வேலை முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த ஊடகவியலாளர் சுப்பிரமணியம் ராமச்சந்திரன் காணாமலாக்கப்பட்டு இன்றோடு 12 வருடங்களாகின்றன. இராணுவச் சோதனைச் சாவடியிலும், முகாம்களிலும் அவர் தடுத்து வைக்கப்பட்டிருந்தமைக்கான நேரில் கண்ட சாட்சியங்கள் இருந்த போதிலும், இன்று வரை அவரது நடமாட்டம் பற்றி அறியமுடியவில்லை. நாளாந்தம் மகனின் வருகைக்காக அவரது வயதான பெற்றோர் காத்திருந்து காத்திருந்து அவருக்கு என்ன நேர்ந்தது என்று அறியாமலேயே கடந்த வருடம் உயிரிழந்திருந்தார்கள். போரின்போது இராணுவத்தினராலும், வேறு துணை இராணுவக் குழுவினராலும் இழைக்கப்படும் உரிமை மீறல்கள் தொடர்பாக யாழ்ப்பாணத்தைத் தளமாகக் கொண்டு அறிக்கையிடுவதைத் தொடர்ந்த ஒரு சில ஊடகவியலாளர்களுள் ராமச்சந்திரனும் ஒருவராவார்.

காணாமலாக்கப்பட்டதன் பின்னர் காணாமலாக்கப்பட்டவருக்கு என்ன நேர்ந்தது என்பதை அறிவதற்கான சாட்சியமும், நேரில் கண்ட சாட்சியங்களும் உள்ள ஒரு சில சம்பவங்களில் ராமச்சந்திரனின் சம்பவமும் ஒன்றாகும். காணாமல்போய் 6 வருடங்களின் பின்னர் 2013இல் குறிப்பிட்டதொரு இராணுவ முகாமில் அவரைக் கண்ட சாட்சியங்கள் இருக்கின்றன. ஆனால், இன்று வரை அவருக்கு என்ன நேர்ந்தது என்பதை மறைத்து வைத்தே ராமச்சந்திரனின் பெற்றோரைக் கொன்றிருக்கிறது இந்த அரச இயந்திரம்.

சுப்பிரமணியம் ராமச்சந்திரன் காணாமலாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக மாற்றம் பதிவுசெய்திருக்கும் வீடியோ கீழே தரப்பட்டுள்ளது.