படம் | பிரதமர் நரேந்திர மோடியின் Twitter தளம்

சில வருடங்களுக்கு முன்னால் இந்திய அரசு தனது அரச அலுவலர்கள் சிலரை ஒரு பயிற்சியின் நிமித்தம் சீனாவுக்கு அனுப்ப எத்தனித்தது. அதற்காக அதில் பங்குபற்றுபவர்களின் கடவுச் சீட்டுக்கள் சீன உயர் ஸ்தானிகராலயத்துக்கு அனுப்பப்பட்டன. திரும்ப அக்கடவுச் சீட்டுக்கள் கிடைக்கப்பெற்றபோது ஒரு அலுவலரைத் தவிர ஏனையோருக்கு விசா வழங்கப்பட்டிருந்தது. அருணாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த அந்த அலுவலருக்கு ஏன் விசா வழங்கப்படவில்லையென இந்திய அரசு வினவியபொழுது, “அவர் சீனப்பிரஜை, எனவே, அவருக்கு விசா தேவையில்லை” எனப் பதில் வந்தது. அங்கே வெடித்தது ஒரு இராஜதந்திரப் போர். சீனா தனது தேசப்படத்தைக் காட்டி, அதில் அருணாச்சலப் பிரதேசம் மட்டுமல்ல சிக்கிம் போன்ற மாநிலங்களும் உள்ளடங்கியிருப்பதைக் காட்டியது. இதற்குப் பின்பு இந்திய அரசோ தனது ஆட்சேபணையைத் தெரிவித்ததுடன் சரி.

எண்ணெய் வளம் மிகுந்த பிரதேசங்களை அமெரிக்க வல்லரசு தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதற்கு என்னென்ன பிரயத்தனங்களை மேற்கொள்ளுகின்றது என்பது எல்லோருக்கும் தெரிந்த விடயம். சமீபத்தில் ஈரானும், பாகிஸ்தானும் இணைந்து தாம் சுயாதீனமாக தமது எண்ணெய் வளங்களை பயன்படுத்தும் பாரிய திட்டங்களை மேற்கொள்ளவேண்டும் என்றும் இந்தியாவையும் இக்கூட்டில் இணையுமாறும் அந்நாடுகள் கோரிக்கை விடுத்தன. டெஹ்ரானிலிருந்து பாகிஸ்தான் ஊடாக இந்தியாவுக்கு எண்ணெய் வழங்கும் குழாயினை நிறுவும் பாரிய திட்டத்தினை அவை முன்வைத்தன. இந்தியாவுக்கு மிக அவசியமான சக்தித் தேவையை இத்திட்டம் பூர்த்தி செய்திருக்கக்கூடும். ஆனால் அமெரிக்காவின் அழுத்தத்தின் காரணமாக இந்த ஒப்பந்தத்திலிருந்து சறுக்கியது இந்தியா. தனது ஆணுவாயுத அபிவிருத்தியினை மட்டுப்படுத்தும் அமெரிக்க ஒப்பந்தத்தில் கையொப்பமிட்ட அரசல்லவா அது?

சார்க் அமைப்பினை தென்னாசியப் பிராந்தியத்தின் வலுமிக்கதொரு கூட்டாக்கியிருக்கலாம். மனித பாதுகாப்பினை (Human Security) உறுதிப்படுத்தும் பல திட்டங்களை செயற்படுத்தியிருக்கலாம். வறுமையொழிப்புத் திட்டங்கள், பெண்கள் பாலியல் தொழிலுக்காக நாடு விட்டு நாடு கடத்தப்படுதலைத் தடுக்கும் திட்டங்கள், இந்து சமுத்திரத்தின் கடல்வளத்தினைப் பேணும் கூட்டுத் திட்டங்கள் போன்ற எத்தனையோ செயற்பாடுகளைச் செய்திருக்கலாம். ஆனால், பாகிஸ்தானுடனான தனது பகைமையின் பயனாகவும், அதனை மேவி எதுவும் செய்யமுடியாத கையாலாகாத தன்மையினாலும் இன்றுவரை சார்க் ஒரு செல்லாக்காசாகவே இருந்து வருகின்றது. அதே போலத்தான், சரியோ பிழையோ இந்திய பிரதமரொருவரினால் முன்வைக்கப்பட்டு இலங்கையில் சட்டமாக்கப்பட்டதுதான் 13ஆவது திருத்தச் சட்டம். அதனை இந்தா அமுல்பத்துகின்றேன் அந்தா அமுல் படுத்துகின்றேன் என்று கடந்த 27 வருடங்களாக கண்ணில் விரலை விட்டு ஆட்டுகின்றது இலங்கை அரசு. தான் ஒரு பிராந்திய வல்லரசு எனக் கனாக் கண்டுகொண்டு இப்படியானதொரு வெட்ககரமான வெளியுறவுக் கொள்கையை இந்திய அரசு இன்று நேற்றல்ல பல வருட காலங்களாகக் கடைப்பிடித்துவரும் வேளையில், மோடி, ராஜபக்‌ஷவிற்கு அப்படி அதட்டினார் இப்படி அதட்டினார் என்று எமது நாட்டின் ஊடகக் கட்டுரைகள் விழுந்து விழுந்து வியாக்கியானம் செய்வது சற்றே நகைச்சுவையாகத்தானிருக்கின்றது. எந்த அரசு மாற்றம் கண்டாலும் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை அதன் Bureaucracy இனால்தான் இதுவரை தீர்மானிக்கப்பட்டு வந்திருக்கின்றது. இதில் மோடி மாற்றங்களைக் கொண்டு வருவாரா என்பது இனிமேல்தான் பார்க்க வேண்டிய விடயம்.

இங்குதான் தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தலைமைத்துவத்தைப் பற்றியும் வருடைய தூரதரிசனம் பற்றியும் நாம் அவதானிக்க வேண்டியிருக்கின்றது. இந்த விடயத்திலும் இந்தியர்களுக்கு தமிழர்கள்தான் பாடம் கற்பிக்க வேண்டுமோ? Cooperative Federalism (கூட்டுறவுச் சமஷ்டி?) என்னும் கருதுகோள் பற்றி மோடி தனது தேர்தல் பிரசாரங்களில் குறிப்பிட்டிருக்கின்றார். ஒருவேளை, ஒரு மாநிலத்தின் முதலமைச்சராக இருந்துவிட்டு மத்திய அரசுக்கு வருவதனால் இந்த உணர்வுகள் அவருக்குள் இருந்திருக்கலாம். ஆனால், இது குறிப்பாக என்ன என்பதோ, அது எப்படி அடையப்படலாம் என்பதையோ அவர் விளக்கவில்லை. இக்கோட்பாட்டினை, மத்திய அரசு சகல மாநிலங்களுடனும் பகிர்ந்துகொள்ளும் இறைமையேயென செல்வி ஜெயலலிதா விளக்கியிருக்கின்றார். இதுவோ கூட்டுச் சமஷ்டியை விபரிக்கும் விளக்கமாகும். இந்தியாவின் மாநிலங்களின் தற்போதைய அரசியல் நிலைமையானது சமஷ்டி அரசு என்று கூட முறையாக அழைக்கப்பட முடியாத நிலைமையாகும். இந்த நிலையில், தமிழ்நாடானது கூட்டுச் சமஷ்டி என்கின்ற கோரிக்கையை முதன் முதலாக முன்வைப்பதைக் காணக் கூடியதாக இருக்கின்றது. இதனை ஏனைய மாநிலங்கள் எவ்வளவு தூரம் ஏற்றுக்கொள்ளும் என்பதை இனிமேல்தான் பார்க்கவேண்டும்.

ஜெயலலிதா அவர்கள் மோடியிடம் கடந்த வாரம் கையளித்த 28 பக்க கோரிக்கை மனுவில் கோரப்பட்ட பல விடயங்கள் இக்கோட்பாட்டினை வலியுறுத்துவதாக அமைகின்றன. வரியீட்டும் சில பொறுப்புக்கள் மாநில அரசுகளிடம் விடப்பட வேண்டும் என்றும் – மாநில அரசுகளுக்கு கொடுக்கப்படும் மானிய நிதிகள் என்ன அடிப்படையில் கொடுக்கப்படவேண்டும் என்பது மாநில அரசுகளின் ஆலோசனையுடன் செய்யப்பட வேண்டும் என்றும் – கேட்கப்பட்டிருக்கின்றது. மாநில அரசுகளை அபிவிருத்தியில் சமத்துவமான பங்காளிகளாகக் கருதுங்கள் என இறைஞ்சுகிறார் அவர். இவை தவிர, மாநிலங்களுக்கிடையிலான உறவுகளை நெறிப்படுத்தவென பல சிபாரிசுகளை முன்வைத்திருக்கின்றார். மாநிலங்களுக்குப் பொதுவாக இருக்கும் ஆறுகள் அனைத்தும் தேசியமயமாக்கப்பட வேண்டும் என்பது ஒன்று. நீர் வளத்தினை முகாமைப்படுத்தவென சம்பந்தப்பட்ட மாநிலங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பொதுக்குழுக்கள் அமைக்கப்படவேண்டும் என்பது இன்னொன்று. தமிழ்நாட்டினை இந்திய மாநிலங்களிலேயே அதிமுற்போக்கான மாநிலங்களில் ஒன்றாகவும் நன்றாக ஆட்சி செய்யப்படும் மாநிலமாகவும் விபரித்து அதன் பிரத்தியேகத் தேவைகளையும் முன்வைக்கின்றார். சூழல் பாதுகாப்புக்கு இசைவான புதுப்பிக்கக்கூடிய சூரியக்கதிர் சக்தியையும் காற்றுச்சக்தியையும் வினியேகிக்கும் Green Corridor வழியினை மத்திய அரசு இலகுபடுத்த வேண்டும் என்று கேட்டிருக்கின்றார். இந்திய மாநிலங்களிலேயே புத்தாக்கமான முறைகளில் காற்றுச் சக்தியை பாரிய அளவில் உற்பத்தி செய்யும் மாநிலமாக தமிழ்நாடு திகழ்வது குறிப்பிடத்தக்கது. அத்துடன் முக்கியமாக, தமிழ் இந்தியாவின் அரச கரும மொழிகளில் ஒன்றாக்கப்பட வேண்டும், அது உயர் நீதிமன்றங்களில் வழங்கப்பட வேண்டும் என்று கோரியிருக்கின்றார்.

ஈழத்தமிழ் மக்களின் தேவைகளும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டிருக்கின்றன. இலங்கையில் நடக்கின்ற இனச்சுத்திகரிப்பு தொடர்பாக விசாரணைகள் நடத்தப்படவேண்டும் என்றும் – தனிநாடு அமைப்பதற்கான பொது வாக்கெடுப்பு ஈழத்தமிழ் மக்கள் மத்தியிலும் புலம்பெயர் தமிழ் மக்கள் மத்தியிலும் நடத்தப்பட வேண்டும் என்றும் – இந்த ஆவணத்தின் இரண்டாவது கோரிக்கை செல்கின்றது. இப்படி, தமிழ்நாட்டு மக்கள் ஈழத் தமிழ் மக்களுக்காகக் குரல் கொடுக்கும்போது, நாம் அவர்களுக்காக என்ன செய்கின்றோம் என்கின்ற கேள்வியே எழுகின்றது. ஜெயலலிதாவின் கோரிக்கை மனுவில் தமிழ் நாட்டு மக்களின் பல தேவைகளும் குறைகளும் சுட்டிக் காட்டப்பட்டிருக்கின்றன. இந்தக் கோரிக்கைகள் பற்றிய எமது நிலைப்பாடு என்ன? நாம் ஒன்றுமே செய்யாமல் சர்வதேச சமூகம் எமக்கு உதவ வேண்டும், தமிழ்நாடு உதவவேண்டும் என்று கேட்டுக்கொண்டிருப்பது நல்ல அரசியல் தந்திரமா? இந்த உலகில் எந்த உதவியும் சும்மா வருவதில்லையே. தென்னிலங்கையின் ஊடகங்கள் இந்தக் கோரிக்கை மனுவினைப் பார்த்த அக்கணமே, வழமைபோல தமிழர்கள் தமது தனிநாட்டுக் கோரிக்கையை முன்வைத்திருக்கிறார்கள் என ஆரவாரிக்கத் தொடங்கியிருக்கின்றனர். இவை நியாயமான ஜனநாயகபூர்வமான கோரிக்கைகளே என்பதை நாம் வாதாட வேண்டாமா? அக்கருத்தினை இந்திய உயர் நிலை அரசியல்வாதிகளுக்கும் உலகத்துக்கும் நாம் தெரிவிக்க வேண்டாமா? ஆம், எமது அரசியல் தலைமைகள் இனியாவது Proactive ஆன சர்வதேச அரசியலை ஆடப்பழக வேண்டிய காலம் வந்த விட்டது.

அடி என்னடி உலகம், இதில் எத்தனை கலகம்

தினக்குரல் பத்திரிகைக்காக சாந்தி சச்சிதானந்தம் எழுதிய கட்டுரை இங்கு தரப்பட்டுள்ளது.