படம் | Buddhika Weerasinghe Photo, GETTY IMAGES

ஒரு வேட்பாளரின் உறவினர் சொன்னார் “சனங்கள் தங்களுக்காக அல்ல, வேட்பாளர்களுக்காகவே வாக்களிப்பதாகக் கருதுகிறார்கள். தாங்கள் வாக்களிப்பதால் தங்களைவிடவும் வேட்பாளர்களுக்கே நன்மை அதிகம் உண்டாகும் என்றும், அதனால்தான் வேட்பாளர்கள் தங்களை வாக்களிக்கத் தூண்டுகிறார்கள் என்பது போலவும் சனங்கள் நடந்து கொள்கிறார்கள்” என்று.

தேர்தலுக்கு இன்னமும் ஒருசில நாட்கள் இருக்கின்றன. ஆனால், வாக்காளர்கள் மத்தியில் பரபரப்பையோ விறுவிறுப்பையோ காண முடியவில்லை. இக்கட்டுரை எழுதப்படும் இந்நாள் வரையிலும் பெருமெடுப்பில் மேடை கட்டி ஒழுங்கு செய்யப்பட்ட பொதுக் கூட்டங்களுக்கு எதிர்பார்க்கப்பட்ட தொகை சனங்கள் வரவில்லை. மருதனார்மடத்தில் கூட்டமைப்பு அதன் விஞ்ஞாபனத்தை வெளியிட்டபோது சுமாராக 150 பேர்களே வந்திருந்தார்கள். அதன் பின் வடமராட்சியிலும் தென்மராட்சியிலும் கூட்டமைப்பு ஒழுங்கு செய்திருந்த கூட்டங்களுக்கு எண்ணிக் கணக்கெடுக்கக் கூடிய தொகையினரே வந்திருந்தார்கள். யாழ்ப்பாணத்தில் ஒப்பீட்டளவில் கூடுதலான தொகையினர் வடமராட்சியில் நடந்த மக்களின் முன்னணியின் கூட்டத்திற்கே வந்திருந்தார்கள். ஆனால், அங்கேயும் மொத்தத் தொகை ஆயிரத்தைத் தாண்டவில்லை. அதாவது, மக்கள் ஆயிரக்கணக்கில் கூடும் பெரும் கூட்டங்களை இக்கட்டுரை எழுதப்படும் இன்நாள் வரையிலும் எந்தக் கட்சியாலும் ஒழுங்குபடுத்த முடியவில்லை. இதுவரை நடாத்தப்பட்ட எல்லாக் கூட்டங்களிலும் சனங்கள் நூற்றுக் கணக்கில்தான் பங்குபற்றியிருக்கிறார்கள். சங்கிலியன் தோப்பில் யூ.என்.பி. ஒழுங்கு செய்த கூட்டத்தில் நூற்றுக்கணக்கானவர்கள் பங்குபற்றினார்கள். ஆனால், அது பிரச்சாரத்தைக் கேட்பதற்கு வந்த கூட்டமா? அல்லது இசை நிகழ்ச்சியைப் பார்ப்பதற்கு வந்த கூட்டமா? என்ற கேள்வி இங்கு முக்கியமானது.

நட்சத்திர அந்தஸ்துமிக்க பாடகர்களை மேடையேற்றுவதன் மூலம் சனங்களை வரவழைக்கலாம் என்று சில கட்சிகள் நம்புகின்றன. ஆயின், நட்சத்திர அந்தஸ்துமிக்க தலைவர்ளோ பேச்சாளர்களோ அந்தக் கட்சிகளிடம் இல்லையா? எம்.ஜி.ஆரின் பாடல்களையே இப்பொழுதும் சில கட்சிகள் ஒலிபரப்புகின்றன. முழு உலகத்திற்கு ஒரு புது அனுபவமாகக் கிடைத்த யுத்த களம் ஒன்றில் வாழ்ந்த மக்களை எம்.ஜி.ஆரின் பாடல்களின் மூலம் வாக்களிக்கத் தூண்டலாம் என்று கட்சிகள் இப்பொழுதும் நம்புகின்றனவா? எல்லாமே பின்னோக்கிச் சறுக்கிவருகின்றனவா?

மக்களை ஆயிரக்கணக்கில் திரட்டக் கூடிய கூட்டங்கள் எதையும் எந்தக் கட்சியாலும் ஒழுங்குபடுத்த முடியவில்லை. பதிலாக பெருமடுப்பில் ஒழுங்கு செய்யப்பட்ட கூட்டங்களில் நூற்றுக் கணக்கில்தான் சனங்கள் பங்குபற்றியிருக்கிறார்கள். மற்றும்படி ஆங்கிலத்தில் ‘பொக்கற் மீற்றிங்’ என்று சொல்லப்படுகின்ற சிறிய சந்திப்புக்களைத்தான் எல்லா வேட்பாளர்களும் மேற்கொண்டு வருகிறார்கள். யாழ். குடாநாட்டில் மட்டும் தான் இந்த நிலை என்பதல்ல. வடக்குக் கிழக்குப் பூராகவும் நிலைமை ஏறக்குறைய இப்படித்தான் காணப்படுகின்றது என்று கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது, இந்த முறை தேர்தல்களம் சூடாகவும் இல்லை. விறுவிறுப்பாகவும் இல்லை, ஏன்?

இது தொடர்பாக கட்சி சார்பற்ற ஊடகவியலாளர்களை அணுகிக் கேட்டேன். அவர்கள் பிரதானமாக இரண்டு காரணங்களைக் கூறுகிறார்கள். ஒன்று, இம்முறை ஒரு பொது எதிரிக்கு எதிரான முழு வீச்சான எதிர்ப்பு அலையை அல்லது ஆவேசத்தை அல்லது பழிவாங்கும் உணர்ச்சியை தூண்டக் கூடிய விதத்தில் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படவில்லை என்று. அதாவது, யாராவது ஒரு பொது எதிரிக்கு எதிரான பிரச்சாரப் போரே வாக்காளர்களை விறுவிறுப்படையச் செய்கிறது. ஆனால், இம்முறை அவ்வாறான ஒரு பிரச்சாரம் பெருமெடுப்பில் செய்யப்படவில்லை என்று.

இரண்டாவது காரணம், பொலிஸார் தேர்தல் விதிகளை அளவுக்கு மிஞ்சி இறுக்கமாகக் கடைப்பிடித்து வருகிறார்களாம். தென்னிலங்கை நிலவரங்களோடு ஒப்பிடுகையில் இம்முறை வடக்கில் பொலிஸார் தேர்தல் விதிகளை அதிகம் கண்டிப்பாக அமுல்படுத்தி வருவதாக ஊடகவியலாளர்கள் கூறுகிறார்கள். உதாரணமாக ஒரு வேட்பாளரின் ஆதரவாளர்கள் ஒரு வீட்டில் பிரச்சாரம் செய்துவிட்டு அடுத்த வீட்டுக்குப் போவதற்குள் இடையிலான இடைத்தூரத்தில் வீதியால் போவோர் வருவோருக்குப் பிரச்சாரம் செய்ய முற்பட்டால் அதுவும் தடுக்கப்படுகிறதாம். அதோடு, பொதுப் போக்குவரத்து வாகனங்களில் ஒட்டப்படும் போஸ்ரர்களுக்கு அந்த வாகனங்களின் சாரதிகளும், நடத்துனர்களுமே பொறுப்பு என்றும் எச்சரிக்கப்படுகிறதாம். இவ்வாறாக வழமைக்கு மாறாக தேர்தல் விதிகளை இறுக்கமாக அமுல்படுத்துவதும் வேட்பாளர்களுடைய பிரச்சார நடவடிக்கைகளை மட்டுப்படுத்துவதாகக் கூறப்படுகிறது.

இதில் முதலாவது காரணமே இங்கு இக்கட்டுரையின் பேசுபொருளைப் பொறுத்தவரை அதிகம் கவனிப்புக்குரியது. அதாவது, எனது முன்னைய கட்டுரைகளில் கூறப்பட்டதைப் போல தமிழ் வாக்களிப்பு அலை எனப்படுவது அதிகபட்சம் இன உணர்வு அலைதான். அல்லது இனமான அலைதான். அந்த இன உணர்வு அலையைத் தோற்றுவிப்பது என்றால் அதை முழுக்க முழுக்க ஓர் எதிர்ப்பு அரசியலுக்கூடாகவே செய்ய முடியும். ஒரு பொது எதிரிக்கு எதிராக ஏற்கனவே நீறு பூத்திருக்கும் கோபாவேசத்தை அல்லது பழிவாங்கும் உணர்ச்சியைத் தூண்டுவதன் மூலமே இன அடையாள வாக்குகளை ஓரலையாகத் திரட்டி எடுக்கலாம் என்பது இதுவரையிலுமான தமிழ்த்தேர்தல் அனுபவமாக இருந்து வந்துள்ளது. அவ்வாறு இன அடையாள வாக்குகளை அல்லது பழிவாங்கல் வாக்குகளைத் தூண்டி ஒரு வாக்களிப்பு அலையை உருவாக்குவதென்றால் அதை முழுக்க முழுக்க ஓர் எதிர்ப்பு அரசியலுக்கூடாகவே செய்யலாம். இதற்கு முந்திய எல்லாத் தேர்தல்களின் போதும் கூட்டமைப்பானது அதைத்தான் செய்தது. தமிழரசுக் கட்சியும் தமிழர் விடுதலைக் கூட்டணியும் அதைத்தான் செய்தன. ஆனால், இம்முறை கூட்டமைப்பால் அதைச் செய்ய முடியாமல் இருப்பதே முக்கிய பிரச்சினையாகும். சில முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதைச் செய்கிறார்கள்தான். ஆனாலும், கட்சிக் கொள்கை என்று பார்த்தால் கூட்டமைப்பால் முழு அளவு எதிர்ப்பு அரசியலை முன்னெடுக்க முடியாது. ஏனெனில், அவர்கள் பயணத்தை முடிக்கப் போவதாகக் கூறுகிறார்கள். பயணத்தை முடிப்பதென்றால் அதற்கு தென்னிலங்கையில் இருக்கும் ஏதோ ஒரு தரப்போடு ஏதோ ஒரு இணக்கத்திற்கு வந்தேயாகவேண்டும். அவ்வாறு தேர்தலுக்குப் பின் இணக்கத்திற்கு வர உத்தேசித்திருக்கும் தரப்புக்கு எதிராக இப்பொழுது ஒரு வெளிப்படையான எதிர்ப்பு அரசியலை முடியாது. எனவே, ஒரு முழுமையான எதிர்ப்பு அரசியலை முன்னெடுப்பதில் இம்முறை கூட்டமைப்புக்கு வரையறைகள் உண்டு.

ஆனால், மக்கள் முன்னணிக்கு அவ்வாறு இல்லை. அவர்கள் பயணத்தை முடிக்கப் போவதாகக் கூறவில்லை. ஆட்சிகளை மாற்றுவதாலோ ஆட்களை மாற்றுவதாலோ தமிழர்களின் பிரச்சினையை தீர்க்கலாம் என்ற நம்பிக்கையை அவர்கள் மக்கள் மத்தியில் உருவாக்கியதில்லை. சிங்கள பௌத்த அரசுக் கட்டமைப்பில் அடிப்படையான பண்புமாற்றம் ஏற்படாத வரையிலும் ஒரு தீர்வுக்குப் போக முடியாது என்று அவர்கள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறார்கள். அவ்வாறான ஒரு பண்புமாற்றத்தை உள்நாட்டு சக்திகளால் ஏற்படுத்த முடியாது என்றும், வெளி அழுத்தங்களின் மூலமே அதைச் செய்ய முடியும் என்றும் அவர்கள் நம்புவதாகத் தெரிகிறது. அவ்வாறு வெளி அழுத்தத்தை ஏற்படுத்துவாக இருந்தால் அதற்குப் போர்குற்ற விசாரணைகள் தொடர்பில் அனைத்துலக பொறிமுறையை வற்புறுத்துவதே இப்போதைக்கு ஈழத்தமிழர்களுக்குள்ள நடைமுறைச் சாத்தியமான வழி என்றும் அந்தக் கட்சி தொடர்ச்சியாக வற்புறுத்தி வருகிறது.

எனவே, ஆட்சிமாற்றத்தைக் குறித்து கற்பனைகள் எதனையும் வளர்த்துக் கொள்ளாமல் தென்னிலங்கையில் உள்ள பிரதான கட்சிகளுக்கு எதிராக எதிர்ப்பு அரசியலை முன்னெடுக்கக்கூடிய ஒரு ஸ்தானத்தில் இப்பொழுது மக்கள் முன்னணி மட்டுமே காணப்படுகின்றது. இப்படிப் பார்த்தால் ஒரு வாக்களிப்பு அலையை உருவாக்கக் கூடிய எதிர்ப்பு அரசியலை முன்னெடுக்கத் தக்க அரசியல் நிலைப்பாடுகளோடு மக்கள் முன்னணி மட்டுமே காணப்படுகின்றது. ஆனால், அவர்கள் அதை வெற்றிகரமாக செய்திருக்கிறார்களா?

இல்லை. அவர்கள் அதை வெற்றிகரமாகச் செய்திருந்திருந்தால் இன அடையான வாக்குகளையும் கூட்டமைப்பின் மீதுள்ள விமர்சனங்களையும் ஒருசேர திரட்டி வாக்களிப்பு அலை ஒன்றை ஏற்படுத்த முடியும். அதாவது, தேர்தல் களத்தை பரபரப்பாகவம் விறுவிறுப்பாகவும் வைத்திருந்திருக்க முடியும். ஆனால், இக்கட்டுரை எழுதப்படும் இந்நாள் வரையிலும் பிரச்சார அரங்கில் ஒரு பொது எதிரிக்கு எதிரான ஆவேசத்தை விடவும் இரண்டு கட்சிகளுக்குமிடையிலான பரஸ்பரக் குற்றச்சாட்டுப் பரப்புரையே தூக்கலாகத் தெரிகிறது. இரண்டு கட்சிகளும் மாறி மாறி ஒருவர் மற்றவரின் மீது நேரடியாகவும், மறைமுகமாகவும் குற்றச்சாட்டுக்களை அள்ளி வீசுவதும் ஒருவர் மற்றவரை துரோகியாக்குவதுமே மேலோங்கிக் காணப்படுகிறது. பெரும்பாலான ஆவேசமான பேச்சாளர்கள் கட்சி எதிரிகளைத் தாக்குவதற்கே தமது சக்திகளை அதிகம் பயன்படுத்தி வருகிறார்கள். ஒரு பொது எதிரிக்கு எதிராக ஒருமுனைப்படுத்தப்பட்ட ஒரு பரப்புரைப் போருக்குப் பதிலாக இரண்டு கட்சிகளுக்குமிடையிலான குற்றச்சாட்டுக்களே முன்னரங்கில் தெரிகின்றன. இது வாக்காளர்களைக் குழப்பதில் ஆழ்த்துகிறது.

மேலும், வட மாகாண முதலமைச்சரின் நிலைப்பாடும் வட பகுதி வாக்காளர்களை குழப்பதில் ஆழ்த்துகிறது. 2009இற்குப் பின்னர் நடந்த எல்லாத் தேர்தல்களையும் ஒப்பிடுமிடத்து ஆகக் கூடிய விருப்பு வாக்குகளைப் பெற்றவர் வட மாகாண முதலமைச்சர்தான். ஆனால், அண்மைக் காலங்களில் அவர் தனது கட்சித் தலைமைக்கு உவப்பில்லாத விடயங்களை பேசும் ஒருவராக மாறியிருக்கிறார். அதோடு இம்முறை பிரச்சார நடவடிக்கைகளில் இன்றுவரையிலும் அவர் வெளிப்படையாகப் பங்கெடுத்ததாகத் தெரியவில்லை. இதுவும் வாக்காளர்களை குழப்பக் கூடியது.

இவைதவிர ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்த பின்னரான ஆறாண்டுகாலப் பகுதிக்குள் நடந்து முடிந்த தேர்தல்களால் எதுவும் கிடைக்கவில்லை என்ற சலிப்பும் பரவலாகக் காணப்படுகிறது. அதாவது, எனது கட்டுரைகளில் ஏற்கனவே கூறப்பட்டதைப்போல ஆயுதப் போராட்டத்தைக் குறித்த முற்கற்பிதங்களோடு மிதவாதத்தை மதிப்பீடு செய்வது என்பது. இதுவும் வாக்காளர்களைச் சலிக்கச் செய்யக் கூடியது.

இவ்வாண்டின் தொடக்கத்தில் ஜனாதிபதித் தேர்தலின் போதும் இப்படி ஒரு சலிப்புக் காணப்பட்டது. அப்பொழுதும் தேர்தல் களம் விறுவிறுப்பின்றியும் பரபரப்பின்றியும் காணப்பட்டது. ஆனால், வாக்களிப்பு நாளன்று தமிழ் மக்கள் ஏதோ வாக்களிப்பதற்கென்றே அலாரம் வைத்து எழும்பியது போல திடுமெனக் கிழம்பிப் போய் வாக்களித்துவிட்டு வந்தார்கள். நிச்சயமாக அது கூட்டமைப்பின் பிரச்சாரத்திற்குக் கிடைத்த வெற்றி அல்ல. அல்லது கூட்டமைப்பின் தவைவர்கள் பின்னர் வியாக்கியானம் செய்தது போல அது மாற்றத்தின் பங்காளியாக கூட்டமைப்பு மாறியதற்கு மக்கள் வழங்கிய ஆணையும் அல்ல. மாறாக அது ஏற்கனவே எடுக்கப்பட்ட ஒரு முடிவு. ஆயுத போராட்டம் தோற்கடிக்கப்பட்ட பின் தமிழர்களில் பெரும்பாலானவர்கள் எடுத்த முடிவு. அது முழுக்க முழுக்க மஹிந்தவைத் தோற்கடிப்பதற்கு என்று எடுக்கப்பட்ட ஒரு பழிவாங்கும் முடிவு. எனவே, ஏற்கனவே முடிவுகளை எடுத்துவிட்டு மக்கள் அமைதியாகக் காத்திருந்தார்கள். கூட்டமைப்பு சொல்லியிராவிட்டாலும் அவர்கள் மஹிந்தவைத் தோற்கடிப்பதற்காக வாக்களித்தேயிருப்பார்கள். அது தமிழ் மக்கள் ஒரு முடிவை எடுத்துவிட்டு பரபரப்பின்றிக் காத்திருந்த ஒரு தேர்தல்களம் எனலாம். ஆயின், இம்முறையும் அப்படியா?

சில விமர்சகர்கள் கூறுகிறார்கள் தமிழர்கள் கூட்டமைப்பின் மீது விமர்சனங்களை முன்வைத்தாலும் வாக்களிப்பு நாளன்று கூட்டமைப்பையே தெரிந்தெடுப்பார்கள் என்று. அதாவது, கூட்டமைப்புக்கும் மக்களுக்கும் இடையிலான உறவு எனப்படுவது ஆங்கிலத்தில் கூறப்படுவது போல love and hate, அதாவது ‘வெறுத்தாலும் நேசிப்பது’ என்ற வகைக்குரியது என்று. ஆயுதப் போராட்ட காலகட்டத்திலும் இப்படி ஒரு விளக்கம் கூறப்படுவதுண்டு. அதாவது, புலிகள் இயக்கத்தின் மீது ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும் கூட இறுதி முடிவுகளை எடுக்கும் போது தமிழ் மக்கள் புலிகளுக்குச் சாதகமாகவே சிந்திப்பார்கள் என்று. ஆனால், அது ஒரு ஆயுதப் போராட்டக் களம். இதுவோ ஒரு மிதவாதிகளின் அரசியல்களம். இரண்டையும் ஒப்பிடமுடியாது. ஓர் ஆயுதப் போராட்ட இயக்கமானது அது சாகத் தயாராக இருக்கிறது என்பதற்காகவே அதன் தவறுகளை மக்கள் சகித்துக் கொள்வதுண்டு. இது மிதவாதிகளுக்கும் பொருந்துமா? தவிர அப்பொழுது புலிகளுக்கு மாற்றீடு இருக்கவில்லை. ஆனால், இப்பொழுது கூட்டமைப்புக்கு ஒரு மாற்றீடு இருக்கிறது. மக்கள் முன்னணியானது கடந்த ஆறு ஆண்டுகளாக அதன் இலட்சியத்தில் விட்டுக்கொடுப்பின்றி நின்று பிடித்திருக்கிறது என்பது படித்த நடுத்தர வர்க்கத்தை அதிகம் கவரும் ஒன்றாகக் காணப்படுகின்றது. எனவே, இப்பொழுது கூட்டமைப்புக்கு ஒரு மாற்று உண்டு என்பதே இப்போதுள்ள கள யதார்த்தமாகும்.

ஆனால், கடந்த சில தசாப்தங்களாக ஒற்றைப்பரிமாண அரசியலுக்கே அதிகம் பழக்கப்பட்டிருந்த தமிழ் மக்கள் இப்புதிய யதார்த்தத்தை எப்படி எதிர்கொள்ளப் போகிறார்கள்? குறிப்பாக தமிழ்த் தேசியத்தின் செயற்திறன்மிக்க கூர்முனைபோலக் காணப்படும் புலம்பெயர்ந்த சமூகமானது மக்கள் முன்னணிக்கு அதிகம் நெருக்கமாகக் காணப்படுகிறது. புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் உள்ள மக்கள் முன்னணியின் ஆதரவாளர்கள் இலத்திரணியல் தொடர்புகளின் மூலம் தாயகத்தில் உள்ள தமது உறவுகளை மக்கள் முன்னணிக்கு வாக்களிக்குமாறு தூண்டி வருகிறார்கள். ஒருவர் பலரை இவ்வாறு வாக்களிக்கத் தூண்டும் ஒரு பிரச்சார பொறிமுறை எனப்படுவது தமிழ் வாக்களிப்புப் பாரம்பரியத்தைப் பொறுத்தவரை புதியது. இம்முறை தேர்தலில் இத்தகைய தொலைவில் இருந்து பிரச்சாரம் செய்யும் உத்தியானது ஒரு முக்கிய கூறாக வளர்ச்சியடைந்துள்ளது. எனினும், இக்கட்டுரை எழுதப்படும் இந்நாள் வரையிலும் தேர்தல் களமானது விறுவிறுப்புக் குன்றியே காணப்படுகின்றது. தமிழ் வாக்குத் தளமானது இரண்டு கட்சிகளுக்குமிடையே உடையத் தொடங்கியதன் விளைவா இது?

கடந்தவாரம் தேர்தல் தொடர்பாக தமிழ் சிவில் சமூக அமையத்தால் ஒரு பொதுமக்கள் சந்திப்பு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. இதன்போது ஒரு மருத்துவர் பின்வரும் தொனிப்படக் கருத்துத் தெரிவித்தார். “ஆயுதப் போராட்டத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட இயக்கங்கள் அரங்கில் இருந்தால் அது ரத்தம் சிந்தும் மோதல்களில் முடிவதுண்டு. ஆனால், மிதவாத அரங்கில் இரண்டு கட்சிகள் இருப்பது ஆரோக்கியமானது. அது ஜனநாயகத்தைப் பலப்படுத்த உதவும்” என்று. இப்படிப் பார்த்தால் இம்முறை தமிழ் மக்கள் வாக்களிக்கப் போவது கூட்டமைப்புக்கா? அல்லது மக்கள் முன்னணிக்கா? என்ற கேள்வியை வேறுவிதமாகவும் கேட்கலாம். அதாவது, இம்முறை தமிழ் மக்கள் வாக்களிக்கப் போவது தமிழ்த் தேசியத்தின் ஜனநாயக உள்ளடக்கத்தை பலப்படுத்துவதற்கா இல்லையா?

தினக்குரல் பத்திரிகைக்கா நிலாந்தன் எழுதிய கட்டுரை இங்கு தரப்பட்டுள்ளது.