படம் | செல்வராஜா ராஜசேகர்

கொழும்பிலுள்ள ஒரு மனித உரிமைச் செயற்பட்டாளரின் தகவல் இது. ஆட்சி மாற்றத்திற்கு முன்பு கொழும்பிலுள்ள மனித உரிமைச் செயற்பாட்டாளர்களோடு சக்திமிக்க மேற்கு நாடுகளின் உயர் அதிகாரிகள் நெருங்கி செயற்பட்டிருக்கிறார்கள். மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க் குற்றங்கள் தொடர்பான தகவல்களைத் திரட்டுவதற்காக நாட்டுக்கு உள்ளேயும் வெளியேயும் பல சந்திப்புக்களை மேற்கொண்டிருக்கிறார்கள். மேற்படி மனித உரிமைச் செயற்பாட்டாளர்களின் உதவியோடு உள்நாட்டில் இருக்கக்கூடிய சாட்சியங்களைச் சேகரித்திருக்கிறார்கள். இவ்வாறு சேகரிக்கப்பட்ட சாட்சியங்களின் அடிப்படையில் தயாரிக்கப்படக் கூடிய ஐ.நா. மனித உரிமை ஆணையகத்தின் அறிக்கையானது, இலங்கை அரசை நெருக்கடிக்கு உள்ளாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. பொது எதிரணியின் பிரதானிகளில் சிலர் மீதும் குற்றச்சாட்டுக்கள் வைக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகின்றது.

ஆனால், இவ்வாறு போர்க்குற்றச் சான்றாதாரங்களையும், சாட்சியங்களையும் தொகுத்துக்கொடுத்த மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் சிலர் அண்மையில் கொழும்புக்கு விஜயம் செய்த மூத்த அமெரிக்க அதிகாரி ஒருவரைச் சந்திப்பதற்கு முயன்றபோது கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் அதற்குரிய ஒழுங்குகளைச் செய்வதற்கு பின்னடித்ததாகக் கூறப்படுகின்றது. குறிப்பிட்ட அந்த மூத்த அதிகாரிக்குப் பதிலாக கீழ்நிலை அதிகாரிகளை வேண்டுமென்றால் சந்திக்கலாம் என்று கூறப்பட்டதாகவும் ஒரு தகவல் உண்டு. இது தொடர்பில் சம்பந்தப்பட்ட மனித உரிமைச் செயற்பாட்டாளர் ஒருவர் பின்வரும் தொனிப்படக் கருத்துத் தெரிவித்திருந்தார்….. “ஆட்சி மாற்றத்திற்கு முன்பு எங்களை மாதக் கணக்கில் சந்தித்த மூத்த அதிகாரிகள் இப்பொழுது நிமிடக் கணக்கில் சந்திப்பதற்கு முன் அனுமதி தர மறுக்கிறார்கள். எங்களுடைய உதவியோடு தொகுக்கப்பட்ட அறிக்கையை அவர்கள் ஒத்தி வைக்கப்போவதாக அல்லது அதன் கடுமையைத் தணிக்கப் போவதாகத் தெரிகிறது. இது விடயத்தில் மிகுந்த ஆபத்துக்கும் மிகுந்த இடர்களுக்கும் மத்தியில் துணிந்து முன்வந்து எங்களோடு செயற்பட்ட உள்ளூர் முகவர்களின் முகத்தில் நாங்கள் இனி எப்படி முழிப்பது?” என்று.

ஆனால், அதேசமயம் அண்மையில் கொழும்புக்கு விஜயம் செய்த அமெரிக்காவின் தெற்காசிய விவகாரங்களுக்கான பிரதி செயலாளர் நிஷா பிஸ்வால் சில சிவில் சமூகப் பிரமுகர்களைச் சந்தித்தபோது, (முக்கியமான மனித உரிமைச் செயற்பாட்டாளர்களை அல்ல) “எமது பணியிலக்கு இன்னமும் முழுமையாகப் பூர்த்தி செய்யப்படவில்லை” என்று தொனிப்படக் கருத்துத் தெரிவித்துள்ளார். அவர்கள் பணி இலக்கு என்று கருதியது எதனை? இப்பொழுது நிகழ்ந்துகொண்டிருக்கும் மாற்றங்களை திரும்பிச்செல்லவியலாத ஒரு புள்ளி வரை கொண்டு சென்று ஸ்திரப்படுத்துவதுதான். அதாவது, மாற்றத்தைப் பாதுகாத்து ஆகக்கூடிய பட்சம் அதை ஸ்திரமானதாக மாற்றுவது.

மாற்றத்தை எப்படிப் பாதுகாப்பது? அவர்கள் பின்வரும் வழிகளில் சிந்திக்கலாம்.

  1. மாற்றத்திற்கு எதிரான சிங்களத் தரப்புக்களை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது.
  2. மாற்றத்திற்கு எதிரான தமிழ்த் தரப்புக்களை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது.
  3. மாற்றத்தைப் பலப்படுத்தத் தேவையான அரசியல், சமூக, பொருளாதார உளவியல் சூழலை மேலும் விருத்தி செய்வது.

இவற்றைச் சிறிது விரிவாகப் பார்க்கலாம்.

மாற்றத்தை எதிர்க்கும் சிங்களத் தரப்பு எனப்படுவது ராஜபக்‌ஷக்களின் தரப்புத்தான். அத்தரப்பை சக்திமிக்க நாடுகள் ஏற்கனவே கையாளத் தொடங்கிவிட்டன. போர்க் குற்றச்சாட்டுக்களை ஒரு துருப்புச் சீட்டாகப் பயன்படுத்தி அவர்களைக் கையாள முயற்சிக்கலாம். ராஜபக்‌ஷ சகோதரர்களில் இருவர் அமெரிக்க குடியுரிமைகளைப் பெற்றிருப்பது இது விடயத்தில் மேற்கு நாடுகளுக்கு ஒரு பிடியாகும். கடந்த மூன்று ஆண்டுகளாக ஒவ்வொரு ஜெனீவாத் தீர்மானத்தின் போதும் தென்னிலங்கையில் சிங்கள மக்கள் மத்தியில் வெளியாருக்கு எதிரான பயப்பிராந்தியானது அதிகரித்து வந்துள்ளது. அதே காலப்பகுதிகளில் தமிழகத்திலும் புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியிலும் ஏற்படும் எழுச்சிகள் மேற்படி பயப்பிராந்தியை மேலும் அதிகரிப்பவைகளாகவே காணப்பட்டன. சிங்கள மக்கள் மத்தியில் இருக்கக்கூடிய மேற்படி பயப்பிராந்தியை வெற்றிகரமாகக் கையாண்டதன் மூலமே ராஜபக்‌ஷ தன்னை நிலை நிறுத்தி வந்தார். எனவே, ராஜபக்‌ஷக்களை வெற்றிகரமாகக் கையாள்வது என்பது சிங்கள மக்கள் மத்தியில் பயப்பிராந்தியை அதிகப்படுத்தும் வெளிக்காரணிகளையும் உட்காரணிகளையும் ஒரு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதுதான். இத்தகையதொரு நோக்கு நிலையில் இருந்தே இனிவரக்கூடிய ஐ.நா. தீர்மானங்களைக் குறித்தும், மனித உரிமை ஆணையகத்தின் செயற்பாடுகள் குறித்தும் முடிவுகள் எடுக்கப்படும்.

இரண்டாவதாக – மாற்றத்தை எதிர்க்கும் தமிழ்த்தரப்புக்களை கையாள்வது. உள்நாட்டில் மாற்றத்தை எதிர்க்கும் தமிழ்தரப்புக்கள் ஒரு பலமான திரளாகக் காணப்படவில்லை. மாற்றத்தை ஆதரித்த கூட்டமைப்பே மக்கள் ஆணையைப் பெற்ற கட்சியாகக் காணப்படுகின்றது. எனவே, தமிழர்கள் தரப்பில் மாற்றத்தை எதிர்க்கக் கூடிய சக்திகள் ஒப்பீட்டளவில் சிங்களத் தரப்பைவிடவும் பலவீனமாகவே காணப்படுகின்றன. இதுவும் மேற்கு நாடுகளுக்கும், இந்தியாவுக்கும் அனுகூலமான ஓர் அம்சம்.

ஒப்பீட்டளவில் அதிகரித்த எதிர்ப்பு புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியிலேயே எழக்கூடும். அது கூட போரின் இறுதிக்கட்டத்தில் புலம்பெயர்ந்த நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் அளவிற்கு உயர்வானதாக இருக்கப்போவதில்லை. அப்படிப்பட்ட உணர்ச்சிக்கொதிப்பான மிகக் கொந்தளிப்பான ஆர்ப்பாட்டங்களையே மேற்குநாடுள் அதிகம் பொருட்படுத்தவில்லை என்பதை இங்கு சுட்டிக்காட்ட வேண்டும். மேலும், ராஜபக்‌ஷ அரசிற்கு எதிராக ஓர் அழுத்தத்தை பிரயோகிக்கும் உத்தியாக புலம்பெயர்ந்த தமிழ் சமூகத்தையும் அதன் எழுச்சிகளையும் மேற்கு நாடுகள் அளவுக்கு மிஞ்சிப் பெருப்பித்துக்காட்டின என்று ஓர் அவதானிப்பும் உண்டு. இத்தகையதோர் பின்னணியில் மாற்றத்தையும் பாதுகாத்து தமிழர்களுடைய அபிலாசைகளையும் எப்படிப் பாதுகாப்பது என்ற கேள்விக்கு மேற்கு நாடுகளும் இந்தியாவும் விடை கண்டுபிடிக்க வேண்டி இருக்கும்.

இனி மூன்றாவது – அதாவது, மாற்றத்தைப் பலப்படுத்தும் விதத்தில் அரசியல் சமூக பொருளாதார உளவியல் சூழலைக் கட்டியெழுப்புவது. இது ஏற்கனவே தொடங்கிவிட்டது. வர இருக்கும் பொதுத் தேர்தலில் மஹிந்தவைத் தோற்கடிப்பது என்பதே அதன் பிரதான இலக்காகும்.

அதேசமயம், மாற்றத்தை மனோரதியப்படுத்தும் விதத்திலான வேலைத்திட்டங்கள் இனிமேல் முன்னெடுக்கப்படும். மாற்றத்தை ஒரு மாயையாகக் கட்டி எழுப்ப வேண்டிய தேவை அவர்களுக்கு உண்டு. பிலிப்பைன்சிலும் மியான்மரிலும் இவ்வாறான செயற்பாடுகள் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. அந்த வேலையைச் செய்வதற்கு அரசசார்பற்ற நிறுவனங்களையும், சிவில் சமூகங்களையும், செயற்பாட்டு இயக்கங்களையும், மத நிறுவனங்களையும், ஊடகங்களையும், புத்திஜீவிகளையும், படைப்பாளிகளையும், அரசியல்வாதிகளையும் அவர்கள் கையாள முற்படுவார்கள். இந்தியாவில் உள்ள ஈழ அகதிகள் திரும்பி வரலாம் என்று கூறப்படுவதும் அப்படியொரு வேலைத்திட்டம்தான். கணிசமான அளவு இந்திய மற்றும் மேலைத்தேய ஊடகங்கள் மாற்றத்தை ஒரு மாயையாகக் கட்டி எழுப்பி வருகின்றன. சிங்கள மக்கள் இந்த மாயைக்குள் சிக்கி உழல்வதால் அவர்களுக்கு கெடுதி எதுவும் வரப்போவதில்லை. ஆனால், தமிழ் மக்களுக்கு?

யாழ்ப்பாணத்தில் இருக்கும் ஒரு கலைச் செயற்பாட்டாளர் கேட்டார்… “விலைகளைக் குறைக்குமாறும், சம்பளத்தைக் கூட்டுமாறும் நாம் கேட்டோமா? பாதைகளைத் திறப்பதும், தடைகளை நீக்குவதுமா எங்களுடைய அடிப்படைப் பிரசசினைகள்? நாங்கள் இதைவிட பயங்கரமானப் பிரச்சினைகளைக் கடந்து வந்திருக்கின்றோம். ஆனால், இப்பொழுது இவைதான் எங்களுடைய பிரச்சினைகள் என்று காட்டப்பார்க்கிறார்கள்…” என்று.

உண்மைதான் தமிழ் மக்கள் இதைவிடப் பயங்கரமான சூழ்நிலைகளுக்குள் வாழ்ந்திருக்கிறார்கள். பதுங்கு குழிக்கும் வீட்டுக்கும் இடையே ஈரூடகவாசிகளாகக் கிழிபட்டிருக்கிறார்கள். சவர்க்காரத்திற்குப் பதிலாக பனம் பழப்பாணியைப் பயன்படுத்தியிருக்கிறர்கள். தேங்காய்ப் பாலுக்குப் பதிலாகக் கஞ்சியைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். மின்சாரத்திற்குப் பதிலாக ஜாம் போத்தல் லாம்பை பயன்படுத்தியிருக்கிறார்கள். காகிதாதிகள் கிடைக்காத போது கார்ட்போட் மட்டைகளில் பத்திரிகைகளைப் பதிப்பித்து வாசித்திருக்கிறார்கள். மிதி வண்டிச் சில்லை சுற்றி வானொலி கேட்டிருக்கிறார்கள். போரின் இறுதிக் கட்டத்தில் தேங்காய் இல்லாமல், பச்சைமிளகாய் இல்லாமல், தூள் இல்லாமல், உப்பு இல்லாமல் கண்ணீரையே உப்பாக்கி சமைத்துச் சாப்பிட்டிருக்கிறார்கள். உலகின் மிக நீண்ட கழிப்பறை என்று வர்ணிக்கப்பட்ட பொக்கணையில் இருந்து முள்ளிவாய்க்கால் வரையிலுமான வங்கக் கடற்கரையில் எதுவிதமான மறைப்புக்களுமின்றி மலம் கழித்திருக்கிறார்கள். நலன்புரி நிலையங்களில் மலக்குழிக்குள் தவறி விழுந்து உயிரிழந்திருக்கிறார்கள். இதை இப்படியே முடிவின்று எழுதிக்கொண்டே போகலாம்…. ஆயுதமோதல்கள் முடிவுக்கு வந்து சுமார் ஆறு ஆண்டுகளாகிவிட்டன. ஆனால், இப்பொழுதும் தமிழ் மக்களால் இறந்து போனவர்களை நினைவுகூர முடியவில்லை. இறந்துபோனவர்களையும் காணாமல் போனவர்களையும் எண்ணிக் கணக்கெடுக்க முடியவில்லை. தமது அரசியல் கைதிகளை விடுவிக்க முடியவில்லை. பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்க முடியவில்லை. இவ்வாறாக ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்து சுமாராக ஆறு ஆண்டுகள் ஆன பின்னரும் கூட கூட்டுக் காயங்களிலும், கூட்டு மனவடுக்களிலும் உழன்று கொண்டிருக்கும் ஒரு சமூகத்திற்கு நிவாரணங்களும் விலைக்குறைப்பும் சம்பள உயர்வும் ஒரு கூட்டுச் சிகிச்சையாக அமையுமா?

நிச்சயமாக இல்லை. தமிழ் மக்கள் ஒரு மக்கள் திரளாக தங்களுக்குரிய கூட்டு உரிமைகளை அனுபவிக்கும் ஓர் அரசியற் சூழலே அவர்களுக்குரிய கூட்டுச் சிகிச்சையாக அமைய முடியும். அப்படி ஒரு கூட்டுச் சிகிச்சைக்கான உரையாடல்கள் எவையும் அற்றதோர் வெற்றிடத்தில் வெளிப்பூச்சு மருந்தையே உள்மருந்தாக கருதி மயங்கலாமா? அரசியல்வாதிகளும், புத்திஜீவிகளும், ஊடகங்களும் அந்த மாயத் தோற்றத்தைக் கட்டி எழுப்ப உதவி புரியலாமா? ஆயின், மாற்றத்தையும் தமிழ் மக்களின் கூட்டு உரிமைகளையும் பாதுகாப்பது எப்படி? அல்லது இந்த மாற்றங்கள் தமிழ் மக்களின் கூட்டு உரிமைகளைப் பாதுகாப்பதற்கான மாற்றங்களா?

நிச்சயமாக இல்லை. நிகழும் மாற்றங்களால் தமிழ் மக்களுக்கும் உடனடி நன்மைகள் உண்டு என்பதை இக்கட்டுரை ஏற்றுக்கொள்கிறது. ஆனால், இந்த மாற்றங்களின் மூலம் தன்னைப் புதுப்பித்துக் கொண்டிருக்கும் சிங்கள பெளத்த மேலாண்மைவாத மனோநிலையில் ஏற்படக்கூடிய மாற்றமே தமிழ் மக்களின் கூட்டு உரிமையைப் பாதுகாக்கக் கூடியது. அதல்லாத ஏனைய எல்லா மாற்றங்களும் அந்த மனோநிலையை புதிய காலகட்டங்களுக்கு ஏற்ப புதுப்பிக்கும் வகையிலான மாற்றங்களே! சக்திமிக்க நாடுகள் மனித உரிமைகளையும் போர்க்குற்ற விசாரணைகளையும் அரசியல் கருவிகளாக அல்லது அழுத்தப்பிரயோக உத்திகளாக கையாண்டுவரும் ஒரு பூகோளச் சூழலில் திரும்பவும் திரும்பவும் கைவிடப்படும் மக்களாக தமிழ் மக்களே காணப்படுகிறார்கள். யாருடைய வாக்குகளை வைத்து மாற்றம் உறுதி செய்யப்பட்டதோ அந்த மக்கள் கூட்டமே எந்தவிதமான பாதுகாப்பு உத்தரவாதமும் இன்றி இனிமேலும் காத்திருக்குமாறு கேட்கப்படுகின்றது.

அண்மையில் லோர்ட் நசெபி யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். பிரித்தானிய நாடாளுமன்றத்தில் இலங்கை விவகாரங்களுக்கு இவரே பொறுப்பு. தனது விஜயத்தின் பின் கருத்துத் தெரிவிக்கும் போது தமிழ் மக்கள் இறந்தவர்களை நினைவு கூர்வதற்கான ஒரு நாளை சமாதான நாளாக அனுஸ்டிக்க முடியுமா என்று தான் ஆராயாப்போவதாக் கூறியிருக்கிறார்.

இறந்தவர்களை நினைவு கூருவது அல்லது இறந்தவர்களையும் காணாமல் போனவர்களையும் கணக்கெடுப்பது போன்றவை அனைத்தும் ஒரு மக்கள் கூட்டத்தின் கூட்டுரிமையின்பாற்பட்ட விவகாரங்களே! தமிழ் மக்களின் கூட்டு உரிமையைப் பாதுகாப்பற்கான பொருத்தமான உரையாடல்கள் எவையும் இதுவரையிலும் தொடங்கப்படவில்லை. நாடாளுமன்றத் தேர்தல் வரையிலும் பேசக்கூடாத ஒரு விவகாரமாகவே அது கருதப்படுகின்றது. அதற்குப் பின்னரும் அது எப்பொழுது பேசப்படும் என்பது குறித்து உத்தியோகபூர்வமான வெளிப்படையான அறிவிப்புக்கள் எவையும் இதுவரையிலும் கிடைக்கவில்லை. இத்தகையதொரு பின்னணியில் லோர்ட் நசெபி கூறுகிறார், “தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு ஒன்று கிடைக்கும் என்று தமிழ் மக்கள் நம்பிக்கையுடன் இருக்கவேண்டும். அதேவேளை, புலம்பெயர்ந்தவர்களும் நம்பிக்கையுடன் இருக்க வேண்டும்” என்று.

எல்லாரும் தமிழ் மக்களையே காத்திருக்குமாறு கேட்கிறார்கள். ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்து ஆறு ஆண்டுகள் ஆன பின்பும் கூட்டுக் காயங்களிலும், கூட்டு மனவடுக்களிலும் உழன்றுகொண்டிருக்கும் ஒரு சமூகத்தையே எல்லாரும் காத்திருக்குமாறு கேட்கிறார்கள்.

தமிழ் மக்கள் இனியும் எவ்வளவு காலத்திற்குக் காத்திருக்கப் போகிறார்கள்? அல்லது வெளியாருக்காகக் காத்திருப்பதற்குப் பதிலாக வெளியாரைக் கையாளும் ஒரு வளர்ச்சியை எப்பொழுது பெறப்போகிறார்கள்?

தினக்குரல் பத்திரிகைக்காக நிலாந்தன் எழுதிய கட்டுரை இங்கு தரப்பட்டுள்ளது.