சந்திரகுப்த தேனுவர கொழும்பு பல்கலைக்கழகத்தில் ஓவியக்கலை கற்பிக்கும் கலைஞர். கலையானது சமூகப் பிரக்ஞை கொண்டதாக இருக்க வேண்டும் என்பதே அவர் கொள்கையாகும். ஒவ்வொரு வருடமும் கறுப்பு ஜூலை தினத்தினை நினைவு கூருமுகமாக கொழும்பு லயனல் வென்ட் கலை மண்டபத்தில் ஓவியம் மற்றும் சிற்பக் கண்காட்சியினை அவர் ஒழுங்கு செய்வது வழக்கம். ஜூலை 23ஆம் திகதி தொடக்கம் 30ஆம் திகதி வரைக்கும் அது தொடரும். எல்லாமே அவருடைய சொந்த நிதிகளைக் கொண்டுதான். ஒரு தடவை முள்ளுக்கம்பிகளை மட்டுமே வைத்துக்கொண்டு கலை வடிவங்களைச் செய்தார். இன்னொரு தடவை முகாம்களிலும் சோதனைச் சாவடிகளிலும் உபயோகிக்கப்படும் மறைக்கும் (Camouflage) வர்ணம் பூசப்பட்ட உருளை பரல்களை வைத்து சிற்ப வடிவங்களைச் செய்தார். முன்னொரு தடவை, வெள்ளை வான்கள்தான் அவருடைய கண்காட்சியின் கருப்பொருளாக அமைந்தது. இதில் அவர் வரைந்த ஒரு வெள்ளை வான் ஓவியம் இப்பொழுது அவுஸ்திரேலியாவின் எதிர்க்கட்சியான சூழல் (Green Party) கட்சியின் தலைவரின் அலுவலகத்தில் அவருடைய மேசைக்குப் பின்னால் மிகப் பகிரங்க இடத்தில் வைக்கப்பட்டிருக்கின்றது அவரைச் சந்திக்கும் வாய்ப்பு எங்களில் சிலருக்குக் கிட்டியபொழுது, எங்களைக் கொண்டுபோய் மிகப் பெருமையாகத் தனது அறையில் அந்த ஓவியத்தைக் காட்டினார். அன்று, அவருடைய அலுவலகத்தில் தமிழ் வர்த்தகர்களுக்கும் இளைஞர்களுக்கும் எமனாக இருந்த இந்த வெள்ளைவான் பற்றியே எங்களுடைய சம்பாஷணை அமைந்தது. ஒரு அரசியல் பரப்புரையில் கலைப்படைப்புக்களின் வகிபங்கினையும் பெறுமதியையும் நாம் அன்று உணர்ந்து கொண்டோம். சென்ற வருடம் பொதுநலவாய மாநாட்டுக்கு முன்னர் இலங்கைக்கு வந்து, இலங்கை அரசினால் நாடு கடத்தப்பட்டு, திருப்பி அனுப்பப்பட்ட அவுஸ்திரேலிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இவருடைய கட்சியைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

IMG_0781

இந்த வருடமும் வழக்கம்போலவே கறுப்பு ஜூலையினை நினைவு கூருவதற்காக தேனுவரவின் கண்காட்சி இப்பொழுது லயனல் வென்ட் மண்டபத்தில் திறந்திருக்கின்றது. ‘மாறுதல் இல்லாதது’ (monotony) என்பதே இந்தத் தடவை தொனிப்பொருளாக எடுக்கப்பட்டிருக்கின்றது. வாயிலுக்குள் நுழையும்பொழுது ஒரு கவசத்தின் பின்னால் நிற்கும் இராணுவ சிப்பாயின் உருவச் சிலை நம்மை வரவேற்றது. அச்சிலையைச் சுற்றிப் பின்புறம் சென்றால் அவ்வீரனுக்குப் பின்னால் கம்பு தடி கத்தி கொண்ட குண்டர் படைகள் இருப்பதைக் காணலாம். ஆயுதம் கொண்டு இந்த இராணுவச் சிப்பாய் பாதுகாப்பது, இக்கொலைகாரக் கும்பலையே என்பதை இச்சிற்பம் சூசகமாக உணர்த்தியது. மறுபக்கமாக ஒன்பது செங்கல் மதில்களின் மீது வாயில்லா முகங்கள் புதைக்கப்பட்டிருப்பதைக் காணலாம். அந்த ஒன்பது உருவங்களும் இலங்கையின் ஒன்பது மாகாணங்களைக் குறித்தன. சகல மாகாணங்களிலும் கட்டடங்களாகவும், உட்கட்டுமானங்களாகவும் அபிவிருத்தி நடந்தாலும் மக்கள் வாய் பேசா ஊமைகளாகத்தான் இருக்கின்றனர் என்பதே இதன் கருப்பொருளாகும். அதனை 24 மாவட்டங்கள் என்பது போன்றுகூட அமைக்கலாம் என விளக்கம் கொடுத்தார் தேனு. இச்சிற்பங்களைச் சுற்றி சாம்பல் கபிலம் போன்ற நிறங்களில் வெறுமையான ஓவியங்கள். இவற்றைப் பார்ப்பவர்கள் தமக்குத் தோன்றியவாறு பொருள் விளக்கம் கொள்ளலாம். எமக்கோ ஒரே மாதிரி சிந்தித்து, ஒரே மாதிரி நடத்தை கொண்டு, ஒரே மாதிரி தமது வாக்குகளை இடும் மக்களையே அது சித்தரித்ததாகப்பட்டது.

வழக்கமாக தேனுவரவின் கண்காட்சியே கொழும்பில் கறுப்பு ஜூலையின் விசேட அம்சமாக இருக்கும். ஆனால், இந்தத் தடவை கொழும்பில் வழக்கத்தை விட அதிகமான பல நிகழ்வுகள். “ஜூலை 83 இனியும் வேண்டாம்” என்கின்ற தொனிப்பொருளில் கலை நிகழ்ச்சிகளும், கையெழுத்துப் பிரசாரங்களும் ஆங்காங்கே நடைபெற்றன. இதில் விசேடமாக கொழும்பு விஹாரமாதேவிப் பூங்காவின் திறந்த வெளியரங்கில் நிகழ்ந்த இசை நிகழ்ச்சியினைப் பற்றிக் கூறியேயாகவேண்டும். ஒரு இளைஞர் குழாமினால் ஏற்பாடு செய்யப்பட்ட இக்கலை நிகழ்ச்சியில் (யார் ஏற்பாடு செய்தார்கள் என்பது பற்றி ஒரு இடத்திலும் கூறப்படவில்லை) பத்து இசைக்குழுக்கள் அரங்கேறின. அவையெல்லாமே அனேகமாக எல்லாமே Metal Rock Bands. மிகத் தரமான இசை. அங்கு இசைக்கப்பட்ட ஒவ்வொரு பாடலும் அரசியல் உள்ளடக்கம் மிகுந்ததாகக் காணப்பட்டது. இப்பொழுது அதிகரித்துவரும் சர்வாதிகாரம் பற்றியும், பரப்பப்பட்டுவரும் இனத்துவேஷம் பற்றியும், யுத்தம் நிறுத்தப்பட்ட பின்பு கூட சமாதானம் ஏற்படாத தன்மை பற்றியும் பாடினார்கள். உணர்ச்சி மேலீட்டினால் “சற்று முன்புதான் இந்தப் பாடலை இசையமைத்தேன்” என்று பாடியவர்களும் உண்டு. ரப் இசையில் 1956 தொடக்கம் நடந்த விடயங்களைச் சொன்ன பாடலும் பாடப்பட்டது. முன்னிலை சோஷலிஸ்ட் கட்சிமற்றைய இடது சாரிக் கட்சிகளிலிருந்து பார்வையாளர்களாக இளைஞர்கள் வந்திருந்ததைப் பார்க்கக்கூடியதாக இருந்தது.

இசை நிகழ்ச்சி தவிர, திறந்த வெளியரங்கினைச் சுற்றிவர கட்டப்பட்ட கருங்கல் சுவரில் ஓவிய மற்றும் புகைப்படக் கண்காட்சியும் அமைக்கப்பட்டிருந்தது. இலங்கையில் வாழும் சகல இனங்களினதும் வாழ்க்கைகளைச் சித்தரிக்கும் வகையில் இவை தொகுக்கப்பட்டிருந்தன. சுவாரசியமான ஒரு உதாரணம், கறுப்பு உடை அணிந்த ஒரு பெண் சிவப்பு நிற மேலாடையை ஒவ்வொரு விதமாக உடுத்தும்பொழுது, அவள் தமிழ்ப் பெண் போலவும், முஸ்லிம் பெண் போலவும் சிங்களப் பெண் போலவும் காட்டப்படும் புகைப்படத் தொகுப்பாகும். இவ்வாறு பொருட்களும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. இதையெல்லாம் எப்படிச் செய்தார்கள் எனும்போது, அந்தப் பத்து இசைக்குழுக்களும் சேர்ந்து இந்த இசை நிகழ்ச்சிக்கான நிதிகளைக் கொடுத்ததுமல்லாமல் தமக்கு விரும்பிய முறைகளில் கண்காட்சியை ஒழங்கமைத்தன என்று விளக்கம் தந்தார்கள்.

இந்த நிகழ்வுகளுக்கெல்லாம் நிறைந்த மக்கள் கூட்டம். தரமான கலையினைப் பார்ப்பது என்பதைவிட, அந்த நிகழ்வின் காரணத்தையொட்டி மக்கள் ஒன்று கூடுவதுதான் இங்கு வலிமையான அம்சமாகும். இந்நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தும், அவற்றிற்கு வருகை தந்தும் சிங்கள மக்கள் தம்மத்தியில் ஒரு புதிய விழிப்புணர்வு எற்பட்டிருப்பதை எமக்கு உணர்த்தினார்கள். அளுத்கம சம்பவங்கள் அவர்களை உலுப்பி விட்டிருக்கின்றது போலத் தெரிந்தது. ஜூலை 1983 அன்றைய அரசினால் செயற்படுத்தப்பட்டது இனி நிகழாது என நம்பிக்கொண்டிருந்த வேளையில், அளுத்கம ஒரு அதிர்ச்சி வைத்தியமாகப் போய்விட்டது. 1983 ஜூலை திரும்ப அரங்கேறுவதற்கான சமூகச் சாத்தியக்கூறுகள் இன்னமும் இருக்கின்றன என்பது மட்டுமல்லாமல், இன்னமும் 1915இல் இருந்த கண்ணோட்டத்துடனேயே அவர்கள் இருக்கின்றனரோவென்ற பயத்தினையும் எற்படுத்திவிட்டது. அதனால்தான் ஜூலை 83 இனியும் வேண்டாம் என்கின்ற கோஷம் எழுந்திருக்கின்றது.

இதெல்லாம் சரி. ஆனால் தேனுவின் கண்காட்சியாகட்டும், விஹாரமகாதேவி இசை நிகழ்ச்சியாகட்டும் எங்கும் தமிழ் மக்களைத்தான் காணோம். புதிய முயற்சிகளைப் பார்வையிடுவதும், ஒத்த உணர்வுள்ள சிங்கள மக்களுடன் ஊடாடுவதும் புத்துணர்ச்சி தரும் விடயங்களாகும். எம்மைப் புதிய வழிகளில் சிந்திக்க வைப்பதற்கும், புதிய யுக்திகளை எமது அரசியலில் கையாளுவதற்கும் இந்த அனுபவங்கள் உதவுகின்றன. இவ்வளவு நன்மைகள் ஒருபுறம் இருக்கத்தக்கதாக, இன்னமும் லயனல் வென்ட் எங்கே அமைந்துள்ளது என்பதைத் தெரியாதவர்களும் விஹாரமகாதேவி திறந்த வெளியரங்கினைப் பார்க்காதவர்களும்தான் நம்மத்தியில் உள்ளார்கள். சிங்கள மக்களுடன் பழகுவது அவர்களுக்கு சங்கடமான விடயமாகப் போய்விட்டது. ஏதாவதொரு சந்திப்பு, கூட்டம், கண்காட்சி என்றால் அதற்கு அக்கறையாக வரும் தமிழர்கள் எத்தனை பேர்? எவ்வளவு காலந்தான் வெள்ளவத்தையே கதியாக நாம் இருக்கப் போகின்றோம்?

தினக்குரல் பத்திரிகைக்காக சாந்தி சச்சிதானந்தம் எழுதி கட்டுரை இங்கு தரப்பட்டுள்ளது.