படம் | AFP, THE BUSINESS TIMES

ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து தேசிய அரசு ஒன்றை அமைத்துள்ளன. ஆனால், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் பலர் தொடர்ந்தும் எதிர்க்கட்சி ஆசனத்திலேயே இருக்கின்றனர். தேசிய அரசு என்றால் ஆதரவு கொடுக்கும் கட்சிகள் உறுப்பினர்கள் அனைவருமே அமைச்சர்களாக அல்லது பிரதியமைச்சர்களாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஆனால், தேசிய அரசின் கொள்கைகளை அவர்கள் ஆதரிக்க வேண்டும். அத்துடன், எதிர்க்கட்சித் தலைமை பொறுப்பை மற்றைய கட்சியிடம் கையளிக்க வேண்டும். ஆனால், எதிர்க்கட்சித் தலைமைப் பொறுப்பையும் தாங்களே ஏற்க வேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அடம்பிடிக்கின்றது.

இரு காரணங்களின் அடிப்படை

இதற்கு இரண்டு காரணங்களைக் கூறலாம். ஒன்று, தமிழர்களிடம் எதிர்க்கட்சித் தலைமை பதவி இருக்கக்கூடாது என்ற இனவாத நோக்கம். இரண்டாவது, எதிர்க்கட்சியில் இருந்து கொண்டு தேசிய அரசை விமர்சிப்பது என்ற போர்வையில் ஐக்கிய தேசிய கட்சி மீது தேவையற்ற முறையில் குற்றம் சுமத்தி மக்கள் மத்தியில் செல்வாக்கை மீளக் கட்டியெழுப்ப முடியும் என்ற நம்பிக்கை. இந்த இரண்டு காரணங்களும் தூரநோக்கு சிந்தனையுடையது.

பொதுத் தேர்தல் ஒன்றை மையமாகக் கொண்டு இந்த இரண்டு கட்சிகளும் அரசியல் நடத்துகின்றன என்பது வெளிப்படை. ஆனாலும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைப் பொறுத்தவரை அதிகாரத்தை மீண்டும் எப்படியாவது கைப்பற்ற வேண்டும் என்பதும் சிங்கள பௌத்த தேசியவாத வாக்குகளை தங்கள் கட்சிக்குரியதாகவே தொடர்ந்தும் வைத்திருக்க வேண்டும் என்ற நோக்கமும் முக்கியமானது. போர் வெற்றி என்பது தங்கள் கட்சிக்குரியது என்ற கருத்தை மக்கள் மத்தியில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்தும் பரப்பி வருகின்றனர்.

சிங்கள கிராமங்களில் பிரச்சாரம்

மாத்தறையில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் உரைநிகழ்த்திய கட்சியின் பொதுச் செயலாளர் அனுர பிரியதர்ஷன யாப்பா, போர் வெற்றியின் உரிமையை ஐக்கிய தேசியக் கட்சி தனதாக்கிக் கொள்ள முற்படுவதாக குற்றம் சுமத்தியிருந்தார். ஆகவே, இதன் பின்னணியில்தான் எதிர்க்கட்சித் தலைவர் பதவியையும் தமிழ்த் தரப்புக்கு செல்ல விடாமல் தடுக்கும் முயற்சியில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஈடுபடுகின்றது என்ற முடிவுக்கு வரலாம். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவை அரசியலில் இருந்து ஒதுக்க வேண்டும் என்ற நோக்கமும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் பலரிடம் உண்டு.

ஆனால், அதனை வெளிப்படையாக கூற முடியாத நிலையில் ஐக்கிய தேசிய கட்சி மீதும் புதிய அரசின் நூறு நாள் வேலைத் திட்டங்களையும் குறை கூறுகின்றனர். அதேவேளை, தேசிய அரசிலும் பங்கெடுத்து தமது கட்சி மீதான செல்வாக்கை மீண்டும் அதிகரித்து அதன் மூலமே கட்சியில் செல்வாக்கு பெற்ற ஒருவரை பிரதமராக்க அவர்கள் முற்படுகின்றனர். கட்சிக்குள் மீண்டும் ஒருவர் செல்வாக்குப் பெற்றால் மஹிந்த ராஜபக்‌ஷ இயல்பாகவே ஒதுக்கப்பட்டு விடுவார் என்ற நம்பிக்கையும் உண்டு. அதேவேளை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை மீள கட்டியெழுப்புவதற்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா மேற்கொள்ளும் முயற்சியை குழப்புவதற்கும் சிலர் முற்படுகின்றனர்.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா

சந்திரிக்கா முன்னெடுக்கும் திட்டங்களை குழப்புவதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று, சந்திரிக்காவினுடைய கடந்த கால செயற்பாடுகளில் ஏற்பட்ட அதிருப்தி. இரண்டாவது, ரணில் விக்கிரமசிங்கவுடன் கூட்டுச் சேர்ந்து ஜனாதிபதித் தேர்தலில் செயற்பட்டமையும் மைத்திபால சிறிசேனவுடன் நெருக்கமான உறவுகள் உள்ளமையும் தான் காரணம். ஆனாலும், சந்திரிக்காவை பொறுத்தவரை மைத்திரிபால சிறிசேனவை முன் நகர்த்தி ரணில் விக்கிரமசிங்கவையும் வைத்துக் கொண்டு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை மஹிந்த ராஜபக்‌ஷ இல்லாத கட்சியாக மாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் செயற்படுகின்றார்.

சந்திரிக்காவின் இந்த அணுகுமுறையும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களின் மேற்படி செயற்பாடுகளையும் ரணில் விக்கிரமசிங்க நன்கு உணர்ந்துள்ளார். அதாவது, தமது கட்சியை மீள கட்டியெழுப்புவது என்ற நோக்கமும் ஆட்சியை கைப்பற்றுவது என்ற சிந்தனையும் குறிப்பாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ இல்லாத கட்சியாக ஸ்ரீலங்கா சுநத்திரக் கட்சியை மாற்றியமைக்க வேண்டும் என்ற நோக்கமே இவர்களிடம் உள்ளது என்பதையும் ரணில் விக்கிரமசிங்க அறிந்துள்ளர். கொழும்பில் வைபவம் ஒன்றில் உரையாற்றிய அவர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் உள்ள இரண்டு விதமான குழுக்களின் சிந்தனையும் ஒன்றுதான் என்ற கருத்தை வெளியிட்டார்.

முன்னாள் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை மையப்படுத்திய ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஏனைய கட்சிகளின் உறுப்பினர்களான விமல் வீரவன்ச, தினேஸ் குணவர்த்தன, வாசுதேவ நாணயக்காரா ஆகியோர் மஹிந்த ராஜபக்‌ஷவின் பின்னால் தொடர்ந்தும் நிற்கின்றனர். இதனால், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் செயலாளர் சுசில் பிரேமஜயந்த மஹிந்த ராஜபக்‌ஷவின் பின்னால் நிற்கும் கட்சிகளின் செயற்பாட்டை ஆதரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

ஆனாலும், சுசில் பிரேமஜயந்த சந்திரிக்காவுக்கு விசுவாசமானவர் என்பது மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு நன்கு தெரியும். இந்த நிலையில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மேற்படி இரண்டு பிரிவாக செயற்பட்டு எந்தவகையான இறுதி முடிவை எடுக்கப்போகின்றனர் என்பது தொடர்ந்தும் குழப்பமாகவே உள்ளது. இதன் காரணமாகவே கட்சியில் இரு பகுதியினர் இனவாத பேச்சுக்களை முன்னெடுக்கின்றனர். அதற்கு வசதியாக எதிர்க்கட்சித் தலைவர் விவகாரம் அவர்களுக்கு சாதகமாக மாறியுள்ளது.

ரணில் விக்கிரமசிங்கவின் தந்திரம்

இந்த இடத்தில் ரணில் விக்ரமசிங்க இரண்டு வகையான இராஜதந்திர நகர்வுகளை முன்னெடுக்கின்றார். ஒன்று, வட மாகாண சபை முதலமைச்சருடனான முரண்பாடு. இரண்டாவது, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் உள்ள மேற்படி இரண்டு பிரிவினருக்கும் விரும்பாத முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவையும் அவரது சகாக்களையும் காப்பாற்றுவது அல்லது விட்டுக் கொடுத்து செயற்படுவது. இங்கே விட்டுக் கொடுத்து செயற்படுதல் என்பது அவர்களுடைய அரசியல் நடவடிக்கைகளுக்கு மறைமுகமாக ஒத்துழைப்பு வழங்குவதைக் குறிக்கும். குறிப்பாக மஹிந்த ராஜபக்‌ஷ அரசில் பதவி வகித்த முன்னாள் அமைச்சர்கள் சிலருக்கு தேசிய அரசு என்ற போர்வையில் அமைச்சுப் பதவிகளை வழங்கி அவர்கள் மீதான ஊழல் மோசடிக் குற்றச்சாட்டுகளைத் தற்காலிகமாக தவிர்த்தல் அல்லது அவர்கள் மீதான விசாரணைகளை ஒத்திப் போடுதல் என்ற அணுகுமுறை மூலம் தமது நோக்கத்தை ரணில் விக்கிரமசிங்க நிறைவேற்றுகின்றார் என்ற முடிவுக்கு வரலாம்.

விக்னேஸ்வரனுடன் முரண்படுவதன் மூலம் இனவாத வாக்குகளை தக்கவைக்கின்றார். இந்த இடத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைப் பொறுத்தவரை ரணில் விக்கிரமசிங்க, சந்திரிக்கா என்ற இரு தூண்களின் செயற்பாடுகளில் கிடைக்கும் லாபம், நஷடத்தில் பங்கெடுப்பது என்ற நோக்கத்தில் இருக்கின்றார் என்றும் கூறலாம். இந்த குழப்பங்களிற்கு மத்தியில் ஜே.வி.பியும் வித்தியாசமான அரசியல் லாபம் ஒன்றை தேட முற்படுகின்றது. வழமைபோன்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நடப்பதை பார்த்துக் கொண்டிருக்கின்றது. அதேவேளை, ஊழல் மோசடியும் அரச இயந்திரத்தின் ஒரு பகுதியாக அங்கீகாரம் பெற்றுவிடும். தோல்வியடையப் போவது மக்கள் மத்திரமே.

தினக்குரல் பத்திரிகைக்காக அ.நிக்ஸன் எழுதிய கட்டுரை இங்கு தரப்பட்டுள்ளது.