படம் | Sanka Vidanagama, sankav16mm

“நான் பொது வேட்பாளராக நிற்பதற்கு தயார். நாங்கள்  குறிப்பிட்டுள்ள  நியதிகளின்படி  மக்கள்  வாக்களிக்க வேண்டும். பொதுவேட்பாளராக யார் வேண்டுமானாலும் நிற்கலாம். அதற்கு எந்தத் தடையுமில்லை. முன்னாள் பிரதம நீதியரசராக இருக்கலாம், முன்னாள் ஜனாதிபதியாக இருக்கலாம்.

“இலங்கைக்கு எதிராக  சர்வதேச சுயாதீன விசாரணையை நான் ஏற்றுக்கொள்கின்றேன். குற்றங்கள் செய்யவில்லை என்றால் சாட்சியங்களின் மூலம் அதனை உறுதிப்படுத்த வேண்டுமென்பதே என்னுடைய நிலைப்பாடு. இலங்கை என்பது சர்வதேசத்திற்குள்தான் இருக்கிறது. சர்வதேசம் இலங்கைக்குள் அல்ல என்பதை அரசு புரிந்து நடக்கவேண்டும்.

“ஜனாதிபதியாக  தெரிவுசெய்யப்படக்கூடியவர் பொதுவேட்பாளரில் இருந்து  தெரிவுசெய்யப்படுவார். அவர் 6 மாதங்கள் மட்டுமே ஜனாதிபதியாக இருக்க முடியும். அதன் பிறகு அவர் வேறொருவருக்கு அச்சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும். நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நீக்கிவிட்டு  நாடாளுமன்றத்திற்கு அதிகாரம் வழங்கி பிரதமர்  ஒருவரை நியமிக்கவேண்டும். சுயாதீன ஆணைக்குழுவொன்றை உருவாக்கி 18ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்” என கோட்டை நாகவிகாரையின் விகாராதிபதி  மாதுலுவாவே சோபித தேரர் தினக்குரலுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்த கருத்துக்கள் கீழ்வருமாறு தொகுக்கப்பட்டுள்ளன.

கேள்வி: இன்றும் நிறைவேற்று ஜனாதிபதி முறையை மாற்ற வேண்டும் என  கூறிவருகின்றீர்களா? 

பதில்: 1978ஆம் ஆண்டு ஜே.ஆர்.ஜெயவர்தனவினால்  முன்வைக்கப்பட்ட அரசியல் அமைப்புதான் இதுவரை நடைமுறையில் இருக்கின்றது. அன்று ஆறுக்கு ஐந்து என்ற பெரும்பான்மை அதிகாரம் ஜே.ஆர்.ஜெயவர்தனவிற்கு இருந்தது. இந்த அதிகாரத்தைப் பயன்படுத்தித்தான் அவர் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை அறிமுகப்படுத்தினார். அன்று ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையால் சர்வாதிகாரப் போக்கு  உண்டாகும் எனத் தெரிவித்தார். எனவே, இதனை நீக்கவேண்டும் எனவும் அவர் குரல் எழுப்பினார்.

அதேபோல, பேராசிரியர் என்.எம்.பெரேரா, கொல்வின் ஆர் த சில்வா, சி.விக்கிரமசிங்க போன்ற இடதுசாரித் தலைவர்கள் ஹைபாக் மைதானத்தில் மாபெரும் ஆர்ப்பாட்டமொன்றையும் பேரணி ஒன்றையும் நிறைவேற்று ஜனாதிபதி முறைக்கு எதிராக  நடத்தினர். அன்றிலிருந்து இன்றுவரை  தொடர்ந்து எதிர்ப்புக்கள்  வந்துகொண்டே இருக்கின்றன. அதேபோல, சந்திரிக்கா பண்டாரநாயக்க ஆட்சிக்கு வந்தபோது  ஜனாதிபதியுடைய அதிகாரங்களை நாடாளுமன்றத்திற்கு வழங்குவதாகக் கூறி  நாள் ஒன்றையும் குறிப்பிட்டிருந்தார். ஆனால், அவர் அதைச் செய்யவில்லை.  எனவேதான், ஜே.வி.பியும் கூட்டணியில் இருந்து விலகியது. சந்திரிக்காவிற்கு  நிறைவேற்று முறைமையை மாற்றக்கூடிய அதிகாரம் இருக்கவில்லை.

அடுத்தபடியாக மஹிந்த ராஜபக்‌ஷ அந்தக் காலம் முதலேயே  ஜனாதிபதி முறைமையை மாற்றவேண்டும் என கதிர்காமத்திற்கு நடைபவனி சென்றார். இந்த நடைபவனியின் நோக்கத்தில் நிறைவேற்று ஜனாதிபதி முறையை நீக்கவேண்டும் என்பதே இருந்தது.

மஹிந்த ராஜபக்‌ஷ, அனுர பண்டாரநாயக்க போன்றவர்களை உள்ளடக்கிய ஒரு குழுவொன்றும் இருந்தது. அடுத்தபடியாக மஹிந்த சிந்தனையில் நான் ஆட்சிக்கு வந்தால் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் அதிகாரங்களை நாடாளுமன்றத்திற்கு வழங்கி பிரதமர் ஒருவரை நியமிப்பேன் என்று குறிப்பிட்டிருந்தார். ஆனால், அதைச் செய்யவில்லை. மாறாக அவருக்கு தற்போது நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையிருக்கிறது.

ஜே.ஆர்.ஜெயவர்தன நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்தி  நீதித்துறையில் தலையிட்டார். அதனால், நீதியரசர் நெவில் சமரகோன் பதவி விலகினார். இன்று  நீதி, நிர்வாகம், நிதி போன்ற எல்லாத் துறைகளிலும் ஜனாதிபதியின் தலையீடு இருக்கிறது. அதன் காரணமாகவே 1978ஆம் ஆண்டு அரசியல் யாப்பிற்கு எதிராக வாதம் எழுந்துள்ளது. நிறைவேற்று அதிகாரமுறைமையை அறிமுகப்படுத்திய ஐக்கிய தேசியக் கட்சி கூட அதை எதிர்க்கிறது. நிறைவேற்று அதிகாரமுறைமையை நீக்குகின்ற காலம், தேவை  தற்போது ஏற்பட்டுள்ளது. இன்று எந்தக் கட்சி இந்த முறைமையை ஆதரிக்கின்றது என்பதை நான் கேட்டுக்கொள்ள விரும்புகின்றேன். அதற்காக பல கட்சிகளுடன்  கலந்துரையாடியுள்ளேன். கூடிய விரைவில் இதற்கான முடிவு எடுக்கப்படும்.

கேள்வி: நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நீக்க வேண்டும் என்று கூறும் நீங்கள், அதற்காக எத்தகைய நடவடிக்கையை எடுத்துள்ளீர்கள்?

பதில்:  நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்கு முதல் தேர்தல் முறையை மாற்ற வேண்டும். ஆரம்பத்தில் எங்களுக்கு என பிரதிநிதி மாவட்ட அடிப்படையில் இருந்தார். ஆனால், இன்று  மாகாண மட்டத்திலேயே ஒரு பிரதிநிதி இருக்கின்றார். மாவட்ட பிரதிநிதி எனும்போது அதிகளவு பொறுப்புக்கூறவேண்டியவராக இருப்பார்.

ஆனால், மாகாணம் எனும்போது பெரிய நிலப்பரப்பில் அதிக மக்களை உள்ளடக்கி இருப்பதால் பொறுப்புக்கூறுவது கடினம். தலைவர் என்ற  பெயர் மட்டுமே இருக்கும். கோடிக்கணக்கில் மாகாணத்திற்கு செலவு செய்வார். அதில் குறித்த மாவட்டத்திற்கு எவ்வளவு செலவு செய்கிறார் என்பதைக் கூறமுடியாது. சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கு நாடாளுமன்றம் செல்ல முடியாது. மாகாண சபைக்குக் கூட தெரிவுசெய்ய மாட்டார்கள். எனவே  லஞ்சம், ஊழல் அதிகரிக்கின்றது. தேர்தலுக்காக செலவு செய்த பணத்தை மீளப்பெற்றுக்கொள்ளும் நோக்கிலேயே பதவிக்கு வந்த பின்னர்  மாறுகின்றனர்.

தேர்தல் முறைமையை மாற்றவேண்டும் என அமைச்சர் குணவர்தன  தலைமையிலான குழு ஒன்றும் அமைக்கப்பட்டது. அந்தக் குழுவினது அறிக்கையும் வெளியிடப்பட்டது. இருந்தும், எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அந்த அரச அறிக்கையின் படி சிறுபான்மை சமூகத்தினரும் தேர்தலில் வெற்றிபெறலாம் என்பதை குறிப்பிட்டிருந்தார்கள்.

அடுத்ததாக, மக்களால் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகள் மக்களை கேட்காமல் கட்சி மாறுகின்றனர். மக்கள் வழங்கிய வரப்பிரசாதத்தை முறைகேடாகப் பயன்படுத்துகின்றனர். இன்று நாடாளுமன்ற உறுப்பினர் பதவி என்பது விலைபேசி விற்கக்கூடிய ஒரு பொருளாகிவிட்டது. இது விலைபோகும் பதவி என்று அனைவருக்கும் தெரியும். இந்த முறை மாற்றப்பட வேண்டும். கட்சி மாறுவதாக இருந்தால் கட்சியில் இருந்து விலகி இராஜினாமா செய்யவேண்டும்.

நாடாளுமன்ற உறுப்பினர்களுடைய எண்ணிக்கையை வரையறைப்படுத்த வேண்டும். லலித் அத்துலத் முதலி காலத்தில் நாடாளுமன்றத்திற்கு 25 உறுப்பினர்கள்  போதும் என குறிப்பிட்டார். ஆனால், இன்று குடும்ப உறுப்பினர்களுக்கு பதவி வழங்கி  நாடாளுமன்றத்தை நிரப்பி விட்டிருக்கின்றார்கள்.

இலங்கைக்கு எதிராக சர்வதேச சுயாதீன விசாரணையை நான் ஏற்றுக்கொள்கின்றேன். குற்றங்கள் செய்யவில்லை என்றால் சாட்சியங்களின் மூலம் அதனை உறுதிப்படுத்த வேண்டுமென்பதே என்னுடைய நிலைப்பாடு. இலங்கை என்பது சர்வதேசத்திற்குள்தான் இருக்கிறது. சர்வதேசம் இலங்கைக்குள் அல்ல என்பதை அரசாங்கம் புரிந்து நடக்க வேண்டும்.

தேர்தல் ஆணையாளருக்கு அதிகப்படியான அதிகாரங்கள் வழங்கப்படவேண்டும். கடந்த  கால தேர்தல்களில் தேர்தல் வன்முறைகளில் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டார்கள். ஆனால், இன்று  தேர்தலில் குற்றவாளி யார் என்று தெரிந்திருந்தும் அவர்களை கைதுசெய்ய முடியாதளவிற்கு  அதிகாரமில்லாதவராக தேர்தல் ஆணையாளர் இருக்கிறார். அடுத்தது, நீதித்துறையில் தலையிடுகின்ற அதிகாரத்தைக் குறைக்க வேண்டும். நீதியான சுதந்திரமான ஆணைக்குழுவொன்று உருவாக்கப்படவேண்டும். தேர்தல் ஒன்றை நடத்துவதாக இருந்தால் ஊடகவியலாளர்கள், மக்கள்,  குற்றவாளிகள், நீதித்துறை, பொலிஸ் போன்ற அனைவரையும் தன்வசப்படுத்தி  நடத்துகின்றனர்.  இதனால், நேர்மை என்ற வார்த்தைக்கு அர்த்தம் இல்லாமல் போய்விடும்.

அதிகாரமிக்கதான இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவொன்று உருவாக்கப்படவேண்டும்.  சுதந்திரம் பெற்றதற்குப் பிறகு எவ்வளவு ஊழல் இடம்பெற்றிருக்கிறது என்பதை  இந்த ஆணைக்குழு நிரூபிக்க வேண்டும். இன்று ஒரு அமைச்சருக்கான செலவு 4,000 கோடி ரூபா என்று கூறப்படுகிறது. சைக்கிளில் சென்றுகொண்டிருந்த ஒருவருக்கு இத்தகைய செலவுகள் எப்படி அதிகரித்தது. அடுத்ததாக, தகவல் அறியும் சட்டம் கொண்டுவரப்பட வேண்டும். செலவு செய்கின்றார்கள் என்று சொல்லும்போது எவ்வளவு செலவு செய்கின்றார்கள் என்பதை நான் தெரிந்துகொள்ள வேண்டும். அதற்கு தகவல் அறியும் சட்டம் அவசியம்.

குற்றம் செய்தவர் கேள்வி கேட்கின்ற நிலைமையை பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்க விவகாரத்தில்  பார்க்க முடிந்தது. சுதந்திரமான நீதித்துறை இங்கு இல்லை. இன்றுள்ள பிரதம நீதியரசர் ஜனாதிபதியுடைய ஆலோசகர். அவர் எவ்வாறு ஜனாதிபதிக்கு எதிரான தீர்ப்பொன்றை வழங்குவார். மாவட்ட நீதிவான், உயர் நீதிமன்ற நீதிபதிகள், மேல்முறையீட்டு நீதிபதிகள் போன்ற அனைத்து நீதித்துறை நியமனங்களையும் ஜனாதிபதியே வழங்குகின்றார். அவரால் நியமனம்  பெறும்போது  இலங்கை அரசுக்கு கட்டுப்பட்டவர் என்ற நிலைமையை அந்த  நியமனம் உறுதிப்படுத்துகின்றது. சட்டமா அதிபர் திணைக்களமும் ஜனாதிபதியின் கட்டுப்பாட்டுக்கு கீழே இருக்கிறது.

இது தொடர்பாக இன, மத, மொழி கடந்து மூவின மக்களும் ஒன்று சேர்ந்து வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளோம். அதில் ஜனாதிபதியாக  தெரிவுசெய்யப்படக்கூடியவர் பொதுவேட்பாளரில் இருந்து  தெரிவுசெய்யப்படுவார். அவர் 6 மாதங்கள் மட்டுமே ஜனாதிபதியாக இருக்கமுடியும். அதன் பிறகு அவர் வேறொருவருக்கு அச்சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும்.

நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நீக்கிவிட்டு நாடாளுமன்றத்திற்கு அதிகாரம் வழங்கி பிரதமர்  ஒருவரை நியமிக்க வேண்டும். சுயாதீன ஆணைக்குழுவொன்றை உருவாக்கி 18ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும் ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்படலாம் என்ற நிலைமை மாறவேண்டும். அதற்கான எல்லா ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன.

கேள்வி: எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டார நாயக்க குமாரதுங்கவை  பொதுவேட்பாளராக  நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. அது தொடர்பாக உங்களது கருத்து என்ன?

பதில்: யார் ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டாலும் எமக்கு கவலை இல்லை. ஆனால், அவர் 6 மாதங்களே பதவி வகிக்க வேண்டும்.  முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவை நாடி பொதுவேட்பாளராக நிறுத்துவதற்கு முயற்சி செய்துவருவதாக நானும் அறிந்தேன்.

அதற்கு அவர் தெளிவான ஒரு பதிலை இன்னும் அளிக்கவில்லை. எங்களுடைய கொள்கைக்கு இணங்கி ஒருவர் போட்டியிடுவதற்கு முன்வருவாராக இருந்தால் அவரை நாங்கள் பொதுவேட்பாளராக முன்நிறுத்துவோம். பொதுவேட்பாளர் என்பது இங்கு முக்கியம் அல்ல. அவர் என்ன செய்யவேண்டும் என்பதே முக்கியம். சந்திரிக்கா விருப்பப்பட்டால் பொதுவேட்பாளராக நிறுத்த நாங்கள் தயார்.

கேள்வி:  ஜனாதிபதித் தேர்தலில் பொதுவேட்பாளராக நீங்கள் நிற்பதாகவும் ஒரு செய்தி வெளியாகியிருந்தது. அது தொடர்பாக உங்களது கருத்து என்ன?

பதில்:  நான் பொது வேட்பாளராக நிற்பதற்குத் தயார். நாங்கள் குறிப்பிட்டுள்ள நியதிகளின்படி மக்கள் வாக்களிக்க வேண்டும். பொதுவேட்பாளராக யார் வேண்டுமானாலும் நிற்கலாம். அதற்கு எந்தத் தடையுமில்லை. முன்னாள் பிரதம நீதியரசராக இருக்கலாம், முன்னாள் ஜனாதிபதியாகவும் இருக்கலாம்.

கேள்வி : வட மாகாண சபை சுயாதீனமாக செயற்பட முடியவில்லை என வட மாகாண முதலமைச்சர் கூறுகின்றாரே. இது தொடர்பாக உங்களது கருத்து என்ன?

பதில்: சுயாதீனமாக செயற்பட முடியாமைக்கு சுயாதீன ஆணைக்குழுக்கள் இல்லாமையே காரணம். பொலிஸ், காணி ஆணைக்குழுக்கள் சுயாதீனமாக இருக்குமாக இருந்தால் மாகாண சபையும் சுயாதீனமாக செயற்பட முடியும். மாவட்ட  ஆட்சிமுறை இருந்தால் மாகாணசபை  இல்லாமல் செய்யப்படும். மாகாண சபையை பெரியதொரு நிலப்பரப்பாக அரசு பார்க்கின்றதோ தெரியவில்லை. எனினும், மாகாண ஆட்சி முறைமை சீராக நடைபெறுவதற்கு அரசியல் யாப்பு நடைமுறையை பின்பற்றினாலேயே போதுமானதாகும்.

கேள்வி:  தென், மேல் மாகாண  சபைத் தேர்தல்களில் நடிகர் நடிகைகள் வேட்பாளராக நிறுத்தப்படுவது தொடர்பாக உங்களது கருத்து என்ன?

பதில்: எந்தவொரு தொழிலுக்கும் அனுபவம், தொழில் தகைமை என்று இருக்கின்றது. இந்தத் தொழிலை இவர்கள்தான் செய்யவேண்டும் என்று இல்லை. தகுதி இருந்தால் செய்யலாம். ஆனால், அரசியல் என்பது தொழில் அல்ல. அது ஒரு சேவை. பொதுமக்கள் நலன்கருதிய ஒரு சேவை. முழு நாட்டையும் நிர்வகிக்க வேண்டும். அந்த செயற்பாட்டில் எல்லோராலும் ஈடுபட முடியாது. இது மக்களை திசைதிருப்பி வாக்குகளை சிதறடிக்கும் ஒரு முறையாகும். நடிகை, நடிகர்கள், பாடகர்கள் முகத்தைப் பார்த்து புள்ளடியிட வேண்டாம். எந்தவொரு கட்சியிலும் வேட்பாளராக இருந்தாலும் உங்களுக்கு இவரால் ஏதேனும் பயன் இருக்கின்றதா என்று சிந்தித்து வாக்களிக்க வேண்டும்.

கேள்வி: ஆட்சி கவிழ்ப்பதற்கான சந்தர்ப்பம் இருக்கிறதா?

பதில்: ஆட்சியைக் கவிழ்க்கவேண்டிய அவசியம் இல்லை. இன்று அரசிற்குள்ளேயே குழப்பங்கள் தோன்றியுள்ளன. இந்தக் குழப்பங்களே ஆட்சி கவிழ்வதற்கான சந்தர்ப்பங்கள். சிறந்த முறையில்  நடவடிக்கை எடுத்தால் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் இந்த ஆட்சியை மாற்றியமைக்க முடியும். பிரதமருக்கு எதிராக அரசிற்குள்ளேயே  பிரச்சினை எழுந்துள்ளது.

இன்று பிரதமர் நாளை ஜனாதிபதி என்ற  நிலை உருவாகலாம். வேறொரு நாட்டில்  ஒரு ஜனாதிபதியுடைய ஆட்சியில்  பெருந்தொகையிலான போதைவஸ்து  இறக்குமதி செய்யப்பட்டிருந்தால் ஜனாதிபதியே ஆட்சியிலிருந்து  பதவிவிலகுவார். ஆனால், இங்கு அவ்வாறு இல்லை. எனவே, இந்த நிலை மாறுவதற்கு மக்களே சிந்திக்கவேண்டும்.

கேள்வி: ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராக  மார்ச் மாதம் தீர்மானம் கொண்டுவரப்போவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சவாலை அரசு எவ்வாறு எதிர்கொள்ளப்போகிறது? அதற்கு உங்களுடைய பங்கு எவ்வாறு அமையும்?

பதில்: நாங்களே செய்துகொண்ட பிழைதான் ஜெனீவா. இலங்கை அரசு முன்வைத்த கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை நிறைவேற்ற வேண்டுமென்பதே சர்வதேச நாடுகளின் வேண்டுகோளாக இருக்கிறது. இலங்கைக்கு வருகை தந்த சர்வதேச பிரதிநிதிகளிடம் பல வாக்குறுதிகளை அளித்துள்ளார். அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதாகத் தெரியவில்லை. 17ஆவது திருத்தச் சட்டத்தை  நடைமுறைப்படுத்த வேண்டுமென்பதும் நல்லிணக்க ஆணைக்குழுவின் ஒரு பரிந்துரையாகும்.

இலங்கை அரசு ஐ.நா. பிரதிநிதிகளை வரவழைப்பதற்காகவே கதவுகளை திறந்துவிட்டுள்ளது. அரசு எத்தகைய நடைமுறைகளை பின்பற்றினாலும் நான் நியாயத்தின் பக்கமே நிற்பேன். அரசு நியமித்த ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டும். சர்வதேசத்திற்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டுமென்பது நியாயமான கோரிக்கை. இலங்கைக்கு எதிராக சர்வதேச சுயாதீன விசாரணையை நான் ஏற்றுக்கொள்கின்றேன். குற்றங்கள் செய்யவில்லை என்றால் சாட்சியங்களின் மூலம் அதனை உறுதிப்படுத்த வேண்டுமென்பதே என்னுடைய நிலைப்பாடு. இலங்கை என்பது சர்வதேசத்திற்குள்தான் இருக்கிறது. சர்வதேசம் இலங்கைக்குள் அல்ல என்பதை அரசாங்கம் புரிந்து நடக்க வேண்டும்.

கேள்வி: வட மாகாண சபை  சுயாதீனமாக செயற்பட நீங்கள் கூறும் ஆலோசனை ன்ன?

பதில்:  ஆளுநரை வெளியேற்ற வேண்டும். காணி, பொலிஸ் அதிகாரங்கள் வேண்டுமென்பதே வட மாகாண சபையின் கோரிக்கை. உண்மையில் ஆளுநரை தகுதியின் அடிப்படையில் தெரிவுசெய்ய வேண்டும். கிறீஸ் போன்ற நாடுகளில்  ஆளுநர் ஒருவரை தெரிவுசெய்வதில் பல நடைமுறைகள் இருப்பதை நான் அவதானித்தேன். நிர்வாக சேவையில் 15 வருடங்கள்  அனுபவமும்  பரீட்சைகளில் சித்தியடைந்த பின்னருமே ஒருவரை ஆளுநராக அங்கு தெரிவுசெய்வார்கள். ஆனால், இங்கு அவ்வாறு இல்லை. இதனால் சிவில் சமூகத்திற்கு பிரச்சினை எழுகின்றது. அதேபோல, வட மாகாண சபை கூறும் காணி, பொலிஸ் அதிகாரங்கள் 13ஆவது திருத்தச் சட்டத்தின்படி வழங்கினாலும்,  மாவட்ட ஆட்சிமுறைமை  உருவாக்கப்பட வேண்டும்.

ஞாயிறு தினக்குரல் பத்திரிகைக்காக ஏ. ஜெயசூரியனால் எடுக்கப்பட்ட நேர்க்காணல் இங்கு தரப்பட்டுள்ளது.

Sooriyan