Photo, ASIAN MIRROR

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தான்தோன்றித்தனமாக பேசுபவர் என்றாலும் எளிதில் ஏமாறக்கூடியவர்கள் அபத்தங்களையும் கூட நம்பிவிடக்கூடிய அளவுக்கு வளமான சிங்கள சொல்வன்மையுடன் உணர்ச்சியைக் கிளறும் வகையில் ஆவேசமாக அரசியல் பேசுவதில் திறமைசாலி.

மஹிந்த ராஜபக்‌ஷ 2005 நவம்பரில் முதன் முதலாக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டபோது  அவரை ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி.) ஆதரித்தது. அப்போது அதன் கொள்கைபரப்பு செயலாளராக இருந்தவர் வீரவன்ச. பிரசார மேடைகளில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையிலான அன்றைய  ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பேச்சாளர்களை விடவும் மிகவும் வலுவான முறையில் சிங்கள மக்கள் மத்தியில் தனது அரசியல் நிகழ்ச்சித் திட்டத்தை கொண்டு சென்று சேர்த்தவர் வீரவன்ச என்று அவரின் பேச்சாற்றல் மீது மஹிந்தவுக்கு ஒரு மதிப்பீடு இருந்ததாகக் கூறப்படுவதுண்டு.

வீரவன்ச ஜே.வி.பியை விட்டு வெளியேறி புதிய கட்சியைத் தொடங்கிய பின்னர் அவரின் அந்த ஆற்றலைத் தனக்கு அனுகூலமான முறையில் இனவாத அணிதிரட்டலுக்கு மஹிந்த தாராளமாக பயன்படுத்தினார் எனலாம். 2015 ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த தோல்வி கண்ட பிறகு சில வாரங்களுக்குள்ளாகவே மீண்டும் அவருக்கு ஆதரவான அணிதிரட்டலை செய்வதில் தீவிரமாக முன்னின்ற முக்கியமான அரசியல்வாதிகளில் ஒருவர் வீரவன்ச.

கடந்த வருடத்தைய மக்கள் கிளர்ச்சிக்குப் பிறகு ராஜபக்‌ஷர்களை விட்டு வெளியேறிய வாசுதேவ நாணயக்கார, பேராசிரியர்கள் ஜீ.எல். பீரிஸ், திஸ்ஸ விதாரண மற்றும் டியூ குணசேகர போன்ற மூத்த அரசியல்வாதிகள் கூட பல சிறிய கட்சிகளுடன் சேர்ந்து தாங்கள் அமைத்த ‘உத்தர லங்கா சபாகய’ என்ற கூட்டணியின் தலைவராக வீரவன்சவையே நியமித்ததைக் கண்டோம். செய்தியாளர் மகாநாடுகளில் அவர் பேசும்போது நீண்டகால அரசியல் அனுபவமுடைய இவர்கள் எல்லோரும் வியந்து பார்த்துக்கொண்டிருப்பதை தொலைக்காட்சிகளில் பார்க்கிறோம்.

எதிர்கால தேர்தல்களில் தென்னிலங்கை மக்கள் அவரை எந்தளவுக்கு ஆதரிப்பார்கள் என்ற கேள்வி ஒரு புறமிருக்க, தனது கடும் சிங்கள பௌத்த தேசியவாதப் போக்கு கைகொடுக்கும் என்ற நம்பிக்கையில் அவர் தனது அரசியல் செயற்பாடுகளை முன்னெடுக்கிறார். 13ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தினால் இலங்கையின் வரலாறு இதுவரை காணாத பெரிய இனக்கலவரம் வெடிக்கும் என்று அண்மையில் வீரவன்ச எச்சரிக்கை செய்தார். அவ்வாறு பேசுவதனால் தனக்கு அனுகூலமே தவிர ஆபத்து எதுவும் வந்துவிடப்போவதில்லை என்பது அவரின் நம்பிக்கை.

இலங்கை முகங்கொடுக்கின்ற எந்தவொரு பிரச்சினையிலும் ‘சர்வதேச சதி முயற்சியை’ அடையாளம் காணும் விசித்திரமான ஒரு மூளையைக் கொண்டவராகவும் விளங்கும் வீரவன்ச தன்னை அமெரிக்க மற்றும் மேற்குலக ஏகாதிபத்தியங்களுக்கு எதிரான ஒரு ‘முன்னணி முற்போக்கு போராளியாகக்’ காட்டிக்கொள்கிறார். சர்வதேச சதிமுயற்சி என்பது அவரது பிரதானமான  சுலோகங்களில் ஒன்று.

கடந்த வருடத்தைய ‘அறகல​’ மக்கள் போராட்டம் குறித்து தனது ‘புலனாய்வின்’ அடிப்படையில் ‘ஒன்பது; மறைந்துகிடக்கும் கதை’  (நவய; செங்கவுனு கதாவ – Nine; Hidden Story) என்று சிங்களத்தில் நூலொன்றை அவர் எழுதியிருக்கிறார். அதன் வெளியீட்டு வைபவம் கொழும்பு இலங்கை மன்றக்கல்லூரியில் கடந்த வாரம் (25/4) இடம்பெற்றது. மண்டபம் நிறைந்த மக்கள் கூட்டம். ஒரு பட்டாளம் அரசியல்வாதிகள்.

‘கட்டற்ற கற்பனை’ என்று அவதானிகள் பலரும் வர்ணிக்கும் அந்த நூலில் வீரவன்ச அறகலயவுக்குப் பின்னால் இருந்தாக தான் கண்டுபிடித்த சர்வதேச சதியின் நிரலொழுங்கை விபரித்திருக்கிறார். அதில் மிக முக்கியமானவற்றை அவதானிப்போம்.

“முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்‌ஷ பதவியில் இருந்து விலகி நாட்டைவிட்டு வெளியேறத் தீர்மானித்தபோது பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்கவை முதலில் பதவி நீக்குமாறு அவரிடம் அமெரிக்க அரசாங்கமும் இந்திய அரசாங்கமும் கேட்டுக்கொண்டன. ஜனாதிபதியின் செயலாளராக இருந்த காமினி செனரத் இரு கடிதங்களை தயாரித்தார். ஒன்று ஜனாதிபதி பதவி விலகும் கடிதம். மற்றையது விக்கிரமசிங்கவை பிரதமர் பதவியில் இருந்து நீக்கும் கடிதம்.

இவ்விரு கடிதங்களும் மாலைதீவில் தங்கியிருந்த கோட்டபாயவுக்கு அனுப்பப்பட்டபோது அவர் தனது பதவி விலகல் கடிதத்தில் மாத்திரம் கையெழுத்திட்டார். பிரதமரை பதவி விலக்கும் முயற்சி தோல்வியடைந்தவுடன் கொழும்பில் உள்ள அமெரிக்க தூதுவர் ஜூலி ஷங் நாடாளுமன்ற சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவை அவரது உத்தியோகபூர்வ வாசஸ்தலத்துக்குச் சென்று சந்தித்து பதில் ஜனாதிபதியாக பதவியேற்குமாறு கேட்டுக்கொண்டார்.

“ஜனாதிபதி பதவி விலகினால் அரசியலமைப்பின் பிரகாரம் பிரதமரே பதில் ஜனாதிபதியாக பதவியேற்கவேண்டும் என்று சபாநாயகர் சுட்டிக்காட்டியபோது அரசியலமைப்பு தொடர்பில் வரக்கூடிய பிரச்சினைகளை தாங்கள் பார்த்துக்கொள்வதாக அமெரிக்க தூதுவர் அவரிடம் கூறினார். பதில் ஜனாதிபதியாக பதவியேற்கவேண்டும் என்ற அதே யோசனையை தூதுவருக்கு  முன்னதாக சபாநாயகரிடம் மதத்தலைவர் ஒருவரும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரும் முன்வைத்திருந்தனர்.

“சதி முயற்சியில் சம்பந்தப்பட்டவர்களின் முதல் திட்டம் கோட்டபாயவையும் ஜனாதிபதி மாளிகைக்குள் இருந்த ஆயுதப்படைகளின் சிரேஷ்ட தலைவர்களையும் கொலை செய்வதேயாகும். அதைத் தொடர்ந்து நாட்டில் ஓரிரு வாரங்களுக்கு நீடிக்கக்கூடிய அராஜக நிலைக்குப் பிறகு சபாநாயகர் தலைமையில் இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதே அவர்களின் திட்டம். கேணல் கடாபி கொலை செய்யப்பட்டதை அடுத்து லிபியாவில் அரங்கேற்றியதைப் போன்ற நாடகத்தை இலங்கையிலும் அரங்கேற்றுவதற்கு அவர்கள் நோக்கம் கொண்டிருந்தார்கள்.

முதலாவது திட்டத்தில் தோல்வி கண்ட அவர்கள் இப்போது ஜனாதிபதியாக விக்கிரமசிங்கவை  வைத்துக்கொண்டு தங்களது இரண்டாவது திட்டத்தை முன்னெடுத்துக்கொண்டிருக்கிறார்கள். கடந்த வருடம் ஜூலை 9ஆம் திகதி இலங்கையில் கொந்தளிப்பான நிலைவரத்துக்கு மத்தியில்  பாதுகாப்பு படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா இந்தியாவில் இருந்தார். இது சந்தேகத்தைக் கிளப்பியது. அவரை தங்கள் பக்கம் வென்றெடுக்கும் முயற்சியாக அமெரிக்கா மனித உரிமைகள் பிரச்சினையை கிளப்பி அவர் மீது நெருக்குதலைப் பிரயோகித்தது.

“சபாநாயகரை ஜனாதிபதியாக்கும் அமெரிக்காவின் திட்டம் வெற்றியளித்திருந்தால் அவரது நிருவாகத்தில் சரத் பொன்சேகாவும் சவேந்திர சில்வாவும் சேர்த்துக்கொள்ளப்பட்டிருக்கக்கூடும்.

“அமெரிக்க தூதுவர் ஜனாதிபதி கோட்டபாயவையும் அறகலய போராட்ட இயக்கத்தையும் ஏககாலத்தில் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். விக்கிரமசிங்கவைப் பதவி விலக்குவதற்கு கோட்டபாய மறுத்த காரணத்தால் அவர் நாட்டை விட்டு வெளியேற விமானம் ஒன்றை கொடுத்து உதவ இந்தியா மறுத்தது. விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தினால் ஜனாதிபதியாக தெரிவான உடனடியாகவே கோட்டபாயவுக்கு எதிராக செயற்பட்டவர்கள் தனக்கு எதிராக திரும்புவதற்கு முன்னதாக போராட்ட இயக்கத்தை ஒடுக்க இராணுவத்தை அனுப்பி தனது நிலையை வலுப்படுத்திக் கொண்டார்.

“தனது நிபந்தனைகளுக்கு கொழும்பு இணங்கும்வரை சர்வதேச நாணய நிதியத்தின் கடனுதவி திட்டத்தை அமெரிக்கா நிறுத்திவைத்திருந்தது. அந்தத் திட்டம் தாமதமானதற்கு சீனா கடன் மறுசீரமைப்புக்கான கடிதத்தை வழங்குவதற்கு தயங்கியதே காரணம் என்று கூறப்படுவது பொய்” என்று வீரவன்ச எழுதியிருக்கிறார்.

69 இலட்சம் மக்களின் வாக்குகளைப் பெற்று ஜனாதிபதியாக வந்த கோட்டபாய ராஜபக்‌ஷ அரசியலமைப்புக்கு விரோதமான முறையில் எவ்வாறு பதவியில் இருந்து அகற்றப்பட்டார் என்பதை மக்கள் அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே இந்த நூலை வெளியிடுவதாக கூறிய அவர் அமெரிக்க மேலாதிக்கத்துக்கு சீனாவிடமிருந்து அதிகரிக்கும் சவாலையடுத்து உலகளாவிய மட்டத்திலும் பிராந்திய மட்டத்திலும் ஏற்படுகின்ற மாற்றங்களின் பின்புலத்திலேயே இலங்கையில் அமெரிக்காவின் திட்டத்தை நோக்கவேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

தனது ‘கண்டுபிடிப்புகளுக்கு’ எந்த சான்றையும் வீரவன்ச முன்வைக்கவில்லை. ஆனால், உடனடியாகவே அமெரிக்க தூதுவர் மறுப்பை வெளியிட்டதை காணக்கூடியதாக இருந்தது. வீரவன்சவின் பெயரை குறிப்பிடாமல் ருவிட்டரில் பதிவொன்றைச் செய்த அவர், “புனைகதை என்று பெயரிடப்பட வேண்டிய நூல் ஒன்றில் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை முன்வைத்ததுடன் அப்பட்டமான பொய்களையும் பரப்பியிருக்கிறார்” என்று தெரிவித்தார். இது குறித்து மறுநாள் நாடாளுமன்றத்தில் குறிப்பிட்ட வீரவன்ச நூல் வெளியிடப்பட்ட 24 மணி நேரத்திற்குள் தூதுவர் அதை மொழிபெயர்ப்பு செய்வித்து முழுமையாக  வாசித்துவிட்டார் என்பதை அறியும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது என்று கூறினார்.

சபாநாயகர் அபேவர்தனவும் அறகலய போராட்டக் காலத்தில் அமெரிக்க தூதுவரை தான் ஒருபோதும் சந்திக்கவில்லை என்று மறுத்திருக்கிறார். ஜூலி ஷங் கொழும்பில் பதவியேற்றுக்கொண்ட பின்னர் நாடாளுமன்றத்துக்கு வந்து தன்னை முதல் தடவையாக சந்தித்ததாகவும் பிறகு அமெரிக்க சுதந்திர தின வைபவத்தில் இரண்டாவது தடவையாக சந்தித்ததாகவும் அவர் கூறியிருக்கிறார். அமெரிக்க தூதுவரை அதற்குப் பிறகு சந்திக்கவேயில்லை என்று கூறும் சபாநாயகர் தன் மீது எந்த நெருக்குதலும் பிரயோகிக்கப்படவில்லை என்று மறுத்திருக்கிறார்.

அதேவேளை, ஜெனரல் சவேந்திர சில்வா தொடர்பில் வீரவன்ச முன்வைத்த குற்றச்சாட்டையும்  பாதுகாப்பு அமைச்சு மறுநாளே மறுத்து அறிக்கை வெளியிட்டது. இந்து சமுத்திர தென்பிராந்திய நட்பு நாடுகளுக்கிடையிலான ‘கொழும்பு பாதுகாப்பு மகாநாடு’ அமைப்பின் பிரதி தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் மட்ட கூட்டம் 2022 ஜூலை 07 இந்தியாவில் நடைபெற்றது. அதில் இலங்கையின் பிரதிநிதியாக அன்றைய ஜனாதிபதியின் அங்கீகாரத்துடன் சவேந்திர சில்வா கலந்துகொண்டார். அவரின் விஜயம் உத்தியோகபூர்வமானது. வீரவன்சவின் குற்றச்சாட்டு ஆதாரமற்றது என்று அமைச்சு கூறியது.

சதி முயற்சியில் சம்பந்தப்பட்டதாக  நூலில் குற்றஞ்சாட்டப்பட்டிருக்கும் முக்கியமான தரப்புகளில் இந்தியாவை தவிர ஏனையவர்கள் தங்கள் மறுப்பை வெளியிட்டிருக்கும் நிலையில் நூலாசிரியரிடமிருந்து பதில் விளக்கம் எதிர்பார்க்கப்படுவது இயல்பு. இதுவரையில் அவரிடமிருந்து பெரிதாக எதையும் காணோம்.

வீரவன்ச மாத்திரமல்ல ராஜபக்‌ஷர்களும் அவர்களின் அதிவிசுவாசிகளான வேறு அரசியல்வாதிகளும் கூட மக்கள் கிளர்ச்சியின் பின்னணியில் சர்வதேச சதி இருந்தது என்று  ஏற்கெனவே பல தடவைகள் கூறியிருக்கிறார்கள். அவர்கள் நூலொன்றை எழுதவில்லை என்பது மாத்திரமே வித்தியாசம்.

கொழும்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மேதினப் பேரணியில் உரையாற்றிய மஹிந்த ராஜபக்‌ஷ தேசியவாத சிந்தனையின் அடிப்படையில் உள்நாட்டில் வகுக்கப்பட்ட அரசியல் பாதையை தாங்கள் முன்னெடுத்ததால் தங்களது கட்சிக்கு எதிராக மேற்குலக ஏகாதிபத்திய சக்திகளும் அரசாங்க சார்பற்ற தன்னார்வ நிறுவனங்களும் அணிசேர்ந்து நின்றதாக குற்றஞ்சாட்டியதை காணக்கூடியதாக இருந்தது.

இந்த அரசியல்வாதிகள் எல்லோரும் எமது நாட்டின் வரலாற்றில் முன்னென்றும் இல்லாத வகையில் மக்கள் கிளர்ந்தெழுந்ததற்கு அடிப்படையாக அமைந்த காரணிகள் குறித்து இலங்கையர்களுக்கு எதுவும் தெரியாது என்பது போன்று அவர்களின் விவேகத்தை நிந்தனை செய்யும் வகையில் கருத்துக்களை ….. இல்லை, ‘கண்டுபிடிப்புக்களை’  வெளியிட்டுக்கொண்டிருக்கிறார்கள் என்றே கூறவேண்டியிருக்கிறது.

உலக நாடுகளில் தோன்றுகின்ற நெருக்கடிகளில் ஏகாதிபத்திய நாடுகள் தலையிடுவதில்லை என்றோ அல்லது அந்த நெருக்கடிகளை தங்களது மூலோபாய நலன்களுக்கு இசைவான முறையில் உள்நாட்டு சக்திகளைப் பயன்படுத்தி கையாளுவதில்லை என்றோ இங்கு கூற முற்படுவதாக கருத வேண்டியதில்லை.

ஆனால், நெருக்கடிக்கான அடிப்படை உள்நாட்டுக் காரணிகளை முற்று முழுவதுமாக  மூடிமறைத்து மக்களை மீண்டும் தவறாக வழிநடத்துவதற்கு முயற்சிகள் – மக்கள் போராட்டங்கள் ஆட்சியாளர்களினால் கொடுங்கரம் கொண்டு அடக்கப்பட்டுவரும்  சூழ்நிலையில் – வேறு எவரினாலும் அல்ல அதே நெருக்கடிக்கு காரணமானவர்களாக இருந்தும் பொறுப்புக்கூற வைக்கப்படாமல் இருக்கும் அரசியல்வாதிகளினாலேயே முன்னெடுக்கப்படுவது கவனிக்கத்தக்கது.

தவறான ஆட்சிமுறை மற்றும் பொருளாதார முகாமைத்துவத்தின் விளைவான நெருக்கடியினால் விரக்தியுற்ற மக்கள் அரசியல் அதிகார வர்க்கத்தின் ஊழல் மோசடிகள், முறைகேடுகளைக் கண்டு சீற்றமடைந்தே வீதிக்கு இறங்கினார்கள். தங்களது அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதற்கு அதிகாரத்தில் இருந்தவர்கள் தவறியதைக் கண்ட மக்கள் கொதித்தெழுந்தார்கள்.

மக்களை பிளவுபடுத்திவைத்திருப்பதற்கு அரசியல்வாதிகள் வழமையாகப் பயன்படுத்தும் இன, மத, சாதி மற்றும் பால் வேறுபாடுகளுக்கு அப்பால் இளையோரும் முதியோரும் வறியோரும் வசதிபடைத்தோரும் ஒன்றுதிரண்டு நாட்டின் கூட்டு மனச்சாட்சியாக குரலெழுப்பி அரசியல் அதிகார வர்க்கத்தை ஆட்டங்காணச் செய்தார்கள்.

வழமையாக உல்லாசமாக பொழுதுபோக்கும் இடமாக விளங்கிய தலைநகரின் காலிமுகத்திடல்  சுதந்திரத்துக்குப் பின்னர் முதற்தடவையாக அரசியல் புரட்சியொன்றின் பரிமாணங்களை எடுத்த வரலாற்று முக்கியத்துவ மக்கள் போராட்டக்களமாக மாறியது.

அந்த மக்கள் கிளர்ச்சி பல அம்சங்களில் ஈடு இணையற்றதாக விளங்கியது. ஒருங்கிணைந்த முறையில் ஏற்பாடு செய்யப்பட்டதாகவோ அல்லது அரசியல் சக்திகளினால் வழிநடத்தப்பட்டதாகவோ இல்லாமல் தன்னியல்பான வெகுஜன அணிதிரள்வாக அமைந்த கிளர்ச்சி இலங்கையின் வரலாற்றில் மிகவும் தகுதியற்ற ஒரு ஜனாதிபதியையும் அவரது அரசாங்கத்தையும் பதவியில் இருந்து அகற்றியது. தெற்காசிய நாடொன்றில் மக்கள் கிளர்ச்சி ஜனாதிபதியொருவரை நாட்டை விட்டு வெளியேற வைத்த முதன் முதலான நிகழ்வாகவும் அது அமைந்தது.

தங்களுக்குச் சொல்லொணா துன்பங்களைத் தந்த தவறான ஆட்சிமுறைக்கும் படுமோசமான ஊழல் மற்றும் குடும்ப அரசியல் ஆதிக்கத்துக்கும் எதிரான மக்களின் வெறுப்பினதும் சீற்றத்தினதும் வெடிப்பின் விளைவே அந்த மக்கள் கிளர்ச்சி. அது வீரவன்ச மறைப்பதற்கு விரும்புகின்ற கதை. இலங்கையை நோக்கி உலகைத் திரும்பிப்பார்க்க வைத்த மாபெரும் போராட்டத்தை வெறுமனே வெளிநாட்டுச் சக்திகள் பின்னணியில் இருந்து இயக்கிய ஒன்று என்று கூறும் எந்தவொரு அரசியல்வாதியும் நாட்டின் உண்மையான நிலைவரத்தை புரிந்துகொள்ளவில்லை அல்லது புரிந்துகொண்டும் தீக்கோழி மனோபாவத்தில் இருக்கிறார்கள் என்பதே அர்த்தமாகும்.

வீரகத்தி தனபாலசிங்கம்