படம் | Reuters Photo, NEWS.XINHUANET

சுமார் ஒரு தசாப்த காலமாக நாட்டை ஆட்சி செய்த பிறகு ஜனவரி தேர்தலில் மக்களால் தோற்கடிக்கப்பட்டு வீட்டுக்கு அனுப்பப்பட்ட ஜனாதிபதியை பிரதமராக மீண்டும் பதவிக்கு கொண்டு வர வேண்டுமென்ற கோரிக்கையை முன்னிறுத்தி மேற்கொள்ளப்பட்டு வருகின்ற பிரசாரங்கள் இலங்கையின் இன்றைய அரசியல் நிலைவரத்தில் கவனத்தை பெரிதும் ஈர்க்கின்ற விசித்திரங்களில் ஒன்று. “பிரகாசமான எதிர்காலத்துக்காக மஹிந்த” என்று சமூக வலைத்தளங்களில் சுலோகம் வேறு.

முன்னாள் ஜனாதிபதிக்கு ஆதரவாக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற பிரசாரங்களில் காணப்படக்கூடியதாக இருக்கின்ற உத்வேகம் மஹிந்த ராஜபக்‌ஷ மீண்டும் வந்து விடுவாரோ என்று பலருக்கும் மருட்சியை ஏற்படுத்துகின்றது என்பதிற் சந்தேகமில்லை.

இலங்கையில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக முன்னர் பதவி வகித்தவர்களில் எவருமே தேர்தலில் தோற்கடிக்கப்பட்டு அரசியலில் இருந்து ஓய்வு பெற்றதில்லை. இரு பதவிக் காலங்களுக்கு மேல் ஒருவர் ஜனாதிபதியாக பதவி வகிக்க முடியாது என்ற முன்னைய அரசியலமைப்பு ஏற்பாட்டின் பிரகாரம் அவர்கள் பதவியிலிருந்து இறங்கினார்கள். ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸ தனது முதலாவது பதவிக் காலத்தின் இறுதிக் கட்டத்தில் கொழும்பில் தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டார். அப்போது பிரதமராகவிருந்த டி.பி. விஜேதுங்க எஞ்சிய சுமார் ஒன்றரை வருட காலத்துக்கு ஜனாதிபதியாக இருந்து விட்டு அரசியலில் இருந்து ஒதுங்கிக் கொண்டார். அவர்களில் எவருக்கும் மூன்றாவது பதவிக் காலத்துக்கு தேர்தலில் போட்டியிடுவது என்ற பேச்சுக்கு இடமிருக்கவில்லை. தொடர்ந்து நீண்ட காலத்துக்கு பதவியில் இருக்க வேண்டுமென்ற பேராசையில் அரசியலமைப்புக்கான 18ஆவது திருத்தச் சட்டத்தை கொண்டு வந்து ஜனாதிபதிக்கு இருந்த இரு பதவிக்கால மட்டுப்பாட்டை நீக்கிய ராஜபக்‌ஷ, மூன்றாவது பதவிக் காலத்துக்கு மக்களின் ஆணையைக் கேட்பதற்காக (இரண்டாவது பதவிக் காலத்தின் இன்னமும் இரு வருடங்கள் இருந்த நிலையில்) ஜனவரியில் தேர்தலை நடத்தி அதில் போட்டியிட்டார்.

அந்தத் தேர்தலில் அடைந்த தோல்விக்குப் பிறகு அவர் அரசியலிலிருந்து ஒதுங்கி விடுவார் என்று பலரும் எதிர்பார்த்திருக்கக் கூடும். ஆனால், அவ்வாறு நடக்கவில்லை.

புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையின் கீழ் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வந்தபோதிலும் கூட, அக்கட்சிக்குள் பெருமளவுக்கு செல்வாக்கைச் செலுத்தக் கூடியவராக ராஜபக்‌ஷ விளங்குகிறார். இதை அண்மைக்கால நிகழ்வுப் போக்குகள் பிரகாசமாக வெளிக்காட்டுகின்றன. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சிறிய அங்கத்துவக் கட்சிகளின் தலைவர்களான வாசுதேவ நாணயக்கார, தினேஷ் குணவர்தன மற்றும் விமல் வீரவன்ச போன்றவர்கள் ராஜபக்‌ஷவுக்கு இருக்கின்ற செல்வாக்கைப் பயன்படுத்தி தங்களுக்கான ஒரு அரசியல் எதிர்காலத்தை உறுதி செய்து கொள்ள முயற்சிக்கின்றார்கள் என்பது வேறு விடயம். ஆனால், சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களில் கணிசமான எண்ணிக்கையானவர்களும் அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் மஹிந்த ராஜபக்‌ஷவை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பிரதமர் வேட்பாளராக நியமிக்க வேண்டுமென்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் வலியுறுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த நிலைவரம் கட்சியைத் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதில் ஜனாதிபதி எதிர்நோக்குகின்ற சவால்களின் பாரதூரத்தன்மையை வெளிக்காட்டுகிறது. ராஜபக்‌ஷவுக்கு ஆதரவான பிரசார இயக்கத்தை ஆரம்பத்தில் ‘ஓரமாக’ நின்று அவதானித்துக் கொண்டிருந்த சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களில் பலர் இப்போது வெளிப்படையாகவே அந்த இயக்கத்துடன் தங்களை அடையாளம் காட்டிக்கொள்ளத் துணிச்சலைக் கொண்டிருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது.

சுதந்திரக் கட்சி முறைப்படியாக பிளவுபடவில்லையே தவிர, அது இப்போது பெரும் குழப்பத்துக்குள்ளாகி இரு முகாம்களாகவே செயற்பட்டுக் கொண்டிருக்கிறது. மாகாண சபைகளினதும் உள்ளூராட்சி சபைகளினதும் பல உறுப்பினர்கள் இப்போது நாட்டை ஆட்சி செய்வது யார் என்பதை தெரிந்து கொண்டவர்களாக இல்லை என்று கூறி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது கட்சியின் அரசியல்வாதிகளின் போக்கு குறித்து தனது விசனத்தை வெளிப்படையாகவே காட்டிக்கொண்டார். அதன் காரணத்தினால் தான் உள்ளூராட்சி சபைகளின் பதவிக்காலம் முடிவடைந்த போது அவற்றை விசேட ஆணையாளர்களின் கீழ் கொண்டு வரவேண்டுமென்றும், பதவிக் காலத்தை நீடிக்குமாறும் தனது கட்சியின் மூத்த தலைவர்கள் விடுத்த வேண்டுகோளை கூட ஜனாதிபதி அலட்சியம் செய்தார்.

தற்போதைய நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு பொதுத் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகும்போது சுதந்திரக் கட்சிக்கு நேரக்கூடிய கதியை உய்த்துணர்வது எவருக்கும் சிரமமான காரியமல்ல. மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு உதவிய ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சுதந்திரக் கட்சி அடுத்த பொதுத் தேர்தலில் இரு முகாம்களாக நின்று போட்டியிடக்கூடிய சூழ்நிலையை காண்பதற்கு ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார். ஜனாதிபதியைப் பொறுத்தவரை தனது தலைமையிலான கட்சி பிளவுபடுவதைக் காண விரும்புகின்ற ஒரு பிரதமருடன் சேர்ந்து ஆட்சியை நடத்த வேண்டிய பரிதாபமான நிலை.

ராஜபக்‌ஷவுக்கு ஆதரவாகச் செயற்படுகின்ற அரசியல்வாதிகளுக்கு அடுத்த நாடாளுமன்றத் தேர்தலை பொறுத்தவரை பெருமளவுக்கு நம்பிக்கையை கொடுத்திருப்பது ஜனவரி ஜனாதிபதித் தேர்தலில் அவர் பெற்ற 58 இலட்சம் வாக்குகளேயாகும். அந்த வாக்குகள் நாடாளுமன்றத் தேர்தலில் ராஜபக்‌ஷ தலைமையில் தங்களுக்குப் பெருமளவு ஆசனங்களைக் கொண்டு வருமென்று அவர்கள் எதிர்பார்க்கின்றார்கள். ஜனாதிபதித் தேர்தலின் போது ராஜபக்‌ஷாக்கள் வசம் ஆட்சியதிகாரம் இருந்தது. அரச இயந்திரத்தையும் அரச வளங்களையும் உச்ச பட்சத்துக்கு துஷ்பிரயோகம் செய்து தான் அவர்களினால் அந்த 58 இலட்சம் வாக்குகளையும் பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருந்தது. (2005ஆம் ஆண்டுக்குப் பிறகு ராஜபக்‌ஷாக்கள் எப்போதுமே ஆட்சியதிகாரத்தை கையில் வைத்துக் கொண்டுதான் சகல தேர்தல்களையும் சந்தித்தார்கள்)

ஆனால், இப்போது அவர்கள் கையில் ஆட்சியதிகாரமோ அரச வளங்களோ இல்லாத நிலையில் அதேயளவு வாக்குகளைத் திரட்டக் கூடியதாக இருக்குமா என்பது முக்கியமான ஒரு கேள்வி. அத்துடன், ஜனாதிபதி தேர்தலைப் போலன்றி நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் வாக்களிக்கும் பாணியைத் தீர்மானிப்பதில் பல்வேறு காரணிகள் செல்வாக்குச் செலுத்துகின்றன என்பதும் கவனத்திலெடுக்க வேண்டிய ஒரு விடயமாகும்.

மஹிந்த ராஜபக்‌ஷவைப் பொறுத்தவரை, தன்னைச் சிங்கள மக்கள் தோற்கடிக்கவில்லை என்றும், தமிழர்களினதும் முஸ்லிம்களினதும் வாக்குகளே மைத்திரிபால சிறிசேனவின் வெற்றிக்கு காரணம் என்றும் நினைக்கிறார். சிங்கள மக்களின் ஜனாதிபதியாக அவரே இன்னமும் விளங்குகின்றார் என்ற தொனியிலேயே அவருக்கு ஆதரவான அரசியல்வாதிகள் மேடைகளில் பேசித் திரிகிறார்கள். தேர்தலுக்குப் பிறகு தெற்கில் தனது சொந்த ஊருக்குச் சென்ற ராஜபக்‌ஷ “ஈழம் வாக்குகளினால்தான் மைத்திரிபால சிறிசேன வெற்றி பெற்றார்” என்று மக்கள் முன்னிலையில் வெளிப்படையாகவே இனவாதம் பேசி தமிழ் மக்களின் வாக்குரிமையை இவர் கொச்சைப் படுத்தியதைக் காணக்கூடியதாக இருந்தது.

இன்று அவருக்காக வீதியில் இறங்கிப் பிரசாரம் செய்கின்ற அரசியல்வாதிகளும் சிறுபான்மையினத்தவர்களுக்கு எதிராக சிங்கள மக்களை மீண்டும் தூண்டிவிடத் தக்க வகையிலான நச்சுத் தனமான கருத்துகளையே முன்வைக்கிறார்கள். சிங்கள மக்களினால் மாத்திரம் தெரிவு செய்யப்படுபவரே இலங்கையின் ஜனாதிபதியாக இருக்க வேண்டுமென்ற பேரினவாதத் சிந்தனையை இவர்கள் ஊக்குவிக்கின்றார்கள். ராஜபக்‌ஷ பொதுத் தேர்தலில் களமிறங்குவாரானால் எந்தளவுக்கு இனவாதத் தன்மை கொண்டதாக அவரின் அணியின் பிரசாரங்கள் இருக்கும் என்பதை இப்போதே புரிந்துகொள்ளக் கூடியதாக இருக்கிறது.

மஹிந்த ராஜபக்‌ஷவை மீண்டும் பதவிக்கு கொண்டு வருவது, வெளிநாட்டு சதியிலிருந்து நாட்டைக் காப்பாற்றுவது என்ற கோஷங்களைத் தவிர, அவருக்காக ஒன்று சேர்ந்திருக்கும் அரசியல்வாதிகள் நாட்டு மக்கள் முன்னிலையில் எந்தவிதமான அர்த்தமுடைய அரசியல் திட்டத்தையும் முன்வைக்கிறார்கள் இல்லை. அவர்களிடம் அடிப்படையில் சிறுபான்மை இனத்தவர்ககள் மீதான பகைமை மற்றும் வெறுப்புணர்வை கொண்ட அரசியலைத் தவிர வேறு எதுவுமேயில்லை.

பத்து வருடங்கள் ஏற்கனவே நாட்டை ஆட்சி செய்த மஹிந்த ராஜபக்‌ஷ, சட்டத்தின் ஆட்சிச் சீர்குலைவு, இலங்கை இதுகாலவரை கண்டிராத ஊழல் மோசடிகள், அதிகார துஷ்பிரயோகம், ஆட்சியதிகாரத்தில் ஒரு குடும்பத்தினரினதும் அவர்களுக்கு வேண்டியவர்களின் ஏகபோகம் மற்றும் இனங்களிடையே நல்லிணக்கம் ஏற்படுவதைத் திட்டமிட்டுத் தடுக்கும் பேரினவாத அரசியல் ஆகியவற்றுக்கு காரணமாயிருந்தார். அத்தகைய ஒரு அரசியல்வாதி மீண்டும் பதவிக்கு வர வேண்டுமென்பது சிங்கள மக்களில் அதிகப் பெரும்பான்மையானவர்களின் அபிலாசையாக எவ்வாறு இருக்க முடியும்?

வீ. தனபாலசிங்கம்