடிப்படையாகும்.

இவ்வாறாக ஜனாதிபதி ஆட்சிமுறை ஒழிப்புக்கு ஆதரவளிப்பதற்கு மூன்று முக்கிய அரசியல் தலைவர்களுக்கு ஒவ்வொரு உடனடிக்காரணங்கள் இருக்கின்றன என்றே தோன்றுகிறது.

ஆனால், அவர்கள் மூவரும் அதற்காக அரசியலமைப்புத் திருத்தம் ஒன்றைக்கொண்டுவருவதற்கு இணங்குவார்களா? சர்வஜன வாக்கெடுப்பொன்றில் இந்த விடயத்துக்காக மூவரும் மக்களிடம் ஆதரவைக்கேட்டு ஒன்றித்து நிற்பார்களா? அல்லது கடந்த கால்நூற்றாண்டு காலமாக ஜனாதிபதி ஆட்சிமுறை ஒழிப்பு பற்றி வெறுமனே பேசியதைப்போன்று இப்போதும் பேசிவிட்டு நாளடைவில் எல்லாவற்றையும் மறந்துவிடுவார்களா? கடந்த கால அனுபவம் இந்தக் கேள்வியை தவிர்க்கமுடியாமல் கேட்டவைக்கிறது.

வீ. தனபாலசிங்கம் எழுதி வீரகேசரி வாரவெளியீட்டில் வெளிவந்த கட்டுரை.