படம் | AP Photo/Saurabh Das, ABC

13 ஜனவரி 2015

ஜனாதிபதி அவர்களே,

மதிப்புக்குரிய அரச அதிகாரிகளே,

நண்பர்களே,

உங்கள் உளப்பூர்வமான வரவேற்பிற்கு நன்றி. இலங்கைக்கு விஜயம் செய்தல் மற்றும் உங்கள் அனைவருடனும் செலவிடும் இந்த நாட்களை நான் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தேன். இந்நாட்டின் இயற்கை எழில் காரணமாக ‘இந்து சமுத்திரத்தின் நன்முத்து’ என இலங்கை பெயர் பெற்றுள்ளது. இதை விடவும், இத்தீவில் வசிப்பவர்களின் சிநேக மனப்பான்மை போன்றே செழுமைமிக்க அவர்களுடைய கலாசாரம் மற்றும் சமய பன்முகத்தன்மை ஆகியன அதிக புகழ் பெற்றவையாகும்.

ஜனாதிபதியவர்களே! உங்களுக்குள்ள புதிய பொறுப்புக்களுக்காக தங்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன். மேலும், தமது வருகை மூலம் நமக்கு மரியாதை செலுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரச அதிகாரிகளுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன். அத்துடன், இந்நாட்டு மக்களின் வாழ்வில், முக்கிய பாத்திரங்களாக செயற்பட்டு வரும் சமயத் தலைவர்கள் இங்கு வருகை தந்துள்ளமைக்கும் எனது விசேட நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். அது போன்றே, விசுவாசிகளுக்கும், பாடற்குழு அங்கத்தவர்களுக்கும், இந்த விஜயத்தை சாத்தியமாக்குவதற்கு உதவி செய்த அனைவருக்கும் என்னுடைய மகிழ்ச்சியைத் தெரிவித்துக்கொள்கின்றேன். உங்களது அன்பு மற்றும் விருந்தோம்பலுக்கும் எனது ஆள்மனதில் இருந்து நன்றி கூறிக்கொள்கின்றேன்.

இலங்கைக்கான எனது வருகையானது, அடிப்படையில் ஒரு ஆன்மிக விஜயமொன்றாகும். கத்தோலிக்க தேவாலயங்களின் உலகத் தலைவர் என்ற ரீதியில் எனது இலங்கை விஜயம் அமைந்துள்ளது. இந்தத் தீவில் உள்ள கத்தோலிக்கர்களைச் சந்தித்து அவர்களுடன் இணைந்து வழிபாட்டில் ஈடுபடவுள்ளேன். இன, மத வேற்றுமை பாராட்டாமல் கிறிஸ்தவ தொண்டு மற்றும் மக்களுக்கு அன்பு செலுத்தும் கிறிஸ்தவப் பண்பின் முன்மாதிரியாகத் திகழ்ந்த அருளாளர் ஜோசப் வாஸ் அடிகளாரை புனிதத் திருநிலைக்கு உயர்த்துவது எனது இந்த விஜயத்தின் மற்றுமொரு முக்கிய குறிக்கோளாகும். கத்தோலிக்க தேவாலயங்கள் இலங்கையில் உள்ள மக்கள் அனைவர் மீதும் அன்பு செலுத்துகிறது என்பதையும் எனது விஜயத்தின் மூலம் உறுதிப்படுத்த விரும்புகிறேன்.

உலகில் பல்வேறு சமூகங்கள் தமக்கிடையில் யுத்தம் புரிந்து வரும் ஒரு கவலைக்கிடமான சூழல் தொடர்கின்றது. வேறுபாடுகள் மற்றும் கருத்து முரண்பாடுகளை விட்டு விட முடியாமை, பழைய மற்றும் புதிய மத மற்றும் இன ரீதியான முரண்பாடுகள் காரணமாக பதற்ற நிலை ஏற்படுவதுடன், இது வன்முறைக்கும் வழி வகுக்கின்றது.

உள்நாட்டு யுத்தம் காரணமாக இலங்கை நீண்டகாலமாக பாதிக்கப்பட்டிருந்தது. எனினும், நீண்ட வருடங்களின் அந்த வடுக்கள் ஆறி தற்போது அமைதியானதொரு சூழ்நிலை உருவாகி வருகின்றது. மோதல்கள் காரணமாக ஏற்பட்ட இழப்புக்கள், பகைமைகள், சந்தேகங்கள் என்பவற்றிலிருந்து உடனடியாக மீள்வது இலகுவானதல்ல. நன்மையை கொண்டே தீமையை வெல்ல முடியும் (உரோமையர் 12:21). நல்லிணக்கம், சமாதானம் மற்றும் ஒற்றுமையின் மூலமே இவற்றிலிருந்து விடுபட முடியும். உண்மைகளை தேடுவதும் ஆற்றுப்படுத்தலுக்கு அவசியம் என்ற போதிலும், அது காயங்களை கிளறும் நோக்கில் மேற்கொள்ளப்படக்கூடாது.

நண்பர்களே, இந்த நாட்டில் முன்னெடுக்கப்பட்டிருக்கும் நல்லிணக்க மற்றும் மீளக்கட்டியெழுப்பும் செயற்பாடுகளில் அனைத்து சமய மரபுகளுக்கும் முக்கிய பாத்திரங்கள் இருப்பதாக நான் திடமாக நம்புகின்றேன். இதனை வெற்றியடையச் செய்வதற்கு அனைத்து சமூகத்தைச் சேர்ந்தவர்களும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். அவ்வனைவருக்கும் ஒரே குரல் இருப்பதும் அவசியம். அதேவேளை, சகலரும் தமது கருத்துக்களை, நிலைப்பாடுகளை, தேவைகளை, எதிர்பார்ப்புகளை சுதந்திரமாக வெளியிடும் சூழ்நிலை இருப்பதும் அவசியம்.

இதில் மிகவும் முக்கியமான விடயம், ஒருவருடைய கருத்தை மற்றையவர் மதிக்க வேண்டும் மற்றும் அனைவரும் ஒரு குடும்பமாக வாழ்வதற்கு கற்றுக்கொள்ள முன்வர வேண்டும் என்பதாகும். மேலும், ஒருவருடைய சொல்லை மற்றைவர் பணிவாக, வெளிப்படையாக செவிமடிக்கும் போதெல்லாம் பகிர்ந்து கொள்ளப்பட வேண்டிய விழுமியங்களும் அபிலாசைகளும் தெளிவாக தென்பட ஆரம்பிக்கின்றன. தற்காலத்தில் பன்முகத்தன்மை ஒரு அச்சுறுத்தலாக கருதப்படுவதில்லை. மாறாக, அது ஒரு அபிவிருத்தியின் அடிப்படையாகவே நோக்கப்படுகின்றது.

இந்நிலைப்பாட்டில் இருந்தபடி மீள்கட்டியெழுப்பும் செயற்பாடு, உட்கட்டமைப்பு அபிவிருத்தி மற்றும் மக்களின் பொருள் ரீதியான தேவைகள் பூர்த்தி செய்யப்படுதல் வேண்டும். இவை எல்லாவற்றையும் விட மனித மாண்பு, மனித உரிமைகளுக்கு மதிப்பளித்தல், சகலரையும் இணைத்துக் கொள்ளல் ஆகியன அதிக முக்கியத்துவம் வாய்ந்தவையாகும்.

இலங்கையின் அரசியல், மத மற்றும் கலாசார தலைவர்களின் வார்த்தைகளையும் செயற்பாடுகளையும் பார்க்கும் போது, அவர்கள் இலங்கை மக்களின் பொருள் மற்றும் ஆன்மிக ரீதியான முன்னேற்றத்திற்கு நிலையான பங்களிப்பைச் செய்வார்கள் என்ற திடமான நம்பிக்கை எனக்கு ஏற்படுகின்றது.

ஜனாதிபதி அவர்களே மற்றும் நண்பர்களே! நாம் இணைந்திருக்கும் இந்நாட்கள் நட்பின், உரையாடலின் மற்றும் ஐக்கியத்தின் நாட்கள் ஆகுவதாக என்றும், இந்து சமுத்திரத்தின் நன்முத்தாம் இலங்கைத் திருநாட்டிற்கு இறைவனின் அருள் உண்டாவதாக என்றும், இந்நாட்டின் அழகு, இந்நாட்டு மக்களின் அமைதி மற்றும் சௌபாக்கியம் ஆகியவற்றில் பிரதிபலிக்கட்டும் என்றும் நான் பிரார்திக்கின்றேன்.