படம் | Asiantribune

சர்வதேச விசாரணை இந்த மாதம் ஆரம்பமாகலாம் அல்லது விசாரணைக்குழுவில் அங்கம் வகிப்பவர்களின் பெயர் விபரங்கள், குழுவின்தலைவர் யார் என்ற பெயர் விபரங்கள் வெளியாகலாம். ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் செயலாளர் நாயகம் கொபி அனாண் விசாரணைக் குழுவுக்கு தலைமை தாங்கலாம் என்றும் செய்திகள் வெளியாகியிருந்தன. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவை பொறுத்தவரை இந்த விசாரணைகளை எதிர்கொள்ள தயாராகி வருகின்றார் என்பதுடன், முடிந்தவரை சாதகமான நாடுகளின் ஆதரவுகளுடன் அதனை தட்டிக்கழிக்கவும் முற்படுகின்றார். அதேவேளை, ஆணையாளர் நவநீதம் பிள்ளையின் பதவிக் காலம் செப்டெம்பர் மாதம் முடிவடையவுள்ளது. வரவுள்ள புதிய ஆணையாளரின் செல்வாக்கைப் பயன்படுத்தி அல்லது புதிய ஆணையாளரின் இலங்கை தொடர்பான அணுகுமுறைகளை அவதானித்து செயற்படலாம் என்ற நம்பிக்கையும் ஜனாதிபதிக்கு உண்டு.

புதிய இந்திய அரசு

இறுதி யுத்தத்தில் இடம்பெற்ற மனித உரிமைகள் மீறல் – போர்க்குற்றச் சாட்டுக்கள் தொடர்பான விசாரணை ஆரம்பமாகவுள்ள நிலையில் இந்தியாவில் புதிய அரசும் பதவியேற்றுள்ளது. நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு இலங்கை விவகாரங்களில் காங்கிரஸ் கூட்டணி அரசை போன்று செயற்படாது சற்று வித்தியாசமான போக்கை கடைப்பிடிக்கலாம் என்ற எதிர்ப்பார்ப்பு சகலரிடம் உண்டு. ஆனாலும், சர்வதேச விசாரணை என்ற விடயத்தில் காங்கிரஸ் அரசு எவ்வாறு செயற்பட்டதோ அதேபோன்ற ஒரு அணுகுமுறையைத்தான் பா.ஜ.க. அரசும் கையாளக்கூடிய நிலை உள்ளது.

இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைக்குள் சர்வதேச விசாரணை என்ற விவகாரம் அமைவதால் பா.ஜ.க. அரசு தங்கள் அரசியலுக்கு ஏற்ற விதத்திலான அணுகுமுறைகளை கையாள முடியாது. இலங்கை தொடர்பான விடயங்களில் பங்காற்றும் இந்தியக் கொள்கை வகுப்பாளர்கள் – தீர்மானம் எடுப்பவர்கள் மற்றும் இந்திய வெளியுறவு அமைச்சின் உயர் அதிகாரிகளுடன் சம்மந்தப்பட்டது. வேண்டுமானால் இலங்கை அரசை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர அல்லது சீனாவின் ஆதிக்கத்தை குறைக்க சர்வதேச விசாரணை என்ற பெயர் பலகையை பா.ஜ.க. கையாளக்கூடும். அதற்கு ஏற்ப கொள்கை வகுப்பாளர்களுக்கு ஆலோசனை வழங்கக்கூடிய அதிகாரம் நரேந்திரமோடிக்கு உள்ளது.

வெளியுறவுக் கொள்கையில் மாற்றம்

பிராந்தியத்தில் இந்தியா தனது செல்வாக்கை அதிகரிக்க வேண்டும் என்றுதான் நரேந்திரமோடி தேர்தல் பிரச்சாரங்களில் கூறிவந்தார். சிறிய நாடுகள் இந்தியாவை ஆட்டி வைப்பதாகவும் அதற்கு இடமளிக்க முடியாது என்றும் அவர் கூறியிருந்தார். ஆகவே, இந்த நிலையில் வழமைக்கு மாறாக இந்திய வெளியுறவுக் கொள்கையில் மாற்றம் ஒன்றை செய்யக்கூடிய அல்லது இலங்கை விவகாரத்தில் மட்டும் வேறு அணுகுமுறை ஒன்றை கையாளக்கூடிய வழிமுறைகளை நரேந்திர மோடி பின்பற்றக்கூடிய ஏது நிலை உண்டு என்றும் அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

ஆனாலும், ஜெனீவா மனித உரிமை பேரவையின் தலைமையிலான சர்வதேச விசாரணை என்ற விடயத்தில் தமிழ் மக்கள் எதிர்பார்க்கும் அளவுக்கு இந்திய அரசு பாரிய ஒத்துழைப்பை வழங்கும் என்று கூற முடியாது. அதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று, விடுதலைப் புலிகளை நியாயப்படுத்த நரேந்திர மோடி அரசு விரும்பாது. இரண்டாவது, இந்தியாவின் காஷ்மீர் பிரதேசங்களிலும் குஜராத்திலும் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் கொலைகள் மற்றும் இந்திய இராணுவத்தின் மனித உரிமைகள் மீறல்களை வெளிப்படுத்த புதிய அரசு அனுமதிக்காது. சர்வதேச விசாரணை என்று வரும்போது இறுதிப் போரில் உதவியளித்த நாடுகள் பற்றிய விபரங்களை இலங்கை அரசு வெளியிடுமானால் அது இந்தியாவுக்கு ஆபத்தாக அமையும். அது மன்மோகன்சிங் அரசின் செயற்பாடு என கூறி நரேந்திரமோடி அரசு தப்பிக்க முடியாது. ஆகவே, அது இந்தியாவின் ஒட்டுமொத்த சுயமரியாதைக்கு ஆபத்து விளைவிக்கும் என்பதால் இந்தியாவின் புதிய அரசு சர்வதேச விசாரணை என்ற விடயத்தில் அவதானமாக செயற்படக் கூடிய வாய்ப்புகள் அல்லது அதனை கண்டுகொள்ளாமல் விடக்கூடிய சந்தர்ப்பங்களும் உண்டு.

அமெரிக்காவுடன் ஆலோசனை

ஆனாலும், இலங்கையில் இடம்பெறவுள்ள சர்வதேச விசாரணை தொடர்பாக இந்தியாவின் புதிய அரசு புதுடில்லியில் உள்ள அமெரிக்கத் தூதுவருடன் ஆலோசனை நடத்தியதாக அறியமுடிகின்றது. அந்த விசாரணை இந்தியப் பிராந்தியத்தின் பாதுகாப்பு விடயத்திலும் இறுதிப் போருக்கு உதவியளித்த இந்தியா – அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகளின் பாதுகாப்புகள், இரகசியங்கள் குறித்தும் பேசப்பட்டதாக கூறப்படுகின்றது. சர்வதேச விசாரணை இடம்பெற்றால் இலங்கை அதிகாரிகள் போருக்கு உதவியளித்த சர்வதேச நாடுகள் பற்றிய இரகசியங்களை வெளியிடக் கூடிய நிலை இருப்பதால் அமெரிக்காவும் இந்த விடயத்தில் வேறு வகையான யோசனைகளை தயாரித்து வருவதாகவும், இதன் தொடர்ச்சியாக இந்தியாவின் புதிய அரசும் அமெரிக்காவுடன் ஆலோசனை நடத்தியதாக புதுடில்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏவ்வாறாயினும் நரேந்திர மோடி தலைமையிலான அரசுக்கு அமெரிக்காவுடன் தொடர்ச்சியான உறவுகளை பேணக்கூடிய கொள்கை பிரச்சினை ஒன்று உள்ளது. அதாவது, இந்தியத் தேசியவாதம் என்பதும் அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகளுக்கு ஈடான வல்லரசாக இந்தியா மாற வேண்டும் என்பதும் நரேந்திர மோடியின் கொள்கை. ஆனாலும், இலங்கை விவகாரத்தில் அதுவும் சர்வதேச விசாரணை என்ற விடயத்தில் அமெரிக்காவுடன் ஒத்துழைத்துப் போக வேண்டிய கட்டாயம் நரேந்திர மோடிக்கு உண்டு. அதுவும் இந்தியப் பிராந்திய நலன் என்ற அடிப்படையில்தான். ஆகவே, முடிந்தவரை சர்வதேச விசாரணை என்ற விவகாரத்தில் இந்திய இராணுவம் பற்றிய பகுதிகளை வெளிவரவிடாமல் பாதுகாத்துக் கொண்டு ஏனைய விடயங்களில் அமைதியாக இருக்கக்கூடிய நிலைதான் காணப்படுகின்றது.

இலங்கையுடனான ஒத்துழைப்பு?

அதற்காக இலங்கையுடன் ஒத்துழைப்பது அல்லது இலங்கை கேட்கும் அனைத்துக்கும் விட்டுக் கொடுப்பது என்ற நிலைப்பாட்டை நரேந்திர மோடி அரசு எடுக்கும் என்று கூறமுடியாது. ஆனால், இலங்கையின் வடக்கு – கிழக்கு பகுதியில் அமைதி நிலவவேண்டும் என்பதும், தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டால் மாத்திரமே இந்தியாவின் பொருளாதார திட்டங்கள் மற்றும் கொள்கைகளை இலங்கையில் முன்னெடுக்க முடியும் என்பதும் நரேந்திர மோடி அரசின் நம்பிக்கை. ஆகவே, இலங்கை அரசை பகைத்துக் கொள்ளாத முறையில் அரசியல் தீர்வு ஒன்றை முன்வைக்க வேண்டுமானால் 13ஆவது திருத்தச் சட்டம் வசதியாக அமையும் என கருதியே அந்த விடயம் குறித்து ஜனாதிபதி மஹிந்தவிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

13ஆவது திருத்தச்சட்டம் வடக்கு கிழக்கில் அமைதியை ஏற்படுத்தும் என இந்தியாவின் புதிய அரசு நம்புமானால் வரலாற்றை நரேந்திர மோடி அறிந்து கொள்ளவில்லை என்ற முடிவுக்கு வரலாம். மன்மோகன் சிங் அரசு, தமிழ் மக்களையும் இலங்கை அரசையும் அவ்வப்போது சமாளிப்பதாக நினைத்துக் கொண்டு 13ஆவது திருத்தச் சட்டம் பற்றி பேசியது. அவ்வாறான அணுகுமுறையை இந்தியாவின் புதிய அரசும் பின்பற்றுமானால் சிறிய அரசு, சிறந்த நிர்வாகம் என்ற நரேந்திர மோடியின் அரசியல் இலக்கை அடைந்து விட முடியாது. தமிழ் ஈழம் அல்ல வடக்கு – கிழக்கு இணைந்த சுய ஆட்சிக்கு இந்தியாவின் புதிய அரசு வழிவகுக்குமானால் இந்தியப் பிராந்தியத்தில் அமெரிக்கா பேன்ற வல்லரசுகளின் தலையீடுகளை அகற்ற முடியும். சீனாவின் செல்வாக்கை விழுத்தலாம்? இந்தியா பற்றிய நரேந்திர மோடியின் கனவும் நனவாக அது வழிசமைக்கும்.

தினக்குரல் பத்திரிகைக்காக அ. நிக்ஸன் எழுதிய கட்டுரை இங்கு தரப்பட்டுள்ளது.

Nix P0001