படம் | Kannan Arunasalam Photo, GROUNDVIEWS | (காத்தான்குடி பள்ளிவாசல் தாக்குதலின்போது தனது உறவுகளை இழந்த தாயொருவர்)

கடந்த ஆகஸ்ட் 4ஆம் திகதி காத்தான்குடி மனித அவலத்தின் 25ஆம் நினைவு தினமாகும். 1990ஆம் ஆண்டு பிரேமதாச – புலிகள் ஒப்பந்த முறிவின் பின்னணியிலும், வளர்ந்து வந்த தமிழ் – முஸ்லிம் விரிசலின் பின்னணியிலும் ஆகஸ்ட் மாதம் 3ஆம் நாள் வெள்ளிக்கிழமை இரவு நேர இஷா தொழுகைகள் நடைபெற்றிருந்த வேளை விடுதலைப் புலிகளின் குழுக்கள் காத்தான்குடி நகரில் மஸ்ஜிதுல் ஜும்மா பள்ளிவாசல், மஞ்சந்தொடுவாய் பள்ளிவாசல், மீரா ஜும்மா பள்ளிவாசல் ஆகியவற்றினுள் புகுந்து சரமாரியாகத் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதில் 100இற்கும் மேற்பட்ட முஸ்லிம் பொதுமக்கள் கொல்லப்பட்டனர். உயிரிழந்தவர்களுக்கான அஞ்சலிகளோடு ஆரம்பிக்கின்றன இன்றைய அவதானிப்புக்கள்.

1990களின் ஆரம்பக் கட்டத்திலிருந்து சகோதர முஸ்லிம்கள் மீது தமிழ் ஆயுதக் குழுக்களினால், முக்கியமாக விடுதலைப்புலிகளினால் கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைச்சம்பவங்கள் மற்றும் இனச்சுத்திகரிப்பு நிகழ்வுகள் நடந்தேறி இரு தசாப்தங்கள் கடந்த நிலையிலேயே கடந்த 2ஆம் திகதி கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரின் தேர்தல் விஞ்ஞாபனம் வல்வெட்டித்துறை கூட்டத்தில் வெளியிடப்பட்டது.

வரும் பொதுத்தேர்தலில் கஜேந்திரகுமாரின் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பிரதான தேர்தல் மேடை ‘மாற்றம்’ என்பதாகும். அதாவது, முள்ளிவாய்க்கால் பேரவலம் நிகழ்ந்து 6 வருடங்கள் கடந்தும் தமிழ்த் தேசியம் தொடர்பிலும், இலங்கையில் தமிழர் அரசியல் பயணிக்க வேண்டிய பாதை தொடர்பிலும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முன்னுக்கு பின் முரணான நடவடிக்கைகள், கோஷங்களை மாற்றியமைப்பதையே மேடையாக கொண்டு தேர்தல் களத்தில் இறங்கியிருக்கின்றது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி. இதேவேளை, விடுதலைப் புலிகளினால் உருவாக்கப்பட்ட தமிழ் கட்சிகளினதும், முன்னர் ஆயுதக்குழுக்களாய் இருந்து ஜனநாயக நீரோட்டத்தினுள் பிரவேசித்த கட்சிகள், குழுக்களினதும் கூட்டாய் விளங்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை கடந்த ஜூலை மாதம் வெளியிட்டிருந்தது.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மீது இன்று பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. தாம் இருக்கும் சபைக்கேற்ப இலங்கையில் இனப்பிரச்சினைக்கான தீர்வு, பொறுப்புக்கூறல் என்பனவற்றில் நிலைபாட்டை அவ்வப்போது மாற்றிக்கொள்ளல், தேர்தல்கால அரசியலை முதன்மைப்படுத்திய அரசியல் (Electoral Politics), தேர்தல் காலத்தில் விடுதலைப்புலிகள் வியாபாரம், இந்தியாவைச் சார்ந்து 13ஆம் திருத்தச்சட்டத்தினை பேணுவதன் ஊடாகவும், 13ஆம் திருத்தத்தின் மாகாண சபைகளை முதன்மைப்படுத்திய தீர்வை அடைய முயற்சிப்பதன் ஊடாகவும் இந்திய நலன்களை, முக்கியமாக இலங்கையில் இந்தியாவின் காற்தடத்தை (Footprint) காத்தல், தமிழரின் தனித்துவ தேசத்துக்கான (Distinct Nation) அங்கீகார தேடல்களையும் சுயநிர்ணய கோரிக்கையையும் மழுங்கடித்து (வெளிப்படையாக இல்லாவிடினும்) அவர்களை “சிறுபான்மை இனம்” என்ற வரையறைக்குள் முடக்குவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளல் என்பனவே தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் முக்கிய குற்றச்சாட்டுக்கள். தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் தொடரும் குற்றச்சாட்டுக்களிலும், அவர்கள் ஆணையைக் கோரும் மாற்றத்துக்கும் அடிப்படை இன்றி இல்லை. தேர்தல் அண்மிக்கும் இக்காலக்கட்டத்தில் அக்கொள்கை முரண்பாடுகள் பல இடங்களிலும் பல வெளிகளிலும் வெகுவாகவே அலசி ஆராயப்பட்டுள்ளன.

இந்த இரு அணிவகுப்புக்களின் (இதனை விட முன்னாள் போராளிகளின் “ஜனநாயக போராளிகள்”, ஏனைய கட்சிகளின் வடக்கு கிழக்கிற்கான வேட்பாளர்களுக்கும் இது பொருந்தும்) விஞ்ஞாபனங்களும், தேர்தல் பிரச்சாரங்களும் ஒரு விடயத்தைத் தெட்டத்தெளிவாக வெளிச்சமிட்டு காட்டுகின்றன. வடக்கு – கிழக்கு தமிழர் தாயக அரசியல் நகர்வுகளில் பங்கெடுக்கும், அவற்றை அவதானிக்கும் எவருமே மறுதலிக்க முடியாத விடயம் ஒன்றே — அது தாயகப் பிரதேசத்தில் அரசியலில் ஈடுபடும் எந்தவொரு அமைப்பின் மீதும் தெளிவாக அவதானிக்கக்கூடிய விடுதலைப்புலிகள் அமைப்பின் தேக்கம் (Hangover).

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினுள்ளேயே ஒரு சாரார் இன்னொரு சாராரை ‘துரோகிகள்’, ‘விலைபோனவர்கள்’ என்றும் தமக்குள்ளே தனிப்பட்ட முறையில் புலம்பிவிட்டு பின்னர் தேர்தல் காலத்தில் ஒன்று சேர்வதும், விடுதலைப் புலிகளினையும், ஆயுதப்போராட்டத்தையும் பற்றிப் பேசி தேர்தலில் போட்டியிட்டு வாக்குகளை குவிப்பதும், இந்திய ஆதரவு, இந்திய நலன்களை காக்கும் கொள்கைகளையே பேணுவதும் வழமையாகிவிட்டது என்று சாடும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உண்மையான மாற்றத்தை வேண்டி நிற்குமானால், தற்போதைய கூட்டமைப்பு எதிர் அலைக்கு அப்பால் சென்று பரந்த மக்கள் ஆதரவை வேண்டி நிற்குமானால் தமிழ்த் தேசிய அரசியலில் விடுதலைப் புலிகளின் பங்களிப்பையும், இன்றைய காலக்கட்டத்தில் இன்னும் நிலவும் அவ்வமைப்பின் பரந்த, ஆழமான தேக்கத்தை உடனடியாக இனங்கண்டு, ஒப்புக்கொண்டு, ஆராய்ந்து தனது நிலையை விளக்க வேண்டும். அந்த அமைப்பு ஆரம்பகால கட்டத்திலிருந்தே பிரயோகித்து வந்த சொற்பிரயோகங்களும், பெயர் சூட்டலும், பட்டங்களும், முத்திரைகளும் இன்றும் தொடரும் இவ்வேளை, அவற்றை கைவிட்டு முதிர்ந்த அரசியல் பேச்சாடல்களை மேற்கொள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி முன்வர வேண்டும். அக்கட்சியின் செயலாளர் அண்மையில் கூறியது போன்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அரசியல் கட்சியாக மாத்திரம் அல்லாது ஒரு தேசிய அரசியல் இயக்கமாக மாற உத்தேசிக்குமானால், தேசிய அமைப்பாளர் மணிவண்ணன் கூறியபடி வடக்கு – கிழக்கு சிவில் சமூகம் மற்றும் அரசியல் தலைமைகளை ஒன்றிணைத்து தமிழ்த் தேசிய அவை (உலகில் சுய நிர்ணயம் கோரிய பல குழுக்கள் ஸ்தாபித்த ‘Convention’ பாணியில்) ஒன்றை நிறுவ அக்கட்சிக்கு திட்டம் இருக்குமேயானால் அக்கட்சி உடனடியாக தாயக நிலப்பரப்பில், ஆயுதப்போராட்டத்தில், தமிழ்த் தேசிய வரலாற்றில் விடுதலைப் புலிகள் அமைப்பின் பங்களிப்பையும் (Legacy) பங்களிப்பின் விளைவுகளையும் ஆராய்வது இன்றியமையாதது ஆகின்றது. கடந்த ஆறு வருடங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதில் எதனையும் செய்யத் தவறியது என்பதே உண்மை. மக்கள் மயப்படுத்தப்பட்ட அமைப்பாக அன்றி வெறுமனே தேர்தல் அரசியல் மேற்கொண்ட கூட்டாகவும், “வெளிநாட்டு இராஜதந்திர” நகர்வுகளை முன்னெடுத்த அமைப்பாகவும் காணப்பட்டதால் கூட்டமைப்பு தேர்தல் காலங்களில் விடுதலைப் புலிகளின் வீர புராணங்களை பாடுவதும் (Romanticize), ஏனைய நேரங்களில் புலிகளின் தேக்கத்தை முற்றிலும் துறந்துவிட முயல்வதுமாக ஊசலாடிய நிலையிலேயே காணப்பட்டது.

இப்பதிவில் ஆரம்பத்தில் குறிப்பிட்ட காத்தான்குடி மக்கள் அவலம் போன்று தமிழீழ விடுதலைப் புலிகளினாலும் ஏனைய தமிழ் ஆயுதக்குழுக்களினாலும் வன்முறையால் விட்டுச்சென்ற வடுக்கள் சொல்லிலடங்காதவை. இது போன்ற வன்முறைச்சம்பவங்கள், அவற்றினால் ஏற்பட்ட மனித இழப்புக்கள், சொத்துக்களுக்கான சேதம் எவ்விதத்திலும் நியாயப்படுத்த முடியாதவை. அவற்றை அடையாளங்கண்டு ஏற்று, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி முன்நகர வேண்டும். மேலும் தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்த நிர்ப்பந்திக்கப்பட்டார்கள் என்று விஞ்ஞாபனத்தில் குறிப்பிடும் அக்கட்சி அதன் பிற்பாடு தமிழ்த் தேசிய காலவரிசையில் ஏற்பட்ட தமிழ் குழுக்களிடையான மோதல்கள், அதனாலான உயிர் சேதங்கள், முஸ்லிம் சமூகத்தின் மீதான தமிழ் குழுக்களின் போர் ஆகியவற்றை இனங்கண்டு ஏற்க வேண்டும். முள்ளிவாய்க்கால் முதற்கொண்டு ஏனைய தமிழர் தரப்பின் பேர் இழப்புக்கள், காணாமல் போதல்கள் என்பனவற்றை நினைவுப்படுத்தலை (Memorializing) மறுத்தும், தெற்கில் மாத்திரம் நினைவுகூரலை தானே முன்னின்றும் நடாத்தும் இலங்கை அரச கட்டமைப்புக்கள் போன்றல்லாது தமிழ் ஆயுதக்குழுக்களினால் பாதிக்கப்பட்டோரை அவர்களது சொந்தங்கள் நினைவுகூர தமிழர் தரப்பு ஆதரிக்க வேண்டும். உண்மையான மாற்றம் கோரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இந்தப்பணியை தலைமையேற்று, முன்னின்று செய்யுமா?

கூட்டமைப்பிலிருந்து வெளியேறி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நிறுவிய சிறிது காலத்திலேயே 1991இல் யாழ். குடாநாட்டிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் மீண்டும் தமது சொந்த நிலங்களுக்கு வர அதன் தலைமை கோரியதும், தமது “இரு தேசங்கள் – ஒரு நாடு” என்ற கோரிக்கை முஸ்லிம் மற்றும் இந்திய வம்சாவளி தமிழ் மக்களின் “உரிமைகளை மறுப்பதாக அர்த்தம் கொள்ளக்கூடாது” என்றும், அவர்களின் சுயநிர்ணய உரிமையை தாம் ஏற்றுக்கொள்ளத் தயாராக இருப்பதாகவும் அக்கட்சி விஞ்ஞாபனம் குறிப்பிட்டதும் வரவேற்கத்தக்கது. மேலும், தாம் போட்டியிடும் எல்லா மாவட்டங்களிலும் இவ்விரண்டு பெண் வேட்பாளர்களை நிறுத்தியிருப்பதுவும், அவர்களைப் பங்குதாரர் ஆக்கியிருப்பதுவும் பாராட்டுக்குரியது. ஆனால், இதனையும் தாண்டி இனிமேலும் காலம் தாழ்த்தாது ஆதிக்க வர்க்க கட்டமைப்புக்குள் அடங்கிய, சமூக செயற்பட்டாளர்களுடனான சந்திப்புகளிலும் வேறு தனிப்பட்ட சந்திப்புக்களிலும் ஆணவமாக, அப்பட்டமாக ஆணாதிக்க சிந்தனையை காட்டத் தவறாத, தம்மை சார்ந்த ஊடக அமைப்புகளினூடாக தமிழ்த் தேசிய கலந்துரையாடல்களை இருட்டடிப்பு செய்யும் தலைமைகளை கொண்ட கூட்டமைப்பினையும் தாண்டி அந்தக் கட்சி பயணிப்பது தான் உண்மையான மாற்றத்தையும், உண்மையான மக்கள் சார் அமைப்பாக உருவெடுப்பதையும், வடக்கு – கிழக்கு தாயகத்தில் தமிழ்ப்பேசும் மனங்களின் உண்மையான ‘சங்கமிப்பை’யும் கொண்டுவரும்.

தியாகி